Monday, April 22, 2024

எழுத்தாளர் க.சட்டநாதனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!


எழுத்தாளர் க.சட்டநாதனுக்கு இன்று - ஏப்ரில் 22 - பிறந்தநாள்.  இனிய பிறந்தநாள்  வாழ்த்துகள். இலங்கைத் தமிழ்  இலக்கியத்தில், உலகத்தமிழ் இலக்கியத்தில் முக்கியமான எழுத்துலக ஆளுமையாளர்களில் ஒருவர். சிறுகதை, கவிதை,நாவல் என இவரது இலக்கியப் பங்களிப்பு இருந்தாலும், முக்கியமான பங்களிப்பு இவரது சிறுகதைகளே என்பேன். இவரது சிறுகதைகள் பல தொகுப்புகளாக (மாற்றம் (1980), உலா (1992), சட்டநாதன் கதைகள் (1995), புதியவர்கள்- (2006),  முக்கூடல் - (2010), பொழிவு - (2016), தஞ்சம் (2018)) வெளியாகியுள்ளன.

இவரது கதைகளைப்பற்றி அமரர் கலை, இலக்கியத் திறனாய்வாளர் ஏ.ஜே.கனகரத்தினா 'மென்மையான உணர்வுகளை கலை நயத்தோடும் மனித நேயத்தோடும் வெளிப்படுத்துவதில் ஆசிரியர் வெற்றி பெறுவதால், ஈழத்துச் சிறுகதை உலகில் சட்டநாதன் தனது தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளார்' என்று கூறுவார்.

Sunday, April 21, 2024

எம்ஜிஆரின் 'என் தங்கை'


எம்ஜிஆரின் நடிப்பைப் பார்க்கவேண்டுமானால் பார்க்க வேண்டிய திரைப்படம் 'என் தங்கை' அண்ணன் ,தங்கை பாசத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்ட உணர்ச்சிகரமான கதை. முடிவில் அவலச்சுவை மிகுந்தது.
எம்ஜிஆர் தன் ஆரம்ப காலத்தில் சமூகப்படங்கள் பலவற்றில் நடித்திருக்கின்றார். அந்தமான் கைதி, நாம், என் தங்கை , பணக்காரி அவற்றில் சில. 

Friday, April 19, 2024

எம்ஜிஆருக்கு இளவயதில் அரசியல் போதித்தவர் என்.எஸ்.கே!


    எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் பாடலிது. 'சீர்மேகும் குருபதம்' என்று தொடங்கும் இப்பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம் 'சக்கரவர்த்தித் திருமகள்'. ப.நீலகண்டனின் இயக்கத்தில் , ஜி.ராமநாதனின் இசையில், வெளியான இப்பாடலை சீர்காழி கோவிந்தராஜன், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் பாடியிருப்பார்கள. இப்பாடலை எழுதியிருப்பவர் ஒரு நடிகர். இவர் அக்காலகட்டத்தில் பாடல்கள் பலவற்றை எழுதியிருக்கின்றார். 'கிளவுன் சுந்தரம்' (‘Clown’ M. S. Sundaram) என்றறியப்பட்டவர். இவரது புகைப்படங்கள் வைத்திருப்பவர்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Wednesday, April 17, 2024

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (5) - வ.ந.கிரிதரன்-


அத்தியாயம் ஐந்து:   இருப்பின்  புதிரொன்றும் , நங்கையுடனான சந்திப்பும்!


"நான் மாதவன். யுனிட் 203இல் வசிப்பவன்.  போஸ்ட்மன் தவறுதலாக உங்களுக்குரிய கடிதத்தை என் தபால் பெட்டிக்குள் போட்டுவிட்டுச் சென்று விட்டார். உள்ளே ஏதோ ஒருவிதமான அட்டை  , கடன் அட்டை அல்லது  வங்கி அட்டையாகவிருக்கலாம், இருப்பதுபோல் தெரிகிறது.  அதனால்தான் அதனைக்க் கொடுப்பதற்காக இங்கு வந்தேன்" இவ்விதம் ஆங்கிலத்தில் கூறினான் மாதவன். அத்துடன் கடிதத்தையும் அவளிடம் கொடுத்தான்.

