Monday, February 19, 2018

'திண்ணை'க் கவிதைகள் மூன்று! - வ.ந.கிரிதரன் -

'திண்ணை' இணைய இதழில் முன்பு வெளியாகிய கவிதைகள் இவை. என்னை எப்பொழுதுமே நாம் வாழும் இப்பிரபஞ்சத்தில் உருவான மானுட இருப்பும், இதற்கும் மேலான உயிரினங்களின் சாத்தியம் பற்றிய சிந்தனைகளும், எம் இருப்பின் முப்பரிமாண எல்லையும் , காலவெளி பற்றிய புரிதல்களும் அவற்றின் மீதான சிந்தனையும், இயற்கையின் பேரழகும், படைக்கப்பட்டுள்ள ஏனைய உயிரினங்களின் படைப்புச்சிறப்பும் கவரும் விடயங்கள். எம் இருப்பு '"வெறுமைக்குள் விரியும் திண்ம இருப்பு.". நாமோ 'பரிமாண விலங்குகள் தாங்கும் அடிமைகள்'. அவை பற்றிச் சிந்திப்பதிலுள்ள இன்பம் எனக்கு வேறெவற்றிலுமில்லையென்பேன். ஆழநடுக்காட்டில் பல்லாண்டுகள் தனித்து விடப்பட்டாலும் கூட என்னால் இவை பற்றித் தொடர்ச்சியாகச் சிந்தித்துக்கொண்டேயிருக்க முடியும். 'என்று வருமந்த ஆற்றல்?', 'காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்! மற்றும்' 'மழையைச் சுகித்தல்! ஆகிய கவிதைகளிலும் என் இந்த உளப்பாங்கினை நீங்கள் கண்டிட முடியும்.

1. என்று வருமந்த ஆற்றல்? - வ.ந.கிரிதரன்

நள்ளிரவுக் கருமை;
மூழ்கிக் கிடக்குமுலகு; தண்ணொளி
பாய்ச்சும் நிலவு; ‘கெக்க’லித்துச்
சிரிக்கும் சுடரு.

விரிவான் விரிவெளி.
‘புதிர் நிறை காலவெளி.

வெறுமைக்குள் விரியும்
திண்ம இருப்பு.

பரிமாண விலங்குகள்
தாங்கும் அடிமை.

பன்முறையெனினும்
மீறி வியப்பதற்கெதுவுண்டு.

படியளக்கும் படைத்தவரே!
படைத்ததேன்? பகர்வீரா?

அறிவுத்தாகம் மிகுந்த
அலைவு; தாகசாந்திதான்
எப்போது?
அலையெனப் பரவும்
நிலை வரும் வரையிலா?
என்று வருமந்த
நிலை? அன்றி
‘அதிவெளி’ கடக்கும்
ஆற்றல் வரும் வரையிலா?
என்று வருமந்த
ஆற்றல்?


 நன்றி: திண்ணை - http://puthu.thinnai.com/?p=3648

அ.ந.க.வின் 'மனக்கண்' - வ.ந.கிரிதரன் -


- அறிஞர் அ.ந.கந்தசாமி -
ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியெனக் கருதப்படுபவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், விமர்சனம், நாவல் மற்றும் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஈடுபட்டு ஆழமாகத் தன் தடத்தினைப் பதித்தவரிவர். இவர் எழுதிய ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. இந்த 'மனக்கண்' நாவல் பற்றிய எனது விமர்சனக் குறிப்புகளே இவை. எனக்குத் தெரிந்த வரையில் அ.ந.க.வின் 'மனக்கண்' நாவல் பற்றி வெளிவந்த விரிவான, முதலாவதான,   விமர்சனக் கட்டுரை இதுவாகத்தானிருக்கும். அந்த வகையில் இக்கட்டுரைக்கொரு முக்கியத்துவமுண்டு. இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று: நமது விமர்சகர்களுக்கு நூலாக வெளிவந்த நூல்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதிப்பழக்கம். இன்னுமொரு காரணம் பெரும்பாலான விமர்சகர்களுக்குத் தேடுதல் மிகவும் குறைவு. தமக்கு அனுப்பி வைக்கப்படும் நூல்களுக்கு மட்டுமே அவர்களது கவனம் திரும்பும். அவ்விதம் கிடைக்கும் நூல்களைத் தம் புலமையினை வெளிப்படுத்துவதற்குத் தொட்டுக்கொள்ளப்படும் ஊறுகாயைப்போல் பாவித்துக்க்கொள்வார்கள்.  மிகச்சிலர்தாம் நூலாக வெளிவராத பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகளுக்கும் விமர்சனங்கள் எழுதியுள்ளார்கள்.இவர்களை உண்மையில் பாராட்டத்தான் வேண்டும். [ தனது இறுதிக்காலத்தில் இவர் மலையகத்தமிழர்களை மையமாக வைத்து கழனி வெள்ளம் என்றொரு நாவலினை எழுதிக்கொண்டிருந்தார். அந்த நாவல்  எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், அது 1983 இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் அறியப்படுகிறது]. 'மனக்கண்' ஈழத்திலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகையில் அக்டோபர் 21, 1966 தொடக்கம் ஜூன் 29, 1967 வரையில் தொடராக வெளிவந்து இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வாழும் தமிழர்களின் ஆதரவினைப் பெற்றதொரு நாவல். இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று அ.ந.க நாவலில் வரும் பாத்திரங்களுகிடையிலான உரையாடல்களில் பேச்சுத்தமிழைக் கையாளுவதற்குப் பதில் , பல்வேறு பகுதிகளிலுமிருந்து வாசிக்கும் அனைவருக்கும் புரியவேண்டுமென்பதற்காகச் 'சரளமான ஒரு செந்தமிழ் நடையினைப்' பாவித்திருப்பதுதான்.

அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்! - வ.ந.கிரிதரன் -


- இக்கட்டுரை சந்தியா பதிப்பகத்தினரால் எழுத்தாளரும், விமர்சகருமான திரு. வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாவது ஆண்டு இலக்கியப்பணியினையொட்டி அண்மையில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட 'வாதங்களும், விவாதங்களும்' நூலுக்காக எழுதப்பட்டது. நூலினை பா.அகிலன், எழுத்தாளர் திலீப்குமார், சத்தியமூர்த்தி ஆகியோர் தொகுத்துள்ளார்கள். ]  -  'நான் எழுத்தாளனோ, விமர்சகனோ இல்லை' என்று ஆரம்பத்திலிருந்தே பிரகடனப்படுத்தி வருகின்றேன்" (விவாதங்கள் சர்ச்சைகள்,  பக்கம்263) என்று தன்னைப்பற்றி வெங்கட் சாமிநாதன் கூறிக்கொண்டாலும் இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற கலையின் பல்வேறு துறைகளிலும் ஆழமான, காத்திரமான பங்களிப்பினைச் செய்த கலை விமர்சகர் இவரென்பது மறுக்கமுடியாதவுண்மை மட்டுமல்ல நன்றியுடன் விதந்துரைக்கப்பட வேண்டியதுமாகும். 1960இல் 'எழுத்து' இதழில் வெளியான 'பாலையும், வாழையும்' கட்டுரையின் மூலம் எழுத்துலகிற்குக் காலடியெடுத்து வைத்த வெ.சா.வின் க்லைத்துறைக்கான பங்களிப்பு ஐம்பதாண்டுகளை அடைந்திருக்கிறது. இந்த ஐம்பதாண்டுக் காலகட்டத்தில் 'சாமிநாதனது பேனா வரிகள் புலிக்குத் தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது என்றபடி சகலதையும் பதம் பார்க்கும்' என்னும் சி.சு.செல்லப்பாவின் கூற்றின்படி அனைவரையும் பதம் பார்த்துத்தான் வந்திருக்கிறது. ஒரு சில வேளைகளில் உக்கிரமாகவும் இருந்திருக்கிறது. ஒரு படைப்பாளியின் படைப்பினை ஆரோக்கியமாக விமர்சனத்துக்குள்ளாக்கி அதன் நிறைகளை மட்டுமல்லாது குறைகளையும் எந்தவிதத் தயக்கங்களுமின்றி வெளிப்படுத்தும் வெ.சா. சில சமயங்களில் அவரது விமர்சனங்களை முன்னுரைகளென்ற பெயரில் கேட்கும் சிலருக்கு நேரிடையாகவே மறுத்துமிருக்கின்றார். தனக்குச் சரியென்று பட்டதை, எந்தவிதத் தயக்கங்களுமின்றி, எந்தவித பயன்களையும் எதிர்பார்க்காதநிலையில் , துணிச்சலுடன் எடுத்துரைக்கும் வெ.சா..வின் போக்கு வெ.சா.வுக்கேயுரிய சிறப்பியல்புகளிலொன்று. -
 அறுபதுகளில், எழுபதுகளில் கோலோச்சிக் கொண்டிருந்த முற்போக்கிலக்கியப் படைப்புகளைக் காரமாக விமர்சித்தவர் வெ.சா. அதன் காரணமாக, 'கலை சமுதாயத்திற்கே' என்னும் முற்போக்கணியினரை, அவர்தம் கலைப்படைப்புகளின் தன்மையினைத் தன அறிவிற்கேற்ப , தர்க்கரீதியாக விமர்சித்த காரணத்தினால் வெ.சா.வைக் 'கலை கலைக்காகவே' என்று வாதிடும், 'அழகியலுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கு'மொரு' அழகியல் உபாசகராகவும், சமுதாயப் பிரக்ஞையற்றவொருவராகவும் ஓரங்கட்டிவிடவும் சிலர் தலைப்பட்டனர். அவரை முக்கியமான விமர்சகராக ஏற்றுக் கொண்டு அதே சமயம் அவர் அறிவுத்தளத்தையொரு பொருட்டாகவே கருதியதில்லையென்றும், அவரது மொழி விமர்சனத்திற்குரிய தர்க்க மொழியல்லவென்றும் கூறித் தமது மேலாவிலாசத்தைக் காட்டும் முனைப்புகளும் நடைபெறாமலில்லை. வேறு சில இளம் படைப்பாளிகளோ அவரை ஞான சூனியமென்றும், அயோக்கியனென்றும் கூட வசை பாடினர். இவை பலவற்றுக்கு அவர் தன் பாணியில் பதிலிறுத்துள்ளார். அத்தகைய அவரது பதில்களில் சிலரைச் சீண்டியுமிருக்கிறார். தனது எழுத்தினைப் பற்றிக் குறிப்பிடும்போது 'எல்லாமே தனி மனிதனாகவும், இந்தச் சமுதாயத்தில் ஓர் அங்கமாகவும், என் உணர்வுகளைத் தாக்கிய, சுற்றிச் சமூகத்தில் நடக்கும் அருவருப்பான நடப்புகளைப் பற்றிய என் எதிர்வினைகள்' ('விவாதமேடைச் சர்ச்சைகள்'; பக்கம் 4- முன்னுரையில்) என்று குறிப்பிடும் இவரது எண்ணங்களின் தர்க்கச் சிறப்பும், பரந்த வாசிப்புடன் கூடிய அறிவும் பிரமிக்க வைப்பன.. கலாநிதி கைலாசபதியின் 'தமிழ் நாவல் இலக்கியம்' பற்றிய இவரது 'மார்க்சின் கல்லறையிலிருந்து ஒரு குரல்' என்னும் விரிவான ஆய்வுக் கட்டுரை, 'பேராசிரியர் நா.வானமாலையின் ஆராய்ச்சி விநோதங்கள்' போன்ற கட்டுரைகளும் அவற்றிற்கான எம்.ஏ.நுஃமான் போன்றவர்களின் எதிர்வினைககளும் தமிழ் இலக்கியத் துறைக்கு வளம் சேர்ப்பன.

தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா? - வ.ந.கிரிதரன் -

-  இன்று , நவம்பர் 13, 2016, டொராண்டோவில் தமிழர் வகைதுறைவள நிலைய ஆதரவில் நடைபெற்ற தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூல் வெளியீடு மற்றும் கலந்துரையாடலில் நான் ஆற்றிய உரையின் முழு வடிவம். - வ.ந.கி  -
தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' சுயசரிதை பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பினாலும், தமிழர் இலக்கிய உலகில் முக்கியமானதொரு நூலாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. இதனது சிங்கள மொழிபெயர்ப்பும் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.

தமிழினியின் சுய விமர்சனம் பற்றிக்குறிப்பிடுகையில் தேசம் ஜெயபாலன் 'இது கூர்வாளல்ல. மொட்டை வாள்' என்று குறிப்பிட்டிருப்பார். அண்மையில் தமிழினியின் கணவர்ஜெயக்குமரனுடனான நேர்காணலொன்றில்தான் இவ்விதம் குறிப்பிட்டிருக்கின்றார். மேலோட்டமாகப் பார்த்தால் தமிழினியின் இயக்கம் பற்றிய விமர்சனங்கள் காரமாக இல்லாதிருப்பதுபோல் தென்பட்டாலும், சிறிது ஊன்றிக்கவனித்தால் மிகவும் கடுமையான விமர்சனங்கள் அவை என்பது தெரியவரும். ஆனால் அவர் முட்டி மோதிக்கொண்டு மோதும் விமர்சனத்தை இங்கு வைக்கவில்லை. விடுதலைப்புலிகளின் தலைவரைத் தனிப்பட்டரீதியில் விமர்சிக்கவில்லை. அதனால் ஜெயபாலன் அவ்விதம் நினைத்திருக்கக்கூடும். ஆனால் தமிழினி விமர்சனத்தை முன் வைக்கும்போது கோட்பாட்டு ரீதியில் முன் வைக்கின்றார். விடுதலைப்புலிகள் என்னும் அமைப்பு பின்பற்றிய கொள்கைகள் அடிப்படையில் அவற்றை விமர்சிக்கின்றார். அந்த அமைப்பில் போராடி, இறுதியில் நிராதரவாகக் கைவிடப்பட்டு, இராணுவத்திடம் சரணடைந்து,  சிறைவாழ்க்கை, தடுப்புமுகாம் வாழ்க்கை, புனர்வாழ்வு என்று பல படிகளினூடு சென்று மீண்டும் சமூகத்திற்குள் வருகின்றார். அவ்விதம் வந்தவரைச் சமூகம் எதிர்கொண்ட முறை அதிர்ச்சியூட்டுகின்றது. இந்நிலையில்  அவரது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் தமிழினி என்னும் முன்னாள் பெண் போராளியொருவருக்கு மனம் திறந்த நிலையில் நடந்தவற்றை ஆராய்ந்து முடிவுக்கு வருவதற்குப் பூரண உரிமையுண்டு. அவரது கருத்துகளை ஏற்கலாம். ஏற்காமல் இருக்கலாம். ஆனால் அவருக்கு அவர் தான் நினைத்தவாறு கருத்துகள் கூற உரிமையுள்ளது என்பதை ஏற்கவேண்டும்.

பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி.... வ.ந.கிரிதரன் -

மகாகவி பாரதியார் 'சுயசரிதை' என்னுமொரு கவிதை எழுதியிருக்கின்றார். பாரதியாரின் ஆளுமையை அறிந்து கொள்வதற்கு உதவும் கவிதைகளிலொன்று அவரது இந்தக்கவிதை. இதுவொரு நீண்ட கவிதை. கவிதையின் ஆரம்பம் "பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே." என்ற பட்டினத்துப்பிள்ளையாரின் கவிதை வரிகளுடன் ஆரம்பமாகின்றது. பாரதியார் தன்னைச் சித்தர்களிலொருவராகக்கருதுபவர். சித்தர்களிலொருவரான பட்டினத்தாரின் இருப்பு பற்றிய கவிதை வரிகளுடன் ஆரம்பமாகியிருப்பது ஒன்றினை நன்கு புலப்படுத்துகின்றது. அது பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனையினைத்தான். 'பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே' என்னும் கூற்றுக்கேற்ப அவரது வாழ்வில் கடந்து போன இழப்புகளைப்பற்றிச் சுயசரிதை விபரிக்கின்றது. நிறைவேறாத பிள்ளைக்காதல் அதாவது மானுடரின் முதற் காதல், அவரது ஆங்கிலக்கல்வி கற்றல், அவரது திருமணம் மற்றும் அவரது தந்தை வியாபாரத்தில் நொடிந்துபோய் வறுமையுறல்போன்ற விடயங்களைக்கவிதை விபரிக்கின்றது ஆனால் இந்த வாழ்வே இவ்விதமானதொரு கனவுதான் என்பதை அவர் நன்கு புரிந்திருக்கின்றார். ஆனால் அதற்காக அவர் வாழ்விலிருந்து ஓடி, ஒதுங்கிப்போய் விட்டவரா?

இவ்விதமாக இழந்தவை பற்றியெல்லாம் விபரிக்கும் அவர், ஆரம்பத்தில் 'உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி யிடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி லுங்கன வாகும்' என்று கூறும் அவர்,  தன் கவிதையின் இறுதியில் உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி இடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி னுங்கன வாகும்' என்று மானுட வாழ்வே ஒரு கனவு என்பார். ஆனால் அதற்காக , அதனை நினைத்து , நினைத்து வருந்துவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 'இதற்குநான் பலநி னைந்து வருந்தியிங் கென்பயன்? பண்டு போனதை எண்ணி யென்னாவது? சிலதி னங்கள் இருந்து மறைவதில் சிந்தை செய்தெவன் செத்திடு வானடா' என்று கூறித் தன் சுயசரிதையினை முடிப்பார்.

விஷ்ணுபுரம் சில குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -


ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்' பற்றிப் பலர் பலவாறு கூறியுள்ளார்கள். இவர்களது குறிப்புகளெல்லாவற்றையும் பார்க்கும் போது ஒன்று மட்டும் புரிகிறது. இவர்களில் பலர் யானை பார்த்த குருடர்கள். நாவல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபாதம், கௌஸ்துபம், மணிமுடி. ஹேமந்தன் என்னும் பாணன் விஷ்ணுபுரம் பற்றிய கதையினைக் கூறி முடித்ததும் வசந்தன் என்னும் பாணன் கூறத்தொடங்குவதுடன் ஆரம்பமாகும் நாவல் மூன்று பாகங்களாக விரிவடைந்து வசந்தன் கதையை முடித்ததும் இன்னுமொரு பாணனான கிரிஷ்மன் மீண்டுமொருமுறை விஷ்ணுபுரம் கதையினைக் கூறத்தொடங்குவதுடன் தொடர்கிறது. நாவலைப் பற்றிப் பின் அட்டையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது: ' இந்நாவலில் விஷ்ணு ஒருமுறை புரண்டு படுக்கிறார். தருக்கம், தியானம்,கற்பனை என்ற மூன்று அடிப்படையான அறிதல் முறைகளில் கற்பனையின் துணை கொண்டு , பிற இரண்டின் சாத்தியங்களை பயன்படுத்தியபடி, மானுடனின் ஞானத்தேடலின் பயணத்தைச் சித்தரிக்கிறது (சித்திரிக்கிறது). கலையும், தருக்கமும், ஆன்மீகமும், மானுட உணர்வுகளுடன் கலந்து பௌராணிகமான மாய உலகமொன்றைப் படைக்கின்றன.'

ஜெயமோகனின் ஞானத் தேடலே நாவலாக உருப்பெற்றிருக்கின்றது. இந்து, பௌத்த தத்துவங்களினூடு மனித வாழ்வு, பிரபஞ்சத்தின் தோற்றம், காலம் பற்றி தர்க்கரீதியாகக் கற்பனையைப் படரவிட்டு இந்நாவலைப் படைத்திருக்கின்றார் ஜெயமோகன். தான் அறிந்ததை, உணர்ந்ததை அவ்விதமே கூறவேண்டுமென்ற ஆவல் ஜெயமோகனுக்கு அதிகமாக இருப்பதை நாவல் முழுவதிலும் காண முடிகிறது. விஷ்ணுபுரம் பற்றிய வர்ணணைகளில் நாவலாசிரியர் மிக அதிகளவில் கவனமெடுத்திருக்கின்றாரென்பதை விஷ்ணுபுரம் பற்றிய வர்ணனைகள் வெளிக்காட்டுகின்றன.ஜெயமோகனின் ஞானத்தேடலே நாவல் முழுக்கப் பல்வேறு பாத்திரங்களாக, பிங்கலன், சங்கர்ஷணன்.. என உலாவருகின்றது. நாவல் முழுக்க எண்ணமுடியாத அளவிற்குப் பாத்திரங்கள். அத்தியாயத்திற்கு அத்தியாயம் புதிய புதிய பாத்திரங்களின் வருகையுடன் நாவல் நடை போடுகிறது. வழக்கமாக அத்தியாயங்களிற்கிடையில் ஒருவித தொடர்ச்சியினை ( Linearity) எதிர்பார்த்துப் பழக்கப் பட்டு விட்ட பெரும்பாலான தமிழ் வாசகர்களுக்கு இந்தத் தொடர்ச்சியற்ற தன்மை நாவலைப் புரிதலில் சிரமத்தினை ஏற்படுத்தி விடுகின்றது. இது இந்நாவலை வாசிக்க விளைபவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுமையினையும் , பாத்திரங்களைச் சம்பவங்களைக் கிரகிக்க வேண்டிய திறமையினையும் மிக அதிகமாகவே வேண்டி நிற்கிறது. ஆனால் இந்த நாவலின் அடிப்படையே ஒரு மனித உயிரின் ஞானத் தேடல் என்ற அளவில், நாவல் பாத்திரங்களினூடு, நகர அமைப்பினூடு, காட்சிகளினூடு, கூறி விவாதிக்கும் இருத்தல் பற்றிய விசாரத்தைத் தொடர்ந்து கொண்டு போவதன் மூலம் இந்நாவல் பிரதியின் வாசிப்பை இலகுவாக்கலாம். பலருக்கு இந்நாவல் புரிபடுவதிலுள்ள குழப்பம் காரணமாகத் தான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி கருத்துகளை வைக்கின்றார்கள். (அண்மையில் ஜெயமோகனின் நூல் விழாவில் பேசிய ஜெயகாந்தன் தன்னாலேயே நாவலின் உள்ளே புக முடியவில்லை என்று குறிப்பிட்டதை இங்கு நினைவு கூர்வது பொருத்தமானது).

