Friday, October 11, 2024

புலம்பெயர் தமிழ் இலக்கியம் - வ.ந.கிரிதரனின் அமெரிக்கா நாவலை முன்வைத்துச் சில குறிப்புகள்! , - அப்தான் நிஷான், மூன்றாம் வருடம், தமிழ்த்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை -



அண்மையில் கிழக்குப் பல்கலைககழகத்தின் கலை, கலாச்சாரப் பீடத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்கும் மூன்றாம் வருட மாணவன் அப்தான் நிஷான் Abdhan Nishan எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் புலம்பெயர் இலக்கியங்கள் என்னும் பாடத்துக்காக எனது 'அமெரிக்கா' என்னும் சிறு நாவலைப்பற்றிய ஆய்வுக்கட்டுரையினைத் தான் சமர்ப்பித்திருந்ததாகத் தெரிவித்திருந்தார். இதுவே தனது முதலாவது ஆய்வு என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் 'தொடர்ந்து புலம்பெயர் சிறுகதைகளில் அந்நியமாதல் (தனிமைப்படுத்தப்படல்) என்ற  விடயம் வெளிப்படுமாற்றினை ஆய்வு செய்யுமாறு கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் கற்கைகள் துறையினால் பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தங்களின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் என்று சிறுகதைத் தொகுப்பை ஆய்வுக்காக தெரிவு செய்துள்ளேன்.' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

முதலில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்கு எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும். மாணவர்களை இதுபோன்ற விடயங்களில் கவனத்தைச் செலுத்துமாறு தூண்டுவது ஆரோக்கியமான விடயம். மேலும் போர்ச்சூழலை அடுத்து ஆயிரக்கணக்கில் இலங்கைத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள். இன்றும் புலம்பெயர்கின்றார்கள்.  இன்றுள்ள தலைமுறையினருக்குப் புகலிட வாழ்க்கை பற்றிய விபரங்களை, புலம்பெயர்ந்ததற்கான காரணங்களைப் புகலிட இலக்கியப் படைப்புகள் எடுத்துக்காட்டுகின்றன., அவ்வகையில் புகலிடத் தமிழ் இலக்கியம் நோக்கியும் மாணவர்களின் கவனத்தைத் திருப்பியிருப்பதும் ஆரோக்கியமானது. இத்தருணத்தில் எண்பதுகளில் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த பேராசிரியர் நா. சுப்பிரமணியன் , பேராசிரியர் கா.சிவத்தம்பி போன்றோர் மாணவர்களை இலங்கைத்  தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றியும் கவனத்தைத் திருப்ப ஊக்குவித்தது நினைவு வருகின்றது. அதன் பயனாக இலங்கைத்  தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வுகள் வெளிவந்தன.

அப்தான் நிஷானின் ஆய்வு முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள்.

************************************************************************

தமிழிலக்கிய வரலாற்றில் 'புலம்பெயர்வு, 'புலம்பெயர்தல்" ஆகிய சொற்கள் பற்றிய கருத்துக்களைப் பரவலாகக் காணமுடிகின்றது. மனிதநாகரிகத்தின் வளர்ச்சிநிலைகளில் புலம்பெயர்வு தொடர்ச்சியாகவே இடம்பெற்று வந்துள்ளது. ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னோர் கட்ட வளர்ச்சியாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் திகழ்கின்றது. ஈழத்தமிழ் இலக்கியம் இதுவரை எதிர்கொள்ளாத பல புதிய பிரச்சனைகளும் வாழ்வனுபவங்களும் இவ்விலக்கியத்துக்கூடாகப் பேசப்படுகிறது. புலம்பெயர் இலக்கியத்தின் உள்ளடக்கம் ஈழத்தமிழ்ப் படைப்புலகுக்கு புதிதாக அமைகின்ற அதேவேளை, உருவத்திலும் பல மாறுதல்களை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது.

Thursday, October 10, 2024


எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் 20 கவிதைகளை உள்ளடக்கிய இத்தொகுதி 'எதிர்காலச்சித்தன் பாடல்' என்னும் தலைப்பில் அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது. அதனை வெளியிட்டிருப்பது பதிவுகள்.காம். 

