Sunday, June 2, 2019

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி ஏழு (51 - 56)

51. தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நாவல் வெளியீட்டு நிகழ்வு குறித்து...

தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நூல் வெளியீடு சென்றிருந்தேன், கனடாத்தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தரப்பினரையும் காண முடிந்தது. நிகழ்வுக்குத் தலைமை தாங்கவென்று யாருமில்லை. இதற்கொரு காரணத்தைத்தனது ஏற்புரை/நன்றியுரையில் தமிழ்நதி தெரிவித்தார். அதாவது வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகளை ஆண்கள் ஆக்கிரமித்திருப்பார்கள். அதற்குப் பதிலாகவே தனது நூல் வெளியீடு எந்தவிதத்தலைமையுமற்று நடை[பெற்றதாக என்று. தலைமையில்லாத நிகழ்வினைச் சிறப்பாக்குவதற்காகத் தன்னுடன் இணைந்த தனது சிறு வயதுத்தோழியர்களிலொருவரான அன்பு-அன்பு நன்கு செயற்பட்டதாகக்குறிப்பிட்டார். ஏன் பெண் ஆளுமையொருவரின் தலைமையில் நிகழ்வினை நடாத்தியிருக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்படுவதைத்தவிர்க்க முடியவில்லை. வழக்கமாக ஆண்களின் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறுவதால், பெண்களுக்குரிய இடம் கிடைக்கவில்லையென்று கருதும் தமிழ்நதி பெண்களின் தலைமையில் நிகழ்வினை நடத்த வந்த வாய்ப்பினைத் தவற விட்டுவிட்டாரே?

நிகழ்வு நடைபெற்ற மத்திய ஸ்கார்பரோ சமூக நிலையம் கலை, இலக்கிய ஆர்வலர்களால் நிரம்பி வழிந்தது.  எழுத்தாளர்களான அ.யேசுராசா, கவிஞர் கந்தவனம், கற்சுறா, ரதன், மா.சித்திவிநாயகம், வல்வை சகாறா, கவிஞர் அவ்வை, எஸ்.கே.விக்கினேஸ்வரன், கவிஞர் அ.கந்தசாமி, குரு அரவிந்தன் தம்பதியினர், முனைவர் பார்வதி கந்தசாமி, டானியல் ஜீவா, தீவகம் வே.ராஜலிங்கம், ந.முரளிதரன், தேவகாந்தன், பிரதிதீபா தில்லைநாதன் சகோதரிகள்,..,.. என்று பலரைக் காண முடிந்தது.

நிகழ்வில் ஜான் மாஸ்ட்டர், பொன்னையா விவேகானந்தன், முனைவர் அ.ராமசாமி, முனைவர் இ.பாலசுந்தரம், அருண்மொழிவர்மன், தமிழ்நதியின் தோழி அன்பு, தமிழ்நதி ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியினை எழுத்தாளர் கந்தசாமி கங்காதரன் தொகுத்து வழங்கினார்.

பொன்னையா விவேகானந்தன் நல்லதொரு பேச்சாளர். தமிழ்நதி கவிஞர் கலைவாணி ராஜகுமாரனாக அறியப்பட்ட காலகட்டத்திலிருந்து தான் அறிந்த கவிஞரின் கவிதைகளை உதாரணங்களாக்கித் தன் உரையினை ஆற்றித் தமிழ்நதி பற்றிய நல்லதோர் அறிமுகத்தை வழங்கினார். அவர் தனதுரையில் 'கவிஞர்கள் சிலரே மெட்டுக்குப் பாடல்களையும், நல்ல கவிதைகளையும் எழுத வல்லவர்கள். அவ்வகையான கவிஞர்கள் கவிஞர் சேரனும், கலைவாணி ராஜகுமாரனுமே' என்னும் கருத்துப்பட தன் கருத்துகளைத்தெரிவித்தார். அத்துடன் ஆரம்பத்தில் கலைவாணி ராஜகுமாரன் தேசியம் சார்ந்தவராக இருந்த காரணத்தால் ஏனைய இலக்கியவாதிகள் பலரால் புறக்கணிக்கப்பட்டதாகவும் குறைப்பட்டுக்கொண்டார்.


அரசியல் ஆய்வாளரும், செயற்பாட்டாளருமான ஜான் மாஸ்ட்டர் தனது உரையில் தான் முதன் முதலாக வந்திருக்கும் இலக்கியக் கூட்டம் இதுவே என்றார். அத்துடன் நாவல் இந்திய அமைதி காக்கும் படையினரின் அட்டூழியங்களை விபரிப்பதால் , அவ்விதம் படையினர் அத்துமீறி நடக்கவில்லையென்று எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு முறை கூறியதை நினைவுபடுத்தி, இங்குள்ள இலக்கியவாதிகள் பலர் அது பற்றிய எந்தவிதச்சிந்தனையுமற்று, அவருடன் கூடிக்குலாவுவதைச்சுட்டிக் காட்டினார். மேலும் அவர் தனதுரையில் நாவலின் பாத்திரச்சிறப்புகளை, குறைபாடுகளை எடுத்துரைத்தார். தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவராக வரும் பாத்திரம் இறுதியில் தீயவராகக் காட்டப்பட்டிருபதைத்தவிர்த்திருக்கலாம் என்றார். ஏற்கனவே சமூகத்தில் பாதிப்புக்குள்ளாகிய சமூகமொன்றின் நிலை பற்றிய எதிர்மறையான எண்ணங்களுக்கு வலுச்சேர்ப்பதாக அவ்விதமான பாத்திரப்படைப்பு அமைந்து விடுமே என்னும் ஆதங்கத்தினை அவரது உரை வெளிப்படுத்தியது.

நிகழ்வில் உரையாற்றிய முனைவர் இ.பாலசுந்தரம் தன் மாணவியாகக் கலைவாணி இருந்த காலத்திலிருந்து அவரது பல்கலைக்கழக அனுபவங்களை நாவலில் கூறப்படும் சம்பவங்களினூடு விபரித்துத் தனது உரையினை ஆற்றினார். தமிழ்நதி நடுநிலையுடன் அக்காலகட்டத்து அரசியல் நிலையினை விபரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நூலிலிருந்து பந்தியொன்றினையும் எடுத்து வாசித்தார்.

தமிழகத்திலிருந்து கனடாவுக்கு வருகை தந்திருக்கும் பேராசிரியர் அ.ராமசாமி தான் இன்னும் தமிழ்நதியின் நூலினை முழுமையாக வாசிக்கவில்லையென்றும், முதல் மற்றும் இறுதிப்பக்கங்களையே வாசித்ததாகவும், ஆனாலும் இணையத்தில் நூல் பற்றி வெளிவந்த விமர்சனங்களைத்தொடர்ந்து படித்ததனால் நூல் பற்றித்தான் அறிந்த புரிதல்களினூடு தன் உரையினை ஆற்றுவதாகக் குறிப்பிட்டார். அத்துடன் அண்மையில்டொராண்டோவிலுள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் புகலிடத்தமிழர்களின் பன்னிரண்டு அரசியல் நாவல்களைப்பற்றிய தனது திறனாய்வினை நடாத்தியதாகவும், அதில் இந்த நூல் கிடைக்காதபடியால் உள்ளடக்கப்படவில்லையென்றும் குறிப்பிட்ட அவர், இந்த நூலினை எந்தவகையில் அவ்வாய்வினுள் உள்ளடக்கலாம் என்பது பற்றிய தனது சிந்தனைகளை வெளிப்படுத்தினார். அத்துடன் நிகழ்வில் ஏனைய பேச்சாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்ட  இந்திய அமைதி காக்கும் படையினரின் பாலியல் வன்முறைகள் பற்றிய ஜெயமோகனின் கருத்துகளைப்பற்றிக்குறிப்பிடும்போது ஈழத்தமிழர்கள் இந்த விடயத்தை ஒரு மாதிரியாகவும், இந்தியப் பிரசை என்ற வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் இன்னுமொரு கோணத்தில் நின்று பார்ப்பதும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே, அவரது கருத்துகளை ஏற்றுக்கொள்ளாதபோதும் கூட என்னும் கருத்துப்படத் தனது கருத்தினை எடுத்துரைத்தார். இதற்கு இறுதியில் தனது ஏற்புரை/நன்றியுரையில் பதிலளித்த தமிழ்நதி நாவலினை வாசித்து விட்டுப்பேராசிரியர் தனது கருத்துகளைக் கூற வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அத்துடன் ஜெயமோகன் இந்தியப்பிரசையாகவிருந்து கருத்துக் கூறுவது சரி, ஆனால் உண்மையை உண்மை என்று கூற வேண்டுமென்ற கருத்துப்படக் கூறினார்.


நிகழ்வில் உரையாற்றிய எழுத்தாளர் அருண்மொழிவர்மன் தனக்கு வழங்கப்பட்ட நேரம் காரணமாகத் தான் தயாரித்திருந்த உரையின் சிறு பகுதியினையே ஆற்றவிருப்பதாகவும், ஏனையவற்றைப்பின்னர் கட்டுரை வடிவில் தரவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அவர் தனது உரையில் நாவலின் குறைகளைச் சுட்டிக்காட்டிய பாங்கு என்னைக் கவர்ந்தது. முனைவர் இ.பாலசுந்தரம் தனது உரையில் நாவலைத் தமிழ்நதி நடுநிலையுடன் எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டதற்கு மாறாக அருண்மொழிவர்மன் நாவல் பேசாத விடயங்களைப்பற்றிக் குறிப்பிட்டார். குறிப்பாக நாவல் விபரிக்கும் காலகட்டத்தில் நடைபெற்ற முனைவர் ராஜனி திரணகமவின் படுகொலையினை நாவல் தவிர்த்து விட்டதை அவர் சுட்டிக்காட்டியதைக் குறிப்பிடலாம். இதற்கு இறுதியில் பதிலளித்த தமிழ்நதி தான் அப்படுகொலை பற்றிய சரியான விபரங்கள் தெரியாததால் (யார் கொன்றது என்பது பற்றிய) வேண்டுமென்றே தவிர்த்து விட்டதாகக் குறிப்பிட்டார். ராஜனி திரணகமவைக் கொன்றவர்கள் பற்றிச் சரியான விபரங்கள் இல்லாமலிருக்கலாம். ஆனால் அவ்விதம் அவர் கொல்லப்பட்டது மிகவும் தவறான ஒன்று அல்லவா. அதனை நாவல் நிச்சயமாக வெளிப்படுத்தியிருக்க வேண்டுமல்லவா. அருண்மொழிவர்மனின் கேள்வி நியாயமானது. மேலும் அருண்மொழிவர்மன் நாவலின் சில பகுதிகள் கட்டுரைத்தன்மை மிக்கதாக இருந்ததாகவும் தனது புரிதலை எடுத்துரைத்தார்.

நிகழ்வில் உரையாற்றுவதாகவிருந்த முனைவர் சேரன் , உடல்நிலை காரணமாகக் கலந்து கொள்ளவில்லையென்று தமிழ்நதி தனதுரையில் குறிப்பிட்டார்.

இறுதியில் நூலாசிரியரிடமிருந்து பிரதிகளைப்பெற்றுக்கொள்ளலாமென்று அறிவிக்கப்பட்டது. இவ்விதமானதொரு போக்கு அண்மைக்காலமாகத்தான் இவ்விதமான நிகழ்வுகளில் பின்பற்றப்படுவதாக அறிகின்றேன். என்னைப்பொறுத்தவரையில் இவ்விதமான நடைமுறை தவிர்க்கப்பட்டு, நிகழ்வு நடைபெறும் மண்டபத்தின் வாசலில் முன்பு நடைபெற்ற நிகழ்வுகளில் நடைபெற்றுள்ளதைப்போல் நூல்களை விற்க ஒருவரைப்பொறுப்பாளராக நிறுத்தலாமென்று கருதுகின்றேன். மேலும் இவ்விதமான நடைமுறையினால் நூல்களை வாங்க விரும்பும் ஒருவர் தாமதப்பட வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. நூலை வாங்க வரும், நூலாசிரியரைத் தெரிந்தவர்கள் அந்தச் சமயம் பார்த்து உரையாடத்தொடங்கி விடுவார்கள். இதனால் ஏனையவர்கள் நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டியேற்பட்டு விடுகின்றது. மேலும் தவிர்க்க முடியாத காரணங்களினால் நேரத்துடன் செல்ல விரும்பும் இலக்கிய ஆர்வலர்களுக்கு நூலை வாங்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடுகின்றது.

நாவலுக்குப் பார்த்தீனியம் என்ற பெயரை வைத்திருக்காமல் இன்னுமொரு பெயரினை வைத்திருக்கலாமோ என்று படுகின்றது. பார்த்தீனியம் உண்மையில் நச்சுச்செடிதானா என்பதிலும் சந்தேகமுள்ளது. ஒவ்வாமையைப் பார்த்தீனியம் மட்டும் ஏற்படுத்துவதில்லை. மனிதர் அன்றாடம் பாவிக்கும் பொருள்கள், கடலை போன்றவை கூட ஏற்படுத்துகின்றன. பார்த்தீனியம் களைகளிலொன்றாக இருந்த போதும், நல்லதோர் உரமாகப்பாவிக்கப்படக்கூடியது என்றும் தி இந்து பத்திரிகைக் கட்டுரையொன்றில் வாசித்தது ஞாபகத்திலுள்ளது. அத்துடன் அமெரிக்கக்கண்டத்தில் அது மருந்தாகவும் பாவிக்கப்படுகின்றது என்பதையும் அறிய முடிகின்றது.

மேலும் பார்த்தீனியம் ஆரம்பத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு அனுப்பிய கோதுமை மா மூலமே பரவியதாகவும் கருதப்படுகின்றது. மேலும் இலங்கைக்கு இந்தியப்படையினருக்கு உணவுக்காக அனுப்பப்பட்ட ஆட்டிறைச்சி வாயிலாக இலங்கையில் பரவியிருக்கலாமென்று கருதப்பட்டாலும், இது நிரூபிக்கப்பட்டதோர் உண்மையல்ல. அக்காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய அகதிகள், ஏனையவர்கள் மூலமும் பரவியிருக்கலாம்தானே. நச்சாகக் கருதப்படும் பார்த்தீனியம் உரமாகவும் , மருந்தாகவும் பாவிக்கப்படுகின்றது.

