Friday, June 28, 2024

என்னைக் கவர்ந்த அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) 'எதிர்காலச் சித்தன் பாடல்'


ஈழத்துத் தமிழ் இலக்கிய வானில் பல்துறைகளிலும் சுடர்விட்டு அமரரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளில் 'எதிர்காலச் சித்தன்' என்னும் கவிதை என்னைக் கவர்ந்த அவரது கவிதைகளிலொன்று.  மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மீராவின் 'எனக்கும் உனக்கும் ஒரே ஊர். வாசுதேவ நல்லூர்' என்பதையே முதலாவது தமிழில் வெளிவந்த அறிவியற் கவிதையாகக் குறிப்பிடுவார். ஆனால் அதற்கும் பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன்' கவிதையினையே தமிழின் முதலாவது அறிவியற் கவிதையாக நான் கருதுகின்றேன். சுஜாதாவுக்கும் அ.ந.க.வின் மேற்படி கவிதை பற்றி தெரிந்திருந்தால் அவரும் அவ்விதமே கூறியிருப்பார். மேற்படி கவிதை நிகழ்கால மனிதன் எதிர்கால மனிதன் ஒருவனைச் சந்தித்து, உரையாடித் திரும்புவதைப் பற்றி விபரிக்கிறது. இதனை கவிதையாக வெளிவந்த அறிவியற் புனைவாகவும் கருதலாம்.

அ.ந.க இலக்கியத்தின் பன்முகப்பிரிவுகளிலும் தடம் பதித்தவர். குறைவாக எழுதியிருந்தாலும் அவரது கவிதைகள் இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் முக்கியமான படைப்புகள். எழுத்தாளர் இ.முருகையன் அ.ந.க.வின் இக்கவிதை பற்றிக்குறிப்பிடுகையில் "அ.ந.கந்தசாமியின் எதிர்காலச்சித்தன் பாடலைவிடக் கருத்தும் சிந்தனையும் பொதிந்த கவிதைகள் தமிழகத்தில் உள்ளனவா? இருந்தால் எடுத்துக் காட்டட்டும்" என்று கூறியிருந்தது நினைவுக்கு வருகின்றது.

அ.ந.க மார்க்சியத்தத்துவங்களின் அடிப்படையில் இயங்கிய சமூக,அரசியற் செயற்பாட்டாளரும் கூட. அதே சமயம் அவரது கவிதைகளில் இது போன்ற சிந்தனையாற்றலையும், தேடல்களையும் உள்ளடக்கிய கருத்துகளையும் காணலாம். இலங்கைத்தமிழ்க் கவிதைகள் மட்டுமல்ல உலகத்தமிழ்க் கவிதைகளை உள்ளடக்கிய ஒவ்வொரு தொகுப்பிலும் நிச்சயம் இடம் பெற வேண்டிய கவிதை இது.  



இக்கவிதையைச் சிறுகதையாக்கியுள்ளேன்,. அதனைக் கீழே தந்துள்ளேன். அதனை வாசித்து விட்டு, அதன் கீழ் தந்துள்ள கவிதையை வாசிக்கவும்.

சிறுகதை: எதிர்காலச் சித்தன் -  வ.ந.கிரிதரன் -

எதிர்காலத்திரை நீக்கி நான் காலத்தினூடு பயணித்தபொழுதுதான் அவனைக் கண்டேன். அவன் தான் எதிர்கால மனிதன். இரவியையொத்த ஒளிமுகத்தினைக் கொண்டிருந்த அந்த எதிர்கால மனிதனின் கண்களில் கருணை ஊறியிருந்தது. அவன் கூறினான்: "நிகழ்கால மனிதா! எதிர்கால உலகமிது. இங்கேன் நீ வந்தாய்? இங்கு நீ காணும் பலவும் உன்னை அதிர்வெடி போல் அலைக்கழிக்குமே. அப்பனே! அதனாலே நிகழ்காலம் நீ செல்க!"

