Wednesday, August 25, 2021

இதுவரை வெளியான வ.ந.கிரிதரனின் நூல்கள் & மின்னூல்கள் (அமேசன் - கிண்டில் வெளியீடு)!

வ.ந.கிரிதரனின் வெளியான நூல்கள்
:

1. அமெரிக்கா (நாவல் & சிறுகதைத்தொகுப்பு. ஸ்நேகா - மங்கை பதிப்பக வெளியீடு)
2. நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (ஆய்வு நூல். ஸ்நேகா பதிப்பக வெளியீடு)
3. மண்ணின் குரல் (நாவற் தொகுப்பு. குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடு)
4. குடிவரவாளன் (நாவல். ஓவியா பதிப்பக வெளியீடு)
5. அமெரிக்கா (நாவல். திருத்திய பதிப்பு.  மகுடம் வெளியீடு)
6. எழுக அதி மானுடா (கவிதைத்தொகுப்பு. மங்கை பதிப்பக  வெளியீடு)
7. மண்ணின் குரல் (நாவல், கட்டுரை & கவிதைத்தொகுப்பு. மங்கை பதிப்பக வெளியீடு)

Thursday, July 29, 2021

சிறு நாவல்: பால்ய காலத்துச் சிநேகிதி! - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஒன்று: அதிகாலையில் பூத்த மலர்!


[Digiat Art (Google Nano Banana) help: VNG ]

 'டொராண்டோ' மாநகரத்து வானமிருண்டு கிடந்தது. தான் வசிக்கும் தொடர்மாடியின் பல்கணியிலிருந்து வழக்கம்போல் நகரத்து வானை சாய்வு நாற்காலியிலிருந்து நோக்கிக்கொண்டிருந்தான் மணிவண்ணன். அவனுக்கு மிகவும் பிடித்தமான விடயங்களில் இயற்கையை இரசித்தல், குறிப்பாக இரவு வானை இரசித்தல் அடங்கும். அது அவனது சிறுவயதிலிருந்து அவனுக்கு ஏற்பட்ட பழக்கங்களிலொன்று. என்று முதன் முதலாக 'கண் சிமிட்டும்! கண் சிமிட்டும்! சிறிய நட்சத்திரமே! ' ('டுவிங்கிள்! டுவிங்கிள்! லிட்டில் ஸ்டார்' ) குழந்தைப்பாடலைக் கேட்டானோ அன்றிலிருந்து அவனை ஆட்கொண்ட விருப்புகளிலொன்று இவ்விருப்பு.

"கண் சிமிட்டும்! கண் சிமிட்டும்! சிறிய நட்சத்திரமே!
நீ என்னவென்று நான் வியப்புறுகின்றேன்.
அங்கே மேலே உலகம் மிகவும் உயரமானது,
வானின் வைரம் போன்று விளங்குகின்றாய்."

அவனுக்கு 'அங்கே மேலே உலகம் மிகவும் உயரமானது' என்னும் வரி மிகவும் விருப்பமானது. அவ்வரி அவனது கற்பனையை எப்பொழுதும் சிறகடிக்க வைக்கும் வரிகளிலொன்று. அங்கே உயரத்தில் விரிந்து , உயர்ந்து , பரந்து கிடக்கும் ஆகாயத்தில்தான் எத்தனை சுடர்கள்! எத்தனை நட்சத்திரக் கூட்டங்கள்! எத்தனை எத்தனை கருந்துளைகள்! எத்தனை பிரபஞ்சங்கள்! நினைக்கவே முடியாத அளவுக்கு விரிந்த பிரபஞ்சம்! அவனுக்குப் பல்விதக் கற்பனைகளை, கேள்விகளை அள்ளித்தருவது வழக்கம். அக்கேள்விகள் அவனது சிந்தனைக் குதிரைகளைத் தட்டிப் பயணிக்க வைக்கும் ஆற்றல் மிக்கவை. அச்சிந்தனைக் குதிரைப்பயணங்களிலுள்ள இன்பம் அவனுக்கு வேறெந்தப் பயணத்திலும் இருப்பதில்லை. முடிவற்று விரியும் சிந்தனைக்குதிரைகளின் பயணங்களுக்குத் தாம் முடிவேது? முப்பரிமாணச்ச்சிறைக்குள் வளையவரும் மானுட உலகின் பரிமாணங்களை மீறிய பரிமாணங்களை உள்ளடக்கியதாகப் புதிருடன் அவனுக்கு விரிந்து கிடக்கும் இரவு வானும், பிரபஞ்சமும், கொட்டிக்கிடக்கும்  நட்சத்திரங்களும் தெரியும். 'டொரோண்டோ' நகரத்து வான் பூமத்திய ரேகைக்கு அருகிலிருக்கும் இரவு வானைப்போல் நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானல்ல. அதற்கு நகரிலிருந்து வெளியே செல்ல வேண்டும். நகரத்து ஒளிமாசிலிருந்து வெளியேற வேண்டும். இருந்தாலும் இருண்டு கிடக்கும் நகரத்து வானையும் கூர்ந்து நோக்கத்தொடங்கினால் ஒன்று, இரண்டு , மூன்று . .என்று இருட்டுக்குப் பழகிய கண்களுக்குத் தெரியத்தொடங்கிவிடும். அது போதும் அவனுக்கு.

