Monday, April 6, 2026

அறிவியல் நூல்களும், அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூல் பற்றிய வெளியீட்டு அறிவிப்பும் பற்றி... வ.ந.கிரிதரன் -


அறிவியல்  நூல்களின் அவசியம் ஏன்?  அறிவை மக்களைச் சென்றடைய, தவறான தகவல்களைத் தடுக்க,  அதாவது சரியான தகவல்களை அறிய, அறிவியல் சிந்தனையை வளர்க்க, சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த, மூட நம்பிக்கைகளைக் குறைக்க, அரசின் முடிவுகள் சரியாக ,அறிவு பூர்வமாக அமைய, மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்த, அறிவியல் கட்டுரைகள் , நூல்கள் பொதுமக்களுக்காக எழுதப்பட வேண்டும், ஏனெனில்: அறிவு பகிரப்பட வேண்டும். உண்மை பரவ வேண்டும். சிந்தனை வளர வேண்டும்.

எனக்கு அறிவியல் துறையில்  வானியல், வானியற்பியல்  மிகவும் பிடிக்கும். என் பால்ய பருவத்தில் , வவுனியாவில், வீட்டு முற்றத்தில் அப்பாவின் சாறத்தைத் தொட்டிலாக்கி, நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானைப்பார்த்ததிலிருந்து என் ஆர்வம் தொடங்கியது என்பேன். அக்காலகட்டத்தில் கல்கியில் 'பொன்னியின் செல்வன்'  நாவலும் மீண்டும் தொடராக வெளியாகத்தொடங்கியிருந்தது. ஓவியர் வினுவின் அழகான ஓவியங்களுடன்  வெளியான  நாவலில் அப்போது அடிக்கடி வானில் தோன்றிக்கொண்டிருந்த தூமகேது பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்பொழுதுதான் அவ்விதம் குறிப்பிடப்பட்டிருப்பது வால்வெள்ளி  என்பதை அறிந்தேன். நாவல் நடைபெறும் காலத்தில் நடக்கப்போகும் துர்ச்சம்பவமொன்றினை எதிர்வு கூறுவதாகத் தூமகேது சித்திரிக்கப்பட்டிருக்கும். அதே காலகட்டத்தில் கல்கியில் வாண்டுமாமாவின் 'ஓநாய்க்கோட்டை' என்னும் சித்திரக்கதையொன்றும் வெளியாகிக்கொண்டிருந்தது.அதில் வரும் தூமகேது பாத்திரமும் பயங்கரமானதோர் ஆளுமையாகச் சித்திரிக்கப்பட்டிருந்த பாத்திரம். அதனால் தூமகேது என்னும் பெயரும் எம்மைப் பயப்படுத்துமொரு பெயராக அக்காலகட்டத்திலிருந்தது.

இவ்விதமாக ஆரம்பித்த அறிவியல் மீதான என்  ஆர்வத்துக்கு அக்காலகட்டத்தில் வெளியான கலைக்கதிர் சஞ்சிகையும் தீனி போட்டது. பின்னர் பதின்ம வயதுகளில் யாழ்ப்பாணம்  சென்று விட்டபோது அதிகமாகத் தீனி போட்டது யாழ் பொதுசன நூலகம். அக்காலகட்டத்தில் தமிழகத்திலிருந்து ஒரு பதிப்பகம் அறிவியல் நூல்களை அதிகமாக வெளியிட்டுக்கொண்டிருந்தது. அதன் பெயர் சரியாக நினைவிலில்லை. ஆனால் அந்நூல்கள்  எல்லாம் என்னை மிகவும் கவர்ந்தவையாகவிருந்தன. பெளதிகத்தின் வரலாறு, கடலின் கதை, உயிரினங்களின் வரலாறு போன்றவாறு தலைப்புகள் இருக்கும். இவற்றில் பெளத்திகத்தின் வரலாறு என்னை மிகவும் கவர்ந்த புத்தகம். அவையெல்லாம் மேனாட்டு , ருஷ்ய அறிவியல் அறிஞர்களின் அறிவியல் நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள். அதில் ஐன்ஸ்டைனின் புகழ்பெற்ற சூத்திரமான E=MCC ஐ மிகவும் எளிதாக உந்தக்காப்பு விதிம் இயக்கச்சக்தி விதி ஆகியவற்றைக்கொண்டு நிறுவியிருந்தது இன்னும் நினைவிலுண்டு.

அதன் பின்னர் கனடா வந்த பின்னர், அதிக அளவில்  வானியற்பிய சம்பந்தமான , வானியல் அறிஞர்களின் நூல்களை வாசித்தேன். வானியற்பியல், குறிப்பாக நவீன் பெளதிகத்தின் இரு பெரும் தூண்களான சார்பியல் தத்துவங்கள், குவாண்டம் இயற்பியல் ஆகியவற்றைப்பற்றி அதிக புரிதலைத் தந்த நூல்கள் அவை.   அவற்றின் விளைவாக நான் வீரகேசரி வாரவெளியீட்டில் சார்பியல் தத்துவம், அடிப்படைத்துணிக்கைகளுக்கான குவாண்டம் இயற்பியல் பற்றிய ஐந்து கட்டுரைகள் எழுதியிருக்கின்றேன். ஆசிரியராகவிருந்தவர் ஆ.சிவநேசச்செல்வன். மிகுந்த வரவேற்பை பெற்ற கட்டுரைகள் அவை. வாசகர் கடிதங்களையும் பிரசுரித்திருந்தார்கள்.