இவ்விதமான காரணங்களினால் பேரழிவுக்குச் சரியான குறியீடு பார்த்தீனியம் இல்லையென்பதென் கருத்து. இவ்விதமானதொரு நிலையில், பார்த்தீனியம் இலங்கையில் அட்டூழியங்கள் புரிந்த,  அமைதி கொல்லும் படையாகச் செயற்பட்ட, இந்திய அமைதி காக்கும் படையினரைக்குறிக்குமொரு குறியீடாகக் கருதப்படுமானால், இன்னுமொரு திறனாய்வாளர் உரமாகப்பாவிக்கப்படும் பார்த்தீனியத்துடன் , மருந்தாகப்பாவிக்கப்படும் பார்த்தீனியத்துடன் இந்திய அமைதிப்படையினரை ஒப்பிடும் அபாயமுமுள்ளது. எனவேதான் நாவலுக்குப் பார்த்தீனியம் என்பதற்குப் பதில் இன்னுமொரு பெயரை வைத்திருக்கலாமென்று தோன்றுகின்றது.

52. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'

ஜெயமோகனின் 'கன்னியாகுமரி' நாவலின் கதைச்சுருக்கத்தினைப் பின்வருமாறு கூறலாம்: மிகவும் கேவலமான ஆசாபாசாங்களுடன் கூடிய கதாநாயகன் திரைப்பட இயக்குநர் ரவிகுமார்.எந் நேரமும் காமத்தில் உழன்று கொண்டேயிருக்கும் இவன் மிகவும் ஆழமாகவும் சிந்திப்பவன்.மிகவும் அற்பமாகவும் சிந்திப்பவன்.தன் கண் முன்னால் நான்கு முரடர்களால் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப் பட்ட காதலி விமலாவைக் கோழையாகக் கைவிட்டவன். அவ்வுறவில் அவளும் ஆனந்தம் அடைந்திருக்க வேண்டுமெனக் கற்பனை செய்பவன். பல வருடங்களிற்குப் பின்னர் கன்னியாகுமரியில் படத் தயாரிப்பிற்கொன்றிற்காக தயாரிப்பாளர், கதாசிரியர், நடிகை பிரவீணாவுடன் தங்கியிருக்கும் இவன், நடிகையுடன் புணர்வதுடன், பெண்களைப் பாலியல் பண்டமாகவே கருதிய,கருதும் தனது மன உளைச்சல்களையெண்ணிப் போராட்டத்தில் சிக்கியிருக்கிறான். தனது பழைய காதலியான , தன்னால் கைவிடப்பட்ட படித்த விமலாவை கன்னியாகுமரியில் சந்திக்கிறான். அவளோ விடுமுறைகளில் படிக்காத ஆண்களாகத் தேர்ந்தெடுத்து ஊர் சுற்றுமொரு பெண்ணாக மாறியிருக்கிறாள்.அமெரிக்காவிலிருந்து தனது கிரேக்க ஆண் நண்பனுடன் கன்னியாகுமரிக்கு வருகை தந்திருக்கின்றாள். அவளுடனான சந்திப்பு மீண்டும் இயக்குநர் ரவிகுமாரின் மனப் போராட்டங்களை அதிகரித்து விடுகின்றது.

பல பெண்களுடன் உறவு வைத்திருந்த இவன் திருப்தியடைந்தது சைலஜா என்னுமொரு பெண்ணுடன் தான். தனது மனைவியுடனான உறவிலோ அல்லது நடிகை பிரவீணாவுடனான் உறவிலோ இவனால் சைலஜாவுடன் அடைந்ததைப் போல் திருப்தியினை அடைய முடியவில்லை. தனது முன்னால் காதலியுடன் ஒருநாளாவது 'அவளைப் புணர்ந்து, ஒருமுறை உச்சத்தின் வெறுமையில் எகிறிச் சுழன்றிறங்கச் செய்தால் போதுமெ'ன நினப்பவன் இவன். விமலா தனது படித்த செருக்கினைத் தன்முன்னால் காட்டுவதாக வெதும்புமிவன் அவளை அதற்காக 'தேவடியா நாயே, நான் போடறேண்டி சூப்பர்ஜீன்ஸ். வேஷமா போடறே. வேஷம் போட்டா பயந்துடுவேன்னு நெனைச்சியா? என்னை என்ன கேணையன்னு நினைச்சியா? வேஷம் போடு ஜெயித்திடுவியா?நான் ஜெயிக்கிறேன் உன்னை. உன்னை ஜெயிச்சாத் தான் எனக்கு சினிமா,. என் சினிமா உன் மார்புக்குள்ள இருக்குடி நாயே. சயிண்டிஸ்ட்டு. ...த்தூ..அமெரிக்காக்காரிது..உன்னைப் பிளந்து என் சினிமாவ வெளியே எடுக்கிறேண்டி..பாம்ப பிதுக்கி நாகமணிய எடுக்கிறேண்டி..' எனப் படுக்கையைப் பகிர்ந்து கொண்ட நடிகை பிரவீணவிடம் புலம்புவன். அதே சமயம் நடிகை பிரவீணவையும் ' சீ விளக்கப் போடுடி தேவடியா நாயே. என் எச்சிலத் தின்னுட்டு எங்கிட்டே படுக்கிற நாயி. நீ என்ன கேக்காம விளக்க அணைக்கிறியா? விளக்க போடுறீ..நாயே..' எனத் திட்டுபவன். தனது முன்னால் காதலியின் மேல் இருந்த ஆத்திரத்தின் காரணமாக அவளைப் பாலுறவிற்குட்படுத்திய கேடிகளிலொருவனான ஸ்டீபனையே தனது போலிஸ்கார நண்பனொருவனின் உதவியுடன் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து விமலாவின் முன்னால் நிறுத்துகின்றான். அவளோ இரு பெண் புத்திரிகளுடன் அல்லாடும் அவனது நிலைக்கு இரக்கப் பட்டு உதவி செய்யவும் முன்வருகின்றாள். இறுதியில் நடிகையும் கதாசிரியருடன் அவனை விட்டு ஓடிப் போய் விடுகின்றாள். காதலியும் அமெரிக்கா சென்று விடுகின்றாள். இவன் தனித்துப் போய் விடுகின்றான். இதுதான் கதைச் சுருக்கம்.

இந் நாவலிற்கான கரு கி.ராஜநாராயணின் கன்னியாகுமரியை மையமாக வைத்துப் ,பின்னப் பட்ட சிறுகதைகளிலொன்றான 'கன்னிமை' என்னுமொரு சிறுகதையினை மையமாக வைத்து உருவானதாக நாவலின் நாயகன் ரவிகுமாரினூடாக நாவலாசிரியர் ஜெயமோகன் நினைவு கூருகின்றார். ஜெயமோகனின் முன்னுரையினையும், நாவலில் ஆங்காங்கே விவரிக்கப் படும் கன்னியாகுமரி பற்றிய விளக்கங்களையும் ஒதுக்கி விட்டுப் பார்த்தால் இந்த நாவலை நிச்சயமாக ஒரு 'ஆபாச இலக்கியம்' என்னும் பிரிவிற்குள் இலகுவாக அடக்கி விடலாம். அப்படி விடாமல் ஜெயமோகனின் மேற்படி முன்னுரையும், கன்னியாகுமரி பற்றிய தத்துவ விளக்கங்களும் நம்மைத் தடுத்து விடுவதால் நாவலைப் பற்றிச் சிறிது ஆராய வேண்டிய நிலைமைக்கு நம்மைத் தள்ளி விட்டு விடுகின்றன.

கன்னியாகுமரியைப் பற்றி நாவலில் பல இடங்களில் குறிப்பிடப் படுகின்றன. உதாரணத்திற்குப் பின் வருவனவற்றினைக் குறிப்பிடலாம்:

"
'கன்னியாகுமரியோட ஐதீகம் தெரியுமில்லையா?'
'தெரியும்.'

'தேவியைத் தாலிகட்ட ஸ்தாணுமாலயன் கிளம்பினார். பிரம்மாவும் விஸ்ணூவும் சிவனும் ஒன்றான மூர்த்தி. படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது கிரியாசக்தியே அவன் தான். ஆனா வந்து சேரலை. வரப் போவதுமில்லை. தேவி இந்தக் கடல் முனையில் கன்னியா காத்திருக்கா. யுகயுகமா. இன்னும் எத்தனையோ யுகங்களுக்கு எத்தனை பெரிய தனிமை, எத்தனை உக்கிரமான காத்திருப்பு இல்லையா?'

'ஆமா.'

'இதை நாம கடல்னு சொல்றோம். ஆனா இது கடல்கள். மூணு கடல்கள் ஒண்ணோடொண்ணு மோதிக் கலந்து கொந்தளிச்சிட்டிருக்கு. எனக்குத் தோணுது உள்ளே ஆழத்தில அந்தக் கடல்களோட உக்கிரம் இன்னும் அதிகமா இருக்கும்னு. அதி பயங்கரமான மெளனத்தில் ஒரு துளி அசைவு கூட இல்லாம மூணு பிரமாண்டங்களும் மோதி உச்சக் கட்டத்திலே அப்பிடியே நின்னுட்டிருக்கும்னு. யுகங்களா அந்த உச்சக் கட்டம் நீண்டு நீண்டு போயிட்டிருக்கு.'

[பக்கங்கள்: 26,27] "

" 'கன்னித்தன்மைதான் இங்க தேவியோட அழகு. ஆனா சாதாரண கன்னி இல்லை. காத்திருக்கிற கன்னி. ஒரு நாளைக்கும் முடியாத காத்திருப்பு. ரெண்டையும் சேத்து யோசித்தாத்தான் நாம தேவியைப் புரிஞ்சு கொள்ள முடியும்.' [பக்கம் 28 ] "
இவற்றிலிருந்தும் நாவலின் சம்பவங்களிலிருந்தும் சில உண்மைகள் வெளிப்படுகின்றன. ஒன்று நாவலில் வரும் பாத்திரங்களெல்லாம் நடைமுறையில் நிலவும் கற்பு பற்றிய ஐதீகத்தினை உடைத்தெறிந்து காமத்தில் மனம் போனபடியெல்லாம் சுகித்து வாழுகின்றார்கள். அதே சமயம் இச்சம்பவங்கள் நடைபெறும் சூழலோ கன்னித்தன்மையினைப் பேணி யுகயுகமாய்க் காத்திருக்கும் கன்னித்தெய்வம் குடியிருக்கும் கன்னியாகுமரியில். இதன் மூலம் ஜெயமோகன் கற்பு பற்றிய கோட்பாட்டினைக் கேள்விக்குறியாக்கின்றாரென்று கூறலாமா? அவ்விதம் கேள்விக்குறியாக்குவதற்கு நாவல் முழுக்க நாயகனின் நடிகையுடன், ஏனைய பெண்களுடனான காமச் சல்லாபங்களை விபரித்திருக்க வேண்டிய தேவை தேவைதானா? கற்பு என்னும் கோட்பாட்டினைக் கேள்விக்குறியாக்கிய படைப்புகளில் காலத்தால் முந்தியது இரு பெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம். திரெளபதி என்னும் பாத்திரம் மூலம் , சூரிய பகவானிற்குப் புத்திரனைப் பெறும் குந்தியென்னும் பாத்திரம் மூலம், இராமயணத்தில் கூட 'அசோகவனத்தில்' நெடு நாட்கள் தங்கியிருந்து திரும்பிய சீதாப் பிராட்டி மூலம் ஏற்கனவே கேள்விக்குறியாகியதொரு விடயத்தினைத் தான் 'கன்னியாகுமரியும்' செய்கிறதென்று ஜெயமோகன் கூறுகின்றாரா? [ஜெயமோகன் தனது அடுத்த நாவல் 'அசோகவனம்' எனக் கூறுகின்றார். இத்தகையதொரு நவீன சீதாப் பிராட்டியினைப் படைத்து சில கேள்விகளை எழுப்ப உத்தேசித்திருக்கிறாரோ தெரியவில்லை.]ஜெயகாந்தன் ஏற்கனவே 'அக்கினிப் பிரவேசம்' என்ற குறு நாவலிலும் அதன் தொடர்ச்சியான 'சில நேரங்களில் சில மனிதர்களென்'ற 'காலங்கள் மாறும்' நாவலிலும் , 'ரிஷி மூலம்' குறு நாவலிலும் மிகவும் தீவிரமாக அதே சமயம் மிகவும் நாசூக்காக இக்கோட்பாட்டினைக் கேள்விக்குறியாக்கியிருக்கின்றார். புதுமைப் பித்தனும் 'பொன்னகரமென்'ற இருபக்கச் சிறுகதையில் மிகவும் ஆக்ரோசமாகக் கேள்விக்குறியாக்கியிருக்கின்றார். 'பாலும் பாவையில்' விந்தன் அகல்யா என்னும் பாத்திரம் மூலம் கேள்விக்குறியாக்கியிருக்கின்றார். மு.வரதராசனாரின் 'நெஞ்சின் ஒரு முள்' நாவலும் இவ்விடயத்தினைக் கேள்விக்குரியாக்கிய படைப்புகளிலொன்றுதான். இவ்விதமாகப் பல படைப்புகளைக் கூற முடியும். ஜெயமோகனும் தன் பங்கிற்கு 'கற்பு' பற்றிய கோட்பாடு பற்றி கேள்வியெழுப்புவதாக இந்நாவலைக் கூற முடியுமா?
ஒரு நாவலைப் படித்து முடியும் போது அப்படைப்பானது படிப்பவரிடத்தில் எத்தகையதொரு தாக்கத்தினை ஏற்படுத்துகின்றதென்பதிலேயே அப்படைப்பின் வெற்றி தங்கியுள்ளது. புதுமைப் பித்தனின் 'பொன்னகரத்தி'னைப் படித்து முடிக்கும் போது வருவதென்ன? அம்மாளு செய்த காரியத்திற்காக யாரும் அவளைக் காறித்துப்புவதில்லை. மாறாக அவளது நிலையுடன் ஒப்பிடும் பொழுது கற்பு பற்றிய கோட்பாடே பின்னுக்குத் தள்ளப்பட்டுப் போய் விடுகிறது. அவளை இந்நிலைக்கு ஆளாக்கி விட்ட சமுதாயத்தின் மேல் சீற்றம் வருகின்றது. ஒரு பணக்கார இளைஞனின் காமத்திற்குத் தன்னை சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் இழந்து விட்ட பாடசாலை மாணவியான கங்காவிற்கு அவளது தாயார் தண்ணீர் வார்த்து அக்கினிப் பிரவேசம் செய்யும் போது ஜெயகாந்தன் என்ன இலாகவமாக இக்கோட்பாட்டினைக் கேள்விக்குறியாக்கி விடுகின்றார். ஆனால் மேற்படி 'கன்னியாகுமரி' நாவலில் வரும் நாயகன் இயக்குநர் ரவிகுமாரின் வக்கிரமான மன ஓட்டங்களை நாவல் முழுக்க வாசித்து முடிக்குமொருவரிற்கு வரும் உணர்வுகளென்ன? ஒரு மூன்றாந்தர பாலியல் நாவலொன்றினை வாசிக்கும் போது ஏற்படும் மன உணர்வுகளைத் தவிர வேறேதாவது உனர்வுகள் வருகின்றதா? நாவலின் முன்னுரையில் ஜெயமோகன் பின்வருமாறு கூறுகின்றார்:

" இன்று தனிமனிதன் முதன்மைப்பட்டு சமூகம் இரண்டாம்பட்சமாகி விட்டது என்று மிகப் பொதுப்படையாகக் கூறலாம். தனி மனித அறம், தனி மனித உண்மை, தனி மனித உன்னதம் ஆகியவை முக்கியமாகிவிட்டன. இந்த நூறு வருடங்களில் உலகம் முழுக்க எழுதப் பட்ட இலக்கியப் படைப்புகளில் பொது அம்சமாக காணப்படுவது இந்தப் போக்கே என்பது என் புரிதல். ஒவ்வொரு தனி மனிதனும் அவனுடைய வாழ்வில , அவனுக்குச் சாத்தியமான உச்சங்களை நோக்கி நகர்வதென்பதே இந்த யுகத்தின் இலட்சிய இயங்குமுறை. அந்நகர்வின் போக்கில் பிறருக்கு ஊறு விளைவிக்கத படி, பிறரைத் தடை செய்யாதபடி ( அல்லது அங்கீகரித்த தடைகளை மட்டும் அளித்தபடி ), அவன் செயல்பட வேண்டுமென்ப்தே இன்றுள்ள ஒழுக்க நெறிகளின் சாரம் என்று படுகிறது. இந்நாவலை இத்தகைய புது ஒழுக்கமொன்றை நோக்கிய தேடல் என்று கூறலாம்."

