Saturday, April 11, 2026

அறிவியல் நூல்களும், அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூல் பற்றிய குறிப்புகள்! - வ.ந,கிரிதரன் -


[காலம்' செல்வத்தின் ஏற்பாட்டில் இன்று டொரோண்டோ, கனடாவில் நடந்த 'வாழும் தமிழ் நிகழ்ச்சியில் அறிவியல் அறிஞர் வெங்கரமணனின் ' 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூல் பற்றி ,நேர்க்கட்டுப்பாடு காரணமாக நான் கூறவிருந்த் எல்லா விடயங்களையும் என்னால் கூற முடியவில்லை. அதனால் கூற விருந்த ஏனைய விடயங்களையும் ஓரளவு முழுமையாக்கி இப்பதிவில் தந்திருக்கின்றேன்.]


அறிவியல்  நூல்களின் அவசியம் ஏன்?  அறிவை மக்களைச் சென்றடைய, தவறான தகவல்களைத் தடுக்க,  அதாவது சரியான தகவல்களை அறிய, அறிவியல் சிந்தனையை வளர்க்க, சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த, மூட நம்பிக்கைகளைக் குறைக்க, அரசின் முடிவுகள் சரியாக ,அறிவு பூர்வமாக அமைய, மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்த, சிந்தனையைத் தூண்ட, ஏன் என்று கேள்விகளைக்  கேட்கும் ஆற்றலை வளர்க்க,  அறிவியல் தொழில் நுட்பத்தை , அதன் நன்மை, தீமைகளை அறிந்து கொள்ள  அறிவியல் கட்டுரைகள் , நூல்கள்  எழுதப்பட வேண்டும்.  அறிவு பகிரப்பட வேண்டும்.  அதனைச் சாத்தியமாக்குபவை அறிவியல் எழுத்துகள். 

எனக்கு அறிவியல் துறையில்  வானியல், வானியற்பியல்  மிகவும் பிடிக்கும். என் பால்ய பருவத்தில் , வவுனியாவில், வீட்டு முற்றத்தில் அப்பாவின் சாறத்தைத் தொட்டிலாக்கி, நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானைப்பார்த்ததிலிருந்து என் ஆர்வம் தொடங்கியது என்பேன். அக்காலகட்டத்தில் கல்கியில் 'பொன்னியின் செல்வன்'  நாவலும் மீண்டும் தொடராக வெளியாகத்தொடங்கியிருந்தது. ஓவியர் வினுவின் அழகான ஓவியங்களுடன்  வெளியான  நாவலில் அப்போது அடிக்கடி வானில் தோன்றிக்கொண்டிருந்த தூமகேது பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்பொழுதுதான் அவ்விதம் குறிப்பிடப்பட்டிருப்பது வால்வெள்ளி  என்பதை அறிந்தேன். நாவல் நடைபெறும் காலத்தில் நடக்கப்போகும் துர்ச்சம்பவமொன்றினை எதிர்வு கூறுவதாகத் தூமகேது சித்திரிக்கப்பட்டிருக்கும். அதே காலகட்டத்தில் கல்கியில் வாண்டுமாமாவின் 'ஓநாய்க்கோட்டை' என்னும் சித்திரக்கதையொன்றும் வெளியாகிக்கொண்டிருந்தது.அதில் வரும் தூமகேது பாத்திரமும் பயங்கரமானதோர் ஆளுமையாகச் சித்திரிக்கப்பட்டிருந்த பாத்திரம். அதனால் தூமகேது என்னும் பெயரும் எம்மைப் பயப்படுத்துமொரு பெயராக அக்காலகட்டத்திலிருந்தது. அத்துடன் அக்காலகட்டத்தில் அடிவானில் தென்பட்டுக்கொண்டிருந்த வால்வெள்ளியும் நினைவுக்கு வருகின்றது. 

அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணன் 


அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூலின் 'என்னுரையில்' தன் சிறுவயதில் பூதக்கண்ணாடியுடன் அலைந்து திரிந்த  அனுபவத்தை விபரித்திருப்பார். அதை வாசித்தபோது எனக்குப் பழைய நினைவுகள் மீள் எழுந்தன. கலகி சஞ்சிகையின் அளவில் சிறுவர்களுக்கான  அறிவியல் புத்தகமொன்று 'நீங்களும் விஞ்ஞானியாகலாம்' என்னும் பெயரில் அல்லது அது போன்றதொரு பெயரில் வெளியாகியிருந்தது. யாழ்  பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்த நூல்களிலொன்று. பூதக்கண்ணாடியுடன் வீட்டு வளவில் திரியும் சிறுவனொருவனின் சித்திரம் போன்ற சித்திரங்களுடன் வெளியாகியிருந்த அந்த நூலை அடிக்கடி எடுத்து வாசித்திருக்கின்றேன். மிகவும் எளிய தமிழ்லில் எழுதப்பட்டிருந்த நூலும், சித்திரங்களும் நெஞ்சில் கிளர்ச்சியை ஏற்படுத்தின.  அதனைக் கலைக்கதிர் நிறுவனம் வெளியிட்டிருக்கலாம். சரியாக நினைவிலில்லை. அதை வாசித்து விட்டு , வெங்கட்ரமணன் போல் நானும் பூதக்கண்ணாடியுடன் வீட்டு வளவு முழுவதும், என்னை ஓர் அறிவியல் அறிஞராகக் கருதிக்கொண்டு அலைந்துதிரிந்தேன். 

ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனுக்கு இவ்விதமான ஆர்வத்தை, அவரது பால்ய பருவத்தில்  அறிவியல்பால் தூண்டியது அவருக்கு மாமாவோ , சித்தப்பாவோ கொடுத்த திசையறி கருவி , கொம்பாஸ் என்று வாசித்தது நினைவுக்கு வருகின்றது. 

மிஷிய கஹோ அவரது Hyperspace நூலின் ஆரம்பத்தில் எழுதியிருப்பதும் நினைவுக்கு வருகின்றது - சிறுவனாக, சான் ஃபிரான்ஸிஸ்கோவிலுள்ள  Japanese Tea Garden செல்கின்றார். அங்குள்ள சிறு தடாகமொன்றில் , நீருக்குள் நீந்திக்கொண்டிருந்த  கெண்டை மீன்கள் அவ்ரது சிந்தனையைத் தட்டி விடுகின்றன. அந்த மீன்களுக்கு அந்த நீர் மட்டத்துக்கு மேல் இன்னுமோர் உலகம் இருப்பது தெரியுமா என்ற சிந்தனை அவரிடத்தில் எழுகிறது. .. அது போல் ஐன்ஸ்டைனின் மறைவுச் செய்தி மூலம் அவரது மேதாவிலாசத்தை அறிகின்றார். அதுவும் அவ்வயதில் அவர் பின்னர் இயற்பியல் தத்துவவாதியாக வருவதற்குக் காரணங்கள் என்று குறிப்பிடுகின்றார்.

