Sunday, February 9, 2020

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள் (3): காலவெளி மீறிய கவிஞனடி கண்ணம்மா!


நேற்று -இன்று - நாளை என்று
காலத்தின் ஒரு திசை பயணத்தில்
மீளுதல் சாத்தியமற்றதா? ஆயின்
'அறிவுணர்'வுக்கு அது இல்லை. ஆம்!
அது இல்லை. எது?
ஆம்! அதுதான். அதுதான்.ஆம்!
அது இல்லை.
தயக்கமெதுவற்று அதனால் தங்குதடையின்றிப்
பயணிக்க முடியும்.
நேற்று - இன்று - நாளை
காலத்தின் அர்த்தமற்றதொரு நிலை
'அறிவுணர்'வுக்குண்டு.
குவாண்டம் நுரையில் கிடக்கும் இருப்பில்
நேரத்துக்கும் அர்த்தமுண்டோ?
அங்கு அனைத்துமே சம காலத்தில்
இருப்பன. அறிவாயா கண்ணம்மா!
காலமே காலமாகி விட்ட நிலைதான்
குவாண்டம் நிலை. ஆம் ! அந்த நிலை.
என் 'அறிவுணர்'வு கொண்டு
என்னால் எங்கும் பயணிக்க முடியும் கண்ணம்மா!
உனக்கது புரியுமா?

நடிகர் நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) நினைவாக...

அண்மையில் தனது நூற்றி மூன்றாவது வயதில் மறைந்த நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) உலகச்சினிமாவில் முக்கியமானதோர் ஆளுமை. மூன்று தடவைகள் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். இவருக்குக் கிடைக்காத அவ்விருது இவரது மகன் மைக்கல் டக்ளசுக்குக் கிடைத்தது. ஆனால் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது பின்னர் கிடைத்தது. இவர் இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பன்முகத்திறமை மிக்க நடிகர்களிலொருவர்.
இவரை நினைத்தாலே முதலில் நினைவுக்கு வருவது ஸ்டான்லி கூப்ரிக்கின் இயக்கத்தில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்த ஸ்பார்ட்டகஸ் திரைப்படமே . அதில் அவர் ரோமானிய அடிமைகளிலொருவராக நடித்திருப்பார். அடுத்து ஓவியர் வான்கோவாக நடித்திருக்கும் லஸ்ட் ஃபோர் லைஃப் (Lust for Life - வாழ்வுக்கான காமம்) .ஓவியர் வான்கோவாக நடித்திருக்கும் அவர் அதற்காக ஆஸ்காரின் சிறந்த நடிகர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Wednesday, February 5, 2020

வ.ந.கிரிதரன் புகலிடச்சிறுகதைகள் (16) ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்'

தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நு¡லகக் கிளையொன்றில் தான் அவனைச் சந்தித்திருந்தேன். அவன் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாரி. அடிக்கடி நூலகத்தில் கண்காணிப்புடன் வலம் வந்து கொண்டிருந்தான். எனது மூத்த மகள் நூலகத்தின் சிறுவர் பிரிவில் நடைபெற்றுக் கொண்டிருந்த கதை கேட்கும் நேரத்தில் பங்கு கொள்வதற்காக வந்திருந்தாள். அதன் பொருட்டு நூலகத்திற்கு நானும் வந்திருந்தேன். குறைந்தது ஒரு மணித்தியாலமாவது செல்லக் கூடிய நிகழ்ச்சி. அந்த நேர இடைவெளியைப் பயனுள்ளதாகக் கழிப்பதற்காக நு¡லொன்றை எடுத்து அங்கு ஒதுக்குப் புறமாகவிருந்த நாற்காலியொன்றில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை என் அருகாக அவன் தன் கடமையினை செய்வதற்காக நடை பயின்றபொழுது எனக்குச் சிறிது கொட்டாவி வந்தது. அவனுக்கும் பெரியதொரு கொட்டாவி வந்தது. விட்டான்.

" என்ன தூக்கக் கலக்கமா " என்றேன்.

" இல்லை மனிதா! சரியான களைப்பு. வேலைப் பளு" என்று கூறிச் சென்றான்.

சிறிது நேரத்தில் மீண்டுமொருமுறை அவன் வந்த பொழுது அவனுக்கும் எனக்குமிடையில் சிறிது நெருக்கம் ஏற்பட்டிருந்தது.

Tuesday, February 4, 2020

வ.ந.கிரிதரனின் புகலிடக் கதைகள் (15): மனைவி!


- திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியான சிறுகதை. 'ஈழநாடு (கனடா) இதனை மீள்பிரசுரம் செய்திருந்தது. -

இரவு மணி பதினொன்றினை நெருங்கிக் கொண்டிருந்தது. யன்னலினூடி கட்டட முனிகள் தவமியற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஓட்டியற்ற ஓடமாகப் பிறை நிலவு. பலகணியில் அடைந்திருந்த புறாக்கள் சில அசைந்தன. அடுத்த அப்பார்ட்மென்ட்லிருந்த இதுவரை கத்திக் கத்தி யுத்தம் புரிந்து கொண்டிருந்த யமேய்க்கனும் அவனது வெள்ளைக் காதலியும் சற்று முன்னர் தான் சப்தமிழந்து ஓய்ந்து போனார்கள். மனோரஞ்சிதத்தின் நெஞ்சுப்புற்றிலிருந்து ஞாபகப் பாம்புகளெழுந்து படம்விரித்தாடின. முன்றிலில் சாய்வு நாற்காழியில் சாய்ந்திருக்கும் அப்பாவின் சாறத்தைக் கதிரையாக்கி அப்பாவுடன் சேர்ந்து அவளும் விரிந்து கிடக்கும் விண்ணின் அழகில் மனதொன்றிக் கிடப்பதிலெவ்வளவு சந்தோசம்! நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வான் அவளது நெஞ்சில எப்பொழுதுமேயொரு வித புதிர் கலந்த பிரமிப்பினை ஏற்படுத்தி விடும். அண்ணாந்து பார்க்கும் போது விரிந்து கிடக்கும் வெளியின் ஒரு பகுதியாக அந்தரத்தில் மிதந்து இயங்கும் இன்னொரு சுடராகத் தன்னையுணர்வாள். அச்சமயங்களில் இளகிக் கிடக்கும் மனது...நீண்ட பல வருடங்களிற்குப் பின்னால் வருகை தந்திருந்த நீண்ட வால் வெள்ளி பார்ப்பதற்காக அப்பாவுடன் ஒவ்வொரு நாள் அதிகாலையும் நேரத்துடன் எழுந்தது இப்பொழுதும் மனதினுள் பசுமையாகவிருக்கிறது.

வ.ந.கிரிதரன் புகலிடச் சிறுகதைகள் (14): மனித மூலம்


- தாயகம் (கனடா) சஞ்சிகையில் முதலில் வெளியான சிறுகதை. பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் பிரசுரமானது. ஸ்நேகா (தமிழகம்) / மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. -

கடந்த ஒரு மணிநேரமாக இவன் நடந்துகொண்டிருக்கின்றான். யார் இவன் என்கின்றீர்களா? வேறு யாருமில்லை. இவன்தான். இவன் இவனேதான். அவன் அவனேதான் என்று சொல்வதில்லையா? அது போல்தான். இவனும்இவனேதான். இவனிற்குக் கொஞ்சநாட்களாகவே ஒரு சந்தேகம். என்னவென்று கேட்கின்றீர்களா?

வேறொன்றுமில்லை. வழக்கமாக நம்நாட்டு வேதாந்திகளிற்கு வரும் சந்தேகங்களில் முக்கியமானதொன்றுதான். 'நான் யார்.நானென்றால் நான் யார்? இது தான் இவனது சந்தேகம். அதற்கு முன்னால் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அது என்ன? அதுதான் இவன் நடந்து கொண்டிருக்கின்ற பாதை, 'நான் கடந்து வந்த பாதை' என்றிருக் கின்றதே அது போல் தான் இவன் கடந்து கொண்டிருக்கின்ற இந்தப் பாதையும். இவன் சிறுவனாகயிருந்தபோது இந்தப் பாதையைப் பற்றி இவன் படித்திருக்கின்றான். இன்னமும் ஞாபகத்தில் இருக்கின்றது. இவனிற்குப்புவியியல் கற்பித்த ஆசிரியையின் ஞாபகம் கூட இருக்கின்றது. இவ்வளவுஞாபகசக்திமிக்க இவனிற்கு இவனைப் பற்றி மட்டும் அப்படியெப்படி சந்தேகம் வரலாம் என்கின்றீர்களா? பொறுங்கள்! சற்றே பொறுங்கள். அதற்கு முன் இவன் கடந்து செல்கின்ற பாதையைப் பற்றிச்சிறிது பார்ப்போம்.

