Sunday, March 18, 2018

'நிலக்கிளி' நாவல் பற்றிய சிந்தனைத்துளிகள்..... வ.ந.கிரிதரன் -

ஈழத்துத்தமிழ் நாவல்களில் அனைத்துக்குழுக்களாலும் தவிர்க்க முடியாததொரு படைப்பாகக்கருதக்கூடிய படைப்பு அ.பாலமனோரகனின் 'நிலக்கிளி'. அந்த ஒரு படைப்பின் மூலம் ஈழத்துத்தமிழ் இலக்கியத்தில் தனக்கென்றோரிடத்தைப்பிடித்துக்கொண்டவர் அவர். வன்னி மண்ணின் மணம் கமழும் நல்லதொரு நாவல். நிலக்கிளி நல்லதொரு படிமம். நிலத்தில் பொந்துகள் அமைத்து கூடுகட்டி வாழும் அழகிய பறவைகள் நிலக்கிளிகள். இவை தாம் வசிக்கும் வளைகளை விட்டு அதிக உயரம் பறப்பதில்லை. இவ்விதம் நிலக்கிளிகளைப்பற்றிக்குறிப்பிடும் ஆசிரியர் பதஞ்சலியையும் அவ்விதமானதொரு நிலக்கிளியாக நாவலில் உருவகித்திருக்கின்றார். இந்த நாவல் என்னைக்கவர்ந்ததற்கு முக்கிய காரணங்கள்: வன்னி மண் வாசனை தவழும் எழுத்து மற்றும்பாத்திரப்படைப்பு (நாவலின் பாத்திரங்கள் அனைத்துமே உயிர்த்துடிப்புடன் படைக்கப்பட்டிருக்கின்றன).

இந்த நிலக்கிளிகளைப்பற்றி நான் இந்நாவலைப்படிப்பதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை. எனது பால்ய காலம் வன்னியின் ஒரு பகுதியாக வவுனியாவில் கழிந்திருந்தாலும் அங்கு நான் வாழ்ந்திருந்த காலத்தில் இவ்விதமானதொரு பறவையைப்பற்றிக்கேட்டதேயில்லை. நிலக்கிளி என்பது இன்னுமொரு பறவைக்கு பால மனோகரன் வைத்த பெயரா அல்லது உண்மையிலேயே அப்பெயரில் அழைக்கப்படுமொரு பறவை உள்ளதா? ஏனெனில் இன்று வரை எனக்கு 'நிலக்கிளி' என்னும் பறவை பற்றி 'நிலக்கிளி' நாவலில் வருவதை விட மேலதிகமான தகவல்களெதுவும் கிடைக்கவில்லை. 'நிலக்கிளி' பற்றி வன்னி நண்பர்கள் யாராவது மேலதிகத்தகவல்களிருப்பின் பகிர்ந்து கொள்ளவும்.

இந்த நாவலின் ஆரம்பம் முரலிப்பழம் பற்றிய வர்ணனையுடன் 'கார்த்திகை மாதத்தின் கடைசி நாட்கள்! அடிக்கடி பெய்த பெரு மழையில் குளித்த தண்ணிமுறிப்புக் காடுகள் பளிச்சென்றிருந்தன. ஈரலிப்பைச் சுமந்துவந்த காலையிளங் காற்றில் முரலிப் பழங்களின் இனிய மணம் தவழ்ந்து வந்தது' என்று ஆரம்பிக்கின்றது. நல்லதோர் ஆரம்பம். அந்த ஆரம்பமே நாவல் இயற்கை எழில் ததும்பும் வன்னி மண்ணின் மணம் கமழும் நாவலென்பதை எடுத்துக்காட்டி விடுகிறது. தொடர்ந்து வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

