Sunday, June 16, 2024

அப்பா!


அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள்.  இந்நாளில் எந்தையும் தாயும் மகிழ்ந்து  குலாவி இருந்த மண்ணின் நினைவுகள் எழுகின்றன. எந்தை, தாயுடன்  கழித்த இனிய தருணங்கள் நினைவுக்கு வருகின்றன.

என் வாசிப்பு, எழுத்தார்வத்துக்கு முக்கிய காரணமே அப்பாதான். வீடு முழுவதும் புத்தகங்கள் , சஞ்சிகைகளால் நிறைந்திருந்த சூழலுக்குக் காரணம் அப்பா (நடராஜா நவரத்தினம் - நில அளவையாளராகப் பணி புரிந்த காலத்தில்  அவரைப் பலர் 'Tall Nava' என்று  அறிந்திருக்கின்றார்கள்).  தமிழகச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், இலங்கைப்பத்திரிகைகள் என்று அவற்றை வாங்கிக் குவித்தார். இவற்றுடன் அவர் தனது ஆங்கில நூல்களுக்காக புத்தக 'ஷெல்ஃப்' ஒன்றும் வைத்திருந்தார். அவற்றிலிருந்த நூல்களின் ஆசிரியர்களில் முக்கியமானவர் கிறகாம் கிறீன். அவரது நாவல்கள் பல அவரிடமிருந்தன. ஆர்.கே.நாராயணன், பி.ஜி வூட்ஹவுஸ்,  டி.இ.லாரண்ஸ் ('லாரண்ஸ் ஒஃப் அராபியா' (Lawrence of Arabia), டால்ஸ்டாய் என்று பலரின் நூல்கள் அவரது 'புக் ஷெல்வ்'வில்  இருந்தன.

கல்கி, குமுதம், விகடன், ராணி, ராணி முத்து, பொன்மலர், பால்கன், சுதந்திரன்ம், ஈழநாடு, தினமணி, The Hidnu, கலைமகள், மஞ்சரி, பொம்மை, பேசும்படம், தினமணி, தினமணிக்கதிர் என்று தமிழில் வெளியான வெகுசன சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளால் வீடு நிறைந்து கிடந்தது. ஒரு தடவையாவது வாசி என்று அவர் கூறியது இல்லை. சூழல் எம்மை வாசிக்க வைத்தது. போட்டி போட்டு வாசித்தோம். ராஜாஜியின் வியாசர் விருந்து, சக்கரவர்த்தித் திருமகன், பாரதியார் பாடல்கள் அடங்கிய முழுத்தொகுப்பு, புலியூர்க்கேசிகனின் சிலப்பதிகாரம், மணிமேகலை, நற்றிணை போன்ற சங்க இலக்கிய நூல்கள் இவை எப்போதும் வீட்டில் இருக்க வேண்டிய நூல்கள் என்று வாங்கி வைத்தார். ஆரம்பத்திலேயே இவற்றுடனான தொடர்பு ஏற்படக் காரணம் அப்பாவின் இப்போக்குத்தான்.  அப்பாவுக்கு இராமாயணம், மகாபாரதத்தின் மீதிருந்த ஈடுபாடு எதுவரை இருந்ததென்றால் எங்கள் அனைவருக்கும் பெயர்கள் வைக்கும் அளவுக்கு. கிரிதரன், பாலமுரளி, சசிரேகா, மைதிலி, தேவகி இவை அனைத்தும் அந்த ஈடுபாட்டின் விளைவுதான்.

தமிழ் எழுத்தாளர்களைப்பொறுத்தவரையில் அவருக்குப் பிடித்த முக்கிய எழுத்தாளர்களிலொருவர் ஜெயகாந்தன். அப்பொழுதுதான் ஆனந்த விகடனில் ஜெயகாந்தனின் முத்திரைக்கதைகள் வெளியாகின. அவரது நாவல்களான 'ஒரு மனிதன். ஒரு வீடு . ஒரு  உலகம்' , 'ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்' ஆகியவை வெளியாகியிருந்தன. தினமணிக்கதிரில் அவரது சிறுகதைகள், 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவல் ஆகியவை வெளியாகின. ஆனந்த விகடனில் வெளியாகிய குறுநாவல்களான 'கோகிலா என்ன செய்து விட்டாள்', 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன' ஆகியவை பற்றி அவர் அம்மாவுடன் உரையாடிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகின்றன.

அப்பா தமிழரசுக் கட்சி ஆதரவாளர். எழுபதுகளில் வவுனியாவில் செல்லத்தம்பு தமிழரசுக் கட்சி சார்பில் தேர்தலில் நின்றபோது , வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்துக்கும் அப்பா என்னை அழைத்துச் சென்றிருந்தார். நான் முதன் முதல் சென்ற அரசியல் கட்சியொன்றின் தேர்தல் கூட்டம் அதுதான். முதல் முறையாக தந்தை செல்வா, 'தானைத்தலைவர்' அமிர்தலிங்கம், மங்கையற்கரசி அமிர்தலிங்கம், ஆலாலசுந்தரம் எனப்பலரைப் பார்த்ததும் அப்போதுதான். அச்சமயத்தில் மங்கையற்கரசி அமிர்தலிங்கத்திடமிருந்து 'ஆட்டோ கிராப்' கூட வாங்கியிருந்தேன்.