அறிவியல்: பிரபஞ்சத்து மாயங்கள்! 'கரும் ஈர்ப்பு மையங்கள்'! - வ.ந.கிரிதரன் -


சாதாரண மனிதரிலிருந்து விஞ்ஞானிகள் வரை மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்துப் புதிரென்று ஒன்றிருந்தால் அது இந்தக் கருந்துளைகள் (Black Holes) தான். உண்மையில் இவற்றைத் தமிழில் கருந்துளைகள் என மொழிபெயர்ப்பதை விடக் 'கரும் ஈர்ப்பு மையங்கள் ' என மொழி பெயர்ப்பதே மிகவும் பொருத்தமாகவிருக்குமெனக் கருதுகின்றேன். ஏனெனில் இவை மிகவும் ஈர்ப்புச் சக்தி மிக்கவை. ஒளிக்கதிர்களையே வெளியேற முடியாத அளவிற்கு ஈர்ப்புச் சக்தி மிக்கவையான இவற்றை கரும் ஈர்ப்பு மையங்களென அழைப்பதே சரியென்றெனக்குப் படுவதால் இவை இனி கரும் ஈர்ப்பு மையங்கள் என்றே அழைக்கப் படும்.  ஒளிக்கதிர்களையே தப்பியோட விடாது சிறைப்பிடித்துவிடுமளவிற்கு ஈர்ப்புச் சக்தி மிக்கவையாக இவை இருப்பதால் இவை மிகவும் விந்தையானவை. இரகசியமானவை. புதிரானவை. இவற்றை நேரடியாகப் பார்க்கும் வல்லமை படைத்தவர்கள் இருப்பார்களேயானால் அவர்களால் தாங்கள் கண்டதை எமக்குத் தெரிவிப்பதற்குக் கூட முடியாது. ஊகங்கள், பக்க விளைவுகள் இவற்றைக் கொண்டு மட்டும் தான் இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள, அனுமானித்துக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.  கரும் ஈர்ப்பு மையங்கள் உண்மையில் மிகவும் சக்தி வாய்ந்த நட்சத்திரங்களே. விண்ணில் நாம் காணும் நட்சத்திரங்களை அவற்றின் திணிவினை சூரியனின் திணிவுடன் ஒப்பிட்டுப் பிரிக்க முடியும். இவ்விதம் பெறப்படும் திணிவு சூரிய திணிவு (Solar Mass) என அழைக்கப் படும்.நட்சத்திரங்களின் திணிவானது ஒரு குறிப்பிட்ட சூரியத் திணிவிலும் அதிகாக இருக்கும் பொழுது அந் நட்சத்திரம் கரும் ஈர்ப்பு மையமாக உருவாகும் வாய்ப்பு உண்டு. இத்திணிவுக்கும் நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானிகளிலொருவரான சந்திரசேகருக்கும் மிக முக்கியமானதொரு தொடர்பு உண்டு. அதுவென்ன என்பதை இக்கட்டுரையின் இறுதியில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

ஐன்ஸ்டனின் பொதுச் சார்பியற் கோட்பாடானது (General Theory Of Relativity) இத்தகைய கரும் ஈர்ப்பு மையங்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை எதிர்வு கூறிய போதும் , சுமார் 200 வருடங்களுக்கு முன்னரே ஆங்கிலேயரொருவரும் பிரெஞ்சுக்காரரொருவரும் இத்தகைய பொருட்கள் இப்பிரபஞ்சத்தில் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிக் கூறியுள்ளார்களென்பதும் வியப்பிற்குரியது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோன் மைக்கல் என்பவரால் 1783 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வுக் கட்டுரையொன்றில் மிகவும் ஈர்ப்புச் சக்தி கூடிய நட்சத்திரங்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோன் மைக்கலின் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்ட சில வருடங்களின் பின்னர் பிரெஞ்சு விஞ்ஞானியான 'மார்கிள் டி லாப்பிளாஸ் ' என்பவர் தான் எழுதிய 'இவ்வுலகின் அமைப்பு முறை ' பற்றிய நூலிலும் இது போன்ற கருதுகோள்களை முன்வைத்திருந்தாரென அறியக் கிடக்கின்றது. ஆனால் ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியற் கோட்பாடே முதன் முதலாகக் கணிதச் சூத்திரங்கள் அடிப்படையில் கரும் ஈர்ப்பு மையங்கள் பற்றித் தற்போது அறியப் பட்ட அர்த்தத்தில் எதிர்வு கூறின. உண்மையில் ஐன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாடுகளுக்குக் கிடைத்த இன்னுமொரு வெற்றியென்றே இதனைக் கூறலாம். அதே சமயம் 'வெளி ', 'நேரம் ' என்பவை சுயாதீனமற்றவை. சார்பானவை என்பதை முதன் முதலாக ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியற் கோட்பாடு இவ்வுலகிற்கறிவித்ததும் குறிப்பிடத் தக்கது.

அறிவியல்; ஆறுதலற்று விரையும் அண்டப் பொருட்கள்! பிரபஞ்ச வடிவம் பற்றிய புரிதல்கள்! - வ.ந.கிரிதரன் -

- அலெக்ஸாண்டர் பிரிட்மென் -
இரவு நேரங்களில் அண்ணாந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தைப் பாருங்கள். கோடிக் கணக்கில் பரந்து கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை, கிரகங்களை உபகிரகங்களைக் கவனியுங்கள். அதே சமயம் இன்னும் ஒன்றையும் மனதிலே ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு செக்கனும் பிரமாண்டமானதொரு வேகத்தில் விரிந்து கொண்டிருக்கும் பிரபஞ்சமொன்றின் சிறியதொரு கோணத்தில் விரைந்து கொண்டிருக்கும் சிறியதொரு கோளொன்றில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதே அது. நெஞ்சினைப் பிரமிக்க வைத்து விடுகின்றதல்லவா! அப்படியானால் நம்மால் ஏனிந்த வேகத்தை உணர முடியவில்லை? மூடியதொரு புகையிரதத்தினுள் இருக்குமொருவருக்கு எவ்விதம் புகையிரதம் வேகமாகச் செல்வது தெரியாதோ அது போன்றதொரு நிலையில் தான் எம்முடைய நிலையும். பூமியைச் சுற்றிப் படர்ந்திருக்கும் வாயு மண்டலம்தான் எம்மை மூடிய புகையிரத்தைனைப் போல் இக்கோளினை வைத்திருக்கின்றது. அதனால் தான் எம்மால் எமது வேகத்தைக் கூட உணர முடியாமலிருக்கின்றது. இன்னும் ஒரு காரணம் - எம்மைச் சுற்றியுள்ள சுடர்களுக்கும், கிரகங்களுக்குமிடையிலான தொலைவு மிக மிக அதிகமானது. இத் தொலைவும் எமது வேகத்தினை உணரமுடியாதிருப்பதற்கு இன்னுமொரு காரணம். புகைவண்டியினுள் விரையும் ஒருவருக்கு அருகில் தெரியும் காட்சிகள் வேகமாகச் செல்வது போலும், மிகத் தொலைவிலுள்ள காட்சிகள் ஆறுதலாக அசைவது போலவும் தெரிவதற்கு அடிப்படைக் காரணம் தொலைவு தான்.

இவ்விதம் எல்லையற்றுப் பரந்து கிடக்கும் இப்பிரபஞ்சம் பற்றி அறிவதன மூலம் மனிதர்கள் தம் பிறப்பின் காரணத்தின் சூத்திரத்தை அறிவதற்கு முயன்று கொண்டிருக்கின்றார்கள். அரிஸ்டாட்டில், கலிலியோ, நியூட்டன் , ஐன்ஸ்டைனென்று பிரபஞ்சம் பற்றிய கோட்பாடுகள் மேலும் மேலும் வளர்ச்சியடைந்து வந்துள்ளன. வந்து கொண்டிருக்கின்றன.

இந்த வகையில்தான் 'அலெக்ஸாண்டர் பிரிட்மென்'னுடைய (Alexander Friedman) (1920) பிரபஞ்சம் பற்றிய கருத்துகளையும் பார்க்க வேண்டும். ஐன்ஸ்டைனின் கணித சூத்திரங்களை ஆராய்ந்து கொண்டிருந்த பிரிட்மான் பிரபஞ்சத்தின் உருவ அமைப்பு பற்றிய கோட்பாடுகளை விபரித்தார். அலெக்ஸாண்டர் பிரிட்மான் பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் அளவு பற்றி ஆராய்ந்தார். இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளானது வெளியை வளைக்கும் தன்மை படைத்தது. எனவே இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் அளவு பற்றி ஆராய்ந்த பிரிட்மான் 'இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் மொத்த அளவானது இப்பிரபஞ்சத்திற்கு ஒரு வடிவினை, உருவ அமைப்பினை உருவாக்கும் அளவுக்குப் போதுமானது' என எடுத்துக் காட்டினார்.

அறிவியல் உலகம்: மனிதரின் ஆளுமையும் சிக்மண்ட் பிராய்டும்! - வ.ந.கிரிதரன் -

- சிக்மண்ட் பிராய்ட் -
"மனிதன் சூழ்நிலையின் கைதி" என்றொரு கூற்று நிலவுகின்றது. கூர்ந்து கவனிப்போமாயின் மனிதரின் வாழ்வின் பெரும்பாலான படிகளை நிர்ணயிப்பது அவர் வாழும் சமுதாயத்தில் நிலவிடும் புறச்சூழல்தான். இச் சூழலின் தாக்கம் அல்லது பாதிப்பு ஒவ்வொரு மனிதரின் மீதும் ஒரே விதமான தாக்கத்தினை வெளிப்படுத்துவதில்லை. மாறாக அவரது உடனடிச் சூழலான குடும்பச் சூழல், அவரது அகச்சூழல், என்பவற்றிற்கேற்பவே இப்பாதிப்பும் அவரிடத்தில் ஏற்படுத்தும் விளைவுகளும் இருந்து விடுகின்றன. வர்க்கங்களால், ஏற்றத்தாழ்வுகளால் பிளவுண்டு கிடக்கும் புறச்சூழல் மனிதரில் ஏற்படுத்தும் பாதிப்புகள் மிகவும் வலியவை. பெரும்பாலான தெளிவுள்ள மனிதர்களே இச்சூழலின் தாக்குதல்களிற்கு ஈடுகொடுக்க முடியாமல் நீரோட்டத்தில் அள்ளுப்பட்டுச் செல்லும் கட்டையைப் போல் அள்ளுண்டு போகும்போது சாதாரணமனிதர்களின் நிலை என்ன? இத்தகைய பாதிப்புகளிலிருந்து தப்பிப் பிழைத்த ஒருசிலரே சூழலை மீறிய சரித்திர புருஷர்களாக, மானிட வழிகாட்டிகளாக உருவாகுகின்றார்கள்.

இவ்வாறு மனிதரைப் பல வழிகளிலும் ஆட்டிப்படைக்கும் இம் மனதினை மனோவியல் அறிஞரான சிக்மண்ட் பிராய்ட் இரு பகுதிகளாகப் பிரிக்கின்றார்.

1. உணர்வு மனம் (அல்லது புற மனம்)

2. உணர்விற்கப்பாற்பட்ட மனம் (அல்லது ஆழ் மனம்)

மனிதரின் மனதின் முக்காற் பங்கினை உள்ளடக்கியிருப்பது இந்த உணர்ச்சிக்கப்பாற்பட்ட ஆழ் மனமே. சகல விதமான அபிலாஷைகள், எதிர்பார்ப்புகளைப் புதைத்து வைத்துள்ளது. இந்த ஆழ்மனம்தான் மனிதரது சகல விதமான பிரச்னைகளிற்கும் காரணம். பகுத்தறிவு பேசுவது மனிதரின் உணர்வு மனம். ஆனால் அவரது உணர்விற்கப்பாற்பட்ட மனமான ஆழ்மனதினிலே அவர் பேசும் பகுத்தறிவிற்கேற்ற கொள்கைகள், எண்ணங்கள் பதிந்திராவிட்டால்..அவர் எவ்வளவு பகுத்தறிவு வாதம் புரிந்தும் பயனில்லை.

இன்றைய பெரும்பான்மையான சமய , அரசியல் தலைவர்களுட்பட சாதாரண மக்களீனதும் நிலை இதுதான். உணர்ச்சிகரமாகப் பேசுவதொன்று, செய்வதொன்றாக இருப்பதைப் பார்த்துப் பார்த்து அலுத்துக் கிடக்கின்றோமே.இந்நிலைக்குக் காரணம் இந்தப் புற , அக (ஆழ்)மனங்களிற்கிடையிலான போராட்டம்தான். புறச்சூழல், அகச்சூழலின் விளைவுகள் மனிதரில் புறமனதினில் ஏற்படுத்தும் பாதிப்பு செயலுருப் பெற வேண்டுமானால் அவரது ஆழ்மனமும் புறமனமும் ஒன்றாக இயங்க வேண்டியது அவசியம்.

