Monday, February 19, 2018

இலக்கியம் ஒரு காலக் கண்ணாடி: ம.வே.திருஞானசம்பத்தப்பிள்ளையின் படைப்புகளை முன்வைத்துச்சில குறிப்புகள்... - வ.ந.கிரிதரன் -

- *'டொராண்டோ'வில் 22.10.17 அன்று நடைபெற்ற ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் 'உலகம் பலவிதம்' தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வில் நான் ஆற்றிய உரை -

இலக்கியம் ஒரு காலக்கண்ணாடி என்றொரு கூற்றுள்ளது. உண்மை.  இலக்கியப்படைப்பொன்றினை ஆராய்ந்து பார்ப்போமாயின் பல்வேறு விடயங்களை அப்படைப்பினூடு அறிந்து கொள்ள முடியும். அப்படைப்பில் பாவிக்கப்பட்டுள்ள மொழியிலிருந்து அப்படைப்பின் காலகட்டத்தை ஆய்வொன்றின் மூலம் அறிவதற்குச் சாத்தியமுண்டு. உதாரணத்துக்குச் சங்க இலக்கியப்படைப்புகளை எடுத்துக்கொள்ளலாம். அவற்றினூடு பண்டைத்தமிழரின் வாழ்க்கை முறை, இருந்த நகர அமைப்பு, ஆட்சி முறை, நிலவிய மானுடரின் பல்வேறு விடயங்களைப் பற்றிய நம்பிக்கைகள் .. எனக்கூறிக்கொண்டே செல்லலாம். எனது இச்சிற்றுரையில் இலக்கியம் காலக்கண்ணாடி என்னும் அடிப்படையில் ம.வெ.திருஞானசம்பந்தப்பிள்ளை அவர்களின் படைப்புகளை உள்ளடக்கிய  'உலகம் பலவிதம்' நூலினை அணுகுவதாகும்.

அளவில் இந்நூல் பெரியது. நூலிலுள்ள அனைத்துப் படைப்புகளையும் குறுகிய காலத்தில் முழுமையாக வாசிப்பதென்பது சாத்தியமற்றதொன்று. ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னும் அடிப்படையில்  இந்நூலை அணுகலாம். அதுவும் கூட முழு நூலைப்பற்றிய இவ்விதமானதோர் அணுகுதலுக்குரிய மாதிரி அணுகலாகவிருக்கும் என்பதால், அது என் நம்பிக்கை என்பதால் அவ்விதமே இந்நூலை அணுகுவதற்கு முடிவு செய்து, அவ்வணுகுதலின் அடிப்படையில் இலக்கியம் காலக்கண்ணாடி என்னும் கூற்றிலுள்ள உண்மை பற்றி அறிதற்குச் சிறிது முயற்சி செய்வதே என் நோக்கம்.

இதற்காக நான் இத்தொகுப்பபிலுள்ள இரு நாவல்கள் மற்றும் ஆசிரியரின் பத்திகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றின் மீது என் கவனத்தைத்திருப்பப் போகின்றேன்.

கவிதை: நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'! - வ.நகிரிதரன் -

- வ.ந.கிரிதரன் -
உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று.
விரிவெளியில் படர்ந்து கிடக்குமுன்
நகைப்போ , நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது உன் தந்திரம் மிக்க
கதையளப்போ எனக்கொன்றும் புதியதல்லவே.

இரவுவானின் அடுக்குகளில்
உனது சாகசம் மிக்க
நகைப்பினை உற்றுப் பார்த்திடும்
ஒவ்வொரு இரவிலும்,
நட்சத்திரச் சுடர்களில்,
அவற்றின் வலிமையில்
உன்னை உணர்கின்றேன்.

எப்பொழுதுமே இறுதி வெற்றி
உனக்குத்தான்.
எப்பொழுதுமே உன்காட்டில்
மழைதான். அதற்காக
மனந்தளர்வதென் பண்பல்ல. ஆயின்
உன்னை வெற்றி கொள்ளுதலுமென்
பேரவாவன்று.பின்
உனைப் புரிதல்தான்.

ஓரெல்லையினை
ஒளிச்சுடருனக்குத்
தந்துவிடும் பொருளறிந்த
எனக்கு
அவ்வெல்லையினை மீறிடும்
ஆற்றலும், பக்குவமும்
உண்டு; புரியுமா?

