Saturday, November 28, 2026

அ.செ.மு.வின் 'அடைக்கலக் குருவிகள்'


எழுத்தாளர் அ.செ.முருகானந்தனின் சிறுகதை இது.  'அடைக்கலக் குருவிகள்' என்பது தலைப்பு. 9.1.1949 வெளியான ஈழகேசரி பத்திரிகையிலுள்ளது. இது போன்ற அவரது புனைகதைகள் (சிறுகதைகள் , நாவல்கள் & கட்டுரைகள்) அவ்வப்போது வெளியான பத்திரிகை, சஞ்சிகைகளில் சிதறிக்கிடக்கின்றன. அவை தேடி எடுக்கப்பட்டு , ஆவணப்படுத்தப்படுவது அவசியம்.  இதுபோல் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படுவது  காலத்தின் கட்டாயம்.

இந்தச் சிறுகதை அளவில் சிறியது. கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பதற்கொப்ப காரமானது மட்டுமல்ல காத்திரமானதும் கூடத்தான். 

கதை இதுதான். கதையைக்கூறும் மனிதரின் வயது, பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும் கதை கூறப்படும் போக்கிலிருந்து நடுத்தர வயது மனிதராக இருக்கக்கூடும் என்ற உணர்வை அடைகின்றோம். அவர் அடைக்கலக் குருவிகளின் வாழ்க்கை முறையினால் கவரப்படுகின்றார்.  செல்வந்தன் , ஏழையென்று எவ்வித ஏற்றத்தாழ்வும் பாராமல் எங்கும் ,விரும்பிய இடத்தில் கூடு கட்டிச் சுதந்திரமாக அவை வாழ்வதாக அவர் உணர்கின்றார். அதனால் அக்குருவிகள் மீதான மதிப்பு அவருக்கு. அவரது அயலில் கூடு கட்டியிருந்த குருவிகளை ஈர்ப்பதற்காக, பெரு பெட்டியைக் கூடாகப் பாவிக்கும் வகையில் மாற்றங்கள் செய்து தன் வீட்டுச் சுவரில் மாட்டி வைக்கின்றார். ஆரம்பத்தில் அதனைக் கண்டு கொள்ளாத குருவிகள், பின் கண்டு, அதனைத் தம் கூடாக்கிக் கொள்கின்றன.

அ.செ.முருகானந்தன் 
ஆரம்பத்தில் சில நாள்கள் அவர் வைத்திருந்த பெட்டியைக் குருவிகள் கண்டுகொள்ளவேயில்லை. அதனைக்கூடத் தனக்கேயுரிய  நகைச்சுவை உணர்வுடன் விபரிக்கின்றார்: "நான் கட்டிவிட்டிருக்கும் வீடு இன்னும் கண்ணில் படவில்லை. ' டு லெட் போர்ட்' அதாவது வீடு காலி என்ரு அறிவித்தல் போடாதது ஒரு குறையோ என்று கூட ஒரு சமயம் எண்ணினேன்.  என்னுடைய இந்த குருவிக் கிறுக்கு தீர கடைசியாக ஒரு நாள் அந்தக் குருவிகளுக்கு நல்ல புத்தி வந்தது"

இச்சமயத்தில் அவர் மானுடரின் வாழ்க்கையையும் விமர்சனம் செய்கின்றார்: "இந்தக் குருவிகளுக்கு வீட்டுக்குள்ளே கூடு அமைத்துக் கொடுக்கும் மனிதன் அவைகளிடமிருந்து அதற்காக பிரதியுபகாரத்தை எதிர்பார்ப்பதில்லை  அல்லவா? ஆனால் அம்மாதிரி தயாளத்தை அவன் சக சகோதர புருஷனிடம் காட்டுகிறானா வென்றார் கிடையாது. அங்கே சுதந்திரக் கொள்ளை நடைபெறுகிறது.  பரஸ்பரம் ஒருவனை  யொருவன் கட்டுப்படுத்தி ஒருவனது சுயேச்சையை ஒருவன் பறிமுதல் செய்து  கீழ்ப்படிய வைக்கவே ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படுகிறான் - இது விந்தையல்லவா!"

இவ்விதம் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது வண்டிக்காரச் சின்னத்தம்பி வருகின்றான். பல நாட்களாகக் காணாமல் இருந்தவன் வந்திருக்கின்றான். களைத்துப்போய் வந்திருக்கின்றான். இதற்கிடையில் எங்கே அவன் பொலிடிக்சைக் கதைக்கத்தொடங்கி விடுவானோ என்றும் தனக்குள் எண்ணிக்கொள்கின்றான்.

