![]() |
| எழுத்தாளர் கற்சுறா |
அண்மையில் முகநூலில் எழுத்தாளர் கற்சுறா நூலகம் பற்றியும், 'நூலக' அறக்கட்டளையுடன் இணைந்து செயற்படும் சஜீவன் பற்றியும் , சஜீவனின் கிளப் ஹவுஸ்ஸில் நண்பர் பரதனுடன் நடந்த உரையாடல் பற்றியுமொரு பதிவிட்டிருந்தார். அதில் அவர் பின்வரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இதுவரை தானும், தன் நண்பர்களும் நூலகத்துக்கு அனுப்பிய பணத்தைத் திருப்பி அனுப்பும்படியும், நூலகத்தில் உள்ள தனது நூல்கள், சஞ்சிகைகளை நீக்கும்படியும் கோரிக்கை விடுத்திருந்தார். கற்சுறாவின் குற்றச்சாட்டுகள்:
1.''நூலகத்தின் அனைத்து அடையாளத்திலிருந்தும் என்னை நீக்கிக் கொள்ளும் அறிவிப்பு. அண்மையில் நூலகத்துடன் தொடர்புடைய சசீவன் பொதுவெளியில் பேசியிருந்த வார்த்தைகள் மிகவும் அசிங்கமானவை என்பது எனது கணிப்பு. அத்துடன் எதிர்காலச் சமூகம் பற்றி அக்கறைகொள்வோரைக் கேவலப்படுத்தி இழிவு செய்யும் நடைமுறை. அதனை நான் முற்றாக நிராகரிக்கிறேன். ஒரு இடத்தில் சமூகம் பற்றிய அக்கறையை இழிவு செய்பவன் இன்னொரு இடத்தில் அதற்காக உழைக்கிறான் என்பது ஒரு கட்டுக்கதையேயல்லாமல் அது ஒருபொழுதும் உண்மையாக இருக்காது. .. இவன் மட்டுமல்ல நூலகம் என்றும், மற்றவர்களுக்கு இருக்கும் அதிகாரம் போன்றதுதான் சசீவனுக்கு உள்ளது என்றும் நுலகம் சார்ந்த மற்றய நண்பர்கள் தெரியப்படுத்துகிறார்கள். இதனை நான் எவ்விதத்திலும் ஏற்க முடியாது. ''
2. ''இவன் இருக்கும்- அடையாளம் காட்டும் இடத்தில் இனிமேல் எனக்கு எந்த வேலையுமில்லை. செயற்பாடும் இல்லை. அவற்றிலிருந்து என்னை நீங்கள் நீக்க வேண்டும் என்று கோருகிறேன். எங்கள் சஞ்சிகையான அனைத்து எக்ஸில் இதழ்கள்(13) மற்றும் அவற்றின் பதிப்பகச் செயற்பாடுகளான நூல்கள். எங்கள் சஞ்சிகையான “மற்றது” இதழ்கள்(2) மற்றும் அவற்றின் பதிப்பகச் செயற்பாடுகளான நூல்கள். மற்றும் எந்தவகையான தனிப்பட்ட எனது எழுத்துக்கள். இவை யாவும் நூலகம் என்ற தளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட வேண்டும். இனிவரும் எக்காலங்களிலும் பதிவேற்றம் செய்யக் கூடாது.''
