Sunday, January 19, 2025

ஜார்ஜ் வில்ஹெம் ஃபிரிட்ரிக் ஹெகலின் புறநிலைக் கருத்துமுதல்வாதச் சிந்தனைகள், இயங்கியல் மற்றும் அந்நியப்படல் சிந்தனைகளைப் பற்றியோர் அலசல்! - வ.ந.கிரிதரன் -


கார்ல் மார்க்ஸின் மாக்சியச் சிந்தனைகளுக்கு அடிப்படை ஹெகலின் சிந்தனைகள். மார்க்ஸ் ஹெகலின் சிந்தனைகளை மறுத்து, அவற்றைத் திருத்தி தன் சிந்தனைகளை வடிவமைத்தார் என்று சிலர் கருதுவர். ஹெகலின் சிந்தனைகள் மார்க்சிலேற்படுத்திய பாதிப்புகளே மார்க்சியச் சிந்தனைகள் எனக் கருதுவோரும் உளர். நாம் காணும் உலகானது இப்பிரபஞ்சமானது பொருள்வயப்பட்டதல்ல. பிரபஞ்ச உணர்வு அல்லது பிரபஞ்ச ஆன்மாவின் விளைவே. எம்மைச் சுற்றி விரிந்திருக்கும் இந்தப் பொருள்வயமான பிரபஞ்சமானது அச்சக்தியின் விளைவே என்பது ஹெகலின் கருத்து. மனிதர் , 

அவரைச்சுற்றி இருக்கும் பொருள் அனைத்துமே பிரபஞ்ச உணர்வு அல்லது பிரபஞ்சச் சக்தியின் விளைவு என்று கருதும் ஹெகலின் சிந்தனை கருத்துமுதல்வாதச் சிந்தனை. அதே சமயம் பொருள் அனைத்தும் வேறான பிரபஞ்சச் சக்தியின் விளைவே என்று அவர் கருதுவதால் அவரது கருத்து முதல்வாத சிந்தனைகளைப் புறநிலைக் கருத்துமுதல்வாதச் சிந்தனைகள் என்பர்.

Saturday, January 18, 2025

யாழ்ப்பாணக் காட்சிகள்! - வ.ந.கி -


யாழ்ப்பாண வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்ட சாண் சுந்தரம் (செல்வேந்திரா, Shan Sundaram) அவர்கள் சிறந்த ஓவியர். பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரி. யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர். நீண்ட காலமாக அமெரிக்காவில் வாழ்ந்து வருமிவர் சிறந்த மரதன் ஓட்டக்காரரும்  கூட. பயணிப்பதில் ஆர்வம் மிக்கவர். அவ்விதம் பயணிக்கையில் தான் காணும் நகரங்களின் முக்கிய நில அடையாளங்களையெல்லாம் ஓவியமாக்கி முகநூலில் பகிர்பவர்.

Friday, January 17, 2025

நாடகவியலாளரும், எழுத்தாளருமான குழந்தை ம.சண்முகலிங்கம் மறைவு! ஆழ்ந்த இரங்கல்!


நாடகவியலாளரும், எழுத்தாளருமான குழந்தை ம.சண்முகலிங்கம் மறைவு! ஆழ்ந்த இரங்கல்!

எழுத்தாளரும், நாடகவியலாளருமான குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களின் மறைவுச் செய்தியினை முகநூல்வாயிலாக அறிந்தேன். இலங்கைத் தமிழ்க் கலை, இலக்கிய உலகில் முக்கியமானதோர் ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம். நாடகம், கவிதை, மொழிபெயர்ப்புவ் திறனாய்வு என இவரது பங்களிப்பு பன்முகப்பட்டது குறிப்பாக நாடகத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது. முதன்மையானது.  சகல அடக்குமுறைகளுக்கும் (சமூக,தேசிய, வர்க்க) எதிராகக்குரல் கொடுப்பவை இவரது நாடகங்கள். நாடக அரங்கக் கல்லூரியொன்றினை நிறுவி அதன் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு செய்தவர்.  இதுவரை நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட நாடகங்களை இவர் எழுதியிருப்பதாக விக்கிபீடியா கூறுகிறது.  உலக நாடகாசிரியர்கள் பலரின் நாடகங்கள் பலவற்றையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார்.

