Monday, November 16, 2020
கணையாழியில் வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்!
Wednesday, October 28, 2020
பதிவுகள் 25 கட்டுரைகள் (தொகுதி மூன்று) மின்னூலாக இணையக் காப்பகத்தில்...
'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'பதிவுகள் இணைய இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளின் முதலாவது தொகுதி தற்போது மின்னூலாக இணையக் காப்பகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் இணைய இதழில் வெளியான பல்வகைப்படைப்புகளும் (கதைகள், கட்டுரைகள், கவிதைகள் & ஆய்வுக் கட்டுரைகள் போன்ற) மின்னூல்களாக தொடந்தும் ஆவணப்படுத்தப்படும்.
இதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்), கட்டுரைகளின் இரு தொகுதிகள் (82 கட்டுரைகள்) & 27 ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவை இணையக்காப்பகத்தில் (archive.org) மின்னூல்களாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
அவ்வகையில் வெளியாகும் மூன்றாவது கட்டுரைத்தொகுதி இத்தொகுதி. இதுவரை வெளியான மூன்ற கட்டுரைத் தொகுதிகளிலும் 108 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மின்னூலை வாசிக்க, பதிவிறக்க: https://archive.org/details/pathivukal_collections_3_toc
இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள படைப்புகளின் விபரங்கள் வருமாறு:
Tuesday, October 27, 2020
பதிவுகள் 27 ஆய்வுக் கட்டுரைகள் (தொகுதி ஒன்று) - வ.ந.கிரிதரன் -
இதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்), கட்டுரைகளின் இரு தொகுதிகள் (82 கட்டுரைகள்) ஆகியவை இணையக்காப்பகத்தில் (archive.org) மின்னூல்களாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
மின்னூலை வாசிக்க, பதிவிறக்க: https://archive.org/details/pathivukal_research_volume1/mode/2up
பதிவுகள் 27 ஆய்வுக் கட்டுரைகள் (தொகுதி ஒன்று) மின்னூலில் இடம் பெற்றுள்ள படைப்புகள் பற்றிய விபரங்கள்:
Saturday, October 24, 2020
பதிவுகள் கட்டுரைகள் இரு மின்னூல் தொகுதிகளாக (82 கட்டுரைகள்)
'பதிவுகள்' இணைய இதழில்
ஆயிரக்கணக்கில் படைப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றிலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை ஆவணப்படுத்த வேண்டியது அவசியம்.
அதனடிப்படையில் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான ஆக்கங்கள் தொகுப்புகளாக
வெளிவரவேண்டியது அவசியம். தற்போதுள்ள சூழலில் அவை மின்னூல்களாகவாவது
ஆவணப்படுத்தப்பட வேண்டும். அவ்வடிப்படையில் இத்தொகுப்புகள்
ஆவணப்படுத்தப்படுகின்றன.
'பதிவுகள்' இணைய இதழில் வெளியான
ஆரம்பகாலப் படைப்புகள் இவை. 'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்ப கால இணைய
இதழ்களிலொன்று. முரசு அஞ்சல், திஸ்கி எழுத்துரு, ஒருங்குறி எழுத்துரு என்று
பல்வேறு எழுத்துருக்களில் படைப்புகள் வெளியாகியுள்ளன. பாமினி போன்ற
எழுத்துருக்களில் அனுப்பப்பட்ட படைப்புகளை திஸ்கிக்கு, ஒருங்குறிக்கு
உருமாற்றுகையில் ஏற்படும் தவறுகள், தட்டச்சுப் பிழைகள் என இவற்றில் இன்னும்
பல எழுத்துப்பிழைகள் இருக்கலாம். இருக்கும். அவற்றை வாசிப்பவர்கள்
அறியத்தாருங்கள். அடுத்தடுத்த பதிப்புகளில் அவை திருத்தப்படும்.
'பதிவுகள்' சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்) மின்னூல்களாக!
'பதிவுகள்' சிறுகதைகள் (தொகுதிகள் 1, 2 & 3) : பதிவுகள் இணைய இதழில் ஆரம்பக் காலகட்டத்தில் வெளியான சிறுகதைகளின் இரு தொகுதிகள் மின்னூல்களாக வெளியாகியுள்ளன. 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான ஏனைய சிறுகதைகளும் எதிர்காலத்தில் மின்னூற் தொகுதிகளாக வெளியிடப்பட்டு ஆவணப்படுத்தப்படும். இத்தொகுப்புகளை இணையக் காப்பகம் (https://archive.org) தளத்தில் வாசிக்கலாம். முதற் தொகுதியில் 55 சிறுகதைகளும், இரண்டாம் தொகுதியில் 27 சிறுகதைகளும் , மூன்றாம் தொகுதியில் 36 கதைகளுமாக மொத்தமாக 118 சிறுகதைகள் அடங்கியுள்ளன.
Tuesday, July 14, 2020
வ.ந.கிரிதரன் மொழிபெயர்த்த ஒன்பது கவிதைகள்!
(Walt Bresette நினைவாக)!
ஆங்கிலத்தில்: அல் ஹண்டர் (Al Hunter) - கனடியக் கவிஞர் | தமிழில்: வ.ந.கிரிதரன்!
1
நிலவு வெளிச்சத்திற்குக்
கீழாக
விண்ணில்
எனது கனவுக் குதிரைகள்
தெற்கு நோக்கி
ஓடும்.
தெற்கு: பயணம் இங்குதான்
முடியும், அத்துடன்
தெற்கு: பயணம் இங்குதான்
மீண்டும் தொடங்கும் -
ஆத்மாக்களின்
பயணத்தில்.
தெற்காகச் செல்லும்
அடிச்சுவட்டில்
செல்லுமிடம் தெரியாமல்
ஒருவேளை
மூடப்பட்ட நதிப்
பள்ளத்தாக்கு நோக்கி
அல்லது மறைந்திருக்கும்
மலைப்பாறைகளினுச்சியின்
மேலாகச் செல்லும்
கிளைவிட்டுச் செல்லும்
பாதைகளுமுண்டு.
குதிரைகள் அங்கு
போவது கிடையாது.
Thursday, July 2, 2020
கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து / திராவிடக் கட்டடக்கலையும்! - வ.ந.கிரிதரன் -
Thursday, June 25, 2020
கோப்பாய்க் கோட்டையின் பழைய கோலம்! - வ.ந.கிரிதரன் -
அக்கட்டுரை கீழே:
வரலாற்றுச் சுவடுகள்: 'வானம்பாடியின் ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழ்' (ஜனவரி 1982) - வ.ந.கிரிதரன் -
வரலாற்றுச் சுவடுகள்: மறுமலர்ச்சிக்காலம் இலக்கியச் சிறப்பிதழ் - வ.ந.கிரிதரன் -
'குடிவரவாளன்': புகலிடம் நாடிய இலங்கைத்தமிழ் அகதியொருவனின் நியுயார்க் மாநகரத்து வாழ்வை விபரிக்கும் நாவல் - வ.ந.கிரிதரன் -
கவிதை: மாநகரத்துப் பெருமழை! - வ.ந.கிரிதரன்
இருளைக்கிழித்தொரு மின்னலின் கோடிழுப்பு.
இடியின் பேரொலி.
யன்னலினூடு பார்க்கையில் பேசாத்திரைப்படமாய்
மழைக்காட்சி விரிகிறதெதிரே.
இழந்தது உறவுகள் , உருண்டு புரண்ட மண்
மட்டுமல்ல,
இதுபோன்ற இயற்கை நிகழ்வுகளையும்தாமென்று
உணர்ந்தது உள்ளம்.
இழந்ததையெண்ணிக் கழிவிரக்கமா?
இன்னுமா?
அன்று மட்டுமல்ல,
இன்று மட்டுமல்ல,
என்றுமே இருக்கப்போகும்
உணர்வு இதுவென்றும்
உணர்ந்தேன்.
உணர்வுகளுக்கு அடை போட முடியுமா?
எதற்காக? யாருக்காக?
(பதிவுகள்.காம்) 2020: கோப்பாய்ப் பழைய கோட்டையின் இன்றைய கோலம்! - வ.ந.கிரிதரன் -
Friday, June 19, 2020
கவிதை: கனவு நிலா - வ.ந.கிரிதரன்
மறந்திருந்தேன். அதன் தண்ணொளியில்
சுகம் கண்டிருந்தேன்.
