Wednesday, March 4, 2020

காலத்தால் அழியாத கானங்கள்: "பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர"

"பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்....
நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்

ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே" -
கவிஞர் மேத்தா




அவ்வப்போது எழுத்தாளர்கள் திரையுலகையும் எட்டிப்பார்க்கத் தவறுவதில்லை; தடம் பதிக்கத்தவறுவதில்லை. கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணாத்துரை, சுஜாதா, ஜெயமோகன், பாலகுமாரன், விந்தன் என்று பலரைக்குறிப்பிடலாம். அவர்களில் கவிஞர் மேத்தாவும் ஒருவர். ரஜனிகாந்த்தின் 'வேலைக்காரன்' திரைப்படப்பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது. 'உதயகீதம்' திரைப்படப்பாடலான இப்பாடலையும் அவர்தான் எழுதியிருக்கின்றார்.

காலத்தால் அழியாத கானங்கள்: "மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே"



இப்பாடலை எப்பொழுது கேட்டாலும் எனக்குக் காற்சட்டையும், சேர்ட்டுமாகப் பால்ய காலத்தில் வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டம் நினைவுக்கு வரும். உண்மையில் இப்பாடலை முதலில் கேட்டபோது நான் நண்பர்களுடன் வவுனியா நகரசபை மைதானத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். பாடசாலை முடிந்து வீடு திரும்புகையில் பல்வேறு வழிகளில் திரும்புவது வழக்கம். அதிலொரு வழி நகரசபை மண்டபத்துக்குப் பின்புறமாக , புகையிரத இருப்புப்பாதைக்குமிடையில் மரங்கள் நிறைந்திருந்த பகுதியினை ஊடறுத்துச் சென்ற பாதை. அப்பாதை வழியாக காமினி வித்தியாயலயத்துக்கு முன்புறமாகச் சென்று கொண்டிருந்த மன்னார் வீதிக்கு வர முடியும்.

கணையாழி: 'விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை' - வ.ந.கிரிதரன் -

2020 மார்ச் மாதக் கணையாழி இதழில் எனது கட்டுரையான 'விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை' நாவல் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது . கூடவே நண்பர் கே.எஸ்.சுதாகரின் 'தலைமுறை தாண்டிய தரிசனங்கள்' சிறுகதையும் வெளியாகியுள்ளது. எனது கட்டுரையின் பக்கங்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

இதுவரை கணையாழி சஞ்சிகையில், தொகுப்பு நூலில் வெளியான எனது ஏனைய படைப்புகள்:
1. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் (இதே தலைப்பில் வீரகேசரி வாரவெளியீட்டில் ஏறகனவே எனது கட்டுரையொன்று வெளிவந்திருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரை அதே பொருளை
மையமாக வைத்துப் புதிதாக எழுதப்பட்ட கட்டுரை.)
2. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன். (சூழல் பற்றிய கட்டுரை).
3. கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்
4. 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
5. ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்- (கணையாழி மே 2012)
6. கணையாழி அக்டோபர் 2019: தமிழ்நதியின் பார்த்தீனியம் - வ.ந.கிரிதரன் -
7. கணையாழி செப்டம்பர் 2017: கட்டுரை - 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -
8. கணையாழி நவம்பர் 2019: ஆஷா பகேயின் பூமி பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள். - வ.ந.கிரிதரன் -

Wednesday, February 26, 2020

கவிதை: வேற்றுலக வாசியுடனோர் உரையாடல் (1) - வ.ந.கிரிதரன் -



ஊர்துஞ்சும் நள்ளிரவு.
விரிவெளி பார்த்திருந்தேன்.
இரவுவான்!
புட்களற்ற மாநகரின் நள்ளிரவு
நத்துகள் ஒலியேதுமில்லை. ஆந்தைகளின் அலறல்கள் எங்கே?
வெளவால்கள்தம் சலசலப்புமில்லை.
வாகன இரைச்சல் மட்டும்
சிறிது தொலைவில்
சிறிய அளவில்.
உப்பரிகையின் மூலையில்
தூங்கும் மாடப்புறாக்களின்
அசைவுகள்
அவ்வப்போது கேட்கும் சூழல்.
விரிவெளியில் சுடரும் ஒளிச்சிதறல்கள்
பல்வகை எண்ணங்கள் நெஞ்சில்.
எங்கோ ஒரு கோடியில் இங்கு
நான்.
அங்கு
நீ!
எங்கே?
சாத்தியமுண்டா?

Tuesday, February 25, 2020

வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (6): "அறிந்தால் அறிவியடி அருவியே!"


