Wednesday, July 30, 2025

தொடர்கதை : நவீன விக்கிரமாதித்தன் (பாகம் இரண்டு) - வ.ந.கிரிதரன்


[பதிவுகள் இணைய இதழில் ஆரம்பித்திருக்கும் புதிய நாவலின் முதல் அத்தியாயம். ஏற்கனவே வெளியாகி , நூலுருப்பெற்ற 'நவீன விக்கிரமாதித்தன்' நாவலின் இரண்டாம் பகுதி.]


ஓவியம் AI

அத்தியாயம் ஒன்று - தழுவல் பற்றிய தர்க்கமொன்று!


இருண்டிருக்கின்றது. வீட்டின் முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு மேலே விரிந்து கிடக்கும் விண்ணைப் பார்த்தவாறிருக்கின்றேன். இத்தனை வருடங்களில் எத்தனை தடவைகள் இவ்விதம் பார்த்திருப்பேன். ஒரு முறையேனும் அலுக்காத, சலிப்படைய வைக்காத  ஒன்றென்று இருக்குமென்றால் , என்னைப்பொறுத்தவரையில் அது இதுதான். இவ்விதம் விரிந்து கிடக்கும் பேரண்டத்தை பார்த்தபடி, சிந்தனையில் ஆழ்ந்தபடி , மெய்ம்மறந்து இருப்பதைப்போல் வேறோர் இன்பம்  எதுவும் இல்லையென்பேன். வழக்கம்போல் சிந்தனை நதி பெருவெள்ளமாகச் சீறிப்பாய்கின்றது. எதற்காக? எதற்காக? எதற்காக? அர்த்தமென்ன? ஏன்? ஏன்? ஏன்?  இதற்கு, இந்த வினாவுக்கு ஒருபோதுமே விடை கிடைக்கப்போவதில்லை. விடை கிடைக்காத வினா என்பது தெரிந்துதானிருக்கின்றது. இருந்தாலும் வினாக்கள் எழாமல் இருப்பதில்லை.  சிந்தித்தலென்னும் செயல் இருக்கும் வரையில் , அதற்கு ஒருபோதுமே முடிவில்லை. 

கோடி,கோடிக் கணக்கில் கொட்டிக் கிடக்கும் , என்ணற்ற சுடர்களில் மனது மூழ்கிப்போய்க் கிடக்கின்றது. அத்தனையும் சுடர்களா? அவற்றில் கோடிக்கணக்கில் சுடர்களைக் கொண்ட நட்சத்திரக் கூட்டங்களும் இருக்கலாம். இருக்கும். ஆயிரக்கணக்கான, மில்லியன் கணக்கான, பில்லியன் கணக்கான ஒளியாண்டுத் தொலைவுகள் பிரமிக்க வைக்கின்றன. ஏன்! எதற்காக? ஏன்? 

இவ்விதமான  சமயங்களில் எனக்குத் துணையாக ,மனோரஞ்சிதமும் வந்து விடுவாள். வந்தாள். வந்தவள் என்னுடன் நெருக்கியபடி, அருகில் தோளணைத்தாள். விண்ணைப்பார்த்தாள். விண்ணில் கொட்டிக்கிடக்கும் நட்சத்திரக் கூட்டங்களைப் பார்த்தாள். அப்பொழுது  அவள் 'ஷாம்பு' போட்டு, முழுகி வந்திருந்தாள். ஷாம்பு மணம் நாசியில் மெல்ல நுழைந்தது. என் கன்னத்தை ஒரு முறை செல்லமாகத்  தட்டினாள்.  அவளை ஒரு கணம் உற்று நோக்கினேன். இவள் மட்டும் துணையாக இல்லையென்றால்.. அவளற்ற இருப்பை ஒரு கணம் மனம் எண்ணிப்பார்த்தது. என் எண்ண ஓட்டத்தை அவள் புரிந்து கொண்டாள் என்பதை உணர்ந்தேன். சில விடயங்களை உள்ளுணர்வு மூலம் உணர முடிகின்றது. உள்ளுணர்வு மூலம் இவ்விதம் உணர முடிவதற்கு அடிப்படைக் காரணம் என்னவாக இருக்க முடியுமென்று இன்னுமொரு கிளை பிரித்துச் சிந்தனை நதி ஓடியது.

Tuesday, July 29, 2025

நடிகரும், எழுத்தாளரும், பேச்சாளருமான தமிழ் அரசியல்வாதி 'சொல்லின் செல்வர்' செ.இராசதுரை! - வ.ந.கிரிதரன் -


இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியமானதோர் ஆளுமை மட்டக்களப்பு மாநகர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக , முப்பத்து மூன்று வருடங்களிருந்த 'சொல்லின் செல்வர்' என்றழைக்கப்படும்  செல்லையா இராசதுரை அவர்கள். அவரது தொண்ணூற்றியெட்டாவது பிறந்தநாள் (ஜூலை 26)  அண்மையில் கொண்டாடப்பட்டது. அதனையொட்டிப் பேராசிரியர் சி.மெளனகுரு அவர்கள் மனத்தைத் தொடும் முகநூற் பதிவொன்றினை அண்மையிலிட்டிருந்தார்.அதற்கான இணைப்பு

செ.இராசதுரை அவர்கள் வசீகரத்தோற்றம் மிக்கவர். நான் தமிழரசுக் கட்சி பற்றி அறிந்தபோது என்னைக் கவர்ந்த தமிழ் அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர். அப்பாவுக்கு அவர் மேல் மிகுந்த மதிப்பு இருந்தது. தமிழகத்தில் திமுக அரசியல்வாதிகள் போல், இலங்கையில் சிறப்பான மொழியில் உரையாற்றுவதில் முதலிடத்தில் இருப்பவர் இராசதுரை அவர்கள் என்பார்.