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (13) : கணவன்


- தாயகம் (கனடா) சஞ்சிகையாக வடிவமெடுத்தபோது அதில் வெளியான எனது சிறுகதைகளிலொன்று. பின்னர் ஸ்நேகா (தமிழகம்) / மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது - 

பல்கணியிலிருந்து எதிரே விரிந்திருந்த காட்சிகளில் மனம் ஒன்றாதவனாகப் பார்த்தபடிநின்றிருந்தான் சபாபதி. கண்ணிற்கெட்டியவரை கட்டங்கள். உயர்ந்த, தாழ்ந்த, அகன்ற, ஒடுங்கிய கட்டடங்கள். டெஸ்மண்ட் மொறிஸ் கூறியது போல் மனிதமிருகங்கள் வாழ்கின்ற கூடுகள். நகரங்கள் மனித மிருகங்கள் வாழுகின்ற மிருககாட்சிச்சாலை என்று அவர் குறிப்பிட்டதில் தவறேதுமிருப்பதாகத் தெரியவில்லை. பார்க்கப் போனால் இன்றைய மனிதனின் அடிப்படைப் பிரச்சினை களிற்கு ஒரு வகையில்நகரங்களும் காரணமாயிருக்கலாம். மிருகங்களை கூண்டுகளில் அடைத்து வாழ நிர்ப்பந்திக்கும் போது அவற்றின் இயல்புகளில் ஏற்படும் மாற்றங்கள் பல, நகரத்தில் செறிந்திருக்கும் கட்ட டக் கூண்டுகளிற்குள் அடைப்பட்டுக் கிடக்கும் மனித மிருகங்களிலும் காணப்படுகின்றனவாம், நகரத்தில் இருந்து கொண்டுதானே இன்றைய மனிதன் சக மனிதன் மேல் அதிகாரத்தைப் பிரயோகிக்கின்றான். X=Y Y=Z, ஆகவே X-Z என்ற வகையான கணித சாத்திரத்திற்குரிய தர்க்க நியாயத்தின்படி பார்க்கப்போனால் இன்றைய மனிதனின் பிரச்சினைகளிற்கு முக்கிய காரணம் நகரத்து மனிதன் என்றல்லவா ஆகிவிடுகின்றது. இது பற்றியெல்லாம் சிந்திக்கும் மனநிலையில் சபாபதி இருக்கவில்லை.

அறிஞர் அண்ணா நினைவாக (அறிஞர் அண்ணாவின் நினைவு தினம் பெப்ருவரி 3)..... வ.ந.கிரிதரன் -


இதுவரை உலகில் நடைபெற்ற மரண ஊர்வலங்களில் மிகப்பெரியது கின்னஸ் உலக சாதனைக்குறிப்பின்படி அறிஞர் அண்ணாவின் மரண ஊர்வலம்தான். சுமார் 15 மில்லியன் மக்கள் (ஒன்றரைக்கோடி மக்கள்) கலந்துகொண்ட மரண ஊர்வலம் அது. (ஆதாரம்: https://www.bbc.com/news/blogs-magazine-monitor-25310508)
உலகத்தமிழர்கள் மத்தியில் அறிஞர் அண்ணாவுக்கு மிகுந்த மதிப்பு உண்டு. தமிழக அரசியலிலும் சரி, கலை, இலக்கிய வரலாற்றிலும் சரி திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு மறுக்க முடியாத இடமுண்டு. சமூதாயச்சீர்திருத்தக் கருத்துகளை, மதரீதியிலான சுரண்டல்களை, தமிழர்களின் தாழ்ந்து போன நிலைக்குக் காரணங்கள் எவை என்பது பற்றிய கருத்துகளை எனத் தமிழ் மக்களை விழிப்படைய வைத்ததில் திமுகவினருக்குச் சிறப்பானதோரிடமுண்டு.  அவர்களது பகுத்தறிவுக் கருத்துகளை, மதச்சார்பற்ற கருத்துகளை திரைப்படங்கள், எழுத்துகள் மூலம், உரைகள் மூலம் கொண்டு சேர்த்தவர்கள் அவர்கள். குறிப்பாக மதம் எவ்வளவுதூரம் மக்களை வர்ணரீதியாகப்பிரித்து வைத்திருக்கின்றது என்பதைப்புள்ளி விபரங்களுடன் , தர்க்கரீதியாக, சுவையான அடுக்குமொழித்தமிழில் எடுத்துக்காட்டியவை அறிஞர் அண்ணாவின் எழுத்துகள். உண்மையில் நாடகம், சினிமா போன்றவற்றில் நாற்பதுகளின் இறுதிக்காலத்திலிருந்து அறுபதுகளில் திமுக ஆட்சியினைப் பிடிக்கும் வரையிலான காலகட்டத்தில் தமிழகக்கலை, இலக்கியம் மற்றும் அரசியலில் திமுக வகித்த ஆரோக்கியமான பங்கு முக்கியமானது.

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (12) மான் ஹோல்!



- இச்சிறுகதை முதலில் தேடல் (கனடா) சஞ்சிகையில் வெளியானது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பகம் மற்றும் மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளியான 'அமெரிக்கா'த் தொகுப்பிலும் இச்சிறுகதை பிரசுரமாகியுள்ளது. -

ஜெயகாந்தனின் ரிஷிமூலத்தில் வரும் ராஜாராமனைப் போல்தாடி மீசை வளர்த்திருந்தான். கால்களில் ஒன்றினைச் சப்பணமிட்ட நிலையிலும் மற்றதை உயர்த்தி மடக்கி முழங்காலினை வலது கையினால் பற்றியிருந்தான். இடதுகையை பின்புறமாக நிலத்தில் ஊன்றியிருந்தான். முடிநீண்டு வளர்ந்து கிடந்தது, வாயினில் பாதித்துண்டு சிகரட் புகைந்த படியிருந்தது. கண்களில் மட்டும் ஒரு விதமான ஒளி வீச்சு விரவிக் கிடந்தது. மான் தோலில் அமர்ந்திருக்கும் சாமியாரைப் போல மான் ஹோலின் மேல் அமர்ந்திருந்தவனின் தோற்றமிருந்தது. இவன் நடைபாதை நாயகர்களிலொருவனென்றால் நான் ஒரு நடைபாதை வியாபாரி. "கொட் டோக்" (Hot Dog) விற்பது என் தொழில். வடக்கில்'தொலைவில் ஒண்டாரியோ பாராளுமன்றக் கட்டடம் தெரிந்தது. எமக்குப் பின்புறமாக புகழ்பெற்ற குழந்தைகளிற்கான வைத்தியநிலையம், 'சிக்கிட்ஸ்'ஹாஸ்பிடல் அமைந்து கிடந்தது சிறிது நேரம் சாமியார் ஒண்டாரியோ பாராளுமன்றத்தையே பார்த்தபடியிருந்தான். பிறகு சிரித்தான்.

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (11) : சுண்டெலிகள்!


- [முதலில் தாயகம் சஞ்சிகையில் (கனடா) வெளியான சிறுகதை. பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் வெளியானது. தமிழகத்திலிருந்து ஸ்நேகா (தமிழகம்)- மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட 'அமெரிக்கா' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. இது பற்றி எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவர்கள் தொகுப்புக்கான அணிந்துரையில் 'சுண்டெலி ஒன்றின் மூலம் உயிர்வாழ்வின் மனித அடித்தள இருத்தலியலின் தாற்பரியத்தைக் கூற முயன்றுள்ளார்.' என்று கூறியிருக்கின்றார்.] -

கரப்பான் தொல்லையைத் தாங்க முடியவில்லை. எல்லா வழிகளிலும் முயன்று பார்த்தாகி விட்டது. சீனாக்காரனின் 'சாக்' தொடக்கம் முயலாத வழிகளில்லை. வெற்றி கரப்பான் பூச்சிக்குத்தான். பேசாமல் தோல்வியை ஒப்புக்கொண்டு 'அப்பார்ட்மென்ற்' விட்டு 'அப்பார்ட்மென்ற்' மாறினால் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதைதான். கரப்பான் பூச்சிகளிற்குப் பதில் சுண்டெலிகளின் தொல்லை. கனடாவில் கட்டடங்கள்தான் உயர்ந்தனவே தவிர எலிகளல்ல. கொழுத்துக் கொழுத்து உருண்டு திரிந்த ஊர் எலிகளைப் பார்த்த எனக்கு இந்தச் சுண்டெலிகள் புதுமையாகத் தெரிந்தன. நாட்டுக்கு நாடு மண்ணிற்கு மண் உயிர்கள் பல்வேறு வடிவங்களில் உருமாறி வாழத்தான் செய்கின்றன.

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (10) : பொந்துப்பறவைகள்!




சோபாவில் படுத்திருந்தபடி டி.வியைப் பார்த்துக்கொண்டிருந்தான். கடந்த நான்கு மணித்தியாலங்களாக வலி அதிகமாகிநடக்கமுடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்தான். ஆஸ்பிரினை ஒழுங்காக எடுத்துவந்தால் இரவு வலிகுறைந்துவிடும். இதுமட்டும் பொறுமையாக யிருக்க வேண்டும். இத்தகைய சமயங்களில் அவனுக்கு ஊரிலிருக்கும் அம்மாவின் ஞாபகம் வந்துவிடும். அவனை அப்படி இப்படி அசைய விடமாட்டாள். வெந்நீரால் மூட்டுகளுக்கு ஒத்தடம் கொடுத்து விடு வாள். அவளுக்கு எப்பொழுதுமே அவனென்றால் செல்லம்தான்.

இத்தகைய சமயங்களில் அத்தகைய ஆறுதலும் வேண்டித்தான் இருக்கிறது. அதையெல்லாம் இங்கு எதிர்பார்க்க முடியாது. அவன் தனித்து இந்த பச்சிலர் அப்பார்ட்மெண்டில் வாழ்கிறான். காங்கிரீட் காட்டினுள் ஒரு பொந்து வாழ்க்கை. அவனிற்கு எதிர்ப்புறமாகவுள்ள பொந்தில் ஆங்கிலக் குடும்பம், இடப்புறம் ஒரு சீனக்குடும்பம். வலப்புறமாக. ஒரு யமேக்கன், 'இந்த யமேய்கன் கறுவல்களை யெல்லாம் அடித்துக்கலைக்கவேண்டும். குடியும் பெட்டையும் மருந்தும் இருந்தால் இதுகிற்குக் காணும் ஒழுங்காக உழைத்துப் படித்து வாழ இதுகளாலை முடியாது. களவெடுக்கிறதும் சுட்டுத்திரியிறதும். சீ.' இதுமுருகேசனின் கறுப்பினத்தவர்களைப் பற்றிகுறிப்பாக யமேய்க்கன் நாட்டுக் கறுப்பின மக்களைப்பற்றி எண்ணப்போக்கு. இவ்விதம் முத்திரை குத்தும் பழக்கம் அவனது தொட்டிற்பழக்கம் சுடுகாடுவரை போகாமல் விடாது. தொப்பி பிரட்டிகள், மோட்டுச் சிங்களவன் என்ற கருதுகோள்களின் பரிணாம வளர்ச்சி.