எம்ஜிஆரின் பிறந்த தினம் ஜனவரி 17!


எம்ஜிஆரின் பிறந்த தினம் ஜனவரி 17.

இந்தியத் தமிழ்த் திரையுலக வரலாற்றில், தமிழக அரசியல் வரலாற்றில் எம்ஜிஆருக்கு முக்கியமானதோரிடமுண்டு. தமிழர்களுக்கு எப்பொழுதுமே காதல், வீரம் என்பதில் பெரிதும் ஈர்ப்பு உண்டு. சங்கத் தமிழ் இலக்கியங்களிலிருந்து இன்று வரையிலான இலக்கியங்களில் இந்த ஈர்ப்பு இருப்பதைக் காண முடியும். தமிழ்த் திரையுலகில் இதனை நன்கு பயன்படுத்தியவராக எம்ஜிஆரை நான் காண்கின்றேன். தமிழ்த்திரையுலகில் கோலோச்சினார். பின்னர் தமிழக அரசியலிலும் முதல்வராக இருந்தவரையில் கோலோச்சினார்.

இவரது பெற்றோர் பற்றியும், இவருக்கு ராமச்சந்திரன் என்னும் பெயர் வந்தது பற்றியும் சுவையான தகவல்களைப் பகிர்கின்றது விக்கிபீடியா:

"இராமச்சந்திரன் இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் கோபாலன் மேனன் - சத்யபாமா பெற்றோருக்கு 5 வது மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை மருதூர் கோபாலன் மேனன் வழக்கறிஞராக கேரளாவில் பணியாற்றி வந்தார், அதன் பிறகு அந்தமான்தீவிலுள்ள சிறையில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாகப் பணிபுரிந்து வந்தார். அப்போது ஆங்கிலயர்களின் அடக்கு முறை ஆட்சி என்பதால் தினமும் சுமார் 20 சிறை கைதிகளுக்கு தூக்குத் தண்டனை அளிக்கும் குற்றவியல் நீதிபதியாக இருந்தார். பின்பு மனைவி சத்யபாமா, இந்த உயிரை எடுக்கும் வேலை நமக்கு வேண்டாம் என்று கூற அந்த நீதிபதி வேலையை இராஜினாமா செய்து விட்டார். அந்த இராஜினாமாவை ஏற்று கொள்ளாத ஆங்கிலேயர்கள் பயங்கர சூழ்ச்சியில் சிக்க வைக்க கோபாலன் மேனனை ஆட்படுத்தினர். அதன் காரணமாக ஆங்கிலேயர்களுக்கு சொந்தமான ஆயுதக் கப்பலுக்கு டைனமெட் வெடி வைத்ததாகக் கூறி பொய்யான புகாரில் சிறிது காலம் கோபாலன் மேனனை சிறையில் அடைத்தனர். பிறகு அவர் குடும்பத்துடன் இலங்கையில் உள்ள கண்டிக்கு அருகே நாவலப்பிட்டியில் குடியேறினார். பின்பு காவல் துறையில் பணியாற்றிவந்த அவரது நண்பர் வேலுபிள்ளை என் பவரின் உதவியுடன் அங்குள்ள ஒரு சிங்கள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

எம். ஜி. ஆருக்கு ராமச்சந்திரன் என்று பெயர் ஏற்படக் காரணம், அவரது தந்தை கோபாலன் மேனன் தந்தை பெயர் சந்திரசேகரன் மேனன் அதில் "சந்திரன்" என்றும் தாயார் சத்யபாமாவின், தந்தை பெயர் சீதாராமன் நாயர் என்பதில் "ராம" என்பதை சேர்த்து ராமச்சந்திரன் என்று பெற்றோா்கள் அந்த பெயரை வைத்தனா்."