கவிதை 'நள்யாமப்பொழுதொன்றில்... - - வ.ந.கிரிதரன் -

- அண்மையில் முகநூலில் எனது கவிதையான 'நள்யாமப்பொழுதொன்றில்...' கவிதையினை பதிவு செய்திருந்தேன். அது பற்றி நிகழ்ந்த சிறு கருத்துப்பரிமாறல்கள் சுவையானவை. வாசகர்களுக்கும் பயனுள்ளவையாக அமையுமென்று கருதி இங்கும் பதிவிடுகின்றேன். -

கவிதை 'நள்யாமப்பொழுதொன்றில்..

சொல்லவிந்து, ஊர் துஞ்சும்
நள்யாமப்பொழுதுகளில்
விசும்பு நீந்தி ஆங்கு
நீந்தி விளையாடிடும் விண்மீன்கள்தம்
வனப்பில் எனை மறக்கும்
தருணங்களில்,
இராப்பட்சிகள் குறிப்பாக
ஆந்தைகள் சிந்தனைச்சிறகடிக்கும்.
கூரிய அவைதம் பெருங்கண்
விரித்து
இரை தேடி இரவு முழுக்கப்
பறந்து திரியும்.
ஆந்தைகளுக்குப் போட்டியாக
அவ்வப்போது நத்துக்களும்
குரல் கொடுக்கும்.
மீன்களே! உங்கள் நீச்சலின் காரணத்தை
விளக்குவீரா?
ஆந்தைகளே! நத்துகளே! உங்கள்
இருப்பின் காரணத்தை எனக்கும்
சிறிது பகர்வீரா?
இரவுவான் வியக்கும் பண்பு
தந்தாய்! எந்தையே
இத்தருணத்தில் உனை நான்
என்
நினைவில் வைக்கின்றேன்.

அணிந்துரை: எழுத்தாளர் பொன் குலேந்திரனின் அறிவியற் புனைவுகள் பற்றி.... வ.ந.கிரிதரன் -

பொன் குலேந்திரனின் 'காலம்'  தொகுப்பு
- தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் பொன் குலேந்திரனின் 'காலம்' (அறிவியற் சிறுகதைகள்) தொகுப்புக்காக நான் எழுதிய அணிந்துரை இது. -

அறிவியல் புனைகதை (Science Fiction)  என்றால் அறியப்பட்ட அறிவியல் தகவல்கள் ,  உண்மைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் அல்லது சம காலத்தில் நடக்க் இருப்பதை எதிர்வு கூறி, அதனடிப்படையில் படைக்கப்படும் புனைவு என்றுதான் பொதுவாக அறியப்பட்டுள்ளது. விண்வெளிப்பயணங்கள், ஏனைய கிரக உயிரினங்கள், பிரம்மாண்டமான விண்வெளித்தொலைவுகளைக் கடப்பதற்கான வழிவகைகள், புதிர் நிறைந்த விண்வெளி அதிசயங்கள் (கருந்துளைகள் போன்ற) , பல்பரிமாண உயிரினங்கள், மானுடரின் எதிர்கால நிலை, நமது பூமியின் எதிர்கால நிலை, இவ்விதமான விடயங்களைக் கருப்பொருளாகக்கொண்டு படைக்கப்படும் புனைகதைகளையே அறிவியல் புனைகதைகள் என்போம். சமகால அறிவியல் உண்மைகளை விபரித்தலைக் கருப்பொருளாகக் கொண்ட புனைகதைகளை அவ்வகையான புனைகதைகளாகக் கருதுவதில்லை. ஆனால் அறிவியல் விடயங்களை மையமாக வைத்துப் புனையப்பட்டவையாதலால் அவையும் அறிவியல் புனைகதைகளே என்று அத்தகைய புனைகதைகளைப் படைத்த எழுத்தாளர் ஒருவர் வாதாடினால் அவருடைய தர்க்கத்தையும் மறுப்பதற்கில்லை. அவ்வகையில் பொன் குலேந்திரன் அவர்களின் இத்தொகுதியிலுள்ள புனைகதைகளையும் அறிவியல் கதைகளாகக் கொண்டு இத்தொகுதிக்கதைகளைபற்றிச் சிறிது நோக்குவோம்.

பொன் குலேந்திரன் அவர்கள்  ஒரு பௌதிகவியல் பட்டதாரி. அத்துடன் தொலை தொடர்புப் பொறியியலாளரும் கூட. அவரது பரந்த அறிவியல் உண்மைகளைப்பற்றிய அறிவு பிரமிக்க வைக்கின்றது. அவரது பன்முகப்பட்ட சுய தேடலை, சுய வாசிப்பை அது வெளிப்படுத்துகின்றது. தான் அறிந்ததை, உணர்ந்ததை சிறு சிறு கதைகளாக அழகாகப்புனைந்துள்ளார் அவர். அது அவரது எழுத்துத்திறனைப் புலப்படுத்துகின்றது.

