Monday, April 13, 2026

எழுத்தாளர் த.சிவதாசனின் 'காலம் 63' கட்டுரை 'கனடா நாற்பது'வும், வரலாற்று இருட்டடிப்பும்! - வ.ந.கிரிதரன் -


கனடாத் தமிழ் எழுத்தாளர்களில் சிலர் ஆய்வாளர்கள் அவதாரம் எடுத்ததும் வரலாற்றை மூடி மறைக்கும் வேலையைச் செய்யத் தொடங்கி விடுவர். எழுத்தாளர் ரதன் மகரந்தன் என்னும் பெயரில் சுபமங்களா சஞ்சிகையில் 'கனடாவில் தமிழ்' என்னுமொரு கட்டுரையை எழுதியபோது அக்காலகட்டத்தில் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்துக்கொண்டிருந்த பலரைத் தவிர்த்திருந்தார். அது பலத்த வாக்கு வாதங்களை ஏற்படுத்தியது. அதற்குப் பதிலாக எழுத்தாளர் ஒருவர் , ப.ஶ்ரீகாந்தனாக இருக்க வேண்டும், வாசகர் கடிதம் எழுதி அதனையும் சுபமங்களா  வெளியிட்டிருந்தது. 

அன்று தொடங்கிய இவ்விதமான வரலாற்றைக் குழி தோண்டிப் புதைக்கும் போக்கு தொடர்ந்து வருவதைத்தான் காலம் சஞ்சிகையின் 63ஆவது இதழில் வெளியான எழுத்தாளர் த.சிவதாசனின் கனடா நாற்பது எடுத்துக் காட்டுகின்றது.  அவர் எழுதிய கட்டுரையின் ஓரிடத்தில் பின்வருமாறு வருகின்றது:

"இப்படியான எழுத்துருக்களைப் பாவித்து 1988ஆகஸ்ட் மாதம் கனடாவில் முதன் முதலாக வெளிவந்த சுதா குமாரசாமியின் தொகுப்பான 'முடிவில் ஓர் ஆரம்பம்'  ரொறண்டோ புரோகிறெஸ் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட இப்பிரசுரத்தின் வடிவமைப்பை மொன்றியல் நாராயண மூர்த்தி செய்திருந்தார்"

இப்படியான எழுத்துருக்களைப்  பாவித்து என்று சிவதாசன் குறிப்பிடுவது கணனி எழுத்துருக்களை. இக்கூற்றிலுள்ள வரலாற்று இருட்டடிப்பைப்பார்ப்போம்.

முதலாவது சுதா குமாரசாமியின் கவிதைத்தொகுப்பு சிவதாசன் குறிப்பிடுவது போல்  இவ்விதம் கணனி எழுத்துருக்கள் மூலம் வெளியான முதலாவது நூல் அல்ல. ஜனவரி 1987இல் எனது 'மண்ணின் குரல்' நூலை (சிறு நாவல்,கவிதை & கட்டுரைத்தொகுப்பு)  றிப்ளக்ஸ் கணனி எழுத்துருக்களைப் பாவித்து மங்கை பதிப்பகம் சார்பில் வெளியிட்டிருந்தது.  ஆனால் அதற்கு முன்பே  றிப்ளக்ஸ் பதிப்பகம் வெளியிட்ட நிழல் சஞ்சிகை 1986இல் கணனி எழுத்துருக்களைப்பாவித்து வெளியாகியுள்ளது. இவ்விதம் ஜீவா பதிப்பகம் 12. 10. 1988  வெளியிட்ட  ஈழத்துப் பூராடனாரின் 'பேனா முனையிலிருந்து (எழுத்தாளர்களுக்கான கைநூல்) நூலில்  குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால் 1985இல் வெளியான 'பெத்தலேகங் கலம்பகம்', 1986இல் வெளியான 'இயேசு புராணம்' ஆகியவை கணனித்தமிழ் மூலம் வெளியான ஆரம்ப நூல்கள். முதலிரு நூல்களென்று கருதலாம். மேற்படி நூலில் நிழல் சஞ்சிகை கணனித் தமிழ் மூலம் முதன் முதலில் வெளியான சஞ்சிகை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  அவ்வகையில் கனடாவில் இவ்விதம் கணனித்  தமிழ் மூலம் வெளியான புனைவு நூலாக 'மண்ணின் குரலை' குறிப்பிடலாம். இத்தொகுப்பில் கவிதைகள் சில, கட்டுரைகள் சில இருந்தாலும் 'மண்ணின் குரல்' புனைகதையே பிரதானமானது.


கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு ஆரம்பத்தில் கையெழுத்துச் சஞ்சிகைகளும் பங்காற்றியுள்ளன.  'தமிழ் எழில்' கூட ஆரம்பத்தில் கையெழுத்துச் சஞ்சிகையாக, பின்னர் தட்டெழுத்துச் சஞ்சிகையாக  வெளிவந்ததாகச் சிவதாசன் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் அவர் 1984- 1985 காலகட்டத்தில் மொன்ரியாலில் வெளியான கையெழுத்துச் சஞ்சிகையான 'புரட்சிப்பாதை'யினை மறந்து விட்டார். அதில்தான் என் 'மண்ணின் குரல்' தொகுப்பின் முதல் பதிப்பில் உள்ளடங்கியுள்ள சிறு நாவல், கவிதைகள், கட்டுரைகள் வெளிவந்தன. 'புரட்சிப்பாதை'யினை வெளியிட்டது அக்காலகட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடாக் கிளை. அரசியலமைப்பின் கையெழுத்துச் சஞ்சிகையென்றாலும் அதன் இலக்கியப் பங்களிப்பைத் தவிர்க்க முடியாது.  10 இதழ்கள் வரையில் வந்திருக்க வேண்டும். 

'பேனாமுனை' நூலை  நூலகம் தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணைப்பு - https://noolaham.net/project/51/5089/5089.pdf

                                'மண்ணின் குரல்'  சிறு நாவல் புரட்சிப்பாதையில் தொடராக வெளியானது. 

 




No comments:

கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு!

யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி, மற்றும் மொறட்டுவைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்  முன்னாள் மாணவரும் , கட்டடக்கலைஞரும் வரலாற்றறிஞருமான இ.மயூரநாதன் எ...