Thursday, January 16, 2025

எழுத்தாளர் கற்சுறாவுடன் ஒரு முகநூற் தர்க்கம்! - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் கற்சுறா

எழுத்தாளர் கற்சுறா புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாகப் புகலிடத் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான ஆளுமையானவர்களில் ஒருவர். கவிதை, விமர்சனம், இதழியல் என இவரது பங்களிப்பு பரந்து பட்டது. எக்ஸில், அறிதுயில் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் இருந்தவர்.

இவரது விமர்சனக்கட்டுரைகள் மிகுந்த சீற்றத்துடன் கர்ச்சிப்பவை. அவற்றில் கூறப்படும் விடயங்கள் பற்றிய கலந்துரையாடல்களை வேண்டி நிற்பவை. ஆனால் அக்கட்டுரைகளில் இவர் கையாளும் விமர்சனப் போக்கு காரணமாக, இவர் எதிர்பார்க்கும் கலந்துரையாடல்கள் பெரும்பாலும் நடைபெறுவதில்லை. அது துரதிருஷ்டமானது. அதற்குக் காரணமாக இவர் கையாளும் விமர்சனப்போக்கே இருந்து விடுவது வருத்தத்திற்குரியது.

உதாரணத்துக்கு அண்மையில் 'டொரோண்டோ'வில் நடைபெற்ற கவிஞர் சேரனின் 'காஞ்சி' நூல் வெளியீட்டில் எழுத்தாளர்களான 'காலம்' செல்வம், 'நான்காவது பரிமாணம்' க.நவம் ஆகியோர் பற்றி இவர் தன் முகநூற் பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

Wednesday, January 15, 2025

கட்டடக்கலையும் , வடிவமைப்பும்! - வ.ந.கிரிதரன் -


* ஓவியம் - AI -


கட்டடக்கலையின் முக்கிய அம்சமே வடிவமைப்புத்தான். கட்டடச் சூழலை வடிவமைப்பதே கட்டடக்கலை என்று சுருக்கமாகக் கூறலாம். ஒரு நகரானது கட்டடங்களால் நிறைந்துள்ளது. கட்டடங்கள் நிறைந்த அச்சூழலை உருவாக்குவதே கட்டடக்கலை. கட்டடக்கலை எவ்விதம் கட்டடங்களை உருவாக்குகின்றது? இங்குதான் வடிவமைப்பு முக்கியமாகின்றது. கட்டடக்கலையானது வெறும் கட்டடங்களைக் கட்டுவது மட்டுமல்ல. அக்கட்டடங்களைக் கட்டுவதற்கு முன், வடிவமைப்பதற்கு முன் பல விடயங்களைக் கவனத்திலெடுக்க வேண்டும்.

கட்டட வடிவமைப்பின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளும் அவற்றின் அவசியமும்!

ஒரு கட்டடம் கட்டவேண்டுமென்று வாடிக்கையாளர் ஒருவர் விரும்பினால் கட்டடக்கலைஞர் ஒருவர்  பின்வரும் விடயங்களைக் கவனத்திலெடுக்க வேண்டும்.  அக்கட்டடம் எதற்காகக் கட்டப்பட வேண்டும்? நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் கட்டடத்தை வடிவமைக்க முடியாது. உதாரணத்துக்கு வாடிக்கையாளர் தான் வசிப்பதற்கு ஓர் இல்லத்தை உருவாக்க வேண்டுமென்று விரும்பலாம். அல்லது ஒரு கல்விக்கூடத்தை உருவாக்க வேண்டுமென்று விரும்பலாம். அல்லது நூலகம் ஒன்றினை உருவாக்க வேண்டுமென்று விரும்பலாம். இவ்விதம் அவ்வாடிக்கையாளரின் நோக்கத்தைத் தெளிவாக அறிந்து கொள்வதே வடிவமைப்புச் செயற்பாடுகளைப் பொறுத்தவரையில் முதலாவதாக இருக்கும்.