அத்தொகுப்புக்  கவிதைகளை இங்கு தருகின்றோம்.  'அறிமுகம்: கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு!;' என்னும் தலைப்பில் தொகுப்பின் முன்னுரையினை எழுதியிருப்பவர் எழுத்தாளர் வ.ந.கிரிதரன். அ.ந.க.வின் படைப்புகள் சிறுகதைகள்,கவிதைகள், கட்டுரைகள் பல பல்வேறு சஞ்சிகைகள்,பத்திரிகைகளில் வெளிவந்தவை இன்னும் எமக்குக் கிடைக்கவில்லை. இவற்றைத் தேடியெடுப்பது முக்கியமானது.


அறிமுகம்: கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு!  வ.ந.கிரிதரன் -

"ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால்பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது" என்று செல்வி ஜுவானா என்னும் யாழ் பல்கலைக்கழக மாணவியொருத்தியின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது அ.ந.க.வை இன்றைய தலைமுறை மறந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது.

Wednesday, October 9, 2024

வ.ந.கிரிதரனின் அறிவியல் மின்னூல்: 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்'


என்னுடைய அறிவியற் கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் கவிதைகளின் தொகுப்பான 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' நூல் மின்னூலாக இணையக் காப்பகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது.


மின்னூலை இணையக் காப்பகத்தில் அல்லது பதிவிறக்கி வாசிக்கலாம். அதற்கான இணைப்பு 

நூலகம் தளத்திலும் வாசிக்கலாம். அதற்கான இணைப்பு 

இணையக் காப்பகம் (archive.org) , நூலகம் (https://www.noolaham.org) எழுத்தாளர்கள் அனைவரும் ஆக்கபூர்வமாகப் பாவிக்க வேண்டிய ஆவணத்தளங்கள். உங்கள் படைப்புகளின் பிடிஃப் கோப்புகளை அங்கு சேகரித்து வைப்பதன் மூலம் நீண்ட காலம் இணையத்தில் உங்கள் படைப்புகள் நிலைத்து நிற்கப் போகின்றன. இத்தளத்துக்குச் சென்று உங்களுக்கான கணக்கொன்றை உருவாக்கி, உங்கள் படைப்புகளையும் சேகரித்து வையுங்கள்.

இத்தளங்களில் பல அரிய தமிழ் நூல்கள், சஞ்சிகைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

Sunday, October 6, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - மண்ணின் குழந்தைகள் நாம்!


 இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

மண்ணின் குழந்தைகள் நாம் உணர்வோம்.
விண்ணின் குழந்தைகள் நாம் புரிவோம்.

வெறுமைக்குள் விரையும் வாயுக் குமிழி.
வாயுக் குமிழிக்குள் மட்டுமே பரபரப்பு.
விரிந்திருக்கும் வெறுமை விரவிக் கிடக்கும்
புரியாத காலவெளிக்குள் தனித்துக் கிடக்கின்றோம்.

மண்ணின் குழந்தைகள் நாம் உணர்வோம்.
விண்ணின் குழந்தைகள் நாம் புரிவோம்.

Saturday, October 5, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - விரிவெளியும், விடைதேடும் நெஞ்சும்


இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

விரிவெளியும், விடைதேடும் நெஞ்சும்

விரிந்திருக்கும் பெரு வெளியில் இருக்கின்றோம்
புரிந்திட முயற்சி செய்கின்றோம் தெரிந்திட.

ஒளியாண்டுத் தொலைவுகள் பிரமிக்க வைக்கும்.
துளியென எம்இருப்பு இருப்பதும் எதனால்?
தொலைவுகள் பிரிக்கும் பெரு வெளியில்
அலையும் உயிரினம் இதுவரை அறியோம்.

விரிந்திருக்கும் பெரு வெளியில் இருக்கின்றோம்
புரிந்திட முயற்சி செய்கின்றோம் தெரிந்திட.

Friday, October 4, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - அன்பே வாழ்வின் அடிப்படை!



இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

அன்பு என்பது வாழ்க்கையின் அடிப்படை.
அன்புடன் வாழுவோம். இன்பம் அடைவோம்.

உயிர்கள் இருப்பது அன்பின் வலிமையால்.
உணர்ந்து கொண்டால் இன்பமே இருப்பில்.
உணராது போனால் விளைவதே மோதல்.
உலகில் தினமும் பார்க்கின்றோம் இதனைத்தான்.

அன்பு என்பது வாழ்க்கையின் அடிப்படை.
அன்புடன் வாழுவோம். இன்பம் அடைவோம்.

Wednesday, October 2, 2024

எழுத்தாளர் மயிலங்கூடலூர் பி. நடராசனின் 'மறுமலர்ச்சி'ச் சங்கம், 'மறுமலர்ச்சி'ச் சஞ்சிகை பற்றிய 'சஞ்சீவி' கட்டுரைகளும், அவற்றின் முக்கியத்துவமும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -

மயிலங்கூடலூர் பி. நடராசன்


எழுத்தாளர் செங்கை ஆழியான் (க.குணராசா) அவர்களின் கட்டுரைகள் பலவற்றில் தவறான வரலாற்றுத் தகவல்கள் இருப்பதை அவ்வப்போது கண்டிருக்கின்றேன். சுட்டிக்காட்டியுமிருக்கின்றேன். தான் எடுக்கும் முடிவுகளுக்கேற்ப எழுதும் கட்டுரைகளைக் கூட மாற்றி எழுதுவதுமுண்டு. உதாரணத்துக்கு நல்லூர் இராஜதானி, யாழ்ப்பாணத்துச் சாமி பற்றிய அவரது கட்டுரைகளில் இவற்றைக் காணலாம். அவை பற்றி என் கட்டுரைகளில் குறிப்பிட்டுமிருக்கின்றேன்.  

அண்மையில் அவர் தொகுத்து வெளிவந்த மறுமலர்ச்சிக் கதைகள் தொகுப்புக்கு அவர் எழுதிய முன்னுரையிலும் இவ்விதமான தகவற் பிழைகளைக் கண்டேன்.அது இலங்கைத்  தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய அமைப்பான மறுமலர்ச்சிச் சங்கம் பற்றியது. அதில் அவர் பின்வருமாறு கூறுவார்:

"1943 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இலக்கிய ஆர்வம் மிக்க இளம் எழுத்தாளர்கள் சிலர் ஒன்றிணைந்து தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்  என்ற பெயரில் எழுத்தாளர் சங்கம் ஒன்றினை நிறுவிக்கொண்டனர்.  இலங்கையில் உருவாக்கப்பட்ட முதல் எழுத்தாளர் சங்கம் இதுவெனலாம்.  இந்தச் சங்கத்தை உருவாக்கவேண்டுமென்ற எண்ணத்தை யாழ்ப்பாண இந்துக் கல்லூரி ஆசிரியராகவிருந்த அமரர்  வை. ஏரம்பமூர்த்தியும் (ஈழத்துறைவன்), அமரர் இரசிகமணி கனகசெந்திநாதனும் முன்னெடுத்தனர். இவர்களோடு  அசெமு (அ. செ. முருகானந்தன்), திசவ (தி.ச.வரதாராசன்), ககமா (க.கா.மதியாபரணம்), கசெந (க. செ.நடராசா), சபச (ச.பஞ்சாட்சரசர்மா) அநக (அ.ந.கந்தசாமி) முதலானோரும் இணைந்து கொண்டனர்.  மறுமலர்ச்சிச் சங்கம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு, 'மறுமலர்ச்சி' என்ற பெயரில் சஞ்சிகையொன்றை வெளியிடுவதெனத் தீர்மானித்தது."

இது அப்பட்டமான தவறான வரலாற்றுத் தகவல். எங்கிருந்து இத்தகவலைச் செங்கை ஆழியான் பெற்றுக்கொண்டாரோ தெரியவில்லை. தானாகவே வரலாற்றை மாற்றத்தீர்மானித்து இவ்விதம் எழுதினாரோ தெரியவில்லை.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...