அண்மையில் எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியன் சுனாமியின் ஆழிப்பேரலைக்குப்பதில் கடற்கோள் என்னும் சொல்லே சிறந்தது என்னும் கருத்துப்படப் பதிவொன்றினை இட்டிருந்தார். அதில் 'மணிமேகலையில் சாத்தனார் பயன்படுத்திய "கடல்கோள்" அதன் அசல் விஞ்ஞான விளக்க அர்த்தத்தமுள்ள ஒரு கலைச்சொல்(Technical word) கடல்பூகம்பம் போன்றவற்றால் ஏற்படும் சடுதியான கடல் பெருக்கு பட்டினத்துள் புகுந்து அழிப்பதையே அவர் குறிக்கிறார். 'என்றும் குறிப்பிட்டிருந்தார். அவரது அப்பதிவு பற்றிய என் எண்ணங்கள் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
முதலில் நட்சத்திரன் செவ்விந்தியன் அவர்கள் மணிமேகலையில் எங்கு இச்சொல் வந்துள்ளது என்பதைக் கூற முடியுமா? கடல் கொள, கடல் கொளும் என்று வந்துள்ளதை அவதானித்தேன். ஆனால் கடல் கோள் என்னும் சொல்லைக் காணவில்லை. தவற விட்டு விட்டேன் போலும். மணிமேகலையில் எங்கு அச்சொல் வருகின்றது என்பதைக்குறிப்பிடவும். தமிழில் கோள் என்பதற்கு பல கருத்துகளுள்ளன.அனைவரும் அறிந்த கருத்து உருண்டை வடிவம் .அதனால்தான் கிரகங்களைக் கோளம் என்றும் அழைக்கின்றோம். நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ் அகராதியில் கோள் என்பதற்கு இடையூறு, காவட்டம், புல், கிரகம், கொலை, கொள்ளல், கோட்பாடு, தீமை, நட்சத்திரம், நாள், பழமொழி, புறங்கூறல், பொய்வலி என்று அர்த்தங்கள் பல இருப்பதை அறிய முடிகின்றது. ஆனால் எங்கும் கோள் என்பதற்கு அலை என்னும் அர்த்தத்தைக் காண முடியவில்லை. எனவே கடல் கோள் என்பது கடலால் ஏற்படும் இடையூறு (கோள் என்பதற்கு இடையூறு என்னும் அர்த்தமும் உண்டு) என்னும் பொதுவான அர்த்தத்திலேயே பாவிக்கப்பட்டுள்ளதாகக் கருதுகின்றேன்.


