['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
அத்தியாயம் இரண்டு: கண்ணம்மாவுடனோர் உரையாடல்: 'காலச்சுரங்கமும் அது எழுப்பிய கேள்வியும்!
நினைவின் வலிமை என்னை நீ உணர வைக்கும்.
நினைவின் வலிமை உன்னை நான் நினைக்க வைக்கும்.
நினைவின் வலிமையை உன்னைப்போல்
நானும் நம்புவனடி கண்ணம்மா!
அதனால்தான் உதயத்தில் மறைந்து
அந்தியில் முகம் காட்டும் மதியாகி
முறுவலித்தாய். இல்லையா கண்ணம்மா!
ஒளிக்கும் ஒரு வேகமுண்டு!
ஒளி கடக்கும் தூரத்துக்குமொரு நேரமுண்டு.
ஆயின்,
மனவேகத்துக்கு ஓர் எல்லையுண்டா
கண்ணம்மா!
இருப்பின் எல்லையை நிர்ணயிப்பது
ஒளி! இலலையா கண்ணம்மா!
ஒளி எல்லை தாண்டிப் பயணித்தல்
சாத்தியமுண்டாடி!
ஆனால்,
எண்ண வேகத்தைத் தடுக்கும்
எல்லையென்று ஒன்று உண்டா
என் கண்ணம்மா!
பிரபஞ்சங்கள் தாண்டிச் செல்வதை
அனுமதிப்பதில்லை ஒளி.
இல்லையா கண்ணம்மா?
ஆயின்,
எண்ணவேகத்தில் என்னால்
எத்தனை பிரபஞ்சங்களையும் தாண்டிப்
பயணிப்பதைத் தடுப்பவர் எவருமுண்டா?
கண்ணம்மா! பதில் கூறடி
என் செல்லம்மா?
சமாந்தரப் பிரபஞ்சங்களுக்குள் புகுந்து விளையாடும்
சாதனையை என்னால் சாதிக்க முடியுமடி
என்னால் என்றால் நம்புவதில் உனக்கு
ஏதும் தயக்கமுண்டாடி கண்ணம்மா?