Thursday, December 28, 2023

அஞ்சலி: தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தலைவர் விஜயகாந்த் மறைவு!


தமிழ்த்திரையுலகில் எனக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகாந்த். தன்னைக் கறுப்பு எம்ஜிஆர் என்று அழைத்துக்கொள்வதில் மகிழும் விஜயகாந்த் உண்மையிலேயே திரையிலும், அரசியலிலும் எம்ஜிஆரின் வழியில் நடந்தவர். அதுவே அவரது திரையுலக, அரசியல் ஆதிக்கத்துக்கு முக்கிய காரணம்.
 
சிறிது தந்திரமாகத் தமிழக அரசியலில் அவர் நடந்திருந்தால் இன்றும் அவரது தேசிய முற்போக்குத் திராவிடக்  கழகம் முக்கியமான , வலு மிக்க கட்சியாக இருந்திருக்கும்.

Tuesday, December 26, 2023

திரையில் எழுத்தாளர் மிக்கெயில் ஷொலோகோவின் 'டொன் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கின்றது.'


ருஷ்ய எழுத்தாளர் மிக்கெயில் ஷொலோகோவ் அவரது முக்கிய நாவலான 'டொன் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கின்றது' (And Quiet Flows The Don) என்னும் நாவலுக்காக 1965ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றவர். இந்நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு அ.லெ.நடராஜன் அவர்களால் செய்யப்பட்டு, நியு செஞ்சுரி புக்ஸ் ஹவுஸ் பதிப்பக வெளியீடாக 'டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கின்றது' என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது, ஆனால் இத்தமிழ் மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல. நான்கு பாகங்களில் அமைந்துள்ள நாவலின் முதற் பகுதி  மட்டுமே. தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் மூல நூல் பற்றிய விரிவான தகவல்கள் இல்லை. மொழிபெயர்ப்பு ஆங்கிலத்திலிருந்தா அல்லது ருஷ்ய மொழியிலிருந்தா மொழிபெயர்க்கப்பட்டது போன்ற விபரங்கள் இல்லை. இதனால் இதனை வாசிப்பவர் இதனை மூல நாவலின் முழுமையான மொழிபெயர்ப்பாகக் கருதும் நிலை ஏற்படும்.

Saturday, December 23, 2023

ஒரு சந்திப்பு: எழுத்தாளர் மு.மேத்தாவுடன் , 'ஓவியா பதிப்பக' உரிமையாளர் வதிலைப்பிரபா!


ஓவியா பதிப்பக உரிமையாளரும், 'மகாகவி' சஞ்சிகையின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருமான திரு.வதிலைப்பிரபா அவர்கள் கவிஞர் மு.மேத்தா அவர்களைச் சந்தித்து 'மகாகவி' சஞ்சிகை, ம. சேரனின்  "மூனு கோடு நோட்டு" (சென்ரியு கவிதைகள்) மற்றும் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த எனது நாவலான 'நவீன விக்கிரமாதித்தன்' ஆகியவற்றைக் கொடுத்தது பற்றிய தகவலினை அனுப்பியிருந்தார். அவருக்கு என் நன்றி.  அக்காட்சிக்கான புகைப்படத்தினையும் அனுப்பியிருந்தார். அதனையே இங்கு காண்கின்றீர்கள்.

'நான் மலரோடு தனியாக ஏனிங்கு வந்தேன்' வண்ணத்தில்..


அண்மையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இப்பாடலின் வரிகளைச் சிறப்பாகப் பாடி சமூக ஊடகங்களில் அனைவரையும் மகிழ்ச்சியிலாழ்த்தினார். அவருக்காக அவர் இரசித்து, மகிழ்ந்து பாடிய இப்பாடலின் முழு வடிவத்தையும் வண்ணத்தில் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

அமரர் ஜெயன் தேவா (மகாதேவா ஜெயக்குமரன்) நினைவாக..


நண்பர் ஜெயன் தேவா (மகாதேவா ஜெயக்குமரன்) மறைந்து ஆண்டு ஒன்று கடந்து விட்டது. ஜெயனை எனக்குப் பதிவுகள் இணைய இதழே அறிமுகம் செய்து வைத்தது. பின்னர் முகநூலில் நண்பராக அறிமுகமானார்.

அடிக்கடி அலைபேசியில் உரையாடா விட்டாலும் அவ்வப்போது உரையாடுவதுண்டு. நோயின் தாக்கத்தால் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் கூட உரையாடுகையில் அது பற்றிக் குறைபட்டுக் கதைக்க மாட்டார். சமூக, அரசியல் விடயங்கள் பற்றியே உரையாடுவார்.  

