Thursday, September 12, 2019

பாரதி ஒரு மார்க்ஸியவாதியா? - வ.ந.கிரிதரன் -

மகாகவி பாரதியார்பாரதியார் ருஷ்யப் புரட்சியினைப் பாராட்டி வரவேற்று 'புதிய ருஷ்யா' என்னும் கவிதையில் பின்வருமாறு பாடுகின்றார். "குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு/ மேன்மையுறக் குடிமை நீதி/கடியொன்றெழுந்தது பார் குடியரசென்று/உலகறியக் கூறிவிட்டார் அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது /அடிமையில்லை அறிக என்றார்/இடிபட்ட சுவர் போலே கலி விழுந்தான்/ கிருதயுகம் எழுக மாதோ". இதன் மூலம் ருஷ்யப் புரட்சியினை இனங்கண்டுகொண்டு முதன்முதலாகப் பாடிய இந்தியக் கவிஞனென்ற பெருமையினையும் பாரதியாரே தட்டிக் கொள்கின்றார். பாரதியின் 'மாதர் விடுதலை' பற்றிய கவிதைகள், கட்டுரைகள், 'கியூசின்' என்னும் வீரமாதினைப் பற்றிய கட்டுரைகள், அம்மாதின் கவிதை மொழிபெயர்ப்புகள், புதிய ருஷ்யாவைப் பற்றிய கவிதை, 'செல்வம்', 'தொழிலாளர்' என்னும் தலைப்பிலான கட்டுரைகள், மற்றுமவர் தத்துவப் பாடல்கள் இவையாவுமே நமக்குக் கூறி நிற்பவை தானென்ன? பாரதி ஒவ்வொரு விடயத்தினைப் பற்றியும் பல்வேறுவகைப்பட்ட கருத்துகளையும் வெகு நுணுக்கமாகப் பரிசீலித்துள்ளாரென்பது மட்டுமல்ல, சமகாலத்து நடப்புகளையும் அறிந்துள்ளாரென்பதையும்தான்.

இன்றைய உலகில், முரணான பல்போக்குச் சிந்தனையாளர்கள் ஒவ்வொருவரும் தத்தமது பார்வைகளில் பாரதியினைக் கண்டு புளகாங்கிதமடைந்து கொள்கின்றார்கள். இந்நிலையில் பாரதியின் உண்மையான நிலைப்பாட்டினை அறிந்து கொள்ள முயல்வது மிகவும் அவசியம். இது பற்றிய அவனது முரண்பட்ட போக்குகளை, தேடலை அவனது எழுத்துகளினூடே அறிந்து கொள்ள முயலவதே சாலச் சிறந்தது.

'பாரத சமுதாயம்' என்னும் கவிதையில் அவன் பின்வருமாறு பாடுகின்றான்: "முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடமை./ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை/ மனிதருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ?/மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?/பலனில் வாழ்க்கை இனியுண்டோ?" இவ்விதம் பாரதியின் கவிதைகள் 'பொதுவுடமை'யினையும் 'சமத்துவத்தையும்' வரவேற்றுப் பாடுகின்றன. இவ்விதம் பொதுவுடமைக் கருத்தினை வரவேற்றும், ஆயுதம் தாங்கி நிகழ்த்தப்பட்ட ருஷ்யப் புரட்சியினையும் வரவேற்றுப் பாடிய பாரதியை மார்க்ஸியவாதிகள் புரட்சியினை , ஆயுதப் புரட்சியினை வரவேற்றிடும் ஒரு கவிஞனாக எண்ணி விடுகின்றார்கள். ஆனால் உண்மை இதுவா? பாரதியாரின் ஆவேசத்தினையூட்டிடும் சுதந்திரப்பாடல்களையும், பாப்பாப் பாட்டில் "பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம்/பயங்கொள்ளலாகாது பாப்பா!/மோதி மிதித்து விடு பாப்பா! /அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!" என்று பாடுவதையும் பார்த்துவிட்டு அவர் வன்முறையின் மூலம் தீர்வு காண்பதனையே விரும்புவதாக ஒரு சாரார் கருதிவிடுகின்றார்கள். ஆனால் இவை எல்லாவற்றையுமே தவிடு பொடியாக்கி விடுகின்றது பாரதியின் 'செல்வம்' என்ற கட்டுரை. அதில் அவர் பின்வருமாறு கூறுகின்றார்:

