- என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. சுமணதாஸ் பாஸைப் பொறுத்தவரையில் ஒரு முக்கிய உண்மையைக் கூறத்தான் வேண்டும். வன்னிமண்ணில் நாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் எங்கள் வீட்டிற்கருகில் ஒரு சிங்கள பாஸ் குடும்பம் இருக்கத்தான் செய்தது. அந்த பாஸ் குடும்பத்தவர்கள் நாங்கள் அம்மண்ணிற்குப் போவதற்கு முன்பிருந்தே அம்மண்ணுடன் பிணைந்து வாழ்ந்து வந்தவர்கள். எங்களுடன் நெருங்கிப் பழகியவர்கள். சுக துக்கங்களில் பங்கு பற்றியவர்கள் ஒருமுறை எங்கள் வீட்டிற்கருகிலிருந்த குளமொன்றில் மூழ்கும் தறுவாயில் தத்தளித்துக் கொண்டிருந்த என்னையும், சாந்தா என்ற சிங்கள இளைஞனையும் துணிச்சலுடன் காப்பாற்றியவர் அந்த சிங்கள் பாஸ்தான். நாங்கள் 70களில் யாழ்ப்பாணம் திரும்பி விட்டோம் அதன்பிறகு எங்களிற்கும் அவர்களிற்குமிடையிலிருந்த தொடர்பு விடுபட்டுப்போனது. 1983 இலிருந்து மாறிவிட்ட நாட்டு நிலைமையைத் தொடர்ந்து, தமிழ் மக்களின் போராட்டம் கனன்றெரியத் தொடங்கி விட்டது. இந்தக் காலகட்டத்தில் விடுதலைக்காகப் போராடும் அமைப்பொன்றினால் அந்தச் சிங்கள பாஸ் குடும்பமே முற்றாக அழிக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். யார் செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? வழக்கம்போல் பலவிதமான வதந்திகள், ஊகங்கள். அந்த சிங்கள பாஸ்தான் 'சுமணதாஸ் பாஸாக' இக்கதையில் உருப்பெற்றிருக்கின்றார். நான் இன்று உயிருடன் இருப்பதற்குக் காரணமானவர் அந்தச் சிங்கள பாஸ். அதனை என்னால் ஒரு போதுமே மறக்க முடியாது.
என் பால்ய காலத்து வன்னி மண் அனுபவங்களை மையமாக வைத்து நாவலொன்றினை 'வன்னி மண்' என்னும் பெயரில் எழுதியிருந்தேன். என் வன்னி மண் அனுபவங்களை விபரிக்கும் 'வன்னி மண்' நாவலில் எம் அயலவரான சிங்கள பாஸுடனான அனுபவங்களையும் விபரித்திருந்தேன். அது 'தாயகம்' (கனடா) சஞ்சிகையில் தொடராக தொண்ணூறுகளில் வெளியானது. அந்நாவல் தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளியான 'மண்ணின் குரல்' நாவற் தொகுப்பிலுமுள்ளது. அண்மையில் 'வன்னி மண்' நாவலை வாசித்தபோது அதிலுள்ள பகுதிகள் சிலவற்றைத் தனியாகப்பிரித்தெடுத்துச் சிறுகதையாக, குறுநாவலாக ஆக்கலாமென்று தோன்றியது. அதன் விளைவே 'சுமணதாஸ பாஸ்' என்னும் இக்குறுநாவல். சிறுகதைகள் , குறுநாவல்கள் நாவல்களாக உருப்பெற்றுள்ளதை அறிந்திருக்கின்றோம். ஆனால் இங்கே நாவலொன்றிலிருந்து குறுநாவலொன்று தோன்றியுள்ளதைக் காண்பீர்கள்.
இந்நாவல் தொடராக வெளியான காலகட்டத்தில் எழுத்தாளர் மாலன் அவர்கள் கனடா வந்திருந்தார். அச்சமயம் அவருடன் உரையாடியிருக்கின்றேன். அப்பொழுது அவர் கூறிய கூற்றொன்று இன்னும் நினைவிலுள்ளது. அது ' தமிழ் எழுத்தாளர் எவராவது தமிழர் அமைப்புகளால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களைப்பற்றி எழுதியிருக்கின்றார்களா?' அப்பொழுது அவ்விதமான எனது நாவலொன்று 'தாயகம் (கனடா)' சஞ்சிகையில் வெளியாகிக்கொண்டிருக்கின்றது என்று கூற நினைத்தேன். ஆனால் கூறவில்லை. உண்மையில் இவ்விதம் வேறு தமிழ் எழுத்தாளர்கள் யாராவது எழுதியுள்ளார்களா என்பது தெரியவில்லை. அவ்விதம் எழுதா விட்டால் எனது 'வன்னி மண்' நாவலே போராட்டச் சூழலில் பாதிக்கப்பட்ட சிங்களக் குடும்பமொன்று பற்றியும் முதன் முதலாக விபரிக்கும் நாவலென்ற முக்கியத்துவத்தையும் பெறுகின்றது. - வ.ந.கிரிதரன் -
*****************************************************************************
குறுநாவல்: சுமணதாஸ் பாஸ் - வ.ந.கிரிதரன் -
1.