இவ்விதமாக அறிவியல் அறிஞர்கள் தம் பால்யப் பருவத்து அனுபவங்களை விபரித்து எழுதுகையில் அவ்வகையான எழுத்துகள் என்னை மிகவும் கவர்ந்து விடும் தன்மை மிக்கவை. இதயத்தைத் தொட்டு அவ்வெழுத்துகளுடன் ஒன்றிட இவ்வகையான அனுபவங்கள் உதவுகின்றன. வெங்கட் ரமணனின் இந்நூலுடனும் மனதொன்றிட ஆசிரியது இவ்வனுபவ விபரிப்பு உதவியது என்பேன். 

மேலும் 'என்னுரை'யிலும், முதலாவது கட்டுரையின் இறுதியிலும் அவர் கூறும் கூற்றுகள்  நூலைப் படிக்கும் ஆர்வத்தை அதிகமாக்கும் தன்மை மிக்கதுடன், நூலை அணுகுவதையும் இலேசாக்கின்றன.

தமிழில் இவ்விதமான சாதாரணப் பொதுமக்களுக்கான அறிவியல் அறிஞர்களின் நூல்கள் அரிது.  சுஜாதா போன்றவர்கள் வெகுசன ஊடக வாசகர்களுக்காக எழுதுவதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு , சுவையாகத் தகவல்களைத்  தருவதுடன் நின்று விடுவார்கள். ஆனால் நான் குறிப்பிட்ட மேனாட்டு அறிவியல் அறிஞர்களின் நூல்கள் எளிமையானவை, ஆனால் ஆழம் மிகுந்தவை.  முதல் வாசிப்பில் வெங்கட்ரமணனின் இந்நூலையும் அவ்விதமான அறிவியல் அறிஞர்களின் நூல்களைப் போன்றதாக உணர்ந்தேன். 

'ஒளியிலிருந்து இருளுக்கு' அட்டை ஓவியம் பற்றி...

கிரேக்கத் தொன்மக் கடவுள்  'புரூமிதியஸ்' ( Prometheus)  - கடவுள்களிடமிருந்து தீயைத்  திருடி மனித குலத்திற்குக் கொடுத்தான்.  தீ அறிவு, தொழில்நுட்பம், நாகரிகம் ஆகியவற்றின் அடையாளம். கடவுள்களின் தலைவன் ஜீயஸ் ப்ரோமிதியஸின் இந்தச் செயலைக் கண்டு மிகவும் கோபமடைந்தார். கடவுள்களின் அதிகாரத்திற்கு எதிராகச் செயற்பட்டதற்காகவும், மனிதகுலத்திற்கு நெருப்பைக் கொடுத்ததற்காகவும் ப்ரோமிதியஸுக்கு கடுமையான தண்டனை வழங்கினார்.   'புரூமிதியஸ் காக்கசஸ் மலைத்தொடரில் ஒரு பாறையுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டார்.  கடுமையான சித்திரவதை: ஒவ்வொரு நாளும் ஒரு கழுகு வந்து அவரது கல்லீரலைக் கொத்தித் தின்னும். இரவு முழுவதும் அவரது கல்லீரல் மீண்டும் வளர்ந்துவிடும், அடுத்த நாள் மீண்டும் அதே சித்திரவதை தொடரும். இது ஒரு முடிவற்ற தண்டனையாக இருந்தது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ஹெர்குலிஸ் (Hercules) என்ற வீரன் ப்ரோமிதியஸை விடுதலை செய்ததாகக் கூறப்படுகிறது.

'புரூமிதிய'ஸைக் கழுகு கொத்துவதை வெளிப்படுத்துகிறது அட்டை ஓவியம். ஓவியம் மனித குலத்துக்கு அறிவினைக் கொடுத்த புரூமதியஸ்ஸை வெளிப்படுத்துகின்றது. அவன் மனித குலத்தின் மீது வைத்திருந்த அன்பை வெளிப்படுத்துகின்றது. அதன் காரணமாக அவன் அடைந்த சித்திரவதையை வெளிப்படுத்துகின்றது. 

 நூலின்  தலைப்பு என்ன கூறுகின்றது?  ஒளியிலிருந்து இருளுக்கு....   அறிவியல் என்பது அறியாமை இருளைப் போக்குவது. அறிவொளியைத்  தருவது. புரூமிதியஸ் செய்ததும் அதைத்தானே. ஆனால் தலைப்பு ஒளியிலிருந்து இருளுக்கு என்று ஏன் அதற்கு எதிர்மாறான கருத்தை விளைவிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது?  

உண்மையில் நூலின் அட்டைப்படமும், தலைப்பும் மிகவும் சிறப்பாக இந்நூலை வெளிப்படுத்துகின்றன. நூலிலுள்ள கட்டுரைகள் அறியாமை இருளை நீக்கி , அறிவென்னும் ஒளியைத்தந்தால், அக்கட்டுரைகள் இன்னுமொரு விடயத்தையும் வெளிப்படுத்துகின்றது. அது அறிவியல் அறிஞரான வெங்கட்ரமணன் அறச்சீற்றம். அறிவியல் எவ்விதம் பொருளை அடிப்படையாகக்கொண்ட மனித  சமுதாயத்தில் தொழில் அதிபர்களால், அரசுகளால் மனித குலத்துக்கு எதிரான வகையில், பொருள் மீதான அதீத பற்று, இன, மத, மொழி, தேசிய , வர்க்க நலன்களுக்காகப் பாவிக்கப்படுகின்றது. மனித வாழ்வின் ஒளியைப் பாய்ச்ச வேண்டிய அறிவியல் இருளை, அழிவை ஏற்படுத்தப் பாவிக்கப்படுகின்றது . இதனால் விளைந்த அறச்சீற்றம்.

இவ்வகையில் சிறப்பான தலைப்பும், அட்டை ஓவியமும் இந்நூலுக்கு அமைந்துள்ளன இந்நூலின் அட்டையும், தலைப்புமே இந்நூலுக்கான  மிகச்சிறந்த விமர்சனம். 

முதலாவது கட்டுரை-   விழைந்ததும் விளைந்ததும்

நல்லதொரு கவித்துவம் மிக்க தலைப்பு.  இத்தொகுப்பின் பல கட்டுரைகள் இவ்விதமான கவித்துவம் மிக்க தலைப்புகளைக் கொண்டவை.  'ஒளியிலிருந்து இருளுக்கு', 'உள்ளிருந்து இயக்கும் உயிர்க்கடிகாரம்', 'முனைவாக்கம் , மூலக்கூறு, மூலதனம்' (மோனை பொருந்து வருபவை) , 'ஆளற்ற போர்முனைகளில் முகமற்ற போர்வீரர்கள்'  இவையும் கவித்துவம் மிக்க தலைப்புகள். கருத்துச் சிறப்பு மிக்க தலைப்புகளைக் கவித்துவம் மிக்கவையாக ஆக்குவதும் கதாசிரியரின் தனித்திறமை.