நனவுமேகங்களே உமக்கேனிந்தச்
சீற்றம்? எதற்காக அடிக்கடி
எழில் நிலாவை மூடிச்செல்ல
முனைகின்றீர்கள்?
நீங்கள் மூடுவதாலென்
கனவுநிலாவின் எழில்
மறைவதில்லை.
நினைவுவானில்
நீந்திவரும் நிலவை
யாரும் மூடிட முடியாது.
நனவுமேகங்களே!
உம்மாலும்தாம்.
பார்க்கும் ஒரு கோணத்திலும்மால்
மூட முடிவதுபோல் தெரிவதெல்லாம்
முழு உண்மையல்ல.
பின்னால் மறுகோணத்தில்
நனவுவானில் நடைபயிலும்
முழுநிலவின் நடையழகை
யார்தான் தடுக்க முடியும்.
இரசிப்பதை யார்தான் தடுக்க முடியும்.
கனவுநிலவினெழிலில்
களித்திருக்குமெனை யார்தானிங்கு
தடுக்க முடியும்?'
வரலாற்றுச் சுவடுகள்: நல்லூர் மந்திரிமனை - வ.ந.கிரிதரன் -
'மந்திரிமனை' என்னும் இக்கட்டடம் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான வரலாற்றுச் சின்னங்களிலொன்று. இக்கட்டடத்தின் முகப்பிலுள்ள தகவல்களின்படி இக்கட்டடம் 1890இல் கட்டப்பட்ட விபரமும், ஒரு குடும்பத்துக்குரியதென்பதும் தெரிய வரும். ஆனால் இக்கட்டடம் முக்கியத்துவம் பெறுவது பின்வரும் காரணங்களினால்:
Wednesday, May 20, 2020
பத்துநாட்கள் - பத்து திரைப்படங்கள் (1): - சத்யஜித் ரேயின் 'சாருலதா' - வ.ந.கிரிதரன் -
முகநூலில் பத்து நாட்களுக்குத் தொடர்ச்சியாகப் பத்து திரைப்படங்களை பதிவிட்டு ஞாபகப்படுத்த வேண்டும் என்று நண்பர் பரதன் நவரத்தின் கோரிக்கை விடுத்திருந்தார். அதனையேற்று நாளொன்றுக்கு ஒவ்வொரு திரைப்படம் பற்றிய விபரங்களைப் பதிவு செய்து வருகையில் ஏன் அத்திரைப்படங்களைப் பதிவுகள் வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தக் கூடாது என்று தோன்றியது. இத்தருணத்தை இயக்குநர் சத்யஜித் ரேயின் திரைப்படங்களில் யு டியூப்பில் கிடைக்கும் அனைத்தையும் பார்ப்பதற்கு முடிவு செய்தேன். அவ்வகையில் முதலாவதாக அறிமுகம் செய்யும் திரைப்படம் அவரது 'சாருலதா' திரைப்படம்.
நல்லதொரு திரைப்படம் எவ்வகையில் அமைந்திருக்க வேண்டுமென்பதற்கு உதாரணங்களாக அமைபவை அவரது திரைப்படங்கள். திரைப்படமொன்றின் இயக்கம், கதை, ஒளிப்பதிவு, நடிப்பு , திரைக்கதை & இசை இவை யாவுமே எவ்விதம் அமைய வேண்டுமென்பதற்கு உதாரணங்களாக அமைபவை அவரது திரைப்படங்கள். பாத்திரங்களுகேற்ற சிறந்த , பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதுடன் அவர்களை எவ்விதம் இயக்க வேண்டுமென்பதை இன்றுள்ள இயக்குநர்கள், சினிமாத்துறைப் பல்வகைக் கலைஞர்களும் அறிந்துகொள்ள வேண்டும்.
Tuesday, April 21, 2020
பதிவுகள் இணைய இதழ்
Wednesday, March 18, 2020
அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'யூத -அரபு உறவு பற்றி பேட்ரண்ட் ரஸல்' என்னும் 'இன்ஸான்' பத்திரிகைக் கட்டுரை பற்றி..
இக்கட்டுரை இன்ஸான் பத்திரிகையில் இரண்டு பகுதிகளாக இரு வாரங்கள் வெளியாகியுள்ளது. இக்கட்டுரை பற்றி அந்தனி ஜீவா அவர்கள் தினகரன் பத்திரிகையில் அ.ந.கந்தசாமி பற்றி எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத்தொடரில் (தினகரன் வாரமஞ்சரியில் 12-02-1984 அன்றிலிருந்து தொடராக வெளிவந்த கட்டுரைத் தொடர்) "அ.ந.க. அறிஞர் பெர்னாட்ஷா முதல் பேரறிஞர் பெட்ரண்ட் ரஸ்ஸல் வரை அறிந்து வைத்திருந்தார். பெட்ரண்ட் ரஸ்ஸலின் 'யூத அராபிய உறவுகள்' என்ற கட்டுரைத் தொடர் ஒன்றை 'இன்ஸான்' வார இதழில் தொடர்ந்து எழுதினார். " என்று கூறுவார். உண்மையில் பெட்ரண்ட் ரஸலின் யூத அராபிய உறவுகள் என்பதற்குப் பதிலாக 'யூத அரபு உறவு பற்றி பேட்ரண்ட் ரஸல் ' என்றிருக்க வேண்டும். 'பெட்ரண்ட் ரஸ்ஸலின் 'யூத அராபிய உறவுகள்' பேட்ரண்ட் ரஸலின் 'யூத அராபிய உறவுகள்' என்னுமொரு கட்டுரை பற்றிய அ.ந.கந்தசாமியின் கட்டுரையாக அதனை விளங்கிக்கொள்ளும் அபாயமுண்டு.
Saturday, March 14, 2020
உள்ளங் கவர்ந்த கானங்கள்: "வாழ்க்கை ஒரு ஒட்டகம்; நொண்டி ஒட்டகம்"
Friday, March 13, 2020
காற்றினிலே வரும் கீதம்: "எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று"
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு " - கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்துவுக்குத் தேசிய விருது பெற்றுக்கொடுத்த இன்னுமொரு பாடல். ஒரு கவிஞரின் வரிகளுக்கு விருதுகளைப்பெற்றுக் கொடுப்பவை அவரது வரிகள் மட்டுமல்ல. அதனைப்பாடிய பாடகர்களின் குரல்கள், இசை, ஒளிப்பதிவு & நடிப்பு எல்லாமேதாம்.
இப்பாடலினை இருவர் பாடியிருந்தாலும் , பாடலின் அதிக பகுதியை எடுத்துக் கொண்டிருப்பவர் பாடகி சின்மயி. சின்மயி தற்போதுள்ள பாடகிகளில் மிகச்சிறந்த பாடகியாக நான் உணர்வதுண்டு. அதற்குக் காரணம் வரிகளை உள்வாங்கி, உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தும் குரல் அவருடையது. கேட்டுப்பாருங்கள். நெஞ்சைக் கிழித்துக்கொண்டு அதன ஆழத்துக்கே செல்லும் குரல் சின்மயினுடையது.