ஆனால் இந்நாவலில் வரும் நாயகன் நடை முறைகளெல்லாம் பிறரை அவமானப் படுத்துவையாகவல்லவா இருக்கின்றன. எடுத்ததற்கெல்லாம் 'வாயை மூடு தேவடியா நாயே' என்று வசை பாடுபவனாகவிருக்கின்றான். ஏற்கனவே இவன் இயக்கிய 'ஏகயாய ராஜகுமாரி' யிலேயே இவன் உச்சத்தினை அடைந்து விட்டதாகக் கூறி நடிகை பிரவீண இன்னுமொருவனுடன் சென்று விடுகின்றாள். இவனோ தனது முன்னால் காதலியுடன் புணர்ந்து உச்சத்தினை அடைய வேண்டுமென நினைப்பவன். ஜெயமோகன் கூறலாம். இந்நாவல் ஒரு குறியீட்டு நாவலென்று. கன்னியாகுமரி பற்றியும், ஒரு சில இந்து சமய தத்துவங்கள் பற்றியும் ஆங்காங்கே தூவி விடுவதால் மட்டும் இத்தகைய குறியீட்டு நாவல்களைப் படைக்க முடியுமென்றால் எமது 'அழகியின் ஆவி'யினைப் படைக்கும் மர்மக் கதை மன்னர்களெல்லாம் இத்தகைய குறியீட்டு நாவல்களைப் படைக்கத் தொடங்கி விடுவார்கள்.

'அல்பேர்ட் காம்யூ'வின் 'அன்னியன்' நாவலில் வரும் நாயகனின் நடைமுறைகளில் ஒரு வித அன்னியத் தன்மை தென்படும். தாயாரின் மரணச் செய்தியினை மேலதிகாரியிடம் கூறி வேலைக்கு விடுமுறை எடுப்பதற்கே தயங்குவானவன். அத்தகையதொருவிதமான அன்னியத் தன்மை இந்நாவலின் நாயகனிடத்திலும் காணப் படுகின்றது. அவ்விதம் காணப்பட்டாலும் இப்பாத்திரம் படைக்கப் பட்ட விதம் இந் நாவலின் நோக்கமான 'இந்நாவலை இத்தகைய புது ஒழுக்கமொன்றை நோக்கிய தேடல் என்று கூறலாம்' என்று கூறும் ஜெயமோகனின் நோக்கத்தினைச் சிதைத்து விடுகின்றது. ஏற்கனவே கூறியது போல் படைப்பானது படித்து முடித்ததும் வாசகரிடத்தில் எழுப்பும் உணர்வினைப் பொறுத்தே அதன் வெற்றி தங்கியுள்ளது. அந்த வகையில் ஜெயமோகனின் 'கன்னியாகுமரி' ஒரு வெற்றிகரமான படைப்பாயென்றால் அது ஒரு கேள்விக்குறிதான்.

நன்றி: திண்ணை, பதிவுகள்.

மீள்பிரசுரம்: பதிவுகள் - ஆகஸ்ட் 2007; இதழ் 92.

53. கனடாத் தமிழ் இலக்கியமும் 'குரல்' கையெழுத்துச் சஞ்சிகையின் பங்களிப்பும்.

கனடாத் தமிழ் இலக்கியமென்றால் 'தாயகம்', 'காலம்', 'தேடல்', 'ரோஜா', 'பொதிகை' போன்ற சஞ்சிகைகளும், 'பதிவுகள்' இணைய இதழும், 'தாய் வீடு', 'ஈழநாடு', 'சுதந்திரன்', 'வைகறை' போன்ற இலவசப்பத்திரிகைகளும், எழுத்தாளர்கள், அமைப்புகளினால் வெளியிடப்பட்ட நூல்களும் ஞாபகத்துக்கு வரும். அவை பற்றிய போதிய பதிவுகள் ஏற்கனவே பல்வேறு ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுவரையில் எங்கும் பதிவு செய்யப்படாத (பதிவுகள் இணைய இதழ் தவிர்ந்த) ஒரு சஞ்சிகை பற்றிய பதிவு இது. அது ஒரு கையெழுத்துச் சஞ்சிகை. செப்டெம்பர் 1987 தொடக்கம் ஜனவரி 1989 வரையில் 11 இதழ்கள் வெளியான சஞ்சிகை. (செப்டெம்பர் 1987 தொடக்கம்  ஆகஸ்ட் 1988 வரை 10 இதழ்களும், பின்னர் ஜனவரி 1989 இல் இன்னுமொரு இதழும் மொத்தம் 11) வெளியான 'குரல்' கையெழுத்துச் சஞ்சிகையினை நான் ஆசிரியராக இருந்து வெளியிட்டேன். 'குரல்' கையெழுத்துச் சஞ்சிகையின் ஒவ்வொரு இதழும் 100 பிரதிகள் எடுக்கப்பட்டு, 'டொராண்டோ'விலுள்ள தமிழ் வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் விநியோகிக்கப்பட்டன. வெளியான 11 இதழ்களில் இதழ் 9, இதழ் 10 ஆகியன கூட்டு முயற்சியாக வெளிவந்தன. 'குரல்' கையெழுத்துச் சஞ்சிகையினை வாசித்த, எழுத்து மற்றும் வாசிப்பு ஆர்வம் கொண்ட இளைஞர்கள் சிலர் (சுகுமார், குலம், ஜெயராஜ், கீதானந்த சிவம்) தாங்களும் சேர்ந்து 'குரல்' சஞ்சிகையினை வெளியிட ஒத்துழைப்பதாகக் கூறி அவ்விரு இதழ்களையும் வெளிக்கொணர ஒத்துழைப்பு நல்கினர். அந்த இரு இதழ்களும் வடிவமைப்பில் ஏனைய இதழ்களை விடச் சிறிது சிறப்பாக இருப்பதற்குக் காரணம் அவர்களின் ஒத்துழைப்பே. 'குரல்' கையெழுத்துச்சஞ்சிகையின்  இறுதி இதழ் ஜனவரி 1989 வெளியான இதழ் 11. 'குரல்' கையெழுத்துச் சஞ்சிகை , கையெழுத்துச் சஞ்சிகை என்பதால், இலக்கிய ஆர்வம் காரணமாக வெளியிடப்பட்ட சஞ்சிகை.

1. குரல் சஞ்சிகையின் முதலாவது இதழில் (முதலிரு இதழ்களும் 8.5" X 11" அளவில் வெளியானவை; ஏனைய இதழ்கள் 5.5" X 8.5" அளவில் வெளியானவை)  இடம் பெற்றுள்ளவை: இதழாசிரியர் எண்ணம், அட்டைப்படக் கட்டுரை - இந்தியத்தலையீடும், தமிழர் விடுதலைப்போரும் - கிரிதரன், எனது கவிதை (புனைபெயரில்) - மீண்டும் நாம் படை சமைப்போம், தொடர்கதை - அகதிகள் - கிரிதரன்,  மற்றும்  தமிழீழச்செய்திகள். 'இந்தியத் தலையீடும், தமிழர் விடுதலைப்போரும்' கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

'இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் இந்தியா தலையிட்டுள்ளது.  தனது இராணுவத்தை அனுப்பியுள்ளது. சிறிலங்கா அரசுடன் ஒப்பந்தமொன்றினைச் செய்துள்ளது. தற்காலிகமாகச் சிறிலங்காத் தமிழர்கள் வாழ்வில் நிம்மதி ஏற்பட்டுள்ளது. இதே சமயம் தமிழ் மக்களிடையேயுள்ள முற்போக்குச் சக்திகள் மத்தியில் பலவகையான கேள்விகள் எழுந்துள்ளன. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டனவா? அல்லது தமிழ் மக்களின் விடுதலைபோராட்டம் இந்தியத் தலையீட்டினால் மழுங்கடிக்கப்பட்டு விட்டதா? அப்படியானால் இந்தியாவின் தலையீட்டிற்கான பொறுப்பினை யார் ஏற்க வேண்டும்? இவ்வாறு பலவிதமான கேள்விகள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இந்தியத் தலையீடு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையையோ அல்லது தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளையோ (சமுதாய ரீதியிலான) தீர்க்கவில்லை என்பதுதான். ஆனால் தற்காலிகமாகத் தமிழ் மக்களை அழிவிலிருந்து காப்பாற்றியுள்ளது என்பதைத்தவிர வேறு எந்தவிதமான நன்மைகளையும் இவ்வொப்பந்தம் செய்ததாகத் தெரியவில்லை. தேசிய இன விடுதலைக்காகவும், வர்க்க விடுதலைக்காகவும் போராடிய தமிழ் மக்கள் இன்று உயிர் தப்பினால் புண்ணியம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுப் போராட்டத்தையே மழுங்கடிக்கும் இந்நிலைக்குக் காரணம் யார்?'

2. இரண்டாவது இதழில் வெளியானவை: இதழாசிரியர் எண்ணம், அட்டைப்படக் கட்டுரை: J.R..இன் சுயரூபம், தமிழருக்கோ அவமானம்; கவிதை:  எங்கு போனார் என்னவர்? ; தொடர்கதை: அகதிகள் ; கட்டுரை - இந்தியத் தலையீடும் தமிழர் விடுதலைப்போரும் (பகுதி2)' எழுத்தாளர் அறிமுகம்: கீதானந்த சிவம், சிவனடியான்; கவிதை - சிப்பியில் ஒரு முத்து சிரித்தது எனைப்பார்த்து - கீதானந்தசிவம் சிவனடியான்; தமிழீழச்செய்திகள்.

3. குரல் இதழ் 3 தொடக்கம் 11 வரை சிறிய அளவில் (5.5" X 8.5") வெளியானதால் பக்கங்களும் அதிகரித்துள்ளன. இதழ் 3இல் இடம் பெற்றுள்ளவை: இதழாசிரியர் எண்ணம், யாழ் பல்கலைக்கழக சுகந்தம் வெளியீடான எஸ்.சர்மாவின் 'தமிழீழ விடுதலைப் போராட்டமும், இந்தியாவும்' என்ற நூலிலிருந்து சில பகுதிகள் 3 பக்கங்களுக்கு மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளன.; கவிதை: 'படைத்திடுவோம் பொற்காலம்'; அட்டைப்படக்கட்டுரை: மக்கள் கவி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு கூர்வோம்; கவிதை: என்று வரும்?; தமீழீழச் செய்திகள்; அகதிகள் நாவல் இவ்விதழிலிருந்து காணாமல் போய் விட்டது.

4. இதழ் 4இல் இடம் பெற்றுள்ளவை: இதழாசிரியர் எண்ணம் (மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் பற்றிய அஞ்சலிக்கட்டுரை) ; கட்டுரை: 'தமிழீழத்திலிருந்து ஒரு கடிதம்' ;  யாழ்ப்பாணத்தில் அக்காலகட்டத்தில் மருத்துவக் கல்வி பயின்றுகொண்டிருந்த ஆசிரியரின் தங்கையிடமிருந்து பெற்ற கடிதம் ( 5 பக்கங்கள்) இந்தியப்படையினரின் போர்க்கால அடக்குமுறைகளை விபரிக்கிறது. அப்பொழுது என் குடும்பத்தவர்கள் அராலி வடக்கில் வசித்து வந்தார்கள். அக்கடிதத்திலிருந்து சில பகுதிகள் கீழே:

"இங்கு சரியாக சண்டை தொடங்கி ஒரு மாதத்தின்பின் Nov 8th தான் கடுமையான பயங்கரநாள். ஷெல் அடி அடி என்று அடித்தது. பின் வீட்டில் (பரமேஸ் அக்கா) செல்லத்துரை மாஸ்ட்டர் இருந்தாரல்லவா? அவர் ஷெல்லினால் செத்து விட்டார்.  ... இங்கு ஒரே Tension. அவரை உடனே முன் Nurseryய்ற்கு முன்னால்தான் எரித்தவர்கள். ..... மற்றும் குலனை நடராஜா மாஸ்ட்டர், Schoolற்குக் கிட்ட ஒரு வீட்டில் தாய், தகப்பன், மகன் மூவரும் மரணமானார்கள்.  .....ஒரு மாதத்திற்கு மேல் இங்கு இடைவெளி இல்லாத ஊரடங்குச் சட்டம். இப்பத்தான் இப்படி ஊரடங்கு சட்டம் இருக்கலாம் என்பதை அறிந்துள்ளோம்..... நடை, சைக்கிள், மாட்டு வண்டி தவிர வேறு வாகனமில்லை. ..... hospiral இல் more than 80 செத்துள்ளனர்.....IPKF இன் புண்ணியம் நாங்களும் ஷெல்களைக் கண்டுள்ளோம்.  கூவென்று வரும்போது உயிர் போய் வரும்....... இரவு ஏன் வருகிறது என்றுள்ளது?....IPKF இன் ரோந்து உள்ளது. நாய் குரைக்கும் சத்தம் கேட்டாலும் பயமாகவுள்ளது...... இன்று வட்டுக்கோட்டையில் Guard Post  மாறுகிறதாம். இவ்வளவு நாளும் chinese மாதிரி நேபால் ஆக்கள். இனி சீக்கியராம் என்றவுடன் நேற்றே ரோட்டில் சனம் இல்லை பயத்தில். ஆறு மாதமாவது செல்லுமாம் ஓரளவு சரிவர.....'  இவ்வாறு செல்லும் கடிதம் இவ்வாறு முடிகிறது: IPKF என்றால் meaning Indian People Killing Force."

