Friday, March 23, 2018

காலத்தால் அழியாத கானங்கள்: "மல்லிகைக்கா மல்லிகைக்கா எங்கடி போறே". சாஜிசுப்புலக்சுமி இரட்டையரின் அபார நடனம்! உலக சமாதானத்தை வலியுறுத்தும் பட்டுக்கோட்டையாரின் கருத்துமிக்க பாடல்! - வ.ந.கிரிதரன் -



இப்பாடலில் தற்செயலாகத்தான் தடுக்கி விழுந்தேன். ஆனால் நான் விழுந்ததோ பெரும் புதையல் ஒன்றின் மீது என்பதை இக்கானத்தைக் கேட்டதும், பார்த்ததும்தாம் உணர்ந்துகொண்டேன்.  கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கருத்தாழம் மிக்க, கற்பனையாற்றல் மிக்க பாடலில், அப்பாடலைப் பாடி ஆடும் அக்குழந்தைகளின் நடனத்தில், பாடலைப்பாடும் பாடகர்களின் குரலினிமையில் நான் என்னையே மறந்தேன். மேலுமோர் அரிய தகவலையும் இப்பாடலைப் பாடி ஆடும் அக்குழந்தை நடனமணிகளைப்பற்றி அறிந்து கொண்டேன்.

முதலில் கவிஞரின் கற்பனைச்சிறப்பினைச் சிறிது பார்ப்போம். மல்லிகைக்கும், ரோஜாவுக்குமிடையில் சிறு தர்க்கம் முகிழ்க்கிறது. ரோஜா மல்லிகையைப்பார்த்து கேட்கிறாள்:

 "மல்லிகைக்கா மல்லிகைக்கா எங்கடி போறே
கொஞ்சம் சொல்லடியக்கா
எதுக்கு இப்படி குலுக்கி நடக்குறே?".

அதற்கு மல்லிகை பதிலளிக்கின்றாள் இவ்விதம்:

"நான் மணவறையை சிங்காரிச்சு
வாசனைய அள்ளித் தெளிச்சு
வாறவங்க எல்லாரையும் மயக்கப் போறேன்
நான் மயக்கப் போறேன்
புது மணப் பொண்ணு கூந்தலிலே
மணக்கப் போறேன்"

பதிலுக்கு ரோஜா மல்லிகையைப்பார்த்து சீண்டுகிறாள் இவ்விதம்:

Thursday, March 22, 2018

அ.ந.க.வின் 'குருட்டு வாழ்க்கை' சிறுகதையும், 'மனக்கண்' நாவலும் பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -


அறிஞர் அ.ந.கந்தசாமியின் முதலாவது சிறுகதையினை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. எழுத்தாளர் செங்கை ஆழியான் தொகுத்து பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு - கிழக்கு மாகாணம், திருகோணமலை) வெளியிட்டிருந்த 'ஈழகேசரிச் சிறுகதைகள்' தொகுப்பு நூல் உள்ளடக்கியுள்ள 'குருட்டு வாழ்க்கை' என்னும் சிறுகதைதான் அது. 17.5.1942 ஈழகேசரிப்பிரதியில் வெளியான சிறுகதை இது. இதனை எழுதியபோது அ.ந.க.வுக்கு வயது பதினேழு. இதுவே அவரது முதலாவது சிறுகதை என்று செங்கை ஆழியான நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் சிறுகதை வெளியாகியுள்ள பக்கத்தில் அ.ந.க 'சிப்பி' என்னும் புனைபெயரில் 'பகல் வெள்ளி' (1941) என்னுமொரு சிறுகதையினையும் ஈழகேசரியில் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி 'பகல்வெள்ளி'யே அ.ந.க.வின் முதலாவது சிறுகதையாகவிருக்க வேண்டும். 'குருட்டு வாழ்க்கை' வெளியான ஆண்டு 1942. 'பகல் வெள்ளி' வெளியான ஆண்டு 1941. அ.ந.க.வின் பிறந்த ஆண்டு 1924 என்பதால் (ஆகஸ்ட் 8, 1924) இச்சிறுகதை வெளியானபோது அவருக்கு வயது பதினேழு.

