எதிரே விரிந்து கிடக்கின்றது கட்டடக்காடு. எங்கு நோக்கினும் கட்டடங்கள்! கட்டடங்கள்! கட்டடங்கள்! கனல் உமிழ்ந்திடும் பரப்புகள் சிரித்துக்கொண்டிருக்கின்றன. ஒரு காலத்தில் என் பிரியத்துக்குகந்த இடங்களாக விளங்கிய இடங்களிலெல்லாம் புதிதாகக் கட்டட விருட்சங்கள் வளர்ந்து, உயர்ந்து நிற்கின்றன. ஒரு காலத்தில் பசுமை பூத்துக்கொழித்த ஆதிமானுட சமுதாயத்தில் இவ்வுலகு எப்படியிருந்திருக்குமென்று எண்ணம் சென்றது.
"என்ன கண்ணா யோசனை?"
எதிரில் அதே மந்தகாசப் புன்னகையுடன் நிற்பவள் என் மனோரஞ்சிதமேதான். என் கண்ணம்மாவேதான்.
"எதிரே விரிந்து கிடக்கும் கட்டடக்காட்டைப் பற்றிச் சிந்தித்தேன். வேரொன்றுமில்லை கண்ணம்மா!"
"கட்டடக்காடு. அற்புதமானதொரு படிமம். இப்படிமம் எனக்கு மானுடவியலாளர் டெஸ்ட்மன் மொறிஸ் நினைவை ஏற்படுத்துகிறது கண்ணா."
"உண்மைதான் கண்ணம்மா, நானும் அவரைப்பற்றிக் கேட்டிருக்கின்றேன். அவரது ''Human zoo ('மனித மிருகக்காட்சிசாலை') வாசித்திருக்கின்றேன். அதிலவர் Concrete Jungle ('காங்ரீட் காடு' ) என்ற சொல்லைப் பாவித்திருக்கின்றார். அதுவே நான் முதன் முதலில் அறிந்த கட்டடக்காடு என்னும் பொருள்தரும் சொல். என்றாலும் உன்னை நினைத்தால் எனக்குச் சில வேளைகளில் பிரமிப்புத்தான் ஏற்படுகின்றது. நீயும் என்னைப்போல் கண்டதையெல்லாம் வாசித்துத் தொலைக்கின்றாய். அதுதான் எனக்கு உன்னில் மிகவும் பிடித்த விடயமடி."