ஒரு சில மாதங்கள் ஓடி மறைந்தன. இதற்கிடையில் பானுமதியும் மாதவனும் நெருங்கிய நண்பர்களாகி விட்டிருந்தனர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்கள் அருகிலிருந்த பூங்காவுக்குச் சென்று உரையாடுவதும், குரோசரி ஷொப்பிங் செய்வதற்காக இரு வாரத்துக்கொருமுறை செல்வதும், நூலகங்கள்செல்வதும், அவரவர் இருப்பிடங்களில் சந்தித்துக்கொள்வதும், இலக்கியம், அறிவியல் எனப் பல்வேறு விடயங்களைப் பற்றி உரையாடுவதுமெனப் பொழுதுகள் கழிந்துகொண்டிருந்தன. இவ்விதமானதொரு நாளில் அன்று அவள் அவனது அப்பார்ட்மென்ட்டிற்கு வேலை முடிந்ததும் வந்திருந்தாள். சிறிது களைப்பாகவிருந்தாள்.
"ஏன்ன பானுமதி, களைப்பாகவிருக்கிறீர்கள்? ' என்றான் மாதவன்.
"இன்று நாள் முழுவதும் ஒரே பிஸி. மீட்டிங், செர்வர் அப் கிரேடிங் என்று சரியான வேலை. அதுதான். வேறொன்றுமில்லை. " என்றாள் பானுமதி பதிலுக்கு. அத்துடன் அவள் ஏதோ நினைவுக்கு வந்தவளாக அவனை நோக்கிக் கேட்டாள்: "இப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது. மாது, உனக்கு லினக்ஸ் செர்வர் பற்றி நல்லாத்தெரியும்தானே. "