Monday, February 3, 2020

வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (2): மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ?


உண்மையென்று ஏதேனுமொன்றுண்டா ?
நான் பார்ப்பது, நீ இருப்பது இதுவெல்லாம்
உண்மையென்று எவ்விதம் நான் நம்புவது ?
நீயே சொல். நீ சொல்கின்றாய் நீ இருக்கிறாயென்று.உண்மையாக
நீ இருக்கின்றாயென்று.
என்னை விட்டுத் தனியாக எப்பொழுதுமே
இருப்பதாக நீ கூறுகின்றாய்.
எவ்விதம் நம்புவது.
ஆயிரம் மில்லியன் ஒளிவருடங்களிற்கு
அப்பாலிருந்து இருந்து வரும்ஒளிக்கதிர்களுக்கும்
உன்னிலிருந்து வரும் ஒளிக்கதிர்களுக்கும்
இடையிலென்ன வித்தியாசம் ?நேரத்தினைத் தவிர.

உனக்கும்எனக்குமிடையில்எப்பொழுதுமே ஒரு தூரம்
இருக்கத் தானே செய்கிறது. அது எவ்வளவுதான் சிறியதாக
இருந்த போதிலும்.

எப்பொழுதுமே ஒரு நேரம் இருக்கத் தானே செய்கிறது
கணத்தினொரு சிறுபகுதியாக என்றாலும்.

நீ இருப்பதாக நீ சொல்லுவதைக் கூட
நான் அறிவதற்கும் புரிவதற்கும் எப்பொழுதுமே இங்கு
நேரமுண்டு. தூரமுமுண்டு கண்ணே!

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (9): கட்டடக் கூட்டு முயல்கள்


- இச்சிறுகதை தேடல் (கனடா) சஞ்சிகையில் முதலில் வெளியானது. பின்னர் பதிவுகள் & திண்ணை இணைய இதழ்களில் வெளியாகியது. -

நீண்ட நாட்களின் பின்னால் நண்பன் இருப்பிடம் சென்றிருந்தேன். ஓங்கி உயர்ந்திருந்த கட்டடக் காட்டு மரமொன்றின் உச்சியில் அமைந்திருந்தது அவனது கூடு. டொராண்டோவின் மத்தியில் அமைந்துள்ள இந்தக் கட்டட மரத்திற்கு ஒரு பெருமையுண்டு. இரண்டு வயது முதிர்ந்த ஆண் தமிழர்களும், ஒரு நடுத்தர வயதுத் தமிழ்ப் பெண்ணும் பல்கணியிலிருந்து பாய்ந்து தமது வாழ்வினை முடித்துக் கொண்ட பெருமை இதற்குண்டு. அண்மைக் காலமாகவே இத்தகைய தற்கொலைகள் இங்கு அதிகரிக்கத் தான் தொடங்கி விட்டிருந்தன. இவ்வளவு வசதிகள் இருந்தும் இவர்கள் ஏனிவ்விதம் தற்கொலை செய்து கொள்கின்றார்களோ?

நண்பன் இன்னுமொரு பிரமச்சாரி. வழக்கமாக ஒவ்வொரு முறை அவனது இருப்பிடம் செல்லும் போதெல்லாம் ஏதாவதொரு மாற்றத்தை அவனது உறைவிடத்தில் அவதானிக்கக் கூடியதாகவிருக்கும். இம்முறையும் அவ்வகையிலொரு மாற்றம். நண்பன் ஒரு கூட்டினுள் இரு முயல்கள் வளர்க்கத் தொடங்கியிருந்தான்.

வ.ந.கிரிதரனின் புகலிடச்சிறுகதைகள் (8): யன்னல்!



- இச்சிறுகதை முதலில் உயிர்நிழல் (பிரான்ஸ்) சஞ்சிகையில் முதலில் வெளியாகியது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியாகியது. -

யன்னலினூடு உலகம் எதிரே விரிந்து கிடக்கின்றது. யன்னலினூடு விரிந்து கிடக்கும் உலகைப் பார்ப்பதில் ரசிப்பதில் இருக்கும் திருப்தி இருக்கிறதே.. அது ஒரு அலாதியானதொரு சுகானுபவம். ஒரு சட்டத்தினில் உலகைப் படம் பிடித்து வைத்துப் பார்ப்பதைப் போன்றதொரு ஆனந்தம். 'பேப்' வீதி வழியாகப் போய்க்கொண்டிருக்கும் பல்வேறு விதமான மனிதர்களைப் பார்ப்பதில் ஒரு 'திரில்' இருக்கத்தான் செய்கின்றது. கரிபியன் தீவுகளைச் சேர்ந்த 'யமேய்க்க' மனிதர்கள்; கயானா இந்தியர்கள்; இவர்கள் வெள்ளயர்களால் கூலிவேலைகளிற்காக ஆரம்பத்தில் கொண்டு செல்லப் பட்டவர்களின் சந்ததியினர். 'பேப்' வீதியை அண்மித்துள்ள பகுதி கிரேக்கர்கள் அதிகளவில் வாழும் பகுதி. டொராண்டோ மாநகரில் இது போல் பல பகுதிகளைக் காணலாம். 'சிறு இந்தியா' , 'சிறு இத்தாலி'..இப்படி பல பகுதிகள்.

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (7) புலம் பெயர்தல்!


- மானசரோவர்.காம், திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியான சிறுகதை. -

நிலத்திற்கு மேல் ஐந்து அடுக்குகளையும் கீழ் ஐந்து அடுக்குகளையும் கொண்ட வாகனத்தரிப்பிடமொன்றின் பாதுகாவலர் ஆசைப்பிள்ளை. ஆசைப்பிள்ளை ஒரு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர். ஊரில் அரச திணைக்களமொன்றில் 'கிளாக்க'ராகக் (குமாஸ்தாவாக) காலத்தை ஓட்டியவர் கிளாக்கர் ஆசைப்பிள்ளை. இலங்கையில் அரசபடைகளின் அட்டகாசம் அதிகமாகயிருந்த சமயத்தில் நாட்டை விட்டுத் தலை தப்பினால் புண்ணியமென்று கனடாவுக்கு தலையை மாற்றி ஓடிவந்தவர். ஆரம்பத்தில் கோப்பை கழுவிப்பார்த்தார். தொழிற்சாலையொன்றைக் கூட்டிக் கழுவிப்பார்த்தார். கிளாக்கராக ஊரில் வலம் வந்தவரால் தொடர்ந்தும் இத்தகைய வேலைகளைச் செய்ய முடியவில்லை. இதற்கு எளிதான வழியாகப் பாதுகாவலர் வேலை படவே ஒரு பிரபல பாதுகாவலர் நிறுவனமொன்றில் பாதுகாவலராக வேலைக்கமர்ந்து விட்டார். நள்ளிரவிலிருந்து அதிகாலைவரை வேலை. அன்றும் வழக்கம் போல தன் வேலையை ஆரம்பித்தார். அப்பொழுது தான் அந்த வெள்ளையினத்தவன் தனது காரினைத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு வந்தான். வந்தவன் ஆசைப்பிள்ளையைப் பார்த்ததும் அவருக்கு முகமன் கூறினான்.

வ.ந.கிரிதரனின் புகலிடச்சிறுகதைகள் (6): சீதாக்கா!

[ பதிவுகள்.காம், திண்ணை,காம் & சுதந்திரன் (கனடா) ஆகியவற்றில் வெளியான சிறுகதை. இச்சிறுகதை முதலில் தாயகம் (கனடா) சஞ்சிகையில் 'நவசீதா' என்னும் பெயரில் குறுநாவலாக வெளியானது. அதனையே பின்னர் 'சீதாக்கா' என்னும் சிறுகதையாக்கினேன்.]

1.
இன்னும் இருள் முழுதாக விலகியிருக்கவில்லை. இலையுதிர்காலம் தொடங்கி விட்டதால் இலேசாகக் குளிர் தொடங்கி விட்டிருந்தது. டொராண்டோ பஸ் நிலையத்தில் பயணிகளின் களை கட்டத் தொடங்கியிருந்தது. மான்ரியால் செல்லும் நண்பனை அனுப்பி விட்டுப் புறப்படுவதற்கு ஆயத்தமான போதுதான் "மன்னிக்கவும். நீ ஸ்ரீலங்கா நாட்டவனா?" என்று ஆங்கிலத்தில் ஆண் குரல் கேட்கவே திரும்பினேன். எதிரே வெள்ளையினத்தைச் சேர்ந்த பஸ் டிரைவரொருவன் நின்றிருந்தான்.
"ஆம். நண்பனே. என்ன விடயம்" என்றேன்.

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (5): "நடுவழியில் ஒரு பயணம்!"