யுத்தத்தின் கோர விளைவுகளை வெளிப்படுத்தும் 'இரு பெண்கள்' (Two Women).


இத்தாலிய நடிகையான சோபியா லோரென் ஹாலிவூட்டினையும் கலக்கிய சிறந்த நடிகைகளிலொருவர். சோபியா லோரேன் என்றதும் அவரது கவர்ச்சிகரமான உடல்வாகினைத்தான் பலரும் முதலில் நினைவுக்குக்கொண்டு வருவார்கள். சோபியா லோரேன் அழகான உடல்வாகுகொண்டவர் மட்டுமல்லர் அற்புதமான நடிகைகளிலுமொருவர். முதல் முதலாக ஆஸ்காரின் சிறந்த நடிகைக்கான விருது ஆங்கிலமொழியிலில்லாத ஒரு திரைப்பபடத்தில் நடித்த நடிகையொருவருக்காகக் கொடுக்கப்பட்டதென்றால், அவ்விருதினைப் பெற்ற நடிகை சோபியா லோரென்தான். புகழ்பெற்ற இத்தாலிய நாவலாசிரியர்களிலொருவரான அல்பேர்ட்டோ மொராவியோ (இவரது படைப்புகளில் பாலியல் சம்பவங்கள் சிறிது தூக்கலாகவிருக்கும். அதனால் சிலர் எஸ்.பொ.வை இவருடன் ஒப்பிடுவதுமுண்டு) எழுதிய நாவலான 'இரு பெண்கள்' (Two Women) என்னும் நாவலினை மையமாக வைத்து உருவான Two Women கறுப்பு/வெள்ளைத் திரைப்படம் 22 சர்வதேச விருதுகளைச் சோபியா லோரென்னுக்கு அள்ளிக்கொடுத்த திரைப்படம்.. போர் மக்கள் மேல் ஏற்படுத்திய விளைவுகளைப் பார்ப்பவர் நெஞ்சினை அதிரவைக்கும் வகையில் விபரிக்கும் திரைப்படமிது. 'விட்டோரியோ டி சிகா'வின் (Vittorio De Sica) இயக்கத்தில் வெளியான ( Vittorio De Sica புகழ்பெற்ற இத்தாலியத் திரைப்பட இயக்குநர். இவரது திரைப்படங்கள் நான்கு தடவைகள் ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளன. புகழ்பெற்ற The Bicycle Thief திரைப்படத்தினை இயக்கியவர் இவர்தான்.) இத்திரைப்படத்தின் கதைச் சுருக்கமிதுதான்:

Monday, July 28, 2025

எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிப் பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள சிறுகதை 'கிளியோபாட்ரவின் பிரதிப் படைப்பு!' (ஓவியம் - AI) - வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிப் பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள சிறுகதை 'கிளியோபாட்ரவின் பிரதிப் படைப்பு!'  (ஓவியம் - AI)

கூறும் பொருள் , பாத்திரப் படைப்பு காரணமாக  இக்கதை முக்கியத்துவம் பெறுகிறது. திட்டமிட்டு, கச்சிதமாகப் பின்னப்பட்ட  கதை. இந்தியப் பெண்ணுக்கும், வெள்ளையின ஆணுக்கும் , ‘இன் விட்ரோ’ கருத்தரித்தல் (IVF) முறையில் பிறந்த பெண் குழந்தை கிளியோ.  மரபு அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணி புரிபவன் அக்கணவன். அவனது தந்தை தொல்லியல் அறிஞர்.  

   இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -

கதையின் சாரம் இதுதான்: கிளியோ ஒருவேளை எகிப்திய அழகி கிளியோபாட்ராவின் மரபணு மூலம் உருவாக்கப்பட்டவளோ? அக்கணவனின் தந்தை தொல்லியல் அறிஞர் என்பதால், அவரால் அந்த மரபணு சேகரிக்கப்பட்டிருந்ததோ?  இவ்விதமான சந்தேகம் நியாயமானதுதான் என்பதை நிரூபிக்கும் வகையில், தகுந்த ஆதாரங்களுடன் கதை பின்னப்பட்டுள்ளது.  கிளியோவும் சமுதாயப் பிரக்ஞை மிக்க பெண்ணாக உருவாகியிருக்கின்றாள். இயற்கையை அழிக்கும் அரசியல்வாதிகளைக் கடுமையாக எதிர்ப்பவள். அதன் காரணமாக அவள் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கத்தான் வீட்டைத்துறந்து பறந்தாளோ என்னுன் கேள்வியுடன் கதை முடிகின்றது.