Saturday, September 7, 2019

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன், B.Sc (B.E) in Architecture -


- 'வீழும் நீர்' என்றழைக்கப்படும் (Fallingwater) வீடு.
ஓவியம் AI --
 
நவீனக் கட்டடக்கலையின் முக்கிய சிந்தனைகள் சிலவற்றினை சாதாரண வாசகருக்கும் அறியச்செய்வதே இக்கட்டுரையின் பிரதான நோக்கம். தமிழில் கட்டடக்கலை பற்றிய குறிப்பாக நவீனக் கட்டடக்கலையின் முக்கிய கோட்பாடுகளாக "லூயிஸ் சல்லிவனின் (Louis Sullivan) செயற்பயனைத் தொடரும் வடிவம் (Form follows function),  ஃப்ராங்க் லாயிட் ரைட் அவர்களின் சேதனக் கட்டடக்கலை (Organic Architecture),  கட்டடக்கலைஞர் லட்விக்  மீஸ் வான் டெர் ரோவின் (Ludwig Mies Van der Rohe)  ''குறைவில் நிறைய (Less is more) '   போன்ற கோட்பாடுகளையும் மற்றும்   லெ கொபூசியேவின்  (Le Corbusier) நவீனக்கட்டடக்கலைக் கருதுகோள்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.  இவை நவீனக் கட்டடக்கலைக்கு வளம் சேர்த்த சிந்தனைகள். இவற்றைப்பற்றிய சுருக்கமான விளக்கங்களைத் தருவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கம்.

லூயிஸ் சல்லிவனின் (Louis Sullivan)
1. லூயிஸ் சல்லிவனின் (Louis Sullivan) செயற்பயனைத் தொடரும் வடிவம் (Form follows function)
ஒரு கட்டடத்தின் அல்லது பொருளொன்றின் வடிவமானது அக்கட்டடம் அல்லது அப்பொருள் எக்காரணத்துக்காகப் பாவிக்கப்படுகின்றதோ அக்காரணத்துக்கேற்ப பொருத்தமான வடிவமொன்றினைப்பெறும். அதாவது அக்கட்டடம் அல்லது அப்பொருளின் செயற்பயனுக்கேற்ப அவற்றின் வடிவமுமிருக்கும். இதனைத்தான் வடிவம் செயற்பயனைத்தொடர்தல் (Form follows function) என்னும் கூற்று வெளிப்படுத்துகின்றது. இக்கருதுகோள் அல்லது சிந்தனை் அல்லது விதி இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவக் கட்டடக்கலையின் அல்லது தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் பொருளொன்றின் வடிவமைப்பில் முக்கியமானதொரு கருதுகோளாகும்.

இக்கோட்பாட்டின் காரணகர்த்தா புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவன் ( Louis Sullivan) ஆவார். ஆயினும் பொதுவாக இக்கோட்பாட்டின் காரணகர்த்தாவாகத் தவறாகச் சிற்பி ஹொரதியொ கிறீனோ , Horatio Greenough (1805 – 1852) , குறிப்பிடப்பட்டாலும் அது தவறானது. சிற்பி ஹொரதியொ கிறீனோவை இவ்விதம் குறிப்பிடுவதற்குக் காரணம் அவரது கட்டுரைகளின் தொகுதியொன்று 'வடிவமும், செயற்பயனும்: கலை மீதான ஹொரதியோ கிறீனோவின் குறிப்புகள்' (Form and Function: Remarks on Art by Horatio Greenough.) என்னும் பெயரில் வெளிவந்ததாகும். ஆயினும் வடிவமானது எப்பொழுதுமே செயற்பயனைத் தொடரும் என்னும் கூற்றினை முதன் முதலில் பாவித்தவராகக் கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவனைத்தான் குறிப்பிட வேண்டும்.