முனைவர் ஆர்.தாரணியின் கட்டுரையொன்று பற்றி... வ.ந.கிரிதரன் -
இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'An Immigrant' (லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது) நாவலைத் தனது புகலிட இலக்கியங்கள் பற்றிய பிரிவுக்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேர்வு செய்திருந்த விடயத்தினை இணையம் வாயிலாக அறிந்துள்ளேன். குடிவரவாளன் நாவல் ஆங்கிலத்தில் 'An Immigrant' என்னும் தலைப்பில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' ('சுயசரிதைத் தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை') - முனைவர் ஆர்.தாரணி; தமிழில்: வ.ந.கிரிதரன் - 'குடிவரவாளன்' கனடிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனுக்குப் புனைகதையைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய பாய்ச்சல். இந்நூலானது அந்நிய நாடொன்றில் எல்லா வகையான முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில் , இருப்புக்கான இன்னல்களை எதிர்கொள்ளும் ஒரு மனிதனைப் பற்றிக்கூறுவதால் மிகவும் கவனத்துடனும் கருத்தூன்றியும் வாசிக்க வேண்டிய ஒன்று, இக்கதையானது ஒவ்வொருவரினதும் இதயத்தையும் எழுச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. இக்கதையின் நாயகனான இளங்கோ என்னும் மனிதனின் தப்பிப்பிழைக்கும் போராட்டத்தை அதிகமாக இப்படைப்பு வலியுறுத்தியபோதிலும், தற்போதும் அனைத்துலகத்தையும் சீற்றமடையைச்செய்துகொண்டிருக்கும், மிகவும் கொடிய ,ஈவிரக்கமற்ற ஶ்ரீலங்காவின் இனப் படுகொலையினைத் தாங்கிநிற்கும் பலமான வாக்குமூலமாகவும் விளங்குகின்றது. கதாசிரியர் வ.ந.கிரிதரன் தன் சொந்த அனுபவங்கள் மூலம் எவ்விதம் தமிழ் மக்கள் சிங்களக்காடையர்களின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இலங்கையில் நடைபெற்ற 1983 ஜூலைக் இனக்கலவரத்தில் தம் உயிர்களை, உடமைகளை, நாட்டை மற்றும் மானுட அடையாளத்தைக்கூட இழந்த மக்களுக்கான தனித்துவம் மிக்க அஞ்சலியாகவும் இந்நூல் இருக்கின்றது. நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில் , கதாசிரியர் , கலவரத்தினுள் அகப்பட்ட இளங்கோ என்னும் இளைஞனின் நிலையினை உயிரோட்டத்துடன் விபரிக்கின்றார். தன் சொந்த மண்ணில் இனத்துவேசிகளால் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக உணரும் இளங்கோ அந்தப்பூதங்களிலிருந்து தன்னால் முடிந்த அளவுக்குத்தப்புவதற்கு முயற்சி செய்கின்றான். இப்படைப்பானது கலவரத்தைப்பற்றிய , இளங்கோ என்னும் மனிதனின் பார்வையில் , நெஞ்சினை வருத்தும் வகையிலான ஆசிரியரின் விபரிப்பாகும்.
Wednesday, March 4, 2020
காலத்தால் அழியாத கானங்கள்: "பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர"
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்....
நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே" - கவிஞர் மேத்தா
அவ்வப்போது எழுத்தாளர்கள் திரையுலகையும் எட்டிப்பார்க்கத் தவறுவதில்லை; தடம் பதிக்கத்தவறுவதில்லை. கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணாத்துரை, சுஜாதா, ஜெயமோகன், பாலகுமாரன், விந்தன் என்று பலரைக்குறிப்பிடலாம். அவர்களில் கவிஞர் மேத்தாவும் ஒருவர். ரஜனிகாந்த்தின் 'வேலைக்காரன்' திரைப்படப்பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது. 'உதயகீதம்' திரைப்படப்பாடலான இப்பாடலையும் அவர்தான் எழுதியிருக்கின்றார்.
காலத்தால் அழியாத கானங்கள்: "மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே"
இப்பாடலை எப்பொழுது கேட்டாலும் எனக்குக் காற்சட்டையும், சேர்ட்டுமாகப் பால்ய காலத்தில் வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டம் நினைவுக்கு வரும். உண்மையில் இப்பாடலை முதலில் கேட்டபோது நான் நண்பர்களுடன் வவுனியா நகரசபை மைதானத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். பாடசாலை முடிந்து வீடு திரும்புகையில் பல்வேறு வழிகளில் திரும்புவது வழக்கம். அதிலொரு வழி நகரசபை மண்டபத்துக்குப் பின்புறமாக , புகையிரத இருப்புப்பாதைக்குமிடையில் மரங்கள் நிறைந்திருந்த பகுதியினை ஊடறுத்துச் சென்ற பாதை. அப்பாதை வழியாக காமினி வித்தியாயலயத்துக்கு முன்புறமாகச் சென்று கொண்டிருந்த மன்னார் வீதிக்கு வர முடியும்.
கணையாழி: 'விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை' - வ.ந.கிரிதரன் -
இதுவரை கணையாழி சஞ்சிகையில், தொகுப்பு நூலில் வெளியான எனது ஏனைய படைப்புகள்:
1. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் (இதே தலைப்பில் வீரகேசரி வாரவெளியீட்டில் ஏறகனவே எனது கட்டுரையொன்று வெளிவந்திருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரை அதே பொருளை
மையமாக வைத்துப் புதிதாக எழுதப்பட்ட கட்டுரை.)
2. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன். (சூழல் பற்றிய கட்டுரை).
3. கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்
4. 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
5. ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்- (கணையாழி மே 2012)
6. கணையாழி அக்டோபர் 2019: தமிழ்நதியின் பார்த்தீனியம் - வ.ந.கிரிதரன் -
7. கணையாழி செப்டம்பர் 2017: கட்டுரை - 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -
8. கணையாழி நவம்பர் 2019: ஆஷா பகேயின் பூமி பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள். - வ.ந.கிரிதரன் -
Wednesday, February 26, 2020
கவிதை: வேற்றுலக வாசியுடனோர் உரையாடல் (1) - வ.ந.கிரிதரன் -

ஊர்துஞ்சும் நள்ளிரவு.
விரிவெளி பார்த்திருந்தேன்.
இரவுவான்!
புட்களற்ற மாநகரின் நள்ளிரவு
நத்துகள் ஒலியேதுமில்லை. ஆந்தைகளின் அலறல்கள் எங்கே?
வெளவால்கள்தம் சலசலப்புமில்லை.
வாகன இரைச்சல் மட்டும்
சிறிது தொலைவில்
சிறிய அளவில்.
உப்பரிகையின் மூலையில்
தூங்கும் மாடப்புறாக்களின்
அசைவுகள்
அவ்வப்போது கேட்கும் சூழல்.
விரிவெளியில் சுடரும் ஒளிச்சிதறல்கள்
பல்வகை எண்ணங்கள் நெஞ்சில்.
எங்கோ ஒரு கோடியில் இங்கு
நான்.
அங்கு
நீ!
எங்கே?
சாத்தியமுண்டா?
Tuesday, February 25, 2020
வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (6): "அறிந்தால் அறிவியடி அருவியே!"
கண்ணம்மா! அலைக்கூம்புக்குள்
விரிந்திருக்கின்றதடி நம்காலவெளி.
ஆம்!
கூம்புக்காலவெளியில் நாம்
கும்மாளமடிக்கின்றோமடி.
கூம்புக்கும் வெளியேயொரு யதார்த்தம்.
நாமறியாக் காலவெளி அது கண்ணம்மா!
கண்ணம்மா! நீ இவைபற்றி என்றாவது
கருத்தில் கொண்டதுண்டா? கூறடி!
இருப்புப்பற்றி இங்கு நினைப்பதிலுண்ட
இன்பம் வேறொன்றுண்டோ கண்ணம்மா.
காலவெளியடி கண்ணம்மா! நீ என்
காலவெளியடி கண்ணம்மா!
Saturday, February 22, 2020
வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (18) : ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை
முதலில் தாயகம் (கனடா) பத்திரிகையில் 'ஒரு மாட்டுப்பிரச்சினை' என்னும் தலைப்புடன் வெளியாகியது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பானது (லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது) இலண்டலிலிருந்து வெளியாகும் 'தமிழ் டைம்ஸ்' ஆங்கில இதழில் வெளியாகியுள்ளது.]
ஞாயிற்றுக் கிழமையாதலால் 'றோட்டி'னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் 'கொண்டா அக்கோர்ட்' 'சென்ற்கிளயர்' மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை
Tuesday, February 18, 2020
வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (5): காலவெளிக் கைதிகள்!
காலவெளியிடையே கண்ணம்மா உன்
கனிமனம் எண்ணி வியக்கின்றேன்.
காலவெளியிடையே கண்ணம்மா
கணமும் பறந்திட விளைகின்றேன்.
காலவெளிச் சிந்திப்பிலே கண்ணம்மா
களித்திட கணமும் எண்ணுகின்றேன்.
சூழலை மீறியே கண்ணம்மா அவன்போல்
சிந்திக்க விரும்புகின்றேன்.
காலமென்றொன்றில்லை கண்ணம்மா.
வெளியும் அவ்வாறே என்றான் கண்ணம்மா.
காலவெளி மட்டுமே கண்ணம்மா இங்கு
உண்மையென்றுரைத்தான்.
அவனறிவின் உச்சம் பற்றி கண்ணம்மா
பிரமித்துப்போகின்றேன்.
மனத்து அசை இன்னும் முடியவில்லை.
எப்பொழுதென்றாயினும் நீ கண்ணம்மா
எவ்விதம் அவனால் முடிந்ததென்று
எண்ணியதுண்டா ?
