Monday, July 15, 2024

நண்பர்களுடன் ஒரு சந்திப்பு!


அண்மையில்  நண்பர்கள் ஈஸ்வரமூர்த்தி, குருபரன், யோக வளவன் ஆகியோருடன் டிம் ஹோர்டன் கோப்பிக் கடையொன்றில் சந்தித்து சுமார் மூன்று மணி நேரம் உரையாடினோம். இலக்கியம், சமூக ஊடகம், அரசியல், பாடசாலை அனுபவங்கள் எனத்தொடங்கி தமிழகத்து டீ மாஸ்டர் வரை பல்வேறு விடயங்களைப் பற்றி உரையாடல் தொட்டுச் சென்றது. ஈஸ்வரமூர்த்தி (சிவா முருகுப்பிள்ளை) , குருபரன் ஆகியோர் யாழ் இந்துக்கல்லூரியிலிருந்து அறிமுகமான நண்பர்கள். யோக வளவன் எழுத்தாளர்களான வடகோவை வரதராஜன், அமரர் கோமகன் ஆகியோரின் சகோதரர். கனடாவில் அறிமுகமானவர். 
 
ஈஸ்வரமூர்த்தி, குருபரன் ஆகியோர் 84 காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். ஈஸ்வரமூர்த்தி தான் பழகிய தமிழர்தம் ஆயுதப்போராட்ட அமைப்புகளின் தலைவர்களுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். யோக வளவன் கோமகன் நடத்திய 'நடு' இணைய இதழை மீண்டும் கொண்டு வருவது பற்றிச் சிந்தித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
 
நண்பர்களுடனான சந்திப்புகள் எப்போதும் மகிழ்ச்சியைத் தருவன. இதுவும் அத்தகைய சந்திப்புகளில் ஒன்று.

சிவப்புச் சூரியன்!



அண்மையில் ஒரு மாலை  'ஸ்கார்பரோ டவுன் சென்டர்' சென்று திரும்புகையில் அந்தி வானில் சிவப்புச் சூரியனை அவதானித்தேன். அப்பொழுது இளைய மகளிடம் அதைப்புகைப்படம் எடுக்கச் சொன்னேன்.அப்போது எடுத்த புகைப்படம்.

வ.ந.கிரிதரனின் 'காலவெளி' கண்ணம்மாக் கவிதைகள் (1) - காலவெளிக் கைதிகள்!


காலவெளியை மையமாக வைத்து நான் பல கண்ணம்மாக் கவிதைகள் எழுதியிருக்கின்றேன். இவை வெறும் காதல் கவிதைகள் மட்டும் அல்ல. இருப்பு பற்றிய தேடல் கவிதைகளும் கூடத்தான். வாசித்துப் பாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இக்கவிதைகள் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியானவை. பதிவுகள்..காம் வெளியீடாக (2023) வெளியான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் என் கவிதைத்தொகுப்பிலும் உள்ளடங்கியவை.


 

கவிதை: காலவெளிக் கைதிகள்! - வ.ந.கிரிதரன் -

காலவெளியிடையே கண்ணம்மா உன்
கனிமனம் எண்ணி வியக்கின்றேன்.
காலவெளியிடையே கண்ணம்மா
கணமும் பறந்திட விளைகின்றேன்.
காலவெளிச் சிந்திப்பிலே கண்ணம்மா
களித்திட கணமும் எண்ணுகின்றேன்.
சூழலை மீறியே கண்ணம்மா அவன்போல்
சிந்திக்க விரும்புகின்றேன்.
காலமென்றொன்றில்லை கண்ணம்மா.
வெளியும் அவ்வாறே என்றான் கண்ணம்மா.
காலவெளி மட்டுமே கண்ணம்மா இங்கு
உண்மையென்றுரைத்தான்.
அவனறிவின் உச்சம் பற்றி கண்ணம்மா
பிரமித்துப்போகின்றேன்.
மனத்து அசை இன்னும் முடியவில்லை.
எப்பொழுதென்றாயினும் நீ கண்ணம்மா
எவ்விதம் அவனால் முடிந்ததென்று
எண்ணியதுண்டா ?
நான் எண்ணுகின்றேன் எப்பொழுதும் கண்ணம்மா.\
நான் வியந்துகொண்டிருக்கின்றேன் எப்பொழுதும்
கண்ணம்மா..

Friday, July 12, 2024

கவிதை; எங்கு போனார் என்னவர்? வ.ந.கிரிதரன் -


இங்குள்ள 'எங்கு போனார் என்னவர்?' என்னும் கவிதை எண்பதுகளில் மொன்ரியாலில் இருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியானது. பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் வெளியானது. எனது கவிதைத்தொகுப்பான 'எழுக அதிமானுடா' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.
 
காணாமல் போன தன் போராளிக் கணவனை அல்லது காதலனை நினைத்து வாடுமொரு பெண்ணின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதை. காணாமல் போனவன் பகைவனுடன் மோதி போர்க்களத்தில் மாய்ந்தானோ அல்லது உட்பகையால், உடல் நலிவால் , இராணுவ முகாமில் மறைந்தானோ என்று விடை தெரியா வினாக்களுடன் துயரில் ஆழ்ந்திருக்கின்றாள் அவள்.
இக்கவிதை ஒரு விதத்தில் அக்காலகட்ட நிகழ்வுகளை, வேதனையினை ஆவணப்படுத்துக்கின்றது என்றும் கூறலாம்.

