Saturday, May 18, 2019

வ.ந.கிரிதரன் கவிதைகள் 39: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்!

எனது கவிதைகளில் 39 கவிதைகளின் தொகுப்பிது. எதிர்காலத்தில் என் கவிதைகளை ஒரு தொகுப்பாகக் கொண்டுவரும் எண்ணமுண்டு. 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் தலைப்பில் அத்தொகுப்பு வெளியாகும்.

1. ஆசை!

அர்த்த ராத்திரியில் அண்ணாந்து பார்த்தபடி
அடியற்று விரிந்திருக்கும் ஆகாயத்தைப் பார்ப்பதிலே
அகமிழந்து போயிடுதல் அடியேனின்
வழக்கமாகும்.

கருமைகளில் வெளிகளிலே கண் சிமிட்டும்
சுடர்ப் பெண்கள் பேரழகில் மனதொன்றிப் பித்தனாகிக்
கிடந்திடுவேன்.

நத்துக்கள் கத்தி விடும் நள்ளிரவில்
சித்தம் மறந்து
சொக்கிடுவேன்.

பரந்திருக்கும் அமைதியிலே பரவி வரும் பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்டபடி பைத்தியமாய்ப்
படுத்திடுவேன்.

இயற்கையின் பேரழகில் இதயம் பறிகொடுத்தே
இருப்பதென்றால் அடியேனின்
இஷ்ட்டமாகும்.

 
2. இயற்கையே போற்றி!

எங்கும் வியாபித்து, எங்கும் பரந்து எங்கனுமே,
சூன்யத்துப் பெருவெளிகளும் சுடர்களும், கோள்களும்,
ஆழ்கடலும், பாழ் நிலமும், பொங்கெழி லருவிகளும்,
பூவிரி சோலைகளும இன்னும்
எண்ணற்ற , எண்ணற்ற கோடி கோடி யுயிர்களுமாய்
வியாபித்துக் கிடக்கும் பரந்து கிடக்கும்
இயற்கைத் தாயே! உனைப் போற்றுகின்றேன்.
நானுனைப் போற்றுகின்றேன்.
பொருளும் சக்தியுமாய்
சக்தியே பொருளுமாய்
E=M(C*C)
இருப்பதுவே யில்லாததாய்
இல்லாததே யிருப்பதுவாய்
உண்மையே பொய்மையுமாய்
பொய்மையே உண்மையுமாய்
நித்தியமே அநித்தியமுமாய்
அநித்தியமே நித்தியமுமாய்
புதிர்களிற்குள் புதிராகக்
காட்சிதரும் இயற்கைத்தாயே! உனைப்
போற்றுகின்றேன்! நானுனைப் போற்றுகின்றேன்.

3. தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை.

தனிமைகளின் சாம்ராஜ்யங்களில் நான் கட்டுண்டு கிடந்திடுகின்றேன்
அடிமையாகவா? அன்றி ஆண்டானாகவா? இல்லை
பூரணம் நிறைந்ததொரு சுதந்திரப் பறவையெனவே.
இசை பாடிடுமெழிற் புள்ளெனவே.

கட்டுக்களற்ற உலகில் கவலைக் காட்டேரிகள் தாமேது?
சட்டங்களற்ற வுலகில் சோகங்கள் தாமேது?
ஒளித்தோழர்கள் வெட்கி ஒளிந்தனரென் பறத்தலின் பின்னே.
பிரபஞ்சத்து வீதிகளில் பறந்து மீள்கையில் படர்வது
பெருமிதமே.

நோக்கங்கள் விளங்கி விட்ட வாழ்வில்
தாக்கங்கள் தானேது? அன்றி
ஏக்கங்கள் தானேது?

தனிமைகளின் சாம்ராச்சியங்களில்
நான் கட்டுண்டு கிடந்திடுகின்றேன்
அடிமையாகவா? அன்றி ஆண்டானாகவா? இல்லை
பூரணம் நிறைந்ததொரு சுதந்திரப்
பறவையெனவே.
இசை பாடிடுமெழிற் புள்ளெனவே.

4. அதிகாலைப் பொழுதுகள்!

அதிகாலைப் பொழுதுகள் அழகானவை.பிடித்தமானவை.
சில அதிகாலைப்பொழுதுகளில்
அப்பாவின் தோளில் சாய்ந்தபடி
அடிவானச் சிவப்பு கண்டு
அதிசயித்திருக்கின்றேன்.
அப்பொழுதெல்லாம் விண்ணில் அழகாகக் கோடிழுக்கும்
நீர்க்காகத்தின் நேர்த்தி கண்டு நினைவிழந்திருக்கின்றேன்.

இன்னும் சில அதிகாலைப் பொழுதுகளோ அற்புதமானவை.
விடாது பெய்த இரவின் அடை மழையில்
குட்டைகள் நிரம்பியதில் வாற்பேத்தைகள் கும்மாளமிடும்.

பெரும்பாலான அதிகாலைப் பொழுதுகளில்
நகரிற்குப் படையெடுப்பர் நம் தொழிலாள வீரர்.
அவர்தம் விடிவு வேண்டி அச்சமயங்களீல்
ஆவேசம் அடைந்திருக்கின்றேன்.

விரகத்தால் துடிக்கும் பனைப்பெண்டிர்;
மூசிப் பெய்யும் மாசிப்பனி; பனிதாங்கும் புற்கள்; புட்கள்.
இவையெல்லாம் அதிகாலைப் பொழுதுகளிற்கு
அழகூட்டின. ஆயினெப்பொழதுமே
அதிகாலைப் பொழுதுகள் அது போன்றே யிருந்ததில்லை.

சில அதிகாலைப் பொழுதுகள் அவலத்தைத் தந்திருக்கின்றன.
அப்பொழுதெல்லாம் எரிந்து கன்றி யுப்பிய உடல்களை
அதிகாலைகளில் கண்டிருக்கின்றேன்.
இரவின் அனர்த்தங்களை அவை சோகமாக
எடுத்துரைக்கும்;மெளனமான சோகங்கள்.

இப்பொழுதெல்லாம் அதிகாலைப் பொழுதுகள் முன்புபோல்
இல்லை தான்.
அவை அழகாகவுமில்லை. அவலட்சணமாகவுமில்லை. அவை
அற்புதமாகவுமில்லை. ஏன் ஆபத்தாகக் கூடத் தெரிவதில்லை.
எத்தனை தரம் தான் 'காங்ரீட்' மரங்களையும்
கண்ணாடிப் பரப்புக்களையும் பார்ப்பது?

இப்பொழுதெல்லாம் அதிகாலைப் பொழுதுகள் சலிப்பைத் தருகின்றன,
போரடிக்கின்றன.
இருந்தாலும் இன்னமும் 'விடிவை' எதிர்வு கூற மட்டும்
அவை தயங்குவதேயில்லை.

5. இரவு வான்!

விரிந்து,பரந்து, இருண்டு இரவு வான் முடிவிலியாய் முடிவற்றுத்
தெரியும்; விரியும்; புரியுமா ?
பார்வைப் புலனின் புலப்படுத்துதல் இரவு வானின் இருப்பின்
உண்மையையா ?
இருண்டிருக்கும் இந்த வான் இயம்புவதிலேதும் இரகசியம்
தானுண்டோ ? நெஞ்சேயறி.
காண்பதெல்லாம் காட்சிப் பிழையென்று காட்டுமோவிந்த
இரவு வான்.

ஒளிர்சுடரொவ்வொன்றும் ஒளிவருடப் பிரிவினில்
ஒளிரும்; ஒரு கதை பகரும்;
விரியும் விசும்பும் விடை சொல்லிவிரியும்;
காலத்தின் பதிவுகளைக் காட்டிடுமொரு காலக் கண்ணாடியா
இந்த இரவு வான் ?

முடிந்தவற்றை, மடிந்தவற்றைக்
காவிவரும் ஒளிச்சுடர்கள்.
புராதனத்துப் படிமங்கள் தாங்கி நிற்குமேயிந்த
இரவு வான்;

சுடர்கோடியிருந்தும் இருண்டிருக்கும் இரவு வான்;
அழிவு, தோற்றம், வளர்ச்சி பல
புலப்படுத்தும் இரவு வான்.

நத்துகள் கத்திடுமொரு நள்ளிரவில்
நிலாகண்டு, அதன் வனப்பில்
நெஞ்சிழந்து, நெகிழ்ந்து கிடக்கையிலும்,
வெளிபோல் உள்ளுமொரு இரவு வானாய்
இருக்குமிந்த நெஞ்சும்
காலத்தினடுக்குகளைச் சுமந்தபடி
சாட்சியாக.

6. சொப்பன வாழ்வினில் மயங்கி.....

இரவில் மட்டும் பூத்திடும் தாமரைகளா!
யார் சொன்னது வருடத்தில் ஒரு முறைதான்
கார்த்திகைத் திருவிழா வருமென்று ?
இங்கு ஒவ்வொரு இரவும் திருவிழாதானே ?

யார் சொன்னது நட்சத்திரங்கள் கொட்டிக் கிடப்பது
விண்ணில் மட்டும் தானென்று ?
இந்த மண்ணிலும் தான்.

சுடர்களை மறைத்தன நகரத்துச்
சுடர்களே.
மரங்களை மறைத்தன நகரத்து
மரங்களே.

சுடரிழந்த விண்ணை ஈடு செய்யவா
சுடர் கொடுத்ததிந்த மண்.
நகரத்து மண்.

மரமிழந்த மண்ணை ஈடு செய்யவா
மரம் தந்ததிந்தவிண்.
நகரத்து விண்.

மண்ணில் வேரறுத்ததாலோ
விண்ணில் வேர் பதிக்கவெழுந்தன
இந்த மரங்கள்!

அடைய வந்த புட்கள் புல்லாகிப் போன
விந்தையென்னே!

விரையும் பேராறுகளை, கணமேனும் ஆறுதலற்றோடும்
பெரு நதிகளை நீங்கள் வேறெங்காவது கண்டதுண்டா ?

உங்கள் வேகத்தைக் கண்டு வெட்கப்பட்டுத தானோ
இருக்கும் ஒன்றிரண்டும் ஓடையாகி ஓரத்தில்
ஒதுங்கினவோ ?

சொப்பன வாழ்வினில் மயங்கி
நகரத்துச் சொப்பன வாழ்வினில் மயங்கி
உனை மறந்தோம் ?
இயற்கை உனை மறந்தோம்.
நாம் உனை மறந்தோம்.