கட்டுரை: நல்லூர் நகர அமைப்பு 16 ஆம் நூற்றாண்டில்; கவிதை: அன்றும், இன்றும் - தீவகன் (புங்குடுதீவு ஜெயகாந்தன்); கவிதை: வாழ்க்கை இது பொய்யடா - கீதானந்தசிவம்; நூல் விமரிசனம் - ஒரு தெருப்பாகனின் பாடல்கள் - வ.ந.கி; கவிதை: தை பிறக்க வழி பிறக்க; உரையாடல்: தமிழீழ விடுதலை இயக்க அமைப்பைச் சேர்ந்த ஒருவருடன். இதழ் 3இல் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த இருவருடன் நடைபெற்ற உரையாடல் இடம் பெற்றிருந்தது. இதழ் 5இல் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியினருடன் நடைபெற்ற உரையாடல் இடம் பெற்றுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் முயற்சி செய்தபோது அதற்கான சாத்தியம் அக்காலகட்டத்தில் ஏற்படாமல் போனதால் அவர்களுடனான உரையாடல் இடம் பெறவில்லை.

5. இதழ் 5இல் இடம் பெற்றவை: இதழாசிரியர் எண்ணம் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்துகின்றது. J.R.. உடன் ரு பேட்டி- காண்பவர் குருவியார் (3 பக்கக் கட்டுரை); கவிதை: விடை தெரியாப் புதிர் நாடி; கட்டுரை: பல்லவராஜன் காட்டில் ஒரு பொழுது; கவிதை: வேண்டும் விடுதலை  - கீதானந்தசிவம் -; கவிதை: கோடுகளைத் தாண்டுங்கள்; கவிதை: ஒரு புறா.. - முரளி; கவிதை: காடு - பாரதியார்; உரையாடல்; கட்டுரைத்தொடர் - பிரபஞ்சப் புதிர்கள் - வ.ந.கி; கவிதை: எங்கே தவழ்ந்த மண் - புங்குடுதீவு ஜெயகாந்தன்; கட்டுரை: தமிழக அரசியல் ஒரு கண்ணோட்டம் - தரன்.

6. இதழ் 6இல் இடம் பெற்றவை: இதழாசிரியர் எண்ணம் - எங்கே நாம் தவறிழைத்தோம்; கவிதை: மனம் - கீதானந்தசிவம்; புதிய தொடர் நாவல் - மண்ணின் அடிமைகள் - வ.ந.கிரிதரன்; கவிதை: இனி ஒரு தொல்லை இல்லை- பாரதியார்; கடிதம் - தமீழீழத்திலிருந்து ஒரு கடிதம் (7 பக்கங்கள்; இரு கடிதங்களின் தொகுப்பு; எழுதியவரின் பெயர் அன்றிருந்த அரசியக் சூழல் காரணமாகக் குறிப்பிடப்படவில்லை. அக்கடிதங்களை எழுதியவர்: எஸ்.கே.விக்கினேஸ்வரன்); கவிதை: மலர்வது ஒரு மலரல்லவோ - யோகலிங்கம்; நூல் விமர்சனம்: சேரனின் இரண்டாவது சூரிய உதயம் ;கட்டுரைத்தொடர் - பிரபஞ்சத்துப் புதிர்கள் 2; ஆசிரியருக்குக் கடிதம், எழுதியவர்: ஜெயராஜ் (ஸ்கார்பரோ)

7. இதழ் 7இல் இடம் பெற்றவை: இதழாசிரியர் எண்ணம்; கவிதை: யார்? - கீதானந்தசிவம்;  தொடர் நாவல் - மண்ணின அடிமைகள் 2 - கிரிதரன்; கவிதை: அமைதி பிறக்கட்டும்; கலை நிகழ்வு பற்றிய விமரிசனம் - 'நதியும், நிதியும்' ஒரு கண்ணோட்டம் - K.V..லிங்கம்; கவிதை: நெஞ்சின் குரல்' எஸ்.வி.ராஜதுரை, பி.சிங்கராஜா ஆகியோரில் மொழிபெயர்ப்பில் வெளியான 'புரட்சிகர மக்களை ஆயுதபாணியாக்கலும், மக்கள் படையும்' - ஜெனரல் கியாப்' நூலிலிருந்து சில பகுதிகள் மீள்பிரசுரம்; கவிதை: புதுமைப்பெண் - பாரதியார்; கவிதை - கனிமொழியாள் காவியம் - எஸ்.யோகலிங்கம்; கட்டுரை - பாரதி கருத்து  முதல்வாதியா? பொருள் முதல்வாதியா?; கட்டுரைத்தொடர் - பிரபஞ்சப்புதிர்கள் 3; ஆசிரியருக்குக் கடிதம்- சதாசிவம் சுந்தரலிங்கம் (ஸ்கார்பரோ).

8. இதழ் 8 இல் இடம் பெற்றவை: இதழாசிரியர் எண்ணம்; தொடர் நாவல் - மண்ணின் அடிமைகள் 3 - கிரிதரன்; கட்டுரை - சிந்திப்பாய் தமிழா! எஸ்.வி.ராஜதுரை, பி.சிங்கராஜா ஆகியோரின் மொழிபெயர்ப்பில் வெளியான 'புரட்சிகர மக்களை ஆயுதபாணியாக்கலும், மக்கள் படையும்' - ஜெனரல் கியாப்' நூலிலிருந்து சில பகுதிகள் மீள்பிரசுரம்.

9. இதழ் 9இல் இடம் பெற்றவை: இதழாசிரியர் எண்ணம்; உங்களுடன் ஒரு நிமிடம் - நிர்வாக ஆசிரியர் - சுகுமார்; கட்டுரை - அன்னையின் மாண்பு - குலம்; தொடர் நாவல் - மண்ணின் அடிமைகள் 4 - கிரிதரன்; கவிதை - புரியாத... கீதானந்தசிவம்; சிறுகதை - கறை படிந்த கம்பிகள் - குகன்; கட்டுரை - ஜெயராஜ்;  குறுங்கட்டுரை - யாருக்கு வேண்டும் இந்தச் சுதந்திரம் - சங்கிலியன்; மாணவர் உலகம்; பின் அட்டைக் கேலிச்சித்திரம் - ஜெயராஜ்.

10. இதழ் 10இல் இடம் பெற்றவை: இதழாசிரியர் எண்ணம்; உங்களுடன் ஒரு 'நிமிடம்' - சுகுமார் (நிர்வாக ஆசிரியர்); கவிதை - நிலவே நீ ... கீதானந்தசிவம்; கவிதை - சாம்பல் மேட்டில் .. - ராஜா-; தொடர் நாவல் - மண்ணின் அடிமைகள் 5 - கிரிதரன்; மாணவர் உலகம்;  நெடுங்கவிதை - நான் சாவித்திரியல்ல... -விஸ்வலோகநாதன்; சிறுகதை - நிகழ்வும், நியதியும் - பிரியா-; கட்டுரைத் தொடர் - பிரபஞ்சப் புதிர்கள்; பின் அட்டைக் கேலிச்சித்திரம் - பாலி -;

11. இதழ் 11; இதுவே 'குரல்' கையெழுத்துச் சஞ்சிகையின் இறுதி இதழ்: இதழாசிரியர் எண்ணம், மாணவர் மலர் (கட்டுரை - பொங்கல் திருநாள் - வாண்டு; கவிதை - முயல் - வாண்டு); கட்டுரை - ஒற்றுமையின் அவசியம்; தொடர் நாவல் - மண்ணின் அடிமைகள் 6 - கிரிதரன்; கவிதை- எழுத்தெனும் .. - அறிஞர் அ.ந.கந்தசாமி -; கட்டுரை - முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி .. அ.ந.கந்தசாமி - தரன்; கவிதை: கறுப்பு என்றாலும் வடிவு - சலீமா-; உங்கள் சிந்தனைக்கு: அருளரின் 'லங்கா ராணி'யிலிருந்து சில பகுதிகள் மீள் பிரசுரம்; கட்டுரை: மக்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம் - கபிஜான்;

 54. கடல்புத்திரனின் 'வெகுண்ட உள்ளங்கள்' தவிர்க்க முடியாததோர் ஆவணப்பதிவு!

புலம்பெயர் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில் பாலமுரளிக்கும் (கடல்புத்திரன்) ஓரிடமுண்டு.  இவரது சிறுகதைகள் சில  கனடாவில் வெளிவந்த 'தாயகம்' சஞ்சிகை / பத்திரிகையில் வெளிவந்திருக்கின்றன. அத்துடன் அவரது சிறு நாவல்களான 'வேலிகள்' மற்றும் 'வெகுண்ட உள்ளங்கள்' ஆகியனவும் 'தாயக'த்தில் தொடராக வெளிவந்தன. இவையனைத்தையும் பின்னர் ஒரு தொகுப்பாக மங்கை பதிப்பகம் (கனடா) தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் மூலம் , அவர்களுக்குத் தமிழகத்தில் விற்பனை உரிமையினைக் கொடுத்து வெளியிட்டது. இவரது சிறுகதைகள் பல 'பதிவுகள்' இணையத்தளத்தில் வெளிவந்துள்ளன.  'சிறுகதைகள்.காம்' இணையத்தளத்திலும் இவரது சிறுகதைகள் சில பிரசுரமாகியுள்ளன. எனது இந்தப் பதிவு கடல்புத்திரனின் 'வேலிகள்' தொகுப்பிலுள்ள நாவல்களிலொன்றான 'வெகுண்ட உள்ளங்கள்' பற்றியது. ஈழத்துத் தமிழ் அரசியல் நாவல்களென்றால் நிச்சயம் இந்த நாவலும் குறிப்பிடப்பட வேண்டியது அவசியமென்று கருதுகின்றேன்.

'வேலிகள்' தொகுப்பின் பின் அட்டையிலுள்ள இவரைப்பற்றிய அறிமுகத்தில் சில தகவற் பிழைகளுள்ளன. இவர் பிறந்தது யாழ்ப்பாணத்திலுள்ள வண்ணார்பண்ணை என்னும் பகுதியில். ஆனால் இவரது பால்ய காலத்தின் பெரும்பகுதி கழிந்தது கடலோரக்கிராமங்களிலொன்றான 'வடக்கு அராலி'யில். வவுனியாவிலும் இவரது குழந்தைப்பருவத்தின் சில ஆண்டுகள் கழிந்திருக்கின்றன.  மேலும் 'வேலிகள்' நூலின் பின்னட்டை அறிமுகத்தில் இவர் கனடாவுக்கு 'அகதி'யாகப் புலம்பெயர்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இவர் கனடாவுக்கு நிரந்தர வசிப்பிட உரிமைபெற்றுப் புலம் பெயர்ந்தவர்.

1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பல்வேறு ஈழத்தமிழரின் விடுதலை அமைப்புகளில் இணைந்து போராடப் புறப்பட்டனர். அவ்விதமாகப் புறப்பட்டவர்களில் இவருமொருவர். தனது அனுபவங்களை மையமாக வைத்து 'வெகுண்ட உள்ளங்கள்' நாவலை இவர் படைத்திருந்தாலும், இந்த நாவல் விரிவானதொரு நாவலல்ல. ஆனால் இவ்விதமாகத் தமது இயக்க அனுபவங்களை மையமாகக்கொண்டு ஏனையவர்களால் படைக்கப்பட்ட நாவல்களிலிருந்து இந்த நாவல் முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் படைக்கப்பட்டிருப்பதொன்றே இந்த நாவலின் முக்கியமான சிறப்பாகக் கருதுகின்றேன். பொதுவாக இவ்விதமான படைப்புகளை எழுதுபவர்களின் எழுத்தில் விரவிக்கிடக்கும் சுயபுராணங்களை இவரது 'வெகுண்ட உள்ளம்' நாவலில் காண முடியாது. 'வெகுண்ட உள்ளங்கள்' என்னுமிந்த இந்த நாவல் 1983ற்கும் 1987ற்குமிடைப்பட்ட பகுதியில், ஈழத்தமிழர்களின் போராட்ட எழுச்சி எவ்விதம் ஒரு கடலோரக்கிராமத்தின்மீது தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பதை விபரிக்கின்றது. அந்த வகையில் இந்நாவல் அக்காலகட்டத்தை ஆவணப்படுத்திய முக்கியதொரு படைப்பாக விளங்குகின்றது.

வெகுண்ட உள்ளங்கள் கூறும் கதைதானென்ன?

இந்நாவல் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கற்பனை கலந்து எழுதப்பட்டதென்பதை நாவலாசிரியரின் நாவல் பற்றிய அறிமுகக் குறிப்பினில் காணமுடிகின்றது:

"சம்பவங்கள் சில உண்மையானவை. வெவ்வேறு இடங்களில் நடந்த கதைகளை நாவலுருவத்திற்காக ஒரு குடும்பத்தோடேயே இணைந்து சில பொதுவான அபிப்பிராயங்களைக் கலந்து கற்பனை பண்ணி எழுதியிருந்தேன்.' (வேலிகள்; பக்கம் 59)

அத்துடன் நாவல் முழுவதும் ஆசிரியர் பேச்சுத்தமிழைத்தாராளமாகவே பாவித்திருக்கின்றார். அதற்குமொரு காரணத்தை நாவல் அறிமுகத்தில் கூறியிருக்கின்றார்:

"இரு தமிழ் வழக்கை விட்டு - உரையாடலை பேச்சுத்தமிழிலும் மற்றதை செந்தமிழிலும் எழுதுதல்- ஒரு தமிழில் - எல்லாவற்றையும் பேச்சுத்தமிழில் - எழுதிப்பார்க்கப்பட்டது." (வேலிகள், பக்கம் 59).

