Sunday, September 21, 2025

குந்தவையின் 'மாயை'

- எழுத்தாளர் குந்தவை -

[ குந்தவை - டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்பம் - இரமணிதரன் கந்தையா.]

சுதந்திரன் பத்திரிகையின் , 1967  ஜனவரி வெளியான பொங்கல் மலருக்கான சிறுகதைப் போட்டிக்காக எழுத்தாளர்  குந்தவை சிறுகதை அனுப்பிப்  பாராட்டினைப்பெற்ற சிறுகதையாக , 24.2. 1967 இல் வெளியான சுதந்திரனில் பிரசுரமான சிறுகதை  'மாயை'.  வித்தியாசமான சிறுகதை  கதையின் நாயகி  புனிதம் பேராதனைப்  பல்கலைக்கழகக் கலைப்ப்பிட  மாணவி. அவள் தன் தோழிகள் இருவருடன் பொல்காவகைத் தொடருந்து நிலையத்தில் , காத்திருந்து  யாழ் மெயில் தொடருந்தில் ஏறுகின்றாள்.  அவளது தோழிகளில் ஒருத்தியின் பெயர்  மாயா. அப்புகைவண்டியில்  இன்னுமோர் இளைஞன் வந்து அவர்களுடன் இணைகின்றான். அவனை மாயா தம்பி என்று கூறுகின்றாள். அவன்  மாயாவுக்கும் , அவளுக்கு அருகில் தள்ளியிருந்த மனிதனுக்குமிடையில் அமர்கின்றான். 

புனிதம் தூக்கக் கலக்கத்தில் மாயாவையும், அவளருகில் வந்தமர்ந்த இளைஞனையும் அவதானிக்கின்றாள். அவர்கள் இருவரும் அக்கா தம்பி  போல் நடப்பதாகத் தெரியவில்லை என்றுணர்கின்றாள்.  உண்மையில் அவ்விதம்தான் அவர்கள் நடந்த்துகொண்டார்களா அல்லது புனிதம்தான் அவ்விதம் தூக்கக்கலக்கத்தில் உணர்கின்றாளா என்பதை உறுதியாகத் தீர்மானிக்க முடியாத வகையில் குந்தவையின் எழுத்து மிகவும் நுட்பமாகப் பின்னப்பட்டிருக்கின்றது.

இறுதியில்  இன்னுமொரு சந்தர்ப்பத்தில் மாயா இன்னுமொர் இளைஞனுடன் வருகின்றாள். அவனே மாயாவை  மணம் பிடிக்க இருப்பவன் என்று அவளது தோழி கூறுகின்றாள். புனிதத்துக்கு அதிர்ச்சியாகவிருக்கின்றது.அவளது மனத்திரையில் மாயாவுக்கும், தம்பி என்ற வந்திருந்தவனுக்கும் இடையிலான தொடர்பு பற்றிய எண்ணங்கள் ஓடுகின்றன. அதே சமயம் மாயாவின் தம்பியாக முன்பு அறியப்பட்டவன் , மாயா திருமணம் செய்யப்போகின்றவனின் இளைய சகோதரன்.

புனிதம் மாயாவையும், அவளது தம்பியாக வந்தவனையும் நினைத்துப்பார்க்கிறாள். அவர்களுக்கிடையில் உணமையில் நிலவிய தொடர்புதானென்ன?  தன் தம்பிக்கும், மனைவிக்குமிடையில் நிலவும் உறவு பற்றி  , தம்பியாக வந்த இளைஞன் பற்றிய உண்மை தெரிந்தால் என்ன நடக்கும்?  அவ்விதம் தெரியும்போது அவன் தன் தம்பியையும்,மாயாவையும் கொன்று விடுவானா? ஆனால், மாயா துணிச்சல் மிக்கவள்.  அவள் மீண்டுமொரு கோகிலாம்பாள் ஆகி விடுவாளோ? இவ்விதமான சிந்தனையோட்டம் புனிதத்தின் மனத்தினில் ஓடுகின்றது.

இறுதியில் கற்பனை பலூன் வெடிக்கின்றது என்னுமொரு வரி வருகின்றது. அதைத்தொடர்ந்து 'நான் கமலாவுடன் நடந்து கொண்டிருக்கின்றேன்' என்று புனிதா கூறுவதுடன் கதை முடிகின்றது. கதை முழுவதுமே புனிதாவின் தன் கூற்றாகவே நடைபோடுகின்றது.