[ பதிவுகள், திண்ணை இணைய இதழ்களில் வெளியாகிய இச்சிறுகதை சிங்கள மொழிக்கு எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்தவினால் மொழிபெயர்க்கப்பட்டு லக்பிமா பத்திரிகையில் வெளியானது. ] 

பார்வைக்கு சோமாலியனைப் போலிருந்தான். 'டவரின்' வீதியும் 'புளோர்' வீதியும் சந்திக்குமிடத்தில் , தென்மேற்குத் திசையில் (இங்கு 'தொராண்டோ' நகரில் வீதிகளெல்லாமே கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்காகத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் திசைகளை மையமாக வைத்து முகவரிகளைக் கண்டுபிடிப்பதோ அல்லது இருப்பிடங்களை அறிந்து கொள்வதோ மிகவும் இலகுவானது). 'பஸ்'சை எதிர்பார்த்து நின்றிருந்தான். காலம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. இரவு பாதுகாவற் பணியினை முடித்துக் கொண்டு என்னிருப்பிடம் திரும்புவதற்காக 'பஸ்' தரிப்பிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சமயத்தில்தான் அவனை நோக்கினேன். நள்ளிரவில் பணி முடிந்து இருப்பிடம் திரும்பும் சமயங்களில் இவ்விதம் 'பஸ்'சினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சந்தர்பங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுகள். இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, இரவை, இரவு வானை எல்லாமே இரசித்துக் கோண்டிருப்பது என் ஆர்வங்களிலொன்று. இவ்விதமான இரசித்தல் மூலம் நான் அறிந்து கொண்டவை ஏராளம். ஏராளம். நூல்கள், பத்திரிகைகள் போன்ற வெகுசன ஊடகங்கள் மூலம் நான் அறிந்தவற்றை விட இவ்விதமான பொழுதுகளில் நான் அறிந்து கொண்டவை, உணர்ந்து கொண்டவை மிக மிக அதிகம். 'லாண்ட்ஸ்டவு'னுக்கருகிலிருந்த கேளிக்கை விடுதியான 'ஹவுஸ் ஆவ் லங்காஸ்டர்'இலிருந்து சில நிர்வாண நடனமாதர் வெளியில் வந்திருந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி மல்லர்களைப் போன்ற தோற்றமுடைய இரு வெள்ளையர்கள் , பார்வைக்கு இத்தாலியர்களைப் போலிருந்தார்கள், அப்பெண்களுடன் அளவளாவியபடி கவசங்களாக நின்றார்கள். வீதியின் அடுத்த பக்கத்தில், வடபுறத்தில், சில கறுப்பின போதை மருந்து விற்றுப் பிழைக்கும் சுய வியாபாரிகள் சிலர் வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்தபடியிருந்தார்கள். மேலும் சிலர் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள் என்னைப் போல். இததகையதொரு சந்தர்ப்பத்தில்தான் நான் அவனை அந்த பஸ் தரிப்பிடத்தில் சந்தித்தேன்.

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (4): சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை!


ஈழநாடு (கனடா) பத்திரிகையில்
[ பதிவுகள், திண்ணை, ஈழநாடு (கனடா) ஆகியவற்றில் வெளியான இச்சிறுகதை ஞானம் சஞ்சிகை வெளியிட்ட புலம்பெயரிலக்கியத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.]

இந்த அப்பா எப்பொழுதுமே இப்படித்தான். Harry Potter and The Goblet of fire புத்தகத்தைக் கடைசியில் ஒரு மாதிரி வாங்கித் தந்து விட்டார். ஜெ.கெ.ராவ்லிங்கின் ஹரி பாட்டர் தொடர் புத்தகங்கள் எனக்குப் பிடித்த தொடர்களிலொன்று. ஆனால் இந்தப் புத்தகத்தை மட்டும் அப்பா ஒவ்வொருமுறையும் வாங்குவதற்குச் சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடித்துக் கொண்டு வந்தார். காரணம் இதன் விலைதான் தான். முப்பத்தைந்து கனடியன் டொலர்கள். சென்ற முறை சாப்டர்ஸ்ஸிற்குக் கூட்டிப் போனபோது இந்தப் புத்தகத்தை வாங்கித் தருவதாகத் தான் கூட்டிப் போனார். ஆனால் வழக்கம் போல் இறுதியில் கையை விரித்து விட்டார். 'உனக்கம்மா இந்த ஒரு புத்தகத்திற்குப் பதிலாக இரண்டு 'துரதிருஷ்ட்டவசமான சம்பவங்கள்' ( The unfortunate events ) புத்தகங்களை வாங்கித் தருகிறேன்' என்று வாங்கித் தந்து விட்டார். லெமொனி சினிக்கெட்டின் 'துரதிருஷ்ட்டவசமான சம்பவங்கள்' தொடரும் எனக்கு மிகவும் விருப்பமான தொடர் தான். இந்ததொடரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் மிஸ் எலிஸபெத். எனது கிளாச் டீச்சர். தாய் தகப்பனில்லாத வயலட், கிளாஸ், குழந்தை சனியை பொல்லாத ஓலாவ் படுத்தும் பாடிருக்கிறதே. பாவம் அவர்கள். அவர்களது அப்பா அம்மாவை இந்தப் பொல்லாத ஓலாவ்தான் கொன்று விட்டான். இப்பொழுது இவர்களின் சொத்தினை அடைவதற்கும் முயன்று கொண்டிருக்கின்றான். திரு. போ (Mr.Poe) மட்டுமில்லையென்றால் இவர்களது பாடு இன்னும் அதிகத் துன்பம் நிறைந்ததாகவிருந்திருக்கும். இந்தப் புத்தகங்களென்றால் எனக்கு ரொம்பவும் உயிர். அப்பாவுக்கும் தான். எந்த நேரமும் புத்தகம் புத்தகமாய் வாங்கி வருவார். ஆனால் ஒவ்வொருமுறையும் இந்தத் தொடர் புத்தகங்களை வாங்கித் தருவதற்கு மட்டும் அப்பா எப்பொழுதுமே முதலில் தயங்கத் தான் செய்கிறார். அது தான் ஏனென்று இன்னும் எனக்குப் புரியவில்லை. இப்படித்தான் மேரி பாப் ஆஸ்பார்னின் மந்திர மர வீடு (Magic Tree House) தொடர் நூல்களையும் முதலில் வாங்கித் தர அப்பா தயங்கிக் கொண்டிருந்தார். எனக்கு மிகமிகப் பிடித்த தொடர் இது தான். ஜக்கும் ஆன்னியும் ஒவ்வொரு முறையும் மந்திர மர வீட்டிலுள்ள புத்தகங்களினூடு கடந்த காலம், வருங்காலமென்று அலைந்து திரிந்து வருவதைப் போல் எனக்கும் அலைந்து திரிந்து வர ஆசைதான். நாங்கள் இருப்பதோ நகரத்துத் தொடர்மாடி இல்லமொன்றில். இதற்கெல்லாம் சாத்தியமேயில்லை.அப்பா எப்பொழுதுமே சொல்லிக் கொண்டுதானிருக்கிறார் 'கொஞ்சம் பொறம்மா! இன்னும் இரண்டு வருடங்களிற்குள் வீடு வாங்கி விடுகின்றேன்' என்று. இந்த அப்பாவை ஒரு போதுமே நம்ப முடியாது. ஆனால் அப்பவுக்கு நான் நிறையத் தொந்தரவு தான் செய்கின்றோனோ தெரியவில்லை. பாவம் அப்பா! என்னால் அவருக்கு நிறையச் செலவு. தொலைக் காட்சியில் செய்திகள் பார்ப்பதற்கு அப்பாவுக்கு என்னால் நேரமே கிடைப்பதில்லை. பாடசாலை இல்லாத நேரங்களில் தூங்கப் போகும் மட்டும் எனக்குத் தொலைக்காட்சி பார்க்கவேண்டும். எனக்குப் பிடித்தமான காட்சிகள் பார்த்துக் கொண்டிருப்பேன். 'டி.வி.ஒ.கிட்ஸ்' நிகழ்ச்சியினை நடத்தும் பில், யூலி ஒன்று, யூலி இரண்டு, படி (Patty), சிசெல் எல்லோரும் நன்றாக நடத்துவார்கள். ஆனால் எனக்குப் பிடித்தவை 'பெரு வெடிப்பு' (The Big Bang) காட்சி தான். வயலட் பேர்லினும், ஹேரித் ஜோன்ஸ்சும் இணைந்து நடாத்தும் நிகழ்ச்சி. விளையாட்டுகள், புதிர்கள் எல்லாவற்றையும் எவ்விதம் செய்வதென்று விளக்கம் தருவார்கள். நீல் பஞ்சனானின் ' ஓவியத் தாக்குதலும்' (Art Attack) எனக்கு மிகவும் பிடித்தவை. வீட்டில் ப'விக்கப் படாமலிருக்கும் பொருட்களைக் கொண்டு எவ்விதம் ஓவியங்களை உருவாக்குவதென்று அழகாக நீல் செய்து காட்டுவார். மார்டின் க்ராட், கிறிஸ் கிராட் சகோதரகளின் 'சுபூமொவூ' ( Zoboomofoo) , பொம்மை லீமா எல்லாம் என்னைக் கவர்ந்தவை. இவர்களின் 'கிராட் உயிரினங்கள்' காட்சியும் நல்லதொரு காட்சி. மிருகங்களைப் பற்றிய தகவல்களைத் தரும் காட்சிகளிவை.

வ.ந..கிரிதரன் புகலிடச் சிறுகதைகள் (3): தப்பிப் பிழைத்தல்!



[ நண்பர்களே! என் புதிய நண்பர்களுக்காகவும், ஏற்கனவே வாசிக்காத பழைய நண்பர்களுக்காகவும் புகலிட வாழ்வனுபவத்தை விபரிக்கும் எனது சிறுகதைளை அறிமுகப்படுத்தலாமென்று நினைக்கின்றேன். புகலிடம் நாடிப் புலம் பெயரும் ஒருவர் எதிர்கொள்ளும் அனுபவங்கள் பல் வகையின. அவற்றை வெளிப்படுத்தும் கதைகள் பலவற்றை எழுதியுள்ளேன். அவற்றைப் படிப்படியாக அறிமுகப்படுத்துவேன். வாசியுங்கள். உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.] 