3. ''புதிதாக ஈழச் சமூகத்தின் சாதியச் சிக்கல்களின்- கொடுமைகளின் ஆவணச் சேர்ப்பாகப் புதியதொரு தளத்தைத் தொடங்க இருப்பதாக சஞ்சயனுக்கூடாக(சஞ்சயன் செல்வமாணிக்கம்) சசீவன் என்னைத் தொடர்பு கொண்டார். மிகவும் தேவையான செயற்பாடு என நான் சொல்லி அதற்கான ஆதரவை உடனேயே தெரிவித்தேன். ''
கற்சுறா தனது பதிவின் எதிர்வினைகளிலொன்றில் கூறியது: "அப்படியிருக்க இன்று "நூலகம் நிறுவனம்" எங்களை அரச ஒத்தோடி என்கிறது. சாதாரணமாக சமூகத்தில் இருக்கும் ஒருவர் எம்மைப்பார்த்து இவ்வாறான வசைச் சொற்களச் சொல்லும் போது நாம் கலங்குவதில்லை. "
நானறிந்த வரையில் நூலகம் ஓர் அறக்கட்டளை. அதனை ஆரம்பித்தவர் சஜீவன் அல்லர். அந்நிறுவனம் அவருக்குச் சொந்தமானது அல்ல. அதற்காக வேலை செய்வதற்காக அவருக்கு ஊதியம் வழங்கப்படுகின்றதோ நான் அறியேன். நூலகம் ஆரம்பிக்கப்பட்டபோது சஜீவன் இருந்ததாக எனக்கு நினைவில்லை.அமரர் ஈழநாதன் போன்றவர்களின் ஆரம்பக் காலத்து முயற்சிகள் நடந்தபோது அவை பற்றிப் பதிவுகள் இணைய இதழில் பதிவுகள் பல வெளிவந்துள்ளன. பதிவுகள் இணைய இதழில் தேடிப்பார்த்தால் அவை பற்றிய தகவல்கள் கிட்டும்.
மேற்படி கற்சுறாவின் குற்றச்சாட்டுக்கு நூலகம் தளத்துடன் செயற்படு தில்லைநாதன் கோபிநாத் பின்வருமாறு கூறியிருந்தார்:
"ஐயர் தான் நூலகம், சசீவன் தான் நூலகம், X தான் நூலகம், Y தான் நூலகம் என்று யானையைத் தடவிப் பார்த்தது போல நூலகத்தை சம்பந்தப்படுத்த வேண்டாம். மிக வேறுபட்ட அரசியல், சமூகக் கருத்துநிலை உள்ளவர்களின் கூட்டுச் செயற்பாடாகவே நூலகம் முன்னெடுக்கப்படுகிறது. இவர்கள் எவர் இருந்தாலும் விலகினாலும் செயற்படும் வகையிலேயே நூலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நூலகத்துக்குப் பெற்றுக் கொள்ளப்படும் ஒவ்வொரு சதத்துக்கும் நூலகமும் கணக்குக் காட்டியே வருகிறது. யாரேனும் தமது ஆவணங்களை நீக்க நிர்வாகத்தினருக்கு அறிவித்தால் அதனை அவர்கள் நடைமுறைப்படுத்துவர். அது எழுத்தாளரது உரிமை. நூலகத்தின் பங்களிப்பாளர்களின் அரசியற் கருத்துகளின் அடிப்படையில் நூலகச் செயற்பாடுகள் நடப்பதில்லை; தணிக்கைகள் செய்யப்படுவதில்லை. ஆகையால் நூலகத்தைச் சம்பந்தப்படுத்த வேண்டாம்."
கற்சுறாவின் குற்றச்சாட்டுகள் சிறிது மிகைப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன என்றே தோன்றுகின்றது, நானும் சஜீவனுக்கு,பரதனுகுமிடையிலான கிளப் ஹவுஸ் உரையாடலைக் கற்சுறாவின் பதிவின் மூலம் கேட்டேன். நான் அப்பக்கம் போவதில்லை. இனியும் போகும் எண்ணமில்லை. அதில் சஜீவன் ஒத்தோடிகள், அரச ஆதரவு போன்ற சொற்களைப் பாவித்து மனிதர்களைப் படி நிலை பிரித்துக் குற்றச்சாட்டியது எனக்கும் ஏற்புடையது அல்ல. ஆனால் அது அவரது தனிப்பட்ட கருத்து. நூலகத்தின் கருத்தாக அதனை ஒருபோதும் ஏற்க முடியாது. அதுபோல் கற்சுறாவின் கருத்துகளும் கற்சுறாவின் கருத்துகள். தனிப்பட்ட கருத்துகள். அவர் நடத்தும் நிறுவனத்தின் கருத்துகள் அல்ல. நிறுவனம் அனைவருக்கும் பொதுவானது.