இத்தொகுதியிலுள்ள சிறுகதைகளைப்பொறுத்தவரையில் மூன்று வகையான பிரதான பண்புகளை அவதானிக்க முடிகின்றது. முதலாவது வகைப்புனைகதைகள் பொதுவாக அறிவியல் கதைகள் என்று கூறப்படும் கதைகள்.  அடுத்தவகைப்பண்பாக சமகால அறிவியல் உண்மைகளை விபரிக்கும் கதைகள். மூன்றாவது வகைப்பண்பாக ஆசிரியரின் மத மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளை ஆங்காங்கே வெளிப்படுத்தும் கதைகள். இவ்விதமாக முப்பண்புகளை வெளிப்படுத்தும் கதைகளில் பல ஆசிரியரின் படைப்புத்திறனை வெளிப்படுத்துவனவாக அமைந்திருக்கின்றன.

'திண்ணை'க் கவிதைகள் மூன்று! - வ.ந.கிரிதரன் -

'திண்ணை' இணைய இதழில் முன்பு வெளியாகிய கவிதைகள் இவை. என்னை எப்பொழுதுமே நாம் வாழும் இப்பிரபஞ்சத்தில் உருவான மானுட இருப்பும், இதற்கும் மேலான உயிரினங்களின் சாத்தியம் பற்றிய சிந்தனைகளும், எம் இருப்பின் முப்பரிமாண எல்லையும் , காலவெளி பற்றிய புரிதல்களும் அவற்றின் மீதான சிந்தனையும், இயற்கையின் பேரழகும், படைக்கப்பட்டுள்ள ஏனைய உயிரினங்களின் படைப்புச்சிறப்பும் கவரும் விடயங்கள். எம் இருப்பு '"வெறுமைக்குள் விரியும் திண்ம இருப்பு.". நாமோ 'பரிமாண விலங்குகள் தாங்கும் அடிமைகள்'. அவை பற்றிச் சிந்திப்பதிலுள்ள இன்பம் எனக்கு வேறெவற்றிலுமில்லையென்பேன். ஆழநடுக்காட்டில் பல்லாண்டுகள் தனித்து விடப்பட்டாலும் கூட என்னால் இவை பற்றித் தொடர்ச்சியாகச் சிந்தித்துக்கொண்டேயிருக்க முடியும். 'என்று வருமந்த ஆற்றல்?', 'காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்! மற்றும்' 'மழையைச் சுகித்தல்! ஆகிய கவிதைகளிலும் என் இந்த உளப்பாங்கினை நீங்கள் கண்டிட முடியும்.

1. என்று வருமந்த ஆற்றல்? - வ.ந.கிரிதரன்

நள்ளிரவுக் கருமை;
மூழ்கிக் கிடக்குமுலகு; தண்ணொளி
பாய்ச்சும் நிலவு; ‘கெக்க’லித்துச்
சிரிக்கும் சுடரு.

விரிவான் விரிவெளி.
‘புதிர் நிறை காலவெளி.

வெறுமைக்குள் விரியும்
திண்ம இருப்பு.

பரிமாண விலங்குகள்
தாங்கும் அடிமை.

பன்முறையெனினும்
மீறி வியப்பதற்கெதுவுண்டு.

படியளக்கும் படைத்தவரே!
படைத்ததேன்? பகர்வீரா?

அறிவுத்தாகம் மிகுந்த
அலைவு; தாகசாந்திதான்
எப்போது?
அலையெனப் பரவும்
நிலை வரும் வரையிலா?
என்று வருமந்த
நிலை? அன்றி
‘அதிவெளி’ கடக்கும்
ஆற்றல் வரும் வரையிலா?
என்று வருமந்த
ஆற்றல்?