கதையில் ஆங்காங்கே சிந்திக்கத்தூண்டும் பகுதிகளும்  கலந்திருக்கின்றன. உதாரணத்துக்கு ஒன்று; 

 "அவர்கள் இருவரும் பல விடயங்களை அறியும் ஆவலுடன் பல நாடுகளுக்கு ஒன்றாகச் சென்று பயணித்தார்கள். கல்பனாவின் தாய்நாடான இந்தியாவுக்கு அடிக்கடி சென்றார்கள். கல்பனாவின் தாய் சொல்லிய இதிகாச புராண கதைகளையும் அதில் சொல்லப் பட்டிருக்கும் மாயா ஜாலக் கதைகளையும கேட்டு வளர்ந்தவள் கல்பனா.ஆனால் மார்க் தன் மனைவியுடன் இந்தியா சென்றபோது அக்கதைகளில் பெண்கள் நடத்தப்படும விதங்களையும் அத்துடன் இந்தியக் கடவுளர் பலர் போர் ஆயதங்களுடனிருப்பதையும் விமர்சித்தபோது ‘தமிழர் நாகரிகச் சரித்திரம் சமத்துவத்தை அடிப்படையாகக்கொண்டது. ஆனால் காலக்கிரமத்தில் சமயம் என்ற பெயரில் மனிதமற்ற முறையில் சாதி மத பேதங்கள் உண்டாக்கப் பட்டு இந்திய மக்கள் ஒருநாளும் ஒருத்தரை ஒருத்தர் சரிசமமாகப் பார்க்க முடியாத மாதிரி சமூக அமைப்பை மாற்றி அமைத்திருக்கிறது’ என்ற விளக்கத்தைச் சொன்னாள கல்பனா."

இக்கதையை  இயக்குநர் சங்கர் வாசித்தால் , 'எந்திரன்' திரைப்படத்தைப் போல் 'கிளியோபாட்ரா' என்னும் பெயரில் , பிருமாண்டமான, தொழில் நுட்பங்கள் மிளிரும் திரைப்படமொன்றினைத் தயாரிக்ககூடும், அதற்கேற்பக் கச்சிதமாகப் பின்னப்பட்ட கதை.

சிறுகதை: கிளியோபாட்ரவின் பிரதிப் படைப்பு!  -    இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -

கிளியோளியோ அவளின் அறையில் இல்லை. அவள் வீட்டில் இருந்தால் ஜாஸ் இசை இருக்கும் என்பதால் அந்த இசையற்ற மௌனம் அசாதாரணமானது. கிளியோ ஜாஸ் இசையை நேசிக்கிறாள். ‘இது மனித குலத்தின் ஆன்மாவின் ஒலி’ என்கிறாள். அவளின் அறை காலியாக உள்ளது அவளுடைய பயணப் பை அங்கு இல்லை. அவளை இழந்த உணர்வு அவளின் வளர்ப்புத் தாயான ஸாராவுக்கு ஏற்படுகிறது.

Saturday, July 26, 2025

கல்பனாவின் 'யுகசந்தி'

 

'Veryrare Book' என்னும் முகநூலைத் தற்செயலாகப் பார்த்தேன். உண்மையிலேயே அரிய நூல்கள்,  வெகுசன இதழ்த்தொடர்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய பக்கமிது. இதற்கான இணைய இணைப்பு - https://www.facebook.com/veryrare.book

என் பால்ய பருவத்தில் , நான் வாசிக்கத்தொடங்கியிருந்த சமயம் , கலைமகள் இதழில் ஒரு தொடர்கதை வெளியானது. அதனை எழுதியவர் எழுத்தாளர் கல்பனா. அக்காலகட்டத்தில் கல்கியில் ஓவியர் கல்பனா என்பவர் ஓவியங்கள் தீட்டிக்கொண்டிருந்தார். ஆனால் இவர் கதைகள் எழுதுபவர். இவர் பெண்ணா அல்லது பெண்ணின் பெயரில் எழுதிய ஆணா? தெரியவில்லை. இவரைப்பற்றிய தகவல்களும் இணையுத்தில் கிடைக்கவில்லை. 

 ஆனால், இவரது 'யுகசந்தி' தொடர்கதை மட்டும் நினைவிலுள்ளது. அத்தொடரை நான் முழுமையாக வாசிக்கவில்லை. ஆனால் முதலாவது அத்தியாயம் ஆற்றங்கரைக் காட்சியுடன் அல்லது வெள்ளப்பெருகுடன் ஆரம்பமானதாக நினைவிலுள்ளது. அத்தொடரைப் பின்னர் வாசிக்க வேண்டுமென்று எண்ணியிருந்தேன், ஆனால் வாசிக்கவில்லை.

Friday, July 25, 2025

கவிச்சக்கரவர்த்தியும், கவியரசரும்!


'இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
கால் வண்ணம் இங்குக் கண்டேன்"


இப்பாடல் கம்பரின் கம்பராமாயணத்தில் வரும் பாடல். இராமனின் கால் பட்டு சாபம் நீங்குகின்றாள் அகலிகை. இதை விசுவாமித்திரர் விபரிப்பதாகக் கம்பர் இப்பாடலை எழுதியிருப்பார்.   