அறிவியல்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனைவளம் மிக்க விஞ்ஞானப் புனைவுகள்! - வ.ந.கிரிதரன் -



 அண்மையில் மறைந்த விஞ்ஞானப் புனைகதையுலகில் முக்கிய படைப்பாளியாக விளங்கிய ஆர்தர் சி. கிளார்க்கை ஒருமுறை என் வாழ்வில் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. என் வாழ்க்கைச் சரித்திரத்தில் அதுவொரு முக்கிய சந்திப்பாகவும் அமைந்து விட்டது. மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கட்டடக்கலைப் பட்டப்படிப்பினை முடித்துப் அதற்குரிய சான்றிதழினை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் நடைபெற்ற மொறட்டுவைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பெற்றது அவரது கைகளிலிருந்துதான். அவர்தான் அப்பொழுது மொறட்டுவைப் பல்கலைக் கழகத்து வேந்தராக இருந்தார். அவரது நினைவாக இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.-  இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானப் புனைகதையுலகில் கொடிகட்டிப் பறந்த முக்கியமான மூலவர்களாக மூவர் குறிப்பிடப்படுவார்கள். ஒருவர் ஐசக் அசிமோவ். ரஷிய நாட்டவர். அடுத்தவர் அமெரிக்கரான ரொபேட் ஏ றெய்ன்லெய்ன். இவர் மிசூரியைச் சேர்ந்தவர். அடுத்தவர் ஆர்தர் சி.கிளார்க். இவர் பிரிட்டனைச் சேர்ந்தவர்.

ஆர்தர் சி. கிளார்க் ஐம்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து அண்மையில் மறையும் வரையில் இலங்கையில் வசித்து வந்தாலும் அவர் பிறந்தது இங்கிலாந்திலுள்ள 'மைன்ஹெட்' என்னுமிடத்தில்தான். 1917இல் பிறந்த அவர் இலண்டனிலுள்ள 'கிங் காலேஜ்'ஜில் இயற்பியல் மற்றும் கணித்தில் தனது பட்டப்படிப்பினை முதற்பிரிவுச் சித்தியுடன் நிறைவு செய்தவர். மிகவும் பிரசித்தி பெற்ற விஞ்ஞானப் புனை கதை எழுத்தாளராக விளங்கிய கிளார்க் ஒரு விஞ்ஞானியும் கூடத்தான். தகவல் பரிமாற்றத்திற்கான செயற்கைக் கோள்களின் ஆட்சி கோலோச்சிக் கொண்டிருக்கும் இன்றைய யுகத்தின் பிதாமகரே இவரேதான். ஏனெனில் பூமிக்கான தகவல் பரிமாற்றத்திற்கான செயற்கைக் கோள்கள் பற்றிய கோட்பாட்டினை அன்றைய காலத்தில், நாற்பதுகளிலேயே, எதிர்வு கூறியவர் இவர். மேலும் இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது பிரிட்டிஷ் றோயல் விமானப்படையின் ராடார் நிபுணராகவும் இவர் பணிபுரிந்திருக்கின்றார்.

ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசர்களின் காலத்தில் இராஜதானியாகத் திகழ்ந்த நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு எவ்விதம் இருந்திருக்கலாமென்பதை வரலாற்று நூல்கள், வெளிக்கள ஆய்வுகள் (Field Work) , தென்னிந்தியக் கட்டடக் கலை நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் விளைந்த தர்க்கத்தின் அடிப்படையில் உய்த்துணர முயன்றதின் விளைவாக உருவானதே இந்த நூல். இதன் முதற்பதிப்பு ஏற்கனவே 1996 டிசம்பரில் ஸ்நேகா (தமிழகம்) மற்றம் மங்கை பதிப்பகம் (கனடா) ஆகிய பதிப்பகங்களின் கூட்டு முயற்சியாக வெளிவந்திருந்தது. இது பற்றிய மதிப்புரைகள் கணயாழி, ஆறாந்திணை (இணைய இதழ்) மற்றும் மறுமொழி (கனடா) ஆகிய சஞ்சிகை இணைய இதழ்களில் வெளிவந்திருந்தன. இலங்கையிலிருந்து கே.எஸ்.சிவகுமாரன் இலங்கையிலிருந்து வெளிவரும் 'டெய்லி நியூஸ்' பத்திரிகையில் இதுபற்றியதொரு விமரிசனத்தை எழுதியிருந்தார். ஈழத்திலிருந்து வேறெந்தப் பத்திரிகை, சஞ்சிகைகளில் இதுபற்றிய தகவல்கள் அல்லது விமரிசனங்களேதாவது வந்ததாயென்பதை நானாறியேன். இருந்தால் அறியத்தாருங்கள் (ஒரு பதிவுக்காக).

இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலிருந்துக் கூட இவ்விதமானதொரு நகர அமைப்பு நூல் நானறிந்த வரையில் வெளிவந்ததாகத் தெரியவில்லை. பொதுவாக நகர அமைப்பு பற்றித் தெரிவித்த தகவல்களைத் திரட்டி ஆய்வு நூல்கள் வந்திருக்கின்றனவே தவிர ஒரு குறிப்பிட்ட நகர அமைப்பு பற்றி முறையான ஆய்வுகளின் அடிப்படையில் ஆய்வு நூலேதும் வந்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில் இந்நூலுக்கொரு முதனூலென்றதொரு முக்கியத்துவமுண்டு. இந்தத் துறையில் ஆய்வு செய்ய விளையும் மாணவர்களுக்கு முதனூலாகவும் உதாரணப் பிரதியாகவும் நிச்சயம் இந்த நூலிருக்கும். இந்நூலின் அணிந்துரையில் பிரபல எழுத்தாளர் செ.யோகநாதன் கூறுவதுபோல் 'பின்னொருகாலத்தில் ,சுதந்திரக்காற்று வீசும் சூழலில் வாழப்போகின்ற இளந்தலைமுறை ஆய்வாளர்களுக்கு இந்த நூல் ஓர் ஆக்கபூர்வமான வழிகாட்டியாக அமையுமென்று நிச்சயமாக நம்புகின்றேன். ஏற்கனவே வெளிவந்த நூற் பிரதி மேலும் புதுக்கி இங்கு எழுதப்பட்டுள்ளது.

இந்நூலின் முன்னுரையில் கூறியிருப்பது போல் எனக்கு நல்லூர் நகர அமைப்பு பற்றி ஆராய வேண்டுமென்னும் ஆவல் ஏற்பட்டதற்குப் பல காரணங்களுண்டு. சிறு வயதில் நான் படித்த நாவல்கள் குறிப்பாகக் கல்கி , ஜெகசிற்பியன் போன்றவர்களின் நாவல்கள் தமிழர்களின் அன்றைய தலைநகர்களான தஞ்சாவூர், காஞ்சி போன்றவற்றின் நகர் அமைப்பு பற்றி அறியும் ஆர்வத்தினை அதிகரிக்க வைத்தன. நல்லூர் ராஜதானியைப் பொறுத்தவரையில்  போதிய வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப் படவில்லை. நல்லூர் இராஜதானி புகழ்பெற்று விளங்குவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் புகழ் பெற்ற தலைநகர்களாக விளங்கிய நகர்கள் அநுராதபுரம், யாப்பகூவா போன்ற தென்னிலங்கை நகரங்கள். அவை பற்றியெல்லாம் விரிவான நூல்கள், ஆய்வுகள் வெளிவந்திருக்கும் போது நல்லூர் இராஜதானியின் நகர் அமைப்பு பற்றிய ஆய்வுகளெதுவும் வெளிவராதது துரதிருஷ்ட்டமானது.

கட்டுரை: 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -

- கடந்த ஆண்டு வெளியான 'கணையாழிக் கட்டுரைகள் (1995 - 2000) ' என்னும் தொகுப்பு நூல் பற்றிய எனது விமர்சனம் செப்டம்பர் 2017 'கணையாழி' இதழில் வெளியாகியுள்ளது. ஒரு பதிவுக்காக அக்கட்டுரை இங்கு மீள்பிரசுரமாகின்றது. - வ.ந.கி -

அண்மைககாலத்தில் வெளிவந்து நான் வாசித்த கட்டுரைத்தொகுதிகளில் சிறந்த தொகுதிகளிலொன்றாகக் 'கணையாழிக்கட்டுரைகள் (1995-2000) தொகுதியினைக் கருதுவதில் எனக்கு எந்தவிதத்தயக்கமுமில்லை. இந்தக்கட்டுரைதொகுதி என்னைக் கவர்வதற்குக் காரணமாக  இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ள கட்டுரைகளின் கூறுபொருள், கட்டுரைகளின் மொழிநடை ஆகியவற்றையே குறிப்பிடுவேன்.

கட்டுரைகளின் கூறுபொருள்
இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளின் கூறுபொருள் பன்முகத்தன்மை வாய்ந்தவை. கலை, இலக்கியம், அறிவியல், அரசியல் எனக் கட்டுரைகள் பல விடயங்களைப்பற்றிக் கூறுபவை. இலக்கியத்தை என்னும் அதை மேலு பல உபபிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம். கவிதை, படைப்பாளிகளின் படைப்புத்தன்மை, நாடகம், மொழிநடை (வட்டாரத்தமிழ் போன்ற), மேனாட்டு இலக்கிய அறிமுகம், நூல் அறிமுகம் இவ்விதம் இலக்கியத்தின் பன்முகப்பிரிவுகளிலும் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது தேர்வாளர்களின் கடும் உழைப்பினை வெளிப்படுத்துகின்றது. இப்பிரிவிவில் வெளியான கட்டுரைகள் வெளிப்படுத்தும் விடயங்கள், தகவல்களும் பற்பல.

படைப்பாளிகளைப்பற்றிய கட்டுரைகளாகச் சா.கந்தசாமியின்  'ஒரு படைப்பாளியின் நடைப்பயணத்தில்' , 'ஆருயிர் கண்ணாளுக்கு' (எழுத்தாளர் புதுமைப்பித்தன் மனைவிக்கு எழுதிய நெஞ்சினைத் தொடும் கடிதம்), 'கருத்துக்குளத்தில் கல்லெறிந்த கலகக்காரர்'(பிரபஞ்சனின் கலைஞர் படைப்புகள் பற்றிய பார்வை), சா.கந்தசாமியின் 'இலக்கிய சரிதம்' , தஞ்சை ப்ரகாஷின் 'எம்.வி.வெங்கட்ராம் எனும் நிரூபணம்', விக்கிரமாதித்யனின் 'நவீன கவிதை பிரமிளுக்கு முன்னும் பின்னும்' , ஞானக்கூத்தனின் 'டி.எஸ்.இலியட்டும் தமிழ் நவீன இலக்கியமும்' , அசோகமித்திரனின் 'சக பயணி' போன்ற கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன.