சிந்தனையில் மூழ்கிவிடும் போதுதான் எவ்வளவு இனிமையாக, இதமாக விருக்கின்றது. மெல்ல இலேசாகப் பறப்பதுபோல் ஒரு வித சுகமாகக் கூடவிருக்கின்றது. எனக்கு இன்னமும் சரியாக ஞாபகமிருக்கின்றது. மாரிகாலம் தொடங்கி விட்டிருந்தது. என் பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். அப்பா ஆங்கில வாத்தி, அம்மா தமிழ் டீச்சர். இருவரிற்குமே வவுனியாவிற்கு மாற்றலாகியிருந்தது. அம்மாவிற்கு வவுனியா மகாவித்தியாலயத்திற்கும் அப்பாவிற்கு நகரிலிருந்த இன்னுமொரு பாடசாலைக்கும் மாற்றல் உத்தரவு கிடைத்ததுமே அப்பா முன்னதாக வவுனியா சென்று, வாடகைக்கு வீடு அமர்த்திவிட்டு வந்திருந்தார். வீட்டுச் சாமான்களையெல்லாம் ஏற்றி வர ஒரு லொறியை ஏற்பாடு செய்துவிட்டு அப்பா லொறியுடன் வர, நானும் அம்மாவும் அக்காவும் தம்பியும் மாமாவுடன் சோமர் செட் காரொன்றில் வன்னி நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது எனக்கு வயது ஐந்துதான். அந்தப் பயண அனுபவம் இன்னமும் பசுமையாக நெஞ்சில் பதிந்து கிடக்கின்றது. முதன் முதலாக பிறந்த இடத்தை விட்டு இன்னுமொரு இடத்திற்கான பயணம். நெஞ்சில் ஒருவித மகிழ்ச்சி, ஆர்வம் செறிந்து கிடந்தது. கார் பரந்தன் தாண்டியதுமே வெளியும், வானுமாகத் தெரிந்த காட்சி மாறிவிட்டது. சுற்றிவரப் படர்ந்திருந்த கானகத்தின் மத்தியில் பயணம் தொடங்கியது.
வன்னி மண்ணின் அழகு மெல்ல மெல்ல தலைகாட்டத் தொடங்கிவிட்டது. மரங்களிலிருந்து செங்குரங்குகளும், கறுத்த முகமுடைய மந்திகளும் எட்டிப் பார்க்கத் தொடங்கி விட்டன. பல்வேறு விதமான பட்சிகள் ஆங்காங்கே தென்படத் தொடங்கி புதிய சூழலும், காட்சியும் என நெஞ்சில் கிளர்ச்சியை ஒருவித ஆவலை ஏற்படுத்தின. பயணத்தை ஆரம்பித்த பொழுது இருண்டு கொண்டிருந்த வானம், இடையிடையே உறுமிக் கொண்டிருந்த வானம், நாங்கள் மாங்குளத்தைத் தாண்டியபொழுது கொட்டத் தொடங்கிவிட்டது. பேய் மழை அடை மழை என்பார்களே அப்படியொரு மழை, சூழல் எங்கும் இருண்டு, 'சோ' வென்று கொட்டிக்கொண்டிருந்த மழையில் பயணம் செய்வதே பெரும் களிப்பைத் தந்தது. அன்றிலிருந்து கொட்டும் மழையும் அடர்ந்த கானகமும் பட்சிகளும் எனக்குப் பிடித்த விடயங்களாகிவிட்டன. ஒவ்வொரு முறை மழை பொத்துக் கொண்டு பெய்யும் போது, விரிந்திருக்கும் கானகத்தைப் பார்க்கும்போதும், அன்று முதன்முறையாக வன்னி நோக்கிப் பயணம் செய்த பொழுது ஏற்பட்ட அதேவிதமான கிளர்ச்சி, களிப்பு கலந்த உணர்வு நெஞ்சு முழுக்கப் படர்ந்து வருகின்றது. பேரானந்தத்தைத் தந்து விடுகின்றது.
நாங்கள் வவுனியாவை அடைந்த பொழுது பேயாட்டம் போட்டுக் கொட்டிக் கொண்டிருந்த வானத்தின் கோரம் குறைந்து விட்டிருந்தது. நாங்கள் செல்லவேண்டிய பகுதிக்கு பெயர் 'குருமண் காடு'. வவுனியா நகரிலிருந்து, ஒன்றரை மைல் தொலைவில் மன்னார் வீதியில் அமைந்திருந்தது. இன்று அபிவிருத்தியடைந்துவிட்ட பகுதி ஆனால் அன்றோ நாலைந்து வீடுகளையும், ஒரு பெரிய 'பண்ணையையும் கொண்ட காடு. படர்ந்த பகுதி. கண்டுபிடிப்பதுதான் கஷ்டமாகவிருந்தது. காரை மன்னார் றோட்டின் கரையோரம் நிறுத்திவிட்டு, யாரும் தென்படுகின்றார்களா என்று பார்ப்பதற்காக மாமா காரை விட்டிறங்கினார். சிறிது நேரம் ஒருவரையுமே காணவில்லை.