அறிவினில் அடங்காத தாகம் மிக்கவனாக எதிர்காலம் ஏகிட்ட என்னைப் பார்த்து இந்த எதிர்கால மனிதன் கூறுகின்றான் 'நிகழ்காலம் நீ செல்க" என்று. அவனுரையால் என் அறிவுத் தாகம் அடங்குமோ? அதனால் நான் பின்வருமாறு கூறினேன்: " திரண்டிருக்கும் அறிவின் சேர்க்கை வேண்டும் செந்தமிழன் நான். குற்றமேதுமற்ற பேராண்மைக் கோட்டை என்னை மலைவுறுத்தாது இந்த எதிர்காலம். ஆதலால் கவலையை விடு நண்பனே!"

இவ்விதம் கூறிவிட்டு குறுகுறுத்த விழிகளையுடைய சாமர்த்தியசாலியான அந்த எதிர்கால மனிதனின் பெயரென்ன என்று வினவினேன்.

அதற்கவன் பின்வருமாறு கூறினான்: "எனக்கு முன்னே சித்தர்கள் பலர் இருந்தாரப்பா! நானுமொரு சித்தன். எதிர்காலச் சித்தன்..... நிகழ்காலத்தவரான உன்னவரோ உனக்கு முன்னர் வாழ்ந்திட்ட சித்தரல்லாது உன் காலச் சித்தரையும் ஏற்காரப்பா.  இதனை நான் எந்தவித மனக்குறையின் காரணமாகவும் கூறவில்லை. உன் நிகழ்காலத்துக் காசினியின் பண்பிதுதானே. அதுதான் அவ்விதம் கூறினேன்."

இவ்விதம் கூறிய வருங்காலச் சித்தன் மேலும் எனக்குப் பல கருத்துகளைப் பகன்றான். சித்தனவனுரைதனை இந்த மாநிலத்தாரும் அறிதற்காய் இங்கு நான் விளக்கிக் கூறுகிறேன்:

" பெரும்போர்கள் விளையும் உன் நிகழ்காலத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் பல்வகைப் பேதங்களுண்டு. ஒற்றுமையாக இணைய விரும்பும் மானுடரை ஒன்றாக இணையவிடாது செய்யும் அநியாய பேதங்களைக் கூறுவேன் கேள்.  துண்டுபட்டிருக்கும்தேசங்கள், தூய்மையான இனம், மதம், மொழி, மதமென்ற குறுகிய ம்னப்பாங்குள்ள கோட்பாடுகள் .. இவை போன்ற பேதங்களெல்லாம் உனது நிகழ்கால உலகில் உள்ளன. அவை எல்லாம் அர்த்தமில்லாப் பிரிவினைகள். அவை யாவும் சாகும் எனது எதிர்கால உலகில். ஒன்றுபட்டு இவ்வுலகம் ஒற்றையாகும். ஒரு மொழி கொண்ட ஓரரசு பிறக்குமப்பா. அரசுகளெல்லாம் ஒழிந்து இவ்வுலகில் ஓரரசு உண்டாகும். அறத்தினை வலியுறுத்தும் ஒரு மதமே உலகெல்லாம் நிலவும்.

விரசங்களையும், விகற்பங்களையும் வ்ளர்க்குமொழிகள் எல்லாம் வீழ்ந்து ஒருமொழியே பொது மொழியாக இவ்வுலகில் இருக்கும் செந்தமிழ் மட்டுமல்ல, சிங்கள மொழியும் சாகும். இச்செகமெல்லாம் ஒரேயொரு மொழியே தலைதூக்கி நிற்கும். எந்த மொழி இவ்வுலகில் நிலவுமெனக் கேட்பீரானால் என் பதில் எண்ணிக்கை அதிகம் கொண்ட மொழியே அதிககாலம் நின்று நிலைக்கப் போகின்றது. அந்த மொழியே அரசாளும். எதிர்காலத்தில். உலகத்து மக்களெல்லாரும் தம்மை ஏற்றத்தாழ்வுகளற்ற மனித இனம் என்றே கருதுவர். தம்மை மதம், இனம், மொழி போன்ற வேறுபாடுகளைக் கொண்டு பிரித்துப் பார்க்கும் வழக்கம் எனது எதிர்கால உலகில் இல்லை. அரசர்கள் , ஏழைகள் , பணக்காரர்கள் போன்ற அத்தனை பேதங்களும் எதிர்கால உலகில்  ஒழிந்து விடும். எம் தமிழர் இனம மட்டுமல்ல, பிற இனங்களும் சாகும். நாடெல்லாம் மனித இனமென்ற ஒன்று மட்டுமே தலை தூக்கும். எல்லோரும் மானுடர்கள். பிரிவினைகள் ஒழிதல் நன்றுதானே."