தமிழக அரசியலைப்பொறுத்தவரையில் அப்பா அறிஞர் அண்ணாவின்  தலைமையிலான 'திமுக' ஆதரவாளர். அப்போது தமிழகத்தில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலர் மிகவும் சிறப்பான முறையில் வெளிவந்திருந்தது. அதனையும் அவர் வாங்கியிருந்தார். அம்மலரிலிருந்துதான் கலைஞர் கருணாநிதி, இரா.நெடுஞ்செழியன் போன்ற திமுகவினர் பலரின் எழுத்துகளை அறிந்துகொண்டேன். பின்னர் எழுபதுகளில் திமுக, அதிமுக என இரண்டாகப்பிளவுண்டபோது அவர் கலைஞரின் பக்கமே நின்றார். நானோ வாத்தியாரின் பக்கம். இருவருமே அக்காலகட்டத்தில் நண்பர்களைப்போல் அது பற்றி வாதாடுவோம். இன்னும் நினைவிலுள்ளது.

அப்பாவுக்குப் பிடித்த இன்னுமொரு விடயம் கிரிக்கெட். கிரிக்கெட் பற்றிய நேர்முக வர்ணனையை அவரது ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவில் கேட்டுக்கொண்டிருப்பார். அதன் மூலம் நானும் அக்காலகட்டத்துக் கிரிக்கெட் வீரர்கள் பற்றிச் சிறிது அறிந்துகொண்டேன். நவாப் பட்டெளடி, சுனில் கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத் போன்றோரின் காலகட்டம். அப்பொழுதுதான் கவாஸ்கர், விஸ்வநாத் கிரிக்கெட் உலகுக்கு அறிமுகமாகிச் சாதனைகள் படைக்கத்தொடங்கியிருந்தார்கள். ஏற்கனவே சாதனை புரிந்த பிராட்மன் பற்றியும் அவர் என்னிடம் கூறியிருக்கின்றார். ஆஸ்திரேலியர்களான சாப்பல் சகோதரர்கள் கிரிக்கெட் உலகில் பிரபலமாக விளங்கிய காலகட்டம். நானும் சில தடவைகள் அவருடன் கிரிக்கெட் நேர்முக வர்ணனையைக் கேட்டதுண்டு.

அப்பா என்றால் நினைவுக்கு வரும் இன்னுமொரு முக்கிய விடயம் அவருக்குப் பிடித்த திரைப்படப்பாடகர்கள், பாடல்கள் பற்றியது. இலங்கை வானொலியில் காலை நேரங்களில் பழைய பாடல்களை ஒலிபரப்புவார்கள். அப்போது பி.யு.சின்னப்பா, தியாகராஜ பாகவதர், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றோரின் பாடல்களைத் தவறாது ஒலிபரப்புவார்கள். அவற்றை ஆர்வமாகக் கேட்பதும் அவரது பொழுது போக்குகளிலொன்று.

அப்பா என்றதும் எனக்கு மறக்க முடியாத விடயம். வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் இரவுகளில் சாய்வு நாற்காலியை முன்றிலில் போட்டுப்படுத்தபடி சுடர்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வானை இரசித்தபடியிருப்பார். அவரது சாறத்தைத் தொட்டிலாக்கி நானுமதில் படுத்தப்படி இரவு வானை இரசித்தபடியிருப்பேன். அப்பொழுது அவர் அவ்வப்போது விரையும் செயற்கைக்கோள்களைச் சுட்டிக்காட்டுவார். எனக்கு வானியற்பியலில் ஈடுபாடு ஏற்படக் காரணம் அப்பாவுடன் அவ்விதம் கழித்த அப்பொழுதுகள்தாம்.

நான் அப்பாவை இழந்தபோது எனக்கு வயது பதினெட்டு.  ஆனால் அவருடன் கழிந்த காலகட்டம் என் இருப்புக்கு ஓர் அர்த்தத்தைத்  தருகின்றது. ஒரு முழுமையைத் தருகின்றது. அவரை நான் இழந்து விட்டதாகவே கருதவில்லை. என் எழுத்தில், வாசிப்பில், நினைவில் அவர் நிறைந்து இருக்கின்றார்.  எப்பொழுதுமிருப்பார். அப்பா பற்றிய நினைவவுகள் இருக்கும் வரை இருக்கப்போகின்ற நினைவுகள.   மறக்க முடியாத நினைவுகள் அவை.

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல்.

இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல். கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல் வாழும் வாழ்வுதனை வாழவிடு இய...

பிரபலமான பதிவுகள்