உண்மையில் மாயா தனக்குக் கணவனாக வர இருப்பவனின் தம்பியுடனும் பாலியல்ரீதியிலான தொடர்பு வைத்திருக்கின்றாளா?  என்னும் கேள்வி புனிதாவுக்கு எழுகின்றது. கதையை வாசிக்கும் வாசகர்களுக்கும் எழுகின்றது. உண்மையில் மாயா பற்றிய புனிதாவின் மனச்சித்திரம் அவளது கற்பனையா?  உண்மை போல் தெரிவதெல்லாம் மாயைதானா?  இவ்விதமான கேள்விகளை வாசகர்களிடம் எழுப்பித் தீர்வினை அவர்களே கண்டுகொள்ளட்டும் என்று கதாசிரியை குந்தவை விட்டு விட்டதாகவே உணர முடிகின்றது. என்னைப்பொறுத்தவரையில் மாயா பற்றிய புனிதாவின் எண்ணங்கள் அவளது உள்ளத்துக் கற்பனைச் சித்திரங்கள். உண்மைபோல் தெரியும் மாயச்சித்திரங்கள். இது நான் வந்திருக்கும் முடிவு. அதற்காக நீங்களும் இவ்விதமானதொரு முடிவுக்கு வரவேண்டுமென்னும் அவசியமில்லை.

சிறுகதையை வாசிக்க - https://noolaham.net/project/436/43524/43524.pdf

Saturday, September 20, 2025

என் அபிமான வானியற்பியல் அறிஞர்கள் இருவர்தம் சிந்தனைகள் பற்றி...


*digital art techology by Ramanitharan Kandiah 

யதார்த்தம், காலம் பற்றிய வானியற்பியல் அறிஞர் பிரையன் கிறீனின் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் சிந்தனைகள்...

வானியற்பியல் அறிஞர் பிரையன் கிறீனின் 'காலம்' பற்றிய  இச்சிந்தனை இது பற்றிய  விரிவான சிந்தனையைத் தூண்டுவது. எம் பிரபஞ்சத்தில் ,எம் இருப்பில் கணந்தோறும் நடைபெறும் செயல்களை, அடுத்தடுத்த கணங்களின் தொடரில் ஒழுங்கமைத்து நாம் காலத்தை அனுபவிக்கின்றோம். ஆனால் , ஏனைய அண்டவெளி உயிரின நாகரிகங்கள் நாம் உணர்வது போல் காலத்தை உணராமல் இருந்தால், இன்னுமொரு விதமாக அவர்கள் இருப்பு இருந்தால், எமக்குக் காலம் என்னும் பரிமாணம் இருப்பது போல் ,அவ்வுயிரினங்களுக்கு யதார்த்தம் என்பதை உணர்வதற்கு இன்னுமொரு பரிமாணம் இருந்தால்... எத்துணை அற்புதமான சிந்தனை! இவ்வகையான சிந்தனைகளை இவரது எழுத்துகளில் காணலாம். அவை என்னைக் கவர்ந்தவை. இவ்வகையான இவரது சிந்தனைகள்தாம் இவரை என் அபிமானத்துக்குரிய வானியற்பியல் அறிஞர்களில் ஒருவராக்கியுள்ளது

https://www.facebook.com/share/p/1BRw8CpfEP/

பிரபஞ்சங்களை இணைக்கும் 'புழுத்துளை' (wormhole)

மிஷியோ ஹகோ எனக்குப் பிடித்த வானியற்பியல் அறிஞர்களில் மற்றொருவர். இவரது வானியற்பியல்சார்ந்த எழுத்துகளும் எம் சிந்தனையை விசாலிக்க வைப்பவை. ஐன்டைனின் 'பொதுச்சார்பியல் தத்துவம்' எதிர்வு கூறும் 'புழுத்துளை' (Wormhole) பற்றிய எளியமையான, தெளிவான தன் கருத்துகளை இக்காணொளியில் மிஷியோ ஹகோ விபரிக்கின்றார். 

'புழுத்துளை' என்பது இரு வேறு பிரபஞ்சங்களை இணைப்பதற்கான அல்லது ஒரே பிரபஞ்சத்தில் தொலைதூரத்து இடங்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பதற்கான குறுக்குப் பாதை என்பதை ஐன்ஸ்ட்டைனின் இக்கருதுகோள் எடுத்துரைக்கின்றது.

https://www.facebook.com/share/p/16wVnFAvu1/

ஏ.ஈ.மனோகரனின் பொப் இசைப் பாடல்கள்!


ஏ.ஈ.மனோகரனின் பொப் இசைப் பாடல்கள் சிலவற்றைக் கேட்டு இரசிப்போமா?