 நன்றி: திண்ணை - http://puthu.thinnai.com/?p=3648

அ.ந.க.வின் 'மனக்கண்' - வ.ந.கிரிதரன் -


- அறிஞர் அ.ந.கந்தசாமி -
ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியெனக் கருதப்படுபவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், விமர்சனம், நாவல் மற்றும் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஈடுபட்டு ஆழமாகத் தன் தடத்தினைப் பதித்தவரிவர். இவர் எழுதிய ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. இந்த 'மனக்கண்' நாவல் பற்றிய எனது விமர்சனக் குறிப்புகளே இவை. எனக்குத் தெரிந்த வரையில் அ.ந.க.வின் 'மனக்கண்' நாவல் பற்றி வெளிவந்த விரிவான, முதலாவதான,   விமர்சனக் கட்டுரை இதுவாகத்தானிருக்கும். அந்த வகையில் இக்கட்டுரைக்கொரு முக்கியத்துவமுண்டு. இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று: நமது விமர்சகர்களுக்கு நூலாக வெளிவந்த நூல்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதிப்பழக்கம். இன்னுமொரு காரணம் பெரும்பாலான விமர்சகர்களுக்குத் தேடுதல் மிகவும் குறைவு. தமக்கு அனுப்பி வைக்கப்படும் நூல்களுக்கு மட்டுமே அவர்களது கவனம் திரும்பும். அவ்விதம் கிடைக்கும் நூல்களைத் தம் புலமையினை வெளிப்படுத்துவதற்குத் தொட்டுக்கொள்ளப்படும் ஊறுகாயைப்போல் பாவித்துக்க்கொள்வார்கள்.  மிகச்சிலர்தாம் நூலாக வெளிவராத பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகளுக்கும் விமர்சனங்கள் எழுதியுள்ளார்கள்.இவர்களை உண்மையில் பாராட்டத்தான் வேண்டும். [ தனது இறுதிக்காலத்தில் இவர் மலையகத்தமிழர்களை மையமாக வைத்து கழனி வெள்ளம் என்றொரு நாவலினை எழுதிக்கொண்டிருந்தார். அந்த நாவல்  எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், அது 1983 இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் அறியப்படுகிறது]. 'மனக்கண்' ஈழத்திலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகையில் அக்டோபர் 21, 1966 தொடக்கம் ஜூன் 29, 1967 வரையில் தொடராக வெளிவந்து இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வாழும் தமிழர்களின் ஆதரவினைப் பெற்றதொரு நாவல். இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று அ.ந.க நாவலில் வரும் பாத்திரங்களுகிடையிலான உரையாடல்களில் பேச்சுத்தமிழைக் கையாளுவதற்குப் பதில் , பல்வேறு பகுதிகளிலுமிருந்து வாசிக்கும் அனைவருக்கும் புரியவேண்டுமென்பதற்காகச் 'சரளமான ஒரு செந்தமிழ் நடையினைப்' பாவித்திருப்பதுதான்.

அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்! - வ.ந.கிரிதரன் -


- இக்கட்டுரை சந்தியா பதிப்பகத்தினரால் எழுத்தாளரும், விமர்சகருமான திரு. வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாவது ஆண்டு இலக்கியப்பணியினையொட்டி அண்மையில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட 'வாதங்களும், விவாதங்களும்' நூலுக்காக எழுதப்பட்டது. நூலினை பா.அகிலன், எழுத்தாளர் திலீப்குமார், சத்தியமூர்த்தி ஆகியோர் தொகுத்துள்ளார்கள். ]  -  'நான் எழுத்தாளனோ, விமர்சகனோ இல்லை' என்று ஆரம்பத்திலிருந்தே பிரகடனப்படுத்தி வருகின்றேன்" (விவாதங்கள் சர்ச்சைகள்,  பக்கம்263) என்று தன்னைப்பற்றி வெங்கட் சாமிநாதன் கூறிக்கொண்டாலும் இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற கலையின் பல்வேறு துறைகளிலும் ஆழமான, காத்திரமான பங்களிப்பினைச் செய்த கலை விமர்சகர் இவரென்பது மறுக்கமுடியாதவுண்மை மட்டுமல்ல நன்றியுடன் விதந்துரைக்கப்பட வேண்டியதுமாகும். 1960இல் 'எழுத்து' இதழில் வெளியான 'பாலையும், வாழையும்' கட்டுரையின் மூலம் எழுத்துலகிற்குக் காலடியெடுத்து வைத்த வெ.சா.வின் க்லைத்துறைக்கான பங்களிப்பு ஐம்பதாண்டுகளை அடைந்திருக்கிறது. இந்த ஐம்பதாண்டுக் காலகட்டத்தில் 'சாமிநாதனது பேனா வரிகள் புலிக்குத் தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது என்றபடி சகலதையும் பதம் பார்க்கும்' என்னும் சி.சு.செல்லப்பாவின் கூற்றின்படி அனைவரையும் பதம் பார்த்துத்தான் வந்திருக்கிறது. ஒரு சில வேளைகளில் உக்கிரமாகவும் இருந்திருக்கிறது. ஒரு படைப்பாளியின் படைப்பினை ஆரோக்கியமாக விமர்சனத்துக்குள்ளாக்கி அதன் நிறைகளை மட்டுமல்லாது குறைகளையும் எந்தவிதத் தயக்கங்களுமின்றி வெளிப்படுத்தும் வெ.சா. சில சமயங்களில் அவரது விமர்சனங்களை முன்னுரைகளென்ற பெயரில் கேட்கும் சிலருக்கு நேரிடையாகவே மறுத்துமிருக்கின்றார். தனக்குச் சரியென்று பட்டதை, எந்தவிதத் தயக்கங்களுமின்றி, எந்தவித பயன்களையும் எதிர்பார்க்காதநிலையில் , துணிச்சலுடன் எடுத்துரைக்கும் வெ.சா..வின் போக்கு வெ.சா.வுக்கேயுரிய சிறப்பியல்புகளிலொன்று. -
 அறுபதுகளில், எழுபதுகளில் கோலோச்சிக் கொண்டிருந்த முற்போக்கிலக்கியப் படைப்புகளைக் காரமாக விமர்சித்தவர் வெ.சா. அதன் காரணமாக, 'கலை சமுதாயத்திற்கே' என்னும் முற்போக்கணியினரை, அவர்தம் கலைப்படைப்புகளின் தன்மையினைத் தன அறிவிற்கேற்ப , தர்க்கரீதியாக விமர்சித்த காரணத்தினால் வெ.சா.வைக் 'கலை கலைக்காகவே' என்று வாதிடும், 'அழகியலுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கு'மொரு' அழகியல் உபாசகராகவும், சமுதாயப் பிரக்ஞையற்றவொருவராகவும் ஓரங்கட்டிவிடவும் சிலர் தலைப்பட்டனர். அவரை முக்கியமான விமர்சகராக ஏற்றுக் கொண்டு அதே சமயம் அவர் அறிவுத்தளத்தையொரு பொருட்டாகவே கருதியதில்லையென்றும், அவரது மொழி விமர்சனத்திற்குரிய தர்க்க மொழியல்லவென்றும் கூறித் தமது மேலாவிலாசத்தைக் காட்டும் முனைப்புகளும் நடைபெறாமலில்லை. வேறு சில இளம் படைப்பாளிகளோ அவரை ஞான சூனியமென்றும், அயோக்கியனென்றும் கூட வசை பாடினர். இவை பலவற்றுக்கு அவர் தன் பாணியில் பதிலிறுத்துள்ளார். அத்தகைய அவரது பதில்களில் சிலரைச் சீண்டியுமிருக்கிறார். தனது எழுத்தினைப் பற்றிக் குறிப்பிடும்போது 'எல்லாமே தனி மனிதனாகவும், இந்தச் சமுதாயத்தில் ஓர் அங்கமாகவும், என் உணர்வுகளைத் தாக்கிய, சுற்றிச் சமூகத்தில் நடக்கும் அருவருப்பான நடப்புகளைப் பற்றிய என் எதிர்வினைகள்' ('விவாதமேடைச் சர்ச்சைகள்'; பக்கம் 4- முன்னுரையில்) என்று குறிப்பிடும் இவரது எண்ணங்களின் தர்க்கச் சிறப்பும், பரந்த வாசிப்புடன் கூடிய அறிவும் பிரமிக்க வைப்பன.. கலாநிதி கைலாசபதியின் 'தமிழ் நாவல் இலக்கியம்' பற்றிய இவரது 'மார்க்சின் கல்லறையிலிருந்து ஒரு குரல்' என்னும் விரிவான ஆய்வுக் கட்டுரை, 'பேராசிரியர் நா.வானமாலையின் ஆராய்ச்சி விநோதங்கள்' போன்ற கட்டுரைகளும் அவற்றிற்கான எம்.ஏ.நுஃமான் போன்றவர்களின் எதிர்வினைககளும் தமிழ் இலக்கியத் துறைக்கு வளம் சேர்ப்பன.

புத்தாக்கம் செய்வோம்! பாதிப்புகளைக் குறைப்போம்! இணைந்து வாழ்வோம்!

  காலத்துக்குக் காலம் புதுப் புதுத்  தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் தருணங்களில் சமூக, ஊடகங்களில் புதிய சூழலியற் போராளிகள் உருவாகிவிடுகின்றனர...