நா.பா.வின் 'நித்திலவல்லி' தந்த நினைவுகள்... வ.ந.கிரிதரன் -


கடந்த சில வருடங்களில் கல்கி, நா.பார்த்தசாரதி போன்ற பல எழுத்தாளர்களின் படைப்புகள் தமிழக அரசினால் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளதால் அவை தமிழகத்தின் பல பதிப்பகங்களுக்கும் அவர்களது வியாபாரத்துக்கு உதவி வருகின்றன. அண்மையில் டொராண்டோ நூலகத்தில் நா.பார்த்தசாரதியின் 'நித்திலவல்லி' 'கபாடபுரம்' போன்ற நாவல்களின் கவிதா பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்த புதிய பதிப்புகளைப் பார்த்தேன். அழகாக அச்சிட்டு, வெளியிட்டிருக்கின்றார்கள். இவற்றில் 'நித்திலவல்லி'  நாவலை, ஓவியர் கோபுலுவின் அழகான ஓவியங்களுடன் எனது மாணவப் பருவத்தில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தபோது வாசித்திருக்கின்றேன். வெகுசன படைப்புகளைத் தந்த எழுத்தாளர்களில் எனக்கு நா.பார்த்தசாரதியும் பிடித்த எழுத்தாளர்களிலொருவர். அவரது சமூக மற்றும் சரித்திர நாவல்களான குறிஞ்சிமலர், பொன்விலங்கு, மணிபல்லவம், நித்திலவல்லி போன்ற நூல்களை நான் அன்று விரும்பி வாசித்திருக்கின்றேன். நா.பா.வின் எழுத்து வாசிப்பதற்கு இனிமையானது. அவர் ஒரு தமிழ்ப் பண்டிதர் என்பதால் நெஞ்சைனையள்ளும் இனிய தமிழில் அவரது படைப்புகள் விளங்கும். அந்தத்தமிழுக்காகவே வாசிக்கலாம். உதாரணமாக 'நித்திலவல்லி' பின்வருமாறு தொடங்குகின்றது:

".. வாதவூர் எல்லையைக் கடக்கும்போதே கதிரவன் மலைவாயில் விழுந்தாயிற்று.  மருத நிலத்தின் அழகுகள் கண்கொள்ளாக் காட்சியாயிருந்தன. சாலையின் இருபுறமும் பசுமையான  நெல் வயல்களும், தாமரைப் பொய்கைகளும்,  சோலைகளும், நந்தவனங்களும்,  மூங்கில்கள் சிலிர்த்தெழுந்து  வளர்ந்த மேடுகளுமாக  நிறைந்திருந்தன.  கூடடையும் பறவைகளின்  பல்வேறு  விதமான ஒலிகளும், மூங்கில் மரங்கள் ஒன்றோடொன்று  காற்றில் உராயும் ஓசையும், செம்மண் இட்டு மெழுகினாற் போன்ற  மேற்கு வானமும் அந்த இளம் வழிப்போக்கனுக்கு உள்ளக் கிளர்ச்சி அளித்தன."

புஷ்பராணியின் 'அகாலம்: ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்' - வ.ந.கிரிதரன் -

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தபோது அதில் முன்னணியிலிருந்த பெண்களில் மயிலிட்டி  புஷ்பராணி முக்கியமானவர். பின்னர் பல்வேறு அமைப்புகள் உருவாகக் காரணமாகவிருந்த ஆரம்பகாலத் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் அமைப்பான தமிழ் மகளிர் பேரவையிலும், தமிழ் ஈழ விடுதலை அமைப்பிலும் (TLO) தீவிரமாக இயங்கியவர். புலோலி வங்கிக் கொள்ளையில் சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டு காவற்துறையினரின் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானவர். 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' என்னும் நூலை எழுதிய புஷ்பராஜாவின் சகோதரி. இவரது 'அகாலம் (ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்)' என்னும் நூலை அண்மையில் வாசித்தேன். 'கருப்புப் பிரதிகள்' வெளியீடாக வெளிவந்த நூல். 

