Wednesday, November 20, 2024

குரு அரவிந்தனின் கதைகள் பற்றி..

- எழுத்தாளர் குரு அரவித்நன் -

'அடுத்த வீட்டுப் பையன்' - உயிர்நிழல் சிறுகதை.  அடுத்த வீட்டுப் பையனின் அப்பா அவன்  மனைவியான இன்னுமோர் ஆண் பற்றியது. முடிவில்தான் உண்மை தெரிகிறது. இரு கலாச்சாரங்களின் மோதல். வீடு திரும்புவனிடம் மகன் கேட்கின்றான் அடுத்த வீட்டுப்பையனின் அம்மாவைப் பார்த்தீர்களா? அம்மாவா? எப்படிச் சொல்வேன் என்பதுடன் கதை முடிகிறது.

இக்க்கதை இரு வேறு கலாச்சாரங்களின்  பாதிப்பைச் சிறப்பாக எடுத்துரைக்கின்றது. ஒருபாலினத்தவர்களுக்கிடையிலான மணம் என்பது மேனாடுகள் பலவற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. மேனாட்டுக் கலாச்சாரம் இது கண்டு திகைக்கும் காலம் கடந்து விட்டது. ஆனால் இழந்த மண்ணில் நிலை அவ்வாறில்லை. இதனைத்தான் இக்கதையின் முடிவு எடுத்துரைக்கின்றது. கதையின் நாயகனைப்பொறுத்தவரையில் அடுத்த வீட்டுப் பையனின் அம்மா ஓர் ஆண் என்பதே அதிர்ச்சியைத்தருமொன்று. அது அவனது தாய்நாட்டுக் கலாச்சாரத்தின் விளைவு. அவன் வாழ்வதோ மேனாட்டுக்  கலாச்சாரச் சூழல்.இதுபோன்ற திருமணத்தைச் சட்டரீதியாக அங்கீகரிக்கும் சூழல்.கதாசிரியர் குருஅரவிந்தன் இக்கதையில் இருவிதக் கலாச்சாரப்  பாதிப்புகளையும் சிறப்பாக எடுத்துரைக்கின்றார்.

தமிழ்நதியின் 'மாயக்குதிரை'

- எழுத்தாளர் தமிழ்நதி -

கலைவாணி ராஜகுமாரன் என்னும் கவிஞராக அறிமுகமாகித் தமிழ்நதியாக வளர்ந்த  தமிழ்நதியின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. கவித்துவமான மொழியில் விரியும் இவரது புனைகதைகள் வாசிப்பதற்கு உவப்பானவை. இவருக்கென்று தமிழகத்தில் ஒரு வாசகர் கூட்டமே உண்டு.

இவரது மாயக்குதிரை கூறும் பொருளையிட்டு முக்கியத்துவம் மிக்கது. சூதாடும் பழக்கம் புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளர் ஃபியதோர் தச்த்யேவ்ஸ்கியையும் விட்டு வைக்கவில்லை. 

அகிலின் கூடுகள் சிதைந்தபோது...

- எழுத்தாளர் அகில் -

போர்ச்சூழல் காரணமாகப் புகலிடம் நாடிய  பலரின் வாழ்க்கையுடன் அப்போர் தந்த வலிகளும் புலம்பெயர்ந்திருக்கும். போர்ச்சூழலில் தன் மனைவியை இழந்த ஒருவன் அவன். வீதியில் வாகனமொன்றால் அடிபட்டுக் குற்றுயிராகக் கிடக்கும் குருவியொன்றை, அதன் வலியினை அவனால் பொறுக்க முடியவில்லை. அதன் நிலை அவனது மனைவியின் மறைவை நினைவு படுத்துகிறது. புகலிட இலக்கியத்தின் , எழுத்துகளின் இன்னுமொரு முக்கிய அம்சம் பிறந்த மண் ஏற்படுத்திய, காலத்தினால் ஆற்ற முடியாத வலி சுமந்த உணர்வுகள். உளப்பாதிப்புகள்.

ஜோர்ஜ் இ.குருஷேவின் ' ஒரு துரோகியின் இறுதிக்கணம்'

- எழுத்தாளர் ஜோர்ஜ் இ.குருஷேவ் -

'தேட'லில் வெளியானது. புகலிட இலக்கியத்தின் ஓரம்சம். புகலிடத்தில் வாழ்ந்தாலும், பிறந்த மண்ணின் தாக்கங்கள், வலி இவையெல்லாவற்றையும் கடந்து செல்ல முடிவதில்லை. ஜோர்ஜ்.இ.குருஷேவின் இக்கதையில் போராட்டச்சூழலில் விடுதலைக்காகப்போராடியவர்களால் புரியப்பட்ட  மனித உரிமை மீறல்கள் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுகின்றன.

இவரது முக்கியமான ஆரம்பக் காலத்துச் சிறுகதையொன்று அது கூறும் பொருளையிட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று தமிழர்களின் ஆயுத ரீதியிலான யுத்தம் முடிந்து விட்டது. ஆனால் யுத்தம் முடிந்து இன்று வரையில் அக்காலகட்டத்துத் தவறுகளை, மனித உரிமை மீறல்களையிட்டு இன்னும் நாம் விரிவாக ஆராயவில்லை. சுய பரிசோதனை செய்யவில்லை. மிகவும் எளிதாகக் கண்களை மூடிக்கொண்டு கடந்து செல்கின்றோம்.