பொப் இசை என்பது எம் தலைமுறையின் அழியாத கோலங்களில் ஒன்று. அதனை நினைத்ததுமே நித்தி கனகரத்தினம், ஏ.ஈ.மனோகரன், அமுதன் அண்ணாமலை . என்று பலர் நினைவுக்கு வருவார்கள்.

என் பதின்ம வயதுகளில் யாழ் திறந்தவெளி அரங்கில் (மத்திய கல்லூரி, மணிக்கூட்டுக் கோபுரம், பொதுசன நூலகத்துக்கிடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கும்) நடந்த தினகரன் விழா நினைவுக்கு வருகின்றது.

தமிழ் , சிங்களப் பொப் பாடகர்கள் பலர் பங்கேற்ற நிகழ்வு. கட்டணம் செலுத்திச் செல்ல வேண்டியிருந்த நிகழ்வு. நாங்கள் வெளியில் நின்று கேட்டுக்கொண்டிருந்தோம். நிகழ்ச்சி தொடங்கி சிறிது நேரத்தின் பின்னர் வெளியில் காத்திருந்தவர்களையும் பார்க்க அனுமதித்து விட்டார்கள். முதன் முதலாக மில்டன் மல்லவராச்சி என்னும் சிங்களப் பாடகரை அங்குதான் பார்த்தேன்.

மாக்சிம் கார்க்கியின் தாய்!


கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்கள் பகிர்ந்திருந்த முகநூற் பதிவொன்றிலிருந்து இந்த அட்டைப்படத்தினைப் பெற்றேன்.


மாக்சிம் கார்க்கியின் "தாய்' நாவலுக்கான அட்டைப்படம்தான்.

பார்த்ததுமே 'தாய்' நாவலுக்குரிய இந்த அட்டைப்படம் பிடித்துப்போனது. இதுவரை நான் பார்த்த தாய் நாவலின் அட்டைப்படங்களில் சிறந்ததாக இதனையே குறிப்பிடுவேன்.

ஏனென்றால் தாயின் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் வரையப்பட்டுள்ள ஓவியம் இது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்துகளில்லை.

ஒரு சாதாரணத் தாயொருத்தி எவ்விதம் மக்கள் விடுதலைக்காகப் போராடும் புரட்சிவாதியான அவளது மகனுக்கும், சக புரட்சியாளர்களுக்கும் உதவுகின்றாள் என்பதை விபரிக்கும் நாவல் என்று சுருக்கமாகத் 'தாய்' நாவலைக் கூறலாம்.

அவ்விதம் உதவுவதால் அவளுக்கு அரசால் ஏற்படும் அபாயங்களையெல்லாம் துச்சமென ஒதுக்கிவிட்டு, புரட்சியாளர்களின் நோக்கங்களை உணர்ந்து செயற்படும் தாய் அவள். அதில்தான் அவளது மகத்துவம் தங்கியுள்ளது.

இவளைப்போன்ற தாய்மார் பலரை எம் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் கண்டிருக்கின்றோம் அல்லவா. அதனால் எம்மால் இத்தாயுடன் மிகவும் நெருக்கமான, உணர்வுரீதியான பிணைப்பினை ஏற்படுத்த முடிகின்றது.

குறிப்பாக , விடுதலைப் போராட்டம் ஆயுதமயப்பட்ட காலகட்டத்தில், மறைமுகமாக , இளைஞர்கள் மக்கள் விடுதலை பற்றிச் சிந்தித்து இயங்கத் தொடங்கிய காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இந்நாவலின் பாத்திரங்கள் வெளிப்படுத்தும் உளவியல் மிகவும் நெருக்கமானது. உணர்வுபூர்வமானது.

Friday, September 19, 2025

'பதிவுகளி'ல் அன்று (மார்ச் 2006 இதழ் 75 ) - 'வாழும் சுவடுகள்': தமிழ் இலக்கிய உலகிற்கொரு வித்தியாசமான புது வரவு! - வ.ந.கிரிதரன் -


[பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ] 