Thursday, July 11, 2024

எழுத்தாளர் அ.ந.கந்தசாமி உரையாற்றியிருந்தால்...


எழுத்தாளர் அ.ந.கந்தசாமி  மனக்கண் நாவல் தினகரன் பத்திரிகையில் தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பைப்பெற்றது. பின்னர் அந்நாவலை அவரது நண்பர் எழுத்தாளர் சில்லையூர் செல்வராசன் இலங்கை வானொலியில் தொடர் நாடகமாக்கி ஒலிபரப்பினார். மனக்கண் நாவல் பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் தொடராக வெளியானது. மனக்கண் நாவல் தொடராக வெளியானபோது அமரர் ஓவியர் மூர்த்தியின் அழகான ஓவியங்களுடன் வெளியாகியது. நாவலின் முடிவில் அ.ந.க எழுதிய முடிவுரை சிறப்பானதோர் ஆய்வுக்கட்டுரை. எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைகளிலொன்று. ஓவியர் மனக்கண் நாவலுக்குத் தீட்டிய ஓவியங்கள் சிலவற்றையும், அ.ந.க மனக்கண்  நாவலுக்கு எழுதிய முடிவுரையினையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

அ.ந.க மேற்படி முடிவுரையில் கூறிய  கருத்துகளின் சில வரிகளையே இங்குள்ள காணொளியில் பேசுகின்றார். அவர் தனது 44ஆவது  வயதில் மறைந்து போனது துர்ப்பாக்கியமானது. அக்காலகட்டத்தில் இன்றுள்ளதுபோல் அலைபேசியே, ஒலி, ஒளிப்பதிவு கருவிகளோ சாதாரணமாகப் பழக்கத்தில் இல்லை. எனவே அவர் பேசுவதைக் கேட்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அவர் இருந்து பேசியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்ற என் அவாவின் விளைவே இக்காணொளி.

என் ஆரம்ப காலக் கவிதை முயற்சிகளும் வீரகேசரி, சிந்தாமணி & தினகரன் அமைத்துத்தந்த கவிதைக் களங்களும்!

மானுட உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் முன் நிற்பது கவிதையே. அதற்கு நிகர் வேறெதுவுமில்லை. குறைந்த வரிகளில் உணர்வுகள் எவையாயினும் அவற்றை வெளிப்படுத்தக் கவிதைகளால்தாம் முடியும். என்னைப்பொறுத்தவரையில் என் கவனம் பதின்ம வயதுகளில் கவிதையின் பக்கம் திரும்பியதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்: அப்பருவத்துக்குரிய உணர்வுகளுக்குக் கவிதை வரிகள் வடிகால்களாகவிருந்தன. அடுத்து எப்பொழுதுமே என் உள்ளத்தில் இருப்பு பற்றிய கேள்விகள்  மற்றும் , வர்க்கம், வர்ணம், இனம்,மதம்,மொழி, நாடென்று பல்வேறு பிரிவுகளால் ஏற்படும் மானுடரின் வாழ்வியற் பிரச்சினைகள், அவற்றின் விளைவான சவால்கள், துயரங்கள் எல்லாம் சிந்தையிலேற்படுத்திய பாதிப்புகளுக்குரிய வடிகால்களாக,வெளிப்படுத்தும் சாதனங்களாக எழுத்துகளேயிருந்தன. கவிதைகளில் அவற்றைக் குறைந்த வரிகளில் வெளிப்படுத்த முடிந்தன. என் எழுத்துகளில்  கவிதைகளுட்பட , நீங்கள் இம்மூவகைப்பண்புகளையும் காணமுடியும்.  இருப்பு பற்றிய கேள்விகள், மானுட அக உணர்வுகள் மற்றும் மானுடர் வாழும் சமூக, அரசியல் & பொருளியச் சூழல்களின் பாதிப்புகள் என் எழுத்துகளில் விரவிக் கிடப்பதை நீங்கள் காணலாம்.

இருப்பு பற்றிய என் ஆரம்ப காலக் கவிதையொன்று!


இங்குள்ள தோற்றத்தில் நானிருந்த வேளையிலே , 'ஆத்மாவின் கேள்வியொன்று என்னும் தலைப்பில், எண்பதுகளில் எழுதிய கவிதை வரிகள் இவை.. 16.11.1980இல்  வெளியான வீரகேசரி வாரவெளியீட்டின் உரைவீச்சுப் பகுதியில் பிரசுரமான கவிதை. 
 
 அக்காலகட்டத்தில் வெகுசனப் பத்திரிகைகள் , சஞ்சிகைகள் கவிதையின் புது வடிவமான புதுக்கவிதையின் பக்கம் தம் பார்வையைச் செலுத்தியிருந்தன. வீரகேசரி தனது வாரவெளியீட்டில் 'உரைவீச்சு' ,சிந்தாமணி 'மணிக்கவிதை' , தினகரன் 'கவிதைச் சோலை' என்னும் பெயர்களில் இவ்வகைக் கவிதைகளை வெளியிட்டு வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தன.

எழுத்தாளர் குரு அரவிந்தனின் 'கதிரவன் குடும்பம்' நல்லதொரு சிறுவர் நூல்!

குழந்தைகளுக்கான 'கதிரவன் குடும்பம்' நல்ல நூல்., இது போன்ற வானவியல் பற்றிய நூல்கள் குழந்தைகளுக்கு அவர்கள்தம் சிறந்த எதிர்காலத்துக்கு ...