Monday, September 9, 2024

தமிழ் இலக்கியத் தோட்டம் 2023 - இயல் விருது - ஆர்.பாலகிருஷ்ணன் - தகவல்: அ.முத்துலிங்கம் -


சிந்துவெளி ஆய்வாளராகிய திரு ஆர். பாலகிருஷ்ணன், இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘தமிழ் ஒரு மாநிலத்தின் மொழியல்ல, அது ஒரு நாகரிகத்தின் மொழி’ என்றும் ‘சங்க இலக்கியம் இந்தியத் துணைக்கண்டத்திற்கான இலக்கியம்’ என்றும் தொடர்ந்து வலியுறுத்திவரும் இவர், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 1958இல் பிறந்தார். முதுகலை தமிழ் இலக்கியமும் இதழியல் பட்டயமும் பெற்று பத்திரிக்கையாளராகப் பணியைத் தொடங்கினார். பின்னர், இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளை தமிழிலேயே முதன்முதலில் எழுதி வென்று 1984ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் ஒடிசா மாநிலத்தின் பணித்தொகுதியில் இணைந்தார்.
 
தற்போது இவர் சென்னையிலிருக்கும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் ஓர் அங்கமான சிந்துவெளி ஆய்வு மையத்தின் மதிப்புறு ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.‘நான் ஒரு தமிழ் மாணவன், அதுவே எனது அடையாளம்' என்று கூறும் பாலகிருஷ்ணன் தனது வாழ்நாள் முழுக்க இடையறாது பழந்தமிழ் இலக்கியம், சிந்துவெளிப் பண்பாடு ஆகியவற்றிற்கான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர். சிந்துவெளிப் பண்பாடு மற்றும் தமிழ்த் தொன்மங்களின் தோற்றுவாய் குறித்த புரிதல்களுக்கு இடப்பெயராய்வுகள் வலிமை தரும் என்பதைச் சான்றுடன் நிறுவியுள்ளார். இந்தியாவை ‘உருக்குப் பானை’ என்று சொல்வதற்குப்
பதிலாக இந்தியத் துணைகண்டத்தின் பன்மியத்தை ஆழமாக வலியுறுத்தும் ‘இந்தியா ஒரு மழைக்காடு’ (Rain forest) என்கிற கருத்தாக்கத்தைத் தொடர்ந்து பொதுவெளியில் பேசியும் எழுதியும் வருகிறார்.
 
இந்தியவியல், மானிடவியல், தொல்லியல், இடப்பெயராய்வு ஆகியவை இவரது முனைப்புக் களங்களாகும். சிந்துவெளிப் பண்பாடு செழித்த ’கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகத்தை’ ஆய்வுலகின் கவனத்திற்கு இவர்தான் முதன்முதலாகக் கொண்டுவந்தார். சிந்துவெளி நகரங்களின் ‘மேல் மேற்கு; கீழ் கிழக்கு வடிவமைப்பும் அதன் திராவிட அடித்தளமும்’ என்கிற தலைப்பிலான இவரது ஆய்வு பரவலாகக் கவனம் பெற்ற ஒன்றாகும். சிந்துவெளிப்
பண்பாட்டிற்கான திராவிட அடித்தளத்தைப் பண்பாட்டு ஆய்வுகளின் பின்புலத்தில் நிறுவியவர் பாலகிருஷ்ணன். இவரது சிந்துவெளி ஆய்வுகளுக்காகப் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் 2017இல் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது.
 
‘திராவிட மொழியியலையும், சிந்துவெளிப் புவியியலையும் பிணைத்து ஒரு புதிய கருதுகோளை இவர் படைத்துள்ளார். அதன் மூலம் சிந்து நகர மக்கள் திராவிட மொழிகளையே பேசியிருக்கவேண்டும் என்ற வரலாற்று உண்மையை அறிவியல் அடிப்படையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் மீண்டும் நிறுவியுள்ளார்,’ என்று கூறுகிறார் சிந்துவெளி ஆய்வாளரான ஐராவதம் மகாதேவன்.

சிந்துவெளி நாகரிகம் பற்றி முதன்முதலாக 1924 செப்டம்பர் 20இல்தான் லண்டனில் வெளியான ஓர் இதழில் அன்றைய இந்தியத் தொல்லியல் கழகத் தலைமை இயக்குநர் சர் ஜான் மார்ஷல் அறிவித்தார். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு சிந்துவெளி நாகரிகத்துக்கும் பண்டைய தமிழகத்திற்கும் உள்ள உறவு குறித்த பாலகிருஷ்ணன் எழுதிய ‘Journey of a Civilization: Indus to Vaigai’ என்கிற நூல் வெளியானபோது, அது சிந்துவெளி
 
ஆய்வுலகில் பல தாக்கங்களை ஏற்படுத்தியது. பின்னர் வெளியான அதன் தமிழ்ப் பதிப்பான ‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களிடைய பெரும் வரவேற்பைப் பெற்றது. தனது முப்பது ஆண்டிற்கும் மேலான ஆராய்ச்சியில் உருவான இந்த நூலை மக்கள் பதிப்பாகக் கொண்டுவர தமிழ்நாடு அரசிற்கு அர்ப்பணித்துள்ளார். அது விரைவில் வெளிவர உள்ளது. திருக்குறள், சங்க இலக்கியம் ஆகிய இரண்டையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதை தனது வாழ்நாள் பணியாகச் செய்து வருகிறார் பாலகிருஷ்ணன். அவரின்
அனைத்து  உரைகளிலும் எழுத்துகளிலும் இவ்விரண்டின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
 
திருக்குறளைப் “பொதுமறை” என்பதே பொருத்தம் என வாதிடும் இவர், திருக்குறளின் அக உலகை இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் நாட்டுக்குறள் (2016) என்ற பெயரில் ஒலிப்பேழையாகவும் நாட்டுப் புறப்பாடல்களாகவும் வெளியிட்டுள்ளார். பன்மாயக் கள்வன் (2018), இப்படி ஒரு தீயா? (2023) ஆகிய இரு நூல்களும் சமகாலத்திற்கேற்ற இவரது குறள் தழுவிய காதல் கவிதைகளின் தொகுப்புகளாகும்.
 
மேலும் அன்புள்ள அம்மா (1991), சிறகுக்குள் வானம் (2012) ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். தனது வாழ்கை அனுபவங்களை இரண்டாம் சுற்று (2018), குன்றென நிமிர்ந்து நில் (2018), தமிழ் நெடுஞ்சாலை (2022) ஆகிய நூல்களின் வழியே பகிர்ந்துள்ளார்.
 
சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் (2016), Journey of a Civilization: Indus to Vaigai (2019), கடவுள் ஆயினும் ஆக (2021), அணி நடை எருமை (2022), ஓர் ஏர் உழவன் (2022), ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை (தமிழ்ப் பதிப்பு) (2023) ஆகியவை இவரது ஆராய்ச்சி நூல்களாகும். இத்துடன் பல்வேறு முக்கியமான ஆய்விதழ்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
 
‘சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' என்று கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வலியுறுத்திவரும் இந்தியவியல், திராவிடவியல், சிந்துவெளி ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களைப் பாராட்டி கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அவருக்கு 2023ம் ஆண்டுக்கான வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனையான இயல் விருதை வழங்குகிறது. விழா 20 அக்டோபர் 2024 அன்று ரொறொன்ரோவில் நடைபெறும்.

தகவல்: அ.முத்துலிங்கம் - amuttu@gmail.com

No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்