Thursday, June 27, 2024

குதிக்க வைக்கும் வான் கேலன் இசைக்குழுவின் 'குதி' (Jump)!


வான் கேலன் இசைக்குழுவைப் பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது அவர்களது புகழ்பெற்ற 'Jump' பாடல்தான். குழுவின் பிரதான பாடகர், கிட்டார் கலைஞர் இவர்களுடன் ஏனைய இசைக் கலைஞர்களும் சிறப்பாக இணைந்து அப்பாடலை உருவாக்கியிருப்பார்கள். 
 
எண்பதுகளில் கனடா வந்த சமயம் ஆரம்பத்தில் சிறிது காலம் என் மச்சான் குட்டியின் அப்பார்ட்மென்டில் தங்கியிருந்தேன். அவனுடன் வேறு நண்பர்களும் தங்கியிருந்தார்கள். அவர்க்ளில் ஒருவன் அசோக். இவன தாய், தந்தையர் இருவரும் யாழ் வைத்தியசாலையில் குழந்தை நல வைத்தியர்களாகப் பணியாற்றியவர்கள். அவர்கள் Toyota காரொன்றில் திரிவதைக் கண்டிருக்கின்றேன். அறிந்திருக்கின்றேன். ஆனால் அசோக்கை நான் சந்தித்தது இங்குதான். ஆரம்பத்தில் பல்வேறு தொழில்களையும் செய்து தனது துறையான கணக்கியல் துறையில் உரிய சான்றிதழ்கள் பெற்று கனடிய அரச நிறுவனமொன்றில் பணியாற்றியவன். 
 
இவனுடன் மேலும் சிலர் அங்கிருந்தார்கள். மாலை நேரங்களில் 'பே வாட்ச்', 'நைட் ரைடர்ஸ்' , திறீச் கம்பனி' , 'ஸ்டார் ட்ரெக்' போன்ற தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது அனைவரதும் பொழுதுபோக்குகளில் ஒன்று. இவர்களில் அசோக் சிட்டி டிவியின் 'மச் மியுசிக்' (Much Music) பார்ப்பதில் ஆர்முள்ளவராக விளங்கியவன். அவன் மூலம் நானும் அந்நிகழ்வைப் பார்க்கத் தொடங்கினேன். அவனுக்கு 'வான் கேலனின் 'யம்ப்' பாடல் மிகவும் பிடிக்கும். குழுவின் பிரதான பாடகரின் ( David Lee Roth ) அங்க அசைவுகள், கிட்டார் கலைஞரின் (Eddie Van Halen) கேட்பவரை மெய்ம்மறக்க வைக்கும் கிட்டார் இசை இவைற்றை மிகவும் இரசிப்பான். எனக்கும் அப்பாடலும், பாடகர்கள் , ஏனைய கலைஞர்களின் இசையாற்றல் எல்லாம் மிகவும் பிடித்துப் போயின. எடி வான் கேலன் தன் சகோதரன் அலெக்ஸ் வான் கேலனுடன் (Alex Van Halen) இணைந்து எழுபதுகளில் உருவாக்கிய ரொக் இசைக் குழுதான் 'வான் கேலன்' இசைக்குழு. அலெக்ஸ் வான் கேலன் சிறந்த 'ட்ரம்' வாத்தியக் கலைஞர். Michael Anthony குழுவின் 'பாஸ் கிட்டார் (Bass guitar) கலைஞர். 'எடி வான் கேல'னம் அண்மையில் மறைந்து விட்டார்.
 
சவால்கள் நிறைந்த வாழ்க்கையில் அவற்றைத் துணிச்சலுடன் எதிர்த்து எழுந்து நில். குதி (Jump) என்று கேட்பவர்களுக்குப் போதிக்கின்றது 'யம்ப்' என்னும் இப்பாடல். பாடகரின் நடன அசைவுகள், உற்சாகம் , துடிப்பு நிறைந்த குரல், கிட்டார் , ட்ரம் வாத்தியக் கலைஞர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வாத்திய இசை, பாடல் கூறும் பொருள் இவையெல்லாம் என்னை இப்பாடல் கவர முக்கிய காரணங்கள்.
 
பின்னர் நண்பர்கள் ஆளுக்கொன்றாகப் பிரிந்து விட்டோம். அசோக்குடனான தொடர்பும் விடுபட்டுப் போனது. குட்டியும் மறைந்து விட்டான். குட்டி மறைவதற்கு முன்னர் சிறிது காலத்துக்கு முன் அசோக் அவனை அழைத்துக் கதைத்திருக்கின்றான். அப்பொழுது என்னைப்பற்றியும் விசாரித்ததாகக் கூறினான். குழந்தை, குடும்பம், செல்வம் என்று நன்றாக இருந்தவன் அப்பொழுது தனித்திருத்ததாகக் குட்டி கூறினான். மன அழுத்தத்தில் அவன் இருப்பதை உணர்ந்து எங்காவது சுற்றுலாச் சென்று வரும்படி அறிவுரை கூறியதாகத் தான் கூறியதாகவும் குட்டி கூறினான். அதன் பின் சிறிது காலத்தின் பின் அசோக் மறைந்து விட்ட தகவலையும் கூறினான். அசோக்குக்கு இறக்க வேண்டிய வயதில்லை. என்னை விட வயதில் இளையவன். இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருக்க வேண்டியவன். 
 
இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு சமயமும் எனக்கு அவனது நினைவு வரும். அவனுடன் இப்பாடலைக் கேட்டு இரசித்த தருணங்கள் நினைவுக்கு வரும். இந்தப் பாடலுடன் அவனது நினைவும் பின்னிப்பிணைந்து விட்டது.
 
பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=SwYN7mTi6HM

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.

இசை & குரல் - AI Suno ஓவியம் - AI நானொரு குதிரை வளர்ப்பாளன். நான் வியாபாரி அல்லன். நாணயமான குதிரை வளர்ப்பாளன். நான். என்னிடம் நல்ல குதிர...

பிரபலமான பதிவுகள்