அதற்கு அவள் பதிலாக , ஆங்கிலத்தில் "ஓ. மிகவும் நன்றி. இவ்விதம் நேரமெடுத்துக் கொண்டு வந்திருக்கின்றீர்கள். அதனை மிகவும் மதிக்கின்றேன். இன்னுமொன்று .. நீங்கள் கேரளக்காரரா? உங்கள் பெயர் அங்கு பிரசித்தமானது. அதிகமாகப் பாவிக்கப்படும் பெயர்களில் ஒன்று" என்று கேள்வியுடன் கூடிய பதிலளித்தாள்.

"நான் கேரளக்காரன் அல்ல. தமிழ்நாட்டுக்காரனும் அல்ல. ஶ்ரீலங்கன். நீங்களும் ஶ்ரீலங்காவா" என்றான் மாதவன்.

இதற்கு அவள் இலேசாக முறுவலித்தபடியே "இல்லை, நான் தமிழ்நாட்டுக்காரி. தஞ்சாவூர்க்காரி. ஆனால் அம்மா ஶ்ரீலங்காக்காரி" என்றாள்.

இதைக்கேட்டதும் அவன் பதிலுக்கு முறுவலித்தபடி ' அப்போ நீங்கள் தமிழச்சி. உங்களுடன் தமிழிலேயே கதைக்கலாம்."

இதற்குப் பதிலாக "தாராளமாக' என்றவள் " தொடர்ந்து  "உள்ளே வாருங்கள். ஒரு கப் தேநீர் அருந்தலாம்"  என்றாள்.

Infowhiz Systems's Services: domain registration, hosting, web design, online security, and email!


இன்ஃபோவிஷ் சிஸ்டம்ஸ் (Infowhiz Systems) domain registration, hosting, web design, online security, and email ஆகிய சேவைகளை நியாயமான விலையில் வழங்குகின்றது. அதன் சேவைகளைப் பாவியுங்கள்! பயனடையுங்கள்!



https://www.infowhizsystems.com/

Monday, April 15, 2024

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (4) - வ.ந.கிரிதரன்-

அத்தியாயம் நான்கு: பக்கத்து வீட்டுப் பெண்!


மறுநாள் நேரத்துடன் எழுந்து விட்டான் மாதவன். அன்று அவன் நாளை எவ்விதம் கழிக்க வேண்டுமென்று சில திட்டங்கள் வைத்திருந்தான். நண்பகல் வரையில் 'ஒன் லை'னில் வேலை தேடுவது. கல்வித் தகமைகளை இணையத்தில் அதிகரிக்க உதவும் பயிற்சிக் காணொளிகளை, கட்டுரைகளை ஆராய்வது எனத் திட்டமிட்டிருந்தான். தகவற் தொழில் நுட்பத்தில் அவனுக்கு இலவசமாகக் கிடைக்கும், அதே சமயம் பலரால் , நிறுவனங்களால் பாவிக்கப்படும் லினக்ஸ் 'ஒபரேட்டிங் சிஸ்டம்' பற்றிய அறிவை வளர்த்துக்கொள்வது எனத் தீர்மானித்திருந்தான். தகவல் தொழில் நுட்பத்துறையைப் பொறுத்தவரையில் ஒரு தொழில் நுட்பம் பற்றிய அறிவும், அனுபவமும் இருந்தால் அவை போதுமானவை அத்துறையில் வேலையொன்றைப் பெறுவதற்கு என்பது அவனது எண்ணம்.

