Tuesday, April 28, 2026

அழியாத கோலங்கள்: ஜீவபூமி (ராணிமுத்து) நினைவுகள்!


மானுடரின் வாசிப்பு அனுபவங்கள் பல படிகளைக்கொண்டவை. சிறுவர் இலக்கியம், வெகுசன இலக்கியம் (சரித்திர , சமூக, மர்ம நாவல்கள், காமிக்ஸ்) தீவிர இலக்கியம் எனப் பல படிகளைக்கொண்ட அனுபவங்கள். அவ்வகையில் அனைத்து வகை இலக்கியப் படைப்புகளையும் , அவற்றின் முக்கியத்துவத்தையும் மதிப்பவன் நான்.

என் வெகுசன எழுத்து வாசிப்பில் எழுத்தாளர் சாண்டில்யனுக்கும் (இயற்பெயர் பாஷ்யம்) முக்கியமானதோரிடமுண்டு. என் பால்ய பருவத்தில் வீட்டில் அப்பா கல்கி, விகடன், அம்புலிமாமா, கலைமகள், தினமணிக்கதிர், மஞ்சரி என்று தமிழகச் சஞ்சிகைகள் பலவற்றை வாங்கினார். ஆனால் குமுதம் சஞ்சிகையை மட்டும் வாங்கவில்லை. அக்காலத்தில் சாண்டில்யனின் நாவல்கள் குமுதம் சஞ்சிகையிலேயே வெளியாகிக்கொண்டிருந்தன. அதனால் கல்கி, ஜெகசிற்பியன், அகிலன் , நா,பார்த்தசாரதி, மீ.ப.சோமு போன்ற எழுத்தாளர்களின் வரலாற்று நாவல்களையறிந்திருந்த எனக்குச் சாண்டில்யனின் வரலாற்று நாவல்களை அறிந்திருக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.


அச்சமயத்தில் வவுனியா மகாவித்தியாலயத்தில் என்னுடன் படித்துக்கொண்டிருந்த ரிஷாங்கன் என்னும் மாணவரின் வீட்டில் குமுதம் வாங்கிக்கொண்டிருந்தார்கள். அவர் மூலமே எனக்குக் குமுதம் சஞ்சிகை முதலில் அறிமுகமாகியது. அதில் வெளியாகிக்கொண்டிருந்த சித்திரக்கதைத்தொடரான 'கடற்கன்னி' என்னை மிகவும் கவரவே அப்பாவிடம் குமுதம் சஞ்சிகையையும் வாங்குமாறு கூறினேன். அப்பாவும் வாங்கத்தொடங்கினார். அப்பொழுது குமுதத்தில் சாண்டில்யனின் ராஜமுத்திரை வெளியாகிக்கொண்டிருந்தது. ஏற்கனவே முதற்பாகம் முடிந்து இரண்டாவது பாகம் தொடங்கியிருந்தது. இரண்டாம் பாகத்தில் இந்திரபானு என்னும் தளபதியே நாயகன். முதற்பாகத்தில் சேரமன்னன் வீரரவியால் கடத்தப்பட்ட அவனது காதலியான பாண்டிய ராஜகுமாரியை மீட்பதில் பெரும்பங்கு வகித்தவன் இந்திரபானு. நான் வாசித்த முதலாவது சாண்டில்யனின் நாவல் ராஜமுத்திரை நாவலின் இரண்டாம் பாகம்தான். வெகுகாலத்துக்குப் பின்னரே ராஜமுத்திரையின் முதற்பாகத்தைப் படித்தேன்.

அதன் பின்னர் ராணிமுத்து பிரசுரங்களாக வெளியான சாண்டில்யனின் ஜீவபூமி, உதயபானு, இளையராணி , மஞ்சள் ஆறு ஆகிய நாவல்களை வாசித்தேன். இவை பெரிய நாவல்களல்ல. இவற்றில் ஜீவபூமி என்னை மிகவும் கவர்ந்த நாவல். சாண்டியல்யனின் இந்நாவல் 'அமுதசுரபி'யில் தொடராக வெளியான நாவல். எவ்விதத்தொய்வுகளுமற்ற அவரது சிறந்த வரலாற்று நாவலாக முதலில் கருதுவது இதனையே. அதில்வரும் ராஜபுதனத்து வீரனான ரதன் சந்தாவத் ஸலும்பரா என்னை மிகவும் கவர்ந்த சாண்டில்யனின் நாயகர்களில் ஒருவன். ராஜபுதனத்து மன்னர்களை வைத்துப் பல நாவல்களை எழுதியிருக்கின்றார் சாண்டில்யன். 'ஜீவபூமி' மேவார் ராணா இரண்டாவது ராஜசிம்மன் காலத்தை விபரிக்கும் நாவல். 'கடல்புறா'வின் இளையபல்லவனைப் போல் ரதன் சந்தாவத் ஸலும்பராவும் சரித்திர புருஷன். உண்மையில் வாழ்ந்தவன். கற்பனைப்பாத்திரமல்லன்.

என்னைக் கவர்ந்த ஏனைய சாண்டியல்யனின் நாயகர்களாகக் 'கடல்புறா' இளையபல்லவன், 'ராஜமுத்திரை' இந்திரபானு, 'ஜலதீபம்' இதயச்சந்திரன் ஆகியோரைக்கூறுவேன்.

