Sunday, November 30, 2025

சிந்தனையும் மின்னொளியும்! - அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) -


சாளரத்தின் ஊடாகப் பார்த்திருந்தேன் சகமெல்லாம்
ஆழ உறங்கியது அர்த்த ராத்திரி வேளையிலே,
வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க,
மோனத்தை வெட்டி யிடியொன்று மோதியதே!
'சட்' டென்று வானம் பொத்ததுபோல் பெருமாரி
கொட்டத்தொடங்கியது. 'ஹேர்' ரென்ற இரைச்சலுடன்
ஊளையிடு நரியைப் போல் பெருங்காற்றும் உதறியது.
ஆளை விழுத்திவிடும் அத்தகைய பேய்க்காற்று
சூறா வளியிதுவா உலகினையே மாய்க்க வந்த
ஆறாத பெருஊழிக் காலத்தின் காற்றிதுவா?
சாளரத்துக் கதவிரண்டும் துடிதுடித்து மோதியது.
ஆழிப்பெரும் புயல்போல் அல்லோலம் அவ்வேளை
உலகம் சீரழிவுற்ற(து); அப்போ வானத்தில்
மாயும் உலகினுக்கு ஒளிவிளக்கந் தாங்கிவந்த
காயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே.
கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும்
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.
இந்த வாறாகச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.
புந்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி; நான்
இந்த உலகினிற்கு வந்தடைந்தேன்; என்னுடைய
சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ? -


 அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) 

அறிஞர் அ.ந.கந்தசாமியின் ஆரம்பகாலக் கவிதையிது. நாற்பதுகளில் ஈழகேசரியில் வெளிவந்தது.

Saturday, November 29, 2025

பெருமழையும் பெருவெள்ளமும்! - வ.ந.கிரிதரன் -



[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]  


இயற்கை அன்னையின் சீற்றம் பெருமழையாகப் பொழிகின்றது. மானுட குலத்திற்கு ஒரு சேதியினையும்  சொல்லுகின்றது. பெருவெளியில் சிறு குமிழாய் விரையுமிந்த நீலவண்ணக் கோளம் எம் வீடு!  இங்குள்ள உயிரினம் அனைத்தினதும் இல்லம். இதனைக் கவனமாக, பத்திரமாக, தேவையற்ற சேதங்களுக்கு உள்ளாகாத வகையில் பராமரிப்பது நம் கடமை. அதனைச் செய்யத்தவறியதன் விளைவே முறையற்ற காலநிலை மாற்றங்களும், இயற்கை அனர்த்தங்களும், இவ்விதமான பெருமழையும், பெருக்கெடுத்தோடும் வெள்ளமும் எம் காலத்தில் நாம் கண்டதில்லை.  அவ்வப்போது பெரும் புயல்கள் தாக்குவதுண்டு. அவையும்  அரியவை. ஆனால் தற்காலத்தில் இது போன்ற பெரு மழையும், பெரு வெள்ளமும் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதொரு விடயமாக அமைந்திருப்பதை அவதானிக்க  முடிகின்றது.

Friday, November 28, 2025

யார் இவர்? இவர்தான் டில்வின் சில்வா (Tilvin Silva)!


யார் இவர்? இவர்தான்  டில்வின் சில்வா (Tilvin Silva).   ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜேவிபி JVP) பொதுச்செயலாளர். ஜேவிபியின் முதலாவது புரட்சி தோல்வியில் முடிந்தது. ஜே.ஆர் .ஜெயவர்த்தனே 1977இல் பிரதமராகப் பதவியேற்றதும் ஜேவிபிக்கு மன்னிப்பளித்து  . ஜனநாயக அரசியலில் பங்குபற்ற வழி செய்தார். அப்போது ஜேவிபியில் இணைந்தவர்தான் டில்வின் சில்வா.  இவரது முழுப்பெயர் மெஸ்திரீ டில்வின் சில்வா.  தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஸ்தாபக உறுப்பினகளில் ஒருவரான  இவர் ஜே.வி.பி இன் கொள்கைகள் மற்றும் அரசியல் வியூகங்களை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருபவர்.  குறிப்பாக  சமூக நீதி, ஊழல் எதிர்ப்பு மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துபவர்.  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவராகவும்  கருதப்படுகின்றார். இவரைப்பற்றிய, இவரது குடும்பம், கல்வி, பார்த்த வேலைகள் போன்றவற்றை அறிய விக்கிபீடியாக் குறிப்பைப் பாருங்கள். கூகுளில் தேடுங்கள். மேலதிகத் தகவல்கள் கிடைக்கும்.