7. களு(ழு)த்துறை!

நேற்றுத் தான் அவன் விடுதலையாகி வந்திருந்தான்.
இரு வருடங்கள் அவனுக்கு
இரு யுகங்களாகக் கழிந்திருந்தன.

நண்பனே! அவர்கள் உன்னை , உன் தோழர்களை
என்னவெல்லாம் செய்தார்கள் ?
உன் தோழர்கள் அங்கு என்னவெல்லாம் செய்வார்கள் ?
காலத்தினையெவ்விதம் கழிப்பரோ ?

ஆசனத்துள் 'எஸ்லோன் ' வைத்து அதனுள் முள் வைத்து
இழுத்த இழுப்பினில் நண்பன் ஒருவனின் குடலே
காணாமல் போனதுவாம்.
நண்பன் கூறினான்.

குடல் காணாமல் போனவன் இன்னும் பால்பவுடர்
கலந்து தான் உணவருந்துகின்றானாம்.
நண்பன் மேலும் சொன்னான்.

துளையிடும் கருவியால் ஒருவன் குதியினைத்
துளையிட்டதில் அவன் தொலைந்தே போனானாம்.
நண்பன் சொன்னான்.

கற்பனையும் கனவுகளுமாக வந்த பிஞ்சொன்று
'பிந்துனுவ 'வில் பஞ்சாகிப் போனதுவாம்.

இது போல் பல, பல...
இன்னும் பற்பல....
நண்பன் சொன்னான்.

'நான் தப்பி விட்டேன். ஆனால்..அவர்கள்.. '
நண்பன் சொன்னான்.

வெளியில் வீசும் புயலில் அவர்கள்
மறக்கப் பட்டுப் போனார்களா ?
வருடங்களெத்தனை அவர்
வாழ்வில் வந்து போயின ?
அவர்கள் உள்ளே இருப்பது
யாராலே ? யாருக்காக ?
எதனாலே ? எதற்காக ?

கூற்றுவனின் வாசலிலே குற்றமற்றவர் சுற்றமிழந்து
இன்னுமெத்தனை நாள் வாடுவதோ ?
குரல் கொடுப்பார் யாருளரோ ? யாருளரோ ?

[ *இலங்கை தீவில் அப்பாவித் தமிழ் மக்கள் பலர் களுத்துறை வெலிக்கடைச் சிறைச்சாலையுட்படப் பல சிறைச்சாலைகளில் வருடக் கணக்கில் ,நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப் படாமல், கைதிகளாகத் தடுத்து வைக்கப் பட்டிருக்கின்றார்கள். இவர்கள் அடையும் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சிலர் 'பிந்துநுவ ' போன்ற சிறைச்சாலைகளில் படுகொலை செய்யப் பட்டுமுள்ளார்கள். அண்மையில் கூட இவர்கள் தமது இரத்ததில் கடிதம் எழுதி நீதி கேட்டிருப்பதாகப்பத்திாிகைகளில்  செய்திகள் வெளிவந்திருந்தன.]

8. அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்?

'காங்ரீட் '! காங்ரீட் '! காங்ரீட் '
சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.

'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.

அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில் மயங்கிக்
கிடக்கும் இட வெளிகள்.

வாயுப் படைகளின் வடிகட்டலில்
வடியுமுஷ்ணக் கதிர்கள்.
பனித் துளிகளின் குமிண் சிரிப்பினில்
சிலிர்த்திடும்
புல்வெளிகள் பற்றிய கற்பனைகளின்
இனிமையில், நீலப்படுதாவின் கீழ்
குளிர்ந்து கிடக்கும் நிலமடந்தை
பற்றிய சோக நினைவுகள்.

தலைகவிழ்ந்து அரவணைக்கும்
விருட்ஷக் கன்னியர்தம் மென்தழுவல்
ஸ்பரிசக் கனவுகள்.

செயற்கையின தாக்கங்கள்
படர்ந்திட்ட
இயற்கையின் தேக்கங்கள்.

மரங்களில் புல்வெளிகளில் மந்தைகளாகக்
குழுக்களாகக் குகைகளில்
நடுங்கடிக்குமிருண்ட இராவினில்
நடுங்கி மின்னிடுமொளியினில்
மருண்டு கொட்டிடும் மழையினுள்
சுருண்டு
புரியாத பொழுதுகளில்
பதுங்கிக் குடங்கித் தொடர்ந்திட்ட
ஆதிப்பயணங்கள்.

இயற்கையின் தாக்கத்தினுள்
சுழன்றிட்ட வட்டங்களில்
மயங்கிக் கிடந்திட்ட வாழ்வு
வட்டங்கள். இன்
அதிகாலைப் பொழுதுகளா ?
எழில் கொட்டிய இன்பப் பொழில்களா ?

ஞானத்தினிறுமாப்பில்
ஆகாசக் கோட்டை கட்டும்
நெஞ்சினிலோ....
ஆ....அந்த அமைதி! அந்த இனிமை!
எங்கே ? எங்கே ? அவையெல்லாம்
எங்கே ? ஐயோ..அவையெல்லாம்
எங்கே போய் அடியோடு தொலைந்தனவோ ?
பொறி கக்கும் புகையினில் சுவாசம் முட்டி
புகைந்திட்ட வர்க்கப் போர்களால்
நிலைகுலையும் ககனத்தில்
குண்டுகளின் தாண்டவம்.

அச்சமின்றிப் பறந்த ஆருயிர் நண்பர்களே!
நகை தவள நீந்திச் சுகித்த என்னருமைத் தோழர்களே!
தென்றலணைப்பில் தூங்கிக் கிடந்திட்ட
விருட்சத்துக் குழந்தைகளே!
ஆறறிவால் நிலைகுலைந்து
நிற்கும் பிரிய சிநேகிதர்களே!
வளர்ச்சி தந்த வளர்ச்சியிலோ... ?

விரக்தி! அமைதியின்மை! ஆங்காரம்!
போர்! போர்!போர்!
போரென்றால்..போர்!போர்!போர்!

ஆ....

வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வழுதானென்ன ? வழுதானென்ன ?
வழுதானென்ன ?

ஆ..அந்த

அமைதி!அமைதி!அமைதி!
அன்பு!அன்பு!அன்பு!\இனிமை!இனிமை!இனிமை!
அதி மானுடரே!

எங்கு போயொளிந்தீர்?
நீர்! எங்கு போயொளிந்தீர்?
நீர்! எங்கு போயொளிந்தீர்?


9. கவலையுள்ள மனிதன்!

எனக்குச் சாியான கவலை.
எதற்கெடுத்தாலும் எப்பொழுதும் ஒரே கவலை தான்.
கவலைக்கொரு எல்லை வேண்டாமா ?
என்ன செய்வது ? குப்புறப் படுத்தால் பின்னால்
வானமே இடிந்து விழுத்து விட்டாலென்ற கவலை.
அதற்காக மல்லாந்து படுக்கவா முடிகிறது.
முடிந்தால் விழுகிற வானத்தைத் தாங்குவதெப்படி
என்கிற கவலை.
யாருக்குத் தான் என் கவலை புரியப் போகின்றதோ ?
சும்மாவா சொன்னார்கள் அனுபவித்துப் பார்த்தால் தான்
தெரியும் அவரவர் கவலை அவரவருக்குப்
புரியுமென்று.

10. விழி! எழு! உடைத்தெறி!

தளைகள்!தளைகள்!தளைகள்! எங்குமே..நானாபக்கமுமே..
சுற்றிப் படர்ந்திருக்கும் தளைகள்!தளைகள்!தளைகள்!
சுயமாகப் பேசிட, சிந்தித்திட, உன்னையவை விடுவதில்லை.
நெஞ்சு நிமிர்த்தி நடந்திட அவை சிறிதும் நெகிழ்ந்து கொடுப்பதில்லை.

உள்ளும் புறமும் நீ உருவாக்கிய தளைகள்.
இன்றுனை இறுக்கி நெருக்கி உறுஞ்சிக் கிடக்கையில்..
விழி! எழு! உடைத்தெறி!

உன் கால்களை, உன் கைகளை, உன் நெஞ்சினைப்
பிணைத்து நிற்கும் தளைகளை, விலங்குகளை
உடைத்துத் தள்ளு! வேரறுத்துக் கொல்லு!

11. எங்கு போனார் என்னவர்?

அன்றொரு நாள் பின்னிரவில் ஆயுதம்தனையேந்திப்
போனவர் என்னவர் தான். போனவர் போனவரே.
போராடிச் சாவதுவே மேலென்று போனவரை
யாரேனும் பார்த்தீரோ?

பகைவன்தன் போர்க்களத்தே போனாரோ?
அன்றி 'பூசா'வில் தான் புதைந்தாரோ?
உட் பகையால் உதிர்ந்தாரோ?
உடல் படுத்தே மடிந்தாரோ?

போனவரை யாரேனும் பார்த்துவிட்டால் சொல்வீரோ?
அன்னவரை எண்ணியெண்ணி அகமுடையாளிருப்பதாக.
மன்னவரின் நினைவாலே மங்கையிவள் வாழ்வதாக...

12.  இயற்கைத்தாயே!

போதுமென்றே திருப்தியுறும் பக்குவத்தைத் தந்துவிடு!
தாயே! இயற்கைத்தாயே! உந்தன்
தாள் பணிந்து கேட்பதெல்லாம்
இதனைத்தான். இதனைத்தான்.

விதியென்று வீணாக்கும் போக்குதனை விலக்கி விடு.
மதி கொண்டு விதியறியும் மனத்திடத்தை மலர்த்திவிடு.
கோள்கள், சுடர்களெல்லாம் குறித்தபடி செல்வதைப்போல்
வாழும் வாழ்வுதனை என் வாழ்நாளில் வளர்த்துவிடு.

தாயே! இயற்கத்தாயே! உந்தன் தாள் பணிந்து கேட்பதெல்லாம்
இதனைத்தான். இதனைத்தான்...

13. விடிவெள்ளி
அதிகாலை மெல்லிருட் போதுகளில் அடிவானில் நீ
மெளனித்துக் கிடப்பாய்.
படர்ந்திருக்கும் பனிப்போர்வையினூடு ஊடுருவுமுந்தன்
நலிந்த ஒளிக்கீற்றில் ஆதரவற்றதொரு சுடராய்
நீ ஆழ்ந்திருப்பாய்
விடிவு நாடிப் போர் தொடுக்கும் என் நாட்டைப் போல.