அவரது தனிப்பட்ட வாழ்க்கை, கடந்த காலம் பற்றியெல்லாம் என்னுடன் அவர் உரையாடியதில்லை. ஆனால் அவர் விடுதலைப்புலிகளின்  மகளிர் அணியின் அரசியற் பிரிவின் தலைவியாகச் செயற்பட்ட தமிழினியின் இறுதிக்காலத்தில் அவரைத் திருமணம் செய்ததுடன் அவரது இலக்கிய முயற்சிகளுக்கு மிகுந்த ஆதரவாகச் செயற்பட்டார்.  அதனை அவரது வாழ்க்கையின் முக்கியமான , ஆரோக்கியமான விடயமாக நான் உணர்கின்றேன்.

Tuesday, December 19, 2023

முனைவர் செ.இராஜேஸ்வரியின் எம்ஜிஆர் பற்றிய நூல்கள்!


இவர் ஒரு மொழிபெயர்ப்பியலில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியை. இவர் முனைவர் செ.இராஜேஸ்வரி. மொழிபெயர்ப்பு, இதழியல், ஆய்வு, கற்பித்தல் எனப் பன்முக ஆளுமை மிக்க இவர் எம்ஜிஆரின் சினிமா, அரசியல் பற்றிய் ஆய்வுகளில் நாட்டம் மிக்கவர்.

எம்ஜிஆர் பற்றி விகடனில் தொடர் எழுதியவர். கனடாவிலிருந்து வெளிவரும் எழுத்தாளர் அகிலின் 'தமிழ் ஆதர்ஸ்.காம்' இணையத்தளத்தில் எழுதி வருபவர்.

இவரது நோக்கம் குறைந்தது 100 நூல்களையாவது எம்ஜிஆர் பற்றி எழுத வேண்டுமென்பது. இதுவரை பதினைந்துக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். மதுரையிலிருந்து சந்திரோதயம் என்னும் பதிப்பகம் வெளியிட்டு வருகின்றது.

இவரது எம்ஜிஆர் பற்றிய நூல்கள் இணையக் காப்பகத்தில் (Archive.org) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட முனைவர் வே.சீதாலட்சுமியின் 'தமிழ் நாவல்கள்' (அகர வரிசை)


உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட முனைவர் வே.சீதாலட்சுமியின் 'தமிழ் நாவல்கள்' (அகர வரிசை) முக்கியமானதோர் ஆவணம். இந்நூலில் 6298 நூலாக வெளிவந்த நாவல்களின் பெயர்ப்பட்டியலைத் தொகுத்திருக்கின்றார் முனைவர் வே.சீதாலட்சுமி.
 
இந்நூலில் எனக்குத்தெரிந்த ஒரு சில நாவல்களின் பெயர்களைத் தவிர நான் தேடிக்கொண்டிருக்கும் நாவல்கள் பலவற்றின் பெயர்களைக் காண முடிந்தது மகிழ்ச்சையைத் தந்தது.
 
உமாசந்திரனின் 'முழுநிலா', மாயாவியின் (எஸ். கே. இராமன்) மொழிபெயர்ப்பில்  வெளியான 'இளமைக்கனவு' (புகழ்பெற்ற அமெரிக்க நாவலான The Yearling' நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. நாவலாசிரியர் Marjorie Kinnan Rawlings), கல்பனாவின் 'யுகசந்தி', மாயாவின் 'மூடுபனி' , ஜெகசிற்பியனின் 'மண்ணின் குரல்' போன்றவகை நான் தேடிக்கொண்டிருக்கும் நாவல்களில் அடங்குவன.
அக்காலகட்டத்தில் பல நாவல்களை எழுதியவர் எழுத்தாளர் பி.எம்.கண்ணன். இவரை இன்று தமிழ் இலக்கிய உலகு மறந்தேவிட்டதெனலாம். இவரது வெளியான நூல்களையெல்லாம் இத்தொகுப்பின் பட்டியலில் காணமுடிகின்றது.
 
மாயாவியின் மொழிபெயர்ப்பில் உருவான இளமைக்கனவு' நாவலை நாங்கள் அனைவருமே விரும்பி வாசித்தோம். கானகச்சூழலை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட சிறந்த நாவல். அப்பொழுது இயற்கை வளம் மலிந்த , கானகச்சூழலில் உறங்கிக்கிடக்கும் வவுனியாவில் வாழ்ந்து வந்ததால் இந்நாவலுடன் எங்களால் மிகவும் இலகுவாக மனதொன்றிட முடிந்திருக்கக் கூடும்.)
 
இவ்விதமான ஆவணங்கள் தமிழ் நாவல்கள் பற்றிய ஆய்வுகளுக்கு வழித்துணையாக இருப்பவை. அதனால் ஆரோக்கியமானவை..

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...