Monday, April 20, 2026

அழியாத கோலம்: ராணிமுத்துப் பிரசுரமாக லக்ஷ்மியின் 'காஞ்சனையின் கனவு'!


அண்மையில் veryrare book முகநூற் பக்கத்தில்  ராணிமுத்து பிரசுரத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் வெளியான எழுத்தாளர் லக்ஷ்மியின் 'காஞ்சனையின் கனவு' நாவலின் பக்கங்களைப் பகிர்ந்திருந்தார். 

என் நினைவு குருவி உடனடியாகவே அக்காலகட்டத்துக்கே பறந்து சென்று விட்டது. எவ்விதப் பொறுப்புகளுமற்று , பெற்றோரின் அரவணைப்பில் இன்பமாக வாழ்ந்த பால்யப்பருவத்து நினைவுகள் எப்பொழுதும் மகிழ்ச்சி மிக்கவை.

லக்ஷ்மி அம்மா, அப்பாவின் காலத்து எழுத்தாளர். மருத்துவர் . திரிபுரசுந்தரி என்பது அவர்தம் இயற்பெயர். அப்போது எழுத்திலிருந்து சிறிது ஒதுங்கி, தென்னாபிரிக்காவில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.  


அப்பா, அம்மாவுக்குப் பிடித்த லக்சுமியின் நாவல்கள் ராணிமுத்து பிரசுரங்களாக வெளியாகி எமக்கும் அறிமுகமாகின. நாமும் விரும்பி வாசித்தோம்.  குறிப்பாக விகடனில் தொடர்களாக வெளியான ஶ்ரீமதி மைதிலி, சூரியகாந்தம்  ஆகியவை அம்மாவுக்குப் பிடித்த லக்ஷ்மியின் நாவல்கள். அவரது பெண்மனம் நாவலும் ராணி முத்து பிரசுரமாக வெளியானது. திரைப்படமாக நடிகர் திலகம், சரோஜாதேவி நடிப்பில் 'இருவர் உள்ளம்' என்னும் பெயரிலும் வெளியானது.

லக்ஷ்மி தன் இறுதிக்காலத்தில் மீண்டும் தமிழகம் வந்து முன்பை விட அதிகமாக எழுதிக்குவித்தார். தமிழகத்தின் வெகுசன சஞ்சிகைகளிலெல்லாம் அவரது தொடர்கதைகள் வெளிவந்தன. அக்காலகட்டத்தில்தான் அவருக்குச் சாகித்திய அகாதெமி விருதும் கிடைத்தது.

அண்மையில் டொரோண்டோ முருகன் புத்தகசாலைக்குச் சென்றபோது லக்ஷ்மியின் நாவல் தொகுப்புகளைக் கண்டேன். ஆச்சரியமாகவிருந்தது. இவரது கதைகள் எப்படி விற்கின்றன என்று கேட்டேன்.அதற்கு முருகன் புத்தகசாலை உரிமையாளர் மகேசன் கூறினார்: 'பெண்கள் மத்தியில் இவரது நூல்கள் நன்றாகப் போகின்றன.'

கல்கி, நா.பார்த்தசாரதி, அகிலன் , சிவசங்கரி வரிசையில் லக்ஷ்மியின் படைப்புகளும் இன்று வரை  நிலைத்து நிற்கின்றன.

 

No comments:

யாழ்ப்பாணம் போவோமா?

[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...