விடிவின் சின்னமென்று கவி வடிப்போர் மயங்கிக்கிடப்பர்.
ஆயின் சிறுபோதில் மங்களிற்காய் வாடிநிிற்கும்
உந்தன் சோகம் புரிகின்றது.

அதிகாலைப் போதுகளில் சோகித்த உந்தன்
பார்வை படுகையிலே என் நெஞ்சகத்தே
கொடுமிருட் காட்டில் தத்தளிக்கும்
என் நாட்டின் என் மக்களின்
பனித்த பார்வைகளில் படர்ந்திருக்கும் வேதனைதான்
புரிகின்றது.

என்றிவர்கள் சோகங்கள் தீர்ந்திடுமோ?
என்றிவர்கள் வாழ்வினில் விடிவு பூத்திடுமோ?
விடிவினை வழிமொழியும் சுடர்ப்பெண்ணே!
வழிமொழிந்திடுவாய்.

14. சுடர்ப்பெண்கள் சொல்லும் இரகசியம்?

இருண்ட அடிவானை நோக்குவீர். ஆங்கு
இலங்கிடும் சுடர்ப்பெண்கள் உரைத்திடும்
இரகசியம் தானென்ன?
புரிந்ததா? புரிந்திடினோ, பின்னேன் நீவிர்
புழுதியில் கிடந்துருள்கின்றீர்?
சாக்கடையில் புழுத்துளம் வேகுகின்றீர்?
சூன்யத்தைத் துளைத்து வருமொளிக்கதிர்கள்.
நோக்குங்கள்! நோக்குங்கள்! நோக்கம் தான்
தெரிந்ததுவோ? தெரிந்துவிடின்
போக்கற்ற பிறவியெனப் புவியில்
தாக்குண்டலைகின்றீரே? ஏன்?

'அஞ்சுதலற்ற கதிர்கள். அட,
அண்டத்தே யார்க்கும் அஞ்சுவமோ?
ஓராயிரம் கோடி கோடியாண்டுகள்
ஓடியே வந்தோம். வருகின்றோம். வருவோம்.
காலப் பரிமாணங்களை வெளியினிலே
காவியே வந்தோம்.
சூன்யங்கள் கண்டு சிறிதேனும்
துவண்டுதான் போனோமோ?
அஞ்சுதலற்ற நெஞ்சினர் எம்முன்னே
மிஞ்சி நிற்பவர் தானுண்டோ?
தெரிந்ததா? விளக்கம் புரிந்ததா?
தெரிந்திடினோ? அன்றி புரிந்திடினோ?
உரிமையற்ற புள்ளெனவே உழல்கின்றீரே யிவ்வுலகில்.
அட,
துள்ளியெழத் தான் மாட்டீரோ?
புத்துலகம் சமைத்திடத்தான் மாட்டீரோ?
புரிந்ததா? சுடர்ப்பெண்கள் பகரும் இரகசியம்
புரிந்ததா?

15. விண்ணும் மண்ணும்!

விரிந்து கிடக்குமிந்த விசும்பு
ஓர் உளவியல் நிபுணரைப் போல்
பலருக்கு அறிவுரை பகரும் அதிசயத்தினைப்
பார்த்து ஒவ்வொரு முறையும்
அதிசயித்துப் போகின்றேன்.

'வானத்தைப் போல்.....'
அப்பொழுதெல்லாம் இவ்விதம் நான்
எனக்குள்ளேயே அடிக்கடி கூறிக்
கொள்வதில் ஒரு வித மகிழ்ச்சியில்
பூரித்துப் போகின்றேன்.

இவ்விதமான வேளைகளில் ஒரு மாபெரும்
நூலகத்தினைப் போல் இந்த வானம்
எவ்வளவு விடயங்களைத் தன்னுள்
தாங்கி வைத்திருக்கின்றதென்பதை
உணர்ந்து கொள்கின்றேன்.
கற்பதற்கெவ்வளவு உள.
கற்பதற்கெவ்வளவு உள.
காலவெளி நூலகத்தில்தான்
கற்பதற்கெவ்வளவு உள.

அளவுகளுக்குள்ளிருந்து
ஆகாயம் பார்க்கும் மண்பார்த்து
அப்பொழுதெல்லாம் இந்தவான்
தனக்குள் நகைத்துக் கொள்ளுமோ!

அப்பொழுதெல்லாம் கீழ்க்கண்டவாறு
நினைத்துக் கொள்வேன்:
'படைகளுக்குள்ளோரிருப்பு! மேலும்
படையெடுப்பெதற்கு?'

ஆகாயத்தின் இயல்புகளில் சில:
அகலம்! விரிவு!
அவை கூறும் பொருளெம்
அகம் உணர்தல் சாத்தியமா?
'அகத்தின் விரிவில், அகலத்தில்
மண்ணிலின்பம்! அட மானுடரே!'

தன்னியல்பினுள் விடைபொத்தி வைத்திருக்கும்
விசும்பு மண்ணின் கேள்விகள்
அனைத்துக்கும்.
விண்ணிலிருந்து மண்
கற்பதற்கு நிறைய உள.
கற்பதற்கு நிறைய உள.

16.  விருட்சங்கள்!

திக்குகளெங்கும் ஓங்கி வளர்ந்த விருட்சங்கள்!
எண்ணிலடங்கா விருட்சக் காட்டினுள்
தன்னந்தனியாக நான்
நடந்து கொண்டிருக்கின்றேன்.

வனமெங்கனும் கவிந்து கிடக்குமொரு
மோனம்.

கோடை வெயிலின் சுட்டெரிப்பில்
தகித்துக் கிடக்கும் விருட்சங்கள்
தகிப்பினை வாங்கித் தரும்
தண்மையின் கீழ் என் பயணம்
தொடரும்.

அமைதியான, ஆரவாரமற்ற பெருந்தியாகம்!
பலன் கருதாப் புரியப்படும் பணி!

எத்தனை விந்தையான உயிரினங்கள்!
அத்தனைக்குமோர் ஆதரவு!
அரவணைப்பு!

ஓங்கிய விருட்சங்களுக்குள்
ஒரு கோடி பிரிவுகள்! ஆயின்
ஒற்றுமையாய் ஒருமித்தவை தரும்
தண்நிழல்!

பிரமிப்பில் தொடருமென் பயணம்.

ஆறறிவு பிளந்து வைக்கும் மண்ணில்
கீழறிவின் பேரறிவு!

நன்மைக்காய்த் தனை மறக்கும்
இன்மனத்தினிருப்பிடமாயிவ்
விருட்சங்கள்!

தமையழித்த போதும்
தண்தரும் விருட்சங்கள்!

17. நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!

- எழுத்தாளர் மாலன் சாகித்திய அகாதெமிக்காக 'அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு -'புவி எங்கும் தமிழ்க் கவிதை' என்னும் கவிதைத்தொகுப்பினைத் தொகுத்துள்ளார். அத்தொகுப்பு அண்மையில் வெளியாகியுள்ளது.   22 நாடுகளில் வசிக்கும்  தமிழ்க் கவிஞர்களின் 70 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. மேற்படி தொகுப்பில் எனது கவிதையொன்றும் இடம் பெற்றுள்ளது. "நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'" என்பது அக்கவிதையின் தலைப்பு, அக்கவிதையினையே கீழே காண்கின்றீர்கள்:

நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!
 
உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?

ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று.

விரிவெளியில் படர்ந்து கிடக்குமுன்
நகைப்போ , நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது உன் தந்திரம் மிக்க
கதையளப்போ எனக்கொன்றும் புதியதல்லவே.

இரவுவானின் அடுக்குகளில்
உனது சாகசம் மிக்க
நகைப்பினை உற்றுப் பார்த்திடும்
ஒவ்வொரு இரவிலும்,
நட்சத்திரச் சுடர்களில்,
அவற்றின் வலிமையில்
உன்னை உணர்கின்றேன்.

எப்பொழுதுமே இறுதி வெற்றி
உனக்குத்தான்.

எப்பொழுதுமே உன்காட்டில்
மழைதான். அதற்காக
மனந்தளர்வதென் பண்பல்ல. ஆயின்
உன்னை வெற்றி கொள்ளுதலுமென்
பேரவாவன்று.பின்
உனைப் புரிதல்தான்.

ஓரெல்லையினை
ஒளிச்சுடருனக்குத்
தந்துவிடும் பொருளறிந்த
எனக்கு
அவ்வெல்லையினை மீறிடும்
ஆற்றலும், பக்குவமும்
உண்டு; புரியுமா?

வெளியும், கதியும், ஈர்ப்பும்
உன்னை, உன் இருப்பினை
நிர்ணயித்து விடுகையில்
சுயாதீனத்துடன்
பீற்றித் திரிவதாக உணரும்
உன் சுயாதீனமற்ற,
இறுமாப்புக்கு
அர்த்தமேதுமுண்டா?

இடம், வலம் , மேல், கீழ்.
இருதிசை, நோக்கு கொண்ட
பரிமாணங்களில் இதுவரையில்
நீ
ஒருதிசையினைத் தானே காட்டி
புதிருடன் விளங்குகின்றாய்?
உன் புதிரவிழ்த்துன்
மறுபக்கத்தைக் காட்டுதலெப்போ?

இரவி , இச் சுடர் இவையெலாம்
ஓய்வாயிருத்தலுண்டோ? பின்
நான் மட்டுமேன்?

நீ எத்தனை முறைத்தான்
உள்ளிருந்து
எள்ளி நகைத்தாலும்
மீண்டும் மீண்டும்
முயன்று கொண்டேயிருப்பேன்.
நீ
போடும் புதிர்களுக்கு
விளக்கம் காணுதற்கு
முயன்று கொண்டேயிருப்பேன்.

வேதாளங்களின் உள்ளிருந்து
எள்ளி நகைத்தல் கண்டும்
முயற்சியில்
முற்றுந் தளராதவன் விக்கிரமாதித்தன்
மட்டும்தானா?

18. இருப்பொன்று போதாது இருத்தல் பற்றியெண்ணி இருத்தற்கு!

படைப்பின் நேர்த்தியெனைப்
பிரமிக்க வைத்திடுதல்போல்
பாரிலெதுவுமில.

வீழும் மலர், ஒளிரும் சுடர்,
துணையில் களிப்புறும் இணை,
நிலவுமனைத்திலுமிங்கு
நிலவும் நேர்த்தியென்
நினைவைக் கட்டியிழுத்தல்போல்
நினைவெதுவுமில.