நூல் அறிமுகம்: விமல் குழந்தைவேலின் வெள்ளாவி பற்றி.... - வ.ந.கிரிதரன் -

விமல் குழந்தைவேலுவின் 'வெள்ளாவி' புகலிடத்தமிழர்கள் மத்தியிலிருந்து வெளிவந்த நாவல்களில்முக்கியமான நாவல். அம்பாறை மாவட்டத்திலுள்ள கோளாவில் பகுதி வட்டாரத் தமிழில் நாவல் எழுதப்பட்டிருக்கின்றது. ஈழத்தில் வெளிவந்த வட்டாரத்தமிழில் வெளிவந்த நாவல்களில் இந்நாவலை முதலிடத்தில் வைக்கலாம். ஆடை துவைக்கும் சமூகத்தைச்சேர்ந்த பரஞ்சோதி என்னும் பெண் பாத்திரத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டுள்ள நாவல் பல பிரச்சினைகளைத் தொட்டுச் செல்கின்றது. சமூக, பொருளியல் மற்றும் அரசியற் பிரச்சினைகளை நாவல் வெளிப்படுத்துகின்றது. ஆணாதிக்கச் சமூகத்தில். அதுவும் தாழ்த்தப்பட்ட சமூகமொன்றில் பிறக்கும் சமூகமொன்றில் பிறக்கும் பெண்ணொருத்தி எத்தனை விதமான உளவியற் துன்பங்களை அடைய வேண்டியிருக்கின்றது என்பதை பரஞ்சோதி,, அவளது தாய் மாதவி ஆகியோர் தம் வாழ்வில் அடையும் அனுபவங்கள்: வெளிப்படுத்துகின்றன. பெண்ணைப்போகப்பொருளாகப் பயன்படுத்தும் போடியார் எவ்வளவு இயல்பாக மாதவியின் மகளை ஓரிரவில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிச் செல்கின்றார். இந்த உண்மையை அறியாத பரஞ்சோதி , தன் வயிற்றில் வளரும் குழந்தைக்குத் தந்தை தன்னை விரும்பிய வரதனாக இருக்குமோ என்று சந்தேகம் அடைகின்றாள். இச்சமயம் நடந்த உண்மையை அறிந்த தாயார் மாதவி போடியாரிடம் சென்று சண்டை போட்டு விட்டு வந்தவள் அந்தத் துயர் காரணமாகவே இறந்து விடுகின்றாள். வயிற்றில் குழந்தையுடன் தனித்து அநாதரவாக விடப்பட்ட பரஞ்சோதியை அரவணைத்துத் அவளது பிறக்கப்போகும் குழந்தையுடன் தன் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்கின்றான் நாகமணி. பிறக்கும் குழந்தை அரவிந்தன் வளர்ந்து பெரியவனாகி இயக்கத்தில் இணைந்து போராடப்போவதுடன் நாவல் நிறைவு பெறுகிறது. நாவலின் பிரதான விடயங்கள் இவையே.

நூல் அறிமுகம்: 'கசாக்கின் இதிகாசம்' - வ.ந.கிரிதரன்

 - 30.10.2017 அன்று 'ரொறன்ரோ' தமிழ் சங்கத்தின் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வில் நான் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகளை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். -

இங்கு நான் அண்மையில் நான் வாசித்த நூலொன்றினை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.  இது நூல் பற்றிய அறிமுகமேயன்றி விரிவான திறனாய்வு அல்ல என்பதையும் முதலிலேயே கூறிக்கொள்ள விழைகின்றேன். இதுவொரு புதினம்.  மலையாள மொழியிலிருந்து தமிழுக்கு  எழுத்தாளர் யூமா வாசுகியால்  மொழிபெயர்க்கப்பட்ட நாவல்.  ஓ.வி.விஜயனின் (ஒட்டுபுலக்கல் வேலுக்குட்டி விஜயன்)  'கசாக்கின் இதிகாசம்' நாவலைத்தான் குறிப்பிடுகின்றேன். இம்மொழிபெயர்ப்பைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

முதலில் சுருக்கமாக நாவலாசிரியர் ஓ.வி.விஜயன் அவர்களைப்பற்றிப் பார்ப்போம். ஒட்டுபுலக்கல் வேலுக்குட்டி விஜயன் மலையாள மொழியில் எழுத்தாளர், பத்திரிகையாளர், கேலிச்சித்திரக்காரர் எனப்பன்முகபரிமாணங்களைக்கொண்டவர். நாவல், சிறுகதை, மற்றும் கட்டுரை என இவரது இலக்கியக் களம் விரிந்தது. இவரது சகோதரி ஓ.வி உஷா,வும் மலையாளக் கவிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2.7.1939இல் கேரள மாநிலத்திலுள்ள கோழிகோடு விளயஞ்சாதனூர் என்னுமிடத்தில் பிறந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் (Presidency College, Madras) ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். 2005இல் மறைந்து விட்டார். கேரள சாகித்திய அக்காதெமி, மத்திய சாக்கித்திய அக்காதெமி மற்றும் கேரள மாநில அரசின் உயர்ந்த இலக்கிய விருதான எழுத்தச்சன் விருது போன்ற விருதுகளைப்பெற்ற ஓ.வி.விஜயன் இந்திய அரசின் பத்மபூஷண் விருதினையும் பெற்றவர். இவரது மனைவி தெரசா . அவரும் அமரராகிவிட்டார். ஒரே மகனான மது அமெரிக்காவில் வசிக்கின்றார்.

'கசாக்கின் இதிகாசம்' என்னுமிந்த நாவல் மலையாளத்தில் வெளிவந்த ஆண்டு 1969. இதுவே ஓ.வி.விஜயனின் முதலாவது நாவலாகும். இதிகாசமென்றதும் பன்னூறு பக்கங்களைக் கொண்ட விரிந்த நாவலாக இதனை யாரும் கருதி விடாதீர்கள்.  தமிழ் மொழிபெயர்ப்பு 239 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ளது. விக்கிபீடியாக் குறிப்புகளின்படி இந்நாவலை ஆசிரியர் எழுதுவதற்கு 12 ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. இந்நாவலின் கட்டுக்கோப்பான மொழி இறுக்கத்தின் காரணத்தை உணர் முடிகின்றது. ஆனால் எழுத்தாளர் ஜெயமோகன் மிகக்குறுகிய காலத்தில் எழுதப்பட்ட நாவலாக இதனைக் குறிப்பிடுவார்:

Sunday, February 18, 2018

நாவல்: அமெரிக்கா! (1-8) - வ.ந.கிரிதரன் -


- மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது 'அமெரிக்கா' என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே 'பொந்துப்பறவைகள்' மற்றும் 'மான் ஹோல்' தவிர , கனடாவிலிருந்து வெளியான 'தாயகம்' பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின,  மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில் மீண்டும் அத்தொகுப்பில் வெளியான ஆக்கங்களை சரி, பிழை பார்த்துப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் 'அமெரிக்கா' என்னும் இந்நாவலின் மீள்பிரசுரிப்பு. இவ்விதம் பிரசுரிப்பதன் மூலம், அவற்றைச்சரி, பிழை பார்த்து, மீள எழுதுவதன் மூலம் அடுத்த பதிப்புக்குத்தயார் படுத்தலாம் என்றெண்ணுகின்றேன். அத்துடன்  பதிவுகள் வாசகர்களும் அவற்றை இணையத்தின் மூலம் வாசிக்க வழி வகுக்கும் என்றுமெண்ணுகின்றேன்.  இறுதி அத்தியாயம் மீளவும் திருத்தி எழுதப்பட்டுள்ளது- வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஒன்று: இளங்கோவின் பயணம்!

உலகப்புகழ்பெற்ற நியூயார்க் மாநகரின் ஒரு பகுதி புரூக்லீனின் ஓர் ஓரத்தே, கைவிடப்படும் நிலையிலிருந்த , பழைய படையினரால் பாவிக்கப்பட்ட கட்டடத்தின் ஐந்தாம் மாடி. அந்தக்கட்டடத்திற்கு எத்தனை மாடிகள் உள்ளன என்பதே தெரியாது. எனக்குத்தெரிந்ததெல்லாம் நான் இருந்த கட்டடத்தின் பகுதி ஐந்தாவது மாடி என்பது மட்டும்தான். என்னைப்பொறுத்தவரையில் இந்த ஐந்தாவது மாடி அமெரிக்காவைப்பொறுத்தவரையில் இன்னுமோர் உலகம். 'ஒய்யாரக்கொண்டையாம், தாழம்பூவாம். உள்ளேயிருப்பது ஈரும், பேனும்' என்பார்கள். எனது அமெரிக்கப்பிரவேசமும் இப்படித்தான் அமைந்து விட்டது. உலகின் செல்வச்செழிப்புள்ள மாபெரும் ஜனநாயக நாடு! பராக்கிரமம் மிக்க வல்லரசு! இந்த நாட்டில் காலடி எடுத்து வைக்கும் மட்டும் எனக்கு அமெரிக்கா ஒரு சொர்க்க பூமிதான். மனித உரிமைகளுக்கு மதிப்புத்தருகின்ற மகத்தான பூமிதான். ஆனால், என் முதல் அனுபவமே என் எண்ணத்தைச்சுட்டுப்பொசுக்கி விட்டது. ஒரு வேளை என் அமெரிக்க அனுபவம் பிழையாகவிருக்குமோ என்று சில வேளை நான் நினைப்பதுண்டு. ஆனால் மிகுந்த வெற்றியுடன் வாழும் என்னினத்தைச்சேர்ந்த ஏனைய அமெரிக்கர்களை எண்ணிப்பார்ப்பதுண்டு. உண்மைதான்! பணம் பண்ணச்சந்தர்ப்பங்கள் , வெற்றியடைய வழிமுறைகள் உள்ள சமூகம்தான் அமெரிக்க சமூகம். ஆனால் அந்தச் சமுதாயத்தில்தான் எனக்கேற்பட்ட அனுபவங்களும் நிகழ்ந்தன என்பதையும் எண்ணித்தான் பார்க்கவேண்டியிருக்கிறது. சுதந்திரதேவி சிலை நீதி, விடுதலை, சம உரிமையை வலுயுறுத்துகிறது. அமெரிக்க அரசியலமைப்பும்  மனிதரின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்துகிறது.  இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை. வெளியிலிருக்கும் மட்டும் அப்படித்தானிருந்தது. எல்லாம் உள்ளே வரும் மட்டும்தான்.

இதை எழுதுகின்ற இந்தச்சந்தர்ப்பத்தில் நானோர் இளம் எழுத்தாளன்.  எழுத்துலகில்  பலவற்றைச் சாதிக்க வேண்டுமென்ற, சோதிக்க வேண்டுமென்ற பேரார்வத்துடன் முயன்று கொண்டிருக்கின்ற இளம் எழுத்தாளன்.  அதே சமயம் நானொரு தமிழ்க்கனடியன்.  இன்றைய சூழ்நிலையில்  எனது அமெரிக்க அனுபவங்களை மீளாய்வு செய்யும்போதுதான் பல உண்மைகள்  வெளிப்படுகின்றன.  புரூக்லீன் நகரில், தடுப்பு முகாமில் எனது மூன்று மாத கால அனுபவமும்,  நியுயார்க்  நகரில் எனது எனது ஒரு வருட அனுபவமும் எனக்கு எத்தனையோ  விடயங்களைத் தெளிவுபடுத்தின.  வாழ்வு பற்றிய  பல்வேறு உண்மைகளைப் புரிய வைத்தன.  அனுபவங்கள் கசப்பானைவையாக இருந்தபோதும், அவ்வனுபவங்கள் தந்த படிப்பினைகள் மகத்தானவை. விலை மதிக்க முடியாதன். எனது இந்த அனுபவங்களை, இன்று அமெரிக்காவில் பல்வேறு தடுப்பு முகாம்களில் கைதிகளாக, ஏக்கங்களுடன், எதிர்பார்ப்புகளுடன் காத்துக்கிடக்கும் பல்வேறு நாட்டு மக்களுக்குச் சமர்ப்பணம் செய்கின்றேன்.

தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்! - வ.ந.கிரிதரன் -

- 'போர்க்காலம் - தோழிகளின் உரையாடல்' என்னும் தலைப்பில் அண்மையில் மறைந்த தமிழினி ஜெயக்குமாரனின் கவிதைகள் அடங்கிய தொகுப்பொன்றினை, அவரது கணவர் திரு.ஜெயக்குமாரனின் உதவியுடன், சிவகாமி ஞாபகார்த்த நிறுவகம் என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தத்தொகுப்புக்கு வ.ந.கிரிதரன் எழுதிய முன்னுரையினைப் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். - பதிவுகள் -

தமிழினி விடுதலைப்புலிகளின்  மகளிர் அணியின் அரசியற் பிரிவின் பொறுப்பாளராக விளங்கியவர். அத்துடன் இராணுவத்தாக்குதல்களிலும் பங்கு பற்றியவர். யுத்தத்தின் பின்னர் சிறிது காலம் சிறை வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர். அதன் பின்னர் அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியத்தில் தன் பங்களிப்பினை ஆற்றத்தொடங்கியிருந்தார். தமிழினி எழுதுவதில் திறமை மிக்கவர். அவர் தன் அனுபவங்களை மையமாக வைத்துக் கவிதைகள், சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். 'பதிவுகள்' இணைய இதழுக்கும் அவர் தன் படைப்புகளை அவ்வப்போது அனுப்புவார். அவர் தன் அனுபவங்களை மையமாக வைத்து இன்னும் பல படைப்புகளைத்தருவார் என்றெண்ணியிருந்த சமயத்தில் அவரது மறைவுச்செய்தி வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உண்மையில் ஈழத்துத்தமிழ் இலக்கிய வானில் கணப்பொழுதில் ஒளி தந்து மறையும் மின்னலைப்போல் , தன் குறுகிய வாழ்வினுள் ஒளிர்ந்து மறைந்தவர் தமிழினி. இவரது படைப்புகள் குறைவாக இருந்தபோதிலும், அவை நூலுருப்பெற வேண்டியதவசியம். தமிழினியின் கவிதைகளைத்தொகுத்து சிறு தொகுப்பாக வெளிக்கொணர முனைந்திருக்கும் அவரது கணவர் திரு.ஜெயக்குமாரனின் இந்த முயற்சியானது மிகவும் பாராட்டுதற்குரியதும், பயனுள்ளதுமாகும். முக்கியமானதொரு தொகுப்பாக விளங்கப்போகும் தொகுப்பிது என்றும் கூறலாம்.

தமிழினி அண்மைக்காலமாகத்தான் எழுதுவதில் கூடுதல் கவனம் செலுத்தினாரா? உண்மையில் அவர் கடந்த காலத்திலும் பல்வேறு பெயர்களில் அவர் எழுதியிருப்பதை அவரே ஒருமுறை தன் முகநூலில் பகிர்ந்திருக்கின்றார். அவரது 'மழைக்கால் இரவு' சிறுகதையின் வரிகளிலிருந்து 'யுத்தம்' என்றொரு கவிதையினை உருவாக்கிப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்திருந்தேன். அது பற்றித் தன் முகநூலில் கருத்துத்தெரிவித்திருந்தபோது தன் கடந்த காலத்து இலக்கிய முயற்சிகளைப்பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

அறிவியல்: அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் -

நவீன பெளதீகம் என்றதும் நமக்கு ஞாபகத்தில் வருபவர் அல்பேர்ட் ஜன்ஸ்டைன். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவரால் வெளியிடப்பட்ட 'சார்பியற் தத்துவம்' (Theory of Ralativity) பற்றிய கட்டுரைகள் பெளதீகவியலின் வரலாற்றிலேயே மாபெரும் புரட்சியை ஏற்படுத்தின. புரட்சியென்றால் சாதாரண புரட்சியல்ல. பெளதிகத்தின் அடித்தளத்தையே அடியோடு மாற்றிவைத்த புரட்சி. இச் சார்பியற் தத்துவமும், சக்திச் சொட்டுப் பெளதிகமும் (Quantum Physics) இன்றைய நவீன பெளதிகத்தின் அடித்தளங்களாகக் கருதப்படுபவை. சார்பியற் தத்துவத்தைப் பொறுத்தவரையில் அது முழுக்க முழுக்க ஜன்ஸ்டைனின் கோட்பாடே. சக்திச் சொட்டுப் பெளதிகத்தின் ஆரம்ப கர்த்தாவாகவும் ஜன்ஸ்டைனையே கருதலாம். உண்மையில் ஜன்ஸ்டைனிற்கு நோபல் பரிசு கிடைத்ததே போட்டான்கள் பற்றிய கண்டு பிடிப்பிற்காகத்தான். இக் கண்டுபிடிப்பே சக்திச் சொட்டுப் பெளதிகத்தின் ஆரம்ப வளர்ச்சியாகும். உண்மையில் ஜன்ஸ்டைனிற்கு சார்பியற் தத்துவத்திற்காகவும் இன்னுமொருமுறை நோபல் பரிசு கொடுத்திருக்க வேண்டும்.

சரி. அப்படி இந்தச் சார்பியற் தத்துவம் அப்படி என்னதான் கூறிவிடுகின்றது?

விடை மிகவும் சுலபம். 'நேரம்', 'வெளி' பற்றிய கருதுகோள்களை , அதாவது இதுவரை காலம் 'வெளி', 'நேரம்' பற்றி நிலவி வந்த கோட்பாடுகளை, சார்பியற் தத்துவம் அடியோடு மாற்றியமைத்து விடுகின்றது. அதே சமயம் 'பொருள்' , 'சக்தி', 'புவியீர்ப்பு', பற்றியும் புதிய கருது கோள்களை முன்வைக்கின்றது. இச் சார்பியற் தத்துவக் கோட்பாடுகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

1. சிறப்புச் சார்பியற் தத்துவம் (Special Theory of Relativity)
2. பொதுச் சார்பியற் தத்துவம் (General Theory of Relativity)

இவற்றில் 'சிறப்புச் சார்பியற்' தத்துவம் இதுவரை நிலவி வந்த 'வெளி' 'நேரம்' பற்றிய கோட்பாடுகளை அடியோடு மாற்றியமைத்து விடுகின்றதென்றால், பொதுச் சார்பியற் தத்துவமோ புவியீர்ப்பு பற்றிய கோட்பாட்டை மாற்றியமைத்து விடுகின்றது.

 'வெளி' 'நேரம்' பற்றிய கோட்பாடுகள்.
ஆயிரக்கணக்கான வருடங்களாக நிலவி வந்த அரிஸ்டாட்டிலின் கோட்பாடுகளைப் பரிசீலனைக்குட்படுத்தியவர்கள் கலிலியோவும் , சேர். ஜசக் நியூட்டனுமே. ஆனால் வெளி, நேரம் பற்றிய இவர்கள் யாவரினதும் கோட்பாடுகள் ஒன்றாகவேயிருந்தன. வெளியையும், நேரத்தையும் சுற்றிவர நிகழும் இயக்கங்களால் எவ்விதப் பாதிப்பும் அடையாத சுயாதீனமானவைகளாகவே (absolute) இவர்கள் கருதினார்கள். சாதாரண மனித வாழ்வின் அனுபவங்களிலிருந்தே இவர்களும் வெளி, நேரம் பற்றிய கோட்பாடுகளை வகுத்திருந்தார்கள்.

நூல் அறிமுகம்: 'மிஷியோ ஹகு'வின் 'ஹைபர் ஸ்பேஸ்'! - வ.ந.கிரிதரன் -



நாம் வாழும் இந்த உலகம், வான், மதி, சுடர், இவற்றையெல்லாம் உள்ளடக்கிய நமது பிரபஞ்சம் இவை யாவுமே எப்பொழுதும் எந்நெஞ்சில் பெரும் பிரமிப்பினையும், பல்வேறு வகைப்பட்ட வினாக்களையும் ஏற்படுத்தி விடுவது வழக்கம். முப்பரிமாண உலகினுள் கைதிகளாக வளைய வந்துகொண்டிருக்கும் நாம், இம்மண்ணில் நாமே உருவாக்கிய அமைப்புகள் ஏற்படுத்தும் தாக்கங்களுக்குள் சிக்கி, அவற்றுக்கு ஈடுகொடுத்துத் தப்பிப் பிழைப்பதிலேயே எம் வாழ்நாளைக் கழித்து முடிந்து விடுகின்றோம். இத்தகையதொரு நிலையில் இப்பிரபஞ்சத்தின் தோற்றம், அமைப்பு, முடிவு பற்றிய வினாக்கள், அவை பற்றிய நினைவுகள், எண்ணங்கள் எல்லாமே எப்பொழுதுமே என் நெஞ்சில் ஒருவித தண்மையான உணர்வினை ஏற்படுத்தி விடுவது வழக்கம். சகல விதமான மன அழுத்தங்களிலிருந்தும் என்னை விடுபட இவை பெரிதும் உதவுகின்றன. இதற்காகவே நகரவாழ்வின், நாகரிக வாழ்வின் இறுக்கத்தினிலிருந்தும் விடுபடுவதற்காக நேரம் கிடைக்கும் போதிலெல்லாம் இரவினில் தொலைவினில் சிரிக்கும் நட்சத்திரக் கன்னியரின் கண்சிமிட்டலில், வெண்மதிப் பெண்ணின் பேரழகில் என்னை மறந்து விடுவேன்.

அவர்களுடன் கழிக்கும் என் பொழுதுகள் என்னைப் பொறுத்தவரையில் அற்புதமானவை. அவர்களைப் பற்றிய நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள் இவை யாவுமே எனக்கு மிகவும் உவப்பானவை. அண்மையில் நம் இருப்பு, பிரபஞ்ச அமைப்பு பற்றியெல்லாம் புதியதொரு கோட்பாட்டளவில் விளக்குமொரு நல்லதொரு , வான் - இயற்பியல் (Astro-Physics) சம்பந்தமான நூலொன்றினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. முன்பொருமுறை ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் 'சிறப்புச், சார்பியற்' கோட்பாடுகளை, அறிவுத்தாகமெடுத்த சாதாரண வாசகரொருவர் விளங்கும் வகையில் 'எரிக் சைய்சன்' (Eric Chaission) எழுதிய 'Relatively Speaking' வாசித்ததன் பின்னர், 'ஸ்டீபன் ஹார்கின்ஸ்'சின் 'காலத்தின் சுருக்கமான வரலாறு' (A Brief History Of Time) வாசித்ததன் பின்னர், என்னை மிகவும் கவர்ந்த நூலிது. நியுயோர்க்கில் 'City College'இல் தத்துவ இயற்பியலில் பேராசிரியராகப் பணிபுரியும் 'மிஷியொ ஹகு' (Michio kaku) எழுதிய 'ஹைபர் ஸ்பேஸ்' (Hyperspace) என்னும் நூல் பற்றித்தான் குறிப்பிடுகின்றேன். இந்தக் கட்டுரை இந்நூல் பற்றிய விமர்சனக் கட்டுரையோ அல்லது மதிப்புரையோ அல்ல. அவ்விதமானதொரு கட்டுரையினைப் பின்னொரு சமயம் எழுதும் எண்ணமுண்டு. ஆனால் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள சில விடயங்களைப் பற்றிய சிறியதொரு விபரிப்பே, ஏற்பட்ட என் எண்ணங்களின் பாதிப்பே எனது இச்சிறு கட்டுரை.

நூல் அறிமுகம்: 'ஜான் மார்டெலி'ன் (Yann Martel) 'பை'யின் வாழ்வு (Life Of Pi)! - வ.ந.கிரிதரன் -

கனடிய எழுத்தாளரான ஜான் மார்டெல் (Yann Martel) எழுதிய புகழ்பெற்ற நாவல் 'பை'யின் வாழ்வு (Life Of Pi). இந்த நாவல் 2002ஆம் ஆண்டுக்குரிய 'புக்கர்' விருதினைப் பெற்றதுடன் பிரான்சின் புக்கர் விருதினை இதன் பிரெஞ்சிய மொழிபெயர்ப்பிற்காகப் பெற்றது. அத்துடன் தென்னாபிரிக்க நாவல் விருது, இலக்கியத்திற்கான ஆசிய/பஸிபிக் அமெரிக்க விருது (2001-2003)எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த நாவல் ஐந்து தடவைகள் பிரித்தானிய பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.  அண்மையில் நான் வாசித்த நாவல்களில் மட்டுமல்ல, இதுவரையில் நான் வாசித்த நாவல்களில் எனக்குப் பிடித்த நாவல்களிலொன்றாக இந்நாவலும் அமைந்து விட்டதென்று கூறினால் அது மிகையான கூற்றல்ல. ஜான் மார்டெல்லின் இந்த நாவல் பல்வேறு காரணங்களுக்காக என்னைக் கவர்ந்துள்ளது. அவற்றில் முக்கியமானவையாக நான் கருதுவது: கதை கூறப்படும் முறை, கதைப்பின்னல், பாத்திரப்படைப்பு, மானுட இருப்பு பற்றிய தேடல், இயற்கை பற்றிய சித்திரிப்பு... இவைதான் முக்கியமாக இந்நாவல் என்னைக் கவர்ந்ததற்குக் காரணம். இவையெல்லாம் சேர்ந்து இந்நாவலை வாசிக்கும் அனுபவத்தையொரு இன்பகரமானதொரு அனுபவமாக்கி விட்டன. அதன் விளைவே இந்நாவல் பற்றிய எனது இந்தக் குறிப்புகளும்.