'ஜீவபூமி' நாவலைச் சிவாஜி/ சரோஜாதேவி நடிப்பில் திரைப்படமாக எடுக்கப்பட்ட முயற்சி பத்திரிகை விளம்பரங்களுடன் நின்று போனது. 'ராணிமுத்து'வின் 'ஜீவபூமி' அட்டைப்படத்திலும்கூட சிவாஜி/ / சரோஜாதேவி விளம்பரக் காட்சியொன்றினையே ஓவியர் ஜெயராஜ் தீட்டியிருந்தார். இங்குள்ள அட்டை ஓவியத்தைப் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.

இந்நாவலின் இறுதியில் வரும் இடம், பொருள், ஏவல் பற்றிய கீழ்வரும் பகுதி எனக்கு நாவலில் பிடித்த பகுதிகளில் ஒன்று.

 சாண்டில்யன் 

"உஸ்! மாமா வெளியிலிருக்கிறார்.... இடம், பொருள், ஏவல்....."

"இடம் எனக்கு இதுதான். பொருள் நீதான். ஏவல்..."

"என்ன அவசரம். இத்தனை நாள் பொறுத்தவர் யுத்தம் முடியட்டுமே.." என்றாள் அகிலா.

வெளியே இருந்த தயால்ஸா தமக்குள் சிரித்துக்கொண்டே, "யுத்தம் முடிந்த மாதிரிதான். இனிமேல் மொகலாயர்களை முறியடிப்பது வெகு சுலபம்" என்று சொல்லிக்கொண்டார். அந்தச் சமயம் படியேறி உள்ளே போகவந்த பண்டித்ஜியை தயால்ஸா தடுத்து , "சந்தர்ப்பம் சரியாயில்லை" என்றார்.

ஹாஸ்ய புருஷரான பண்டித்ஜீக்கா அர்த்தம் புரியாது. வாய்விட்டுப் பெரிதாகச் சிரித்தார். ரதன் உதயசாகரத்தில் சிரித்த சிரிப்பைவிட அது கொஞ்சம் பலமாகவே இருந்தது."

இவ்விதம் நாவல் முடிகின்றது. இந்நாவலின் இன்னுமொரு முக்கியமான சிறப்பு இந்நாவல் ஆரம்பமும் ஒரு சிரிப்புடன் தான் ஆரம்பமாகின்றது. அது நாயகன் ரதன் சந்தாவத் ஸலும்ப்ராவின் சிரிப்புடன் பின்வருமாறு ஆரம்பமாகின்றது:

"ரதன் சந்தாவத் ஸலும்ப்ராவின் சிரிப்பு, அந்தக் கிருஷ்ணபஷத்து இரவின் பயங்கரமான அமைதியைச் சரேலென்று கிழித்து, இடையிலிருந்த எவ்வளவோ இடைஞ்சல்களை ஊடுருவிச் சென்றது."


ரதன் சந்தாவத் ஸலும்ப்ராவின் சிரிப்புடன் ஆரம்பமாகும் நாவல் பண்டித்ஜீக்காஇன் சிரிப்புடன் முடிவுக்கு வருகின்றது. இரண்டும் வித்தியாசமான காரணங்களுக்காக உருவான சிரிப்புகள். இச்சிரிப்புகளுக்கிடையில் நடந்ததை விபரிக்கின்றது நாவல். சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ள நாவல்.


ஜீவபூமி உட்பட அக்காலகட்டத்து ராணிமுத்துப் பிரசுரங்கள் என்னிடம் ஒரு காலத்தில் இருந்தன. அவற்றை நாட்டில் நிலவிய போர்ச்சூழலில் இழந்து விட்டது ஒரு துயரம். ஆனால் அவை அக்காலகட்டத்தில் என்னில் , என் வாசிப்பில் ஏற்படுத்திய தாக்கங்கள் காலத்தால் அழியாத கோலங்களாக என் நினைவுகளில் நிலைத்து விட்டன.

மானுட வளர்ச்சியின் பல்வேறு பருவங்களும் இவ்விதமான அழியாத கோலங்களால் நிரம்பி நிற்கின்றன. முதலில் வாசித்த நாவல்கள்,காமிக்ஸ், சிறுவர் கதைகள், திரைப்படங்கள் எனப் பல நினைவுச் சித்திரங்கள் நிறைந்து கிடக்கும் அழியாத கோலங்கள் அவை. எல்லாவகைப் படைப்புகளும் மானுட வளர்ச்சிப் பாதையில் முக்கியமானவை. மறக்க முடியாதவை. ஆரோக்கியமான பங்களிப்பை நல்கியவை.

இங்குள்ள சித்திரங்கள் ஜீவபூமி நாவலின் ராணிமுத்துப் பதிப்பில் வெளியான அட்டை ஓவியங்களையும், நாவல் ஓவியங்களையும் உள்ளடக்கியவை. ஓவியர் ஜெயராஜின் கைவண்ணத்தில் உருவானவை.


 

No comments:

கருந்துளை (Black Hole) குறும்படம் பார்த்தேன்! என்னையும் அதற்குள் இழந்தேன்!

[ "THE BLACK HOLE" Short Film Pick Featured by NineJunctions Written & Directed by Philip Sansom & Olly Williams (Phil and...