மேலும் தமிழ்த் தேசியம் என்பது ஓர் அமைப்புக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. தமிழ்த்தேசியம் பொதுவானது. அது போல் தமிழ்த்தேசியம் சார்பில் ஒருவர் கருத்துகளை முன்வைப்பதை வைத்து அது ஓர் அமைப்பின் சார்பானது என்று கூற முடியாது. அதன் அடிப்படையில் ஒருவர் தமிழ்த்தேசியம் சார்பான, அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கலாம், அது அவரவர் உரிமை. அதனைக் கடந்த காலத்து அரசியல் நிலையுடன் ஒன்றாக வைத்துக் கருத வேண்டியதில்லை. அப்படிக்கருத வேண்டுமென்றால் அவர் கடந்தகாலத்தில் இயங்கிய அமைப்பின் பெயரைக் குறிப்பிட்டு அதனுடன் தன்னை அடையாளப்படுத்தியிருக்க வேண்டும். அப்படி சஜீவன் தனது உரையாடலில் குறிப்பிட்டதாக நினைவில் இல்லை. இருந்தாலும் மீண்டுமொரு தடவை அதனைக் கேட்க வேண்டும்.
கற்சுறா அவர் கொடுத்த ஈழச் சமூகத்தின் சாதியச் சிக்கல்களின்- கொடுமைகளின் ஆவணச் சேகரிப்புக்காகக் கொடுத்த பணத்தைக் கேட்பதற்கு உரிமையுண்டு. ஆனால் அவர் எதற்காகப் பணத்தைக் கொடுத்தாரோ அது சம்பந்தமாக நூலகம் ஏதாவது செய்திருந்ததா என்பதை அறிந்து, அப்படிச் செய்யாவிட்டாலே அவ்விதம் கேட்பது நியாயமாகவிருக்கும்.
சஜீவன் என்னும் தனி நபர் , நூலகம் என்னும் பொது அமைப்பில் இணைந்து பணி புரிகின்றார் என்பதற்காக நூலகம் அமைப்பின் மீது அவதூறினை அள்ளி வீசுவது சரியாக எனக்குப் படவில்லை.
அடுத்தது தனது 'எக்சில்' , 'மற்றது' இதழ்களை நீக்கும்படி கூறியிருக்கின்றார். அது அவரது சொந்த, தனிப்பட்ட இதழ்களா? அல்லது கூட்டு முயற்சியா? கூட்டு முயற்சி ஆயின் கற்சுறாவின் முடிவுக்கு மற்றவர்களும் சம்மதிக்கின்றார்களா? கற்சுறா இன்னுமொரு சஞ்சிகையை மறந்து விட்டார். அவரது 'அறிதுயில்'தான் அது. அது அவரது தனிப்பட்ட முயற்சி என்று நினைக்கின்றேன்.
இது பற்றி எழுத்தாளர் ப.வி.,ஶ்ரீரங்கனும் கருத்து தெரிவித்திருந்தார். அதில் அவர் "கிளப் ஹவுசில் சசீவன் உரையாடிய டிகிரி / படிநிலை ஆய்வில் 1-2-3 படிநிலைகளில் மானுடரை வைத்து விவாதிப்பதே தவறு ; பொருள் நிலை ஆய்வின் அடிப்படையில் மட்டுமே இந்த விவாதம் சாத்தியமாகும். கருத்துநிலை எப்போதும் மாறும் . மனிதர்கள் அவர்களது வாழ்நிலையில் இருந்தே சிந்தனையைப் பெறுகின்றனர் . புறநிலையின் தன்மையே சிந்தனையை தூண்டுகிறது . எனவே. இந்தப் படிநிலை ஆய்வு பொருத்தமற்றது .
மானுடரைப் பொருள் நிலைக்குள் தள்ளிக் குறுக்குவதாகும் இது " என்று குறிப்பிட்டிருந்தார்.
உண்மையில் நூலகம் மிகுந்த பயனுள்ள சேவையினை ஆற்றி வரும் நிறுவனம். அதில் தேவையற்ற அரசியல் கலப்பது தேவையற்றது. அது அனைவருக்கும் பொதுவானது. அதில் பல்வேறு அரசியல் கருத்துகள் மிக்கவர்கள் இணைந்து பணி புரிந்தாலும் , அது தொடர்ந்தும் நடுநிலையாக, அனைவருக்கும் பொதுவானதாக இருப்பதே சிறந்தது. அப்படி இருப்பதாகத்தான் நான் கருதுகின்றேன்.
நூலகம் தளத்தின் இணையத்தள முகவரி - https://www.noolaham.org


No comments:
Post a Comment