[கலை, இலக்கிய விமர்கர் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூல் பற்றி ஆங்கிலத்தில் விமர்சனக் கட்டுரையொன்றினை இலங்கையிலிருந்து வெளியாகும் டெய்லி நியூஸ் பத்திரிகையில் அவர் எழுதி வந்த பத்தியில் எழுதியிருக்கிறார். அது 28 ஏப்ரில் 2004 வெளியான டெய்லி நியூஸ் பத்திரிகையில் வெளியானது. பின்னர் அங்கு வெளியாகிய Friday என்னும் வாரப்பத்திரிகையிலும் நவம்பர் 7-15, 2007 அன்று வெளியான பதிப்பிலும் அக்கட்டுரை வெளியாகியிருந்தது. அக்கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு இக்கட்டுரை. ]
இலங்கையில் பிறந்து கனடாவில் வாழும் தமிழரான வ.ந. கிரிதரன் தமிழ் மொழியில் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வருகிறார். அவருடைய சில படைப்புகள் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக, வெளிநாடுகளில் குடியேறிய முன்னாள் இலங்கையர்களின் வாழ்க்கை முறைகளை அவரது நூல்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலைப் பட்டம் பெற்ற அவர், மின்சார மற்றும் மின்னணுப் பொறியியல், தகவல் தொழில் நுட்பவியலாளராகவும் தகுதி பெற்றவர். அறிவியல், வரலாறு மற்றும் சிறார் இலக்கியம் ஆகிய துறைகளிலும் அவருக்கு விரிவான ஆர்வம் உள்ளது. அதற்கு மேலாக, இணையவெளியிலும் அவர் பயனுள்ள பணியாற்றி வருகிறார்.
இந்தியத் தமிழ்நாட்டுத் தமிழர்களின் இலக்கிய மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளை முன்னிறுத்தும் தமிழ் இணையத்தளங்கள் பல இருந்தாலும், கிரிதரனின் 'பதிவுகள்' மின்னிதழ் இலங்கைத் தமிழ் இலக்கிய உலகைப் பற்றிய விரிவான செய்திகளையும் ஆய்வுகளையும் வழங்குவதில் தனித்துவம் பெற்றதாகும். அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் அது உள்ளடக்குகிறது.