நடந்து முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பல ஆரோக்கியமான முக்கியமான விடயங்களை நான் காண்கின்றேன். புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் அனுர குமார திசாநாயக்க இத்தேர்தலை ஆரோக்கியமாகக் கையாண்டுள்ளார். அவற்றைப் பட்டியலிட்டால் முக்கியமானவையாக நான் கருதுவது இவற்றைத்தான்.
1. முதன் முறையாகப் பிரதான தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிங்களத் தேசியம், இனவாதம் போன்ற மக்களை உணர்ச்சியிலாழ்த்தும் விடயங்களை முக்கிய பிரச்சாரமாகக் கைக்கொண்டு பிரச்சாரம் செய்யவில்லை.
2. அனுரா குமார திசாநாயக்கவின் சில உரைகளை நான் கேட்டேன். ஓர் உரையில் அவர் தோட்டத்தொழிலாளர்களின் நிலையினை , அவர்கள்தம் அவலங்களைத் தோலுரித்துக் காட்டியிருந்தார்.
இதற்கப்பால் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சுமைகள், இவற்றுக்குக் காரணமான நிலவும் ஊழல் இவற்றைச் சுட்டிக்காட்டி, இவற்றைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அவரது பிரச்சாரம் அமைந்திருந்தது.
இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வட, கிழக்கில் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தி அரியநேத்திரனைக் களமிறக்கியிருந்தார்கள். பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்காதரவாகச் செயற்பட்டது.
வாக்கு விபரங்கள் வருமாறு. இலங்கைத் தேர்தல் திணைக்களத்தின் இணையப்பக்கத்திலிருந்து பெறப்பட்டவை.
மட்டக்களப்பு
அரியநேத்திரன் - 36,905 (நான்காவது இடம்)
அநுர - 38,832 + சஜித் - 139,110 + ரணில் - 91,132 = 267, 074
யாழ்ப்பாணம்
அரியநேத்திரன் - 116,688 (இரண்டாவது இடம்)
சஜித் - 121,177 + அநுர - 27,086 + ரணில் - 84,558 = 232, 821
வன்னி
அரியநேத்திரனன் - 36,377 (மூன்றாவது இடம்)
ரணில் - 52,573 + சஜித் - 95,422 + அநுர - 21,412 = 169, 347
திருகோணமலை
அரியநேத்திரன் - 18,524 (நான்காவது இடம்)
சஜித் - 120,588 + அநுர - 49,886 + ரணில் - 40,496 = 210, 970
அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டம்
சஜித் - 200,384 + அநுர - 108,971 + ரணில் - 86.589 = 395,944
அரியநேத்திரன் - 9985
வட, கிழக்கு:
சஜித் பிரேமதாசா - 676, 681 + ரணில் - 355,348 + அநுர - 246,187 = 1,278.216
அரியநேத்திரன் - 218,479
தென்னிலங்கையில் ஊழல், பொருளாதாரம் , இனவாதம் இவற்றை மையமாக வைத்து அநுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி தீவிர பிரச்சாரம் செய்தது. இனவாதத்தை எவ்விதம் தென்னிலங்கை அரசியல்வாதிகள், ஏனைய இன அரசியல்வாதிகள் மக்களைப் பிரித்தாளக் கையாண்டார்கள் என்பதை அநுர தெளிவாக எடுத்துக்காட்டிப் பிரச்சாரம் செய்தார். மலையகத் தொழிலாளர்களின் நிலையினை எடுத்துக்காட்டிப் பிரச்சாரம் செய்தார். நாட்டின் மக்கள் ஒற்றுமையினை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்தார்.
வடகிழக்கில் தமிழ்த்தேசியத்தை முன்வைத்து அரியநேத்திரன் பிரச்சாரம் செய்தார். அநுரவைப்போல் தமிழ் அரசியல்வாதிகள் இதுவரை காலமும் இனவாத உணர்ச்சி அரசியலைக் கைக்கொண்டு வந்தார்கள் என்று யாரும் பிரச்சாரம் செய்யவில்லை. தீண்டாமைக் கொடுமையினால் ஒடுக்கப்பட்டு வாழும் தாழ்த்தப்பட்ட சமூகங்களின் நிலை பற்றித் தமிழ் அரசியல்வாதிகள் எவரும் பிரச்சாரம் செய்யவில்லை.
இருந்தும் பெரும்பான்மையான வடகிழக்குத் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தை இத்தேர்தலின் முக்கிய அம்சமாகக் கருதவில்லை என்பதையே முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. அதற்காகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டன என்பது பொருள் அல்ல. அதைவிடப் பொருளாதாரம், ஊழல் போன்றவற்றையே அவர்களும் பிரதானமாகக் கருதினார்கள். இலங்கை அரசியலில் மாற்றம் வேண்டும் என்பதைத் தென்னிலங்கை மக்களைப்போல் அவர்களும் முக்கியமாகக் கருதினார்கள். அதன் விளைவே வடகிழக்கில் சஜித் , ரணில் மற்றும் அநுரவுக்குக் கிடைத்த 1,278.216வாக்குகள்.
தமிழர் அரசியலிலும் மாற்றம் தேவை என்பதை இம்முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. அநுர குமார திசாநாயக்க எவ்விதம் தென்னிலங்கையின் இனவாத அரசியலைப் பற்றிச் சுய விமர்சனம் செய்தாரோ அவ்விதமே தமிழர் தரப்பும் தமிழரின் உணர்ச்சி அரசியல் பற்றிச் சுய விமர்சனம் செய்ய வேண்டும்.
தமிழர்கள் மத்தியின் சாபக்கேடுகளாக இருக்கும் தீண்டாமை போன்ற விடயங்கள் பற்றிக் கவனம் செலுத்த வேண்டும். தமிழர் அரசியலில் ஊழலுக்கெதிராக, தீண்டாமைக்கெதிராக, பொருளாதாரச் சீர்திருத்தத்துக்காக, இதுவரை கால அரசியலைச் சுயபரிசோதனை செய்யும் புதிய தலைமுறை அரசியல்வாதிகளின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். இது காலத்தின் தேவை. உணர்ச்சி அரசியலில் மக்களைத் தொடர்ந்து வைத்து, உண்மைப் பிரச்சினைகளை மக்கள் அறியாது தடுத்து வைக்கும் உணர்ச்சி அரசியல்வாதிகள், ஊடகவாதிகள் ஒதுக்கப்பட வேண்டிய நேரமிது.
No comments:
Post a Comment