இச்சிறுகதையை வாசித்த போது இன்னுமொர் உண்மையினையும் அவதானிக்க முடிந்தது. அ.ந.க எழுதி தினகரனில் தொடராக வெளியான ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. இந்நாவலின் கதையமைப்பும், 'குருட்டு வாழ்க்கை' சிறுகதையின் கதையமைப்பூம் ஒரே மாதிரியானவை. குருட்டு வாழ்க்கை சிறுகதையில் வரும் நாயகன் அம்மை நோயினால் கண் பார்வையினை இழக்கின்றான். இது போலவே மனக்கண் நாவலிலும் நாயகன் ஶ்ரீதர் கண் நோயினால் கண் பார்வையினை இழக்கின்றான். இரண்டிலுமே கண் பார்வை இழந்த நாயகர்களின காதலிகள் நாயகர்களை ஒதுக்கி விடுகின்றார்கள். இரண்டிலுமே நாயகர்களின் பெற்றோர்கள் அவர்களது காதலிகள் என்று கூறி வேறு பெண்களை அவர்களுக்கு மணம் முடித்து வைத்து விடுகின்றார்கள். இரண்டிலுமே நாயகர்களுக்கு கண் சத்திர சிகிச்சை செய்து பார்வை திரும்புகின்றது. இரண்டிலுமே உண்மை அறிந்த நாயகர்கள் தாம் பெற்ற பார்வையினைத் தாமே பறித்து விடுகின்றார்கள். அவ்விதம் செய்வதன் மூலம் காதலிகள் அல்லாத மனைவியர்களுடன் குடும்பத்தை நடாத்த அவர்களால் முடிகின்றது. ஆனால் குருட்டு வாழ்க்கை சிறுகதை இந்நிலையுடன் நின்று விடுகின்றது. மனக்கண் நாவலிலோ கதை மேலும் தொடர்கின்றது. மனக்கண் நாவலில் நாயகன் தன்னை மணந்து கொண்ட பெண்ணைப்பற்றி மேலும் சிந்திக்கின்றான். அவளது தியாகத்தின் அளவை உணர்ந்துகொள்கின்றான். மீண்டும் கண் பார்வையைப் பெற விரும்புகின்றான். செல்வந்தரும், செருக்கும் மிக்க அவனது தந்தையார் இறுதியில் தன் கண்களைக் கொடுத்து அவனைக் காப்பாற்றி மறைந்து விடுகின்றார்.

Wednesday, March 21, 2018


அண்மையில் மறைந்த 'புதிய பார்வை' சஞ்சிகையின் ஆசிரியரான ம.நடராஜனுக்கு இலக்கியம், அரசியல் என இரு முகங்கள். கலை, இலக்கியரீதியில் அவரது 'புதிய பார்வை' சஞ்சிகைக்கு முக்கியமானதோரிடமுண்டு. அந்த வகையில் அதன் ஆசிரியரான ம.நடராஜனும் தமிழ் இலக்கிய வரலாற்றில் தடம் பதித்தவர்களிலொருவராகின்றார். முனைவர் ம.நடராஜன் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளிலும் அப்பிமானம் பெற்றவர். 'மகளிர் முன்னேற்றத்தில் இதழ்களின் பங்கு' என்னும் தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். அரசியலைக் கடந்து கலை, இலக்கியவாதிகள் மத்தியிலும் நட்பினைப் பேணியவர். 1967இல் தமிழகத்தில் நடைபெற்ற தனது மாணவப்பருவத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கோமல் சுவாமிநாதனை ஆசிரியராகக் கொண்டு 'சுபமங்களா' வெளிவந்துகொண்டிருந்த காலகட்டத்தில் , அதே சாயல் மிக்க வடிவமைப்புடன் வெளியான சஞ்சிகை 'புதிய பார்வை'. அக்காலகட்டத்தில் அதன் இணை ஆசிரியரான பாவை சந்திரனின் 'நல்ல நிலம்' நாவல் தொடராக வெளியாகிக்கொண்டிருந்தது.