இவ்விதம் வருங்காலச் சித்தன் கூறினான். பின்னர் அவன் மேலும் கூறுவான்: "உன்னவரான நிகழ்காலச் செந்தமிழர் இவற்றைக் கேட்டால் , நீசனே! இவ்விதமாக இங்கு உரைக்காதே. செந்தமிழே உலகின் புகழ்மொழியாய், உலகத்தின்  பொதுமொழியுமாகும் புதுமைதனைக் காண்பீர்கள் என்று கூறிடுவார்கள். எதிர்காலச் சித்தனான எனது உரையினை இகழ்ந்திடுவார்கள்.

"இம்மியளவேணும் மானமில்லா மூர்க்கன் நிகழ்காலத்தில் மட்டுமிருந்திருந்தால் என்ன செய்வதென்றறிந்திருப்போம்.
அவன் நெஞ்சு பிளந்தெறிந்திருப்போம் என்றுமிகழ்ந்திடுவார்கள்"

இவ்விதம் கூறிய வருங்காலச் சித்தன் சிறிது நேர மெளனத்திற்குப் பின்னர் மேலும் கூறுவான்:" பிறப்பாலே நான் தாழ்வுரைக்க மாட்டேன். பிறப்பாலே என் மொழியே சிறந்ததெனச் சொல்லேன். பிறப்பென்றன் வசமோ? அது என் வசமில்லை. அது பிரமத்தின் வசமல்லவா? இந்நிலையில் எவ்விதம் நான் அவ்விதம் பிறப்பாலே பெருமையுற முடியும்? பீருவில் பிறந்திருந்தால் பீருமொழி பெருமையே. இத்தாலியில் பிறந்திருந்தால் இத்தாலி மொழி சிறப்பே. வெறி மிகுந்த உனது நிகழ்காலத்தவர் இதனை உணரமாட்டார். விழழுக்கே பெருங்கலகம் விளைவிக்கும் உன்னவர்கள் செய்வதென்ன? அறிவற்று துன்பங்களை அனைவருக்கும் விளைவிக்கின்றார்கள். ஐயய்யோ! இவரது மடைமையினை என்னவென்று கூறுவேன்?"

எதிர்காலச் சித்தனின் கூற்றிலுள்ள தர்க்கம் என்னைப் பிரமிக்க வைத்தது. புது யுகத்தின் குரலாக அவ்னது குரல் ஒலிப்பதாக எனக்குப் பட்டது. இவ்விதம் அவன் கூறியதன் பின்னர் நான் அவனைப் பார்த்து இவ்விதம் கேட்டேன்:

"எதிர்காலச் சித்தா!  உனது இனிய மொழி கேட்டேன். மதி கெட்டு எம்மவர்கள் வாழும் நிகழ்கால உலகிற்கு என்னுடன் நீ வந்து புதிய வாழ்வினையேற்றினாயென்றால் அவரது எண்ணங்கள் விரிவடையும். அதற்காகவாவது நீ நிகழ்காலம் வரவேண்டும். அதுவே எனது விருப்பம். அதுவே பிளவுகளால் முட்டி மோதிக்கொண்டிருக்கும் நம்மவர் ஒன்றுபட்டுச் சிந்திக்க உதவும்."