அராலித்துறை, கொழும்புத்துறை ஆகிய சிறிய துறைகள் அக்காலகட்டத்து அரசியற் சூழல் காரணமாக முக்கியத்துவம் பெறுகின்றன. இதனை நாவல் இவ்வாறு பதிவு செய்கின்றது:

" தீவு மக்கள் முன்னர் பண்ணை  வழியாலும்,  காரைநகர் வழியாலுமே  சென்று கொண்டிருந்தார்கள்.  கோட்டையில் அரசபடைகள் குவிக்கப்பட்டு பண்ணைப்பாதையில் மண்டைதீவு முகாம்  நிறுவப்பட்டபோது  அது அடைப்பட்டு விட்டது.  காரைநகர் பாதை மாத்திரமே போக்குவரத்துடையதாக இருந்தது. அண்மைக்காலம் தொட்டு அப்பகுதியில் கடற்படையின் அட்டகாசம் அதிகமாக இரண்டாவதும்  தடைப்பட்டுவிட்டது.  இதனால் கவனிப்பாரற்றுக்கிடந்த  அராலித்துறை, கரையூர், கொழும்புத்துறை போன்றவை பிரசித்தமடைந்தன. இவ்விடத்தில்  சிறிய வள்ளங்களை  மட்டும் அதிகமாகக்கொண்டிருந்த வாலையம்மன் கோவில் பகுதி மீனவர்கள்  தலைக்கு இரண்டு  மூன்று ரூபா என வசூலித்து தீவுப்பகுதியில் கொண்டுபோய் விடத்தொடங்கினார்கள். இரு கரைகளிலும் மினி பஸ்கள் சிதைந்த தார்றோட்டில் புழுதியைக் கிளப்பிக்கொண்டு வரத்தொடங்கின.  பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய்க்கடை, தேத்தண்ணிக்கடை என முளைக்க அத்துறை முக்கியத்துவம் பெற்றுவிட்டது. (வேலிகள்; பக்கம் 62)

இவ்விதமாக அக்காலகட்டத்து அரசியற் சூழல் காரணமாக முக்கியத்துவம் பெற்ற அராலித்துறை மேலும் பலரை ஈரக்கத்தொடங்கியது. கடல்வலயச் சட்டங்களால் மீன் பிடித்தல் அறவே இல்லாதிருந்த காலகட்டமது. கரைவலை போட்டவர்கள் மட்டுமே சிறிதளவு தொழில் செய்த காலகட்டம். இதனால் பொருளியல்ரீதியில் பாதிக்கப்பட்டிருந்த கடற்தொழிலாளர்களுக்கு அராலித்துறைக்கேற்பட்ட முக்கியத்துவம் இன்னுமொரு வழியில் உழைப்பதற்கான வழியினைத் திறந்து விட்டது.  சிறிய வள்ளங்களை வைத்திருந்த வாலையம்மன் கோவிற்பகுதிக் கடற்தொழிலாளர்கள் பயணிகளைத் தீவுப்பகுதிக்குக் கொண்டுபோய் விட்டு உழைக்கத்தொடங்கியதைக் கண்ட கடல் வலயச் சட்டங்களால் தொழில் முடக்கப்பட்டிருந்த நவாலி, ஆனைக்கோட்டைப்பகுதி மீனவர்கள் தம் பெரிய வள்ளங்களைக் கல்லுண்டாய்க் கடலினூடு அராலித்துறைக்குக் கொண்டுவந்து பயணிகளைத் தீவுப்பகுதிக்குக் கொண்டு செல்லத்தொடங்கினார்கள். இது சிறிய வள்ளங்களை வைத்துப் பயணிகளை ஏற்றி இறக்கிக்கொண்டிருந்த வாலையம்மன் கோவிற்பகுதி கடற்தொழிலாளர்களுக்கு அதிருப்தியினைத்தருகின்றது.

இந்த இருபகுதி கடற்தொழிலாளர்களுக்கான தொழில் ரீதியிலான முரண்பாடுகள் இயக்கத்தின் தலையீட்டினை அங்கு ஏற்படுத்துகின்றது.

"கரையிலிருக்கிற எங்களுக்குத்தான் முதல் சலுகை வேண்டும் என்ற கோரிக்கையை தீவுப்பகுதிப் பொறுப்பாளரான ஓரியக்கத்தின் அந்த திக்குவாய்ப்பொடியன் ஓரளவுக்கு ஏற்றிருந்தான்.  அதன்படி வாலையம்மன் பகுதியினர்  தீவுக்கு ஆட்களை , சாமான்களைக் கொண்டு போவதென்றும் , மற்றவர்கள் தீவுப்பகுதியிலிருந்து வருகிற வரத்தைப் பாப்பதென்றும் முடிவாக்கப்பட்டிருந்தது. "(வேலிகள்; பக்கம் 63).

இவ்விதமாக முடிவாகியிருந்த சூழலைக் கெடுக்கும் வகையில் பெரும் வள்ளமொன்று அராலித்துறையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தீவுப்பகுதிக்குச் சென்ற செயலானது மீண்டும் வாலையம்மன் கோவிற்பகுதி கடற்தொழிலாளர்களை ஆத்திரத்திற்குள்ளாக்குகின்றது. தமது தொழிலினை நிறுத்திவிட்டு நியாயம் கேட்கத்தொடங்கினர்.  இதனால் தீவுப்பகுதிக்குச் செல்ல வந்த பயணிகள் போக்குவரத்து ஏதுமின்றிப் பெருகத்தொடங்கினார்கள்.  அச்சமயம் இன்னுமொரு பெரிய வள்ளம் கரையை நோக்கி வந்துகொண்டிருந்தது வாலையம்மன் பகுதி கடற்தொழிலாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகின்றது. முருகேசு என்ற கடற்தொழிலாளர் தலைமையில் சிறிய வள்ளத்தில் பெரிய வள்ளத்துக்குச் சென்ற வாலையம்மன் பகுதி கடற்தொழிலாளர்கள் பெரிய வள்ளத்து கடற்தொழிலாளர்களைப் பலமாகத்தாக்கினார்கள். ஒருவனது காலை ஒடித்தார்கள். அந்த வள்ளத்தைத் துரத்தி விட்டுப் பெருமிதத்துடன் கரைக்குத்திரும்புகின்றார்கள் வாலையம்மன் பகுதி கடற்தொழிலாளர்கள். ஆனால் அந்த அமைதி நீடிக்கவில்லை. அடுத்த பதினைந்து நிமிடங்களில் 'ஐந்தாறு -பெடியள்க'ளுடன்  நாலைந்து வள்ளங்கள் இக்கரை நோக்கி விரைந்து வருகின்றன. இதனை ஆசிரியர் இவ்வாற்று விவரிக்கின்றார்:

"அவர்களுக்குத் திகில் பரவத்தொடங்கியது. 'வருகிறவர்கள் மற்ற இயக்கத்துப் பெடியள்' எனத்தில்லை கத்தினான். 'நீதானே ஒப்புதல் தந்தாய்' என்று முருகேசன் தொட்டுப் பலர் அவனைச்சூழ்ந்து கொண்டனர்." (வேலிகள்; பக்கம் 64).

இவ்விதம் வந்த மற்ற இயக்கத்துப் போராளியான வடிவேலு என்பவன் இடுப்பிலிருந்த ரிவால்வரை எடுத்து மேல் வெடி வைக்கவே, அப்பகுதியினர் அவன் மேல் பாய்ந்தரவனிடமிருந்த ரிவால்வர், மகசீன், கிரனேட்டு எல்லாவற்றையும் பறித்ததுடன் அவன் தலையிலும் அடித்து மண்டையை உடைத்து விட்டார்கள். அவனோ தன்னிடமிருந்தவற்றைத் திரும்பப்பெறாமல் அவ்விடத்தைவிட்டு நகர்வதில்லையென்று நிற்கின்றான். இதற்கிடையில் வடிவேலுவின் இயக்கத்தினர் அங்கு வருகின்றனர். 'இனிமேல் இயக்கங்கள் வள்ளங்களை ஓட்டும்" என்று அறிவிக்கின்றனர். இவ்விதமாக வள்ளங்களில் பயணிகளைத் தீவுப்பகுதிக்குக் கொண்டு செல்வதும், கொண்டு வருவதும் அப்பகுதி கடற்தொழிலாளர்கள் கைகளிலிருந்து இயக்கங்களின் கைகளுக்கு மாறுகின்றன. இங்கு ஒன்றினைக் கவனிக்கலாம். இனிமேல் இயக்கங்கள்தாம் வள்ளங்களை ஓட்டுமென்று மற்ற இயக்கத்தினர் அறிவிக்கின்றனரே தவிர தாம் மட்டும்தான் வள்ளங்களை ஓட்டுவதாக அறிவிக்கவில்லை. அதற்கும் ஒரு காரணமிருந்தது. அக்காலகட்டத்தில் இயக்கங்கள் அனைத்தும் தமிழ்ப் பகுதிகளில் இயங்கிக்கொண்டிருந்தன. ஒருவரையொருவர் முற்றாக அழிக்கத் தொடங்கியிருக்கவில்லை.

மற்ற இயக்கத்தினர் மீது மக்கள் நடாத்திய தாக்குதல் காரணமாக வள்ளமோட்டுதலை இயக்கங்கள் எடுப்பதாக மற்ற இயக்கம் அறிவிக்கின்றது. அதே சமயம் இயக்கத்தினர் மீதும் அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இது தெளிவாக நாவலில் குறிப்பிடப்படவில்லை. ஏற்கனவே நாவலில் பெரிய வள்ளக்காரர் தீவுப்பகுதியிலிருந்து பயணிகளைக் கொண்டுவரவேண்டுமென்றும், வாலையம்மன் பகுதியினர் பயணிகளை, பொருட்களைக்கொண்டு செல்வதென்றும் இயக்கத்தினனான திக்குவாய்க்காரனொருவனுடன் அப்பகுதிக்கடற்தொழிலாளர்கள் கதைப்பதாகவும், அச்சமயத்தில் பெரிய வள்ளமொன்று பயணிகளை ஏற்ற அப்பகுதிக்கு வருவதாகவும், அவ்வள்ளத்தில் வந்தவர்கள் மீது வாலையம்மன் பகுதி கடற்தொழிலாளர்களால் தாக்குதல்கள் நடாத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அவ்விதம் தாக்கப்பட்டவர்கள் யார்? ஏனைய பகுதி மீனவர்களா? அல்லது இரு பக்கத்தினருக்குமிடையில் சமாதானம் செய்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களா?

அதே சமயம் நாவலின் இன்னுமோரிடத்தில் தீவுப்பகுதியில் இயங்கிய இயக்கத்தின் போராளியொருவனின் கை வாலையம்மன் பகுதியினரால் முறிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக இயக்கத்தின் தீவுப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இரவில் வந்து ஆறுபேரைக் கைது செய்து கொண்டு போனதாகவும் கூறப்பட்டுள்ளது. (வேலிகள்; பக்கம்  70).

மற்ற இயக்கத்தின் போராளியொருவனின் மேல் தாக்குதல் நடாத்தப்பட்டு ஆயுதங்கள் களையப்பட்டது தெளிவாகப் பதிவு செய்யப்பட்டதைபோல இயக்கத்தின் மேல் நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தெளிவாக விபரிக்கப்படவில்லை. ஒருவேளை நூலின் சில பகுதிகள் விடுபட்டுப்போயுள்ளனவோ?

நாவலில் வரும் கீழுள்ள வசனங்கள் விளக்குவதென்ன?

"..ஆனால் இரண்டையும் (இயக்கங்களை) உடனே அணுகப்பயந்தார்கள். ஒன்றிடமிருந்து ஆயுதங்களைப் பறித்திருக்கின்றார்கள். ஒன்றைக் காயப்படுத்தியிருக்கின்றார்கள்.  அவமரியாதையின் தாக்கம் எவ்வளவு இருக்குமோ? அணுகாவிட்டாலும் நிலைமை சீர்கேடாககிவிடும்..."(வேலிகள்; பக்கம் 66)

ஆசிரியர் ஓரிடத்திலும் இயக்கங்களின் பெயர்களைக்குறிப்பிடவில்லை. ஆனால் அவர் அந்த இயக்கங்களைக் குறிக்கக்குறிப்பிடும் வார்த்தைகளைக் கொண்டு அவ்வியக்கங்களின் பின்னணியினை ஊகிக்க முடியும். அக்காலகட்டத்தில் அப்பகுதியில் இயங்கிய முக்கியமான பெரிய இயக்கங்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும்தாம். கழகம், இயக்கம் என்று தமிழீழ் மக்கள் விடுதலைக் கழகம் குறிக்கப்படுகின்றது. மற்ற இயக்கமென்று தமீழிழ விடுதலைப்புலிகள் இயக்கம் குறிக்கப்படுகின்றதென்பதை அறிய முடிகின்றது. 'மற்ற இயக்கத்தை'ப்பற்றிக் குறிப்பிடும்போது ஒரு சமயம் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது:

"மற்ற இயக்கத்தைப் போய்ச்சந்திப்பதென்றால் அவர்களுடைய  பிரதேசக் காம்புக்குப் நேரடியாகப் போக வேண்டும்.  ஆயுதங்களோட அவர்கள் எந்த நேரமும் புழங்குவதால் பெடியளை அனுப்பப் பயப்பட்டார்கள். "(வேலிகள்; பக்கம்  69)

இதிலிருந்து மற்ற இயக்கமென்று குறிப்பிடப்பட்டது தமிழீழ விடுதலைப் புலிகள் என்று ஊகிக்க முடிகிறது. இதே சமயம் இயக்கமென்று குறிப்பிடப்படும் இயக்கத்தின் செயற்பாடுகள் விரிவாகவே நாவலில் விபரிக்கப்பட்டிருக்கின்றன.

"பொதுமக்கள் புரிந்து கொள்வதற்கு இலகுவாக மாற்று அரசாங்கம் பேரில் ஒரு கமிட்டி அமைப்பை அவ்வியக்கம் வைத்திருந்தது. ஏ.ஜி.ஏ.யைச் சந்திக்க முதல் விதானையாரைச் சந்திப்பதுபோல் அவ்விடத்துக் கிராமப் பொறுப்பாளரைச் சந்திக்க வேண்டும். பிறகு அவர்களது  ஏ.ஜி.ஏ.சைச் சந்திக்க வேண்டும். ஏ.ஜி,.ஏ.க்களுக்கு மத்தியில் அடிக்கடி கூட்டம் நடைபெறும். தீவுப்பகுதி ஏ.ஜி.ஏ கடலால் பிரிக்கப்பட்டிருந்ததால் சாதாரண விதாரணயார் பிரிவுகளுக்கு அயலில் மானிப்பாய் விதானையாருடன் இருந்த பழக்கம் அவர்களோடு நிலவவில்லை. பெரிய பிரச்சினைகளைப் பொதுவாக ஏ.ஜி.ஏ மட்டத்தினர் கதைத்துத் தீர்த்துக்கொள்வர். பிரச்சினை மோசமானால் அவர்கள் எல்லாருக்கும் தலைமையாயிருக்கிற அரசாங்க அதிபருக்குக்கொண்டு போவார்கள். எல்லா அமைப்புகளையும் பொதுமக்கள் சந்தித்துக் கதைக்கக்கூடியதாக அமைக்கப்பட்டிருந்தது.  விதானையார், ஏ.ஜி.ஏ தீர்ப்புகள் திருப்தி அளிக்காவிட்டால் மக்கள் முறைப்பாடுகளை நேரடியாக ஜி.ஏ. அமைப்புகளுக்குக்கொண்டு போகலாம்." (வேலிகள்; பக்கம் 68)\

இவ்விதமான விபரிப்புகள் அந்த இயக்கம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்பதைப் புலப்படுத்துகின்றன. நாவலாசிரியர் அந்த இயக்கத்தில் ஆரம்பத்தில் இணைந்திருந்ததன் காரணமாகவும், அப்பகுதி மக்களுடன் நன்கு இணைந்து பழகியவர் என்பதாலும் அப்பகுதி மக்கள் பற்றியும், அந்த இயக்கம் பற்றியும் நாவலில் விரிவாகவே தகவல்கள் பதிவாகியிருக்கின்றன.