இந்தக் கட்டுரை மூன்று பகுதிகளைக் கொண்டது. முதலாவது பகுதியில் ஃபைசர் நிறுவனம் எவ்விதம் வயாகரா மருந்தைக் கண்டு பிடித்தார்கள் என்பதைப்பற்றி விபரிக்கின்றது. இருதய நோய்க்குச் செய்த ஆராய்ச்சியின் விளைவு தோல்வியடைந்தது. ஆனால் அதற்காக உருவாக்கிய மருந்து ஏற்படுத்திய  பக்க விளைவான ஆண் குறி விறைப்பு வயாகராவைக் கண்டு பிடிக்க  உதவியது. நீலக்குளிசை (Blue Pill) ஃபைசர் நிறுவனத்துக்குப் பல  பில்லியன் டொலர்களை ஈட்டிக்கொடுத்தது. கொடுக்கின்றது. 

இவ்விதம் ஃபைசரின் பிரிட்டன் கிளையில் ஆய்வாளர்கள் மார்பு நெரிப்பு வலிக்கான (Angina)  மருந்தாக ஹிரி 0 92,480 என்னும் குறிப்புப் பெயர் இடப்பட்ட ஸ்ல்டெனஃபில் ( Sildenafil) வேதிப்பொருளை எட்டு ஆண்டுகள் ஆராய்ந்தார்கள். எவ்விதப் பலனுமற்ற நிலையில் ஆய்வினை நிறுத்தி விடத் தீர்மானித்தபோது  டேவிட் ப்ரெளன் என்னும் தலைமை ஆய்வாளர் ஒரு தடவை அதனைப் பரீட்சித்துப்பார்க்க அனுமதி பெறுகின்றார்.  அதற்காக வேல்ஸ் நகரிலிருந்த கனிமச் சுரங்கத்தில் வேலையிழந்திருந்த சுரங்கத் தொழிலாளர்களில் மார்பு நெரிப்பு வலியினால் பாதிக்கப்பட்டிருந்த தொழிலாளர்களில் சிலரைத்தேர்ந்தெடுத்து , அவர்களுக்கு இம்மருந்தின் அதிகரித்த அளவைக் கொடுக்கின்றார். அவர்களுக்குக் கேள்வித்தாள் ஒன்றும் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் மருந்தினால் பலன் உண்டா, தூங்க முடிகின்றதா போன்ற கேள்விகளுடன் இறுதியாக வேறெதாவது கூற விரும்புகின்றீர்களா  என்றும் கேட்கப்பட்டிருந்தது. ஆய்வில் பலன் எதுவும் கிட்டவில்லை. ஆனால் ஒருவர் மட்டும் கடைசிக்கேள்விக்கு 'மருந்தால் நெஞ்சு வலி குறையவில்லை. ஆனால் , ஆண் குறி விறைத்திருந்ததால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை' என்று குறிப்பிட்டிருந்தார். இதனை அக்கேள்விகளுக்கான பதில்களைத் தொகுத்துக்கொண்டிருந்த பெண் ஆய்வாளர் ஒருவர் அவதானித்து, மிகுந்த வெட்கத்துடன் ப்ரெளவுனுக்குத் தெரியப்படுத்துகின்றார்.  ப்ரெளன் அதன் அடிப்படையில் அம்மருந்தைப்பாவித்த ஏனையவர்களிடமும் இது பற்றிக் கேட்கின்றார். அவர்களும் தமக்கும் இவ்வித அனுபவம் ஏற்பட்டதாகக் கூறுகின்றார்கள்.

ஸ்ல்டெனஃபில்  இரத்த நாளங்களை விரிவு படுத்தும். இதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரித்து, நெஞ்சு நெரிப்பு குறையும். இதுதான்  ஆய்வாளர்களின் கருதுகோள்.  ஆனால் நடந்தது என்ன? வலி குறையவில்லை.  அதிகரித்த இரத்த ஓட்டம் ஆண்குறியில் ஏற்பட்டு, அதனை விறைக்க வைத்தது. இது  எதிர்பாராத விளைவு. இதனால் இதனை ஆண்களின் குறி விறைப்புச் செயலிழப்புக்கு ( Erectile Dysfunction) மருந்தாகப் பாவிக்கலாம் என்று ப்ரெளன் தன் மேலாளர்களுக்குப் பரிந்துரை செய்கின்றார். ஆனால் அவர்கள் அதைக் கவனத்திலெடுக்கவில்லை. ஏற்கனவே பல பில்லியன்களை விழுங்கி விட்டது அத்திட்டம். இதனை ஃபைசரின் அமெரிகக் குழு அறிந்தபோது அதன் முக்கியத்துவதை உணர்ந்து மேலும் சில மில்லியன்களைச் செலவழித்து நீலக்குளிசையினை உருவாக்கினார்கள். விளைவு? பல பில்லியன்களை ஃபைசருக்கு உழைத்துக் கொடுத்தது. கொடுக்கின்றது.

இத்துடன் வெங்கட்ரமணன் விட்டிருக்கலாம். ஆனால் அவர் இவ்விடயத்தில் இன்னுமொரு படி மேலே செல்கின்றார். இவ்விதம் உருவான நீலக்குளிசை சூழலுக்கு மிகுந்த பயனைத்தந்த விடயத்தை அறிந்து கொள்கின்றார். அது எப்படி? 

வெள்ளைக் காண்டாமிருகங்கள் , பெங்கால்  புலிகள் , பனிச்சிறுத்தைகள், பச்சைக் கடலாமைகள்,  கடர் குதிரைகள் எனப் பல மிருகங்கள் ஆண்களின் கலவித்திறனை மேம்படுத்த வேட்டையாடப்படுகின்றன. குறிப்பாகச் சீன மருத்துவத்தில் இவ்விதமான வழி முறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவ்விதமான மிருக அழிப்பால  அழிந்து  கொண்டிருந்த மிருகங்களின் அழிவை வயாகரா பெருமளவில் குறைத்தது. வயகரா வழங்கிய நன்மையால் மிருகங்களை அழிக்கும் தேவை குறைந்து  போனது. 

இவ்விதம் விபரிக்கும் வெங்கட் ரமணன் இவ்விதமாக மிருகங்களை அழிப்பதற்கான காரணங்களை 'ஆதாரமற்ற மூட நம்பிக்கைகள் 'என்கின்றார். 