அதே சமயம் அவனுக்கு ஒரு வலைப்பதிவையும் ஆரம்பிக்க வேண்டுமென்பது நீண்ட  காலத்து எண்ணம்.அது பற்றியும் இன்று முடிவொன்றினை எடுத்து, அதற்கான அத்திவாரத்தை இன்று உருவாக்க வேண்டுமென்றும் ஏற்கனவே தீர்மானித்திருந்தான். தன் பல்வகைப்பட்ட சிந்தனைகளையும் இணையத்தில் பதிவு செய்வதன் மூலம், வாசிப்பவற்றைப்பற்றிய மற்றும் பல்வகைப்பட்ட சொந்த அனுபவங்களையெல்லாம் அவ்வலைப்பதிவில் பதிவு செய்வதன் மூலம் மனப்பாரம் குறையும், சிந்தனைத்தெளிவு பிறக்கும், வாசிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். எழுத்தாற்றலும் அதிகரிக்கும். ஓர் எழுத்தாளனாவது அவனது முக்கிய எண்ணமாக இருக்கவில்லை. ஆனால் எழுவதுவதில் ஆர்வம் மிக்கவனாக அவனிருந்தான். அவ்வார்வத்துக்கு வடிகாலாக அவனது எழுத்துகள் இருக்குமென்றும் எண்ணிக்கொண்டான்.

Tuesday, April 9, 2024

சூரிய கிரகணமும் எம் அந்தர இருப்பும்!


நேற்று நடந்த சூரிய கிரகணம் தற்போதுள்ள சூழலில் மனித வாழ்நாளில் ஒரே தடவையே பார்க்கக் கூடியதொரு வானியல் நிகழ்வு.  எதிர்காலத்தில் மருத்துத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மானுட வாழ்வைப் பல நூறு வருடங்களுக்கு அதிகரிக்குமென்பது அறிவியல் அறிஞர்களின் நம்பிக்கை. அதுவரை இது முக்கியமானதொரு மானுட வாழ்நாளில் பார்க்க வேண்டியதொரு வானியல் நிகழ்வு.

கணத்துக்குக் கணம் விரிந்துகொண்டிருக்கும் பெரு வெளியில் , பெரு வேகத்துடன் விரைந்து கொண்டிருக்கும் சூரியன், சந்திரன், பூமி ஆகியவற்றின் அந்தர இருப்பையும், அதில் இருக்கும் எம் இருப்பையும் புரிய வைத்த, உணர வைத்த அற்புதமானதொரு நிகழ்வு.  எமது இருப்பு எவ்வளவு ஆச்சரியமானது. நாமிருக்கும் பூமி விரையும் வேகம் எமக்குத் தெரிவதில்லை. அதை நாம் உணர்வதில்லை. ஆனால் வானில், நம்மைச்சுற்றி எல்லாமே இயங்கிக்கொண்டுதானுள்ளன. ஒரு கணமேனும் ஓய்வற்ற ஓயாத இயக்கங்களுக்குள் இயங்கிக்கொண்டிருக்கினறோம். எல்லாமே ஓய்வற்று இயங்கிக்கொண்டிருக்கின்றன.


இவ்விதமான நிகழ்வுகள் எமக்கு இப்பிரபஞ்சத்தில் எம் இருப்பைப் புரிய வைக்கின்றன. எம்மைப்பற்றிச் சிந்திக்க வைக்கின்றன. இவை பற்றியெல்லாம் சிந்தித்தால், உணர்ந்தால் கணத்துக்குக் கணம் இப்பூமியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இரத்தக்களரிகள், போர்கள், மனித உரிமை மீறல்கள், குற்றச் செயல்களையெல்லாம் நாம் புரிவோமா?

அவ்வகையில் முக்கியமானதொரு வான் நிகழ்வு, அற்புதமானதொரு நிகழ்வு.  பிரபஞ்சத்தின்  நேர்த்தியை, வடிவமைப்பைப் புரிய வைக்கும் சிறு துளியென்றாலும் அச்சிறு துளிக்குள் பொதிந்து  கிடக்கின்றது மானுட சிந்தனைத் தேடலுக்கான  விடையொன்றின்  சிறு துளி.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...