சுமதி ரூபனின் ' அமானுஷ்ய சாட்சியங்கள்'

- எழுத்தாளர் சுமதி ரூபன் -


அக்கா ஸ்பொன்சர் பண்ணிக் கனடா வரும் ஓரிளம் பெண் அவளது அக்கா குடும்பத்துடன் தங்கியிருக்கின்றாள். அவளுக்கு அக்கா புருஷன் கொடுக்கும் பாலியல் ரியிலான தொல்லைகளைச் சகித்துக்கொண்டு , தாய் தந்தையரும் வரும் வரையில் அக்காவுடன் வாழ்கின்றாள். அவளது மனநிலையினை விபரிக்கும் கதை. அத்தான் என்றால் அப்பழுக்கற்றவர் என்று எண்ணும் அக்கா. மாப்பிள்ளை தங்கம் என்று எண்ணும் பெற்றோர். இவர்களுக்கு மத்தியில் அவள் மிகவும் இலகுவாகக் கனடாச் சட்ட உதவியை நாடியிருக்கலாம். அப்படி நாடியிருந்தால் அவளது அக்கா புருசன் சிறைக்குள் சென்றிருப்பான். அவள் ஏன் அவ்விதம் செய்யவில்லை? 

ஶ்ரீரஞ்சனியின் 'காலநதி'

- எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி -

எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி புலம்பெயர், புகலிடத்தமிழ் இலக்கியத்தில் , குறிப்பாகக் கனடாத்தமிழ் இலக்கியத்தில் தொடர்ச்சியாக எழுதிவரும் எழுத்தாளர்களில், பெண் எழுத்தாளர்களில் ஒருவர்.  சுமதி ரூபன், தமிழ்நதி, ஶ்ரீரஞ்சனி போன்றவர்கள் நிலவும் பண்பாட்டுச் சூழலை மீறுவதில் , அவற்றைக் கேள்விக்குட்படுத்தவதில் தயங்காதவர்கள். அதே ஶ்ரீரஞ்சனியின் எழுத்துகளில் புகலிடச் சூழலில் தாயொருவர் எதிர்ப்படும் சவால்களை, தாய்மை உணர்வுகளைக் காணலாம். அண்மையில் அவர் வெளியிட்டுள்ள சிறுகதைத்தொகுப்புகளில் ஒன்று 'ஒன்றே வேறே'. இத்தொகுப்பின் கதைகளை முற்றாக இதுவரையில் வாசிக்கவில்லை. வாசித்தவற்றில் உடனடியாகக் கவனத்தை ஈர்த்த கதைகளில் ஒன்று 'காலநதி'.

'காலநதி'யின் சுழல்களுக்குள் சிக்கித் தடுமாறி, அலைந்து முதுமைப்பருவத்தில் தன் வளர்ந்த மகளுடன் கனடாவில் வாழும் தாயொருத்தியின் உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தும் கதை மட்டுமல்ல, முடிவில் அவளுக்குச் சிறந்ததொரு வழியினையும் காட்டி நிற்கிறது. பார்வதி என்பது அவளது பெயர். கதை முதியவளான அவளது உடலுழைப்பை வேண்டும் , போலிப்பண்பாட்டுக் கோட்பாடுகளைக் காரணமாகக் காட்டி அவளது நியாயமான உணர்வுகளுக்கு முட்டுக்கட்டை போடும் மகளின் உணர்வுகளையும்வ் செயலையும் வெளிப்படுத்துகின்றது. சாடுகிறது.

க.நவத்தின் 'சீருடை'

- எழுத்தாளர் க.நவம் -

'டயஸ்போறா' இலக்கியத்தின் பல்வேறு பண்புகளை நவத்தின் இச்சிறுகதையில் காணலாம். ஊரில் பொறியியலாளரான செந்தில்நாதன் கனடாவில் பாதுகாவலாராக வேலை பார்க்கின்றார். அவர் வேலைக்குச் செல்கையில் கோர்ட் , சூட்டுடன் செல்வார். வேலைக்குச் சென்றபின்தான் பாதுகாவனுக்குரிய ஆடைகளை அணிந்துகொள்வார். தான் பாதுகாவலான வேலை செய்வதைக் குழந்தை கூட அறியாமல் மறைத்து வைப்பார். ஒரு நாள் வழியில் சந்திக்கும் ஊரில் அவனுக்குக் கீழ் ஊழியராகப் பணியாற்றிய ஒருவரின் மகன் லெக்‌ஷ்ஸ் காரில் வருகின்றான். அவருக்கு லிஃப்ட் கொடுக்கின்றான்.இங்கு அவன் செல்வச் செழிப்பில் கிளீனிங் கொம்பனி நடத்துகின்றான். அவனிடம் ஊரிலை கிடைக்காத படிக்கிற வசதி இங்கு கிடைத்திருக்கு என்று எகத்தாளமாகக் கூறுவார். பதிலுக்கு அவனும் படிச்சவையெல்லாரும் என்னத்தைக் கிழிச்சவையள் என்ற மாதிரி பதிலிறுப்பான். அத்துடன் இப்பவும் செக்கியூரிடி கார்ட் வேலையோ செய்கிறீர்கள் என்று கேட்பான். இது அவரது தன்மானத்தை எழுப்பிவிடவே காரை நிற்பாட்டும்படி கூறி இறங்கிவிடுவார்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...