நான் எண்ணுகின்றேன் எப்பொழுதும் கண்ணம்மா.\
நான் வியந்துகொண்டிருக்கின்றேன் எப்பொழுதும்
கண்ணம்மா..
நான் எண்ணுவேன் எப்பொழுதும் கண்ணம்மா.
நான் வியந்துகொண்டிருப்பேன் எப்பொழுதும் கண்ணம்மா.
Monday, February 17, 2020
தொடர் நவீனம் 'மனக்கண்' முடிவுரை! அறிஞர் அ.ந.கந்தசாமி -
- அ.ந.கந்தசாமி மனக்கண் நாவல் தினகரன் பத்திரிகையில் தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பைப்பெற்றது. பின்னர் அந்நாவலை அவரது நண்பர் எழுத்தாளர் சில்லையூர் செல்வராசன் இலங்கை வானொலியில் தொடர் நாடகமாக்கி ஒலிபரப்பினார். மனக்கண் நாவல் பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் தொடராக வெளியானது. மனக்கண் நாவல் தொடராக வெளியானபோது அமரர் ஓவியர் மூர்த்தியின் அழகான ஓவியங்களுடன் வெளியாகியது. நாவலின் முடிவில் அ.ந.க எழுதிய முடிவுரை சிறப்பானதோர் ஆய்வுக்கட்டுரை. எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைகளிலொன்று. ஓவியர் மனக்கண் நாவலுக்குத் தீட்டிய ஓவியங்கள் சிலவற்றையும், அ.ந.க மனக்கண் நாவலுக்கு எழுதிய முடிவுரையினையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். -தொடர் நவீனம் 'மனக்கண்' முடிவுரை! அறிஞர் அ.ந.கந்தசாமி
-1966ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாதம் ‘மனக்கண்’ தொடர் நவீனம் மூலம் வாசகர்களுக்கும் எனக்கும் உண்டான தொடர்புகள் சென்ற வாரம் ஒரு முடிவுக்கு வந்தன. அதாவது, எட்டு மாதங்களாக வாரந் தவறாது நிலவிய ஓர் இனிய தொடர்பு சென்ற பெளர்ணமித் தினத்தன்று தன் கடைசிக் கட்டத்தை அடைந்தது. கதை என்ற முறையிற் பார்த்தால் மனக்கண் சற்று நீளமான நாவல்தான் என்றலும் உலக நாவல்களோடு ஒப்பிடும்போது அதனை அவ்வளவு நீளம் என்று சொல்லிவிட முடியாது. கிரேக்க கவிஞனான களீமாச்சன் (Callimachun) “ஒரு பெரிய புஸ்தகம், ஒரு பெரிய பீடை” என்று கூறியிருக்கிறான். அவன் கூற்றுபடி பார்த்தால் என்னுடைய நாவல் ஒரு நடுத்தரமான பீடையே. ஏனென்றால், நாவல் என்பது ஒரு சீரிய இலக்கியத் துறையாக வளர்ச்சியடைந்துள்ள மேல் நாடுகளில் பொதுவாக நாவல்கள் 20,000 வார்த்தைகளில் இருந்து 20 இலட்சம் வார்த்தைகள் வரை நீண்டவையாக வெளி வந்திருக்கின்றன. யார் அந்த 20 இலட்சம் வார்த்தை நாவலை எழுதியவர் என்று அதிசயிக்கிறீர்களா? பிரெஞ்சு நாட்டின் புகழ்பெற்ற நாவலாசிரியரான மார்சேல் புரூஸ்ட் (Marcel Proost) என்பவரே அந்த எழுத்தாளர். நாவலின் பெயர் “நடந்ததின் நினைவு” (Remembrance of the past). ஆனால் புரூஸ்ட் மட்டும் தான் இவ்வாறு நீண்ட நாவல்களை எழுதினார் என்று எண்ணி விட வேண்டாம். உலகத்தின் மிகச் சிறந்த நாவல் என்று கருதப்படும் (War and peace) “யுத்தமும் சமாதானமும்” லியோ டால்ஸ்டாய் எழுதியது. விக்டர் ஹியூகோவின் (Les miserables) “ஏழை படும் பாடு” என்பனவும் குறைந்தது ஏழெட்டு இலட்சம் வார்த்தைகள் கொண்ட பெரிய நாவல்கள் தான். இவர்களில் முன்னவர் ருஷ்யாக்காரர். மற்றவர் பிரான்சைச் சேர்ந்தவர். இவர்களைப் போலவே ஆங்கிலத்தில் ஹோன்றி பீல்டிங் (Henry Fielding) நீண்ட நாவல்கள் எழுதியிருக்கிறார். இவரது “டொம் ஜோன்ஸ்” (Tom Jones) பதினெட்டு பாகங்களைக் கொண்டது. இதில் இன்னொரு விசேஷமென்னவென்றால் இந்தப் பதினெட்டுப் பாகங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு விசேஷ முன்னுரையும் அவரால் எழுதப்பட்டது. தமிழில் இவ்வாறு நீண்ட நாவலெழுதியவர் “கல்கி”.
நான் இங்கே எடுத்துக் காட்டிய நாவலாசிரியர் எவருமே சாதாரணமானவரல்லர். உலக இலக்கிய மண்டபத்திலே தம் சிலையை நிலையாக நிறுவிச் சென்றிருக்கும் பேனா உலகின் பெரியவர்கள் இவர்கள். இவர்கள் எவருமே சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் தம் கவனத்தைச் செலுத்தவில்லை. தாம் சொல்ல விரும்பிய பொருளை விரிவாக எடுத்துரைப்பதிலேயே இவர்கள் தம் புலனைச் செலுத்தினார்கள். பாரதம் பாடிய வியாசர் ஓர் இலட்சத்து இருபதினாயிரம் சுலோகங்களில் தம் கதையை விரித்துரைத்தது போல இவர்களும் தாம் கூற வந்த கதைகளை அமைதியாகவும், ஆறுதலாகவும் சாங்கோபாங்கமாகவும் எடுத்துச் சொல்லிச் செல்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் பாரகாவியமும் நாவலும் ஒன்றென்றே நான் கருதுகிறேன் - ஒன்று வசனம், மற்றது கவிதை என்ற வித்தியாசத்தைத் தவிர, பாரகாவியம் எப்பொழுதுமே அவசரமாகக் கதையைச் சொல்லத் தொடங்குவதில்லை. நாட்டு வர்ணனை, நகர வர்ணனை, பருவ வர்ணனை என்று மெதுவாகவே அது கிளம்பும். காரின் வேகம் அதற்கில்லை. தேரின் வேகமே அதற்குரியது. வழியிலே ஒரு யுத்தக் காட்சி வந்ததென்று வைப்போம். உதாரணத்துக்கு வியாச பாரதத்தை எடுத்தால் பதினேழு நாள் யுத்தம் நடந்தது - பாண்டவர் வென்றனர் - கெளரவர் தோற்றனர் என்று மிகச் சுருக்கமாகவே அதனைக் கூறியிருக்கலாமல்லவா? ஆனால் அவ்வாறு எழுதினால் கதாநிகழ்ச்சியை நாம் புரிந்து கொண்டாலும் யுத்தத்தின் அவலத்தையும் வெற்றி தோல்வியையும் நேரில் பார்த்தது போன்ற உணர்ச்சி நமக்கு ஏற்படாது. அந்த உணர்ச்சி நமக்கு ஏற்படும் வரை பொறுமையாக விவரங்களை ஒன்றின் பின்னொன்றாக சலிப்பின்றி எடுத்துக் கூறி நிற்கும் ஆற்றல் பெற்றவனே பாரகாவியஞ் செய்யும் தகுதியுடையவன். நல்ல நாவலாசிரியனுக்கும் இப் பண்பு இருக்க வேண்டும்.(பதிவுகள்.காம்) நான் ஏன் எழுதுகின்றேன்? - அ.ந.கந்தசாமி -
அ.ந.க பற்றிய மேலதிக விபரங்களுக்கு:
1. கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு! - வ.ந.கிரிதரன் -
https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=773:2012-05-02-04-09-38&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54
2. அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை - வ.ந.கிரிதரன் (இலக்கியபூக்கள் தொகுப்பு ஒன்று நூலில் வெளியான கட்டுரை. எழுத்தாளர் முல்லை அமுதன் வெளியிட்ட நூலிது.) https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1076:2012-10-01-09-11-17&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54