இவ்விதமாக இரு பெரும் இயக்கங்களுடன் மோதிக்கொண்ட அப்பகுதி மக்கள் அம்மோதல்கள் ஏற்படுத்திய, ஏற்படப்போகின்ற பாதிப்புகளைத் தணிக்க அல்லது சமாளிக்க எவ்விதம் முயற்சி செய்கின்றார்களென்பதை நாவல் விரிவாகவே விபரிக்கின்றது.

இதுதவிர நாவல் மேலும் இயக்கத்தின் செயற்பாடுகள் சிலவற்றை விபரிக்கின்றது. அப்பகுதியில் பாவிக்கப்படாமலிருந்த வீடொன்றினை இயக்கத்தின் போராளிகள் பொறுப்பெடுத்து இயக்க  முகாமாக்குகின்றார்கள். அந்த வீட்டுக்குப் பொறுப்பாக இருந்த அயல் வீட்டுக்காரர் வீட்டு உரிமையாளர் கொழும்பிலிருப்பதாகவும், விரைவில் வரவிருப்பதாகவும் கூறி வீட்டுச் சாவியினைக் கொடுக்கத்தயங்கின்றார். அவரை ஒருவாறு சமாளித்து அந்த வீட்டினைப் பொறுப்பெடுத்து இயக்க முகாமாக்குகின்றனர். அவ்விதம் முகாமாக மாற்றும்போது அந்த வீட்டிலிருந்த பொருட்களையெல்லாம் எடுத்து அறையொன்றில் போட்டு, சாவியினால் பூட்டி விட்டு, அந்தச் சாவியினையும் அந்த அயல் வீட்டுக்காரரிடமே கொடுத்து விடுகின்றார்கள்.

அத்துடன் நாவல் விபரிக்கும் இன்னுமொரு விடயம் அந்தபோராளி இளைஞர்கள் தாம் வள்ளங்களைத் தம் இயக்கம் சார்பில் ஓட்டத்தொடங்குவதுதான். ஓட்டிகள் இருவரைச் சம்பளத்துக்கு வைத்து வள்ளத்தை ஓட்டுகின்றார்கள். அதனை நாவல் பின்வருமாறு விபரிக்கின்றது:

"திலகனுக்கு படகு ஓட்டம் பற்றி தெரியாதபோதும், மேலிடம் சொன்னதைக் கடைப்பிடித்தான். படகுச் சொந்தக்காரனையும் அவுட்போர்ட் மோட்டார் கொண்டு வந்தவனையும் ஓட்டிகளாக அனுமதித்தான்.  இரண்டிற்கும் ஒருத்தனே உரித்தவனஔ இருந்ததால்.. அவன் மற்றவனை தெரிவு செய்யலாம்.  அவ்விடத்திற்கு பரிச்சயமானவர்களைப் போடாதபோது , படகுக்கு சேதாரம் கூடுதலாக ஏற்பட்டது. ஆழமற்ற கடலானதால் ஓடியோடி ஆழமான பாதைகண்டு ஓட வேண்டும். இல்லாது போகிறபோது படகு தரை தட்டி அதன் சீமெந்து ஏர் உடைய நேர்ந்தது. கல் பகுதியில் ஏறுகிறபோது பக்கப் பகுதியில் ஓட்டைகள் ஏற்பட்டன. அடிக்கடி பைபர் லேயர் வைத்து ஒட்டுற செலவுகள் ஏற்பட்டன. அதனால் அனுபவம் மிக்க பெடியளையும் சேர்த்து படகுச் சேவையை நடத்தினான். ஒரு நாள் சம்பளமாக அவன் ஓட்டிக்கு 75 ரூபா கொடுத்தான். இருவருக்கும் 150. ஓட்டம் சீராக நடைபெற்றது. " (வேலிகள்; பக்கம் 80-81)

இருந்தும் வெற்றிகரமாக நடத்த முடியாததால் படகுச் சேவையை இயக்கத்தின் தீவுப்பகுதியிடமே இறுதியில் கொடுக்கும்படியாகின்றது. இதுதவிர நாவல் இன்னுமொரு விடயத்தையும் ஆவணப்படுத்தியிருக்கின்றது.  அதனை கதாசிரியர் பின்வருமாறு விபரிக்கின்றார்:

"..வெல்டிங் பெடியன் சுந்தரத்தின் ஐடியாவுக்கு அந்த ஏ.ஜி.ஏ. அமைப்பு ஒத்துழைப்பு கொடுத்துச் செயற்படுத்தியது.... காம்பிற்கு பின்னாலுள்ள வளவில் புதிய வெற்று டீசல் ட்ரம்கள் குவிக்கப்பட்டன. சுந்தரம் குழு சுறுசுறுப்பாக இயங்கியது. அவற்றின் வாய்ப்பகுதியை மூடி வெல்ட் பண்ணினார்கள். காற்று அடைக்கப்பட்ட ட்ரம்களை அருகருகாக அடுக்கி மேல் கம்பிச்சட்டம் வைத்து இணைத்து ஒட்டினார்கள். அப்படியே ஒரு மேடை போல் அமைத்தார்கள். மூன்று நான்கு நாட்கள் முழுமூச்சாக செயல்பட்ட அவர்கள் வெற்றியடைந்திருந்தனர். அது முதல்தரமான மிதவையாக காரைநகர் கடற்பகுதியிலுள்ள  பெரிக்கு  இணையாக செயற்படுமென்ற நம்பிக்கை  அவர்களுக்கு இருந்தது.  ட்ரக்டரில் ஏற்றப்பட்டு புழுதியைக் கிளப்பிக்கொண்டு  போய் கடலில் இறக்கப்பட்டபோது பெடியன்கள் கரகோசம் செய்தார்கள்.  கையோடு கொண்டுவந்த  பலகைகளை மரவேலை தெரிந்த ஒரு பெடியன் கம்பிச் சட்டத்தின்மேல் வைத்து கச்சிதமாகப் பொருத்தி விட்டான். அவன் சொல்லிக்கொடுத்தபடி  பெடியளும் உதவியாக இருந்ததால் வேலை  இரண்டு மணித்தியலத்தில் முடிந்தது..." (வேலிகள்; பக்கம் 90)

இவ்விதமாகத் தயாரிக்கப்பட்ட மிதவை சாதனை படைத்ததாக நாவலில் விபரிக்கப்பட்டிருகின்றது.

"அந்த மிதவை படைத்த சரித்திரம் பெரியது. சுயமூளையைப் பாவித்து தயாரிக்கப்பட்ட ஆமட் கார், ஹெலிகாப்டர், கிரனேட் , மோட்டார்கள், ஷெல்கள் .. இந்த வரிசையில் இதுவும் ஒன்று.  தமிழ் மக்கள் பெருமைப்படக் கூடிய விடயம்தான். .." (வேலிகள்; பக்கம் 90)

"அதிலே மினிபஸ், கார். ட்ராக்டர் போன்ற வாகனங்கள் இலகுவாக இடம் மாற்றப்பட்டன. கருவாட்டுச் சிப்பங்கள் வர்த்தக நோக்கில் தீவுப்பக்கமிருந்து கொண்டு வரப்பட்டன.." (வேலிகள்; பக்கம் 90)

இவ்விதமாக நாவல் இயக்கங்கள் ஒன்றுடனொன்று முட்டி மோதாமல் தமது பாதைகளில் இயங்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில் , ஒரு கடற்கரைக் கிராமமொன்றில் அன்றைய அரசியல் சூழல் ஏற்படுத்திய தாக்கங்களை விபரிக்கும் அதே சமயம் இயக்கச் செயற்பாடுகளை விபரிப்பதன் மூலம் அவற்றை ஆவணப்படுத்தவும் செய்கின்றது. அதே சமயம் அக்கிராமத்து மக்களின் வாழ்க்கையை, அங்கு இயங்கிக் கொண்டிருந்த வாசிகசாலைச் செயற்பாடுகளை இன்னுமொரு தளத்தில் நாவல் விபரித்தாலும், இந்நாவலின் முக்கியத்துவமே அராலித்துறைக்கு அனறைய அரசியல் சூழல் ஏற்படுத்திய தாக்கத்தையும், அங்கு அக்காலகட்டத்தில் இயங்கிய அமைப்புகளின் செயற்பாடுகளைப்பற்றியும் ஆவணப்படுத்தியதில்தான் இருக்கிறது. இன்னும் விரிவாக ஆவணப்படுத்தியிருக்கலாமென்ற எண்ணம் ஏற்பட்டாலும், ஓரளவாவது ஆவணப்படுத்தியிருப்பதில்தான் இந்ந நாவலின் முக்கியத்துவமே தங்கியிருக்கின்றது. அந்த வகையில் 'வெகுண்ட உள்ளங்கள்' அளவில் சிறுத்திருந்தாலும், கூறும் பொருளில் கனமானது; தவிர்க்க முடியாத படைப்புகளிலொன்று


55. தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!

இன்று , மார்ச் 26, அம்மாவின் நினைவு நாள். நவரத்தினம் டீச்சர் என்று அன்புடன் அவரது மாணவர்களாலும், 'மங்கை' என்று அவரது சிநேகிதிகளாலும் அன்புடன் அழைக்கப்பட்ட அவரது நினைவு நாள் என் சிந்தையில் அவருடன் கழித்த நாள்களை நினைவு கூர்ந்திட வைக்கின்றது. யாழ் இந்துக் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி, வவுனியா மகா வித்தியாலயம், அராலி இந்துக்கல்லூரி என அவர் ஆசிரியராகப் பணிபுரிந்த பாடசாலை மாணவர்களைத் தன் அன்பால், சிரிப்பால், மென்மையான அணுகுமுறையினால் கட்டிவைத்தவர் அவர். வாழ்நாளில் ஆத்திரப்பட்டுப் பேசி நான் பார்த்ததில்லை. சில சமயங்களில் குரலில் சிறிது கண்டிப்பைக் காட்ட முற்பட்டாலும் கூட அக்கண்டிப்பை அவரால் வெளிப்படுத்தவே முடிந்ததில்லை.

என் பால்யபருவத்தில் ஆரம்பத்திலிருந்து ஏழாம் வகுப்புவரை வவுனியா மகா வித்தியாலயத்தில் படித்த காலகட்டத்து நினைவுகள் அழியாத கோலங்கள். அதிகாலையிலேயே எழுந்து, காலைச்சாப்பாடு, மதியச்சாப்பாடு எல்லாம் தயாரித்து, மதிய உணவையும் பார்சல்களாகக் கட்டி அல்லது 'எவர்சில்வர்' தூக்கு பாத்திரத்திலிட்டு பாடசாலை அழைத்துச் செல்வார். குழந்தைகள் நாமும் குருமண்காட்டிலிருந்து பாடசாலைக்கு அவரணைப்பில் பின் தொடர்வோம்.

அதிகாலை நேரங்களில் ஸ்டேசன் 'றோட்டின்' ஒரு புறத்தே பசிய வயல்கள் காட்சியளித்தன. பச்சைக் கிளிகள், குக்குறுபான்கள், ஆலாக்கள், மைனாக்கள், காடைகள், சிட்டுக் குருவிகள், மாம்பழத்திகள், நீண்ட வாற் கொண்டை விரிச்சான் குருவிகள், நீர்க்காகங்கள், மணிப்புறாக்கள்,.. எனப்பல்வகைப்புள்ளினங்களின் மலிந்திருக்கும் வனப்பிரதேசங்கள் ஆங்காங்கே காணப்பட்டன. இயற்கையின் தாலாட்டில் எந்நேரமும் தூங்கிக் கிடக்கும் வன்னி மண்ணின் அதிகாலப்பொழுதுகளை எண்ணியதும் கூடவே அம்மாவுடன் பாடசாலைக்குச் சென்ற பருவங்கள் படர்ந்த நினைவுகள் , அவருடன் வாழ்ந்த அனுபவங்கள் சிந்தையில் படம் விரிக்கின்றன.

அவரது உலகமெல்லாம் பாடசாலையும் , குடும்பமும்தாம். அவற்றிலேயே அவர் இன்பமுற்றார். செல்லும் வழியில் அன்று வவுனியா எம்.பி.ஆகவிருந்த தா.சிவசிதம்பரத்தின் வீடிருந்தது. அதற்குப் பக்கத்தில் ஸ்டேசன் 'றோட்டி'ல் இராமச்சந்திரன் டீச்சர் வீடிருந்தது. அவர் ஒரு மொரிஸ் மைனர் கார் வைத்திருந்தார். சில சமயங்களில் அவருடன் அவர் காரில் பாடசாலை செல்வதுண்டு.

அவ்விதமாக அதிகாலைகளில் பாடசாலை நோக்கி ஸ்டேசன் வீதி வழியாகச் செல்லும் காலைப்பொழுதுகளில் எதிர்ப்புறமாக ஒருவர் மடித்துக் கட்டிய வேட்டியும், வெறும் தோளுமாக, வேப்பங்குச்சியால் பற்களை விளக்கியபடி வருவார். பார்த்தால் அசல் என்.எஸ்.கிருஷ்ணனைப்போலவே இருப்பார். அவரைப்பார்க்கும் நேரமெல்லாம் நான் அம்மாவிடம் 'என்.எஸ்.கிருஷ்ணன் வாறார்' என்று கூறுவேன். ஒருநாள் அம்மா அவரிடம் 'இவர் உங்களைப்பார்க்க என்.எஸ்.கிருஷ்ணனைப்போல இருக்குதாம் என்று கூறுகிறான்' என்று கூறி விட்டார். அதைக்கேட்டதும் பல்லை விளக்கியபடி வந்து கொண்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனின் 'வாயெல்லாம் பல்'. :-) இப்பொழுதும் நினைவில் பசுமையாக நினைவிலுள்ளது.

அவர் அன்னையாகவும், வவுனியா மகா வித்தியாலயத்தில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் என் புவியியல் ஆசிரியராகவும் விளங்கியவர். . அவ்வப்போது குட்டிக் கதைகள் சிலவற்றையும் பாடத்தின் இடை நடுவில் கூறிச் சிரிக்க வைத்து, மாணவர்களை உற்சாகப்படுத்திப் பாடத்தைத் தொடர்வார்.