Monday, July 22, 2019

கறுப்பு ஜூலை 1983 பற்றிய நினைவுக்குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -


ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் மே 2009, ஜூலை 1983 இரண்டு மாதங்களும் அவர்கள்தம் வரலாற்றைப் புரட்டிப்போட்டு வைத்த மாதங்கள். ஜூலை 1983 அதுவரை இலங்கைத்தமிழர்களுக்கெதிராக வெடித்த இனக்கலவரங்களில் மிகப்பெரிய அழிவுகளையும் , உயிர்ச்சேதங்களையும் ஏற்படுத்திய கலவரம். ஜே.ஆர்.அரசின் முக்கிய அமைச்சர்கள் , அரசியல்வாதிகள் பலர் முன்னின்று நடாத்திய கலவரம். இலங்கைத் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தைச் சுவாலை விட்டெரியச்செய்த கலவரம். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை முக்கிய உபகண்ட அரசியற் பிரச்சினைகளிலொன்றாக, சர்வதேச அரசியற் பிரச்சினைகளிலொன்றாக உருமாற்றிய கலவரம். இலட்சக்கணக்கில் இலங்கைத் தமிழர்களை அகதிகளாக உலகின் பல்வேறு பகுதிகளையும் நோக்கிப் படையெடுக்க வைத்திட்ட கலவரம். இவ்விதமுருவான இலங்கைத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை பேரழிவுகளுடன் முடிவுக்கு கொண்ட மாதம் மே 2009.

ஜூலை 1983 இனக்கலவரத்தைப்பற்றி கடந்த சில வருடங்களாக முகநூலில் பதிவுகளிட்டிருந்தேன். அவற்றுக்குப் பலர் எதிர்வினைகள் ஆற்றியிருந்தார்கள். தம் அனுபவங்களை, கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். அவற்றை ஆவணப்படுத்த வேண்டுமென்று எண்ணினேன். அவற்றை முக்கியமான எதிர்வினைகளுடன் தொகுத்து என் வலைப்பதிவான 'வ.ந.கிரிதரன் பக்கம்' தளத்தில் இவ்வருட என் நினைவு கூர்தலாகப் பதிவு செய்துள்ளேன். அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

1. 83 'ஜூலை' இலங்கை இனக்கலவர நினைவுகள்.:  இந்தியா அனுப்பிய சிதம்பரம்! (July 22, 2018)

சிதம்பரம் கப்பலை கூகுளில் தேடிப்பார்த்தேன். கப்பலின் படம் வந்தது. இக்கப்பலைத்தான் இலங்கையின் 1983 இனக்கலவரத்தையடுத்து இந்தியா கொழும்பில் தங்கியிருந்த அகதிகளை யாழப்பாணம் கூட்டிச்செல்வதற்காக அனுப்பியிருந்தது. இக்கப்பல் பல நினைவுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டப அகதிகள் முகாமில் ஆரம்பத்திலிருந்தே தொண்டர்களாக மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் சேவையாற்றினர். தர்மகுலராஜா அவர்களும் அவர்களிலொருவர். இவர் எனக்கு ஒரு வருட 'சீனியர்'. அவர்களில் நானுமொருவனாக இணைந்திருந்தேன். ஏற்கனவே இலங்கை அரசு வழங்கியிருந்த லங்கா ரத்னா போன்ற சரக்குக் கப்பல்களில் அகதிகள் பலரை அனுப்பி வைத்தோம்.

Friday, July 12, 2019

'பதிவுகள்' வாசகர் கடிதங்கள் பகுதி ஒன்று (2000 -2006)



- 'பதிவுகள்' இணைய இதழின் வளர்ச்சியை, அதில் இடம் பெற்ற விடயங்களை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களின் முதற் தொகுதி இது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், பாவண்ணன், அ.முத்துலிங்கம், கந்தையா ரமணீதரன், நாகரத்தினம் கிருஷ்ணா, புதியமாதவி, மான்ரியால் மைக்கல், முத்துநிலவன், டிசெதமிழன், மருத்துவர் முருகானந்தன், கவிஞர் ஜெயபாலன் , சுமதி ரூபன்,  வெங்கட் சாமிநாதன் ,  லதா ராமகிருஷ்ணன், கே.எஸ்.சிவகுமாரன், என்று இவர்களைப் போன்ற  கலை, இலக்கிய ஆளுமைகள் பலரின்கருத்துகளை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களும் இவற்றிலுள்ளன. இவற்றில் சில பல முக்கியமான விவாதங்களையும் வெளிப்படுத்துகின்றன. இவற்றைப் பதிவு செய்வதன் அவசியம் கருதி இத்தொகுப்பு பதிவாகின்றது. ஏனைய கடிதங்கள் அடுத்த தொகுப்பில் இடம் பெறும். -

From: SANKAR SUBRAMANIAN
To:
Sent: Thursday, October 12, 2000 4:01 PM
Subject: வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.

