எழுத்தாளர் 'நந்தலாலா' ஜோதிகுமாரின் '23ஆம் வயதில் பாரதி' நூல் பற்றிய , கணையாழி சஞ்சிகையின் அக்டோபர் 2025 இதழில் வெளியான எனது கட்டுரை.-பகுதி ஒன்றுதன் குறுகிய வாழ்வில் மகாகவி பாரதியின் சிந்தனை வளர்ச்சியை வெளிப்படுத்தும் அவரது எழுத்துகள் (கவிதைகள், கட்டுரைகள்) என்னை மிகவும் வியப்புக்குள்ளாக்குபவை. அவரது எழுத்துகள் மானுட பருவங்களின் வளர்ச்சிக்கேற்ப அர்த்தங்களிலும் புது அர்த்தங்கள் தருபவை. குழந்தைக்கும் பாரதியைப்பிடிக்கும். சிந்தனை முதிர்ச்சியுற்ற , தேடல்மிக்க முதிய மானுடருக்கும் பிடிக்கும். இருப்பை நன்கு உணர்ந்து கொண்ட , முதிர்ச்சியுற்ற சிந்தனையாற்றல் மிக்க ஒருவரின் எழுத்துகளுக்கே காலத்துடன் ஈடுகட்டி, இவ்விதம் எழுந்து நிற்கும் வல்லமை உண்டு. ஏனைய ஒற்றைப்பரிமாணம் மிக்க தட்டை எழுத்துகள் மானுடப் பருவமொன்றுடன் தேங்கி, அப்பருவத்துக்குரிய அழியாக கோலங்களாக நிலைத்து நின்றுவிடும் பண்பு மிக்கவை. ஓர் எழுத்தாளராக, தேசிய, மானுட வர்க்க . சமூக விடுதலைப் போராளியாக அவர்தம் ஆளுமையின் பரிணாம வளர்ச்சியினைச் சாத்தியமாக்கியவை எவை, சாத்தியமாக்கிய ஆளுமைகள் எவர் என்ற் கேள்விகள் அடிக்கடி எனக்குள் எழுவதுண்டு.
அண்மையில் பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியாகி , நூலுருப்பெற்ற 'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் ' 23ஆம் வயதில் பாரதி' (23 - 24ஆம் வயதில் பாரதி, இருபத்து நான்காம் வயதில் பாரதி, இருபத்து மூன்றாம் வயதில் பாரதி, '23-24 வயதில் பாரதி : வேல்ஸ் இளவரசரை வாழ்த்திய கவிதையும் - கட்டுரையும்' என்னும் தலைப்புகளில் பதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரைகளை உள்ளடக்கிய நெடுங்கட்டுரை) கட்டுரையில் இக்கேள்விகளுக்கான சில பதில்கள் இருப்பதை வாசித்தபோது அறிய முடிந்தது. இந்நெடுங் கட்டுரை ஜோதிகுமாரின் தர்க்கச்சிறப்பு மிக்க சிந்தனை முதிர்ச்சியின் வெளிப்பாடு என்பதைக் கட்டுரையை வாசிக்கும் எவரும் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். பாரதியின் அனைவராலும் அறியப்பட்ட அவரது ஆளுமையின் அடிப்படைக்கூறுகளைந் நிர்ணயிக்கும் முக்கிய அவரது வயதாக 23 - 24 ஐக் குறிப்பிடலாம் என்பதை ஆய்வுபூர்வமாக எடுத்துரைக்கின்றது இக்கட்டுரை. கூடவே அப்பருவத்தில் அவரது ஆளுமையில் , சிந்தனையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களைக் கவனத்திலெடுத்து ஆராய்கின்றது.