இந்நூலுக்குப் பல முக்கியத்துவங்களுள்ளன. ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் பெண் போராளிகளில் முன்னோடியான புஷ்பராணியின் அனுபவப் பதிவுகளிவை. இந்த நூல் ஏனைய இதுபோன்ற அண்மைக்காலப் பதிவுகளிலிருந்து இன்னுமொருவகையில் வேறுபடுகின்றது. ஏனைய நூல்களெல்லாம் ஆவணப்பதிவுகளென்ற வகையில் முக்கியத்துவம் பெற்றால், 'அகாலம்' ஆவணப்பதிவாக இருக்கும் அதே சமயம் இலக்கியத்தரமிக்க பிரதியாகவும் அமைந்திருப்பது இதன் சிறப்பு. இதற்கு புஷ்பராணி ஓர் எழுத்தாளராகவுமிருப்பது காரணம். தனது போராட்ட அனுபவங்களை விபரிக்கையில் அக்காலத்து மெல்லிய உணர்வுகளையெல்லாம், தன் இளமைக்காலத்து வாசிப்பு அனுபவங்களையெல்லாம் விபரித்துச் செல்கின்றார். அடுத்த முக்கியமான அம்சம் தனது அனுபவங்களை வெளிப்படையாக, குறைநிறைகளுடன் விபரிக்கின்றார். சிவகுமாரின் தாயாரான அன்னலட்சுமி அம்மையாரின் சிறப்புகளை விபரிக்கும் அதே சமயம் சிவகுமாரின் அந்திரட்டியில் அவ்வூர்த் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனியாக உணவு வழங்குவதையும் அதுபற்றிய அன்னலட்சுமி அம்மையாரின் மன உணர்வுகளையும் கூடவே விபரிக்கின்றார். அது போல் தமிழ் மகளிர் அமைப்பின் ஆரம்பகாலப் பெண் போராளிகளிலொருவரான அங்கயற்கண்ணி மறைந்து மறைந்து தன்னை வந்து சந்திப்பதையும் விபரிக்கின்றார். இவ்விதமாகப் பலருடனான அனுபவங்களை விபரிக்கையில் அவர்களின் குறைநிறைகளை விபரிக்கின்றார். அவர்கள்மேல் கோபம் போன்ற உணர்வுகளின்றி விபரிக்கின்றார். தமிழ், சிங்களப் பொலிசாரின் வன்முறைகளை விபரிக்கும் அதே சமயம் அவர்களது நல்ல அம்சங்களையும் குறிப்பிடுகின்றார். இவ்விதமான விபரிப்பால் இவர் கூறும் நபர்களைப் பற்றிய ஓரளவுக்கு முழுமையான பிம்பங்கள் கிடைக்கின்றன. பெண் போராளிகளாகக் கைது செய்யப்பட்ட இவரும், கல்யாணி போன்றவர்களும் விசாரணைகளில் அடைந்து சித்திரவதைகள் துயரகரமானவை. அவற்றையெல்லாம் தாங்கித் தப்பிபிழைத்த இவர்களது துணிவு மிக்க ஆளுமை வியப்பூட்டுவது.

Saturday, March 17, 2018

எனது சிறுகதையான 'நடு வழியில் ஒரு பயணம்' சிங்கள மொழியில்....

இலங்கையிலிருந்து வெளியாகும் லக்பிமா சிங்களத் தினசரிப்பத்திரிகையின் 18.03.2018 ஞாயிறு பதிப்பில் எனது சிறுகதையான 'நடுவழியில் ஒரு பயணம்' சிறுகதையின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது. இச்சிறுகதை டிசம்பர் 2006இல் 'பதிவுகள்' மற்றும் 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் வெளியாகிய சிறுகதை. இச்சிறுகதையினைத் தமிழிலிருந்து சிங்கள  மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தவர் எனது முகநூல் நண்பரும், பல தமிழ்ப் படைப்புகளைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தவருமான எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்த. அவருக்கும், லக்பிமாவில் இலக்கியப்பகுதிக்குப் பொறுப்பானவருமான எழுத்தாளர் கத்யான அமரசிங்க (Kathyana Amarasinghe)  அவர்களுக்கும் நன்றி.

இச்சிறுகதை வெளியான 'லக்பிமா' :  http://epaper.lakbima.lk/last_18_03_18/manjusawa.pdf

ஏற்கனவே எனது இன்னுமொரு சிறுகதையான 'உடைந்த காலும், உடைந்த மனிதனும்' சிறுகதையினை ஜி.ஜி.சரத் ஆனந்த சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்து 'லங்கஇரிடா' (Lankairida)) பத்திரிகையில் வெளியிட்டுள்ளார். அச்சிறுகதை 'லங்கஇரிடா'வின் பெப்ருவரி 18, 2018 பதிப்பில் வெளியாகியுள்ளது.