தேன் மதுரத் தமிழோசை உலகெங்கும் பரவிட பாரதி கண்ட கனவை மெய்ப்பிக்கும் அன்புத் தமிழ் ஆசிரியரே. "genom" சாத்தியப் பட்டால் வாழ்க நீவிர் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள். உன்னை பெற்ற தமிழ்த்தாய் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருப்பாள். 'வலை விரித்தேன்'. 'பதிவுகள்' கண்டேன். நெஞ்சம் வலையில் படிந்து விட்டது. 'பதிவுகள்' தொடர்ந்து படிப்பேனே. மனதில் பட்டதை சொல்வேனே. மீண்டும் அடுத்த பதிவுகள் பார்த்து எழுதுகிறேன். வாழ்த்துக்கள் ஐயா! வாழ்க நீவிர் பல்லாண்டுகள்.
அன்புடன்
சங்கரன்

Tuesday, July 2, 2019

'வடலி' பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ரகுமான் ஜானின் நூற் தொகுதி!



இலங்கைத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டு ஆண்டுகள் பதினொன்றாகி விட்டன. இந்நிலையில் போராட்டம், அமைப்புகள், தத்துவங்கள் பற்றிய ரகுமான் ஜான் அவர்களின் நூற் தொகுதியொன்று விரைவில் 'வடலி' பதிப்பக வெளியீடாக வெளியாகவுள்ளது. இத்தொகுதியானது மூன்று நூல்களை உள்ளடக்கியதொன்றாகும்.

முன்னாட் போராளிகள் பலர் தம் அனுபவங்களின் அடிப்படையில் பல நூல்களை வெளியிட்டுள்ளனர். அவையெல்லாம் அவர்கள் பார்வையில் அவரவர் இயக்கம் பற்றிய அல்லது அவர்களின் தப்பிப்பிழைத்தல் பற்றிய அனுபவங்களாகும்.

இவ்வகையில் தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்', ஐயரின் 'ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்', செழியனின் 'ஒரு போராளியின் நாட்குறிப்பு' போன்றவை முக்கியமானவை. ஆனால் இவையெல்லாம் முன்னாட் போராளிகளின் அனுபவங்களை அதிகமாகக் கூறுபவை. நடந்த தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம், அமைப்புகள், அவற்றின் தத்துவங்கள் பற்றிய விரிவான ஆய்வு நூல்களல்ல. இந்நிலையில் ஈழத்தமிழர்தம் விடுதலைப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ரகுமான் ஜானின் மேற்படி நூற் தொகுதி வெளிவரவிருப்பது நல்லதொரு விடயம். ஏனெனில் இத்தொகுதிகள் பின்வரும் தலைப்புகளில் வெளியாகவுள்ளதாகவும் அறிகின்றேன்:

1. ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு, அரசியல் பிரச்சனைகள்.
2. ஈழப்போராட்டத்தின் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகள்
3. ஈழப்போராட்டத்தின் மூலோபாய, தந்திரோபாய பிரச்சனைகள்.

Sunday, June 30, 2019

டி.எம்.எஸ் பற்றிய காணொளி!

பாடகர் டி.எம்.எஸ் அவர்களின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது அவர் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருக்காகக் குறிப்பாக எம்ஜிஆருக்காகப் பாடிய பாடல்கள். அன்று கேட்டோம்; இன்றும் கேட்கின்றோம். இனியும் கேட்போம். டி..எம்,எஸ் அவர்கள் எம்ஜிஆர்,, சிவாஜி படங்களில் பாடிய கருத்துள்ள பாடல்களாகட்டும், காதல் பாடல்களாகட்டும் அவை வரலாற்றில் நிலையாக நிலைத்து நிற்கப்போகும் பாடல்கள். அண்மையில் முனைவர் கெளசல்யா சுப்பிரமணியன் அவர்கள் தனது இசைத்தமிழ் பற்றிய ஆய்வு நூலொன்றில் திரைப்படப்பாடல்களையும் கவனத்திலெடுத்திருந்தது நினைவுக்கு வருகின்றது.