புதிய பார்வை சஞ்சிகை விடயத்திலும், அதன் ஆசிரியர் ம.நடராஜன் மீதும் என் மனத்தில் மென்மையான உணர்வுமுண்டு. அதற்குக் காரணமுமுண்டு. 1996இல் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பகம் மங்கை பதிப்பகத்துடன் (கனடா) இணைந்து வெளியிட்ட எனது நூலான 'அமெரிக்கா' (அமெரிக்கா சிறு நாவல் மற்றும் சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு) வெளியானபோது புதிய பார்வை அதற்கு புத்தக மதிப்புரையொன்றினை எழுதி தனது மே 1997 இதழில் வெளியிட்டிருந்தது. அதனை ஜி.சுவாமிநாதன் என்பவர் எழுதியிருந்தார். 'அமெரிக்கா'தான் தமிழகத்தில் வெளியான எனது முதலாவது நூல். ஆனால் அந்த நூலுக்கு மதிப்புரை எழுதி என் நூலுக்கு வரவேற்பு கொடுத்திருந்த 'புதிய பார்வை' சஞ்சிகை மீது அந்த விடயத்தில் எனக்கு எப்பொழுதுமே மதிப்புண்டு. குறை நிறைகளுடன் அமைந்திருந்த அந்த விமர்சனம் வெளியான 'புதிய பார்வை' சஞ்சிகைப்பக்கத்தினையே இங்கு நீங்கள் காண்கின்றீர்கள்.

கவிதை: பரிணாமம் - வ.ந.கிரிதரன் -















ஒரு காலத்தில் நான் தேசியவாதியாகவிருந்தேன்.
ஆண்ட பரம்பரையின் பெருமைகளில் மனதொன்றிக்
கற்பனைகளில் மூழ்கியிருந்தேன்.
பின்னுமோர் சமயம் நான் இடதுசாரித்தேசியவாதியானேன்.
தேசியம் கலந்த புரட்சியில் மனதொன்றியிருந்தேன்.
பின்னர் நான் மானுட வாதியானேன்.
'யாதும் ஊரே! யாவரும் கேளிர்' என்னும்
என் மூதாதையின் அன்றைய நோக்கில்
வியந்து கிடந்தேன்.
இன்று நானோர் பிரபஞ்சவாதி.
எதனையும் பிரபஞ்ச நோக்கில் வைத்து
அணுகுகின்றேன்.
தேசியத்தை, மார்க்சியத்தை, மானுடநோக்கினை
அவற்றின் நிலையில் வைத்து அணுகுகின்றேன்.
பிரபஞ்ச நோக்கில், மானுட நோக்கில்,
வைத்து அனைத்தையும் அணுகுகின்றேன்.
ஒரு சமயம் முரண்பாடுகளைப் பகை முரண்பாடுகளாக
அணுகினேன். இன்றோ?
நட்புரீதியில் அவற்றைக் கையாள்கின்றேன்.
இன்னும் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டாதீர்கள்!
கிணற்றுக்குள்ளிருந்து கத்தும் நுணல்களாக இருக்காதீர்கள்.
வெளியில் வாருங்கள்!
விரிந்து கிடக்கும் நீல வானைப் பாருங்கள். ஆங்கு
கொட்டிக் கிடக்கும் நட்சத்திரக் குவியல்களைப் பாருங்கள்.
வெளியினூடு அதி வேகங்களில் விரையும்
சுடர்க்கூட்டங்களைப் பாருங்கள்.
'காலவெளி'யின் மாயா ஜாலங்களைப் பாருங்கள். அவற்றில்
மனத்தைப் பறிகொடுங்கள்.
பிரமாண்டமானதொரு வெளியில் விரையுமொரு வாயுக் குமிழிக்குள்
வளைய வரும் இருப்பைப் பாருங்கள்.
வெளியில் வாருங்கள். விரிந்து கிடக்கும் வானைத்தைப்போல
உங்கள் மனமும் விரிவதை அறிவீர்கள்.
புரிந்துகொள்வீர்கள்.

















ngiri2704@rogers.com

Monday, March 19, 2018

எனது சிறுகதையான 'நடு வழியில் ஒரு பயணம்' சிங்கள மொழியில்.... வ.ந. கிரிதரன் -


இலங்கையிலிருந்து வெளியாகும் லக்பிமா சிங்களத் தினசரிப்பத்திரிகையின் 18.03.2018 ஞாயிறு பதிப்பில் எனது சிறுகதையான 'நடுவழியில் ஒரு பயணம்' சிறுகதையின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது. இச்சிறுகதை டிசம்பர் 2006இல் 'பதிவுகள்' மற்றும் 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் வெளியாகிய சிறுகதை. இச்சிறுகதையினைத் தமிழிலிருந்து சிங்கள  மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தவர் எனது முகநூல் நண்பரும், பல தமிழ்ப் படைப்புகளைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தவருமான எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்த. அவருக்கும், லக்பிமாவில் இலக்கியப்பகுதிக்குப் பொறுப்பானவருமான எழுத்தாளர் கத்யான அமரசிங்க (Kathyana Amarasinghe)  அவர்களுக்கும் நன்றி.