வாடிக்கையாளரின் நோக்கத்தைப் புரிந்து கொள்வதுடன் , அவர் அத்திட்டத்துக்காகச் செலவழிக்கக்கூடிய நிதி பற்றியும் தெளிவான புரிதல் இருக்க வேண்டும். இதை வாடிக்கையாளருடன் கட்டடக்கலைஞர் நடத்தும் உரையாடல்கள் மூலம் பெற முடியும்.

வாடிக்கையாளரின் நோக்கம், அவர் அந்நோக்கத்துக்காகச் செலவழிக்கக்கூடிய நிதி பற்றிய தெளிவான புரிதல் சிறந்த வடிவமைப்பை உருவாக்குவதற்கு மிகவும் அவசியமாகும்.

Monday, January 13, 2025

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!


மங்கலம் பொங்கட்டும். எங்கும் தங்கட்டும். பொங்கல் நன்னாளுக்கும் என் எழுத்துலக வாழ்க்கைக்குமோரு தொடர்பு உண்டு. ஒரு வகையில் என் எழுத்தார்வத்துக்குத்  தீனி போட்டு வளர்த்தெடுத்தது பொங்கல் என்று கூறலாம். நான் ஏழாம் வகுப்பில் வவுனியா மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தபோது என் முதலாவது கவிதை, எழுத்து அச்சுருவில் வெளியானது. 1970 பொங்கலையொட்டி வெளியான சுதந்திரன் பத்திரிகையில் வெளியான  எனது 'பொங்கலோ பொங்கல்' என்னும் கவிதைதான் அது. அதன் பின்னர் வெற்றிமணி சிறுவர் சஞ்சிகையில் எனது பொங்கல் பற்றிய கட்டுரையும் , கவிதையும் வெளியாகின. ஈழநாடு மாணவர் மலரிலும் பொங்கல் பற்றிய எனது கட்டுரையொன்று வெளியானது. இவையெல்லாம் நெடுங்கட்டுரைகள் அல்ல. சிறுவனான என் எழுத்துலக ஆர்வத்துக்குத் தீனி போட்ட குறுங்கட்டுரைகள். ஆனால் எவை என் எழுத்துலக வாழ்க்கையின் பலமான அத்திவாரங்கள். அதனால்தான் கூறினே பொங்கல் எழுத்தார்வத்துக்குத் தீனி போட்ட திருநாளென்று.

இத்திருநாள் எப்படி உர்வானது என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் இத்திருநாள் உழவுத்தொழிலை, உழவர்களை, உழவர்களுக்கு, உலகுக்கு உறுதுணையாக இருக்கும் கதிரை, எருதை நன்றியுடன் நினைவு கூர்ந்திடும் திருநாள். எம் குழந்தைப் பருவத்திலிருந்து நாம் பங்கு பற்றிய, மகிழ்ந்து கொண்டாடிய, கொண்டாடிக்கொண்டிருக்கும் திருநாள். அதுதான் முக்கியமானது. அவ்வகையில் எம் வாழ்க்கையுடன் பிரிக்க முடியாத வகையில் பிணைந்திருக்கும் திருநாள்.

இத்திருநாளில் அனைவர் வாழ்க்கையிலும்
இன்பம் பொங்கட்டும்.
நல் எண்ணங்கள் பொங்கட்டும்.
போர்கள் மலிந்த உலகில் அமைதி பொங்கட்டும்.
வர்க்கம், வர்ணம், மதம், இனம், மொழி எனப்
பிரிந்து கிடக்கும் மானுட சமுதாயத்தின் மத்தியில்
இணக்கம் பொங்கட்டும்.
புரிந்துணர்வு பொங்கட்டும்.
அன்பு பொங்கட்டும்.
போரொழிந்து, அன்பு நிறைந்து  ,
புவியெங்கும் ஏற்றம் பொங்கட்டும்.

பொங்கலோ பொங்கலென்று
உவகை மிகுந்து நாமும்
பூரிப்பு நிறைந்து
பொங்கியெழுவோம்.
பொங்கியெழுவோம்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...