3. நூலகம் தளத்தில் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம் (நாடகம்), வெற்றியின் இரகசியங்கள் (உளவியல் நூல்) ஆகியன பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கான இணைப்பு: http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF,_%E0%AE%85._%E0%AE%A8
4. பதிவுகள் இணைய இதழ் வெளியிட்ட அ.ந.கந்தசாமியின் கவிதைகள் மின்னூலை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்: http://aavanaham.org/islandora/object/noolaham%3A25302
5. பதிவுகள் இணைய இதழ் வெளியிட்ட அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவல் மின்னூலையும் நூலகம் தளத்தில் வாசிக்கலாம்: http://aavanaham.org/islandora/object/noolaham%3A25301
6. 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' -அந்தனி ஜீவா - https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3171:2016-02-12-08-57-30&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19
7. (சிறுகதைகள்.காம்) அ.ந.கந்தசாமி சிறுகதைகள் சில: http://www.sirukathaigal.com/tag/%E0%AE%85-%E0%AE%A8-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/
அ.ந.கந்தசாமி பக்கம் (பதிவுகள்.காம்) - வாசிக்க https://www.geotamil.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=25&Itemid=47
கட்டுரை: நான் ஏன் எழுதுகின்றேன்? - அ.ந.கந்தசாமி -
அப்பொழுது எனக்குப் பதினேழு வயது நடந்து கொண்டிருந்தது. உள்ளத்திலும் உடம்பிலும் சுறுசுறுப்பும், துடிதுடிப்பும் நிறைந்த காலம். உலகையே என் சிந்தனையால் அளந்துவிட வேண்டுமென்று பேராசைகொண்ட காலம். காண்பதெல்லாம் புதுமையாகவும், அழகாகவும், வாழ்க்கை ஒரு வானவில் போலவும் தோன்றிய காலம். மின்னலோடு உரையாடவும், தென்றலோடு விளையாடவும் தெரிந்திருந்த காலம். மின்னல் என் உள்ளத்தே பேசியது. இதயத்தின் அடியில் நனவிலி உள்ளத்தில் புகுந்து கவிதை அசைவுகளை ஏற்படுத்தியது. பலநாள் உருவற்று அசைந்த இக்கவிதா உணர்ச்சி ஒருநாள் பூரணத்துவம் பெற்று உருக்கொண்டது. எழுத்தில் வடித்தேன். "சிந்தனையும் மின்னொளியும்" என்ற தலைப்பில் இலங்கையின் ஓப்புயர்வற்ற இலக்கிய ஏடாக அன்று விளங்கிய 'ஈழகேசரி'யில் வெளிவந்தது. இக்கவிதை ஒரு காரியாலயத்தில் மேசை முன்னுட்கார்ந்து என்னால் எழுதப்பட்டதல்ல. இயற்கையோடொன்றிய என் மனதில் தானே பிறந்த கவிக்குழதை இது. எனினும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இலக்கிய சித்தாந்தங்கள் பலவற்றை ஆராய்ந்து நான் என்ம்னதில் ஏற்றுக் கொண்ட அதே கருத்துகளின் சாயலை இக்கவிதையில் என்னால் இன்று காண முடிகிறது.
Saturday, February 15, 2020
வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள் 4 ; காலவெளிக்காட்டி வல்லுனன்!
காலவெளிச் சட்டங்களைக் கோத்து
உருவானதிந்த இருப்படி கண்ணம்மா!
இவ்விருப்புமொரு காலவெளிப் படம்
என்பதையுணர்வாயாயடி நீ!
என்னாசையொன்றுள்ளதென்பேன்.
என்னவென்று நீ அறியின் நகைக்கக்கூடும்.
ஒருபோதில் ,உணர்வுகள் கிளர்தெழுந்த
பருவத்தினொரு போதில்
உனைப்பார்த்த உணர்வுகளுளவே.
அவ்வுணர்வினைப் பிரதிபலிக்கும் காட்சியுமுளவே.
அப்போது கண்ணம்மா! அதிகாலைநேரம்.
ஆடியசைந்து நீ வந்தாய் பொழுதின் எழிலென.
நினைவுள்ளதா? இருக்கிறதெனக்கு.
மார்புற நூல்தாங்கி, முகம் தாழ்த்தி
நடந்து வந்தாய்; அது உன் பாணி.
நிலம்பார்த்து நடக்குமுனக்கு
முறையா நடப்பதற்கு,
நேரெதிர்க் காட்சிகள்
தெரிவதெப்படி என்று வியப்பதுண்டு அப்போது.
இருபுறம் பிரிகுழல் இடைவரை
இருந்தசைய ,
பொட்டிட்ட வதனத்தில் நகையேந்தி நீ'
நடந்துவருமெழிலில் பொழுது சிறக்கும்.
ஒருபோதில் வழக்கம்போல் அசைந்து சென்றாய்
அதிகாலைப்பொழுதொன்றில்.
அவ்விதம் சென்று சந்தி திரும்புகையில்
ஓரப்பார்வைக்கணை தொடுத்துச் சென்றாய்.
நினைவிருக்கிறதா? ஆனால் எனக்கு
இருக்கிறதடி.
அக்கணத்தைச் சிறைப்படுத்தி ஆழ்மனத்தினாழத்தே
பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.
அதற்கு எப்போதுமில்லையடி
விடுதலை/ ஆயுள் தண்டனைதான்.
இருக்கும் வரை அதனாயுள் அங்குதான்.
Sunday, February 9, 2020
வ.ந.கிரிதரன் புகலிடக் கதைகள் (17) : ஆசிரியரும் மாணவனும்
மகன் ஊரில் ஒரு பொறியியலாளனாகக் கடமையாற்றியவன். இங்கோ ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்க்கின்றான். இங்கு வரும் குடிவரவாளர்கள் பலரும் இப்படித்தான் தமது படிப்பிற்குச் சம்பந்தா சம்பந்தமில்லாத வேலைகளைச் செய்து கொண்டு காலத்தினை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள். மூன்றாம் உலகத்தைச் சேர்ந்த புத்தியீவிகள் பலர் டாக்ஸி ஓட்டுவதோ, 'பிட்சா' 'டெலிவரி' செய்வதோ அல்லது உணவகங்களில் கோப்பை கழுவதோ அப்படியொன்றும் புதிதானதொன்றல்ல. இவ்விதம் அந்தந்த நாடுகளிற்கு உரமாக விளங்க வேண்டிய அந்நாடுகளின் மூளை வளங்களெல்லாம் இங்கே வீணாகிக் கொண்டிருக்கின்றன.அந்த நாள் ஞாபகங்கள் நிழலாடுகின்றன. எவ்வளவு தூரம் சிரமப் பட்டு மகன் படித்துப் பட்டம் வாங்கியிருந்தான்.பல்கலைக் கழகப் புகு முக வகுப்பில் மகன் அதி விசேட சித்திகள் பெற்ற போது ஊரே எவ்விதம் பெருமைப் பட்டுக் கொண்டது. இப்பொழுது நினைக்கும் பொழுது கூடப் பெருமிதமாகவிருந்தது. மனைவி பார்வதி எவ்வளவு தூரம் சந்தோசப் பட்டாள். மனைவியை நினைத்ததும் மாஸ்ட்டரின் கண்கள் இலேசாகப் பனிக்கத் தான் செய்கின்றன.'மகராசி இருந்து இதையெல்லாம் பார்க்காமல் நேரத்தோடு போய்ச் சேர்ந்திட்டா'. ஊரில் மட்டும் பிரச்னையேதுமில்லையென்றால் எவ்வளவு நல்லாயிருக்கும்....ஆனந்தமாக வயலை, வெளியை, விண்ணைக், காற்றை இரசித்தபடி ...'ம்..அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..'