சில சமயங்களில் பாடசாலையில் ஏதாவது நிகழ்வுகள் நடக்கும் சந்தர்ப்பங்களில் வீடு திரும்ப நேரமாகிவிடும். நகர் நேரத்துடனேயே இருண்டு விடும். வவுனியா மகாவித்தியாலயத்திலிருந்து குருமண்காடு வரை எம்மை அரவணைத்தபடி ' சிவசிவா' சிவசிவா என்ற முணுமுணுப்புடன் (அவர் தெய்வபக்தி மிக்கவர்) அழைத்துச் செல்வார். ஆங்காங்கே மாடுகள் சிலவற்றின் அசைபோடும் ஒலிகள் தவிர வேறெதுவுமற்ற நிலையில், 'ஸ்டேசன் றோடு' வழியாக மன்னார் றோடேறிக் குருமண்காட்டுப்பகுதியை வந்து சேர்வோம்.

வவுனியா மகா வித்தியாலயம் என்றதும் என் நினைவில் நிற்கும் இன்னுமொரு விடயம். ஒருமுறை (அறுபதுகளில்) அங்கு கலைவிழாவும் (கண்காட்சியுடன் கூடிய) இரண்டு மூன்று நாள்களாக நடைபெற்றது. அக்கலைவிழாவின் இறுதி நாளன்று அப்பொழுதுதான் மைதானத்தின் ஒரு புறத்தே இவ்விதமான நிகழ்வுகளை நடாத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த திறந்தவெளி மேடையில் நடைபெற்ற அரிச்சந்திரா நாடகம். நாடகத்தின் மயானக் காட்சியும் நடிகர்களின் உணர்ச்சிகரமான நடிப்பும் இன்னும் ஞாபகத்திலுள்ளன. அக்காலகட்டத்தில் மூன்று முறிப்பிலுள்ள பாடசாலையொன்றின் அதிபராக இளைஞரொருவர் பணியாற்றிக்கொண்டிருந்தார். ஆங்கிலப்பட்டதாரியான அவர் நீண்ட தலை முடி வளர்த்து ஹிப்பி போன்ற தோற்றத்தில் திரிவார். அவரை அடிக்கடி அக்காலகட்டத்தில் நகரில் காண்பதாலும், அக்கலைவிழாவிலும் கண்டதாலும் அக்கலைவிழாவைப்பற்றி எண்ணியதும் அவரது தோற்றமும் கூடவே ஞாபகத்துக்கு வந்து விடுவது வழக்கம். அக்கலைவிழாவில் ஆசிரியையான அம்மாவுக்கு முன்னர் மாணவனைப்போன்று பவ்வியமாக , மரியாதையுடன் அவர் சிறிது நேரம் கதைத்துக்கொண்டிருந்ததும் நினைவிலுள்ளது.

இன்னுமொரு விடயமும் எனக்கு அடிக்கடி ஞாபகம் வருவதுண்டு. பல்கலைக்கழக நாட்களில் சொல்லாமல் கொள்ளாமல் வீடு திரும்புவேன். அப்பொழுது அராலி வடக்கில் வசித்து வந்த காலம். அம்மா அராலி இந்துக்கல்லூரியில் படிப்பித்துக்கொண்டிருந்தார். எதிர்பாராமல் நான் வந்ததைக்கண்டதும் அவர் அடையும் மகிழ்ச்சியைப்பார்க்க வேண்டுமே.. அங்கிருக்கும் அடுத்த சில தினங்களும் எனக்குப்பிடித்த இட்லி, தோசையென்று ஆக்கிப்போட்டுத் திக்கு முக்காட வைத்து விடுவார். பின்னர் மீண்டும் அதிகாலையொன்றில் காலை யாழ்தேவியை எடுப்பதற்காக மீண்டும் பல்கலைக்கழகம் திரும்புவேன். அன்றும் அதிகாலை நேரத்துடன் எழுந்து வழியில் உண்பதற்காக உணவு வகைகளை ஆக்கிக் கட்டித்தருவார். வீட்டை விட்டு வெளியில் கால் வைக்கும்போது, பின்னால் கலங்கிய கண்களுடன் விடை தரும் அம்மாவின் முகத்தைப் பார்க்க முடியாமல் செல்வேன். எனக்குத்துணையாக பஸ் தரிப்பு வரை போடும் உணவுக்கு நன்றியாக வீட்டை அண்டி வாழும் ஞமலி (நாய்) துணைக்கு வரும். அந்த அதிகாலைக்கருக்கிருளில் தலை விரித்தாடிக்கொண்டிருப்பர் பனைப்பெண்கள். அந்த அதிகாலைகள் இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன.

முகநூல் என் பால்யபருவத்து நண்பர்கள் பலரை மீண்டும் என் வாழ்வில் இணைத்துள்ளது. அவர்களில் பலருக்கு நவரத்தினம் டீச்சரைத் தெரியும். பலர் அவருடனான தம் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்திருக்கின்றார்கள். அம்மாவின் நினைவு நாள் மீண்டும் அவரைப்பற்றிய பல நினைவுகளை நெஞ்சில சிறகடிக்க வைத்துவிட்டன. அவரது மறைவையொட்டி எழுதிய கவிதையுடன் இப்பதிவினை முடிக்கின்றேன்.

தாயே! தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!

தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!
உன்னிருப்பாலிருப்பின் மறுப்புதனை
உணர்த்தியெங்கு சென்றாய் ? தாயே!
எங்கு சென்றாய் ?
நினைவுக் கோளத்தினொரு
சித்தவிளையாட்டாய்
இருந்து நீ சென்றதெல்லாம்
அன்னையே! என்
எண்ணப் பறவைகளின் வெறும்
சிறகடிப்போ ? இருந்தவிருப்பை
இதுவரை நான் இவ்விதம்
உணர்ந்தேனா ? இருப்புணர்ந்து
புரிவதற்கு உன்னிருப்பேயொரு
காரணியாயமைந்த விந்தையென்னே!
உன்னிழல் தொடர்ந்து வரும்
குஞ்சுகளாய் வருமெமையரவணைத்தாய்.
காத்து நின்றாய்.
உணர்வெல்லாம் காற்றாக நீ போனதினால்
நனவாய்க் கனவாய் வந்து வந்து
மோதும் செயலென்னே!
என்றேனும் உனைப்பற்றி நீ எண்ணியதுண்டா ?
நாம் நன்றாயிருந்தாலது போதுமென
உன்பணிசெய்து கிடந்தாயே ?
தாயே!உனை நாமெங்கினிக் காண்போமோ ?
இங்கு நீ இருந்ததெல்லாம்,
இங்கு நீ நடந்ததெல்லாம்,
இங்கு நாம் திரிந்ததெல்லாம்
இருந்ததொரு இருப்போ ?
விரியும் வினாக்கள் விடைநாடிச்
சிறகடிக்கும் சிட்டுக்களாய்
சித்தவானினிலே.
விடை தெரியா விடைநாடும்
வினாக்கள் பல சுமந்து
ஒட்டகமாயிப் பாலையிலே
காலையும் மாலையுமாய்
பயணமின்னும் தொடருமோ ?
பயணத்தின் ஒளித்தெறிப்பெல்லாம்
கானற் காட்சியாய் கடந்ததுவோ ?
பாலையும் கானலோ ?
இப்பயணமும் கானலோ ?
இங்கு இப் பயணமும்
கானலோ ?
நெஞ்சிலுரமூட்டியெமை வளர்த்தாய் தாயே!
அஞ்சிடாதுளம் தந்தெமை வார்த்தாய்.
நீ இருந்ததெல்லாம் தாயே! வெறும் நிழலா ?
நீ இருந்ததெல்லாம் தாயே! வெறுங் கனவா ?
உன்னிருப்புமென்னிருப்பால் விளைந்ததொரு
பொய்யானதொரு மெய்யோ ? தாயே!
பொய்யானதொரு மெய்யோ ?
உனது சொல்லும் செயலும்
உணர்வும் பரிவும்
பரவிக்கிடக்கும் வெளிக்குள்
வெளியாய் பரவிக் கலந்தாய்.
மீண்டுமொருமுறை
'நான் ' 'ஏன் ' 'யார் ' என
ஆய்ந்திட வைத்துச் சென்றாய் ?
தாயே!
ஆயினுன் உயிரின் உறவின்
உதிரத் துளியாய் இன்னுமிங்கே
இருக்குமென் இருப்பில் நான்
உனைக் கண்டு தெளிவேன். அதனால்
உனைப் புரிந்தேனிந்த
உலகை அறிந்தேன். ஏன்
எனையும் தெரிந்தேன். என்
இருப்பில் இருந்த
உன்
இருப்பின் பொருள் உணர்ந்தேன்.
தாயே! பொருள் கண்டேன்.


56. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது! 

எழுத்தாளர் கோமகனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் இணைய இதழ் 'நடு'. இம்மாத 'நடு' இதழில் கவிஞர் திருமாவளவனைப்பற்றிய எனது நனவிடை தோய்தற் கட்டுரை வெளியாகியுள்ளது. கட்டுரை கீழே. -

எழுத்தாளர் திருமாவளவனை நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது அவரது உள்ளத்தைக் கவரும் புன்னகையுடன் கூடிய முகம். கனடாவில் அவ்வப்போது  கலை, இலக்கிய நிகழ்வுகளில் சந்திக்கும்போது என்னுடன் கலை, இலக்கியம் பற்றி உரையாடும் மிகச்சிலரில் எழுத்தாளர் திருமாவளவனும் ஒருவர். சில சமயங்களில் நான் அவரது கவிதைகள் சிலவற்றை விமர்சிக்கையில், அவற்றை ஒருவித புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டு தன் பதிற் கருத்தினை முன் வைக்கும் அவரது பாங்கு என்னைக் கவர்ந்ததொன்று. அவரைப்பற்றி எண்ணியதுமே அவருடன் சந்தித்த, உரையாடிய காட்சிகள் விரிகின்றன. அவரது எழுத்துகள் குறிப்பாகக் கவிதைகள் பற்றிய எண்ணங்கள் சிறகடிக்கின்றன.

புகலிடத் தமிழ்க்கவிஞர்களில் திருமாவளவன் முக்கியமானவர் மட்டுமல்லர் தனித்துவமானவரும் கூட. பொதுவாக நாடறிந்த கவிஞர்களெல்லாரும் அரச அடக்குமுறைகளைப்பற்றி, அரச மனித உரிமை மீறல்களைப்பற்றியே தம் கவனத்தைத்திருப்பியிருந்த சமயம், சிலர் மதில் மேற் பூனைகளாக உருமாறியிருந்த சமயம், அக்காலகட்டத்தில் அரச மனித உரிமை மீறல்களுக்கெதிராகத் தன் குரலை உயர்த்தி முன் வைத்த அதே சமயம் , விடுதலைப்புலிகளையும் துணிந்து விமர்சனத்துக்குள்ளாக்கியவர் அவர். விடுதலைப்போராட்டத்தில் அரச அடக்குமுறைகளுக்கெதிராக மட்டுமே குரல் கொடுக்க வேண்டுமென்று ஏனையவர்களெல்லாரும் அடக்கி வாசித்துக்கொண்டிருக்கையில் , திருமாவளவனின் குரல் தனித்தொலிக்கின்றது. அதுவே அவரது கவிதைகள் ஏனையவர்களின் கவிதைகளிலிருந்து வேறுபடுவதற்கு முக்கிய காரணம்.

திருமாவளவனின் கவிதைகள் இழந்த மண்ணைப்பற்றிய கழிவிரக்கத்தை வெளிப்படுத்துவன. இலங்கை அரசின் கொடிய அடக்குமுறைகளுக்கெதிரான எதிர்க்குரலாக ஒலித்தன. புகலிடத் தமிழர்களின் சமூக, பொருளியல் நெருக்கடிகளைப்பேசின. அதே சமயம் அக்காலகட்டத்தில் தேசிய விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தின. ஏனைய கவிஞர்கள் பலரிடமிருந்து கவிஞர் திருமாவளவன் வேறுபடும் இரண்டு முக்கிய விடயங்களாக அவரது விடுதலைப்புலிகளின் குழந்தைப்போராளிகள் பற்றிய கடும் விமர்சனத்தையும், புகலிடத்தமிழர்களின் நெருக்கடி மிகுந்த வாழ்வினை வெளிப்படுத்தும் போக்கினையும் குறிப்பிடலாம். உதாரணத்துக்குத் திருமாவளவனின் ‘நச்சுக்கொடி’ மற்றும் ‘ஷத்திரியம்’ ஆகிய இரு கவிதைகளையும்  சிறிது நோக்குவோம்.

‘நச்சுக்கொடி’

“அழு பெண்ணே அழு.
உன் ஒப்பாரியில்
ஏழு கடல்தாண்டி

எழுகிறது
என் செவியில்.”

“கண்மூடி விழிக்கு முன்னெழுந்த
கணப்பொழுதுள்
களத்தில் பாய்ந்து
வெடித்துச் சிதறி
காற்றில் கலந்து விட்டான்
உன் பாலன்.
கட்டிப்புரண்டு
கதறி அழுகின்றாய்
நீ



என்ன செய்வாய்.
வெடிவால் முளைக்கு முன்னர்
அழைத்து
மூளை நீக்கி
கபாலத்தைக் கோதாக்கி
சலவையிட்டு
துடைத்து
வெடிமருந்தை நிரப்பி
ஏவி விடும் கலையும்
மாவீரம் செய்கின்ற
வல்லமையும்
வாய்த்திருக்கு
அவர்க்கு.
அழு பெண்ணே!
அழு
மாவீரமென்று
சோகத்தை புதைத்து
வெதும்பத்  தெரியாத
பேதை நீ
அழு
உன் ஒப்பாரிப்பாடல்
எட்டுத்திக்கும்
ஒலிக்கட்டும்”

என்று முடியும்.

அக்காலகட்டத்தில் இதுபோல் குழந்தைகளைப் போராட்டத்துக்குப் பாவிப்பதைக் கடுமையாக எதிர்த்துத் தன் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருக்கின்றார் கவிஞர் திருமாவளவன். கவிஞனொருவனுக்கு இருக்க வேண்டிய நேர்மையும், தனக்குச் சரியென்று பட்டதை எடுத்தியம்பும் துணிவும் கவிஞரிடம் நிறையவேயுள்ளன. நமக்கேன் வம்பு என்று பெரும்பாலானவர்கள் மதிற் மேற் பூனைகளாக மாறியிருந்த காலகட்டத்தில், அவ்விதம் உரு மாறாமல் துணிச்சலுடன் அக்காலத்துக்கான தன் வரலாற்றுப்பங்களிப்பினைச் சரியாகவே செய்திருக்கின்றார் கவிஞர். வரலாறு அவரை இவ்விடயத்தில் நன்றியுடன் நினைவு கூரும்.

