Sunday, June 23, 2024

'மரணத்துள் வாழ்வோம்' பற்றி...


தமிழ்க் கவிதைப் பரப்பில். குறிப்பாக இலங்கைத் தமிழ்க் கவிதைப்  பரப்பில் வெளியான முக்கியமான கவிதைத்தொகுப்பு 'மரணத்துள் வாழ்வோம்' . இதனைத் தொகுத்திருப்பவர்கள் மயிலங்கூடலூர் பி. நடராசன், இ.பத்மநாப ஐயர், அ.யேசுராசா & உ.சேரன்.  முதற் பதிப்பு 1985இல் 'தமிழியல்' வெளியீடாக இலங்கையிலும், இரண்டாவது பதிப்பு 1996இல் தமிழகத்தில் விடியல் பதிப்பக வெளியீடாகவும் வெளியானது.

நூலில் 31 கவிஞர்களின் 82 அரசியல் கவிதைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. போர்ச்சூழற் காலத்தில் வெளியான கவிதைகள்  என்பதால் அரசியல் கவிதைகள் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள் போலும், இதில் எனக்கு உடன்பாடில்லை. இவை அரசியல் கவிதைகள் அல்ல. இவை போர்ச்சூழலில் வாழ்ந்த மக்களின் உணர்வுகளை, இருப்பின் யதார்த்தத்தை, வலியினைப் பதிவு செய்யும் கவிதைகள். அரசியல் கவிதைகள் என்னும் சொற்பதம் இக்கவிதைகளைப் பற்றிய தவறான புரிதலை வாசிப்பவர்கள் உள்ளங்களில் ஏற்றிவிடக் கூடும். ஒரு வகையில் அரசியற் பிரச்சாரக் கவிதைகளோ என்று அவர்களை ஒரு கணமாவது , கவிதைகளை வாசிக்கும் வரையிலாவது சிந்திக்க வைத்து விடும் அபாயம் அச்சொற்பதத்தில் உண்டு. இது என் கருத்து. 

இத்தொகுப்புக் கவிதைகள் அரசியற் பிரச்சாரக் கவிதைகள் அல்ல. இன்று போர்ச்சூழல் அகன்று விட்டிருக்கின்றது. இன்று வாழும் தலை முறைக்கு, என்று வாழும் தலைமுறைக்கும் போர்ச்சூழல் நிலவிய காலகட்டத்து எம் மக்களின் நிலையை, உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆவணப்பதிவுகள் இக்கவிதைகள். அவ்வகையில் 'மரணத்துள் வாழ்வோம்' முக்கியமானதொரு தொகுப்பு.

'மரணத்துள் வாழ்வோம்' -சிறப்பானதொரு தலைப்பு. கவிதைகள் வெளிப்படுத்தும் அடிப்படை உணர்வும் இதுதான்.

தொகுப்பிலிருந்து ஒரு கவிதை எம்.ஏ.நுஃமானின் 'நேற்றைய மாலையும் இன்றைய காலையும்' கவிதையின் பின்வரும் வரிகள் என் நெஞ்சில்  அக்கால , என்  பதின்ம வயது யாழ்ப்பாணத்து அனுபவங்களைப் படம் விரித்தன:

'நேற்று மாலை
நாங்கள் இங்கிருந்தோம்.

சனங்கள் நிறைந்த யாழ்நகர்த் தெருவில்
வாகன நெரிசலில்
சைக்கிளை நாங்கள் தள்ளிச் சென்றோம்.

பூபால சிங்கம் புத்தகநிலைய
முன்றலில் நின்றோம்.
பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்தோம்.

பஸ்நிலையத்தில் மக்கள் நெரிசலைப்
பார்த்தவா றிருந்தோம்.
பலவித முகங்கள்
பலவித நிறங்கள்
வந்தும் சென்றும்
ஏறியும் இறங்கியும்
அகல்வதைக் கண்டோம்.

சந்தைவரையும் நடந்து சென்றோம்.
திருவள்ளுவர் சிலையைக் கடந்து
தபாற்கந்தோர்ச் சந்தியில் ஏறி
பண்ணை வெளியில் காற்று வாங்கினோம்.
'றீகலின்' அருகே
பெட்டிக் கடையில்
தேனீர் அருந்தி - சிகரட் புகைத்தோம்.
ஜாக் லண்டனின்
'வனத்தின் அழைப்பு'
திரைப்படம் பார்த்தோம்.

தலைமுடி கலைந்து பறக்கும் காற்றில்
சைக்கிளில் ஏறி
வீடு திரும்பினோம்'

இவ்விதம் ஒரு காலத்தில் எமக்கு இன்பமளித்த சூழலை படையினரின் அடக்குமுறை எவ்விதம் சிதைத்தது என்பதைக் கவிதை விபரிக்கும்.

'இன்று காலை
இப்படி விடிந்தது.
நாங்கள் நடந்த நகரத் தெருக்களில்
காக்கி உடையில் துவக்குகள் திரிந்தன.
குண்டுகள் பொழிந்தன.
உடலைத் துளைத்து
உயிரைக் குடித்தன.

பஸ்நிலையம் மரணித் திருந்தது.
மனித வாடையை நகரம் இழந்தது.
கடைகள் எரிந்து புகைந்து கிடந்தன.
குண்டு விழுந்த கட்டடம் போல
பழைய சந்தை இடிந்து கிடந்தது
வீதிகள் தோறும்
டயர்கள் எரிந்து கரிந்து கிடந்தன.

இவ்வாறாக
இன்றைய வாழ்வை
நாங்கள் இழந்தோம்.
இன்றை மாலையை
நாங்கள் இழந்தோம்.'

அலை சஞ்சிகையில் வெளியான கவிதை.  இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கொப்பான தொகுப்புக் கவிதை.

வாசிக்க - மரணத்துள் வாழ்வோம் - கவிதைத்தொகுப்பு

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.

இசை & குரல் - AI Suno ஓவியம் - AI நானொரு குதிரை வளர்ப்பாளன். நான் வியாபாரி அல்லன். நாணயமான குதிரை வளர்ப்பாளன். நான். என்னிடம் நல்ல குதிர...

பிரபலமான பதிவுகள்