Tuesday, June 3, 2025

இலக்கணமும், இலக்கண மீறல்களும், வழக்கும்!


தமிழ் இலக்கணம் தெரியாத பலர் இணையத்தில்  நிறைந்து கிடக்கின்றார்கள். வழக்கில் இலக்கண முரண்பாடுகள் நிறைய உள்ளன. வழக்கில் பாவிக்கப்படுவதால் அதுவே சரியென்று நினைத்து விடுகின்றோம். வழக்கில் நீண்ட காலமாகப் பாவிப்பதால் அவற்றை ஏற்றுக்கொள்வதில் எனக்குத் தயக்கமில்லை. 

ஆனால் ஒருவர் அம்முரண்பாடுகளை நீக்கி , இலக்கணம் மீறாமல் பாவிக்கும் சமயங்களில், அது உண்மை இலக்கணம் என்பது தெரியாமல் சரி, பிழை கண்டு பிடிக்க வந்து விடுகின்றார்கள். இதை என்னவென்று சொல்வது?

உதாரணத்துக்குக் கைமாறு, மெய்ஞானம், விஞ்ஞானம் என்று வழக்கில் பாவித்து வருகின்றோம். உண்மையில் இது இலக்கணரீதியாகப் பிழையென்றாலும், வழக்கில் நீண்ட காலமாகப் பாவிக்கப்பட்டு வருவதால், இவற்றை ஏற்பதில் எனக்குத் தயக்கமில்லை. உண்மையில் நானும் கூட விஞ்ஞானம் என்றுதான் பாவித்து வருகின்றேன். ஆனால் சில சமயங்களில் இலக்கணம் மீறாமலும் பாவிக்க நான் விரும்புவதுண்டு. 

அண்மையில் மெய்ம்மறந்து என்று என் முகநூற் பதிவொன்றில் பாவித்திருந்தேன். இலக்கணரீதியாக மெய்ம்மறந்து என்று பாவிக்க வேண்டுமென்றாலும், நானும் வழக்கமாக மெய்மறந்து என்றுதான் பாவிப்பதுண்டு. ஆனால் மேற்படிப் பதிவில் மெய்ம்மறந்து என்று பாவித்திருந்தேன். அவ்விதம் ஒரு காட்சியில்  என்னை இழந்திருந்தததன்  ஆழத்தை, அளவினை மெய்ம்மறந்து என்னும் உச்சரிப்பு காட்டுவதாக எனக்குத் தென்பட்டதால் அவ்விதம் பாவித்திருந்தேன். 

இலக்கணம் மீறல்கள் பற்றிய உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள். 

இவ்விலக்கண விதி பற்றிய ஆறுமுகநாவரின்  'இலக்கணச் சுருக்கம்' நூலின் பக்கமொன்றினையும் கீழே பகிர்ந்திருக்கின்றேன்.



நயாகரா நீர்வீழ்ச்சிச் சாரலில் மெய்ம்மறந்து நின்றபோது...


எனக்கு முன்னிரவுப் பொழுதொன்றில் நயகாரா நீர்வீழ்ச்சியை இரசிப்பதில் பெரு விருப்புண்டு.  நேற்று அத்தகையதொரு சந்தர்ப்பம் வாய்த்தது. 

போக்குவரத்து ஆரவாரம் அற்ற தருணமொன்றில் , நீர்வீழ்ச்சிச் சாரலை, வர்ணங்களில் கணத்துக்குக் கணம் நிறம் மாறும் நீர் வீழ்ச்சியின் அழகை, அவ்வர்ண ஒளியை ஊடறுத்து ஒளித்துண்டுகளாக ஒளிர்ந்து மறையும் கடற்பறவைகளின் சிறகடிப்புகளை , உலக மானுடர் பலரின் ஒன்று கூடலை, வாண வேடிக்கையின் வர்ணஜாலத்தின் பேரழகினை  இரசிப்பதென்றால் அது இத்தகைய பொழுதுகளில்தாம்.

அத்தகையதொரு பொழுதில் எடுத்த புகைப்படங்கள் சில இவை. கண்டு களியுங்கள்.


 

Sunday, June 1, 2025

'புலம்பெயர் தமிழ்ப் படைப்புகள் - அடையாளத்திற்கான தேடல்' - கலாநிதி சு.குணேஸ்வரன்


புகலிடம் நாடிப் புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர் இலக்கியம் பற்றி ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெற்றவர் கலாநிதி சு.குணேஸ்வரன். திறனாய்வு, கவிதை என அவரது இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது. புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியவர். 
 
அண்மையில் 'ரொரன்றோ தமிழ்ச் சங்க'த்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற , இணைய வழிக் கலந்துரையாடலில் 'புலம்பெயர் தமிழ்ப் படைப்புகள் - அடையாளத்திற்கான தேடல்' என்னும் தலைப்பில் அவர் ஆற்றிய உரை இது. இதனை 'இலக்கியவெளி டிவி' யு டியூப் சானலில் பகிர்ந்திருந்தார்கள். இதன் முக்கியத்துவம் கருதி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
 

யாழ் பொதுசன நூலக நினைவுகள்....