அவற்றில் முக்கியமான நூல்களாகக் கீழ்வரும் நூல்களை நான் இத்துறையில் மேலும் புரிதலைப் பெற விரும்பும் எவருக்கும் நான் பரிந்துரை செய்வேன்.

Eric Chaisson - Relatively Speaking
George Greenstein - Frozen Star
George Gamow  = One, Two, Three. Infinity
John R. Gribbin -  In Search of Schrödinger's Cat  
Stephen Hawing -A  Brief Histiry of Time
Michio Kaku - Hyperspace , Paralle Worlds
Brian Greene - The fabcric of The Cosmos


இவ்வார இறுதியில் டொரோண்டோ கனடாவில் 'காலம்' சஞ்சிகையின் ஆதரவில் வெளியிடப்படும் நூல்களிலொன்றான அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூலின் ஆசிரியர் தன் சிறுவயதில் பூதக்கண்ணாடியுடன் அலைந்து திரிந்த  அனுபவத்தை விபரித்திருப்பார். அதை வாசித்தபோது எனக்குப் பழைய நினைவுகள் மீள் எழுந்தன. கலகி சஞ்சிகையின் அளவில் சிறுவர்களுக்கான  அறிவியல் புத்தகமொன்று 'நீங்களும் விஞ்ஞானியாகலாம்' என்னும் பெயரில் அல்லது அது போன்றதொரு பெயரில் வெளியாகியிருந்தது. யாழ்  பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்த நூல்களிலொன்று. பூதக்கண்ணாடியுடன் வீட்டு வளவில் திரியும் சிறுவனொருவனின் சித்திரம் போன்ற சித்திரங்களுடன் வெளியாகியிருந்த அந்த நூலை அடிக்கடி எடுத்து வாசித்திருக்கின்றேன். மிகவும் எளிய தமிழ்லில் எழுதப்பட்டிருந்த நூலும், சித்திரங்களும் நெஞ்சில் கிளர்ச்சியை ஏற்படுத்தின.  அதனைக் கலைக்கதிர் நிறுவனம் வெளியிட்டிருக்கலாம். சரியாக நினைவிலில்லை. அதை வாசித்து விட்டு , வெங்கட்ரமணன் போல் நானும் பூதக்கண்ணாடியுடன் வீட்டு வளவு முழுவதும், என்னை ஓர் அறிவியல் அறிஞராகக் கருதிக்கொண்டு அலைந்துதிரிந்தேன். 

ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனுக்கு இவ்விதமான ஆர்வத்தை, அவரது பால்ய பருவத்தில்  அறிவியல்பால் தூண்டியது அவருக்கு மாமாவோ , சித்தப்பாவோ கொடுத்த திசையறி கருவி , கொம்பாஸ் என்று வாசித்தது நினைவுக்கு வருகின்றது. 

இவ்விதமாக அறிவியல் அறிஞர்கள் தம் பால்யப் பருவத்து அனுபவங்களை விபரித்து எழுதுகையில் அவ்வகையான எழுத்துகள் என்னை மிகவும் கவ்ர்ந்து விடும் தன்மை மிக்கவை. இதயத்தைத் தொட்டு அவ்வெழுத்துகளுடன் ஒன்றிட இவ்வகையான அனுபவங்கள் உதவுகின்றன. வெங்கட் ரமணனின் இந்நூலுடனும் மனதொன்றிட ஆசிரியது இவ்வனுபவ விபரிப்பு உதவியது என்பேன். 

தமிழில் இவ்விதமான சாதாரணப் பொதுமக்களுக்கான அறிவியல் அறிஞர்களின் நூல்கள் அரிது.  சுஜாதா போன்றவர்கள் வெகுசன ஊடக வாசகர்களுக்காக எழுதுவதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு , சுவையாகத் தகவல்களைத்  தருவதுடன் நின்று விடுவார்கள். ஆனால் நான் குறிப்பிட்ட மேனாட்டு அறிவியல் அறிஞர்களின் நூல்கள் எளிமையானவை, ஆனால் ஆழம் மிகுந்தவை.  முதல் வாசிப்பில் வெங்கட்ரமணனின் இந்நூலையும் அவ்விதமான அறிவியல் அறிஞர்களின் நூல்களைப் போன்றதாக உணர்ந்தேன். இந்நூல் பற்றி நானும் உரையாற்றவுள்ளேன். அதன் பின்னர் மேலும் விரிவாக என் எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்வேன்.

நூல் நிகழ்வு பற்றிய அறிவிப்பை இங்கு பகிர்ந்திருக்கின்றேன். ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். 

காலம்: ஏப்ரில் 11, 2026 மாலை 4 மணி
முகவரி : Scarborough Community recreation Centre, 3600 Kingston Road, Toronto , Ontario M1M 1R9


No comments:

வ.ந.கிரிதரனின் பாடல்: காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே.

வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5 ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே. நாளின் பிறப்...