இவ்விதமாக நான் அவனை இறைஞ்சி நின்றேன். அதனைக் கண்ட எதிர்காலச் சித்தனின் செவ்விதழ்கள் மெதுவாகத் திறந்தன. அங்கே மென்முறுவலொன்று பிறந்ததைக் கண்டேன். அத்துடன் மீண்டும் அந்த வருங்காலச் சித்தன் என்னைப் பார்த்து கீழுள்ளவாறு கூறலானான்: "காலக் கடல் தாவி நீ இங்கு வந்திருக்கின்றாய். அதன் காரணமாக எது உண்மையான அறிவென்பதைக் கண்டாய். ஆனால் நிகழ்கால மயக்கத்தில் வாழும் உன் நிகழ்கால மானுடர் உண்மையான ஞானத்தினை, அறிவினைக்  காண்பாரோ? காணார்களப்பா! காலத்தைத் தாண்டி காசினிக்கு நான் வந்தால் கட்டாயம் என்னை அவர்கள் ஏற்றி மிதித்திடுவார்கள். பகுத்தறிவுக்காகக் குரல்கொடுத்த சோக்கிரதரையே அன்று ஆலத்தைத் தந்து கொன்றவர்கள் உனது மானுடச்  சோதரர்களன்றோ? ஆதலினால் நிகழ்கால மானுடனே! அங்கு நான் வரேன். நீ மீண்டும் அங்கு செல்வாயாக"

இவ்விதம் கூறிய வருங்காலச் சித்தனின்பால் என்னிடத்தில் அன்பு ஊற்றெடுத்தது. அந்த அன்பு மீதுறவே அவனது கமலம் போன்ற பாதங்களைத் தொட்டுக் கண்களிலொற்றி விடைபெற்றேன். அவன் மட்டும் என் நிகழ்காலத்திற்கு வருவானென்றால்  எவ்விதம் நன்றாகவிருக்கும். அறிவுக் கடலான அவனால் , ஞானசூன்யங்களாக விளங்கும் நம்மவர்கள் எவ்வளவு பயன்களைப் பெறமுடியும். அறியாமையிலிருக்கும் நம்மவர் அவனுரையினை அறிவதற்குரிய பக்குவமற்றுத்தானே இன்னும் இருக்கிறார்கள்.  ஆயிரக்கணக்கன வருடங்களுக்கு முன்னர் விடத்தைக் கொடுத்து சோக்கிரதரைக் கொன்றார்களே அன்றைய ஆட்சியாளர்கள். எதற்கு. இன்றும் அதுதானே நடக்கிறது. இந்நிலையில் அவன் வர மறுத்ததிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

அச்சமயம் .... என்ன ஆச்சரியம்! காலத்திரை நீங்கிற்று.

பாதகர்களின் முழு மடைமைப் போர்களால் சூழந்துள்ள இந்தப் பாருக்கு, பூமிக்கு, நிகழ்காலத்துக்கு நான் மீண்டும் வந்தேன். வந்தவன் எங்கும் தீதுகளே நடம்புரியும் நிலை கண்டேன்; திடுக்கிட்டேன். பிளவுகளற்ற , மானுடர்களென்றரீதியில் இணைந்து,  வாழும் எதிர்காலச் சித்தனுலகம் பற்றி ஒரு கணம் எண்ணிப் பார்த்தேன்.

மடைமையில் மூழ்கிக் கிடக்கும் இந்த நிகழ்கால உலகமெங்கே! அவனது உலகமெங்கே! என்றிவர்கள் உணமை காண்பாரோ?

**************************************************************************

 

தேன்மொழி சஞ்சிகையின் முதலாவது இதழில் (1955)  வெளியான அ.ந.க.வின் கவிதை.

 எதிர்காலச் சித்தன் பாடல்!

- அ.ந.கந்தசாமி -

எதிர்காலத் திரைநீக்கி அதற்கப் பால்யான்
ஏகிட்டேன் ஏகிட்ட போதில் என்முன்
கதிர்போலும் ஒளிமுகத்தான் கருணையூறும்
கமலம்போற் கண்ணினையான் ஒருவன் வந்தான்
"எதிர்கால உலகமிஃது மனிதா நீயிங்
கேன்வந்தாய் இவண்காணும் பலவுமுன்னை
அதிர்வெடி போல் அலைக்கழிக்கும் ஆதலாலே
அப்பனே நிகழ்காலம் செல்க" என்றான்.