முறையெத்தனையெனினும்
மறையாத நினைவுப் புயல்!

இருப்பு, இன்னும் புதிர் மிகுந்து
இருந்திடுமோ? இல்லை
இதுவும் 'நிச்சயமற்றதொரு
தற்செயலின்'
சாத்தியம் தானோ?

இருப்பொன்று போதாது
இருத்தல் பற்றியெண்ணி
இருத்தற்கு!

19. அலைகளுக்கு மத்தியில் அலையென அலைதல்!

நீர்த்துப் போன அலைகளும்,
வீர்யம் நிறைந்தவையுமாக,
மிகச்சாதாரணமான ஒலி அலைகள் தொடக்கம்
மின்காந்த அலைகள், வானொலி அலைகளென
(காமா, அகச்சிவப்பு, புற ஊதா, X-கதிரெனப் பலப்பல)
அலைகளால் நிறைந்து கிடக்கின்றதிந்தப்
பிரபஞ்சத்துப் பெருவாவி.

பரந்து, பொசிந்து, வியாபித்துக் கிடக்குமிந்த
அலைகளில் இருக்கிறது இந்தப் பிரபஞ்சத்தின்
இது நாள் வரையிலான வரலாறு.

வரலாறென்றால் எனக்கு மிகவும்
பிடித்தமானதொரு துறை.

வரலாற்றினை ஆய்வு செய்தல்
எப்பொழுதும் சலிப்பினைத்
தருவதில்லை; மாறாக
வியப்பினைத்தான்.

எங்கோவொரு தொலைவிலொரு
ஆத்மா (இருக்கும் பட்சத்தில்
அல்லது உண்மையாகவிருக்கும்
பட்சத்தில்)
இதனூடு காலத்தின் பரிணாம வளர்ச்சியினை
அல்லது இந்த அண்டவெளியின்
இதுவரையிலான அன்றாட நடப்புகளை,
போர்களை, உணர்ச்சி வெடிப்புகளை,
துக்கத்தினை, மகிழ்ச்சியினையெல்லாம்
அறிந்து கொள்ளும் பக்குவம்பெற்றிருக்கும்
பக்குவமடைந்திருக்கலாம்;

அதன் மூலம்
வியப்பும், திகைப்பும் அடைந்து கொண்டிருக்கலாம்
இங்கு நான், இப்பொழுது, இக்கணத்தில்
அடைந்து கொண்டிருப்பதைப் போல.

வியப்பாக இருக்கிறது அலைகளின்
ஆற்றலை எண்ணுகையில்.

அலைகளின் வேகம் பற்றித்தான்
இதுவரையில் பிரமித்திருந்தேன். ஆனால்
இப்பொழுதுதான் அவற்றின்
மறுபக்கத்தின் மகி¨யெனை
பிரமிப்பிலாழ்த்திக் கொண்டிருக்கின்றது..

இந்த வகையிலவை வெறும்
வரலாற்றுச் சுவடுகள் மட்டுமல்ல.

காலத்திரையினில் விரிந்திடுமவற்றின்
விசும்புக் காட்சிகள் தொடர்ந்தும்
வியப்பினையே தருகின்றன.

அலைகள்தானெத்தனை வியப்பானவை;
புதிரானவை.

அலைகளுக்குள் ஆடுமென்னிருப்பும்
வியந்தபடி, அறிய முனைந்தபடி
ஆடிடும்
இன்னுமொரு அலையென
அலைந்தபடி.

20. ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்!

மரங்களிலிருந்து 'காங்ரீட்' மரங்களிற்கு...
குரங்கிலிருந்து மனிதனிற்கு...
ஆதிமானுடத்திலிருந்து அதியுயர் மானுடத்திற்கு...
பரிணாம நிகழ்வு, வளர்ச்சி
என்கின்றது
முந்தாநாள் சந்திரனில் கால் பதித்தவனின்
சுற்றம்.
இதற்கொரு விளக்கம் வேறு...
ஒளியையுறுஞ்சுதலென்பது இவ்விரு
விருட்சங்களிற்கும் பொதுவான செயலென்று
கருத்தியல் வேறு.
உறுஞ்சுதலிலொன்றெனினுமிவை
உம்மைப்போல் விருட்சத்தோழரே!
உணவைப் படைப்பதில்லையே?
உயிரையெமக்குத் தருவதில்லையே?
தோழரே! நீரோ மேலும்
நிழலைத்தந்தீர்! உமது
காயைத்தந்தீர்! கனியைத்தந்தீர்.!
இலையைத்தந்தீர்!
இறுதிலும்மையே தந்தீர்!
ஆனால்.......
நவீன விருட்சங்களிவை
தருவதென்ன?
'நன்றி மறத்தல்' நம்மியல்பன்றோ?
நன்றியை மறந்தோம்.
நண்பருனது தொண்டினையிகழ்ந்தோம்.
இதனால்
இன்றெமக்கு
இரவு வானத்துச் சுடரையும்
நிலவுப்பெண்னின் எழிலையும்
பாடும் புள்ளையும்
இரசிக்கும்
உரிமை கூட
மறுதலிக்கப் பட்டு விட்டது.
உம்மையிழந்ததினால்
இந்த மண்ணும்
உலர்ந்து போனது.
'எரியுண்ட தேச'மென்பதாக
இன்று
எமது கிரகமும்
'எரியுண்ட கிரகம்'
என்பதாச்சு.

21.  எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு..

முகமில்லாத மனிதர்களிற்காகவும்
விழியில்லாத உருவங்களிற்காகவும்
கவிதைத் தூது விடுப்பர். ஆயின், யான்
அவர்களிற்கல்ல நண்பா! உனக்குத்தான்
அனுப்புகின்றேனிச் செய்திதனை.
உன்னை நான் பார்த்ததில்லை.
பார்க்கப் போவதுமில்லை.
உனக்கும் எனக்குமிடையிலோ
ஒளியாண்டுச் தடைச்சுவர்கள்.
'காலத்தின் மாய' வேடங்கள்.
ஆயின் நான் மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
நிச்சயமாய் நானுனை நம்புகின்றேன். எங்கேனுமோரிடத்தில்
நீ நிச்சயம் வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய். ஆம்!
வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.
காடுகளில் , குகைகளில் அல்லது கூதற்குளிர்படர்வரைகளில்
உன்
காலத்தின் முதற்படியில்...
அல்லது
விண்வெளியில் கொக்கரித்து
வீங்கிக் கிடக்கும் மமதையிலே..
சிலவேளை
போர்களினாலுந்தன் பூதலந்தனைப்
பொசுக்கிச் சிதைத்தபடி அறியாமையில்...
ஒருவேளை
அதியுயர் மனத்தன்மை பெற்றதொரு
அற்புதவுயிராய்...
ஆயினும் உன்னிடம் நான்
அறிய விரும்புவது ஒன்றினையே..
'புரியாத புதிர்தனைப் புரிந்தவனாய்
நீயிருப்பின்
பகர்ந்திடு.
காலத்தை நீ வென்றனையோ?
அவ்வாறெனின்
அதையெனக்குப் பகர்ந்திடு.
பின் நீயே
நம்மவரின் கடவுள்.
காலத்தை கடந்தவர் தேவர், கடவுளென்பர்
நம்மவர்.
இன்னுமொன்று கேட்பேன்.
இயலுமென்றா லியம்பிடு.
இவ்வாழ்வில் அர்த்தமுண்டோ?
இதனை நீ அறிந்தனையோ?
உண்டெனில் அர்த்தம் தானென்ன?
சிலர்
அர்த்தமற்ற வாழ்வென்பர்.
யான்
அவ்வாறல்லன்.
அர்த்தம்தனை நம்புபவன். ஆயினும்
அதனையிதுவரை அறிந்திலேன்.
அதனை நீ அறிந்திடின்
அதனையிங்கு விளக்கிடு.
அது போதும்!
அது போதும்!

22.  பேய்த்தேர்!

விரிந்து கிடக்குமிந்த இருத்தல்
பாலையெனக் கொதிக்கும். வெறுமைக் கனல்
தகிக்கும்.
இதற்குளுந்தன் நடனம் மட்டும்
இல்லையென்றால்
பசுமையற்றுக் கிடந்திடுமிந்தத்
தரை. நீயோ
தொலைவில் மட்டுமே
ஆடுகின்றாய்?
நெருங்கிடின்
நிலைகுலைய வைத்தெனைத்
தொலைவுநாடி ஓடுகின்றாய்
ஆடுதற்காய். ஏனுந்தன்
தொலைதூர நடனம்?
அருகில் வந்துனது ஆட்டம் காணுதற்கு
ஒருவழி சொல்வாய் ஆயிழையே!
பொய்யிலொளிரும் மெய் நீ.
மெய்யென நிலைத்திடச்
சாத்தியமேதுமுண்டோ?
மெய்யற்றதொரு பொய்யால்
மெய்சிலிர்க்க வைத்து விட்டுப்
போகின்றாய் பைங்கிளியே!
என் பாதையிலே
எத்தனை முறை முயன்றிடினும்
முயற்சி ஏன் திருவினையாவதில்லை
உன் விடயத்தில் பெண்ணே! ஏன்?
இருப்பின் பொருளறிந்தேன்
கனலுக்குள் கனவாகும்
உந்தனிருப்பில் பேய்த்தேரே!

23. நள்யாமப்பொழுதொன்றில்..

சொல்லவிந்து, ஊர் துஞ்சும்
நள்யாமப்பொழுதுகளில்
விசும்பு நீந்தி ஆங்கு
நீந்தி விளையாடிடும் விண்மீன்கள்தம்
வனப்பில் எனை மறக்கும்
தருணங்களில்,
இராப்பட்சிகள் குறிப்பாக
ஆந்தைகள் சிந்தனைச்சிறகடிக்கும்.
கூரிய அவைதம் பெருங்கண்
விரித்து
இரை தேடி இரவு முழுக்கப்
பறந்து திரியும்.
ஆந்தைகளுக்குப் போட்டியாக
அவ்வப்போது நத்துக்களும்
குரல் கொடுக்கும்.
மீன்களே! உங்கள் நீச்சலின் காரணத்தை
விளக்குவீரா?
ஆந்தைகளே! நத்துகளே! உங்கள்
இருப்பின் காரணத்தை எனக்கும்
சிறிது பகர்வீரா?
இரவுவான் வியக்கும் பண்பு
தந்தாய்! எந்தையே
இத்தருணத்தில் உனை நான்
என்
நினைவில் வைக்கின்றேன்.