இங்கு பாடகர் டி.எம்.எஸ் அவர்கள் தான் எம்ஜிஆர் நடித்த 'அன்பே வா' திரைப்படத்தில் பாடிய தனது அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கின்றார். அவ்வப்போது 'அன்பே வா' பாடல்கள் சிலவற்றையும் தெளிவு மிக்க காணொளிகளாக ஒ(லி)ளிப்பதிவு செய்திருக்கின்றார்கள். கேட்பதற்குச் சுகமாகவுள்ளது. கடந்த காலத்துக்கு எம்மையெல்லாம் இழுத்துச் செல்லும் காணொளி.

இக்காணொளியில் டி.எம்.எஸ் அவர்கள் அரிய தகவல்கள் பலவற்றை எம்முடன் பகிர்ந்துகொள்கின்றார். அவற்றில் என் கவனத்தை ஈர்த்த இரண்டினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

1. அக்காலகட்டத்தில் பாடல்களில் எதிரொலியினை உருவாக்குவதற்கான தொழில் நுட்பமில்லை. எவ்விதம் எம்ஜிஆர் மலைப்பிரதேசத்தில் பாடும் 'புதிய வானம். புதிய பூமி' பாடலுக்கு எதிரொலியைச் சேர்ப்பது என்பதில் அனைவருக்கும் குழப்பம். அப்பொழுது டி.எம்.எஸ் சிறு தந்திரம் மூலம் அக்குழப்பத்தை நிவர்த்தி செய்கின்றார். அது: பாடலைப்பாடும் பொழுது, எதிரொலியாக ஒலிக்க வேண்டிய சொல்லினைப் பாடுகையில் முதல் முறை ஒலிபெருக்கிக்கு அருகில் நின்றும், அடுத்தடுத்த தடவைகள் முறையே ஒலிபெருக்கிக்குத் தூரமாகவும், இன்னும் தூரமாகவும் நின்று பாடுவார். அது அப்பாடலில் அச்சொல் எதிரொலிப்பது போன்ற உணர்வினைத்தரும். அப்பாடலை மீண்டுமொரு முறை கேட்டுப்பாருங்கள் புரிந்து கொள்வீர்கள்.

அஞ்சலி: எழுத்தாளர் திருமலை ஷகி மறைவு.


எழுத்தாளர் திருமலை எம்.ஏ.ஷகியின் மரணச்செய்தியை முகநூல் வாயிலாக அறிந்தேன். கொடுநோயில் வாடி உதிர்ந்திருக்கின்றார். அண்மையில்தான் என் நட்பு வட்டத்தில் இணைந்திருந்ததால் அதிகம் இவரது கவிதைகளை வாசிக்கவில்லை. ஆனால் இவர் பங்கு பற்றும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை அவ்வப்போது பார்த்திருக்கின்றேன். பலரும் இவரது கவிதைகளை இவரது மறைவையொட்டி முகநூலில் பகிர்ந்துள்ளார்கள். இருப்பின் நிலையாமை பற்றி பல கவிதைகளை எழுதியிருப்பதை அறிய முடிகின்றது. கவிதைகளுக்கான இவரது செறிவான மொழி இவரது கவித்திறனை வெளிப்படுத்துகின்றது. இவரது இளவயது மறைவு துயர் தருவது. மின்னலைப்போல் ஒளி வீசி மறைந்திட்ட இலக்கிய ஆளுமைகள் வரிசையில் திருமலை ஷகியும் இணைந்துவிட்டார். இவர் தன் எழுத்துகளூடு இனியும் கலை, இலக்கியப் பரப்பில் நிலைத்து நிற்பார். இவரது இழப்பால் துயருறும் அனைவர்தம் துயரிலும் பங்குகொள்கின்றேன்.

அவர் நினைவாக அவரது கவிதையொன்று:

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...