மகனும் மருமகளும் நேரத்துடனேயே வேலைக்குப் போய் விட்டார்கள். மகன் பகல் வேலை முடிந்து அப்படியே இன்னுமோரிடத்தில் பகுதி நேரமாகச் செய்யும் 'பாதுகாவலன்' வேலை செய்து முடிந்து வீடு வர இரவு பத்தாகி விடும். மருமகளும் அப்படித்தான். பகலில் ஒரு வங்கியொன்றில் 'டேட்டா என்றி ஒபரேட்ட'ராகக் கடமையாற்றுகின்றாள். மாலை நேரங்களில் புத்தகக் கடையொன்றில் பகுதி நேரக் காசாளராகக் கடமையாற்றுகின்றாள். பெரும்பாலும் வார இறுதி நாட்களில் தான் சமையலெல்லாம். ஒரு வாரத்திற்குத் தேவையான உணவு வகைகளைத் தயார் செய்து 'ப்ரிட்ஜ்'ஜில் வைத்து விடுவார்கள். தேவையான போது எடுத்தி 'மைக்ரோவேவ்'இல் சூடு காட்டிச் சாப்பிட வேண்டியதுதான். அவ்வப்போது வேலை முடிந்து வரும் போது தமிழ் உணவகங்களிலிருந்து இடியப்பம் வாங்கி வருவார்கள். அவரிற்கு வந்த புதிதில் ஏன் இவர்கள் இப்படி உடம்பை வருத்தி உழைக்கிறார்கலென்பது விளங்கவில்லை. பிறகு தான் விளங்கியது. வீடு அவர்களிற்குத் தான் சொந்தம். ஆனால் அதற்கு 'மோட்கேஜ்' மாதாமாதம் கட்ட வேண்டும். அது தவிர வீட்டு வரி, 'யுடிலிட்டி' பில் அது இதென்று பல வகையான செலவுகள். ஈடு கட்டத்தான் இவ்வளவு உழைப்பும் களைப்பும். தேவைதானாவென்று பட்டது....வீடு வாங்குவதென்பது இங்கு பலரிற்குத் தன்மானப் பிரச்னையாகி விட்டது. தங்களால் மாதாமாதம் 'மோட்கேஜ்; ஒழுங்காகக் கட்ட முடியுமாவென்றெல்லாம் பார்ப்பதில்லை. போட்டி போட்டு வீடு வாங்குவதும், வாங்கிய வீட்டிற்கு 'மோட்கேஜ்' கட்டுவதற்காக மாய்ந்து மாய்ந்து உழைத்து ஒடாகிப் போவதுமே வாழ்க்கையாகிப் போயிற்றோ என்று பட்டது.
சுப்ரமணியம் மாஸ்ட்டர் டொராண்டோ வந்து ஒரு வருடமாகி விட்டது. இங்கு நேரம் விரைவாகச் செல்வதாகப் பட்டது.அவர்களிருந்த பகுதியில் அதிகமாகச் சீனர்களே இருந்தார்கள். சீனர்களைப் பொறுத்த வரையில் முதியவர்கள் கூட வாழ்க்கையைச் சந்தோசமாகக் கழிப்பதாகப் பட்டது. அதிகாலைகளில் அருகிலிருந்த பூங்காவில் பல சீன முதியவர்கள் ஆண்களும் பெண்களுமாக தேகப்பயிற்சி செய்து கொண்டிருப்பதை இவர் அவதானித்திருக்கின்றார்.பார்ப்பதற்கு 'பாலே' நடனமாடுவதைப் போன்றிருக்கும். அடுத்த வீட்டுக்கார முதியவரான டோனி பொங் சில வேளைகளில் இவருடன் கதைப்பதுண்டு. அப்பொழுதெல்லாம் இவரையும் அதிகாலையில் தேகப் பயிற்சி செய்ய அழைத்திருக்கின்றார். இவரிற்கு வெட்கமாகவிருக்கும். மறுத்து விடுவார். அதே சமயம் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பதும் கஷ்ட்டமாகவிருந்தது.'போர'டித்தது. ஏதாவது பிரயோசனமாகச் செய்தாலென்னவென்றும் பட்டது.அண்மைக் காலமாகவே அவரிற்கு இந்த யோசனை பலமாகவே ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது. ஏதாவது தொழிற்சாலையொன்றில் வேலை தேடிப் பார்த்தாலென்னவென்று பட்டது. மகனிற்குத் தெரிந்தால் விட மாட்டான். துடித்துப் போய் விடுவான். வேலை செய்தால் அவரும் தன்னால் முடிந்த உதவி செய்யலாமேயென்றும் தோன்றியது. மகனும் மருமகளும் சுமக்கும் பாரத்தில் சிறிதளவாவது அவரும் சுமக்கலாமே.
இன்று எப்படியும் வேலை தேடிப் பார்க்க வேண்டுமென்று முடிவு செய்தவராகப் படுக்கையை விட்டெழுந்தார் சுப்ரமணியம் மாஸ்ட்டர். காலைக் கடன்களை முடித்து புறப்பட்ட பொழுது மணி பத்தை நெருங்கி விட்டது. அவர்களிருந்த பகுதிக்கண்மையிலேயே தொழிற்சாலைகளடங்கிய பகுதியொன்றிருந்தது. அப்பகுதியில் பல தொழிற்சாலைகளிருந்தன. ஒவ்வொரு தொழிற்சாலையாகச் சென்று விண்ணப்பித்துப் பார்க்க முடிவு செய்தார். என்ன வேலையென்றாலும் செய்து பார்ப்பதாக முடிவு செய்தார். அவ்வாறு செய்வதன் மூலம் நாட்களைப் பிரயோசனமாகவும் அதே சமயம் நான்கு சுவர்களிற்குள் வளைய வரும் தனிமையிலிருந்து விடுதலை பெற்றதாகவும் கழிக்க முடியும். நினைவே அவரிற்கு ஒரு வித மகிழ்ச்சியினையும் தென்பினையுமூட்டின.வேலையொன்று எடுத்த பின் தான் மகனிடம் கூற வேண்டும். ஆரம்பத்தில் அவன் எதிர்க்கத்தான் செய்வான். ஆனால் அதன் பின் அவனை எப்படியும் சம்மதிக்க வைக்கலாமென்றும் பட்டது.
நகர் காலைக்குரிய பரபரப்பில் மூழ்கி விட்டிருந்தது. பல வேறு பட்ட மனிதர்கள்..பல்வேறு பட்ட பண்பாடுகளின் சங்கமமாக விளங்கியது டொராண்டோ நகரம். ஒரு சில மொழிகளேயுள்ள நாடுகளே பல்வேறு பட்ட பிரிவுகளால் இரத்தக் களரிகளாகக் காட்சியளிக்கும் போது இது எவ்விதம் சாத்தியமாயிற்று? வியப்பாகவிருந்தது. இங்கும் பல்வேறு பட்ட பிரிவுகள் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால் அதற்காக ஆளையாள் வெட்டிச் சாய்த்து இரத்த ஆறுகள் ஓடவில்லையே? நிறவெறி இன்னும் அடியோடு அழிந்து விடவில்லை தான். ஆனால் அதனை எதிர்த்துப் போராடக் கூடிய வசதியிருக்கிறதே....இவர்களது சமுதாயம் சிறிது முன்னேறி விட்டது போல் பட்டது. ஆனால் பொதுவாக இந்த மேற்கு நாட்டுச் சமுதாயங்கள் தத்தமது நலன்களிற்காக எதுவும் செய்யத் தயங்காதவர்களென்பதும் உண்மைதான்...
நடந்து கொண்டிருந்தவர் தொழிற்சாலைகள் அடங்கிய பகுதிக்கு வந்து வந்து விட்டிருந்ததை உணர்ந்தார். முதலாவது தொழிற்சாலைக்குச் சென்று விண்ணப்பிக்கலாமாவென்று நினைத்தார். அவரிற்குச் சிறிது தயக்கமாகவும் வெட்கமாகவுமிருந்தது. அவ்விதமே சில தொழிற்சாலைகளைத் தாண்டி நடந்தார்.இவ்விதமாக மனது போராடிக்கொண்டிருந்தது. வேலை செய்யவும் விருப்பமாகவிருந்தது. என்ன வேலையென்றாலும் செய்யத் தயாராகவுமிருந்தார்.அதே சமயம் அவ்விதம் சிறிய வேலைகளிற்கு விண்ணப்பிக்க மனது கூசவும் செய்தது. ஆசிரியராகவிருந்து பல பொறியியலாளர்களையும் மருத்துவர்களையும் உருவாக்கிய பெருமைக்குரிய சுப்ரமணிய மாஸ்ட்டரல்லவா! வயது போன் நேரத்தில் சந்தோஷமாகப் பேரக் குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ வேண்டிய சமயத்தில் இவ்விதம் அன்னிய நாடொன்றில் தொழிற்சாலை தொழிற்சாலையாக வேலை தேடிச் செல்ல வேண்டுமேயென்று மனம் கூசுகின்றதோ? சிறு வயதில் படித்த கதையொன்று ஞாபகத்திற்கு வந்தது. 'சாகப் போனவன் வழியிலெதிர்பட்ட பாம்பைக் கண்டு பயந்த கதை மாதிரியல்லவாயிருக்கிறது' என்று எண்ணியபோது சிரிப்பு வந்தது. எந்த வேலையும் செய்யத் துணிந்து புறப்பட்ட பிறகு இப்படித் தயங்கலாமா? வெட்கப் படலாமா?