இரண்டாவது பகுதியில் பார்ஸிகளின் இறுதிக்கிரியைகள் பற்றி விபரிக்கின்றார். மும்பையில் பெருமளவில் வசிக்கும் பார்ஸிகள் இறந்ததும் தம் உடலைப் பிணந்தின்னிக் கழுகுகளுக்கு இரையாக்கி விடுவார்கள்.  மும்பாயின் மலபார் ஹில் பகுதியில் 57ஏக்கர் பரப்பில் அடர்த்தியான காடு அவர்களுக்குச் சொந்தம். அங்குள்ள அமைதிக்கோபுரங்களின் மேற் தளங்களில் இறந்த உடல்களை வைப்பார்கள். பிணந்தின்னிக் கழுகுகள் அவற்றை உண்ணும். எஞ்சிய எழும்புகளைக் கட்டடங்களின் மையங்கலிலுள்ள குழிக்குள் கொட்டி விடுவார்கள். ஆனால்  திடீரெனப் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை குறையத்தொடங்கியது. ஒரு கட்டத்தில் 95%  குறைந்து விட்டது. 

ஏன்?  சோதனைகள் கழுகுகளின் உடல்களில் யூரிக் அமிலம் அதிகரித்து,தேங்கிக்கிடந்ததை வெளிப்படுத்தின.  காரணம்: கால் நடைகளுக்கும், மனிதர்களுக்கும் வலி நிவாரணியாகப் பாவிக்கப்பட்ட  டைக்ளோஃபெனக் (Diclofenac).  இதனை உருவாக்கிய மருந்து நிறுவனத்தின் பெயர் நோவார்டிஸ் (ஆரம்பத்தில் சிபா - கெய்கி) . இதனைப் பாவிக்கும் கால்நடைகளின் உடல்களில் தேவைக்கு அதிகமாகப் பாவிப்பதால் அது மேலதிகமாகத்  தேங்கிப்போகின்றது. இவற்றை உண்ணும் பிணந்தின்னிக் கழுகுகளின் சிறு நீரகங்களை இது பாதிக்கின்றது.  இதன் விளைவாகவே யூரிக் அமிலம் அவற்றில் தேங்கி விடுகின்றன. 

இதனால் ஏற்பட்ட ஏனைய எதிர்விளைவுகள்? போதிய பிணந்தின்னிக் கழுகுகள் இல்லாததால், அழுகிவிட்ட மிருகங்களின் உடல்களிலிருந்து ரேபிஸ் வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டது.  இதனால் 5 இலட்சம் பேர் வரையில் இறந்திருக்கலாம் என்று ஆய்வுகள் மதிப்பிட்டன. 

இவ்விதமான சூழல் தோன்றியதற்குக்காரணத்தைக்  கட்டுரையாசிரியர் கடுமையாக விமர்சிக்கின்றார்.  

'இந்த விளைவுகளை அறிவியலாளர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதில் அறிவியலுக்கு என்ன பங்குண்டோ அதைவிட அதிகமான பங்கு அறிவியலாளர்கள் வரையறுத்த அளவுகளை மீறி அதிகளவில் வாங்கிக் கால்நடைகளுக்குப் பாவித்த பேராசைக்காரர்கள், வர்த்தகர்கள் , மருந்து நிறுவனங்கள் , இவற்றைக் கண்டும் காணாமல் இருந்த அரசுக்கும் உண்டு'  அவரது கடுமையான விமர்சனம் அமைந்திருந்தது.

கட்டுரையின் மூன்றாவது பகுதி மேலிரண்டு பகுதிகளின் அடிப்படையில் அறிவியல், நிறுவனங்கள், அரசுகள் மீதான விமர்சனங்களாக இருக்கின்றது. அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய கருத்துகள் இவை:

"அன்றாட வாழ்வில் அறிவியலின் பங்கு மறுக்க முடியாதது. அறிவியலாளர்களின் முதன்மை நோக்கு  கண்டறிதல். இயற்கை குறித்த நம் புரிதல்களைத்  தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது அறிவியல். தெரியாதன தெரிதலும், தெளியாதன  தெளிதலுமே  அறிவியலாய்வின்  இலக்குகள். "

இக்கட்டுரையின் தலைப்பு 'விழைந்ததும் விளைந்ததும்'  எப்படி இந்தக் கட்டுரைக்கு இத்தலைப்பு பொருந்தும்?

ஃபைசர் நிறுவனம் ஆசைப்பட்டது , அதாவது விழைந்தது நெஞ்சு நெரிப்பு வலி நிவாரணி.  ஆனால் விளைந்தது வயாகரா.  ஆண்களின் குறி விறைப்புச் செயலிழப்புக்குகான தீர்வு. விளைவு இன்பத்தை அனைவருக்கும்  தருவது. 

நோவார்டிஸ் நிறுவனம் விழைந்தது  அதாவது  ஆசைப்பட்டது : மனிதர்களுக்கும், கால்நடைகளுக்குமான வலி நிவாரணி. ஆனால், விளைந்ததோ? - பிணந்தின்னிக் கழுகுகளின் அழிவு. ரேபிஸ் தோற்று நோய். அதனால் இலட்சக் கணக்கில் மடிந்த மனிதர்கள்.

இவ்விதம் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை ஆய்வுச் சிறப்பு மிக்கது. எளிமையான நடையில் , தெளிவு மிக்கது. ஒவ்வொரு விடயத்தைப்பற்றியும் எடுத்துக் காட்டி, நன்மை தீமைகளைப்பற்றிய தனது விமர்சனங்களை முன் வைக்கின்றார். தர்க்கசசிறப்பு மிக்கது. விமர்சனங்கள் ஆசிரியரின் அறச்சீற்றங்களாக வெளிப்படுகின்றன. 

கட்டுரை - ஒளியிலிருந்து இருளுக்கு.

தொகுப்பிலுள்ள கட்டுரைகளில் சிறிய கட்டுரை. ஆனால் தொகுப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறப்பான தலைப்பு.  கவித்துவம் மிக்க தலைப்பு. இக்கட்டுரையில் மின் விளக்குகள் உருவான வரலாறு, தொழில் நுட்பம் போன்றவை விபரிக்கப்பட்டிருந்தாலும் , மிகவும் கடுமையாக மின்விளக்குகளைத் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டே தரங்குறைந்து அவற்றைத் தயாரிப்பதும், திட்டமிட்ட வழக்கறுத்தல் (Planned Obselescence) செய்வதும் , உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் அமைப்புகளை உருவாக்குவதும் (காப்புரிமைச் சமூகம், சர்வதேச விலைக்கட்டுப்பாட்டுக் கழகம் போன்ற) , அவற்றின் மூலம் தமக்குச்சார்பான விதிகளை அமுல்படுத்துவதைப்பற்றியும் தன் கடுமையான விமர்சனத்தை முன் வைக்கின்றார் வெங்கட்ரமணன். அவர்கள் ஆரம்பித்து வைத்த அந்த நடைமுறை இன்று வரை ஏனைய பன்னாட்டு நிறுவனங்களால் , நாம் பாவிக்கும் அலைபேசி , தொலைக்காட்சிப்பெட்டி எனபல்வேறு பொருட்களுக்கான உற்பத்தியிலும் பின்பற்றப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டுகின்றார். 