இன்னுமொரு கவிதை ‘ஷத்திரியம்’.  சாதி, மதம், மொழி,  இனம்  போன்ற முரண்பாடுகளைக் காரணமாக வைத்து உருவாகும்  போராட்டங்களில் அப்பாவி மக்கள் மேல் குண்டுகளை வெடித்துக் கொல்லும் செயற்பாடுகளைக் கடுமையாகக் கண்டிக்கும் கவிதை. உலகின் பல பாகங்களிலும், நம் நாட்டிலும் நடைபெற்ற ,நடைபெறுகின்ற இவ்வகையான செயற்பாடுகளுக்கெதிராகக் குரல் கொடுப்பவை கவிஞர் திருமாவளவனின் கவிதைகள்.

“எதுவாயிருந்தாலும் நேரம்
முக்கியம்
மனிதர் கூடும் நேரம்
இயக்கு
குண்டுப்பிண்டம் வெடிக்கட்டும்
பாலர் பெண்டிர் கர்ப்பிணியர்
வயோதிபர் பாவியர் வழிப்போக்கர்
குழந்தைகள்
குருதியில் குளி
குடித்து மகிழ்
நிணம் புசி”

இவ்விதம் கூறும் கவிதை

“எக்கணமும்
தூக்கம் மறந்திரு
மீளக் கிளம்ப வேண்டும்.
வேட்டையாடல்
சத்திரியர்க்கு அறம்”

என்று முடியும்.

ஒரு படைப்பாளியின் அநீதிக்கெதிரான ஆவேசமானது பக்கச்சார்பானதாக இருக்கக்கூடாது. குற்றம் குற்றமே என்று எடுத்துரைக்கும் நக்கீரத்தனம் அவரிடம் இருக்க வேண்டும். அந்நக்கீரக் குணம் கவிஞர் திருமாவளவனிடம் நிறையவேயுண்டு.

அடுத்து புகலிடத்தமிழர்களின் இருப்பின் வலியினை, இழந்த மண் மீதான கழிவிரக்கத்தினை, இழந்த மண்ணில் அரசினால் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த கொடிய அடக்குமுறைகளையெல்லாம் பாடுபொருளாக்கிச் சிறப்பான கவிதைகள் பலவற்றைக் கவிஞர் திருமாவளவன் படைத்திருக்கின்றார். அத்துடன் தனது கவிதைகள் பலவற்றில் இவர் பாவித்திருக்கும் சிறப்பான் படிமங்களும் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை. உதாரணத்துக்கு நூலின் தலைப்புக் கவிதையான ‘பனிவயல் உழவு’ கவிதையைக் குறிப்பிடலாம். அதில் வரும் பின்வரும் வரிகளை ஒரு கணம் நோக்குங்கள்:

“காமக்கிழத்தியென
இருளாடை களைந்து வெண்பனி
உள்ளாடையுள்
எடுப்பாய் உடல் வனப்பு காட்டும்
ரொறன்ரோ நகரி”
” உடல் தழுவிக்
காமக்கிறக்கத்தில்
சலனமற்றுக் கிடக்கும்
ஒன்ராரியோ நீர்வாவி
கட்டில் விளிம்பில்
விடிவிளக்கென
நாணிக்கிடப்பார் சூரியனார்”

இருளாடை கலைந்து, வெண்பனி உள்ளாடையுள் எடுப்பாய் தன் உடல் வனப்பினைக்காட்டும் பெண் ரொறன்ரோ நகரி. நகரைப்பெண்ணாக உருவகிப்பதால் நகரி என்கின்றார் கவிஞர். ரொறன்ரோ நகரைப்பெண்ணாக்கியிருப்பது நல்லதொரு படிமம். அடுத்து ‘ஒன்ராரியோ நீர்வாவி கட்டில் விளிம்பில்’ என்று ஒன்ராரியோ வாவியைக் கட்டிலாக்கியிருப்பார் கவிஞர். இதுவும் நல்லதோர் உருவகம்.; படிமம். அக்கட்டிலில் விடிவிளக்காகக் கிடப்பவர் சூரியனார். சூரியனை விடிவிளக்காக்கியிருப்பது சிறப்பான உருவகம்.. ஆனால் அவ்விதம் சூரியனைக் கட்டிலாக்கியிருப்பவர் சூரியனார் என்று சூரியனை ஆண் பாலாக்கியிருக்கின்றார் என்பது புரியவில்லை.

இக்கவிதையில் வரும் கீழ்வரும் வரிகளும்  எனக்குப் பிடித்த வரிகள்:

“துருவக் கொடுக்குளிரில்
அலைகின்ற சூரியன் நீ
ஆயுதந் துரத்த
நெடுந்துயர்  கடந்த
பரதேசி நான்
உனை யார் துரத்த
இங்கு வந்து அகதியானாய்?”

இங்கு கவிஞர் சூரியனை அகதியாக்கியுள்ளார். ஆயுதந்துரத்த நெடுந்துயர் கடந்து, துருவக்கொடுங்குளிரில் அலைகின்ற  பரதேசியான தன்னைப்போன்ற அகதியாகத் துருவக்கொடுங்குளிரில் அலையும் சூரியனையும் உருவகிக்கின்றார் கவிஞர். இங்குள்ள நெடுந்துயர் என்பது நெடுந்தூரம் என்பதன் தட்டச்சுப்பிழையாகவே எனக்குத் தென்படுகின்றது. இவ்விதமாக ரொறன்றொ நகரத்து அகதி வாழ்க்கை விபரிக்கும் கவிதை, இருப்பிற்காய் ஆலைகளில் கடுமுழைப்புக்குள் மூழ்கிய வாழ்க்கையையும் ‘மாலை எந்திரம் ,  பிழிந்து துப்பி விட,  உடல் மீளும்’ என்னும் வரிகள் மூலம் வெளிப்படுத்துகின்றது.

இழந்த மண் மீதான கழிவிரக்கம் இவரது கவிதைகள் பலவற்றில்  காணப்படுகின்றது. உதாரணங்களாகப்பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:

“என் குடில் இழந்து
பனி வயற் காட்டில்
குடி பெயர்ந்தேன்” ( ‘வாடாமல்லி -1’)

“காலக்கடல் அலையில்
கரைந்து போகிறது
கட்டிய வீடு
இன்று
நினைவுகள் மட்டும்
நெருஞ்சியாய்” (வாடாமல்லி –1)

“புலரிப் பொழுதில்
புறப்பட்ட பயணம்
கூடு
திரும்பவில்லை” (‘தேடுகை’)

“எப்போது
நான் வீடு சேர்வேன்?” (‘தேடுகை’)

“எல்லாம் இழந்தோம்
எல்லாமும் இழந்தோம்” (‘தீ’)

“வயல் வரப்பில்
வடலி வெளிகளில்
பூநாறிப் புதர்களில்
காணாமல் போனவர்கள்
நினைவு உறுத்தும்” (‘நுகத்தடி மனிதர்கள்’)

இவ்விதம் இவரது கவிதைகளில் இழந்த மண் மீதான கழிவிரக்கத்தை வெளிப்படுத்தும் வரிகளை எடுத்துக்காட்டலாம்.  அதே நேரம் அக்கவிதைகள் பல இழ்ந்த மண் மீதான் கழிவிரக்கத்தோடு , புகலிட வாழ்வின் வலிகளையும், இயல்பையும் விபரிக்கின்றன. உதாரணத்துக்கு மேலே குறிப்பிட்டுள்ள ‘நுகத்தடி மனிதர்கள்’ கவிதையினைக் குறிப்பிடலாம்.

இவை தவிர முதற் காதல் போன்ற தனிமனித உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகளையும் கவிஞர் படைத்துள்ளார். உதாரணத்துக்கு வாடாமல்லி -1, வாடாமல்லி – 2 மற்றும் வாடாமல்லி – 3 என்னும் தலைப்பிலான கவிதைகள் முதற்காதலின் வலியினை, நினைவுகளைச் சுமந்து வருகின்றன. முதற் காதலியைப்பற்றிய கவிஞரின் தேடலை விபரிக்கும் கவிதைக் காதலி எப்படியிருப்பாள் என்பது பற்றிய கற்பனையினையும் ஓட விடுகின்றது:

“புணரும் இரு கரு அரவென
புட்டம் தாண்டி நெளிந்த கூந்தல்
உதிர்ந்து நரைமேய்ந்து
விழி சூழ கருவளையம் படர்ந்து
ஊளைச்சதை தொங்க
தோல் செத்து
நிமிர்ந்த முலை தளர்ந்து
அவள்
அழகும் அடையாளங்களும்
வீழ்ந்து
அழிந்திருத்தல் கூடும்” (‘வாடாமல்லி -3’)

கவிஞர் திருமாவளவனை எண்ணும்போதெல்லாமென் நினைவில் தோன்றுமோர் இலக்கிய ஆளுமை கலை, இலக்கியத்திறனாய்வாளரான திரு.வெங்கட் சாமிநாதன் அவர்கள். கவிஞர் திருமாவளவன் கவிதைகள் மேல் மதிப்பும், அவர் மேல் அன்பும் வைத்திருந்தவர் வெங்கட் சாமிநாதன் அவர்கள். அவர் மறைந்தது கவிஞர் திருமாவளவனின் மறைவையடுத்த காலகட்டத்தில். திருமாவளவன் மறைந்தது அக்டோபர் 5, 2015. வெ.சா அவர்கள் மறைந்தது அக்டோபர் 20, 2015. கவிஞர் திருமாவளவன் மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த தகவலைப் ‘பதிவுகள்’ இதழில் பிரசுரித்தபோது, அதனைக்கண்டு மனம் வருந்து அவர் எனக்கு எழுதிய மின்னஞ்சல்களை இங்கு பதிவிடுவது முக்கியமென்று கருதுகின்றேன். வெ.சா அவர்களின் மறைவுக்குக் கவிஞர் திருமாவளவனின் மறைவும் ஒரு காரணமோ என்று நான் அடிக்கடி எண்ணுவதுண்டு. அவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல்களில் பின்வருமாறு எழுதியுள்ளார்:

Swaminathan Venkat < vswaminathan.venkat@gmail.com>
To: ngiri2704@rogers.com
Oct. 2, 2015 at 2:08 a.m.

இப்பொழுது தான் பதிவுகள் இணையத்தில் திருமாவளவனின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக, அவரால் யாரையும் அடையாளம் கூட காணமுடியாது இருப்பதாக ஒரு அன்பர் அவரை மருத்துவ நிலையத்தில் கண்டுவந்த செய்தியை எழுதியிருந்தார்.  இது பற்றி யாரோ முகநூலில் எழுதியிருப்பதாகவும் சொல்கிறார். மனதுக்கு மிக வேதனையாக இருக்கிறது. கனடா வந்ததிலிருந்து அவருடன் பழகி மிக நெருங்கிய நண்பருமானார். சில மாதங்களுக்குமுன் அவர் நோய்வாய்ப்பட்டதாகவும் பிறகு தேறிவிட்டதாகவும் எழுதியிருந்தார். பின் என்ன ஆயிற்று.  இப்போது பதிவில் வந்துள்ள செய்தியைப் பார்த்தால், அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆகிவிட்டது போல் அல்லவா இருகிறது.

எப்படி யாரைத்தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. கனடா அன்பர்களைத் தான் கேட்க முடியும். தேவகாந்தன் email  இப்போது சட்டென கிடைக்க மாட்டேன் என்கிறது. இப்போது ஜி ,மெயிலின் சிஸ்டம் மாறியிருப்பது தெரிகிறது. தேடுவது அவ்வளவு சுலபமாக இல்லை. உங்களில் யாருக்கும் அவரது  இப்போதைய உடல் நிலை தெரியுமா? யாரும் மருத்துவ நிலையத்தில் பார்த்தீர்களா?  சில மாதங்களாகிற்று அவரிடமிருந்து செய்தி வந்து. திடீரெனெ இப்படி ஒரு செய்தியா?

அவர் சீக்கிரம் உடல் குணம் அடைந்து, முன்னர் செய்தி தந்தது போல, “நான் தேறிவிட்டேன் என்று சொல்லவேண்டும். அவர்  சீக்கிரம் உடல் நலம் பெற என் பிரார்த்தனைகள்.

அன்புடன்,
வெ.சா.
( Venkat Swaminathan )
www.vesaamusings.blogspot.com

Swaminathan Venkat < vswaminathan.venkat@gmail.com>
To: ngiri2704@rogers.com
Oct. 4, 2015 at 3:23 a.m.

நன்றி, கிரிதரன். என்ன செய்வதென்று தெரியவில்லை. இம்மாதிரி செய்தி வரும் என்று யார் கண்டார்? பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? தெய்வத்திடம் நம்பிக்கை வைப்போம். மனம் செய்வதறியாது அலையாடுகிறது. அவர் மடிப்பாக்கம் வந்து சந்தித்த கணங்கள். அதிர்ச்சியும் வேதனையும் தான்…

( Venkat  Swaminathan )
www.vesaamusings.blogspot.com

அமரர் வெங்கட் சாமிநாதன் அவர்கள் கவிஞர் திருமாவளவன்  மேல் எவ்வளவு அன்பு வைத்திருந்தாரென்பதை எடுத்துக்காட்டவே இவற்றை இங்கு பதிவு செய்தேன். இவ்விதம் பதிவு செய்வதும் அவசியமென்றும் உணர்ந்தேன்.

“தமிழ் இலக்கியத்துக்கு, இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு , புகலிடத்தமிழ் இலக்கியத்துக்கு மற்றும் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ந்த முக்கிய படைப்பாளிகளில், கவிஞர்களிலொருவர் கவிஞர் திருமாவளவன். கூறு பொருளுக்காக, படிமச் சிறப்புக்காக, , பாவிக்கப்பட்டுள்ள மொழிக்காக அவரது கவிதைகள் எப்பொழுதும் நினைவு கூரப்படும். “

நன்றி: நடு இணைய இதழ் - http://www.naduweb.net/?p=9211&fbclid=IwAR1AYoMHPR8B5KB7OZYdHmxOImJthtkBCXNNUnaveyyURzE9mWwZik_RxZY

No comments:

ஜெயகாந்தன் நினைவாக.......

- எழுத்தாளர் ஜெயகாந்தனின் இளமைத்தோற்றம். - எழுத்தாளர் ஜெயகாந்தனின் பிறந்த தினம் ஏப்ரில் 24. எழுத்தாளர் ஜெயகாந்தன்  என் வாசிப்பனுவத்தில் மறக்...

பிரபலமான பதிவுகள்