Sunday, July 25, 2021

கேட்டு மகிழ்வோம்: வ.ந.கிரிதரனின் ' ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை'


எனது சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை'  என்னும் கதையினை 'Witty Garden' என்னும் 'யு டியூப் சன'லில் கேட்டு மகிழுங்கள். இச்சிறுகதை முதலில் தாயகம் (கனடா) பத்திரிகையில் பிரசுரமானது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு லதா ராமகிருஷ்ணனால் செய்யப்பட்டது. அதனை இலண்டலிருந்து வெளியான 'தமிழ் டைம்ஸ்' ஆங்கிலச் சஞ்சிகை மீள் பிரசுரம் செய்தது.

Friday, July 23, 2021

கவிதை: மகா புலவரும் மகா கவிஞரும்! - வ.ந.கிரிதரன்


மகாகவிஞர் அவர் என்று கூறுவர்.
சொற்களைத் தேர்ந்துடுத்து
சோகங்களை வடித்தெடுப்பதில்
அவர் வல்லவர்.
அவரது கவிதை வரிகளில்
அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள்
அவரது ஆழ்மனத்து உணர்வுகள்
அல்ல.
அவரது ஆழ்மனத்தை மூடிநிற்கும்
அவரது வெளிமனத்தின் செருக்குகள் அவை. 

அபுனைவிலொரு புனைவோவியம் : 'கமலாம்பாள் சரித்திரம்' நாவற் காட்சி!

அபுனைவொன்றில் குறிப்பிடப்படும் புனைவொன்றில் இடம் பெறும் காட்சிக்கான அட்டை ஓவியம்!
 

 
இங்குள்ள கல்கி சஞ்சிகையின் ஓவியர் விஜயா வரைந்த அட்டை ஓவியத்துக்குச் சிறப்பொன்றுண்டு. பொதுவாக பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியாகும் புனைகதைகளுக்குத்தான் ஓவியங்கள், அட்டை ஓவியங்கள் வரைவார்கள். ஆனால் இங்குள்ள அட்டை ஓவியமோ அபுனைவில் குறிப்பிடப்படும் புனைகதையொன்றில் இடம் பெறும் காட்சிக்காக வரையப்பட்ட ஓவியம்.

மணிமேகலையின் காதல்!


பொன்னியின் செல்வன் நாவலை ஐந்து பாகங்கள் நீட்டிய கல்கி நாவலை எவ்விதம் அனைவரையும் கவரும் வகையில் படைத்தாரோ அவ்விதமே இறுதி அத்தியாயத்தையும் மறக்க முடியாதவகையில் படைத்திருப்பார்.
அதுவரை நாவலில் வரும் முக்கிய பாத்திரங்கள் வந்தியத்தேவன், குந்தவை, வானதி, பெரிய/சின்ன பழுவேட்டைரையர்கள், பூங்குழலி, சேந்தன் அமுதன்., ஆழ்வார்க்கடியான், அருண்மொழிவர்மன், நந்தினி. மந்தாகினி. ஆனால் நாவலின் முடிவு முக்கியப்படுத்துவது வந்தியத்தேவனையும் , அதுவரை அதிகம் முக்கியப்படுத்தப்படாமலிருந்த கடம்பூர் சம்புவரையரின் புத்திரியான மணிமேகலையையும்தாம். 

Tuesday, July 20, 2021

வ.ந.கிரிதரனின் 'கண்ணம்மா'க் கவிதைகள் (1): காலவெளிக் கைதிகள்!


காலவெளியிடையே கண்ணம்மா உன்
கனிமனம் எண்ணி வியக்கின்றேன்.
காலவெளியிடையே கண்ணம்மா
கணமும் பறந்திட விளைகின்றேன்.
காலவெளிச் சிந்திப்பிலே கண்ணம்மா
களித்திட கணமும் எண்ணுகின்றேன்.
சூழலை மீறியே கண்ணம்மா
சிந்திக்க விரும்புகின்றேனடி.
காலமென்றொன்றில்லை கண்ணம்மா.
வெளியும் அவ்வாறே கண்ணம்மா.
காலவெளி மட்டுமே கண்ணம்மா இங்கு
உண்மையடி கண்ணம்மா.

வ.ந.கிரிதரனின் குரலில் : பொங்கிவரும் பெருநிலவு போன்ற எழில்தோற்றம்.

வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5 ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி   பொங்கிவரும் பெருநிலவு போன்ற எழில்தோற்றம். புல...