இந்நாவல் உருவான கதையினை ஆசிரியர் நூலின் ஆசிரியர் குறிப்பில் குறிப்பிடுகின்றார். தனது இரண்டாவது நாவல் போதிய வரவேற்பினைப் பெறாத நிலையில், பொருளியல்ரீதியில் பாதிப்புற்றிருந்த நிலையில் , ஆசிரியர் மும்பாய் பயணமாகின்றார். பின் அங்கிருந்து பாண்டிச்சேரிக்குச் செல்கின்றார். ஒரு 'காபி கபே'யில் பாண்டிச்சேரி வாசியான முதியவரொருவரைச் சந்திக்கின்றார். அவர் பிரான்சிஸ் அதிருபசாமி. அவர் தனது உரையாடலில் 'என்னிடமொரு உன்னைக் கடவுளை நம்புமொருவனாக ஆக்குமொரு கதை உள்ளது' என்கின்றார். அவர் இவ்விதம் கூறவே ஆரம்பத்தில் ஆசிரியர் அந்த முதியவரைப் பற்றி, சமயத்தைப் பரப்பும் இன்னுமொரு பிரச்சாரகரோ என்று சந்தேகமுறுகின்றார். அதன் எதிரொலியாக அந்தக் கதை இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னைய ரோம் நகரின் ஒதுக்குப் புறத்தில் அல்லது ஏழாம் நூற்றாண்டு அராபியாவில் நடைபெறுகிறதா' என்று கேள்விகளைத் தொடுக்கின்றார். அதற்கு அந்த முதியவர் 'இல்லை, அந்தக் கதை சில வருடங்களுக்கு முன், இங்கு பாண்டிச்சேரியில்தான் ஆரம்பிக்கிறது. அத்துடன் அது நீ எந்த நாட்டிலிருந்து வந்திருக்கின்றாயோ அந்த அந்த நாட்டில்தான் முடிவடைகிறதென்பதைக் கூறுவதில் நான் மகிழ்ச்சியுறுகிறேன்' என்று கூறுகின்றார். இவ்விதமாக நாவல், ஆசிரியரின் குறிப்புடன் ஆரம்பமாகிறது. அந்த முதியவர் கூறும் கதையின் பிரதான நாயகனே 'பிஸ்ஸின் மொலிடொர் பட்டேல்' (Piscine Molitor Patel).

நூல் அறிமுகம்: ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் 'சிறுவர் கதைகள்' தொகுப்பும், அதன் சிறப்பும்!

- ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா -

நான் எப்பொழுதுமே ஒரு குழந்தையிலக்கிய நூலொன்றினை அணுகும்போது ஒரு குழந்தை தன் சொந்த அனுபவத்தில் எவ்விதம் அந்நூலினை அணுகுமோ அவ்விதமே என் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் அணுகுவேன். என் பால்ய காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த குழந்தைக் கதைத் தொகுப்புகளில்  முக்கியமான அம்சம். அத்தொகுப்பின் அட்டைப்பட ஓவியமும், அதில் பாவிக்கப்பட்டுள்ள வர்ணங்களும், உள்ளே ஆக்கங்களுக்குப் பாவிக்கப்பட்டுள்ள ஓவியங்களும் மற்றும் கூறப்படும் மொழியும்தாம். எனக்கு எப்பொழுதுமே நூலொன்று பிடிப்பதாகவிருந்தால் மேற்கூறப்பட்டுள்ள சகல அம்சங்களும்  முக்கியமானவை. எனக்கு மட்டுமல்ல குழந்தைகள் அனைவருக்கும் இக்கூற்று பொருந்தும். குழந்தைப்பருவத்தில் குழந்தையொன்றின் சிந்தையில் நூலொன்றின் அட்டைப்படம் கற்பனைச்சிட்டினைச் சிறகடிக்கப் பறக்க வைக்கின்றது. அந்நூலிலுள்ள ஓவியங்களிலுள்ள உருவங்கள் அவை மானுடர்களாகவிருக்கட்டும் அல்லது ஏனைய உயிரினங்களாகவிருக்கட்டும் அவற்றைப்பார்க்கும் குழந்தையொன்றின் உள்ளத்தில் களிப்பினைத தருகின்றன. சிறு வயதில் கண்ணன் சிறுவர் சஞ்சிகையில் வெளியாகும் சிட்டுக்கள் போன்ற உயிரினங்களைப்பற்றிய குழந்தைக் கவிதைகளை இரசிக்கும் அதே ஆர்வத்துடன் நான் அப்படைப்புகளுடன் வெளியாகும் ஓவியங்களையும் இரசிப்பேன். இவற்றைப்போல் அப்படைப்புகளை வெளிப்படுத்தும் எளிமையான மொழி நடையும் எனக்கு மிகவும் பிடித்தவை. வாண்டுமாமா, குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா போன்றோரின் படைப்புகளின் சிறப்புக்கு முக்கியக்காரணம் அவற்றை விபரிக்கும் எளிய, இனிய மொழிநடையே. இவ்விதமான என் மற்றும் குழந்தைகளின் பொதுவான உளவியலின் அடிப்படையிலேயே நான் இவ்வகையான குழந்தைப்படைப்புகளையும் சரி, நூல்களையும் சரி அணுகுவது வழக்கம். அதே அணுகல் முறையினைத்தான் அண்மையில் 'டொராண்டோ' நகரில் வெளியான எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் குழந்தைகளுக்கான நூல்களுக்கும் கையாண்டேன். அவற்றில் இங்கு நான் எடுத்துக்கொண்ட நூல் அவர் எழுதிய 'சிறுவர் கதைகள்' என்னும் நூலே.

மீள்பிரசுரம் ('ஞானம்' சஞ்சிகை): வ.ந.கிரிதரன் நேர்காணல். கண்டவர்: கே.எஸ்.சுதாகர்

நேர்காணல்: - இலங்கையிலிருந்து எழுத்தாளர் தி.ஞானசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் 'ஞானம்' மாத சஞ்சிகையின் ஆகஸ்ட் 2017  & செப்டெம்பர் இதழ்களில் இதழில் வெளியான நேர்காணலிது . ஒரு பதிவுக்காக அது இங்கு மீள்பிரசுரமாகின்றது.  வ.ந.கிரிதரன் நேர்காணல் (மின்னஞ்சல்வழி). கண்டவர்: கே.எஸ்.சுதாகர்

- (வ.ந.கிரிதரன் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டிடடக்கலை பயின்றவர். இலங்கையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அதிகார சபை ஆகியவற்றில் பணிபுரிந்தவர். கனடாவிற்குப் புலம்பெயர்ந்த பின்னர் அங்கு இலத்திரனியல் பொறியியல் மற்றும் தகவல் தொழில்னுட்பத்துறையில் தகமைகள் பெற்றுள்ளார். சிறுகதை, கவிதை, கட்டுரை, ஆராய்ச்சி மற்றும் நாவல் என்ற துறைகளில் தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். அத்துடன் 2000ஆம் ஆண்டிலிருந்து ‘பதிவுகள்’ (pathivukal - http://www.geotamil.com/)  என்னும் இணைய இதழையும் நடத்தி வருகின்றார். ‘’குடிவரவாளன்’ நாவல், ’அமெரிக்கா’ நாவல்/சிறுகதைகள் தொகுப்பு,, ‘மண்ணின் குரல்’ நான்கு நாவல்களின் தொகுப்பு , ’நல்லூர் ராஜதானி: நகர அமைப்பு’ , 'எழுக அதிமானுடா' (கவிதைத்தொகுப்பு) மற்றும் 'மண்ணின் குரல்' (நாவல் கட்டுரை மற்றும் கவிதைகளின் தொகுப்பு) போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார்.) -

1. உங்கள் பெயரின் முதல் எழுத்துக்களான வ.ந என்பவை எதனைக் குறிக்கின்றன?

உண்மையைக் கூற வேண்டுமானால் நான் பால்யப் பருவத்தை வவுனியாவில் கழித்தேன். எனது ஆரம்பக் கல்வியை , ஏழாம் வகுப்பு வரை, வவுனியா மகா வித்தியாலயத்தில் மேற்கொண்டேன். எனது அம்மா , நவரத்தினம் டீச்சர், அங்கு ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அக்காலகட்டத்தில் எங்கள் வீடு முழுவதும் தமிழகத்தில்  வெளியான பத்திரிகை, சஞ்சிகைகளால் குவிந்து கிடந்தது. ஈழத்துப்பத்திரிகைகளான ஈழநாடு, சுதந்திரன் பத்திரிகைகளும் அவற்றில் அடங்கும். அப்பாவே என் பால்யகாலத்து வாசிப்புப் பழக்கத்துக்கு முக்கிய காரணம். எனக்கு எழுத வேண்டுமென்ற ஆர்வம் அதனாலேயே ஆரம்பமானது. வவுனியா குளங்கள் மலிந்த , இயற்கை வளம் மிக்க மண். நாங்கள் அப்பொழுது வசித்து வந்த குருமண்காடு பகுதி ஒற்றையடி பாதையுடன் கூடிய , வனப்பிரதேசம். பட்சிகளும், வானரங்களும் இன்னும் பல்வகைக் கானுயிர்களும் நிறைந்த பகுதி. அதன் காரணமாகவே ந.கிரிதரன், கிரிதரன் என்று மாணவப்பருவத்தில் எழுத்துலகில் காலடியெடுத்து வைத்த எனக்கு வன்னி மண்ணான வவுனியாவின் முதலெழுத்தை என் பெயருடன் சேர்க்க வேண்டுமென்ற ஆர்வமெழுந்தது. அதன் விளைவாகவே அக்காலகட்டத்தில் வ என்னும் எழுத்தை என் பெயரின் முன்னால் சேர்த்து எழுத ஆரம்பித்தேன். ந.என்பது என் தந்தையாரான நவரத்தினத்தைக் குறிக்கும். இதிலொரு ஆச்சரியம் என்னவென்றால் நான் பிறந்த இடம், என் தந்தையார் பிறந்த இடம் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை. அதன் முதல் எழுத்தும் வ. அந்த வகையிலும் வ.ந. என்பது பொருந்திப் போகின்றது. இருந்தாலும் வ என்னும் எழுத்தை நான் தேர்வு செய்ததற்குக் காரணம் வவுனியாவும் இயற்கை வளம் மலிந்த வன்னி மண்ணுமே. அப்பொழுது நான் நான் பிறந்த இடம் வண்ணார்பண்ணை என்பதற்காகத் தெரிவு செய்யவில்லை. ஏனென்றால் அப்பெயரில் எழுதத்தொடங்கியபோது நான் பதின்ம வயதினைக்கூட அடைந்திருக்கவில்லை. நான் அப்பொழுது வாழ்ந்து கொண்டிருந்த , எனக்கு மிகவும் பிடித்த வன்னி மண்ணான வவுனியா என்பதால், அதன் முதல் எழுத்தினை என் பெயரில் முன் சேர்க்க வேணடுமென்ற எண்ணமே எனக்கு அப்போதிருந்தது. ஆனால் அவ்விதம் தேர்வு செய்த வ நான் பிறந்த, என் தந்தையார் பிறந்த ஊரின் பெயரின் முதலெழுத்துடன் இணைந்து போனது தற்செயலானது.