ஒளிதரவேண்டிய மின்விளக்கைத் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் இச்செயற்பாடுகளின் விளைவுகளால் பாவிக்கப்படுபவர்கள் பாவனையாளர்களான மக்கள். அவர்கள்தம் உழைப்பும் இவ்விதம் பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்துக்காகச் சுரண்டபடுகின்றது. இச்சுரண்டலையே இருளுக்கு உவமையாக்குகின்றார் ஆசிரியர். 

ஒரு விதத்தில் கட்டுரை சிறிதாக இருந்தாலும், கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பதற்கொப்ப, இக்கட்டுரையின் தலைப்பு இந்நூலின் தலைப்பாகவும் நன்கு அமைந்திருக்கின்றது. ஏனென்றால் இத்தொகுப்புக் கட்டுரைகள் அறிவியலின் ஆரோக்கியமான விளைவுகளை, அறிவியலின் அவசியத்தை எடுத்துக்காட்டும் அதே சமயம், எவ்விதம் அறிவியல் அறிவியல் மக்களின் பாவனைக்குப்  பல்வகைப் பொருட்களாக வருகையில்,  அவற்றை உருவாக்கும் பன்னாட்டு நிறுவனங்களால் , அரசுகளால் எதிர்மறையாகக் கையாளப்படுகின்றன என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. அவ்விதத்தில் நல்லதொரு தலைப்பாகவும் இதனை நான் இனங்காண்கின்றேன்.

கட்டுரை : முனைவாக்கம் , மூலக்கூறு, மூலதனம். 

இது இத்தொகுப்பின் இன்னுமொரு கவித்துவம் மிக்க தலைப்பிலான கட்டுரை. மிகவும் சிறப்பாகச் சித்திரங்களுடன் விபரிக்கப்பட்டிருக்கும் கட்டுரை. இதில் விபரிக்கப்பட்டிருக்கும்  தகவல்கள் சிக்கலான , இதுவரை நான் அதிகம் புரிந்திராத அறிவியல் கருத்துகளைப் புரிய வைத்த கட்டுரை.

முனைவாக்கம் மூலம் மூலக்கூறுகளில் மாற்றம் ஏற்படுவது பற்றிய அறிவியல் கருத்துகளைச் சிறப்பாக விபரிப்பதுடன், எவ்விதம் இவ்வறிவியல் கண்டு பிடிப்பினைத் தமது பொருளீட்டும் நோக்கிற்காக பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பாவிக்கின்றன என்பதைத் தெளிவாக விளக்கும் கட்டுரை.

கட்டுரையின் தலைப்பில் கவித்துவம் மோனைச் சொற்களில் , பொருளில் உள்ளது.  மூலக்கூறு , மூலதனம் மோனை பொருந்தி  வரும் சொற்கள். முவும் அதேயினச் சொல்தான். 

அடுத்தது தலைப்பையே ஒரு மணிக்கவிதையாகவும் எழுதலாம்:

முனைவாக்கம்
மூலக்கூறு 
மூலதனம்!

கட்டுரை:  காலம் - ஒரு அறிவியல் பார்வை (இலக்கண நக்கீரர்கள் ஓர் அறிவியல் பார்வை என்றல்லவா வந்திருக்க வேண்டும் என்று குற்றஞ்ச்சாட்டக் கூடும்.)

"இந்த நூற்றாண்டு என்று சொல்லும்போது  கடந்துபோன அந்த நொடி உட்பட , எல்லாமே நிகழ்காலமாக மாறிப்போகின்றன. அப்படியென்றால் காலம் என்பதுதான் என்ன?" - அதெப்படி நிகழ்காலமாக மாறிப்போகின்றன. இந்த நூற்றாண்டு என்று கூறும்போது இந்த நூற்றாண்டின் இதுவரை கழிந்துபோன கடந்த காலத்தையும் உள்ளடக்கியதுதானே. உண்மையில் இந்த நூற்றாண்டு என்னும்போது இதுவரையான கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் உள்ளடக்கியது.  இது சாதாரண வாசகர் ஒருவருக்குக் குழப்பத்தை  ஏற்படுத்தும் சொற்றொடர்.

கட்டுரையின் முதற் பகுதி பல் வகையான காலம் அளக்கப் பாவிக்கப்பட்ட வரலாற்றுரீதியிலான வழி முறைகளைப்பற்றிக் கூறுகின்றது.  4000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தியர்கள் தரையில்  நட்டப்பட்ட குச்சிகளின் நிகழ்ல்களைக் கொண்டு அளவிட்டதிலிருந்து , கோபுரங்களின் நிழல்கள், ஒழுகிச்செல்லும் நீரோட்டத்தின் அளவு, மேலிருந்து கீழ் சொரியும் மணற் கடிகை, கி.மு 1800இல் பாபிலோனியர்கள் மணி, நிமிடம், நொடிகள் மூலம் நாளை அளத்தல் பற்றிக் கூறுகின்றது. 

எகிப்திய, சீன, பாபிலோனிய, இந்திய தொல்நாகரிகங்கள் சூரியன், சந்திரன் ,விண்மீன்களி ன் இருப்புகளை அடிப்படையாகக் கொண்டு காலத்தைக் கணித்திருக்கின்றார்கள். 

'அதிசயிக்கத்தக்க வகையில் இவை எல்லாமே கணிசமாகத் துல்லியமாக இருந்திருக்கின்றன. வெற்றுக் கண்களால் நட்சத்திரத்தின்  இருப்பை அறிந்து , கால் மணி நேரப் பிழைக்குள்ளாக இரவில் நேரத்தைக் கணித்துச் சொல்லும் துல்லியம் பண்டைய விண்ணியலாளர்களுக்குச் சாத்தியமாகி இருந்திருக்கின்றது. " என்கின்றார் வெங்கட்ரமணன்.

உண்மையில் பிரமிப்பையும், அவர்களின் தேடல் மீதான மதிப்பையும் தருபவை அவை.

மேலும் உயிர்க்கடிகாரம் (Biological Clock), மலர்க்கடிகாரம் (ஸ்வீடிஸ் தாவரவியலாளர்  கார்ல் லின்னேயஸ் (Carl Linnaeus)  1750 இல் அமைத்தது), சுருள் வில்களின் , பற் சக்கரங்களின் அடிப்படையிலான இயந்திரக் கடிகாரங்கள், உலோகக் கலவைகளின் மூலம் மேம்படுத்தப்பட்ட இயந்திரக் கடிகாரங்கள், மிகத்துல்லியமான அணுக்கடிகாரங்கள் (20 மில்லியன் வருடத்தில் 1 நொடி பிழைக்கும்) என்று பல்வகையான நேர அளக்கும் முறைகளை விபரிக்கின்றார்.

அடுத்து நேரம் பற்றிய நியூட்டன், ஐன்ஸ்டைனின் தத்துவங்கள் என்ன கூறுகின்றன என்பதை விரிவாக விபரிக்கின்றார். 