அந்தக் கழிவுகள், குப்பைகளைச் சேகரிப்பதற்கான தாங்கி அல்லது பெட்டி நாங்கள் குடியிருந்த தொடர்மாடிக் கட்டடத்திற்கருகாக சென்று கொண்டிருந்த வீதியில் மாநகராட்சியினால் அமைக்கப் பட்டிருந்தது. இவ்விதமான குப்பை சேகரிக்கும் பெட்டிகளை மேற்கு நாடுகள் பலவற்றில் ஆங்காங்கே வைத்திருப்பார்கள். மூன்றாம் உலகத்து நாடுகள் பலவற்றில் இவற்றைக் காண்பதே அரிது. இத்தகைய பெட்டிக்குள் குப்பைகளைக் கழிவுப் பொருட்களைப் போடவேண்டுமென்றால் போடுவதற்கு வசதியாக கைகளால் உட்புறமாகத் தள்ளக் கூடியமூடியுடன் கூடியதொரு துவாரம் வைக்கப் பட்டிருக்கும். மனிதர்களால் மட்டும் தான் குப்பைகளைல் இதற்குள் போட முடியும். ஏனெனில் கைகளைப் பாவித்து மூடியை உட்புறமாகத் தள்ளுவதற்குரிய திறமையுள்ள உயிரினத்தால் தான் இது முடியும். ஒருவேளை நன்கு பழக்கப் பட்ட மனிதக் குரங்கான சிம்பான்ஸி அல்லது கொரில்லாக் குரங்குகளால் முடியக் கூடும்.

வ.ந..கிரிதரன் புகலிடச் சிறுகதைகள் (2) ; சொந்தக்காரன்!


* கணையாழி டிசம்பர் 2000 'கனடா சிறப்பிதழில் வெளியான சிறுகதை. - 

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களாக விடாமல் உறை பனி மழை பொழிந்து கொண்டிருந்தது. வீதிகளெல்லாம் உறை பனி படிந்து, படர்ந்து ..போதாதற்குக் குளிர் வேறு. சோமசுந்தரம் மணியைப் பார்த்தார். இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவரிற்கு இந்தக் குளிரிலை, கொட்டுகின்ற உறை பனி மழையில் நனைந்தபடி வேலைக்குச் செல்லவே விருப்பமில்லாமலிருந்தது. ஊரங்கிக் கிடக்கும் இந்தச் சமயத்தில் சாமத்துக் கோழியாக அலைய வேண்டியிருக்கிறதே என்று நொந்து கொள்ளத்தான் முடிந்தது. ஊரிலை அவர் ஒரு பௌதிக ஆசிரியர். அவரிடம் பயின்ற எத்தனை மாணவர்கள் 'டாக்டர்கள்', 'எஞ்சினியர்கள்' என்று வந்திருக்கின்றார்கள். ஆனால் ..இங்கோ அவரோ ஏழு நாட்களும் வேலை செய்து கனடாவின் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்பும் நல்லதொரு 'இமிகிரண்ட்'. வார நாட்களில் தொழிலாளி; வார இறுதி நாட்களில் தொழிலாளியைக் கண்காணிக்கும், முதலாளிக்கு ஏவல் புரியும் ஒரு கடமை தவறாத பாதுகாவலன். சற்று முன்னர் அவரது மேலதிகாரி ஜோ குறோபட் தொலைபேசியில் கூறியது நினைவிற்கு வந்தது.

வ.ந..கிரிதரன் புகலிடச் சிறுகதைகள் (1): நீ எங்கிருந்து வருகிறாய்?'


நண்பர்களே! என் புதிய நண்பர்களுக்காகவும், ஏற்கனவே வாசிக்காத பழைய நண்பர்களுக்காகவும் புகலிட வாழ்பனுபவங்களை விபரிக்கும் எனது சிறுகதைளை அறிமுகப்படுத்தலாமென்று நினைக்கின்றேன். அதன் விளைவாக ஒரு சிறுகதை 'நீ எங்கிருந்து வருகின்றாய்?' பதிவுகள், திண்ணை & இசங்கமம் ஆகிய இணைய இதழ்களில் வெளியான சிறுகதை.
புகலிடம் நாடிப் புலம் பெயரும் ஒருவர் எதிர்கொள்ளும் அனுபவங்கள் பல் வகையின. அவற்றை வெளிப்படுத்தும் கதைகள் பலவற்றை பதிவுகள் , திண்ணை ஆகிய இணைய இதழ்களில் , தாயகம், தேடல் , கணையாழி ஆகிய சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளேன். அவற்றைப் படிப்படியாக அறிமுகப்படுத்துவேன். வாசியுங்கள். உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.


கி.பி.1964ஆம் ஆண்டு தை மாதம் 14ந்திகதி, தமிழ் மக்களின் முக்கிய திருநாளான தைப்பொங்கள் திருநாளன்று, அவன் இந்து சமுத்திரத்தின் முத்து , சொர்க்கம் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற, ஒரு காலத்தில் போர்த்துகேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களின் காலனியாக விளங்கிய, 'சிலோன் (Ceylon) என்றழைக்கப்பட்ட, தீவான இன்று ஸ்ரீலங்கா என்றழைக்கப்படுகின்ற இலங்கைத் தீவில் அவதரித்தான். அவன் அவதரித்தபொழுது அவனுக்கொன்றும் இவ்விதம் அவனது வாழ்க்கை பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் அலைக்கழியுமென்று தெரிந்திருக்கும் வாய்ப்பு இருந்ததில்லை. ஆனால் தீவின் தொடர்ச்சியான அரசியல் நிலைகள் அவனைப் புலம்பெயர வைத்து விட்டன. இன்று அவன் வட அமெரிக்காவின் முக்கியமானதொரு நாடான கனடாவின் குடிமகன். இது அவனைப்பற்றிய சுருக்கமான வரலாறு. என்புருக்குமொரு அதிகாலைப் பொழுது. அவன் வேலை செல்வதற்காக போக்குவரத்து வாகனத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றான். அருகிலொரு வெள்ளையின நடுத்தர வயதினன் அவனுக்குத் துணியாக. அவர்களிருவரையும்தவிர வேறு யாருமே அச்சமயத்தில் அங்கிருக்கவில்லை. நிலவிய மெளனத்தினைக் கலைத்தவனாக அந்த வெள்ளையினத்தவன் அவர்களிருவருக்குமிடையிலான உரையாடலினைத் தொடங்கினான்:

நா,பார்த்தசாரதியின் கவிதையொன்று!

"நிலவைப் பிடித்துச் - சிறு
கறைகள் துடைத்துக் - குறு
முறுவல் பதிந்த முகம்,"

நா,பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் நாவலில் நாயகன் அரவிந்தன் நாயகி பூரணியைப்பற்றி எழுதிய கவிதை. நா.பா தனது நாவல்களில் இது போன்ற கவிதை வரிகளை அதிகமாகப் பாவிப்பார். எழுத்தாளர் கல்கியும் பொன்னியின் செல்வனில் இது போன்று தனது கவிதை வரிகளைப் பாவித்திருப்பார். நினைவுக்கு வருகின்றது.

குறிஞ்சி மலரில் வரும் அரவிந்தனின் பூரணி பற்றிய கவிதை வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை.


ஜூலியனோ ஜெம்மா (Giuliano Gemma)


இத்தாலியர்களால் உருவாக்கப்பட்ட வெஸ்டேர்ன் திரைப்படங்களை ஆரம்பத்தில் 'ஸ்பாகட்டி வெஸ்டேர்ன்' (Spaghetti Western ) என்று மேற்குலகம் எள்ளி நகையாடினாலும் அவற்றின் வெற்றி பின்னர் அவற்றையும் எள்ளி நகையாடிய மேற்குலகத்தை ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டது. ஸ்பாகட்டி என்பது இத்தாலியர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமானது நமது தோசையைப்போல. கிளின்ட் ஈஸ்வூட் நடித்துப்புகழ்பெற்ற 'The Good, the Bad and the Ugly ' வெஸ்டேர்ன் திரைப்படமும் இத்தாலியர்களால் உருவாக்கப்பட்டதுதான். சேர்ஜியோ லியோனின் (Sergio Leone) இயக்கம், 'டோனினோ டெலி கொலி'யின் (Tonino Delli Colli) ஒளிப்பதிவு , 'எனியோ மோரிக்கோனின்' (Ennio Morricone) இசை நடிகர்களின் நடிப்பு இவையெல்லாம் சேர்ந்து இப்படத்தை வரலாற்றில் நிலைத்து நிற்க வைத்து விட்டதெனலாம்.

இவ்விதமாக இத்தாலியர்களால் உருவாக்கப்பட்ட வெஸ்டேர்ன் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர்களிலொருவர்தான் ஜூலியனோ ஜெம்மா (Giuliano Gemma). ஆரம்பத்தில் சண்டைக்காட்சிகளில் நடித்து வந்த இவருக்கு நடிப்புடன் கூடிய பாத்திரங்களை அளித்துப் பின்னாளில் இவர் புகழடையக் காரணமானவர் இயக்குநர் டுச்சியோடெஸ்சாரி (Duccio Tessari. இத்தாலியர்களால் உருவாக்கப்பட்ட பல வெஸ்டேர்ன் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் இவர். இவரது மகளான வேரா ஜெம்மாவும் நடிகையே.

அழியாத கோலங்கள்: ஜிம் பிறவுனின் 'எல் கொண்டர்'

பொதுவாக வெஸ்டேர்ன் திரைப்படங்களில் கறுப்பின நடிகர்கள் கதாநாயகர்களாக நடிப்பது குறைவு. ஆனால் அவ்விதமாக நடித்த நடிகர் ஒருவரின் திரைப்படத்தையும் என் பதின்ம வயதுகளில் (நான் பார்த்துக் குவித்த ஆங்கிலத் திரைப்படங்களில்) பார்த்திருக்கின்றேன். இவரது ஓரிரு திரைப்படங்களே அக்காலகட்டத்தில் வெளிவந்ததாக நினைவு. இவரது படங்களைப்பார்ப்பதற்கு இளைஞர்கள் முண்டியடிப்பார்கள். அந்த நடிகர்தான் ஜிம் பிறவுண். அந்தத்திரைப்படம் 'எல் கொன்டொர்' (El Condor). பாதுகாப்பான மண் கோட்டையொன்றில் வைக்கப்பட்டிருந்த தங்கத்தைக் கொள்ளையடிப்பதற்காக இவரும், எனக்கு மிகவும் பிடித்த இன்னுமொரு நடிகரான லீ வான் கிளீவ் (Lee Van Cleef) இணைந்து அமெரிக்க இந்தியர்களின் குழுவொன்றும் செல்வார்கள். கண்களைச் சுருக்கி, இதழ்க்கோடியில் இலேசாகச் சிரிப்பைத் தவழவிடும் லீ வான் கிளீவ்வின் நடிப்பு எப்பொழுதும் என்னை மிகவும் கவர்ந்ததொன்று. The Good The Bad and The Ugly திரைப்படத்தில் கெட்டவனாக (The Bad) நடித்திருப்பவர் இவரே. இவரது பல திரைப்படங்கள் அக்காலகட்டத்தில் யாழ்நகரில் திரையிடப்பட்டன. 'சபாட்டா (Sabata)' தொடர் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. 'அடியோஸ் சபாட்டா', 'ரிடேர்ன் ஆஃப் சபாட்டா' ஆகியவை நினைவில் நிழலாடுகின்றன.

வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (1): காலவெளிச்சித்தனின் மடலொன்று!



ஒளிக்கூம்புக்குள் விரிந்து , சுருங்கி,
மீண்டும் விரிந்து
கிடக்குமென் அண்டம்.
அடியே! அண்டத்தில் நீ இங்கெங்கு சென்றிடினும்
உன்னால் ஒருபோதுமே என்னிடமிருந்து
மறைந்துவிடவே முடியாதடி.
ஏனென்று கேட்கின்றாயா?
நீயே அறிந்துகொள்
நீயே புரிந்துகொள்
என்று நானுனக்குக்கூறிடப் போவதில்லை.
உன் சிந்திக்குமறிவுக்கும் வேலை
வைக்கப்போவதில்லை.
நானே  கூறுகின்றேன் விளக்கம் கண்ணம்மா!
உன்னால் புரிந்துகொண்டிட முடிந்தால்
புரிந்துகொள்.
ஏனென்றால் இப்பிரபஞ்சத்துடனான என் உறவு
ஏன் உன் உறவும் கூடத்தான்
ஒருபோதுமே பிரிக்கப்பட முடியாதடீ.
இருந்தாலும் கவலையை விடு.
இன்னும் சிறிது விளக்குவேன்.
நீ, நான் , இங்குள்ள அனைத்துமே
துகள்களின் நாட்டியம்தாம்.
சக்தியின் வடிவம்தான்.
புரிந்ததா சகியே!

Saturday, January 18, 2020

கவிதை: இது புதிய கோணங்கியின் புலம்பலல்ல! - வ.ந.கிரிதரன் -


நள்ளிரவு. நீண்டு விரிந்திருக்கும் விண்ணில்
நகைக்கும் சுடர்க்கன்னிகள்தம் பேரழகில்
மனதொன்றிக்கிடந்திருந்த சமயம்
வழக்கம்போல் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தேன்.
இரவுகளில் தனிமைகளில் சிந்தித்தலென்பதென்
பிரியமான பொழுதுபோக்குகளிலொன்று.
அவ்விதமான சமயங்களில் பிரபஞ்சம் பற்றி,
அண்டத்தினோரணுவென விளங்கும் 

நம்முலகு,
நம்மிருப்பு பற்றி 

எண்ணுவதுமென் விருப்பு.
பரிமாணக்கைதியென் புரிதலுக்குமொரு சுவருண்டு.
சுவரை மீறுதலென்பதென்னியற்கைக்கு மீறிய செயலென்பதும்
எனக்கு விளங்கித்தானுள்ளது. இருந்தும் அது பற்றிச்
சிந்தித்தலும், பரிமாணச்சிறைக்கும் வெளியே
இருப்பவைபற்றி எண்ணுவதிலுமோர் இலயிப்பு\
எப்போதுமுண்டு எனக்கு.
வழக்கம்போலன்றுமிருந்தேன்.
பிரையன் கிறீனென்னும் என் பிரிய
அறிவியலறிஞன் எடுத்துரைத்த உண்மைகள் சிலபற்றி
எண்ணியிருந்தேன்.
பல்பரிமாணம் பற்றி, காலவெளிச்சட்டங்கள்தம்
பல்லிருப்பு ஒரு கணத்தில் பற்றி
அவன் எடுத்துரைத்தவை பற்றியும்
எண்ணியிருந்தேன்.
ஐன்ஸ்டைனின் இடவெளி , காலவெளிபற்றிய
எண்ணங்களிலும் மூழ்கிக்கிடந்தேன்.

Friday, January 3, 2020

அழியாத கோலங்கள்: பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனும்,, நந்தினியும் (ஓவியர் வினுவின் கை வண்ணத்தில்)

மானுடராகிய நாம் பல்வகை உணர்வுகளுக்கும் உட்பட்டவர்கள். எப்பொழுதுமே தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருப்பவர்கள் அல்லர். நகைச்சுவையைக் கேட்டுச் சிரிப்பவர்கள்; நல்ல கலையை இரசிப்பவர்கள். நல்ல நூல்களைச் சுவைப்பவர்கள்.

நல்ல நூல்கள், நல்ல கலைகள் என்னும்போது அவற்றிலும் பல பிரிவுகளுள்ளன. உதாரணத்துக்கு நூல்களை எடுத்துக்கொள்வோம். ஆரம்பத்தில் அம்மா தூக்கி வைத்து, சந்திரனைக் காட்டிக் கதை கூறிச் சாப்பிட வைத்ததிலிருந்து கதைகளுடனான எம் தொடர்பு ஆரம்பமாகின்றது. பின்னர் குழந்தை இலக்கியப்படைப்புகள் (அம்புலிமாமா, கண்ணன் போன்ற சஞ்சிகைகள் , சிறுவர் பகுதிகள், குழந்தைப்பாடல்கள் போன்ற) , வெகுசன இலக்கியப்படைப்புகள் என்று வளர்ச்சியடைந்து பின்னர் பல்வகை தீவிர இலக்கியப்போக்குகளை உள்ளடக்கிய தீவிர வாசிப்புக்கு வந்தடைகின்றோம். இதனால்தான் எல்லாவகை இலக்கியங்களுக்கும் மானுட வாழ்வின் வளர்ச்சிப்படியில் , வாசிப்பின் வளர்ச்சிப்படியில் இடமுண்டு.

Wednesday, January 1, 2020

தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்' ஜெய்சங்கர்!

 'தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்' என்று அழைக்கப்படும் ஜெய்சங்கருக்கு அப்பட்டம் கிடைப்பதற்கு மாடர்ன் தியேட்டர்ஸ் முக்கியமான காரணம். மாடர்ன் தியேட்டர்சின் பல படங்களில் ஜெய்சங்கர் நடித்திருக்கின்றார். அவற்றில் சிலவற்றில் அவர் ஏற்ற துப்பறிவாளர் பாத்திரமே அவருக்கு அப்பெயர் ஏற்படக் காரணம். கறுப்பு வெள்ளைத்திரைப்படங்களில் ஆரம்பகாலத்து அழகான ஜெய்சங்கரை இரசிக்கலாம். பின்னாளில் ஜெய்சங்கர் பருத்து, நடிப்புச் சீர்குலைந்து கதாநாயக அந்தஸ்தினை இழந்து வில்லனாக நடிக்கத் தொடங்கினார். இருந்தாலும் அவ்வப்போது மனதில் நிற்கக்கூடிய குணச்சித்திரப் பாத்திரங்களிலும் நடித்திருக்கின்றார். உதாரணத்துக்கு 'ஊமை விழிகள்' உண்மைக்காகப் போராடும் பத்திரிகை நிலைய நிறுவனராக நடித்திருப்பதைக் கூறலாம். 'பஞ்சவர்ணக்கிளி' திரைப்படத்திலும் இரட்டை வேடங்களில் நடித்து நெஞ்சைக் கவர்ந்திருப்பார். முதல் படமான 'இரவும் பகலும்' திரைப்படத்திலும் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.

கடற்கொள்(ளல்) = கடற்கோள்!



அண்மையில் எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியன் சுனாமியின் ஆழிப்பேரலைக்குப்பதில் கடற்கோள் என்னும் சொல்லே சிறந்தது என்னும் கருத்துப்படப் பதிவொன்றினை இட்டிருந்தார். அதில் 'மணிமேகலையில் சாத்தனார் பயன்படுத்திய "கடல்கோள்" அதன் அசல் விஞ்ஞான விளக்க அர்த்தத்தமுள்ள ஒரு கலைச்சொல்(Technical word) கடல்பூகம்பம் போன்றவற்றால் ஏற்படும் சடுதியான கடல் பெருக்கு பட்டினத்துள் புகுந்து அழிப்பதையே அவர் குறிக்கிறார். 'என்றும் குறிப்பிட்டிருந்தார். அவரது அப்பதிவு பற்றிய என் எண்ணங்கள் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

முதலில் நட்சத்திரன் செவ்விந்தியன் அவர்கள் மணிமேகலையில் எங்கு இச்சொல் வந்துள்ளது என்பதைக் கூற முடியுமா? கடல் கொள, கடல் கொளும் என்று வந்துள்ளதை அவதானித்தேன். ஆனால் கடல் கோள் என்னும் சொல்லைக் காணவில்லை. தவற விட்டு விட்டேன் போலும். மணிமேகலையில் எங்கு அச்சொல் வருகின்றது என்பதைக்குறிப்பிடவும். தமிழில் கோள் என்பதற்கு பல கருத்துகளுள்ளன.அனைவரும் அறிந்த கருத்து உருண்டை வடிவம் .அதனால்தான் கிரகங்களைக் கோளம் என்றும் அழைக்கின்றோம். நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ் அகராதியில் கோள் என்பதற்கு இடையூறு, காவட்டம், புல், கிரகம், கொலை, கொள்ளல், கோட்பாடு,  தீமை,  நட்சத்திரம், நாள், பழமொழி, புறங்கூறல், பொய்வலி என்று அர்த்தங்கள் பல இருப்பதை அறிய முடிகின்றது. ஆனால் எங்கும் கோள் என்பதற்கு அலை என்னும் அர்த்தத்தைக் காண முடியவில்லை. எனவே கடல் கோள் என்பது கடலால் ஏற்படும் இடையூறு (கோள் என்பதற்கு இடையூறு என்னும் அர்த்தமும் உண்டு) என்னும் பொதுவான அர்த்தத்திலேயே பாவிக்கப்பட்டுள்ளதாகக் கருதுகின்றேன்.