24. இருப்புமென் தாரகமந்திரமும்!

அன்பே!
அன்றொருநாள் நீ கூறினாய்
கத்தி முனையில் நடப்பதைப்
போன்றதிந்த இருப்பு என்று.

கத்திமுனை இருப்பில்
கவனத்துடன் நடப்பதிலுமோர்
களிப்பு குவிந்துதானிருக்கின்றது.
இருப்பில் இவ்விதம் இருப்பதிலுமோர்
இன்பம் இருக்கத்தான் இருக்கிறது.
இருப்பென்பது இவ்விதச் சவால்களையும்
உள்ளடக்கியுள்ளதுதானே.
இருப்பென்பதே இன்பம்தானே!
இன்மையிலிருப்பில்லை!
இருப்பிலின்மையில்லை.

இன்று புதிதாய்ப்பிறந்தோமென்று
இருப்பதிலுமோரின்பம்
இருக்கத்தானிருக்கின்றது.

இருக்குமிருப்பில் இருக்கும்வரை
இன்புற்றிருத்தலே என் இ(வி)ருப்பு.
இதுவேயென் தாரக மந்திரம்.

விரிவெளியில் பயணிக்குமிந்தக் கோளின்
வேகமென்னே! எதிரில் எது எதிர்ப்படினும்
எம் கதி அதோ கதி!
இருந்தும் இருப்பின் இப்பயணம்
தொடர்கின்றது நம்பிக்கையுடன்.
அதில் சிறு ஆறுத லெனக்கு.

இருப்பிலின்பமுனைச் சீராட்டி
இருந்திடட்டும்

25. மின்னற்சுடர்

மின்னற்பெண்ணே!  நீ மீண்டும்
என் முன்னால்
மின்னினாய்.
ஆயின் இம்முறை முன்னரைப்போல்
மீண்டும் மறைந்து விடாதே.
உன் ஒளிதரும் வெளிச்சத்தில்
இப்பிரபஞ்சத்தை இன்னும் அதிகமாகச்
சுகித்திடவே விரும்புகின்றேன்.
எட்டாத உயரத்தில் நீ
இருப்பதையிட்டு எனக்குக்
கவலையில்லை.
நீ இருக்கும் இடத்திலேயே
இருந்துகொள்
மின்னலாக அல்ல
விண்சுடராக.
இடி முழக்கத்துக்கு நீ
ஆடியது போதும். உன்
ஆட்டத்துக்குச் சற்றே
ஓய்வு கொடு.
தொலைவில் நீ
சுடர்ந்துகொண்டிருந்தாலே
எனக்குப் போதுமானது
ஏனென்றால் அப்போதுதான்
நீ சுடர்ந்துகொண்டிருப்பதை
என்னால் அறிந்துகொள்ள முடியும்.
நீ தொலைவில் ஒளி வழங்கிக்
கொண்டிருப்பதை என்னால்
காண முடியும்.
ஒருமுறை மின்னி நீ
காலவெளியில் கரைந்து போனதை
இனியும் ஒருமுறை
என்னால் தாங்க முடியாது.
எத்தனை காலம்தான் உன் ஒளிர்வை,
உன் இருப்பை, உன் வனப்பை
தூங்காமல் நான் எண்ணித் தவிப்பது.
எத்தனை காலம்தான் வெளியில்
கலந்த உன் உருவை நான்
தேடிக்கொண்டிருப்பது.
அதிகாலைகளில், அந்திகளில், கொடியாக
வான் வீதியில் நீ நடந்து சென்றதைப்
பற்றி இன்னுமெத்தனை காலம்தான்
சிந்தை வாடித் துடிப்பது.
நீ மின்னலாக இருந்தது போதும்.
நீ மின்னலாக ஒளிர்ந்தது போதும்.
நீ மின்னலாக மறைந்தது போதும்.
இனிமேலாவது இரு
சுடராக, விண்சுடராக.
அது போதும்.
அது எத்தனை தொலைவிலென்றாலும்,
அது எத்தனை கால அடுக்குகளைத்
தாண்டி என்றாலும்
என் மின்னற்சுடரே!
அன்பே!

26. சக்தி மகாத்மியம்

எங்கும் விரவிக்கிடக்கின்றாய். உனைத்தவிர
என்னால் வேறெதனையும் இக்'காலவெளி'யில்
காணமுடியவில்லை.
இங்கு விரிந்து செல்லும் வான்வெளி,
இரவு வான், சுடர்கள், மதி என்று
அனைத்துமே.
இங்கு வாழும் மானுடர், மற்றும் பல்லுயிர்கள்
அனைத்துமே,
உனது நடனங்களே! நீ மீட்டிடும் இசையே!
நான் அவ்விதமே உணர்கின்றேன்.
நீயொரு கடல்.
உன்னில் ஓயாதெழுந்து வீழும்
அலைகளே எனக்கு எல்லாமும்.
என்னையும் உள்ளடக்கித்தான் நானிதைக்
கூறுகின்றேன்.
உறுதியான நிலையும், இடமும் அற்ற
விந்தையான பொருள் நீ!
அலையும் நீயே!

காற்றாக வீசுகின்றாய்.
காற்றே! அனைத்துமே நீதான்.
உன்னை விட்டால் வேறெதுவுமுண்டோ?
இருப்பவையாகத்தெரிவதெல்லாம்,
இல்லாதொழிந்து போனவையெல்லாம்,
சங்கமித்து விடும் பெருங்கடல் நீ.
குமிழிகளாக, அலைகளாக, மழைத்துளிகளாக இன்னும்
பல்வகை வடிவங்களில் எங்குமே
வியாபித்துக்கிடக்கின்றாய் நீ.
உன்னை உபாசிக்கும் சீடன் நான்
மாகவியின் அடியொற்றி.
இருப்பின் அடிப்படை.
உன் சலனங்களே , உன் இசையே
காண்பதெல்லாம்; தெரிவதெல்லாம்.
நீயே!
தெரிகின்ற நீயே தெரியாமலும் இருக்கின்றாய்.
நீயே எம் அனைவரையும், அனைத்தையும்
பிணைத்து நிற்கின்றாய்.
உன்னில் ஒன்று கலந்து நிற்கின்றோம் நாம்.
நீயே நான்; நாம்; அது; அவை.
நாமே நீ.

27. ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)!

[ அண்மையில் அடிப்படைத் துகள்களிலொன்றான நியூட்டிரினோக்கள் ஒளியை விட வேகமாகச் செல்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக இத்தாலிய விஞ்ஞானிகள் அறிவித்திருந்தார்கள். இன்னும் இம்முடிவு முற்று முழுதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதற்கு முன்னர் மேலும் பல பரிசோதனைகள் மேலும் பலரால் செய்யப்பட வேண்டும். இத்தகையதொரு சூழ்நிலையில் மார்ச் 6, 1983. இல் நான் குறிப்பேட்டில் எழுதிவைத்த கவிதையொன்றான 'ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)' என்னும் கவிதையினை ஒருகணம் நினைவு கூர்தல் பொருத்தமானது. இக்கவிதை ஏற்கனவே 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் வெளிவந்தது. அத்துடன் அண்மையில் பதிவுகளிலும் 'ஒருங்குறி' எழுத்தில் மீள்பிரசுரம் செய்யப்பட்ட கவிதையாகும். மேற்படி பரிசோதனை முடிவுகளான அடிப்படைத் துகள்களிலொன்றான நியூட்டிரினோக்கள் ஒளியை விஞ்சும் வேகத்தில் செல்வது நிரூபிக்கப்பட்டால் , மேற்படி கவிதையை ஒரு தீர்க்கதரிசனமிக்கதொரு கவிதையாகவும் கொள்வதற்கு சாத்தியமுண்டு என நீங்கள் கூறினால் அதிலெனக்கு ஆட்சேபனையேதுமில்லை.' ]

நானொரு பைத்தியமாம். சிலர்
நவில்கின்றார். நானொரு கிறுக்கனாம்.
நான் சொல்வதெல்லாம் வெறுமுளறலாம்; பிதற்றலாம்.
நவில்கின்றார். நவில்கின்றார்.
ஏனென்று கேட்பீரா? நான் சொல்வேன். அட
ஏனெழுந்தீர்? நீருமெனை நினைத்தோரோ 'கிறுக்கனென'.
ஆதிமானுடத்திலிருந்தின்றைய மானுடம்' வரையில்
வரலாறுதனை
அறிந்திடப் போகின்றேன் அப்படியே அச்சொட்டெனவே
என்றதற்கியம்புகின்றார் எள்ளி நகைக்கின்றார் இவரெலாம்.
நான் சொன்னதெல்லாம் இதுதான். இதுதான். இதுதான்:
'நுண்ணியதில் நுண்ணியதாய், மிக நுண்ணியதாயுளவற்றினை
நோக்கிடும் வலுவிலொரு தொலைகாட்டி சமைத்து
ஒளி விஞ்சிச் சென்றுவிடின்
ஆதிமானுடத்தினொளிதனையே
அட நான் முந்திட மாட்டேனா என்ன. பின்
வரலாறுதனை அறிந்திட மாட்டேனாவொரு
திரைப்படமெனவே'. என்றதற்குத்தான் சொல்லுகின்றார்
கிறுக்கனாமவை உளறலாம்; பிதற்றலாம்.
'ஒளி வேகத்தில் செல்வதென்றாலக்கணத்தில்
நீரில்லையும் உடலில்லை. நீளமெலாம் பூச்சியமே.
நான் சொல்லவில்லை. நம்ம ஐன்ஸ்டைன் சொல்லுகின்றார்'
என்றே
நவில்கின்றார்; நகைக்கின்றார் 'நானொரு கிறுக்கனாம்'.
நியூட்டன் சொன்னதிற்கே இந்தக் கதியென்றால்
நாளை ஐன்ஸ்டைன் சொன்னதிற்கும் மாற்றம் நிகழ்ந்திடாதோ?
அட நான் சொல்வேன் கேட்பீர். நானுமிப் பிரபஞ்சந்தனையே
சுற்றிச் சுற்றி வருவேனென்றன் விண்கலத்திலவ்வேளை
செகத்தினிலிவ் வாழ்வுதனின் அர்த்தம்தனைச்
செப்பிவைப்பேன்.
நல்லதிவையெலாம் கிறுக்கல், பிதற்றல், உளறலென்பவரெல்லாம்
நவின்றிடட்டுமவ்வாறே. அதுபற்றியெனக்கென்ன கவலை.
எனக்கென்ன கவலையென்பேன்.

28. மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ?

உண்மையென்று ஏதேனுமொன்றுண்டா ?
நான் பார்ப்பது, நீ இருப்பது இதுவெல்லாம்
உண்மையென்று எவ்விதம் நான் நம்புவது ?
நீயே சொல். நீ சொல்கின்றாய் நீ இருக்கிறாயென்று.உண்மையாக
நீ இருக்கின்றாயென்று.
என்னை விட்டுத் தனியாக எப்பொழுதுமே
இருப்பதாக நீ கூறுகின்றாய்.
எவ்விதம் நம்புவது.

ஆயிரம் மில்லியன் ஒளிவருடங்களிற்கு
அப்பாலிருந்து இருந்து வரும்ஒளிக்கதிர்களுக்கும்
உன்னிலிருந்து வரும் ஒளிக்கதிர்களுக்கும்
இடையிலென்ன வித்தியாசம் ?நேரத்தினைத் தவிர.

உனக்கும் எனக்குமிடையில் எப்பொழுதுமே ஒரு தூரம்
இருக்கத் தானே செய்கிறது. அது எவ்வளவுதான் சிறியதாக
இருந்த போதிலும்.

எப்பொழுதுமே ஒரு நேரம் இருக்கத் தானே செய்கிறது
கணத்தினொரு சிறுபகுதியாக என்றாலும்.

நீ இருப்பதாக நீ சொல்லுவதைக் கூட
நான் அறிவதற்கும் புரிவதற்கும் எப்பொழுதுமே இங்கு
நேரமுண்டு. தூரமுமுண்டு கண்ணே!

காண்பதெதுவென்றாலும் கண்ணே! அதனை அப்பொழுதே
காண்பதற்கு வழியென்றுண்டா ?

காலத்தைக் கடந்தாலன்றி ஞாலத்தில் அது
நம்மால முடியாதன்றோ ?

தூரமென்று ஒன்று உள்ளவரை நேரமொன்று இங்கு
இருந்து தானே தீரும் ? அது எவ்வளவுதான் சிறியதாக
இருந்த போதும்.

வெளிக்குள் காலத்திற்குள் கட்டுண்டதொரு இருப்பு
நம் இருப்பு கண்ணம்மா!

காலத்தினொரு கூறாய்
உன்னை நான் காண்பதெல்லாம் இங்கு
உன்னை நான் அறிவதெல்லாம்
மின்னலே! மின் பின்னியதொரு பின்னலா ?
உன்னிருப்பும் இங்கு மின் பின்னியதொரு
பின்னலா ? என் கண்ணே!
என் கண்ணம்மா!

29. நடிகர்கள்!

இந்த நாடக மேடையில்
நடிக்கும் நடிகர்களைப் பார்த்தால்
அழுவதா சிரிப்பதா என்று
சில நேரங்களில் தெரிவதில்லை.
இவர்களுக்கோ தாங்கள் பிறவி
நடிகர்கள் என்ற அடிப்படை
உண்மை கூடத் தெரியவில்லை.
தாங்கள் நடிப்பதில்லை என்று கூறிக்
கொண்டே நடித்துக்
கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களில் ஒருவன் என்ற வகையில்
என்னையும் சேர்த்துத் தான்
கூறுகின்றேன்.
எவ்வளவு தேர்ச்சி பெற்ற
நடிகர்கள் இவர்கள்.
எவ்விதமாகவெல்லாம் இவ்வளவு
தத்ரூபமாக இவர்களால்
முகபாவங்களைக் காட்ட முடிகின்றது?
உருகுவதிலாகட்டும் அசடு வழியக்
குழைவதிலாகட்டும்
என்னமாய் ஜமாய்த்து விடுகின்றார்கள்?
இந்த நாடக மேடையிலிருந்து
விடுபட வேண்டுமென்று தான்
இத்தனை நாளாக முயன்று
கொண்டிருக்கின்றேன்.
திமிர் பிடித்தவன். மரியாதை தெரியாதவன்.
கர்வம் கொண்டவன். வாழத் தெரியாதவன்.
எல்லா நடிகர்களும் ஒன்று சேர்ந்து
கத்துகின்றார்கள்.
நடிக்கவில்லையென்று கூறிக் கொண்டே
நடிப்பவர்கள் கூறுகின்றார்கள்
ஓரளவாவது நடிப்பதைத் தவிர்க்க முனையும்
என்னைப் பார்த்துப்
'பார் இவனது அபாரமான
நடிப்பை'யென்று.
என்ன நடிகர்களிவர்கள்?
தங்கள் நடிப்பை விட
என் நடிப்பு அபாரமானது
என சான்று வழங்கும்
பெருந்தன்மை மிக்க
மகா பெரிய நடிகர்களே!
உங்கள் பெருந்தன்மைக்காக
உங்கள் கருணைக்காக
உங்கள் அனைவருக்கும்
எனது சிரந்தாழ்ந்த வணக்கங்கள்
உரித்தாகுக.
மகாபெரும் கவிஞராக, அற்புதப்
படைப்பாளியாக, மூதறிஞராக,
அதிமேதாவியாக,சமூகத்
தொண்டராக, தலைவராக
எத்தனை விதமான வேடங்களில்
நீங்கள் வெளுத்துக் கட்டுகின்றீர்கள்!
உங்கள் வாயால் கிடைக்கும் பாராட்டு
வசிட்டர் வாயால் கிடைத்தது போல்
எத்துனை பெருமை மிக்கது. அதற்காக
எனது ஆயிரம் ஆயிரம் கோடி
நன்றி!
இந்த நாடக மேடையில் முற்றாகவே
நடிப்பை ஒதுக்கி விடுவதென்பது
இயலாததொன்று என்பதை உணர
முடிகின்றது. இருந்தாலும்
நடிப்பதைக் குறைத்துக் கொள்ளத்
தான் முயன்று கொண்டிருக்கின்றேன்.
அதனைக் கூட நடிப்பாகக் கருதி விடும்
அற்புதமான நாடக மேடையிது.
இங்கு நடைபெறும் நாடகங்கள்
அனைத்துமே திரை விழும் வரை
தான். விழுந்த பின்னும்
நடிப்பில் தேர்ச்சி பெற்ற
நடிகர்கள் நாடகத்தைத்
தொடரத் தான் செய்வார்கள்.
இந்த நாடக மேடையில்
நடிப்பதென்பது மட்டும்
தான் நித்தியம்.சாசுவதம்.
நிரந்தரமானதொரு திரை
என்று ஒன்று உண்டா
இதன் நிரந்தரத்தை
நிரந்தரமின்மையாக்க?
யாருக்கும் தெரியாது? அவ்விதமொரு திரை
இருக்கும் பட்சத்தில்
அவ்விதம் விழும் திரை கூட
இன்னுமொரு பக்கத்தில்
ஆரம்பமாகுமொரு நாடகத்தின்
தொடக்கமாகவிருக்கலாம்?
யார் கண்டது?
பாத்திரங்களிற்கா
குறைவில்லை?
ஆக,
இருக்கும் வரை
நடித்துக் கொண்டேயிருப்போம்.

30. தொராண்டோவின் இரவுப் பொழுதொன்றில்....

1.
கவிந்து கிடக்குமிரவின் அமைதியில்
இளவேனிற்பொழுதொன்றின்
துணையுடன் கழியுமொரு பொழுதொன்றில்
'டொராண்டோ'ப் பெருநகரின் நடைபாதைகளில்
'இடவெளி' வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்
வீடற்றவாசிகள் சிலர்.
விரிந்து கிடக்கிறது வெளி.
எதற்கிந்த முடக்கம்?
தாராளமாகவே உங்கள் கால்களைக் கைகளை நீட்டி,
நிமிர்ந்து, ஆசுவாசமாகத் துயில்வதற்குமா
தயக்கம் வேண்டிக் கிடக்கிறது.

2.
பகலவனாட்சியில்
பல்வகை வாகனங்கள்!
பல்லின மானிடர்கள்!
விளங்குமிப் பெருநகரின்
குணம்
இரவுகளில்தான்
எவ்விதமெல்லாம்
மாறிவிடுகிறது!

மாடப்புறாக்களே!
நள்ளிரவில் துஞ்சுதல் தவிர்த்து
இன்னும் இரைதேடுவீர்!
உமதியல்புகளை
எவ்விதம் மாற்றிக் கொண்டீர்?
நகரத்துப் புறாக்களா?
இரவுப் புறாக்களா?
சூழல் மாறிடினும்
கலங்கிடாப் பட்சிகளே!
உம் வல்லமைகண்டு
பிரமித்துத்தான் போகின்றதென்
மனம்.

3.
நகரில் துஞ்சாமலிருப்பவை
இவை மட்டும்தானென்பதில்லை!
துஞ்சாமலிருப்பவர்களும்
நிறைந்துதான் இருக்கிறார்கள்.
ஆலைத் தொழிலாளர், ஓரின,
பல்லினப் புணர்வுகளுக்காய்
வலைவிரிக்கும்
வனிதையர், வாலிபர்.
'மருந்து'விற்கும் போதை
வர்த்தகர்கள்,
திருடர்கள், காவலர்கள்....

துஞ்சாதிருத்தல் பெருநகரப்
பண்புகளிலொன்றன்றோ!

4.
இவ்விதமானதொரு,
வழக்கமானதொரு
பெருநகரத்தின்
இரவுப் பொழுதொன்றில்,

'பின்இல்' புல்வெளியில்
சாய்கதிரை விரித்ததில்
சாய்ந்திருக்கின்றேன்.
பெருநகரத்தின் இடவெளியில்
ஒளிந்திருக்கும் இயற்கையைச்
சுகிப்பதற்காக.
சிறுவயதில்
'முன்இல்' தந்தையின்
'சாறத்'தொட்டிலில்
இயற்கையைச் சுகித்ததின்
நீட்சியிது.

பல்வகைக் கூகைகள் (கோட்டான்கள், நத்துகள்)
சப்திக்கும் இரவுகளில், விண்சுடர் ரசித்தல்
பால்யத்துப் பிராயத்து
வழக்கம்.
இன்னும் தொடரும் -அப்
பழக்கம்.

தோடஞ்சுளையென
அடிவானில்
கா(ல)ல்மதி!

அந்தரத்தில் தொங்குமந்த
மதி!
அதனெழிலில் தெரிகிறது
வெளிதொங்குமென்னிருப்பின்
கதி!