 டாக்டர் நடேசனின் 'வாழும் சுவடுகள்' தமிழ் இலக்கிய உலகிற்கு நல்லதொரு வரவு. புது முயற்சியும் எனலாம். 'நாலுகால் சுவடுகளே' 'வாழும் சுவடுகளான' தலைப்பு மாற்றத்தினை நூலிற்கான எஸ்.பொ.வின் முன்னீடு தெரிவிக்கின்றது. மனிதரின் மிருக அனுபவங்களை வைத்துப் புனைகதைகள் பின்னப்படும் இக்காலகட்டத்தில் 'வாயில்லாச் சீவன்களுடனான' மனிதரின் அனுபவங்களை மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் கூறும் 'வாழும் சுவடுகள்' இன்னுமொரு விதத்திலும் சிறந்து விளங்குகின்றது. ஆசிரியரின் எழுத்தாற்றல் காரணமாக அவர்தம்  அனுபவங்கள்  ஈசாப் கதைகளைப் போல் சில சமயங்களில் தீர்வினைத்தரும் குறுங்கதைகளாக விளங்கிச் சிறக்கின்றன. வித்தியாசமான அனுபவங்கள் நல்ல சிறுகதைகளைப் போல் படிப்பதற்குச் சுவையாகவிருக்கின்றன.

'நடுக்காட்டில் பிரேத பரிசோதனை' யானைக்கு நடந்த பிரேத பரிசோதனையைக் கூறும். ஆசிரியரின், டாக்டரின் ஆரம்ப அனுபவம் 'துப்பறியும் சாம்பு' கதையொன்றை வாசித்தது போலொரு கதையாக உருவான நல்லதோர்  அனுபவம். சிக்கலான பிரச்சினைகளை எவ்விதம் சாதாரண அனுபவ அறிவு மூலம் தீர்க்க முடியுமென்பதற்கு உதாரணமாக இக்கதையினைக் கூறலாம். ஆரம்பத்தில் பயந்து கொண்டு சென்ற டாக்டர் தனது சமயோசிதத்தால் நல்லதொரு தீர்வினைத் தனது தடுமாற்றத்தினை வெளிக்காட்டாமல் தீர்த்துத் துப்பறியும் சாம்புவாய்ப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் முன்னால் நிமிரும் போது வாசிப்பவர் இதழ்க் கோடியில் புன்னகையும் கூடவே தோன்றி விடுகின்றது.

'கலப்பு உறவுகள்' சிறிய இனப் பசுவொன்றிற்குப் பெரிய இனக்காளையன்றுடன் சினைப்படுத்தியதால் உண்டான பிரசவச் சிக்கலைக் கூறும். மனிதருக்கும் இது பொருந்துமாவென்பதை பிரசவ வைத்திய கலாநிதிகள் தான் ஆய்ந்து அறிவிக்க வேண்டும். 'ராமசாமி கோனாரின் கவலைக்கு மருந்து' அவரது வாழ்வுப் பிரச்சினை அவரது மாடுகளின் அனுபவத்தினூடு ஒப்பிட்டு ஆராயப்படும் பொழுது சிறுகதைகளுக்குரிய அம்சங்களுடன் விளங்குகின்றது. இக்கதையில் தமிழகத்தில் தமிழ்ச் சொற்களாகப் பரவிக்கிடக்கும் ஆங்கிலச் சொற்களின் பாவனையும் அங்கதத்துடன் சுட்டிக்காட்டப் படுகிறது. தமிழ் நாட்டில் 'சோப்பு' என்ற தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடித்ததைக் கூறும் அனுபவம் அது.

Thursday, September 18, 2025

'பதிவுகளி'ல் அன்று - தேசிய சினிமா விருதுகளும் சில சிந்தனைச் சிதறல்களும்! - நேச குமார் -


 

- இயக்குநர் மிருணாள் சென் -

[பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ] 


மார்ச் 2005 இதழ் 63
'பதிவுக'ளில் அன்று - தேசிய சினிமா விருதுகளும் சில சிந்தனைச் சிதறல்களும்!   - நேச குமார் - 


இவ்வருடத்தய தாதா சாகேப் பால்கே விருது மிருனாள் சென்னுக்குக் கிடைத்துள்ளது. விக்ரம் - சிறந்த நடிகர் விருதை பிதாமகனுக்காகப் பெற்றிருக்கிறார். பாடம் ஒன்னு ஒரு விலாபம் என்ற மலையாளப் படத்திற்காக மீரா ஜாஸ்மினுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்துள்ளது. மிருனாள் சென்னுக்கு விக்ரமைப் போல சரியாக இருமடங்கு வயது. (விக்ரம் 1964ம் ஆண்டு பிறந்தவர். ம்ருனாள் சென் 1923ம் ஆண்டு பிறந்தவர்). இன்றைய வங்காளதேசத்தில் பிறந்து பின் (இன்றைய) மேற்கு வங்கத்துக்கு குடிபெயர்ந்தவர் அவர். கம்யூனிச கட்சியின் கலாச்சாரப் பிரிவில் தன்னை இணைத்துக் கொண்டு மக்களின் போராட்டங்களைத் தான் கண்ட பாதிப்பில் படங்களை எடுத்தவர் ம்ருனாள் சென். கம்யூனிச கோட்பாட்டின் வர்க்க எதிரி முறையை இந்தியக் கண்ணோட்டத்தில் எதிர் கொண்டு, ஒரே வர்க்கத்தினுள் நிலவும் முரண்பாடுகளை, எதிர் சக்திகளை மையப் படுத்தி அவர் எடுத்த படங்கள் உலகளாவிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ஐம்பது வருடங்களாக தொடர்ந்து சினிமாத்துறையில் தமது பங்களிப்பை செய்திருக்கின்றார் . விருதுக்குப் பின்னும் தமது பணி தொடரும் என்று தெரிவித்துள்ளார் மிருனாள் சென்.