Friday, March 16, 2018

நவீன இயற்பியலின் தந்தை ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன்! (பிறந்த தினம் மார்ச் 14) - வ.ந.கிரிதரன் -



நவீன இயற்பியலின் தந்தை என்பர் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனை. நவீன இயற்பியலின் இரு அடித்தளங்களாக சார்பியற் தத்துவத்தையும் (சிறப்புச் சார்பியற் தத்துவம் மற்றும் பொதுச் சார்பியற் தத்துவம்)  , சக்திச்சொட்டுப் பெளதிகம் அல்லது 'குவாண்டம் பிசிக்ஸ்'ஸையும் குறிப்பிடலாம். இவ்விரண்டு கோட்பாடுகளின் மூலவராக ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனைக் குறிப்பிடலாம். அரிஸ்டாட்டில், சேர் ஐசாக் நியூட்டன் போன்றோரின் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருந்த நவீன இயற்பியலின் அடித்தளங்களையே அடியோடு மாற்றி வைத்தவை ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவக் கோட்பாடுகள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வந்த வெளி (Space) காலம் (Time)  ஆகியவை பற்றி நிலவி வந்த கோட்பாடுகளை அடியோடு மாற்றி வைத்தவை ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவக் கோட்பாடான சிறப்புச் சார்பியற் தத்துவக் கோட்பாடு. அதுவரை வெளி, நேரம் ஆகியவை சுயாதீனமானவை என்று கருதப்பட்டு வந்தன. அவை சுற்றிவர நடைபெறும் இயக்கங்களால் பாதிப்புறுவதில்லை என்று கருதப்பட்டு வந்தன. ஆனால் ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவக் கோட்பாடோ வெளி, நேரம் ஆகியவை இரண்டும் சுற்றிவர நடைபெறும் இயக்கங்களால் பாதிக்கப்படுபவைதாம் என்று கூறின. அவை சுயாதீனமானவை அல்ல மாறாகச் சார்பானவை என்பதை வெளிப்படுத்தின. நேரமானது வேகத்தால் பாதிக்கப்படுகின்றது. வெளியானது பொருளொன்றின் திணிவினால் பாதிக்கப்படுகின்றது. திணிவு கூடிய பொருளொன்றானது தன்னைச் சுற்றியிருக்கும் வெளியினை வளைத்து விடுகின்றது என்பதை ஐன்ட்டைனின் சிறப்புச் சார்பியற் தத்துவக் கோட்பாடு வெளிப்படுத்தியது. அத்துடன் காலத்தையும் , நேரத்தையும் தனித்தனியாக ஒருபோதுமே பிரித்து வைத்துப் பார்க்க முடியாது என்றும் , நாம் வாழும் இப்பிரபஞ்சமானது 'வெளிகால' (SpaceTime) அல்லது 'காலவெளி'யால் ஆன ஒன்று என்றும் அச்சிறப்புச்சார்பியற்க்கோட்பாடு கூறியது.

Wednesday, March 14, 2018

அஞ்சலி: நவீன வானியற்பியல் அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹார்கிங் (1942 - 2018)! - வ.ந.கிரிதரன் -


ஸ்டீபன் ஹார்கிங் , அண்மைக்காலத்தில் எம்முடன் வாழ்ந்த தலைசிறந்த வானியற்பியற் துறை அறிஞர் தனது 76ஆவது வயதில் இன்று காலை (மார்ச் 14, 2018)  தன்னியக்கத்தை நிறுத்தி விட்டார். இவரது அறிவு மட்டுமல்ல இவரது வாழ்க்கை கூட அனைவரையும், மருத்துவர்களையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியதொன்று. இளமைப்பருவத்தில் தனது இருபத்தியிரண்டாவது வயதில்  'மோட்டார் நியூரோன் டிசீஸ்' என்னும் ஒருவகையான நரம்பு நோயால்  உடல் நிலை பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியே வாழ்வாக அமைந்து விட்ட நிலையிலும், சிறிது காலமே வாழ்வார் என்று மருத்துவர்களால் காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையிலும் இவற்றையெல்லாம் மீறி இத்தனை ஆண்டுகள் இவர் வாழ்ந்திருக்கின்றார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்.ஐசக் நியூட்டன் வகித்த பதவியினை வகித்திருக்கின்றார். திருமண வாழ்வில் ஈடுபட்டு தந்தையாக வாழ்ந்திருக்கின்றார். இவர் மூன்று குழந்தைகளுக்குத்தந்தை.