5.
பெருநகரத்துப் பரந்த 'காங்ரீட்' வனத்தின்
மத்தியில் ஒளிந்திருக்கும் இயற்கைக்
கன்னியின் வனப்பினை
இவ்விதமான இரவுப் பொழுதுகளில்தான்
ஆறுதலாக, உணர்ந்து, சிந்தித்து,
இரசிக்க முடிகிறது.
சில சமயங்களில் நகரத்தின்
மயானங்களினருகில்
நரிகளைக் கண்டு வியந்திருக்கின்றேன்.
பள்ளத்தாக்குப் பகுதிகளில்
மானினங்களைக் கண்டிருக்கின்றேன்.
குழிமுயல்களை, இன்னும் பல
உயிரினங்களையெல்லாம்
இத்தகைய இரவுப் பொழுதுகளில்
கண்டிருக்கின்றேன்.
அப்பொழுதெல்லாம்
வ்ளைகளுக்குள் வாழ்ந்து
இரவுகளில்
இந்தக் 'காங்ரீட்' வனத்தினுள்
சஞ்சரிக்கும் அவற்றின்
படைப்பின் நேர்த்தியில்
மனதிழந்திருக்கின்றேன்.

6.
வெளியில் விரைமொரு
வாயுக் குமிழி! - உள்
உயிர்
ஆடும் ஆட்டம்தான்
என்னே!

ஒளியாண்டுத் தனிமை!
வெறுமை! -உணராத
ஆட்டம்!
பேயாட்டம்!

இந்தத்
- தனிமையெல்லாம்,
- வெறுமையெல்லாம்,
- தொலைவெல்லாம்,
ஒளியணங்கின் ஓயாத
நாட்டியமோ! - மாய
நாட்டியமோ?.

ஆயின்,
விழியிழந்த குருடருக்கு
அவை
ஒலியணங்கின்
சாகசமோ?!

7.
இந்தப் பெருநகரத்திருப்பில்
நான் சுகிக்கும் பொழுதுகளில்
இந்த இரவுப் பொழுதுகள்
சிறப்பு மிக்கவை.

ஏனெனில் -அவை
எப்பொழுதுமே
என் சிந்தையின்
- விரிதலை,
- புரிதலை
- அறிதலை
அதிகரிக்க வைப்பவை;
அதனால்தான்.

31. குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.

குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.
நானொரு குதிரை வளர்ப்பாளன்.
வியாபாரியல்லன்.
நாணயமான குதிரை வளர்ப்பாளன்..
என்னிடம் நல்ல குதிரைகள் பல உள்ளன.
இருப்பவை அனைத்துமே நல்லவைதாம்.
ஆனால் அவை நொண்டிக்குதிரைகளல்ல.
என்னிடமுள்ள குதிரைகள் அனைத்துமே
என் பிரியத்துக்குரியவை.
அவற்றில் வேறுபாடு நான் பார்பபதில்லை.
நான் நொண்டிக்குதிரைகளை வளர்ப்பவனோ,
விற்பவனோ அல்லன்.
இருந்தும் குதிரைத் திருடர்களே!
உங்களின் தொல்லை
அதிகமாகிவிட்டது.
குதிரைத் திருடர்களே! கவனம்.
திருடிய குதிரைகளை வெகு சாமர்த்தியமாக
உங்கள் மந்தையில் கலந்து
விடுவதில் பலே கில்லாடிகள் நீங்கள்.
என்னிடம் நீங்கள் திருடிய அல்லது
திருடப் போகும் குதிரைகள்
நிச்சயம் நொண்டிக்குதிரைகளல்ல.
ஆனால் அவை நல்லவை.
வல்லவையும் கூடத்தான்.
ஆனால் அவை முரட்டுக் குதிரைகள்.
முட்டி மோதவும் தயங்காத
முரட்டுக் குதிரைகள்.


- அண்மையில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்து, மொழிபெயர்த்துத்  தனது 'அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்' பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ள இருமொழிக் கவிதைத்தொகுப்பான 'Fleeting Infinity ( கணநேர எல்லையின்மை ) தொகுப்பிலும் எனது கவிதையொன்று வெளியாகியுள்ளது. அத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள  கவிதை: "குதிரைத் திருடர்களே!  உங்களுக்கொரு செய்தி. "-

32.  கவிதை: காலவெளிப்பயணியின் நெடும் பயணம்

என் வெப்ப மண்ணை, மேல் விரியும்
இரவுவானை, சுடரை, நிலவை
நான் நீங்கியது நேற்றுத்தான் போல்
நினைவில் நிற்கிறது.

இன்று நிழலமர்ந்து
நினைவசை போடுமொரு
மாடுமாகினேன்.
ஒட்டகமாய், மாடாய்,
நள்யாமத்து நத்தாய்,
சுமைமிகு அத்திரியாய்,
உறுமீன் தேடி
வாடி நிற்குமொரு கொக்காய்,
இரைக்காய்ப் பொறுமைமிகு
முதலையாய்,
துருவத்துக் கட்டடக்காட்டுக்
கானுயிராயுமாகினேன்.

முடிவற்ற நெடும் பயணம்!

தங்குதற்கும், ஆறுதற்கும்
தருணங்களற்ற நெடும் பயணம்!

என்று முடியும்? எங்கு முடியும்?

நம்பிக்கையினை
நானின்னும் இழக்கவில்லை.
வழிச்சோலைகள், நீர்நிலைகள்
துருவப்பாலை வசங்களாயின.
பேய்த்தேரெனவே போயின.
இருந்தும் சிந்தையின்னும்
இழக்கவில்லை நான்.

காலவெளிக் குழந்தை நான்
கண்ட கனவுகள்
நனவிடைதோய்தற் துளிகளாயின.
துருவப்பாலை ஒட்டகம் நான்.
இன்றோ சுடர் தேடுமொரு
துருவத்துப் பரதேசி!

அந்தமிலாவிருப்பு
நம்பிக்கைக் கனவுகள்
மிகப்பயணிக்குமொரு
காலவெளிப்பயணி
நான். பயணிக்கின்றேன்.
பயணிக்கின்றேன். பயணிக்கின்றேன்


  'ஓவியா பதிப்பக' உரிமையாளரும், எழுத்தாளருமான வதிலைப்பிரபா அவர்கள் வெளியிட்டு வரும் 'மகாகவி' சஞ்சிகையின் 'திசம்பர்' 2017 பன்னாட்டிதற் சிறப்பிதழில் வெளியான எனது கவிதை.-

33. வானத்து நாடோடிகளும், அவர்கள்தம் துயர்மிகு அழுகையும்!

"The Wanderers Of The Sky And Their Cry Of Melancholy " என்னும் தலைப்பில் நான் எழுதிய ஆங்கிலக் கவிதையின் சிங்கள மொழிபெயர்ப்பு லக்பிம சிங்களத் தினசரியின் ஞாயிற்றுப் பதிப்பில்
 (22.04.2018) வெளியாகியுள்ளது. அக்கவிதை தமிழில் கீழே:


"படுத்திருக்கையில்
இரவுமழைச் சப்தங்கள்
இருண்டவான் காட்சி
இவை எப்பொழுதுமே
என்னிதயத்தை ஆழமாகத் தொடுவன.

காலையிலிருந்து
மழை பலமாகப்
பெய்து கொண்டிருக்கிறது.

மழை.
அகதிகளின் கண்ணீர்.
நாடற்ற வான் நாடோடிகள்,
மேகங்களின்
கண்ணீர்,

வழக்கம்போல்
படுத்திருக்கையில்
இரவுமழைச் சப்தங்கள்
இருண்டவான் காட்சி
இவை என்னிதயத்தை
ஆழமாகத் தொடுகின்றன.
துயர்மிகு அழுகை.
நாடோடிகளின் துயர் மிகு அழுகை.
வேதனைமிகு அழுகை.
நாடோடிகளின் வேதனை மிகு அழுகை.
அவர்கள் அழுகின்றார்கள்
அவர்கள் இழந்த மண்ணுக்காக.

 வெளியில் இடி இடிக்கிறது.
வெளியில் மின்னலடிக்கிறது.
வெளியில் மழை பெய்கிறது.

அண்மை வயல்களிலிருந்து
நுணல்கள் குரலெழுப்புகின்றன.

பொசிந்து வரும் இயற்கையின் சப்தங்கள்
என் செவிகளை வந்தடைகின்றன.

ஓர் இடிமிகு இரவு.
ஒளியினொரு கண வெளிச்சம்.

இடி மின்னலைத் தொடர்கிறது.
இருண்மை பிரகாசத்தைத் தொடர்கின்றது.
பிரகாசம் இருண்மையை வெற்றி கொள்கிறது.
ஒளியின் கணப்பொழுது.
நம்பிக்கையின் கீற்று."

34. காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்! 

விண்ணில் புள்!
மண்ணில் புள்!
வனத்தில் புள்!
மனத்தில் புள்!

புள்ளினம் பறந்து செல்லும்.
உள்ளமோ சிறகடிக்கும்.

அவற்றை
அவதானிப்பதில்
அளப்பரிய இன்பம்.
புல்லரிப்பில் களிக்குமென்
உள்ளம்.

இறகசைப்பின் விரிவு கண்டு
ஒரே பிரமிப்பு!
அழுத்த வேறுபாடுகளை அவை
கையாளும் இலாவகம்!

எத்துணை அறிவு!

புள்ளினம் தந்திரம் மிக்கவை.
சிறகசைத்தலற்று விண்ணோக்கி
அல்லது மண் நோக்கி விரைதலில்
அவை பாவிக்கும் அறிவின் ஆழம்..
பிரயோகிக்கும் அறிவியலின் புரிதல்…
இவை கண்டு வியக்காமல் ஒருவரால்
எவ்விதம் இருக்க முடியும்?

பறவைகளில்தானெத்தனை பிரிவுகள்:

கடுகி விரையும் குறும்புள்.
நெடுந்தொலைவு செல்லும் பெரும்புள்.
சிறகசைத்தலில்தானெத்தனை
எத்தனை பிரிவுகள்.

ஆலா போன்றதொரு கடற்பறவையொன்று
மிகவும் ஆறுதலான, மெதுவான சிறகடிப்பில்…
வீழ்வதற்குப் பதில் எவ்விதம் வெற்றிகரமாக
எழுகின்றது மேல் நோக்கி?
விரிந்த வெளியில், காற்றில் கட்டற்றுப்
புள்ளினம்போல் சுகித்திட வேண்டும்!
புள்ளினம்போல்

காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்!
காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்!
காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்!