"யாரது... மாஸ்ட்டரா..."
குரல் கேட்கவே எதிரே நோக்குகின்றார். தமிழ்க் குரல்...யாராகவிருக்கும்? ஆச்சர்யமாகவிருக்கின்றது..
"யாரது..." கண்களைச் சுருக்கியவராக எதிரே பார்க்கின்றார் சுப்ரமணிய மாஸ்ட்டர். வர வர இப்பொழுதெல்லாம் கண் வேறு அவ்வளவாகத் தெரிவதில்லை. டாக்டரிடம் காட்டத்தான் வேண்டும்...
"நான் தான் மாஸ்ட்டர்...ரகுநாதன்....ஞாபகமிருக்குதோ.."
"ரகுநாதன்....ம்.." சிந்தனையில் மூழ்கினார்.
"கார்க்காரச் சண்முகத்தின்ற மகன் ரகுநாதன்..."
"ஓ சண்முகத்தின்ற மோனே"
இப்பொழுது அவரிற்கு நினைவிற்கு வருகின்றது. கார்க்காரச் சண்முகத்தின் மகன் ரகுநாதன். இவரது அபிமானத்திற்குரிய மாணவன். சண்முகம் குடியும் அடியுமென்று காலத்தைக் ஓட்டிக் கொண்டிருந்தான். குடும்பச் சூழல் காரணமாக அவனது மகன் ரகுநாதனால் மேலே படிக்க முடியாமலிருந்தது. படிப்பை நிறுதத இருந்தவனை மாஸ்ட்டர்தான் தன் செலவிலேயே படிக்க வைத்தார். நல்லதொரு திறமைசாலியின் திறமை வீணாகக் கூடாதென்று விரும்பினார். ரகுநாதன் படிப்பில் எப்பொழுதுமே முதல் தான். அதன் பின் அவன் பல்கலைக் கழகம் சென்று பொறியியலாளனாகத் திரும்பி திரும்பியபோது அவர் எவ்வளவு தூரம் பெருமைப் பட்டார். அந்த ரகுநாதனா இவன்?
நாடிருந்த நிலையில் நீண்ட காலம் அவனுடன் தொடர்பேதுமிருக்கவில்லை. கடைசியாக அவன் மகாவலித் திட்டத்தில் பொறியியலாளனாக வேலை பார்த்துக் கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது. அவன் ஊரிற்கு வரும் சமயங்களிலெல்லாம் மாஸ்ட்டரிற்கேதாவது வாங்கி வருவான். இப்பொழுது நினைத்தாலும் எவ்வளவு பெருமையாகவிருக்கிறது.. 'அது சரி இவன் எப்பொழுது கனடா வந்தான்?'
"மாஸ்ட்டர் எப்ப நீங்கள் கனடா வந்தனீங்கள்? "
"நான் வந்து ஒரு வருஷமாச்சு. நீயெப்ப வந்தனீ ரகுநாதா"
"மாஸ்ட்டர் நான் வந்து கிட்டத்தட்ட இரண்டு வருசமாவதிருக்கும்..என்ன இந்தப் பக்கம்...மாஸ்ட்டர்.."
மாஸ்ட்டரிற்குத் திகைப்பாகவிருந்தது. இவனிடம் போய் எப்படிச் சொல்வது? மாஸ்டர் மாஸ்டரென்று வாய்க்கு வாய் அழைத்து எவ்விதம் இவன் பெருமைப் படுகின்றான். மேலே படிக்க முடியாமல் அவனிருந்த பொழுது எவ்வளவு தூரம் புத்திமதிகள் கூறி அவனை உற்சாகப் படுத்திருத்தியிருப்பார்? எத்தனையோ வெற்றிகரமான மாணவர்களை அவர் உருவாக்கியிருக்கிறார் அவர். எத்தனையோ மாணவர்களின் இலட்சிய ஆசிரியர் அவர்.அவனிடம் போய்த் தான் தொழிற்சாலை வேலை தேடுவதை எவ்விதம் கூறுவது? அவனது மனம் வருந்தி விடாதா?
"அதோ பார்.. அந்தப் பக்கத்திலை தான் மகனின்ற வீடிருக்கு.. மகனோடைதான் இருக்கிறன்.. . எந்த நேரமும் வீட்டிலை அடைந்து கிடந்தாலும் அலுத்து விடும்...அதுதான் சும்மா காலாற நடக்கலாமேயென்றுதான். நடந்தாலென்றாலாவது உடம்பிற்கு நல்லதாகயிருக்கும் தானே."
"அதுவும் சரிதான் மாஸ்ட்டர்.. நீங்கள் இப்பவும் அப்ப மாதிரியே 'பாசிட்டிவ்'வாகத் தான் இருக்கிறீங்கள். மாஸ்ட்டர் நீங்கள் கட்டாயம் ஒரு நாளைக்கு எங்களுடைய வீட்டிற்கு வர வேண்டும். நான் ஸ்காபரோவிலையிருக்கிறன்..."
"கட்டாயம் வருவேன். போன் நம்பர் தாறன். ஒரு நாளைக்கு 'கோல்' பண்ணேன். அது சரி நீயென்ன இந்தப் பக்கம்.."
"மாஸ்ட்டர். என்னுடைய நண்பனொருவன் அண்மையில் தானிருக்கிறான். அவனைச் சந்திப்பதற்காகத் தான் வந்தனான். வந்த வழியிலை கடவுள் அருளாலை உங்களையும் சந்திக்க முடிந்தது.. கன நாளைக்குப் பிறகு சந்தித்திருக்கிறம்... வாங்கோவென் மாஸ்ட்டர் 'கோப்பி' குடித்துக் கொண்டே கதைப்போம்..."
அருகிலிருந்த 'டிம் கோர்ட்டன் டோனட்' கடைக்குச் சென்றார்கள். ஊரில் மூலைக்கு மூலை தேநீர்க் கடைகளிருப்பது போல் இங்கு இந்த 'டோனட்' கடைகள். அங்கு தேநீர் அருந்தியபடியே வடை சாப்பிடுவது போல் இங்கு தேநீர் அல்லது கோப்பி அருந்தியபடியே 'டோண்ட்' கடிக்கலாம். மாஸ்ட்டரிற்கு நீண்ட நாட்களின் பின்னால் சந்தோஷமாகவிருந்தது. அவரால் உருவாக்கப் பட்ட பல மாணவர்களில் முதன்மையானவன் இந்த ரகுநாதன். இவனது வளர்ச்சியில் அவர் பெரிதும் பங்கெடுத்திருந்தார். அவன் பொறியியலாளனாக வெளி வந்த போது ஊரே திரண்டு அவனை வரவேற்றதோடு அதற்குக் காரணமான அவரையும் கெளரவித்தது. இப்பொழுது நினைக்கும் போது கூட எவ்வளவு மகிழ்ச்சியாகவிருக்கிறது.
வேலை தேடும் படலத்தை அத்துடன் நிறுத்தி விட்டு 'இன்னொரு நாள் பார்க்கலாமே'யென்று வீடு திரும்பினார். மாஸ்ட்டரின் மனது மகிழ்ச்சியில் மிதந்தது. ரகுநாதனையெண்ணப் பெருமையாகவிருந்தது. அதே சமயம் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரகுநாதனோ வேறு வகையான எண்ணங்களில் மூழ்கிக் கிடந்தான். அப்பகுதியிலிருந்த தொழிற்சாலையொன்றில் தான் அவன் தொழிற்சாலையைக் கூட்டிக் கழுவும் ஒரு தொழிலாளியாக வேலை பார்க்கின்றான். அவன் பொறியியலாளனாக வருவதற்காக எவ்வளவு உதவிகளை மாஸ்ட்டர் செய்திருப்பார்? அவன் படிக்க முடியாது பாதியிலேயே படிப்பை நிறுத்த எண்ணியிருந்த சமயத்தில் அவர் எவ்வளவு தூரம் அவனிற்குக் கல்வியின் பயன்களைக் கூறி ஊக்குவித்திருப்பார். பொறியியலாளனாக அவனைப் பார்த்து ஆனந்தப் பட்ட மாஸ்ட்டர் இவ்விதம் இவன் வேலை பார்ப்பதை அறிந்தால் எவ்வளவு வேதனைப் படுவார்? யுத்தம் எவ்வளவு கொடியதாக இருந்து விடுகிறது. மனித உறவுகளை எவ்விதம் சின்னாபின்னப் படுத்தி விட்டது. இவ்விதமாக எண்ண அலைகளில் மூழ்கியவனாக ரகுநாதன் சென்று கொண்டிருந்தான். அதே சமயம் நீண்ட நாட்களின் பின்னால் சந்தித்திருந்த ஆசிரியருடனான சந்திப்பும் அந்த மாணவனின் நெஞ்சில் இன்ப அலைகளை எழுப்பாமலுமில்லை.