இவ்விதம் எண்ணியபடியே அவன் வண்டிக்காரச் சின்னத்தம்பியிடம் கேட்கின்றான்:  "இந்த வேகாத வெய்யிலில் எங்கே அண்ணே  வெளிக்கிட்டே.  சவாரி ஒன்றும் அகப்படவில்லையோ?"  அதே சமயம் சின்னத்தம்பியின் மனத்தில் ஏதோ குமுறிக்கொண்டிருந்ததை அவனது முகபாவத்திலிருந்து உணர்கின்றான்.

அதற்குச் சின்னத்தம்பி கூறுவான்: "அந்நியருக்கு அடிமைப்பட்ட நாட்டவர்களுக்கு வெய்யிலென்றும்  மழையென்றும் இருக்கிறதா?  காந்தி மகான் பாடுபட்டது பொய்யல்ல தம்பி. உலகத்திலே அடிமைகளாயிருப்பது மகா பாபம் அப்பனே!" 

நடந்தது இதுதான்,. சின்னத்தம்பிக்கு அன்று பட்டணத்துக்குச் செல்ல ஒரு சவாரி கிடைத்திருந்தது. அதனை முடித்துவிட்டுத் திரும்பியவன் பார்வையில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த வீதியொன்று பட்டது. அவ்வழியால் சென்றிருக்கின்றான். அப்போது அவனை இடை மறித்த அந்நியப் படைவீரன் அவவழியால் அவன் செல்லக்கூடாது என்று திருப்பி அனுப்பியிருக்கின்றான்.  அதை சின்னத்தம்பி பின்வருமாறு விபரிக்கின்றான்: "எங்களுடைய தேசத்திலே  எங்களுடைய ரோட்டிலே எங்களுடைய வண்டியை ஓட்டுகிறதற்கு எங்கேயோ இருந்து வந்த பட்டாளத்துப் பூச்சி தடை உத்தரவு போடுகிறதாம். எப்படியிருக்கிறது?"

இவ்விதம் சுதந்திர ஆவேசம் பொங்கி நின்ற சின்னத்தம்பி அவனிடம் வேலை பார்த்த நடராசன் என்பவனை வேலையை விட்டு  நீக்கிவிட்டான். காரணம் - நடராசன் சின்னத்தம்பி கடந்த காலத்தில் வேலை செய்தவருக்கு வேலை செய்யாமல், சுதந்திரமாக முடிவெடுத்து இன்னுமொருவருக்கு வேலை செய்துவிட்டானாம்.  

இதனைக்கூறிவிட்டுச் சின்னத்தம்பி வெளியேறுகையில் வெளியே சென்றிருந்த அடைக்கலக்குருவிகள் சின்னத்தம்பியின்  தலையில் விழுந்தெழும்பிப் பறக்கின்றன.  

"'இதென்னடா சங்கடம்' என்று சின்னத்தம்பி தலையைத்   தடவிக்கொண்டு வெளியே கம்பி நீட்டினான்." 

இவ்விதம் கதை முடிகின்றது. வாசிப்பவர் முகங்களில் மெல்லிய புன்னகையினையும்  தூவி விடுகின்றது.

கதையில் பிடித்ததற்கு முக்கிய காரணம் கதையை அ.செ.மு பின்னிய விதம்தான். அடைக்கலக்குருவிகளின் சுதந்திர வாழ்க்கையை விபரிக்கும் கதாசிரியர் தொடர்ந்து வண்டிக்காரச்சின்னத்தம்பி மூலம் அடிமைப்பட்டுக்கிடந்த நாட்டு நிலைமையையும் விபரிக்கின்றார். அதே சமயம் சுதந்திர ஆவேசம் மிக்க சின்னத்தம்பி தன்னிடம் வேலை பார்த்த நடராசனை அவன் சுதந்திரமாக முடிவெடுத்து வேலை செய்ததற்காக வேலையை விட்டு நீக்கி விடுகின்றான்.

இக்கதை ஆங்கிலேயர் காலத்தில் நடப்பதாக புனையப்பட்டுள்ளது. அக்கால அடிமை நிலை, மகாத்மா காந்தியின் தாக்கம், அரசியல் பற்றிய பாமர மக்களின் மனப்போக்கு , சுதந்திரத்தின் முக்கியம், மனிதரின் இரட்டை மனப்பாங்கு எனப் பல விடயங்களை விபரிக்கும், விமர்சிக்கும் சிறுகதைதான் அ.செ.மு.வின் 'அடைக்கலக் குருவிகள்'

கதையை வாசிக்க - https://noolaham.net/project/456/45598/45598.pdf

No comments:

அ.செ.மு.வின் 'அடைக்கலக் குருவிகள்'

எழுத்தாளர் அ.செ.முருகானந்தனின் சிறுகதை இது.  'அடைக்கலக் குருவிகள்' என்பது தலைப்பு. 9.1.1949 வெளியான ஈழகேசரி பத்திரிகையிலுள்ளது. இது ...