பொதுமை நேரம் - நியூட்டனால் வரையறுக்கப்பட்ட நேரம். புறக்காரணிகளால் மாறுவதில்லை.  காலம் நிலையற்று ஓடிக்கொண்டிருக்கின்றது. நாம் அதை வேண்டும்பொழுது அளந்து கொள்கின்றோம்.

சார்நிலை நேரம் - நாம் அளப்பதால்தான் நேரம் இருக்கிறது. நாம் காலத்தை அளக்கவில்லை. காலமாறுபாட்டைத்தான் அளக்கின்றோம்.

நாற்பரிமாணமும், காலவெளியும் - செவ்வியல் இயற்பியலில் காலமும் , வெளியும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை.  ஐன்ஸ்டைனின் 'சிறப்புச் சார்பியற் தத்துவ'த்தின் அடிப்படையில் காலமும், வெளியும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. -காலவெளி 

1905 - ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியற் தத்துவத்தின்படி ஒளியின் திசை வேகம் முடுக்கம் பெறாமல்  நகரும் எல்லாச் சட்டங்களிலும் ஒன்றாக இருக்கும். (*மாறா வேகத்தில் செல்லும் சட்டங்கள் என்றிருக்கலாம்)

இதற்கு அவர் காட்டும் உவமை சிறிது குழப்பத்தைத் தருகின்றது:

'நான் நடுவில் நின்றுகொண்டு விளக்கை அசைக்கின்றேன் என்று கொள்வோம். உள்ளேயிருந்து பார்த்தால்  ஒருவருக்கு இரயிலின் முதல் பெட்டியையும் கடைசிப்பெட்டியையும் ஒளி ஒரே சமயத்தில்தான் சென்றடையும்  ஏனெனில் ஒளியின் வேகம் புறக்காரணிகளால் பாதிக்கப்படுவதில்லை. (கடைசிப்பெட்டி விளக்கை நோக்கி வருகின்றது. முதல் பெட்டி  விளக்கிலிருந்து விலகிச் செல்கின்றது).  இது மிகவும் குழப்பத்தை ஏற்படுத்துவது. உண்மையில் சீரான வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இரயிலின் உள்ளே நடுவிலிருந்து புறப்படும் ஒளி முதல் பெட்டியையோ அல்லது கடைசிப்பெட்டியையோ  ஒரே சமயத்தில்தான் சென்றடையும். ஆச்சரியமில்லை.  முதல் பெட்டி,  கடைசிப்பெட்டி இரண்டுமே நடுவைப்பொறுத்தவரையில் ஒரே தூரத்தில்தான் இருக்கின்றன.

* இது வாசகருக்குக்   குழப்பத்தைத் தருவது. அதெப்படி கடைசிப்பெட்டி விளக்கை நோக்கியும், முதல் பெட்டி விளக்கை விட்டு விலகியுய் செல்கிறது. இரயில் மாறா வேகத்தில் செல்கிறது. கடைசிப்பெட்டி, விளக்கு, முதல் பெட்டி எல்லாமே  அதே மாறா வேகத்தில் செல்கிறது. ஆக, விளக்கு , கடைசிப்பெட்டி,  முதல் பெட்டி எல்லாமே அதே இடத்திலேயே  இரயின் உள்ளே இருக்கும்.  வெளியிருந்து பார்ப்பவர்களுக்கு இரயில், உள்ளிருப்பவர்கள், உள்ளிருப்பவைகள் விலகிச் செல்லும்). உண்மையில் உதாரணத்தில் விளக்கிலிருந்து புறப்படும் ஒளியைப்பொறுத்தவரையில் முதல் பெட்டி விலகியும் ,கடைசிப்பெட்டி நோக்கியும் வந்தாலும்  என்றிருக்க  வேண்டும் என்று நினைக்கின்றேன். உண்மையில் முதல் பெட்டி விலகிச் சென்றாலும் , கடைசிப்பெட்டி நெருங்கி வந்தாலுன் ஒலிக்கு ஏற்படுவதுபோல் டொப்ளர் விளைவு ஒளியின் வேகத்துக்கு ஏற்படுவதில்லை. ஒளி வேகம் மாறாமல் இருக்கும்.

சிறப்புச் சார்பியற் தத்துவம் - மாறா வேகத்துடன் செல்லும் சட்டங்களின் அடிப்படையிலானது. ஈர்ப்பு விசையினை உள்ளடக்காதது. அதனால் சிறப்புச் சார்பியற் தத்துவம். பொதுச்சார்பியற் தத்துவம்  - ஈர்ப்பு விசையையும் உள்ளடக்கியது பொதுச்சார்பியற் தத்துவம்

கால நீட்சி, வேகம் பொருளின் நீளம், திணிவு, நேரத்தைப் பாதிப்பது பற்றிய சார்பியல் தத்துவக் கருதுகோள்கள் பற்றி கட்டுரை பேசுகிறது. கட்டுரையை இன்னும் எளிமையானதாக, ஒழுங்காக்கி இருந்திருக்கலாம்  என்று தோன்றுகின்றது. 

*உதாரணத்துக்குக் காலவெளி பற்றி இன்னும் விரிவாகப் பேசியிருந்திருக்கலாம்.  உண்மையில் இன்னுமொரு கட்டுரை சார்பியல் கோட்பாடுகள் பற்றி விரிவாக, எளிமையாக இருந்தால் அது இன்னும் பயனுள்ளதாகவிருந்திருக்கும் என்ற உணர்வு ஏற்பட்டது. இன்னும் விளக்கச்சித்திரங்களுடன் தெளிவை ஏற்படுத்தியிருந்திருக்கலாம்.

குழப்பமான சொற்றொடர்கள்:

வேகம் காலத்தை பாதிக்கிறது. கால நீட்சி பற்றி ஆசிரியர்  குறிப்பிடுகின்றார். வேகம் கூடக்கூட கால நீட்சியும் கூடுகின்றது. ஒளிவேகத்தில் செல்லும் இரட்டையரில் ஒருவரின் காலம் , பூமியில் இருக்கும் அவரது அடுத்த சகோதரரின் காலம் இரண்டும் ஒன்றில்லை. ஒளி வேகத்தில் சென்று  திரும்புவர் பூமிக்குத் திரும்புகையில் , பூமியில் இருப்பவரின் வயது பல வயது கூடியிருக்கும் அல்லது பல நூற்றாண்டுகளைக் கடந்திருக்கும். திரும்புவர் இன்னும் இளமையாக இருப்பார். 