கண்ணம்மா! அலைக்கூம்புக்குள்
விரிந்திருக்கின்றதடி நம்காலவெளி.
ஆம்!
கூம்புக்காலவெளியில் நாம்
கும்மாளமடிக்கின்றோமடி.
கூம்புக்கும் வெளியேயொரு யதார்த்தம்.
நாமறியாக் காலவெளி அது கண்ணம்மா!
கண்ணம்மா! நீ இவைபற்றி என்றாவது
கருத்தில் கொண்டதுண்டா? கூறடி!
இருப்புப்பற்றி இங்கு நினைப்பதிலுண்ட
இன்பம் வேறொன்றுண்டோ கண்ணம்மா.
காலவெளியடி கண்ணம்மா! நீ என்
காலவெளியடி கண்ணம்மா!

Saturday, February 22, 2020

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (18) : ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை


 
[Digiat Art (cgtGPT) help: VNG ] 
 
[ இச்சிறுகதை ஸ்நேகா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட 'அமெரிக்கா' தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. எஸ்.போ மற்றும் இந்திரா பார்த்தசாரதியால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட 'பனையும் பனியும்' சிறுகதைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது.]

முதலில் தாயகம் (கனடா) பத்திரிகையில் 'ஒரு மாட்டுப்பிரச்சினை' என்னும் தலைப்புடன் வெளியாகியது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பானது (லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது) இலண்டலிலிருந்து வெளியாகும் 'தமிழ் டைம்ஸ்' ஆங்கில இதழில் வெளியாகியுள்ளது.]

ஞாயிற்றுக் கிழமையாதலால் 'றோட்டி'னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் 'கொண்டா அக்கோர்ட்' 'சென்ற்கிளயர்' மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை

நாட்களில் காரோடுவதென்றால் பொன்னையாவிற்கு மிகவும் பிடித்தமானதொன்று. எந்தவித 'டென்ஷ'னுமின்றிப் பின்னால் 'ஹோர்ன்' அடிப்பார்களேயென்ற கவலையேதுமின்றி ஆறுதலாக நகரை ரசித்துச் செல்லலாமல்லவா? இருந்தாலும் அண்மைக்காலமாகவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் 'ஹோர்ன்' அடிக்கத்தான் தொடங்கி விட்டார்கள். நகரம் பெருக்கத் தொடங்கி விட்டது. 'நகரம் பெருக்கப் பெருக்க சனங்களும் பொறுமையை இழக்கத் தொடங்கிட்டாங்கள் போலை' இவ்விதம் இத்தகைய சமயங்களில் பொன்னையா தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். 'நகரம் வளருகின்ற வேகத்திற்குச் சமனாக சனங்களின்ற வாழ்க்கைத்தரமும் உயரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைதான்' என்றும் சில வேளைகளில் ஒருவித தீவிர பாவத்துடனும் அவன் சிந்தித்துக் கொள்வான்.

Tuesday, February 18, 2020

வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (5): காலவெளிக் கைதிகள்!


காலவெளியிடையே கண்ணம்மா உன்
கனிமனம் எண்ணி வியக்கின்றேன்.
காலவெளியிடையே கண்ணம்மா
கணமும் பறந்திட விளைகின்றேன்.
காலவெளிச் சிந்திப்பிலே கண்ணம்மா
களித்திட கணமும் எண்ணுகின்றேன்.
சூழலை மீறியே கண்ணம்மா அவன்போல்
சிந்திக்க விரும்புகின்றேன்.
காலமென்றொன்றில்லை கண்ணம்மா.
வெளியும் அவ்வாறே என்றான் கண்ணம்மா.
காலவெளி மட்டுமே கண்ணம்மா இங்கு
உண்மையென்றுரைத்தான்.
அவனறிவின் உச்சம் பற்றி கண்ணம்மா
பிரமித்துப்போகின்றேன்.
மனத்து அசை இன்னும் முடியவில்லை.
எப்பொழுதென்றாயினும் நீ கண்ணம்மா
எவ்விதம் அவனால் முடிந்ததென்று
எண்ணியதுண்டா ?
நான் எண்ணுகின்றேன் எப்பொழுதும் கண்ணம்மா.\
நான் வியந்துகொண்டிருக்கின்றேன் எப்பொழுதும்
கண்ணம்மா..
நான் எண்ணுவேன் எப்பொழுதும் கண்ணம்மா.
நான் வியந்துகொண்டிருப்பேன் எப்பொழுதும் கண்ணம்மா.

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...