நவீன வானியற்பியற் துறைகளின் தந்தையான அல்பேர்ட் ஐன்ஸ்டைனின் சார்பியல் இயக்க மற்றும் கருந்துளைகள் பற்றிய ஆய்வில், சக்திச்சொட்டுப் பெளதிகத்தில் தன்னை ஈடுபடுத்தி மேலும் பல ஆய்வுகளைச் செய்திருக்கின்றார். அவற்றின் வாயிலாகப் பல முடிவுகளை, உண்மைகளை அறிய வைத்திருக்கின்றார். குறிப்பாகக் கருந்துளைகள் பற்றிய, நாம் வாழும் இப்பிரபஞ்சம் பற்றிய இவரது கோட்பாடுகள் நவீன வானியற்பியத்துறைக்கு வளம் சேர்ப்பவை.

Tuesday, March 13, 2018

காலத்தால் அழியாத கானங்கள் 1 - வ.ந.கிரிதரன்: -

1.  நாரே நாரே நாரே! நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே
இன்று இந்தியத்திரையுலகில் கொடி கட்டிப்பறக்கும் பாடகிகளில் எனக்கு மிகவும் பிடித்த பாடகியாக ஸ்ரேயா கோஷலைக் கூறுவேன். அவரது பிறந்த தினம் மார்ச் 12. மார்ச் 12, 1984 பிறந்த ஸ்ரேயா கோஷல் மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்தவர். 'சரிகமப' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றி சிறந்த பாடகியாகப் புகழ்பெற்று, திரைப்படத் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலியால் இனங்காணப்பட்டு (Sanjay Leela Bhansali ) , அவரது தேவதாஸ் இந்தித் திரைப்படத்தில் (2002) பாடகியாக அறிமுகப்படுத்தப்பட்டு, அப்படத்தின் மூலமே இந்திய மத்திய அரசின் மற்றும் ஃபிலிம்ஃபெயர் சஞ்சிகையின் சிறந்த பாடகிக்கான விருதினைப்பெற்றவர். குறுகிய காலத்தில் நான்கு தடவைகள் இந்திய மத்திய அரசின் தேசிய விருதினையும், ஆறு தடவைகள் ஃபிலிம்ஃபெயரின் விருதினையும் சிறந்த பாடகிக்காகப் பெற்றவர். இவை தவிர தமிழக அரசின் மாநில விருதினை இரு தடவைகளு, மூன்று தடவைகள் கேரள மாநில அரசின் விருதினையும் , மேலும் பல விருதுகளையும் பெற்றவர். இங்கிலாந்திலுள்ள Madame Tussauds அருங்காட்சியத்தில் மெழுகினால் சிலையாக வடிக்கப்பட்ட முதலாவது இந்தியப் பாடகர் என்ற பெருமையினையும் பெற்றவர். இவரது பாடல்கள் எல்லாமே கேட்பதற்கு இனிமையானவை. திரைப்படங்கள் மட்டுமல்லாது, சொந்தமாகவும் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் இசை ஆல்பங்கள் தயாரித்தும் வெளீயிட்டுள்ளார்.

இவர் பாடகர் உதய் மஜும்தாருடன் பாடிய மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான 'குரு' படத்தில் பாடிய 'நன்னாரே' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. இப்பாடலின் சிறப்புகளாக ஸ்ரேயா கோஷலின் குரல், ஏ.ஆர்.ரகுமானின் இசை, கவிஞர் வைரமுத்துவின் வரிகள் , இயற்கையெழிலின் அழகிய காட்சிகளை வெளிப்படுத்தும் ஒளிப்பதிவு மற்றும் ஐஸ்வர்யா ராஜி`ன் நடிப்பு, நடன அசைவுகள் ஆகியவற்றைக் கூறுவேன்.

கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு! (தகவல்: ஓராயம்)

கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மே 24...