இதன் பின் ஆசிரியர் "ஒளியின் வேகத்தில் பயணிப்பவர்களுக்குக் காலம் நீண்டு கொண்டே  போவது ஒரு வகையில் காலப்பயணம் தானே?"  இது ஒரு தந்திரமான தர்க்கம்.  ஏன் என்றால்  ஒளி வேகத்தில் செல்லும் ஒருவருக்குக் காலம் சாதாரணமாகத்தான் செல்லும். அவருடன் இருப்பவர்களுக்கும் அப்படியேதான் இருக்கும். ஆனால் பூமியில் இருப்பவரின் காலம் பல ஆண்டுகள் முன்னோக்கிச் சென்றிருப்பதால் , பூமியில் இருக்கும் ஒருவரின் காலத்தின் அடிப்படையில்தான் காலப்பயணம் நடந்திருக்கின்றதே ஒழிய , ஒளி வேகத்தில் செல்பவரின் சட்டத்தில் அவர் எதிர்காலத்துக்குச் செல்லவில்லை. கேள்வி - ஒருவர் இருக்கும் சட்டத்தில் அவரால் எதிர்காலத்துக்கோ அல்லது நிகழ்காலத்துக்கோ செல்ல முடியுமா என்பதுதான். சார்பியல் தத்துவங்கள் அது  சாத்தியமென்று எதிர்வு கூறினாலும் இதுவரை அது சாத்தியமாகவில்லை. இறுதியில் வெங்கட்ரமணன் கூறுவது போல் 'காலம் வெளி  புரிதலில் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டியிருக்கிறது.'

இன்னுமோரிடத்தில் பின்வரும் உதாரணம் வருகிறது:

".. இந்தப் பெரும் குண்டு தன்னைச் சுற்றியிருக்கும் இரப்பர் மெத்தையின் பரப்பைக் குழிவானதாக ஆக்கும்.அந்த நிலையில் உருட்டி விடப்படும் கோலிக்குண்டு  நேர் பாதையிலிருந்து விலகி  பெரும் குண்டை நோக்கி வளைந்து வரும். இதைப்  போன்ற  பெரும் பொருண்மையுள்ள பொருளின் ஈர்ப்பு  விசை ஒளியின்  நேர்கோட்டுப் பாதையை வளைக்கும் திறம்."

ஒளி சீரான வேகத்தில் நேர்கோட்டில் செல்கிறது. பொருண்மை கூடிய பொருளின் அருகாகச் செல்லும்போது அதில் சிறிதளவு வளைவு பொருளின் ஈர்ப்புச் சக்தியினால் ஏற்படுகிறது. ஈர்ப்புச் சக்தி அதிகமாகி கருந்துளையானால் ஒளி முற்றாகவே பொருண்மை கூடிய பொருளின் ஈர்ப்புச் சக்திக்குள் சிக்கி வெளியேற முடியாது போய்விடும் என்று இன்னும் சிறிது விளக்கம் கொடுத்திருக்கலாம். இல்லாவிட்டால் பொதுவான வாசகருக்கு ஏன் பூமி சூரியனை நோக்கிச் செல்லவில்லை என்றொரு குழப்பம் ஏற்படும்.

 சூரியனின்  பொருண்மையின் ஈர்ப்புச் சக்தியின் காரணமாக ஏற்படும் வளைந்த வெளியில் பூமி சீரான வேகத்தில் செல்கிறது. வளைவான கோளமொன்றின் வளைவில் நேர்கோட்டில் சென்றால் அது வட்டமாக அல்லது நீள்வட்டமாக இருக்கும். அதனால்தான் பூமி சூரியனைச் சுற்றி நீள்வட்டப் பாதையில் செல்கிறது.

மேலும் நியூட்டனின் விதிகளின் படி ஈர்ப்புச் சக்தி ஒரு விசை. ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவங்களின்படி அது ஒரு விசையல்ல. பொருளின் பொருண்மை தன்னைச் சுற்றியுள்ள வெளியை வளைப்பதன் காரணமாக, அவ்வளைவில் செல்லும் பொருளின் பாதை தீர்மானிக்கப்படுகின்றது. 

இங்கு நீங்கள் ஈர்ப்பு விசை என்று கூறுவது நியூட்டனின் கோட்பாட்டின் அடிப்படையில். சார்பியல் கோட்பாட்டின் அடிப்படையில் ஈர்ப்புச் சக்தி விசை அல்ல.  இவ்விதம்தாம் நான்  புரிந்து வைத்திருக்கின்றேன். இதுவும் என்னைக் குழப்பியது. வெங்கட்ரமணனின் கருத்தை இது விடயத்தில் எதிர்பார்க்கின்றேன்.

 இண்டிகோ - ஒரு நிறத்தின் வரலாறு

கருநீல நிறமான இண்டிகோவின் வரலாற்றின் பின் மறைந்திருக்கும் அதன் சாயத்தை  உருவாக்க உழைத்த அடிமைகளின் வலியும், துய்ரமும் இருப்பதை வெளிப்படுத்தும் கட்டுரை. லெவி  ஜீன்ஸ் ஆரம்பத்தில் உழைப்பாளிகளின் ஆடையாக அமெரிக்காவில் உருவாக்கபப்ட்டது, கரு நீலச் சாயம் இந்தியாவில் அவுரிச் செடிகளிலிருந்து உருவாக்கப்பட்டது, இந்தியாவின் அத்தொழில் நுட்பத்தைப் பாவித்து வட , தென் அச்சாயம் பெருமளவில் தயாரிக்கப்பட்டது, அதற்காக அடிமைகள் பாவிக்கப்பட்டார்கள் போன்ற  விபரங்களை உள்ளடக்கிய கட்டுரை ,  இறுதியில் தென்னமெரிக்காவில் அவுரிச்செடிகளில் சாயத்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின்  உரிமைகளுக்காக மகாத்மா காந்திபோராடியதையும், அப்போராட்டம் இறுதியில் காலனியாதிக்கத்திலிருந்து இந்தியாவை விடுவித்தது என்பதுடன் முடிவுக்கு வருகின்றது. 

கருநீலச் சாயத்  தயாரித்தல் பற்றிய அறிவியல் தகவல்களுடன், அதன் வரலாறு, அதன் பின் மறைந்திருக்கும் மானுடத்துயரம், வலி என்பவற்றையும் எடுத்துக்காட்டுகின்றது. தெளிவு, தர்க்க, ஆய்வுச் சிறப்பு , அறச்சீற்றம் மிக்கதாக அமைந்துள்ள, தொகுப்பின் முக்கிய கட்டுரைகளில் இதுவுமொன்று. 