இப்பாடலில் வண்ணம் என்னும் சொல் எத்தனை அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.  

கம்பரின் கவித்துவத்தை வெளிப்படுத்தும் கவிதையிது. கருமை வண்ணமுடைய தாடகையுடனான போரில் , அதாவது 'மை வண்ணத்து அரக்கி போரில்' மழை தரும் கார்மேக வண்ணமுடைய இராமனின் வில்லை இயக்கும் கை வண்ணம் கண்டேன். இங்கு கல்லை மிதித்து அகலிகையின் சாபத்தை நீக்கிய இராமனின் கால் வண்ணம் கண்டேன் என்கின்றார் விசுவாமித்திரர் கூற்றாகக் கம்பர்.  

இங்கு கம்பர் கரிய நிறம் வாய்ந்த தாடகையின் அழகைக் குறைத்து மதிப்பதற்காக மை வண்ணம் அரக்கி என்கின்றார் கம்பர். இதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அவ்விதமான புரிதல் இன்றுதானே எமக்கு வந்திருக்கின்றது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இந்தப் புரிதல் இருந்திருக்காது. அதனால் கம்பரைக் குறை கூற முடியாது.



இவ்விதம் வண்ணம் என்னும் சொல்லைப் பலமுறை பாவித்துக் கவிஞர் கண்ணதாசன் அற்புதமானதொரு பாடலை எழுதியிருக்கின்றார். அது 'பாசம்' திரைப்படத்தில் வரும் 'பால் வண்ணம் பருவம்  கம்பர் தன் பாடலில் எட்டு முறை வண்ணத்தைப் பாவித்திருந்தால் , கவிஞர் கண்ணதாசன் பன்னிரண்டு முறை பாவித்திருப்பார். 

இப்பாடலின் இன்னுமொரு சிறப்பு. மெல்லிசை மன்னர்கள் எம்ஜிஆருக்குப் பி.பி.ஶ்ரீனிவாசின் குரலைப்பாவித்திருப்பதுதான். காட்சியின் சூழலுக்கு மென்மையான பாடகர் பி.பி.ஶ்ரீனிவாசின் குரல் பொருந்தும் என்பதால் பாவித்திருக்க வேண்டுமென்று கருதுகின்றேன். உண்மையில் நன்கு பொருந்தத்தான் செய்கிறது.  பி.பி.,ஶ்ரீனிவாஸ், பி.சுசீலா இருவரும் மிகவும் சிறப்பாக இப்பாடலைப் பாடியிருப்பார்கள்.

பாடலைக் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=qYuON1qbTCE&list=RDqYuON1qbTCE&start_radio=1 

Wednesday, July 23, 2025

83 ஜூலை இனப்படுகொலை நினைவுகள்.... - வ.ந.கிரிதரன் -

[ஓவிய உதவி -  நன்றி The Nation.] 

83 ஜூலை இனப்படுகொலை  இலங்கையின் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனை. இலங்கையை  26 வருடங்கள் சமூக யுத்ததில் மூழ்கிப்போக வழி வகுத்த இனப்படுகொலையது.  போர் நாட்டுக்கு மிகப்பெரிய அழிவைத்தந்தது. இரு பக்கத்திலும் படையினர், விடுதலைப்போராளிகள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர். பொதுமக்கள் இலட்சக்கணக்கில் உயிரிழந்தனர்.  இலங்கைத் தமிழர் பிரச்சினையை உபகண்ட, சர்வதேசப் பிரச்சினைகளிலொன்றாக உருமாற்றியது கறுப்பு ஜூலையே. கறுப்பு ஜூலையை மறந்து விட்டால் மீண்டும் நாட்டில் இன்னுமொரு கறுப்பு ஜூலை ஏற்படும் நிலை ஏற்படலாம். மீண்டும் நாடு யுத்தத்துக்குள் மூழ்கி விடலாம். 

அந்நிலை மீண்டும் ஏற்படக் கூடாதென்றால் நாட்டில் சகல இன மக்களும் சகல உரிமைகளுடனும் வாழும் நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைத்தின மக்களும் எவ்வித அச்சமுமற்று, அன்புடன், இணைந்து வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும். இனங்களுக்கிடையில் சந்தேகங்களும் , அச்சமும் ஏற்படும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் நிறுத்தப்பட  வேண்டும். 

"கறுப்பு ஜூலையை நாம் நினைவு கூர வேண்டும். ஏனென்றால் மீண்டுமொரு தடவை அவ்விதமான கறுப்பு ஜூலை தோன்றக்கூடாதென்பதற்காக" என்னும் கருத்தை மையமாக வைத்து ஊடகவியலாளர் டி.பி,எஸ்.ஜெயராஜ் நல்லதொரு ஆங்கிலக் கட்டுரையினை எழுதியுள்ளார். அக்கட்டுரை கறுப்பு ஜூலையின் மூலக் காரணிகள், அதனை நடத்தியவர்கள், ஏற்பட்ட அழிவுகள் எனப் பலதரப்பட்ட விடயங்களை விரிவாக ஆராய்கின்றது.  