இச்சிறுகதை வெளியான 'லக்பிமா' :  http://epaper.lakbima.lk/last_18_03_18/manjusawa.pdf

ஏற்கனவே எனது இன்னுமொரு சிறுகதையான 'உடைந்த காலும், உடைந்த மனிதனும்' சிறுகதையினை ஜி.ஜி.சரத் ஆனந்த சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்து 'லங்கஇரிடா' (Lankairida)) பத்திரிகையில் வெளியிட்டுள்ளார். அச்சிறுகதை 'லங்கஇரிடா'வின் பெப்ருவரி 18, 2018 பதிப்பில் வெளியாகியுள்ளது.

'நடுவழியில் ஒரு பயணம்' சிறுகதையினை முழுமையாகக் கீழே வாசிக்கலாம்:

'நடுவழியில் ஒரு பயணம்' - வ.ந.கிரிதரன் -


பார்வைக்கு சோமாலியனைப் போலிருந்தான். 'டவரின்' வீதியும் 'புளோர்' வீதியும் சந்திக்குமிடத்தில் , தென்மேற்குத் திசையில் (இங்கு 'தொராண்டோ' நகரில் வீதிகளெல்லாமே கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்காகத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் திசைகளை மையமாக வைத்து முகவரிகளைக் கண்டுபிடிப்பதோ அல்லது இருப்பிடங்களை அறிந்து கொள்வதோ மிகவும் இலகுவானது). 'பஸ்'சை எதிர்பார்த்து நின்றிருந்தான். காலம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. இரவு பாதுகாவற் பணியினை முடித்துக் கொண்டு என்னிருப்பிடம் திரும்புவதற்காக 'பஸ்' தரிப்பிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சமயத்தில்தான் அவனை நோக்கினேன். நள்ளிரவில் பணி முடிந்து இருப்பிடம் திரும்பும் சமயங்களில் இவ்விதம் 'பஸ்'சினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சந்தர்பங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுகள். இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, இரவை, இரவு வானை எல்லாமே இரசித்துக் கோண்டிருப்பது என் ஆர்வங்களிலொன்று. இவ்விதமான இரசித்தல் மூலம் நான் அறிந்து கொண்டவை ஏராளம். ஏராளம். நூல்கள், பத்திரிகைகள் போன்ற வெகுசன ஊடகங்கள் மூலம் நான் அறிந்தவற்றை விட இவ்விதமான பொழுதுகளில் நான் அறிந்து கொண்டவை, உணர்ந்து கொண்டவை மிக மிக அதிகம். 'லாண்ட்ஸ்டவு'னுக்கருகிலிருந்த கேளிக்கை விடுதியான 'ஹவுஸ் ஆவ் லங்காஸ்டர்'இலிருந்து  நிர்வாண நடனமாதர் சிலர் வெளியில் வந்திருந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி மல்லர்களைப் போன்ற தோற்றமுடைய இரு வெள்ளையர்கள் , பார்வைக்கு இத்தாலியர்களைப் போலிருந்தார்கள், அப்பெண்களுடன் அளவளாவியபடி கவசங்களாக நின்றார்கள். வீதியின் அடுத்த பக்கத்தில், வடபுறத்தில், சில கறுப்பின போதை மருந்து விற்றுப் பிழைக்கும் சுய வியாபாரிகள் சிலர் வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்தபடியிருந்தார்கள். மேலும் சிலர் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள் என்னைப் போல். இததகையதொரு சந்தர்ப்பத்தில்தான் நான் அவனை அந்த பஸ் தரிப்பிடத்தில் சந்தித்தேன்.

அமரர் செங்கை ஆழியான் நினைவாக.... வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் செங்கை ஆழியான் இன்று மறைந்ததாக முகநூல் பதிவுகள் மூலம் அறிந்துகொண்டேன். அண்மையில் எழுத்தாளர் முருகபூபதியின் பதிவொன்றில் செங்கை ஆழியான் உடல்நலமிழந்து இருந்த விபரத்தை அறிந்தபோது அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுமென வேண்டி முகநூலில் பதிவொன்றினையிட்டிருந்தேன். அது தவிர அவர் பற்றி அவ்வப்போது வேறு சில பதிவுகளையும் முகநூலில் இட்டிருக்கின்றேன். அப்பதிவுகள் செங்கை ஆழியான் எவ்விதம் என் இளம் பருவத்தில் என்னைப்பாதித்தார் என்பதை வெளிப்படுத்தும் பதிவுகள் என்பதாலும், அவை அவரது பன்முக இலக்கியப்பங்களிப்பினைப் புலப்படுத்துவதாலும், அவற்றைத்தொகுத்து என் அஞ்சலியாக இங்கு பதிவிடுகின்றேன்.

ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் செங்கை ஆழியானுக்கும் முக்கியமானதோரிடமுண்டு. ஈழநாடு சிறுகதைகள், மறுமலர்ச்சி சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள் போன்ற தொகுப்புகளை வெளியிட்டதன் மூலம், ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகினை ஆவணப்படுத்தி மிகுந்த பயனுள்ள பங்களிப்பினை வழங்கியுள்ளார்.

புனைவு, அபுனைவு என இவரது பங்களிப்பு பரந்தது. ஈழத்தமிழர்தம் வரலாறு பற்றி இவர் எழுதிய கட்டுரைகளும், நூல்களும் முக்கியமானவை. புனைவுகளிலும் சமுகக்கதைகளுடன், வரலாற்றுக்கதைகளையும் எழுதியுள்ளார். அத்துடன் 'ஆச்சி பயணம் போகின்றாள்', 'நடந்தாய் ஆறு வழுக்கியாறு!' மற்றும் 'கொத்தியின் காதல்' ஆகிய நகைச்சுவைப்புனைவுகளையும் எழுதியிருக்கின்றார்.

இலங்கை அரச படைகளினால் யாழ்ப்பாணம் எரியுண்டபோது நீலவண்ணன் என்னும் பெயரில் அவற்றை ஆவணப்படுத்தும் அபுனைவுகளை எழுத்தாளர் அமரர் வரதர் அவர்களின் வேண்டுகோளின்பேரில் எழுதியிருக்கின்றார்.

செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்' - வ.ந.கிரிதரன் -

'செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்' நாவல் அவரது முதலாவது நாவல். 'கலைச்செல்வி' நாவல் போட்டியில் பாராட்டுப்பெற்ற நாவல். பின்னர் யாழ் இலக்கிய வட்ட வெளியீடாக நூலாக வெளிவந்த நூல். என் மாணவப்பருவத்தில் நான் வாங்கி வைத்திருந்த இலங்கையைச்சேர்ந்த வரலாற்று நாவல்களிலொன்று 'நந்திக்கடல்' . அதனை செங்கை ஆழியானின் தமையனாரான புதுமைலோலனின் 'அன்பு புத்தகசாலை'யில் வாங்கியிருந்தேன். அடுத்த வரலாற்று நாவல் வ.அ.இராசரத்தினத்தின் 'கிரெளஞ்சப்பறவைகள்'. ஒரு ஞாபகத்துக்காக இந்த நந்திக்கடல் நாவலைத் தேடிக்கொண்டிருந்தேன். இந்த நாவல் யாழ்ப்பாண இராச்சியத்தைப் பின்னணியாகக் கொண்டு , சங்கிலிகுமாரனை நாயகனாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்.

ஒருமுறை நூலகம் கோபி நூலகம் பற்றிய பதிவினையிட்டிருந்தபோது அந்நூலைப்பற்றியும் தெரிவித்திருந்தேன். உடனேயே 'நந்திக்கடல்' யாரிடமாவது இருந்தால் நூலகத்துக்குத் தந்து உதவவும் என்று அவர் முகநூலில் அறிவித்திருந்தார். அண்மையில் அவரிடமிருந்து வந்த தகவலில் மகிழ்ச்சிக்குரிய விடமொன்றிருந்தது. அது: 'தற்போது நூலகத்தில் 'நந்திக்கடல்' நூல் வாசிக்கக் கிடைக்கிறது என்பதுதான்.

ஈழத்து எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் இன்னும் நூலுருப்பெறாமல் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் முடங்கிக் கிடக்கின்றன. அவையெல்லாம் படிப்படியாக 'நூலகம்' தளத்தில் பதிவேற்றப்பட்டு வருகின்றன ( 'மறுமலர்ச்சி', 'கலைச்செல்வி' இதழ்கள் உட்பட).

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...