ஆளற்ற போர்முனைகளில் முகமற்ற போரவீரர்கள் 

போர் எந்திரன்களானா சமரன்கள் , ஆளில்லாப் பறப்பிகள்  இன்று டாங்கிகள், துப்பாக்கிக்ள்  கொண்டு நடதப்படும் போர்முனையை முற்றாக மாற்றியுள்ளன. இவ்வகையான தொழில் நுட்ப மேம்பாடு  'அணு ஆயுதங்களைப் போல் அடிப்படைப் போர்ச்சட்டத்தை மீளமைக்கும் ஆட்ட விதிகளை மாற்றியெழுதும் நுட்பம்' என்கின்றார் வெங்கட்ரமணன்.  இவை போர்க்குற்றங்கள் எவ்வகையானவை என்னும் கேள்வியினையும் எழுப்புகின்றார்: "எந்திரன்கள் உணர்ச்சிகள் அற்றவை.  போர் முனையில் அவற்றின் சகா கொல்லப்படும்போது அவை மனச்சிதைவு அடைவதில்லை.  தொடர்ந்தும் தம் கால்களை முன் நகர்த்தியே செலின்றன' என்றும் கூடவ்  சுட்டிக்காட்டுகின்றார். அத்துடன் மாறியுள்ள இவ்வகையான போர்முனையானது கணனியில் வீடியோ விளையாட்டை ஆடுவதைப்போன்று செயற்படுகின்றது.  வீடடியோ விளையாட்டில் நடைபெறும் கொலைகள், போர்கள் எல்லாமே குற்ற உணர்ச்சிக்குள்ளாக்குவதில்லை. விளையாட்டில் ஏற்படும் இன்பத்தை மட்டும் ஏற்படுத்தும் விளையாட்டுகள் அவை. நவீனப்போர்மூறையில் மனித உரிமைகள், குற்ற் உணர்ச்சிகள் மனிதரில் ஏற்படுத்தும் உணர்ச்சிப்  பாதிப்புகள் அற்ற நிலை இவற்றைப் பற்றியெல்லாம் கேள்விக்குள்ளாக்கும் முக்கியமான தொகுப்புக் கட்டுரைகளில் இதுவுமொன்று.

இவை தவிர, இஸ்லாமியக் கலைகளில் உயர்கணிதக் கோட்பாடுகள், பொய், ஐன்ஸ்ட்டைனி மனைவி,  மருந்தெதிர்ப்பு நுண்ணுயுரிகள் ஆகிய ஏனைய் கட்டுரைகளும் வெங்கட்ரமணனின் ஆழத்துடன் கூடிய எளிமை, தர்க்கச்சிறப்பும் ஆய்வுச் சிறப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் கட்டுரைகள்

அச்சுப்பிழைத் தவறுகள் சில

தமிழினி நிறுவனம் செம்மையாக நூல்களைப் பதிப்பிக்கும் நிறுவனமென்ற பெயர் கொண்ட நிறுவனங்களில் ஒன்று.  அதில்  E=MCC சூத்திரம் போன்ற ஆங்கிலச் சொற்கள் எழுத்தின் உருமாற்றத்தின்போது இழைத்த தவற்றினால் தமிழில் இருப்பது ,  நுண்ணுயிரிகள்  நுண்ணியிரிகள்  என்ற் சில இடங்களில் வருவது போன்ற தவறுகள் தென்படுகின்றமை ஆச்சரியத்தைத்  தருகின்றது/.

மொத்தத்தில் நூல் தமிழில் வெளியாகியுள்ள முக்கியமான அறிவியல் நூல். எளிமை, ஆய்வு, தர்க்கம், அறச்சீற்றம் இவற்றின் அடிப்படையில் முக்கியத்துவம் மிக்கது. பொதுவாக அறிவியல் அறிஞர்கள்தம் அறிவியல் நூல்களில் அறச்சீற்றம் இருக்காது.அறிவியல்தான் இருக்கும். என்னைப்பொறுத்தவரையில் வெங்கட்ரமணன் வெளிப்படுத்தியிருக்கும் அறச்சீற்றம் முக்கியமானது,. காலத்தில் கட்டாயமும் கூட. நவீனத் தொழில் நுட்பத்தின் நன்மை தீமைகளை அறிவதன் மூலம் சரியாக அதனைக் கைக்கொள்ள உதவும். இதனால் சுய நலன்களுகாகப் பயனடையும் சக்திகளிடமிருந்து , மக்கள் நலன்களை நோக்கி அரசின், நிறுவனங்களின் திட்டங்களை மாற்றி அமைக்க உதவும். மக்கள் இவ்விடயத்தில் விழிப்புடன் இருந்தால் , திட்டங்களைச் சரியாக அறிந்து, அணுகி, மாற்றங்களை வற்புறுத்தலாம். இல்லாவிட்டால் அவ்விதம் செய்ய முடியாது.

இந்நூல் மூலம் நான் பல புதிய அறிவியல் விடயங்களைக் கற்றுக்கொண்டேன். குறிப்பாக முனைவாக்கம், நிறுவனங்களின் திட்டமிட்ட வழக்கறுத்தல், திட்டமிட்ட தரங்குறைத்தல், காப்புரிமைக்காக மருந்து நிறுவனங்கள் முனைவாக்கத் தொழில் நுட்பத்தின் மூலம் செய்யும் தந்திரங்கள் எனப் பல விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. வாசகர்களும் அறிந்து கொள்வார்கள்.

இங்கு சமூக, அரசியல செயற்பாட்டாளர்கள் பலர் இருக்கின்றீர்கள். உங்களுக்கும் இந்நூல் மிகுந்த பயனைத் தரும். அன்றாடம் நாம் பாவிக்கும் நவீனத்தொழில் நுட்பத்தின் பின்னால் இருக்கும் வலியினை, துயரத்தினை, மனித உரிமை மீறல்களை எல்லாம் தோலுரித்துக் காட்டுகினறது நூல். 

நூலின் மொழி நடை பற்றிக் குறிப்பிடுகையில் வெங்கட்ரமணன் நூலுக்கான என்னுரையில்  "பொதுப்புரிதலுக்காக அறிவியல் கட்டுரைகள் எழுதும்போது எளிமைப்படுத்தலைத் தவிர்க்க முடியாது.  என்னால் இயன்ற அளவுக்கு அதைக் குறைத்திருக்கின்றேன். " என்றுக குறிப்பிட்டிருக்கின்றார்.  இதை என்னால் ஏற்க முடியாது. இன்னும் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.ஆனால் அதே சமயம் கட்டுரைகளின் ஆழம் குறைந்துவிடக்கூடாது. இதுவே முக்கியம். 

எதிர்காலத்தில் வெங்கட்ரமணன் சார்பியல் தத்துவங்கள் பற்றி, குவாண்டம் இயற்பியல் பற்றித் தனித்தனி நூல்கள் பொது வாசகர்களுக்காக எழுத வேண்டும். அதிகமான விளக்கச் சித்திரப்படங்களுடன் அவை இருக்க வேண்டுமென்று ஒரு வேண்டுகோளினையும் இத்தருணத்தில் இங்கு முன் வைக்கின்றேன்.

No comments:

அறிவியல் நூல்களும், அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூல் பற்றிய குறிப்புகள்! - வ.ந,கிரிதரன் -

[காலம்' செல்வத்தின் ஏற்பாட்டில் இன்று டொரோண்டோ, கனடாவில் நடந்த 'வாழும் தமிழ் நிகழ்ச்சியில் அறிவியல் அறிஞர் வெங்கரமணனின் ' 'ஒ...