ஆம்! 83 ஜூலை இனப்படுகொலையை நாம் மீண்டும் மீண்டும் நினைவு கூர வேண்டும். நினைவு கூர்வோம். மீண்டுமொரு 83 ஜூலை இனப்படுகொலை போன்றதொரு நிகழ்வு  நிகழாதிருப்பதற்காக, புரியப்பட்ட   அநீதிக்கு நீதி கிடைப்பதற்காக, மீண்டும் மீண்டும் நினைவு கூர்வோம்.

இங்கு கடந்த ஆண்டுகளில் நான் எழுதிய 83 ஜூலை இனப்படுகொலை பற்றிய முகநூல்  நினைவுக்குறிப்புகளிலிருந்து சில குறிப்புகளை (சில எதிர்வினைகளையும்)   இணைத்திருக்கின்றேன்.  இவற்றில் நினைவு கூரப்படுபவையெல்லாம் ,  நினைக்கும்போதெல்லாம் என் நினைவில் தோன்றுபவை. உங்கள் நினைவுகளிலும்தாம்.

Tuesday, July 22, 2025

செக்கு மூலம் எண்ணெய்!


செக்கிழுத்த செம்மல் என்பர் 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரப்பிள்ளையை விபரிக்கையில். காரணம் அவரது ஆங்கிலேயருக்கு எதிரான வர்த்தக , விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளால் அவரைச் சிறையில் அடைத்தது ஆங்கிலேயரின் ஆதிக்க அரசு. சிறையில் செக்கிழுக்க வைத்தது. அதன் காரணமாகவே அவரைச் செக்கிழுத்த செம்மல் என்றும் அழைப்பர். 
 
பலருக்குச் செக்கு என்றால் எப்படியிருக்கும் என்பது தெரியாது, ஆனால் அது பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களுக்கு இப்பதிவு சிறிது விளக்கத்தைத் தருமென்று நம்புகின்றேன். முதலில் செக்கு பற்றித் 'தகவல் திரட்டி' என்னும் முகநூற் பக்கக்குறிப்பைக் கீழே தருகின்றேன்:

Monday, July 21, 2025

நடிகர் திலகத்தின் நினைவாக...


நான் ஆரம்பத்திலிருந்தே வாத்தியாரின் இரசிகன். ஆனாலும்  நடிகர் திலகத்தின் படங்களைப்  பார்ப்பதை என்னால் தவிர்க்க முடிந்ததில்லை. காரணம் அவரது நடிப்பு.   அவரது நடிப்பு மிகை நடிப்பென்றால் அதற்குக் காரணம் அக்காலகட்டத்தின் தேவையாக அது இருந்ததுதான். அதனால்தான் அவர் அப்படி நடித்தார். திரைப்படங்கள் என்பவை கலைக்காக மட்டும் எடுக்கப்படுவதில்லை. வர்த்தகமே அதன் முக்கிய  அம்சம்.  பெரும்பான்மையான இரசிகர்கள் விரும்பியது வசனங்களையும்,  வசனங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளுடன் கூடிய நடிப்பையும்தாம்  நடிகர் திலகம் சிறந்த நடிகர் அதனால் அவரால் அக்கால இரசிகர்கள் விரும்பியதைத் தன் நடிப்பால் கொடுக்க  முடிந்தது.   அக்காலகட்டத்தில் என் அம்மா, அப்பாவுக்கு மிகவும் பிடித்த  திரைப்பட ஜோடி சிவாஜி _ பத்மினிதான்.

தமிழ்ச் சினிமா பாட்டிலிருந்து வசனத்துக்கு மாறிக்கொண்டிருந்த வேளையில் அவ்வுலகில் வந்து குதித்தவர்  விழுப்புரம் சின்னையா கணேசன் (சிவாஜி  கணேசன்).  சமுதாயச் சீர்கேடுகளைச் சுட்டெரிப்பதை மையமாகக் கொண்ட திராவிடர்  கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை  சினிமாவைத் தம் கட்சிகளின் பிரச்சாரத்துக்குப் பாவிக்கத்தொடங்கிய காலகட்டத்தில் வெளியான திரைப்படம்  கலைஞரின் வசனத்தில் வெளியான 'பராசக்தி'. அதில் முக்கிய கதாநாயகனாக நடித்ததன் மூலம் , ஒரேயுடியாக உச்ச நட்சத்திரமாகியவர் நடிகர் திலகம்.  அவரே அத்தகையதொரு வெற்றியை எதிர்பார்த்திருக்க மாட்டார். தமிழகத்தில் பல இடங்களில் வெள்ளி விழாக் கொண்டாடிய 'பராசகதி' இலங்கையில் 240 நாட்களைக் கடந்து ஓடியது.

Sunday, July 20, 2025

நடிகரும், பாடகருமான மு.க.முத்து மறைந்தார்!


கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவின் மறைவுச் செய்தியைத் தாங்கி வந்தது முகநூல். இவர் கலைஞருக்கும், முதல் மனைவி பத்மாவதிக்கும் பிறந்த முதலாவது குழந்தையே மு.க.முத்து. பத்மாவதி பிரபல பாடகர் சி.எஸ்.ஜெயராமனின் சகோதரி. மு.க.முத்துவின் திரைப்படங்களை நான் பார்த்ததில்லை,. ஆனால் அவரது திரைப்படப்பாடல்களை நான் இரசிப்பவன். குறிப்பாக அவரே பாடி நடித்த 'சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் பேருங்க' பாடலைக் கூறலாம்.