ஜூன் 1, 1981. யாழ் பொது சன நூலகம் எரிக்கப்பட்ட நாள். யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம். நாகரிகத்தின் உச்சியிலிருப்பதாகக் கூறிப் பெருமிதமுறும் மனித இனமே நாணித்தலை குனிய வேண்டிய தினம். நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதிகளெல்லாம் நெருப்போடு நெருப்பாக அழிந்தே போய்விட்டன. இவற்றின் அழிவினைத் தாங்க மாட்டாத பாதிரியார் ஒருவரும் (தாவீது அடிகள்) மாரடைப்பால் இறந்ததாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். 

 பொதுவாக  அவ்வப்போது யாழ் பொதுசன நூலகம் பற்றிய நினைவுகள் தோன்றுவதுண்டு. இந்த நூலகத்துடனான எனது உறவு பின்னிப்பிணைந்ததொன்று. என்  மாணவப்பருவத்துத் தோழர்களில் முக்கியமான தோழனாக விளங்கிய நூலகம். பன்முகப்பட்ட அறிவினை அள்ளி வழங்கிய சிறந்த நண்பன். எவ்வித எதிர்பார்ப்புகளுமற்று அதனை வாரி வழங்கிய நண்பன். யாழ் பொது நூலகத்தை எண்ணியதும் எப்பொழுது முதன் முதல் அதனுடனான எனது தொடர்பு ஏற்பட்டது என்று எண்ணிப்பார்க்கின்றேன்.

என் பால்யகாலத்தில் நான் என் ஆரம்பக் கல்வியை வவுனியா மகாவித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தேன். அதன் பின்னர் எட்டாம் வகுப்பிலிருந்து கல்விப்பொதுத்தராதர உயர்தர வகுப்பு வரை யாழ் இந்துக்கல்லூரியில் தொடர்ந்தது. வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் பாடசாலை விடுமுறையின்போது என் அம்மாவின் சகோதரியொருவரின் பிள்ளைகள் வவுனியா வருவார்கள். அல்லது நாம் யாழ்ப்பாணத்துக்கு ஆச்சி வீடு செல்வோம். அவ்விதம் செல்கையில் அக்கா முறையிலான எனது ஒன்று விட்ட சகோதரியொருவர் , என்னைவிட சுமார் ஏழு வயது மூத்தவர், யாழ் நூலகத்துக்கு செல்கையில் என்னைத் துணைக்கழைத்துச் செல்வார். காற்சட்டையும் , சட்டையுமாக நானும் அவருடன் செல்வேன். அக்காலகட்டத்தில் நான் பொதுவாக நடக்கும்போது மிகவும் விரைவாக நடந்து செல்வேன். என்னைத் துணைக்கழைத்துச் செல்லும் அக்காவுக்கோ என் நடை வேகத்துடன் ஈடு கட்டி நடப்பதற்குச் சிரமமாயிருக்கும். இருந்தாலும் அவரும் இயலுமானவரையில் ஈடு செய்தபடி என்னுடன் நடந்து வருவார். ஆயினும் அவ்விதம் நடந்து வருகையில் 'ஏய் என்னடா இந்த நடை நடக்கிறே. மெதுவாப் போடா. மூச்சு வாங்குது 'என்னும் அர்த்தப்பட  வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டுதான் கூட நடந்து வருவார். அவருடன் யாழ் நூலகத்துச் சென்றதுதான் முதற் தடவை. 

Saturday, May 31, 2025

"இணையக் காப்பக'த்தில் எனது ஆக்கங்கள்!


வணக்கம் நண்பர்களே! இணையக் க் காப்பகத்தில் (Archive.org) என்னுடைய பல படைப்புகள் , பதிவுகள் இணைய இதழில் வெளியான படைப்புகளின் தொகுப்புகள் உட்பட மேலும் பல படைப்புகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
 
இணையக் காப்பகத்தில் சகல வகையான குறுவட்டுகள், இறுவட்டுகள், நூல்களின் பிடிஃப் பிரதிகள் என பலவற்றையும் ஆவணப்படுத்த முடியும். படுத்துங்கள். பயனடையுங்கள்.பலர் பயனடைவார்.
 

Friday, May 30, 2025

பிரவாதம்: எஸ்.வி.ராஜதுரையின் 'கூகியும் ஆபிரிக்க இலக்கியமும்'


பேராசிரியர் எம்.ஏ. நுஃமானை ஆசிரியராகவும், என்.சண்முகரத்தினம், சித்திரலேகா மெளனகுரு, செல்வி.திருச்சந்திரன் ஆகியோர் உள்ளடங்கிய ஆசிரியர் குழுவைக்கொண்டதாகவும் வெளியான சஞ்சிகையே 'பிரவாதம்'.  அரையாண்டுச் சஞ்சிகையான இதன் தொகுதி 3 ஜனவரி - ஜூன் 2003இல் வெளிவந்தது. பிரவாதம் சமூக, விஞ்ஞானிகள் சங்கத்தால் வெளியிடப்பட்ட சஞ்சிகை.