நன்றி: திண்ணை


35. என்று வருமந்த ஆற்றல்?

நள்ளிரவுக் கருமை;
மூழ்கிக் கிடக்குமுலகு; தண்ணொளி
பாய்ச்சும் நிலவு; ‘கெக்க’லித்துச்
சிரிக்கும் சுடரு.

விரிவான் விரிவெளி.
‘புதிர் நிறை காலவெளி.

வெறுமைக்குள் விரியும்
திண்ம இருப்பு.

பரிமாண விலங்குகள்
தாங்கும் அடிமை.

பன்முறையெனினும்
மீறி வியப்பதற்கெதுவுண்டு.

படியளக்கும் படைத்தவரே!
படைத்ததேன்? பகர்வீரா?

அறிவுத்தாகம் மிகுந்த
அலைவு; தாகசாந்திதான்
எப்போது?
அலையெனப் பரவும்
நிலை வரும் வரையிலா?
என்று வருமந்த
நிலை? அன்றி
‘அதிவெளி’ கடக்கும்
ஆற்றல் வரும் வரையிலா?
என்று வருமந்த
ஆற்றல்?


 நன்றி: திண்ணை -

36. மழையைச் சுகித்தல்!

நள்ளிரவு மழை
நண்பகல் கழிந்தும்
பெய்தலை இன்னும்
நிறுத்தவில்லை.

எழுதற்குப் பிரியமின்றிப்
புரண்டு படுத்தலிலும்,
பொழியும் வான் பார்த்திருப்பு
கழித்துக் கிடப்பதிலும்
தானெத்தனை களி!

வினாத்தொடுத்து
புரிதலை வினாக்களாக்குவதில்
பேரவாக் கொள்ளும்
மனது!

இயற்கை நோக்கி,
வாசித்து, கனவில்
மூழ்கி
இளகி விடுதலென்
இயற்கையே.

சதிராடும் மின்னற்கொடியாள்
வனப்பில் தமையிழக்காத
கவிஞரெவருளரோ?

சிறகு சிலிர்த்து நீருதிர்க்கும்
புள்ளினம்,
நினைவூட்டும்
பால்யப் பொழுதுகள்.

காகிதக் கப்பல்களை மட்டுமா
கட்டினோம்? கற்பனைகளை
மட்டுமா பின்னினோம்?

பெய்தலில் வரலாற்றைப் ‘
போதிக்கும் மழையே!
உனைச் சுகிப்பதில்தானெத்தனை
இன்பம்! இன்பம்! இன்பம்!


நன்றி: திண்ணைngiri2704@rogers.com

37. இருப்பதிகாரம்


வானினை நிலவினை வரையினை மடுவினை
தேனினை யொத்த சொல்லினை உதிர்க்கும்
அணங்கினை அகன்ற இடையினைத் தனத்தினை
மீறிட முடியா சிந்தையை மேலும்
தேனிசை சிற்பம் சித்திரம் கலைகள்
மொழியும் இனமும் மண்ணும் பொன்னும்
குதலைக் குறும்பும் அன்பும் சிரிப்பும்
ஆட்டியே வைக்கும் மீட்சி யுண்டா?
என்றென் துயரும் பிடிப்பும் சாகும்?
விரியு மண்ட மடக்கு மண்டம்
அதனை யடக்க மற்றோ ரண்டம்.
வெறுமை வெளியில் பொருளின் நடனம்.
இதற்குள் துளியெனக் கரையு மிருப்பு.
இதுவும் நிசமா? நிழலா? கனவா?
நனவும் கனவா? கனவும் நனவா?
விடைகள் நாடித் தொடரும் வினாக்கள்.
விடைக ளற்ற வினாக்கள்! வினாக்கள்!
இருப்பு அறிந்திட தேடித் தொடரும்
இருப்பே எந்தன் வாழ்வே வாழ்வே!
இதனை அறிதல் புரித லெவ்விதம்?
நூலினைக் குருவினை அறிவினை உணர்வினைக்
கோளினைச் சுடரினை வெளியினை விரிவினை
வாழ்வினைத் தாழ்வினைத் துயரினை மகிழ்வினை
அறித லெவ்விதம்? புரித லெவ்விதம்?
கலவிக் குலாவி யிருந்திடு மவைகளாய்
இருந்தே யிருப்பின் இவ்வித இடரெலாம்
இல்லா தொழிந்து இருந்தன்றோ இருக்கும்?
செயற்கை சமைத்திட சிந்தை தந்த
செயலினால் தானோ செகத்தினில் துயரோ?
அன்பினை ஆக்கிட அறிவினைப் பாவிக்க
என்னவர் உன்னவர் நம்மவர் மறந்திட்ட
பண்பினால் தானோ பாரினில் பகைமை?
தாமரை இலைமேல் தண்ணீர் போன்று
தரணியில் வாழ்ந்திடும் பக்குவம் கொண்டு
நானினைச் சித்தினை அசித்தினை அறிந்து
விருப்பு விட்டு வாழ்ந்திடும் தன்மை
வந்திடு மென்றால் அதுவே போதும்.

அந்திக் கதிரின் சிவப்பில் நாளும்
சிந்தை யிழந்து இருத்த லின்பம்!
இரவில் வானில் நீந்தும் மீன்கள்
வரவி லிதயம் மூழ்கிக் களிக்கும்.
விசும்பும் மதியும் கதிரும் காற்றும்
புள்ளும் மற்று மிருக்கு மனைத்தும்
படைப்பின் திறனை பறையே சாற்றும்.
இன்ப வெள்ளம் மடையை யுடைக்கும்.
கூகைக ளுலாவிடும் நள்யாமப் பொழுதும்
அகத்தினி லுவப்பினை யேற்றி வைத்திடும்.

உறவினை உதறி யுண்மை அறிதல்
துறவென ஆயிடு மதனா லதனை
ஏற்றிடே னானால் உள்ளி ருந்தே
உண்மை காணலே சிறந்ததோ தறியேன்.
எவ்வித மிருப்பின் உண்மை அறிவேன்.
உளையு முளத்தின் உளைவை எவ்விதம்
தணிப்பேன் தணித்துப் பதிலை அறிவேன்?

38. தாயே! தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!

- அன்னையார் மறைவினையொட்டி எழுதிய கவிதை. -

தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!
உன்னிருப்பாலிருப்பின் மறுப்புதனை
உணர்த்தியெங்கு சென்றாய் ? தாயே!
எங்கு சென்றாய் ?
நினைவுக் கோளத்தினொரு
சித்தவிளையாட்டாய்
இருந்து நீ சென்றதெல்லாம்
அன்னையே! என்
எண்ணப் பறவைகளின் வெறும்
சிறகடிப்போ ? இருந்தவிருப்பை
இதுவரை நான் இவ்விதம்
உணர்ந்தேனா ? இருப்புணர்ந்து
புரிவதற்கு உன்னிருப்பேயொரு
காரணியாயமைந்த விந்தையென்னே!
உன்னிழல் தொடர்ந்து வரும்
குஞ்சுகளாய் வருமெமையரவணைத்தாய்.
காத்து நின்றாய்.
உணர்வெல்லாம் காற்றாக நீ போனதினால்
நனவாய்க் கனவாய் வந்து வந்து
மோதும் செயலென்னே!
என்றேனும் உனைப்பற்றி நீ எண்ணியதுண்டா ?
நாம் நன்றாயிருந்தாலது போதுமென
உன்பணிசெய்து கிடந்தாயே ?
தாயே!உனை நாமெங்கினிக் காண்போமோ ?
இங்கு நீ இருந்ததெல்லாம்,
இங்கு நீ நடந்ததெல்லாம்,
இங்கு நாம் திரிந்ததெல்லாம்
இருந்ததொரு இருப்போ ?
விரியும் வினாக்கள் விடைநாடிச்
சிறகடிக்கும் சிட்டுக்களாய்
சித்தவானினிலே.
விடை தெரியா விடைநாடும்
வினாக்கள் பல சுமந்து
ஒட்டகமாயிப் பாலையிலே
காலையும் மாலையுமாய்
பயணமின்னும் தொடருமோ ?
பயணத்தின் ஒளித்தெறிப்பெல்லாம்
கானற் காட்சியாய் கடந்ததுவோ ?
பாலையும் கானலோ ?
இப்பயணமும் கானலோ ?
இங்கு இப் பயணமும்
கானலோ ?
நெஞ்சிலுரமூட்டியெமை வளர்த்தாய் தாயே!
அஞ்சிடாதுளம் தந்தெமை வார்த்தாய்.
நீ இருந்ததெல்லாம் தாயே! வெறும் நிழலா ?
நீ இருந்ததெல்லாம் தாயே! வெறுங் கனவா ?
உன்னிருப்புமென்னிருப்பால் விளைந்ததொரு
பொய்யானதொரு மெய்யோ ? தாயே!
பொய்யானதொரு மெய்யோ ?
உனது சொல்லும் செயலும்
உணர்வும் பரிவும்
பரவிக்கிடக்கும் வெளிக்குள்
வெளியாய் பரவிக் கலந்தாய்.
மீண்டுமொருமுறை
'நான் ' 'ஏன் ' 'யார் ' என
ஆய்ந்திட வைத்துச் சென்றாய் ?
தாயே!
ஆயினுன் உயிரின் உறவின்
உதிரத் துளியாய் இன்னுமிங்கே
இருக்குமென் இருப்பில் நான்
உனைக் கண்டு தெளிவேன். அதனால்
உனைப் புரிந்தேனிந்த
உலகை அறிந்தேன். ஏன்
எனையும் தெரிந்தேன். என்
இருப்பில் இருந்த
உன்
இருப்பின் பொருள் உணர்ந்தேன்.
தாயே! பொருள் கண்டேன்.

39. நினைவுகள்!

கடல்நினைவு!
நினைவுக்கடல்!
நினைவுமீன்கள்!
நினைவுகள் சகியே!

விண்நினைவு!
நினைவுவிண்!
நினைவுப்புட்கள்!
நினைவுகள் சகியே!

வெளிநினைவு!
நினைவுவெளி!
நினைவுச்சுடர்கள்!
நினைவுகள் சகியே!

நினைவுமீன்!
நினைவுப்புள்!
நினைவுச்சுடர்!
நினைவிருப்பு!
இருப்புநினைவு!

நினைவுகள் சகியே!

ngiri2704@rogers.com

No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்