கலைஞரின் மகனாக நான் முதலில் அறிந்தது மு.க.முத்துவையே. குமுதத்தில் கலைஞரின் 'ரோமாபுரிப்பாண்டியன்' தொடராக வெளியான காலத்தில் , அல்லது அதற்குச் சிறிது முன்பாக அல்லது பின்பாக , ஒரு தடவை பிரபலங்களின் குழந்தைகள் எழுதிய ஓரிரு பக்கக் கதைகளை வெளியிட்டிருந்தார்கள். கட்டுரைகளாகவுமிருக்கலாம். சரியாக நினைவிலில்லை. அவ்விதம் ஒரு கதையையோ அல்லது கட்டுரையையோ எழுதியிருந்தார் சிறுவனான மு.க.முத்து.

Monday, July 14, 2025

'அபிநய சரஸ்வதி' சரோஜாதேவி மறைந்தார்! ஆழ்ந்த இரங்கல்!


நடிகை சரோஜாதேவியின் மறைவுச் செய்தியினை இணையம் தாங்கி வந்தது. ஆழ்ந்த இரங்கல். கலைஞர்கள் அழிவதில்லை. அவர்கள்தம் கலைகளூடு நிலைத்து நிற்பார்கள். சரோஜாதேவியும் அவ்விதமே நிலைத்து நிற்பார்.


என் அபிமான நடிகையர்களில் ஒருவர் அவர். நான் நினைவு தெரிந்து முதல் பார்த்த திரைப்படம் எம்ஜிஆர், சரோஜாதேவி இணைந்து நடித்த திரைப்படமான 'எங்க வீட்டுப் பிள்ளை'. அதன் பிறகு அவர் எம்ஜிஆருடன் இணைந்து நடித்த சில திரைப்படங்களே வெளிவந்தன. அவற்றில் என்னைக் கவர்ந்தது அன்பே வா. எம்ஜிஆர் , சரோஜாதேவி காலம் மறைந்து , எம்ஜிஆர் , ஜெயலலிதா காலம் தமிழ்த் திரையுலகில் கோலோச்சத்தொடங்கி விட்டது. ஆனால் அதுதான் சரோஜாதேவியின் நடிப்புக்கு இடம் கொடுத்த பல திரைப்படங்கள் வெளியாகக் காரணமாக அமைந்தது. தாமரை நெஞ்சம், குலவிளக்கு, பணமா பாசமா ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

நானோ எம்ஜிஆரின் இரசிகன். எம்ஜிஆர் , சரோஜாதேவி இணைந்து நடித்த, 1958 - 1965 காலப்பகுதியில் வெளியான பல திரைப்படங்கள் மீள் வெளியீடுகளாக வெளியானபோது அவற்றைச் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் பார்த்தேன். அக்காலகட்டத்து எம்ஜிஆர்,சரோஜாதேவி படப்பாடல்கள் பல டி.எம்.எஸ் , பி.சுசீலா இணைந்து பாடி மிகவும் புகழ் பெற்ற பாடல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் மறக்க முடியாத இன்னுமொரு விடயம் - 'எங்க வீட்டுப் பிள்ளை' திரையிடப்பட்டபோது அதற்காக இலங்கைக்கு எம்ஜிஆருடன் சரோஜாதேவியும் வந்திருந்தார். அவர்கள் சென்றவிடமெல்லாம் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வரவேற்றார்கள். பழைய பத்திரிகைகள், சஞ்சிகைகளைத்தேடிப் பார்த்தால் எத்தகைய வரவேற்பு என்பதை அறிந்துகொள்ளலாம்.

அவர் நினைவாக , எனக்கு பிடித்த அவர் நடிப்பில் உருவான திரைப்படப் பாடல்களில் சில:

Friday, July 11, 2025

மறக்க முடியாத எழுத்துலக ஆளுமையாளர்களில் ஒருவர் இந்திரா பார்த்தசாரதி! - வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர்  இந்திரா பார்த்தசாரதிக்குப் பிறந்த நாள் ஜூலை 10.  என் வாசிப்பனுவத்தில் மறக்க முடியாத எழுத்தாளுமைகளில் ஒருவர் இ.பா. தனது மனைவி இந்திராவின் பெயரையும் பாவித்து, இந்திரா பார்த்தசாரதி என்னும் பெயரில் எழுதுபவர். எழுத்தாளர் ரங்கராஜன் தன்  மனைவி சுஜாதா என்னும் பெயரில் தமிழ்  இலக்கிய உலகில் தடம் பதித்தது நினைவுக்கு வருகின்றது.  