வாசிப்பும், யோசிப்பும் 357: கவிதை - தேவதைகளுக்கு வயசாவதும் இல்லை. - - அருண்மொழிவர்மன் -

எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அண்மையில் தான் முன்னர் யாழ் உதயன் பத்திரிகையில் தனது யாழ்ப்பாண டியூசன் நிலையங்கள் பற்றி எழுதிய கட்டுரையினை முகநூலில் பகிர்ந்திருந்தார். அக்கட்டுரையின் இறுதிப்பந்தியின் வரிகளை கவிதையாக அடுக்கி அதற்கு 'தேவதைகளுக்கு வயசாவதில்லை' என்று தலைப்புமிட்டுள்ளேன். அதனையே இங்கு பகிர்ந்துள்ளேன். கட்டுரையின் இறுதி வரிகளிலுள்ள கவித்துவமே என்னை இவ்வாறு வரிகளைக்கவிதையாக அடுக்கத்தூண்டியது.

உண்மைதான் தலைமுறைகள் மாறினாலும் தேவதைகளுக்கு வயசாவதில்லைதான். :-) உங்களில் பலருக்கு அருண்மொழிவர்மன் பகிர்ந்துள்ள கட்டுரையின் இறுதி வரிகள் பழைய பதின்ம வயது நினைவுகளைக் கிளறி விட்டிருக்கக் கூடும்; கிளறி விடக்கூடும். வயசாகாத உங்கள் தேவதைகளை மீண்டும் நினைவுக்குக்கொண்டு வந்திருக்கக்கூடும் :-)

அருண்மொழிவர்மனின் இப்பதிவை வாசித்தபோது பல வருடங்களுக்கு முன்னர் எழுத்தாளர் வ.அ.இராசரத்தினம் எழுதிய சிறுகதையொன்றின் ஞாபகமெழுந்தது. தன் நினைவுகளில் வயசாகமலிருந்த தன் பாடசாலைப்பருவத்து இனியவளை மீண்டும் சந்தித்தபோது முதுமையின் தளர்வுடன் கோலம் மாறியிருந்த, வயதுபோய் விட்டிருந்தது கண்டு திகைப்படையுமொருவன் பற்றிய கதையது. வயதாகிவிட்ட அவனது தேவதை பற்றிய கதையது.

Saturday, November 16, 2019

தொகுப்புகள், சிறப்பு மலர்கள் மற்றும் 'கணையாழி' சஞ்சிகையில் வெளியான எனது படைப்புகள் (ஒரு பதிவுக்காக)

- தொகுப்புகள், சிறப்பு மலர்கள் மற்றும் 'கணையாழி' சஞ்சிகையில் வெளியான எனது படைப்புகள் (ஒரு பதிவுக்காக) -

தொகுப்புகள்:

சிறுகதைகள்
1. சிறுகதை: ஒரு மா(நா) ட்டுப் பிரச்சினை - வ.ந.கிரிதரன் - மித்ர பதிப்பக வெளியிட்ட 'பனியும், பனையும்' சிறுகதைத்தொகுப்பு. புகலிடத்தமிழர்களின் சிறுகதைகளை உள்ளடக்கியது.
2. சிறுகதை: 'சாவித்திரி ஒரு ஶ்ரீலங்கன் அகதியின் குழந்தை' - ஞானம் சஞ்சிகை (இலங்கை) வெளியிட்ட புலம்பெயர்தமிழர்களின் சிறப்பிதழ் (சிறப்பிதழ் என்றாலும் இது தனியான தொகுப்பு நூல்.)
3. அறிவியற் சிறுகதை 'நான் அவனில்லை' - வ.ந.கிரிதரன் - (அமரர் சுஜாதா அறக்கட்டளையும், ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடாத்திய - உலக ரீதியிலான - அறிவியற் சிறுகதைப் போட்டியில் வட அமெரிக்காவுக்கான ரூபா 5000 பரிசினைப் பெற்ற சிறுகதை. ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட அறிவியற் சிறுகதைத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.)

Wednesday, October 23, 2019

வாசிப்பும், யோசிப்பும் : கிடைத்தது சாண்டில்யனின் ஜீவபூமி (ராணிமுத்து) - வ.ந.கிரிதரன் -


என் வாசிப்புப் பழக்கம் தொடங்கியது நானென் குடும்பத்தவருடன் வசித்து வந்த வவுனியாவில்; என் பால்ய பருவத்தில். வாசிப்பு என்பது அக்கினிக் குஞ்சு போன்றது. விரைவாகவே பெருஞ்சுவாலையுடன் பற்றியெரியத்தொடங்கிவிடும். அதனால்தான் அக்காலகட்டத்தில் வாசித்த பல்வகை வெகுசன இதழ்களில் வெளியான புனைகதைகளெல்லாம் இன்றும் அழியாத் கோலங்களாக நினைவில் நிலைத்து நிற்கின்றன. அவ்விதம் அவை இன்றும் இனிமை தருவதற்கும் , நினைவில் நிலைத்து நிற்பதற்கும் மிகவும் முக்கியமான காரணம் அவை மானுட வாழ்வின் இனிமையான ஒரு பருவத்தை மீண்டும் நினைவில் கொண்டுவருவதால்தான்.

என் பால்ய பருவத்தில் எவ்விதம் வாசிப்பு என்னை ஆட்கொண்டது என்பது பற்றி அவ்வப்போது முகநூலில் எழுதியிருக்கின்றேன். அம்புலிமாமா, ராணி, ராணிமுத்து, கல்கி, விகடன், கலைமகள், தினமணிக்கதிர், கல்கண்டு, பொம்மை, பேசும்படம், பொன்மலர் (காமிக்ஸ்), பால்கன் (காமிக்ஸ்), வேதாள மயாத்மா பற்றிய இந்திரஜால் காமிக்ஸ் , குமுதம், ஈழநாடு (யாழ்ப்பாணம்), வீரகேசரி, மித்திரன், தினகரன், தினமணி.. இவ்விதம் சஞ்சிகைகளை, நூல்களை வாங்கி வீடெல்லாம் குவித்து வைத்தார் அப்பா. இவற்றுடன் தனக்கு மேலதிகமாக பென்குவின் பதிப்பக நூல்களை, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளையெல்லாம் வாங்கினார் அப்பா. இதனால் என் ஒன்பதாவது வயதிலேயே பெரும்பாலான தமிழகத்தின் வெகுசன இதழ்களில் வெளியான தொடர்கதைகளை, சிறுகதைகளை, கவிதைகளை, குறுநாவல்களை, முழுநாவல்களையெல்லாம் தீவிரமாக வாசிக்கத்தொடங்கி விட்டிருந்தேன். இவ்விதம் வெளியாகும் படைப்புகளை வாசிப்பதற்காக வீட்டில் எப்போதும் குழந்தைகள் எமக்கிடையில் போட்டி நிலவும். அவ்வப்போது எல்லோரும் சுற்றிவர இருந்து சஞ்சிகைகளில் வெளியான படைப்புகளை அத்தியாயம், அத்தியாயமாகச் சேகரித்து 'டுவைன்' நூல் கொண்டு , கட்டி வைப்போம்.

Tuesday, October 22, 2019

மின்னூல் வாங்க: அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) கவிதைகள்!

பதிவுகள்.காம் வெளியிடும் மின்னூல்களை இப்பக்கத்தில் வாங்கலாம். தற்போது பிடிஃப் வடிவத்தில் மட்டுமே மின்னூல்கள் அமைந்திருக்கும். விரைவில் மின்னூலின் ஏனைய வடிவங்களிலும் கிடைக்கும்.
கவீந்திரன் (அமரர் அ.ந.கந்தசாமி) கவிதைகள் தற்போது மின்னூலாகக் கிடைக்கின்றது. இதனைப் பதிவுகள்.,காம் வெளியிட்டுள்ளது. இதற்கான இணைய இணைப்பு:

மின்னூல் வாங்க: நாவல் - அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்'

எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவல் தற்போது மின்னூல் வடிவில், 'பதிவுகள்.காம்' வெளியீடாக வெளியாகியுள்ளது. வாங்க விரும்பினால் அதற்கான இணைய இணைப்பு: மின்னூலின் அறிமுகக் கட்டுரை: அ.ந.க.வின் மனக்கண் - வ.ந.கிரிதரன் -

அறிஞர் அ.ந.கந்தசாமியின் பத்திரிகையில் வெளியான ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. தொடராகத் தினகரனில் வெளியானபோது வாசகர்களின் அமோக ஆதரவினைப்பெற்ற நாவலிது. அ.ந.க.வின் துள்ளு தமிழ் நடையில் நாவலை வாசிப்பதே பேரின்பம். அமரர் சில்லையூர் செல்வராசன் அவர்கள் வானொலியில் அவரது 'தணியாத தாக'த்தைத் தொடர்ந்து, அ.ந.க.வின் 'மனக்கண்' நாவலையும் வானொலி நாடகமாக ஒலிபரப்பினார். இந்நாவல் தவிர அ.ந.க அவர்கள் தன் இறுதிக் காலத்தில் இன்னுமொரு நாவலையும் , மலையக மக்களை மையமாக வைத்துக் 'களனி வெள்ளம்' என்னும் பெயரில் எழுதியதாகவும், அந்நாவல் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், 83கலவரத்தில் செ.க.வின் கொழும்பு இருப்பிடம் எரியுண்டபோது அந்நாவலும் எரியுண்டு போனதாகவும் அறிகின்றேன்.