அறிவினிலே அடங்காத தாகம் கொண்டேன்
அவ்வுரையால் அடங்கவில்லை அவனை நோக்கிச்
'செறிவுற்ற பேரறிவின் சேர்க்கை வேண்டும்
செந்தமிழன் யானொருவன் ஆதலாலே
மறுவற்ற பேராண்மைக்கோட்டை என்னை
மலைவுறுத்தா தெதிர்காலம்" என்று கூறிக்
குறுகுறுத்த விழியுடையான் குமுத வாயன்
குணமென்ன பெயரென்ன என்று கேட்டேன்.

"எனக்குமுன்னே சித்தர்பலர் இருந்தா ரப்பா
எதிர்காலச் சித்தன்யான் நிகழ்காலத்தர்
உனக்குமுன்னர் வாழ்ந்திட்ட சித்தரல்லால்
உன்காலச் சித்தரையும் ஏற்காரப்பா
மனக்குறைவால் கூறவில்லை மகிதலத்தில்
மடமையொடு மயக்கத்தின் ஆட்சி என்றும்
கனத்துளதிங் கென்பதையே கருதிச்சொன்னேன்
காசினியின் பண்பிதனைக் காணப்பா நீ.

வருங்காலச் சித்தனுரை செய்தவார்த்தை
வையகத்தார் அறிதற்காய் இங்குசொல்வேன்
"பெரும்போர்கள் விளைகின்ற நிகழ்காலத்தில்
பிளவுறுத்தும் பலவகையாம் பேதமுண்டு
ஒருமைபெறும் மனிதர்களை ஒன்றாவண்ணம்
ஊடமைத்த சுவரனைய பேதம்யாவும்
நொருங்கிவிழும் உலகெல்லாம் ஒன்றேயாகும்
நோக்கிடுவாய் தூரஎதிர் காலமீதே"

அண்டுபவர் அண்டாது செய்வதேது
அநியாய பேதங்கள் பெயரைச்சொல்வேன்
துண்டுபட்டுத் தேசங்கள் என்றிருத்தல்
தூய்மையாம் இனம்மொழிகள் மதங்களென்று
அன்றுதொட்டிங் கின்றுவரை இருக்குமந்த
அர்த்தமிலாப் பிரிவினைகள் எல்லாம்சாகும்.
ஒன்றுபட்டிவ் வுலகெல்லாம் ஒற்றையாகும்
ஒருமொழியில் ஓரரசு பிறக்குமப்பா.

அரசெல்லாம் ஒழிந்துலகில் ஓரரசே யுண்டாம்
அறங்கூறும் ஒருமதமே உலகெல்லாம் ஆகும்
விரசமொடு விகற்பங்கள் வளர்க்குமொழி எல்லாம்
வீழ்ந்துவிடும் ஒருமொழியே இவ்வுலகில் உண்டாம்
சரசமொடு உலகத்து மக்களெல்லாம் தம்மைச்
சமானர்கள் மனிதகுலம் என்றஇன மென்பார்
அரசர்கள் ஏழைபணக் காரனென்ற பேதம்
அத்தனையும் ஒழிந்துவிடும் எதிர்கால உலகில்.

செந்தமிழும் சாமீழச் சிங்களமும் சாகும்
செகமெல்லாம் ஒருமொழியே தலைதூக்கி நிற்கும்.
நந்தமிழர் இனம்சாகும் பிற இனமும் சாகும்
நாடெல்லாம் மனிதஇனம் ஒன்றுதலை தூக்கும்.
எந்தமொழி இவ்வுலகில் நிலவுமெனக் கேட்பில்
எண்ணிக்கை கொண்டமொழி எம்மொழியோ இங்கு
அந்தமொழி தானப்பா அரசாளும் உண்மை
அதுநன்று தானப்பா பிரிவினைகள் ஒழிதல்.