பொதுவாக நான் இலங்கையின் பார்ம்பரிய அரசியல்வாதிகள் பற்றி அதிகக் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் எவ்வினத்தவர் என்றாலும் தம் வாழ்வைத் தாம் நம்பும் சித்தாந்தத்துக்காக அர்ப்பணித்து சமூக , அரசியற்பாளர்களாக இயங்கும் ஆளுமைகளை அவதானிப்பவன். இவர் அவர்களில் ஒருவர். ஜேவிபியின் இரண்டாவது தோல்வியுற்ற புரட்சியின்போது , அரச படைகளுக்கு எதிராகப் போராடிவர். ஜேவிபியின் மாவட்டச் செயலாளர்களில் ஒருவராக இருந்திருக்கின்றார். அநேகமாக அவரது பிறந்த மாவட்டமான களுத்துறை மாவட்டமாக இருக்கலாம். சரியாகத்  தெரியவில்லை. தெரிந்தவர்கள் அறியத்தரவும்.

Wednesday, November 26, 2025

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு வழிகாட்டி


'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு  வழிகாட்டி

கனடாவில் வெற்றிகரமான பயணத்தை கனவு காணும் சர்வதேச மாணவரா நீங்கள், சரியான கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது முதல் உங்கள் தொழில் வாழ்க்கையைத் தொடங்குவது வரை பயனுள்ள வழிகாட்டியாகத் திகழ்கிறது    'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'.

20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள , அனுபவமிக்க கனடிய குடிவரவு ஆலோசகர்(RCIC) ஒருவரால்  எழுதப்பட்ட இந்த நடைமுறை வழிகாட்டி, கனடாவிற்கான உங்கள் பாதையின் ஒவ்வொரு முக்கிய படிநிலையிலும் உங்களுக்கு வழிகாட்டுகிறது.  மாணவர் அனுமதி முதல் நிரந்தர வதிவிட விருப்பங்கள் வரை முழு விசா  மற்றும் குடிவரவு செயல்முறை குறித்த படிப்படியான வழிகாட்டுதல் எனப் பல விடயங்களை உள்ளடக்கிய நூல்.

வீடு கண்டுபிடிப்பது ,  நிதியைப் நிர்வகிப்பது, தொழில் வாழ்க்கையைத் தொடங்குதல்,  பட்டப்படிப்புக்குப் பிறகு கனடாவில் இன்டர்ன்ஷிப்களைப் பெறுதல், வேலைகளைக் கண்டுபிடிப்பது மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்குவது குறித்த நிபுணர் ஆலோசனை எனப் பயனுள்ள குறிப்புகளால் நிறைந்துள்ள நூலிது.  கனடாவுக்குக் குடிபுக விரும்பும் எவருக்கும் பயன் மிக்க தகவல்களை, அறிவுரைகளக் கொண்ட நூல்.

இந்நூலை வாங்குவதற்கான இணைப்பு - https://amzn.to/4pBxaFn

[Digital painting technology, Google Nano Banana, Assistance: VNG] | * Disclosure: As an Amazon Associate, I earn from qualifying purchases 


Tuesday, November 25, 2025

இவர் யார் தெரியுமா?


இவர் யார் தெரியுமா? இவர்தான் இலங்கையின் பெண்கள் மற்றும் குழ்ந்தைகள் நலத்துறை அமைச்சர்.  இவர் தமிழ்ப்பெண்.  சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாத்தறைத்   தேர்தல் தொகுதியில் 148,379 வாக்குகள் பெற்று கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நின்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர். எதற்கெடுத்தாலும் ஜேவிபி முன்பு இனவாதக் கட்சி. எப்படி மாறுவார்கள் என்று தேர்தல் காலங்களில் பிரச்சாரம் செய்பவர்கள் அப்போது இப்பெண்மணியையும் நினைத்துக்கொள்ளுங்கள்.

சிங்கள மக்கள் பெரும்பான்மையாக் வாழும், தெற்கு மாகாணத்திலுள்ள மாத்தறைப் பகுதியிலிருந்து, அதுவும் மகிந்த ராஜபக்சாவின் கோட்டையிலிருந்து தமிழ்பெண் ஒருவரைச் சிங்கள மக்கள் தம் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள் என்றால், அவரைப் பெண்கள் , குழந்தைகள் நலத்துறை அமைச்சராக தேசிய மக்கள் சக்தி ஆக்கியிருக்கின்றதென்றால்,  ஜேவிபி மட்டும் மாறவில்லை., சிங்கள மக்களும் மாறியிருக்கின்றார்கள்.  ஆனால் தோற்ற இனவாத அரசியல்வாதிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு இனவாதத்தைத் தூண்டி, மீண்டும் ஆட்சிக்கட்டிலேறத்   துடிக்கின்றார்கள். இந்நிலை மீண்டும் வந்தால் நாட்டு மக்கள் அனைவருக்கும் எதிர்காலம் நன்றாகவிருக்கப்போவதில்லை.