எனது 41 கவிதைகள் 'வ.ந.கிரிதரன் கவிதைகள் 41' என்னும் மின்னூலாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தற்போது பிடிஃப் வடிவிலேயே மின்னூல் கிடைக்கும். எதிர்காலத்தில் மின்னூலின் ஏனைய வடிவங்களிலும் கிடைக்கும். வாங்குவதற்கான இணைய இணைப்பு:

தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள்:
1. ஆசை!
2. இயற்கையே போற்றி!
3. தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை.
4. அதிகாலைப் பொழுதுகள்!
5. இரவு வான்!
6. சொப்பன வாழ்வினில் மயங்கி.....
7. களு(ழு)த்துறை!
8. அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்?
9. கவலையுள்ள மனிதன்!
10. விழி! எழு! உடைத்தெறி!
11. எங்கு போனார் என்னவர்?
12. இயற்கைத்தாயே!
13. விடிவெள்ளி
14. சுடர்ப்பெண்கள் சொல்லும் இரகசியம்?
15. விண்ணும் மண்ணும்!
16. விருட்சங்கள்!
17. நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!
18. இருப்பொன்று போதாது இருத்தல் பற்றியெண்ணி இருத்தற்கு!
19. அலைகளுக்கு மத்தியில் அலையென அலைதல்!
20. ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்!
21. எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு..
22. பேய்த்தேர்!

மின்னூல் வாங்க: 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள் 60 (இலக்கியம், கட்டடக்கலை & அறிவியல்)

பதிவுகள்.காம் வெளியிடும் மின்னூல்களை இப்பக்கத்தில் வாங்கலாம். தற்போது பிடிஃப் வடிவத்தில் மட்டுமே மின்னூல்கள் அமைந்திருக்கும். விரைவில் மின்னூலின் ஏனைய வடிவங்களிலும் கிடைக்கும். விரைவில் நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) , அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்', அ.ந.க படைப்புகள், வ.ந.கிரிதரன் கட்டுரைகள், வ.ந.கிரிதரன் கவிதைகள், அ.ந.க. கவிதைகள் ஆகியவை மின்னூல்களாகக் கிடைக்கும். 'பதிவுகள்' இணைய இதழின் தொகுப்பு மலரும் விரைவில் மின்னூலாகக் கிடைக்கும்.


எனது 60 கட்டுரைகள் அடங்கிய தொகுதி 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள் 60 (இலக்கியம், கட்டடக்கலை & அறிவியல்) என்னும் தலைப்பில் மின்னூலாகப் 'பதிவுகள்.காம்' பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. விலை விபரம்: $6 தற்போது பிடிஃப் கோப்பாக இம் மின்னூல் கிடைக்கின்றது. இம் மின்னூலினை வாங்க விரும்புபவர்கள் பின்வரும் இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம்:

Monday, October 14, 2019

மின்னூல்: வ.ந.கிரிதரனின் 25 சிறுகதைகள்



நண்பர்களே! எனது 25 சிறுகதைகள் மின்னூற் தொகுப்பாகப் 'பதிவுகள்.காம்' வெளியீடாக வெளியுள்ளது. தற்போது பிடிஃப் கோப்பாகவே தொகுப்புள்ளது. விலை $4 (கனடியன்). புகலிட அனுபவங்களை உள்ளடக்கிய கதைகள், விஞ்ஞானப்புனைவுகளை உள்ளடக்கிய கதைகள் எனப் பல்வேறு களங்களைக் கொண்ட கதைகள் இவை. இணைய இதழ்கள் மற்றும் அச்சூடகங்களில் வெளியானவை, மின்னூலை வாங்க

 

To Buy ‘AMERICA’ (e-book as a PDF document) By V.N.Giritharan [Translation By Latha Ramakrishnan]


e-book: Novella - America By  V.N.Giritharan &  English Translation By: Latha Ramakrishnan

AMERICA is the English translation of my Tamil novel AMERICA (அமெரிக்கா) . This is based on a Sri Lankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized.

 

Saturday, October 12, 2019

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக, பிடிஃப் வடிவத்தில் வாங்க...

'அமெரிக்கா' மின்னூலினை $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு:

 

1983 இலங்கை இனக்கலவரத்தைத்தொடர்ந்து , பிறந்த மண்ணை விட்டுப் புகலிடம் நாடிக் கனடா புறப்பட்ட வேளை, வழியில் பாஸ்டன் நகரிலிருந்து கனடாவின் மான்ரியால் நகருக்கு ஏற்றிச்செல்ல வேண்டிய 'டெல்டா ஏர் லைன்ஸ்' நிறுவனம் எம்மை ஏற்றிச் செல்ல மறுத்து விடவே, அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் எம்மை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்துவதில் மும்முரமாகவிருந்தார்கள். அதிலிருந்து தப்புவதற்காக அமெரிக்காவில் அகதி அந்தஸ்து கோர வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து சுமார் மூன்று மாதங்கள் வரையில் நியூயார்க் மாநகரிலுள்ள புரூக்லின் நகரிலுள்ள தடுப்பு முகாமொன்றினுள் அடைத்து வைக்கப்பட்டோம். அக்காலகட்ட அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணத்தின் விளைவே எனது நாவலான 'அமெரிக்கா'. அளவில் சிறியதானாலும் இந்நாவல் ஒருவகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. முதன் முதலில் புகலிடம் நாடிச்சென்ற இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவங்களை விபரிக்கும் நாவல் இதுவேயென்பேன். இந்நாவல் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக மற்றும் கனடா மங்கை பதிப்பக வெளியீடாக மேலும் சில சிறுகதைகளையும் உள்ளடக்கி வெளியானது. இதன் தொடர்ச்சியாக இந்நாவலின் நாயகன் இளங்கோவின் நியூயோர்க் மாநகரத்து அனுபவங்கள் 'குடிவரவாளன்' என்னும் நாவலாகத் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியானது.

Friday, October 11, 2019

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' மின்னூல் வாங்க...

நண்பர்களே! எனது நாவலான 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்):  

தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' - வ.ந.கிரிதரன் -




- கணையாழி சஞ்சிகையின் அக்டோபர் (2019) இதழில் வெளியாகியுள்ள தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நாவல் பற்றிய என் விமர்சனக் கட்டுரை. -
அண்மையில் வெளியான தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நாவலின் முதற்கட்ட வாசிப்பின்போது அதன் வெளியீட்டு விழாவில் ஜான் மாஸ்ட்டர் கூறிய கருத்தொன்று ஞாபகத்துக்கு வந்தது. அவர் இதனை ஒரு கோணத்தில் பார்த்தால் ஒரு காதல் கதையாகவும் கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் எனக்கு வித்தியாசமான காதற்கதையாகத்தான் நாவலில் விபரிக்கப்பட்டிருந்த காதற்கதையும் தென்பட்டது.

நாவலின் பிரதான பாத்திரமான புலிகள் இயக்கத்தில் பரணி என்றழைக்கப்படும் போராளிக்கும், வானதி என்னும் பெண்ணுக்குமிடையிலான காதல் வாழ்வின் தொடக்கத்தில் அவன் இயக்கத்தில் சேர்ந்து , இந்தியாவுக்குப் பயிற்சிக்காகச் செல்கின்றான். செல்லும்போது 'எனக்காகக் காத்து நிற்பீர்களா?' என்று கேட்கின்றான். இவளும் அவனுக்காகக் காத்து நிற்பதாக உறுதியளிக்கின்றாள். அவ்விதமே நிற்கவும் செய்கின்றாள். இது உண்மையில் எனக்கு மிகுந்த வியப்பினைத்தந்தது. சொந்த பந்தங்களை, பந்த பாசங்களையெல்லாம் விட்டு விட்டு இயக்கத்துக்குச் செல்லும் ஒரு போராளி தான் விரும்பியவளிடம் தனக்காகக் காத்து நிற்க முடியுமா என்று கேட்கின்றான். போராட்ட வாழ்வில் என்னவெல்லாமோ நடக்கலாம், நிச்சயமற்ற இருப்பில் அமையப்போகும் வாழ்வில் இணையப்போகுமொருவன் தன் குடும்பத்தவர்களை விட்டுப் பிரிவதைப்போல, தன் காதலுக்குரியவளையும் விட்டுப்பிரிவதுதான் பொதுவான வழக்கம். ஆனால் இங்கு நாவலில் தன் வாழ்க்கையையே விடுதலைக்காக அர்ப்பணிக்கப்போகும் ஒருவன் , ஏதோ வெளிநாட்டுக்கு வேலை பெற்றுச்செல்லும் ஒருவன் தான் விரும்பும் ஒருத்தியிடம் கேட்பதுபோல் கேட்டு உறுதிமொழி பெற்று விட்டுச் செல்கின்றான். இது நாவலின் புனைவுக்காக எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். உண்மையில் அவ்விதமான சூழலில் பிரியும் ஒருவன் தான் விரும்பும் ஒருத்தியைப் பார்த்து தன் எதிர்காலம் நிச்சயமற்றிருப்பதால், மீண்டும் வந்தால் , இலட்சியக்கனவுகள் நிறைவேறினால் , மீண்டும் இணையலாம் அல்லது அவள் தனக்காகக் காத்து நின்று வாழ்வினை வீணாக்கக் கூடாதென்று அறிவுரை செய்திருக்கத்தான் அதிகமான வாய்ப்புகளுள்ளன. போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ளச் சென்றுவிட்ட அவனுக்காக அவளும் கனவுகளுடன் மீண்டும் இணைவதையெண்ணிக் காத்திருக்கின்றாள். இவ்விதமாக நகரும் வாழ்வில் அவள் யாழ் பல்கலைக்கழக அனுமதி பெற்றுச் செல்கின்றாள்.

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்