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எனக்கு  முதலில் அறிமுகமானபோது நான் ஒருவித வெறியுடன் வாசிப்பில் மூழ்கிக்கிடந்த பால்ய  பருவத்தினன். சொன்னால் நம்ப மாட்டீர்கள் அப்போது எனக்கு வயது பதினொன்றுதான். பத்து வயதிலேயே கல்கியில், விகடனில், குமுதத்தில், கலைமகளில், தினமணிக்கதிரி தொடர்களாக வெளியான தொடர்கதைகளை, சிறுகதைகளை , தீவிரமாக, வாசிக்கத்தொடங்கி விட்டிருந்தேன்.வெகுசனச் சஞ்சிகைகளில் எழுதி என் கவனத்தை ஈர்த்த, தீவிர இலக்கிய எழுத்தாளுமையாளர்களாக ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி . கு,அழகிரிசாமி போன்றோர் இருந்தனர். இவர்களது எழுத்துகள்  பொதுவான வெகுசன எழுத்தாளர்களின் எழுத்துகளிலிருந்து வேறுபட்டவை. ஆனால் அது இவர்கள் மீதான என் ஈர்ப்புக்குத் தடையாக இருந்ததில்லை. என் வயதுக்கு மீறிய விடயங்களைப்பற்றியெல்லாம் இவர்கள்தம் படைப்புகள் இருந்தாலும், அனைவரையும் சென்றடையும் வகையில் , ஒரு வித எல்லை மீறாத எழுத்து நடையில்  இவர்கள் எழுதினார்கள்.

Thursday, July 10, 2025

அது ஒரு கனாக்காலம்!


இனி ஒருபோதுமே அக்காலம் திரும்பப் போவதில்லை. மானுடத் தொழில் நுட்ப வளர்ச்சி மானுட வாழ்க்கைக்குப் பல வசதிகளை உருவாக்கி விட்டது. புதிய பல பொழுது போக்குகளையும் உருவாக்கி விட்டது. இத்தொழில்நுட்பம் உருவாக்கிய வசதிகள் தொடர்ச்சியாக மானுடரைக்  கூட்டு வாழ்க்கையிலிருந்து, சமூக வாழ்க்கையிலிருந்து மேலும் மேலும் பிரித்துக்கொண்டே செல்கின்றன. ஆதியில் மானுடர் குழுக்களாக, தாய் வழிச் சமுதாயங்களாக வாழ்ந்தார்கள். குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்தாலும், குழுக்களுக்கிடையில் ஒருவிதப் பொதுவுடமை நிலவியது.  சமூக வாழ்க்கை இருந்தது.

பின்னர் தொழில் நுட்ப வளர்ச்சி படிப்படியாக அம்மானுடரின் வாழ்க்கையை மாற்றிக்கொண்டே வந்தது. ஆற்றோர நாகரிகம், விவசாயம், பண்டமாற்றுப் பொருளாதாரம் ,தனியுடமை, ஒருதார மணமுறை, குடும்பம்  என அது மேலும் பரிணாமம் அடைந்து வந்தது. நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம், முதலாளித்துவ ஏகாதிபத்தியம் எனப் பிரிந்திருந்த உலகம் மேலும் மேலும் மாற்றங்களச் சந்தித்து வந்தது..

Wednesday, July 9, 2025

'காலம்' செல்வத்துடன் ஒரு சந்திப்பு!




{ஜூலை 7, 2025} நேற்று மாலை 'காலம்' செல்வத்துடன் சிறிது நேரம் , மிடில் ஃபீல்ட்டும் ஃபிஞ் வீதியும் சந்திக்குமிடத்தில் அமைந்திருக்கும் டிம் ஹோர்ட்டன் கோப்பிக் கடையில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது.
 
Worldcat, முகநூல், யு டியூப், இணையத்தளம், டொமைன், அவரிடம் விற்பனைக்காக இருக்கும் நூல்கள் என உரையாடல் பல விடயங்களைத் தொட்டுச் சென்றது.
 
உரையாடலின் முடிவில் எழுத்தாளர் தேவகாந்தன் பற்றி அவர் கூறிய வார்த்தைகள் இன்னும் மனத்தில் ஒலிக்கின்றன. 'தன் வாழ்க்கையையே எழுத்துக்காக அர்ப்பணித்தவர் தேவகாந்தன்' என்று உண்மையிலேயே ஆழ்மனத்திலிருந்து அவர் கூறிய வார்த்தைகளில் இருந்த உண்மை என் நெஞ்சைத் தொட்டது.

Tuesday, July 8, 2025

பண்ணைத்துறையின் பெயருக்கான காரணம் பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -


 


யாழ்ப்பாண இராச்சியத்தின் காலத்தில் முக்கிய துறைமுகங்களாக விளங்கியவை கொழும்புத்துறை , பண்ணைத்துறை ஆகிய துறைமுகங்கள். பண்ணைத்துறை என்பதற்கான பெயருக்கான காரணம் எதுவாக இருக்கும்? அண்மையில் வெளியான கட்டடக்கலைஞர் மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு' நூல் பற்றிய விமர்சனத்தில் கலாநிதி சிவ தியாகராஜா அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

 ".... யாழ்ப்பாணக் கோட்டை இருக்கும் பண்ணை என்ற இடப்பெயர் அவ்விடத்தில் முற்காலத்திலிருந்த ஓர் உலகப்பண்ணையின் ( World Market ) பெயரின் எச்சமாகவே தோன்றுகின்றது."  