மேற்படி தொகுதி 3   கூகி வா தியாங்கோ  சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. சிறப்பிதழ் என்று பெயரிட்டிருக்காவிட்டாலும் அவ்விதமே அவரைப்பற்றிய கட்டுரைகள், அவரது எழுத்துகள் ஆகியவற்றை உள்ளடக்கி வெளிவந்துள்ளது.  கூகி வா தியாங்கோ பற்றியும், அவரது காலனியாதிக்கம், நவீன காலனியாதிக்கம் ஆகியவற்றுக்கான எதிர்ப்பிலக்கியம் பற்றியும், நவீன காலனியாதிக்கம் எவ்விதம் ஆபிரிக்காவைக் கூறு போட்டுத் தன் நலன்களைப் பேணுகின்றது என்பது பற்றியும், காலனியாதிக்க ஆதிக்கத்தின் மொழிகள் எவ்விதம் அடிமைப்படுத்தப்படும் நாடுகளின் மீதான ஆதிக்கத்தில் பங்காற்றுகின்றன என்பது பற்றியும் நல்லதோர் அறிமுகத்தைத் தரும் சிறப்பிதழாக மேற்படி தொகுதி 3 இதழ் வெளிவந்துள்ளது.

இவ்விதழில் கலை, இலக்கியத் திறனாய்வாளரும், எழுத்தாளருமான எஸ்.வி.ராஜதுரையின் 'கூகியும் ஆபிரிக்க இலக்கியமும்' கட்டுரை முக்கியமான சிறப்புக் கட்டுரை. கூகி வா தியாங்கோ பற்றியும், ஆபிரிக்க இலக்கியம் பற்றியும், காலனித்துவ, நவீன காலனித்துவத்தின் ஆதிக்கம் பற்றியும், அவற்றின் மொழி எவ்விதம் தம் ஆதிக்கத்தை நிலை நாட்டப் பாவிக்கப்படுகின்றது என்பது பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

இக்கட்டுரையையும், கூகி வா தியாங்கோவின் எழுத்துகளையும் உள்ளடக்கிய மேற்படி இதழை வாசிக்க - https://noolaham.net/project/81/8021/8021.pdf

 

அஞ்சலி: எழுத்தாளர் கூகி வா தியாங்கோ மறைந்தார்.


எழுத்தாளர் கூகி வா தியாங்கோ மறைந்த செய்தியினை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். 'அழாதே, குழந்தாய்!' (Weep not Child), 'இடையிலுள்ள நதி' (The River Between) , 'ஒரு கோதுமைத் தானியமணி' ( a Grain of Wheat) , 'இரத்த இதழ்கள்" ( Petals of Blood), 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' (Devil on the Cross ) ஆகியவை இவரது முக்கியமான நாவல்கள்.
 
ஆரம்பத்தில் ஆங்கில மொழியில் எழுதியவர் அதை நிறுத்தி விட்டுத் தன் தாய்மொழியில் எழுத ஆரம்பித்தவர். காலனித்துவவாதிகளின் மொழிகளில் எழுதுவதில் காலனித்துவச் சிந்தனைகளும், அடையாளங்களும், மரபுக் கூறுகளும் உள்ளடங்கி இருக்கும் என்று நம்பியவர். காலனித்துவ ஆதிக்கம் காலனித்துவாதிகளின் மொழிகளை முக்கியப்படுத்துவதாகக் கருதினார். அதனால்தான் தாய்மொழிகளில் படைப்புகள் எழுதப்பட வேண்டும். அவை வேண்டுமானால் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படலாம் என்று கருதியவர். 
 
நாவல் ,நாடகம், கட்டுரை என இவரது இலக்கியப் பங்களிப்பு பன்முகத்தன்மை மிக்கது. பேராசிரியரான இவர் வாழ்க்கை நிறைவானது. கொண்டாடப்பட வேண்டுயது.
 
கூகி வா தியாங்கோ  நினைவாக அவரது நேர்காணலொன்றுக்கான யு டியூப் காணொளியையும் பகிர்ந்து கொள்கின்றேன்.
 
Talk Africa: A Conversation with Ngugi Wa Thiong’o - https://www.youtube.com/watch?v=kao7D04M1sA

வ.ந.கிரிதரனின் குரலில் பாரதியாரின் 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!'

வ.ந.கிரிதரனின் குரலில் பாரதியாரின்  'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!' இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI  டிஜிட்டல் ஓவியம்: கூகுள் ந...