'பதிவுகளி'ல் அன்று - ராஜா ராஜாதான்! - பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின் -

 

[பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ] 

மார்ச் 2010  இதழ் 123  -

- பொ. கருணாகர்மூர்த்தி -
1980களின் இறுதிப்பகுதியில் இளையராஜா ஒரு வாரப்பத்திரிகையில் Johann Sebastian Bach பற்றி ஒரு சிறிய தொடரை எழுதினார். அதைப்படிப்பவர் எவருக்கும் அவருக்கு சங்கீத மும்மூர்த்திகளிடம் எவ்வளவு பிரேமையும், பக்தியும் மதிப்பும் உண்டோ அதற்கு இணையாக J.S. Bach ஐயும் ஒரு மஹானுபாவராக இராகதேவனாக அவரால் போற்றப்படுவது தெரிய வரும். பின்னால் அக்கட்டுரைகளின் தொகுதி ஒரு சிறியநூலாகவும் வெளிவந்ததுண்டு.  என் புலம்பெயர்வாழ்வின் ஆரம்பத்தில் அரசு தரும் உதவிப்பணத்தில் வாழ்ந்துகொண்டிருந்தகாலை ஒருநாள் பெர்லினில் Kiperts என்னும் பாரிய புத்தகக்கடையினுள் நுழைந்து மேய்ந்துகொண்டிருந்தபோது அங்கே இசை நூல்களின் பகுதியில் J.S. Bach பற்றிய ஒரு அருமையான நூல் இருப்பதைக்கண்டேன். அட்டையில் அவரது ஓவியம், உள்ளே J.S. Bach ன் பிறந்த மனை, அவர் படித்த பள்ளிக்கூடம், பயின்ற இசைக்கல்லூரி, பணிபுரிந்த Leipzig St.Thomas தேவாலயம், 300 கிமீட்டர்கள் கால்நடையாக நடந்து சென்று இசைநிகழ்ச்சி பார்த்த ஹம்பேர்க்கின் ஓபரா கலைக்கூடம் எனப் பல அரிய படங்களுடன் வழுவழுப்பான உயர்ந்த தாளில் செம்பதிப்பாக அந்நூல் பதிக்கப்பட்டிருந்தது. உடனே எனக்கு இந்நூலை இளையராஜா பார்க்க நேர்ந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார் என்றுதான் தோன்றியது. விலையப் புரட்டிப்பார்த்தேன் 50 D.Marks என்றிருந்தது. கனதியான அந்நூலை அனுப்புவதற்கும் இன்னொரு 50 D.Marks தேவைப்படும் என்பதும் தெரிந்ததுதான். அது இங்கே ஒரு மாதத்தை ஓட்டுவதற்குத் தேவையான தொகை, எனினும் அதைவாங்கி அவருக்கு விமான அஞ்சலில் அனுப்பிவைத்தேன். ” பெற்றுக்கொண்டேன் நன்றி ” என்று இரண்டு வார்த்தைகள் எழுதுவாரென்பது என் எளியதும் நியாயமானதுமான எதிர்பார்ப்பு. நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்களாகி இன்று கால்நூற்றாண்டுகள் கடந்தும் விட்டன. பதில் இன்றுவரை இல்லை.

எழுத்தாளர் குரு அரவிந்தனின் 'கதிரவன் குடும்பம்' நல்லதொரு சிறுவர் நூல்!

குழந்தைகளுக்கான 'கதிரவன் குடும்பம்' நல்ல நூல்., இது போன்ற வானவியல் பற்றிய நூல்கள் குழந்தைகளுக்கு அவர்கள்தம் சிறந்த எதிர்காலத்துக்கு ...