நிகழ்காலச் செந்தமிழர் இதுகேட்டுச்  சீறி
நீசனுரை நிகழ்த்தாதே செந்தமிழே உலகின்
புகழ்மொழியாய் உலகத்தின் பொதுமொழியும் ஆகும்
புதுமைதனைக் காண்பீர்கள் என்றுபுகன் றிடுவார்.
இகழ்ந்திடுவார் எதிர்காலச் சித்தனுரை தன்னை
இம்மியள வேணுமபி  மானமில்லா மூர்க்கன்
நிகழ்காலத் திருந்திருந்தால் செய்வதறிந் திடுவோம்.
நெஞ்சுபிளந் தெறிந்திருப்போம் என்றிகழ்த் திடுவார்.

பிறப்பாலே யானுயர்வு தாழ்வுரைக்க மாட்டேன்
பிறப்பாலே என்மொழியே சிறந்ததெனச் சொல்லேன்.
பிறப்பென்றன் வசமாமோ? பிரமத்தின் வசமாம்.
பீருவில் பிறந்திருந்தால் பீருமொழி பீடே
வெறிமிகுந்த நிகழ்காலத்   தீதுணர மாட்டார்
விழழுக்கே பெருங்கலகம் விளக்கின்றார் அன்னார்
அறிவற்றே துன்பங்கள் அனவர்க்கும்  விளைப்பார்
ஐய்யய்யோ இவர்மடமை என்னென்று சொல்வேன்.

புதுயுகத்தின் குரல்போல் எதிர்காலச் சித்தன்
புகன்றமொழி கேட்டபின்னர் யானவனைப் பார்த்து
"எதிர்காலச் சித்தா உன்இனியமொழி கேட்டேன்.
எண்ணங்கள் விரிவடையும் என்னுடன்நீ வந்து
மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய
வாழ்வேற்றிச் செல்லாயோ" என்றிறைஞ்சி நிற்க
மெதுவாகச் செவ்விதழ்கள் திறந்ததையு மங்கே
மென்னிலவுக் குஞ்சிரிப்புப் பிறந்ததையும் கண்டேன்.

காலத்தின் கடல் தாவி நீஇங்கு வந்த
காரணத்தால் ஏதறிவு என்பதைநீ கண்டாய்
ஞாலத்தில் நிகழ்கால மயக்கத்தி லுள்ளோர்.
ஞானத்தைக் காண்பாரோ? காணார்க ளப்பா
காலத்தை யான்தாண்டிக் காசினிக்கு வந்தால்
கட்டாயம் எனையவர்கள் ஏற்றிமிதித் திடுவார்
ஆலத்தைத் தந்தன்று சோக்கிரதரைக்  கொன்ற
அன்பர்க ளுன்மனிதச் சோதரர்க ளன்றோ?

ஆதலினால் நிகழ்கால மனிதாஅங்கு
யான்வரேன் நீபோவாய் என்றான்ஐயன்
காதலினால் கால்களென்னும் கமலம்தொட்டுக்
கண்ணொற்றி விடைபெற்றேன் திரை நீங்கிற்று.
பாதகர்கள் முழுமடைமைப் போர்கள்சூழும்
பாருக்கு நிகழ்காலம் வந்தேன் எங்கும்
தீதுகளே நடம்புரியும் நிலைமைகண்டு
திடுக்கிட்டேன் என்றிவர்கள் உண்மைகாண்டல்?


- தேன்மொழி, இதழ் 1, 1955

நன்றி: கோபி (நூலகம்) - அ.ந.க.வின் எதிர்காலச் சித்தன் கவிதை வெளியான தேன்மொழி சஞ்சிகைப் பக்கங்களுக்காக.




No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.

இசை & குரல் - AI Suno ஓவியம் - AI நானொரு குதிரை வளர்ப்பாளன். நான் வியாபாரி அல்லன். நாணயமான குதிரை வளர்ப்பாளன். நான். என்னிடம் நல்ல குதிர...

பிரபலமான பதிவுகள்