சறுக்கலிலிருந்து தப்ப ஒரு வழி!



குளிர் காலம் தொடங்கி விட்டது. வெப்பநிலை பூச்சியம் சென்டி கிரேட்டுக்குக் கீழே குறையும் தருணங்களில் , தரையில் இருக்கும் 'ஸ்நோ'வுக்குக் கீழ் தரை 'ஐஸ்'ஸாக உறைந்து கிடக்கும். இத்தருணங்களில் சறுக்கி விழுந்து விடும் சாத்தியங்கள் அதிகம். 
 
முதியவர்களுக்கு இவ்விதமான விழுதல்கள் உயிராபத்தைக் கூட ஏற்படுத்தும் தன்மை மிக்கவை. எனக்கும் இவ்விதமான விழும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. அதிலிருந்து நான் இவ்விதமான காலநிலைச் சூழலில் சப்பாத்துகளுக்கு 'Snow Grips ' பாவிப்பது வழக்கம். 

இலங்கையில் இனவாதம் பற்றிய சிந்தனைகளும், செயற்கை நுண்ணறிவுடன் அது பற்றிய உரையாடலும்!


இலங்கை ஜனாதிபது அநுர குமார திசாநாயக்க அரசு இனவாதத்துக்கெதிராக் குரல் கொடுத்து வருகின்றது. பதவி பறிபோன சிங்கள அரசியல்வாதிகள் எப்படியாவது இழந்ததை மீளப்பெறுவதற்காக இனவாதத்தைக் கையிலெடுக்கின்றார்கள். அநுர அரசின் செல்வாக்கினால் பாதிப்புக்குள்ளாகிய தமிழ் அரசியல்வாதிகளும், ஜேவியின்  கடந்த கால வரலாற்றைக் கூறி, இவர்களும் இனவாதிகள், நம்ப முடியாது என்று செயற்பட்டு வருகின்றார்கள். இவ்விரண்டு குழுவினரும் இப்படித்தான் செயற்படுவார்கள். 

உண்மையில் இவர்களைப் பொருட்படுத்தாமல் அநுர அரசு இனவாதத்துக்கு எதிராக உறுதியாக செயற்பட்டால், அதன் பலன்கள் வெளித்தெரிகையில் தம் முயற்சியில் தோல்வியுற்ற எதிர்கட்சி அரசியல்வாதிகளும் தம் பாதையை மாற்றும் சந்தர்ப்பம் உண்டு. 

அடுத்தது உண்மையில் இனவாதம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்றால், அரசு இனவாதப் பெளத்த பிக்குகளையும் சிங்கள மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்ட வேண்டும். மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இவ்விதப் பிக்குகளை இலங்கையின் சட்டம் கையாளும் நிலையை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இதனைச் செய்வது இனவாதத்தை ஒழிப்பதற்கான உறுதியான படியாக அமையும். அவ்விதம் செய்யாவிட்டால் பெளத்த பிக்குகள் சிலரின் இனவாதத்துக்கு அரசு அடி பணிந்தால் ஒரு போதுமே இனவாதத்தை அரசால் நாட்டிலிலிருந்து ஒழிக்க முடியாது  போய்விடும். 

ஒவ்வொரு தடவை இனவெறி பிடித்த பிக்குகள் செயற்படும் தருணங்களில் எல்லாம் சட்டம் தன் கடமையைச் செய்யும் நிலை ஏற்பட வேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்களில் அரசு தென்னிலங்கை மக்களுக்கு அவர்கள் இனவாதிகள் என்பதை எடுத்துரைக்க வேண்டும்.மக்கள் புரிந்து கொள்வார்கள். அரசுக்கு ஆதரிப்பார்கள். இவ்விதம் செய்யாமல் அரசும் இனவாதப் பிக்குகளின் தந்திரத்துக்கு அடிபணிந்தால் ,இறுதியில் அதன் அரசியல் எதிர்காலமும் அபாயத்துக்கு உள்ளாகி விடும்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...