 

பண்ணை என்பது விவசாயம், பல்வகை மிருக வளர்ப்பு (கோழிப்பண்ணை, பாற் பண்ணை என)  ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளைக்  குறிக்கப்பயன்படும் சொல். ஆங்கிலத்தில் Farm என்பார்கள். கலாநிதி சிவ தியாகராஜா கூறுவது போல் இவ்விதமான ஒரு பகுதி துறைமுகங்களுக்கு அருகில் இருப்பதில்லை. துறைமுகங்களுக்கு அருகில் பெரும் வர்த்தகச் சந்தைகள் இருப்பதுதான் வழமை.  

Saturday, July 5, 2025

மேலும் பல புதிய ஆக்கங்களுடன் பதிவுகள் இணைய இதழ்!


2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்க்கொண்டு வெளியாகும் இணைய இதழ் பதிவுகள்.  பதிவுகள் இணைய இதழை https://www.geotamil.com ,  https://www.pathivukal.com ஆகிய இணையத்தள  முகவரிகளில் வாசிக்கலாம். படைப்புகளை , ஆக்கபூர்வமான கருத்துகளை ngiri2704@rogers.com அல்லது editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்புங்கள்.

Wednesday, July 2, 2025

நண்பர்களின் நால்வரின் ஒன்று கூடல்!

இடமிருந்து வலமாக: வரதீஸ்வரன், வித்தியானந்தன், பிறேமச்சந்திரா & நான்.



இன்று நான் நண்பர்கள் வரதீஸ்வரன், வித்தியானந்தன், பிறேமச்சந்திரா ஆகியோரை , வரதீஸ்வரன் வீட்டில் சந்தித்து , மாலைப்பொழுதை இனிதாகக் கழித்தேன். இவர்களில் வரதீஸ்வரன், வித்தியானந்தன் ஆகியோருடனான அறிமுகம்  மொறட்டுவைப்பல்கலைககழகத்தின் மாணவர் விடுதியில் ஆரம்பமானது. நான் அங்கு கற்கச்சென்றபோது முதல்வருடம் மாணவர் விடுதி B இல் தங்கிப் படிப்பை ஆரம்பித்தேன். அந்த விடுதியில் அவ்விதம் தம் படிப்பை ஆரம்பித்தவர்கள்தாம் நண்பர்கள் வரதீஸ்வரனும், வித்தியானந்தனும்.  வித்தியானந்தன் கடல்துறைப் (Marine) பொறியியல் துறையிலும், வித்தியானந்தன் மின்சாரப்பொறியியல் துறையிலும், பிறேமச்சந்திரா மூலகப் (Materials) பொறியியல் துறையிலும் படிப்பதற்காக வந்திருந்தவர்கள். நான் கட்டடக்கலை படிப்பதற்காகச் சென்றிருந்தவன். வித்தியானந்தன் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் 'நுட்பம்'  இதழாசிரியராக நான் இருந்தபோது மலர்க்குழுவில் ஓர் உறுப்பினராக இருந்தவர். 

Tuesday, July 1, 2025

புகலிட அன்னையே! நீ வாழ்க! (இசை - Suno AI & ஓவியம் - AI)


இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்!

புகலிட அன்னையே! நீ வாழ்க!  

பல்லின மக்கள் ஒன்றென வாழும்
புண்ணிய பூமி உனது பூமியே!
நல்லறம் பேணி நானிலம் போற்ற
நல்லன்னை எனவே  என்றென்றும் வாழ்க நீ!

புகலிடம் நாடிப் பிறந்தமண் பிரிவோர்
புகலிட அன்னை என்போம் உனையே!
கனடாத் தாயே! கருணையின் வடிவே!
உனது அன்பால் உயிர் பிழைத்தோம்!

இத்தினம் உனது உதயத்து நாளாம்!
இன்றல்ல என்றுமே உனை வாழ்த்துவோம்.
என்றுமே இன்றுபோல் உன்கருணை பொங்கட்டும்.
நன்றாக  வாழ்ந்திட உனை வாழ்த்துகிறோம்.

புகலிடம் அன்னையே! நீ வாழ்க! - வ.ந.கிரிதரன் -



பல்லின மக்கள் ஒன்றென வாழும்
புண்ணிய பூமி உனது பூமியே!
நல்லறம் பேணி நானிலம் போற்ற
நல்லன்னை எனவே  என்றென்றும் வாழ்க!

புகலிடம் நாடிப் பிறந்தமண் பிரிவோர்
புகலிட அன்னை என்போம் உனையே!
கனடாத் தாயே! கருணையின் வடிவே!
உனது அன்பால் உயிர் பிழைத்தோம்!

இத்தினம் உனது உதயத்து நாளாம்!
இன்றல்ல என்றுமே உனை வாழ்த்துவோம்.
என்றுமே இன்றுபோல் உன்கருணை பொங்கட்டும்.
நன்றாக  வாழ்ந்திட உனை வாழ்த்துகிறோம்.



தெணியானின் 'குடிமைகள்' சமூக விடுதலைக்கான அறை கூவல்! - வ.ந.கிரிதரன் -

தெணியானின் 'குடிமைகள்' நாவல் இலங்கைத் தமிழ் நாவல்களில் முக்கியமான நாவல்களிலொன்று. 'ஜீவநதி' பதிப்பகம், 'கருப்புப் பிரதிகள...

பிரபலமான பதிவுகள்