நன்றி: பதிவுகள், திண்ணை. யாழ் இந்துக்கல்லூரி (கனடா) கலையரசி மலர்
ngiri2704@rogers.com
வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள் (3): காலவெளி மீறிய கவிஞனடி கண்ணம்மா!
நேற்று -இன்று - நாளை என்றுகாலத்தின் ஒரு திசை பயணத்தில்
மீளுதல் சாத்தியமற்றதா? ஆயின்
'அறிவுணர்'வுக்கு அது இல்லை. ஆம்!
அது இல்லை. எது?
ஆம்! அதுதான். அதுதான்.ஆம்!
அது இல்லை.
தயக்கமெதுவற்று அதனால் தங்குதடையின்றிப்
பயணிக்க முடியும்.
நேற்று - இன்று - நாளை
காலத்தின் அர்த்தமற்றதொரு நிலை
'அறிவுணர்'வுக்குண்டு.
குவாண்டம் நுரையில் கிடக்கும் இருப்பில்
நேரத்துக்கும் அர்த்தமுண்டோ?
அங்கு அனைத்துமே சம காலத்தில்
இருப்பன. அறிவாயா கண்ணம்மா!
காலமே காலமாகி விட்ட நிலைதான்
குவாண்டம் நிலை. ஆம் ! அந்த நிலை.
என் 'அறிவுணர்'வு கொண்டு
என்னால் எங்கும் பயணிக்க முடியும் கண்ணம்மா!
உனக்கது புரியுமா?
நடிகர் நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) நினைவாக...
இவரை நினைத்தாலே முதலில் நினைவுக்கு வருவது ஸ்டான்லி கூப்ரிக்கின் இயக்கத்தில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்த ஸ்பார்ட்டகஸ் திரைப்படமே . அதில் அவர் ரோமானிய அடிமைகளிலொருவராக நடித்திருப்பார். அடுத்து ஓவியர் வான்கோவாக நடித்திருக்கும் லஸ்ட் ஃபோர் லைஃப் (Lust for Life - வாழ்வுக்கான காமம்) .ஓவியர் வான்கோவாக நடித்திருக்கும் அவர் அதற்காக ஆஸ்காரின் சிறந்த நடிகர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Wednesday, February 5, 2020
வ.ந.கிரிதரன் புகலிடச்சிறுகதைகள் (16) ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்'
" என்ன தூக்கக் கலக்கமா " என்றேன்.
" இல்லை மனிதா! சரியான களைப்பு. வேலைப் பளு" என்று கூறிச் சென்றான்.
சிறிது நேரத்தில் மீண்டுமொருமுறை அவன் வந்த பொழுது அவனுக்கும் எனக்குமிடையில் சிறிது நெருக்கம் ஏற்பட்டிருந்தது.
Tuesday, February 4, 2020
வ.ந.கிரிதரனின் புகலிடக் கதைகள் (15): மனைவி!
- திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியான சிறுகதை. 'ஈழநாடு (கனடா) இதனை மீள்பிரசுரம் செய்திருந்தது. -
இரவு மணி பதினொன்றினை நெருங்கிக் கொண்டிருந்தது. யன்னலினூடி கட்டட முனிகள் தவமியற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஓட்டியற்ற ஓடமாகப் பிறை நிலவு. பலகணியில் அடைந்திருந்த புறாக்கள் சில அசைந்தன. அடுத்த அப்பார்ட்மென்ட்லிருந்த இதுவரை கத்திக் கத்தி யுத்தம் புரிந்து கொண்டிருந்த யமேய்க்கனும் அவனது வெள்ளைக் காதலியும் சற்று முன்னர் தான் சப்தமிழந்து ஓய்ந்து போனார்கள். மனோரஞ்சிதத்தின் நெஞ்சுப்புற்றிலிருந்து ஞாபகப் பாம்புகளெழுந்து படம்விரித்தாடின. முன்றிலில் சாய்வு நாற்காழியில் சாய்ந்திருக்கும் அப்பாவின் சாறத்தைக் கதிரையாக்கி அப்பாவுடன் சேர்ந்து அவளும் விரிந்து கிடக்கும் விண்ணின் அழகில் மனதொன்றிக் கிடப்பதிலெவ்வளவு சந்தோசம்! நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வான் அவளது நெஞ்சில எப்பொழுதுமேயொரு வித புதிர் கலந்த பிரமிப்பினை ஏற்படுத்தி விடும். அண்ணாந்து பார்க்கும் போது விரிந்து கிடக்கும் வெளியின் ஒரு பகுதியாக அந்தரத்தில் மிதந்து இயங்கும் இன்னொரு சுடராகத் தன்னையுணர்வாள். அச்சமயங்களில் இளகிக் கிடக்கும் மனது...நீண்ட பல வருடங்களிற்குப் பின்னால் வருகை தந்திருந்த நீண்ட வால் வெள்ளி பார்ப்பதற்காக அப்பாவுடன் ஒவ்வொரு நாள் அதிகாலையும் நேரத்துடன் எழுந்தது இப்பொழுதும் மனதினுள் பசுமையாகவிருக்கிறது.
வ.ந.கிரிதரன் புகலிடச் சிறுகதைகள் (14): மனித மூலம்
வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (13) : கணவன்
- தாயகம் (கனடா) சஞ்சிகையாக வடிவமெடுத்தபோது அதில் வெளியான எனது சிறுகதைகளிலொன்று. பின்னர் ஸ்நேகா (தமிழகம்) / மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது -
பல்கணியிலிருந்து எதிரே விரிந்திருந்த காட்சிகளில் மனம் ஒன்றாதவனாகப் பார்த்தபடிநின்றிருந்தான் சபாபதி. கண்ணிற்கெட்டியவரை கட்டங்கள். உயர்ந்த, தாழ்ந்த, அகன்ற, ஒடுங்கிய கட்டடங்கள். டெஸ்மண்ட் மொறிஸ் கூறியது போல் மனிதமிருகங்கள் வாழ்கின்ற கூடுகள். நகரங்கள் மனித மிருகங்கள் வாழுகின்ற மிருககாட்சிச்சாலை என்று அவர் குறிப்பிட்டதில் தவறேதுமிருப்பதாகத் தெரியவில்லை. பார்க்கப் போனால் இன்றைய மனிதனின் அடிப்படைப் பிரச்சினை களிற்கு ஒரு வகையில்நகரங்களும் காரணமாயிருக்கலாம். மிருகங்களை கூண்டுகளில் அடைத்து வாழ நிர்ப்பந்திக்கும் போது அவற்றின் இயல்புகளில் ஏற்படும் மாற்றங்கள் பல, நகரத்தில் செறிந்திருக்கும் கட்ட டக் கூண்டுகளிற்குள் அடைப்பட்டுக் கிடக்கும் மனித மிருகங்களிலும் காணப்படுகின்றனவாம், நகரத்தில் இருந்து கொண்டுதானே இன்றைய மனிதன் சக மனிதன் மேல் அதிகாரத்தைப் பிரயோகிக்கின்றான். X=Y Y=Z, ஆகவே X-Z என்ற வகையான கணித சாத்திரத்திற்குரிய தர்க்க நியாயத்தின்படி பார்க்கப்போனால் இன்றைய மனிதனின் பிரச்சினைகளிற்கு முக்கிய காரணம் நகரத்து மனிதன் என்றல்லவா ஆகிவிடுகின்றது. இது பற்றியெல்லாம் சிந்திக்கும் மனநிலையில் சபாபதி இருக்கவில்லை.
மகாகவி பாரதியார் பாடல் - 'புதுமைப்பெண்'
எனக்குப் பிடித்த மகாகவி பாரதியாரின் 'புதுமைப்பெண்' பாடலின் சில பகுதிகளை எடுத்து, தொகுத்திருக்கின்றேன். . எனது குரலைப் பாவித்து , இச...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...