முகநூல் கலையுலகக் குறிப்புகள்: அயலவர் கலையுலகம் அறிவோம் - காமினி பொன்செகாவின் (Gamini Fonseka) நடிப்பில் சருங்கலய (Sarunggalaya)

- சருங்கலயத் திரைப்படக் காட்சி -
- அண்மையில் சுனில் ஆரியரத்தினாவின் இயக்கத்தில், காமினி பொன்செகாவின் நடிப்பில் வெளியான 'சருங்கலய' திரைப்படம் பற்றிய எனது சிறு முகநூற் குறிப்பும், அதற்கான பயன் மிக்க, ஆவணச்சிறப்பு மிக்க எதிர்வினைகளும் இங்கே ஒரு பதிவுக்காகப் பதிவிடப்படுகின்றன. -

சிங்களத்திரையுலகின் எம்ஜிஆராக இவரைத்தமிழர்கள் அறிந்திருந்தாலும், இவர் நடிப்பிலும் திறமை வாய்ந்தவர். இவர்தான் காமினி பொன்செகா. இவரது இயற்பெயர் டொன் செல்டன் காமினி பொன்செகா (Don Shelton Gamini Fonseka). நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், அரசியல்வாதி எனப்பல்பரிமாண ஆளுமை மிக்கவர் இவர். பின்னாள்களில் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதியாகத்திகழ்ந்த இவர் வட, கிழக்கின் ஆளுநராகவும் விளங்கியவர். 'நீலகடல் ஓரத்தில்',' நங்கூரம்' ஆகிய தமிழ்த்திரைப்படங்களிலும் நடித்தவர் இவர்.

'சருங்கலய' (சருங்கலய என்றால் பட்டம் என்று பொருள்) என்னும் சிங்களத்திரைப்படத்தில் நடராஜா என்னும் தமிழராகவும் நடித்திருக்கின்றார். இப்படத்தின் பல காட்சிகள் கரவெட்டியில் படமாக்கப்பட்டதாகவும் அறியப்படுகின்றது. இத்திரைப்படம் இலங்கையில் நடைபெற்ற 1977 இனக்கலவரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சிங்களத்திரைப்படமாகும். இத்திரைப்படத்துக்கான தமிழ் வசனத்தை திருமதி யோகா பாலச்சந்திரன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை இயக்கிய சுனில் ஆரியரத்தின தமிழில் மிகுந்த பாண்டித்தியம் பெற்றவர். எழுத்தாளர், கவிஞர், இயக்குநர், விமர்சகர், பேராசிரியர் என்று பன்முக ஆளுமையாளர். யாழ் பல்கலைகழகத்தில் பேராசிரியராகவும் பணி புரிந்திருக்கின்றார்.

கவிதை: காலவெளிப்பயணியின் நெடும் பயணம்' - வ.ந.கிரிதரன் -

- 'ஓவியா பதிப்பக' உரிமையாளரும், எழுத்தாளருமான வதிலைப்பிரபா அவர்கள் வெளியிட்டு வரும் 'மகாகவி' சஞ்சிகையின் 'திசம்பர்' இதழ் பன்னாட்டிதழாக மலர்ந்திருக்கின்றது. இச்சிறப்பிதழில் எனது கவிதையான 'காலவெளிப்பயணியின்  நெடும் பயணம்' கவிதை வெளியாகியுள்ளது. அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். -

என் வெப்ப மண்ணை, மேல் விரியும்
இரவுவானை, சுடரை, நிலவை
நான் நீங்கியது நேற்றுத்தான் போல்
நினைவில் நிற்கிறது.

இன்று நிழலமர்ந்து
நினைவசை போடுமொரு
மாடுமாகினேன்.
ஒட்டகமாய், மாடாய்,
நள்யாமத்து நத்தாய்,
சுமைமிகு அத்திரியாய்,
உறுமீன் தேடி
வாடி நிற்குமொரு கொக்காய்,
இரைக்காய்ப் பொறுமைமிகு
முதலையாய்,
துருவத்துக் கட்டடக்காட்டுக்
கானுயிராயுமாகினேன்.

முடிவற்ற நெடும் பயணம்!

தங்குதற்கும், ஆறுதற்கும்
தருணங்களற்ற நெடும் பயணம்!

என்று முடியும்? எங்கு முடியும்?

நம்பிக்கையினை
நானின்னும் இழக்கவில்லை.
வழிச்சோலைகள், நீர்நிலைகள்
துருவப்பாலை வசங்களாயின.
பேய்த்தேரெனவே போயின.
இருந்தும் சிந்தையின்னும்
இழக்கவில்லை நான்.

காலவெளிக் குழந்தை நான்
கண்ட கனவுகள்
நனவிடைதோய்தற் துளிகளாயின.
துருவப்பாலை ஒட்டகம் நான்.
இன்றோ சுடர் தேடுமொரு
துருவத்துப் பரதேசி!

அந்தமிலாவிருப்பு
நம்பிக்கைக் கனவுகள்
மிகப்பயணிக்குமொரு
காலவெளிப்பயணி
நான். பயணிக்கின்றேன்.
பயணிக்கின்றேன். பயணிக்கின்றேன்.


- 'மகாகவி' (திசம்பர் 2017 - பன்னாட்டுச் சிறப்பிதழ்)  சஞ்சிகையில் ..-
ngiri2704@rogers..com

நன்றி: பதிவுகள்.காம்







வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக் குறிப்புகள் 6: 'குறைவில் நிறையச் (Less is more) சாதித்த கட்டடக்கலைஞர் லட்விக் மீஸ் வான் டெர் ரோ (Ludwig Mies Van der Rohe)

- லட்விக் மீஸ் வான் டெர் ரோ -

ஜேர்மனியில் பிறந்து 1938இல் அமெரிக்கா குடிபுகுந்து அமெரிக்காவில் நவீனத்துவக் கட்டடக்கலையின் முக்கிய கட்டடக்கலைஞராக விளங்கியவர் 'லட்விக் மீஸ் வான் டெர் ரோ' (Ludwig Mies Van der Rohe).  இவர் தனது கட்டடக்கலைத் தொழிலை ஜேர்மனியில் ஆரம்பிப்பதற்கு முன்னர் அமெரிக்கக் கட்டடக்கலைஞரான பீட்டர் பெஹ்ரென்ஸுடன் (Behrens) பணி பழகுநராகச் சேர்ந்து தன் கட்டடக்கலைத் தொழிலினை ஆரம்பித்தவர்.

கனடியர்களுக்குக் குறிப்பாகட்த் தொரோண்டோ வாசிகளுக்கு மீஸ் வான் டெர் ரோ என்றால் உடனே ஞாபகத்துக்கு வருவது நகரின் வர்த்தக மையத்தில் உயர்ந்து நிற்கும் TD  centre  (1964)
தான். இதுபோல் அமெரிக்க வாசிகளுக்கு, குறிப்பாக நியுயார்க் வாசிகளுக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது அவரது சீகிரம் கட்டடடம்தான் (Seagram Building 1958). இவ்விரு கட்டடங்களைப் பார்த்ததுமே இவரின் தனித்தன்மை உடனே புலப்படும்.
இவர் உருக்குச் சட்டங்கள் (Steel Frames), கண்ணாடி (Glass)  போன்ற புதிய கட்டடப்பொருட்களைப் பாவிப்பதில் முன்னோடிகளிலொருவராக விளங்கினார். அதில் மிகுந்த தெளிவுடனிருந்ததுடன் தனது பாணியினை 'ட்தஓலும், எலும்பும்' (Skin and Bones) என்றும் அழைத்தார். தேவையற்ற கட்டட அலங்காரங்களை இவர் தவிர்த்ததுடன் , கட்டடங்களின் உள்வெளியினை (interior space)  முழுமையாக, தேவைக்கேற்ப  திரைச்சுவர்கள் (curtain walls) மூலம் பிரித்துப் பாவிக்கும் வகையில் தனது கட்டட வடிவமைப்புகளை உருவாக்கினார்.

1929இல் பார்சலோனா கண்காட்சியிலிருந்த ஜேர்மன் விளையாட்டரங்கில் பச்சைக்கண்ணாடிகளைக் கொண்டு வடிவியல் ஒழுங்கில்  பச்சைக் கண்ணாடி, பளிங்குக் கல் (marble), 'குரோம்' தூண்கள் (chrome columns), ஒனிக்ஸ் எனப்படும் ஒருவகை இரத்தினக் கல்,  இத்தாலி நாட்டில் காணப்படும் travertine என்னும் ஒருவகைக் கிறிஸ்டல் அல்லது படிகக் கல் ஆகியவற்றைப் பாவித்து அமைக்கப்பட்ட தளங்கள் (planes) ஆகியவற்றைப் பாவித்திருக்கின்றார் இவர்.

வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக் குறிப்புகள் 5: சேதனக் கட்டடக்கலை (Organic Architecture).

- ஃப்ராங் லாயிட் ரைட்  -
நவீனக் கட்டடக்கலையின் கோட்பாடுகளிலொன்று சேதனக் கட்டடக்கலை (Organic Architecture). இதன் மூலவர் புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான ஃப்ராங் லாயிட் ரைட் ( Frank Lloyd Wright) . இதனை , இச்சொல்லாட்சியினை், அவர் தனது சூழலுக்கு இயைந்த கட்டடக்கலை வடிவமைப்பு பற்றிக் குறிப்பிடுகையில் பாவித்ததன் மூலம் அறிமுகப்படுத்தினார். இதனை இவர் வடிவமானது அதன் செயற்பயனை அல்லது பாவனைப்பயனைத் தொடருமொன்று (form follows function) என்று நம்பிய கட்டடக்கலைஞரும் , ஃப்ராங் லாயிட் ரைட்டின் கட்டடக்கலைத்துறை வழிகாட்டியுமான கட்டடககலைஞர் லூயிஸ் சல்லிவனின் ( Louis Sullivan) கட்டக்கலைக் கருதுகோள்களின் வாயிலாக வந்தடைந்ததாக கட்டடக்கலை விமர்சகர்கள் கருதுவர். மேலும் சிலர் தோரோவின் மீ இறையியல் (Transcendentalism) சிந்தனையே இவரை அதிகம் பாதித்ததாகக் கருதுவர். ஃப்ராங் லாயிட் ரைட் வடிவமும், அதன் செயற்பயனும் ஒன்றென்று (form and function are one.) வாதிடுவார். வடிவம் அதன் செயற்பயனைத்தொடர்வது என்னும் கோட்பாடு அல்லது சிந்தனை நவீனக் கட்டடக்கலையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாடோ அத்தகையதொரு கோட்பாடே ஃப்ராங் லாயிட் ரைட்டின் சேதனக் கட்டடக்கலை என்னும் கோட்பாடும்.

சேதனக் கட்டடக்கலை என்றால் என்ன?
இதனை ஒரு கட்டடக்கலை வடிவமைப்பு பற்றிய நவீனத்துவச் சிந்தனையெனலாம். இச்சிந்தனையான கட்டடமொன்றினை உயிர்த்தொகுதியாக உருவகித்து உயிர் வடிவங்கள் எவ்விதம் அவை அவற்றுக்குரிய உயிர்கள் வாழும் இயற்கைச் சூழலுக்கேற்ப  , சூழலுடன் இயைந்து உருவாகினவோ, சூழலுக்கு இணக்கமாக அமைந்துள்ளனவோ அவ்வாறே கட்டடமொன்றின் வடிவமும் (form) , அமைப்பும் (structure) அக்கட்டடம் அமையவுள்ள இயற்கைச்சூழலுக்கேற்பவிருப்பதுடன் , இணக்கமாகவுமிருக்க  வேண்டும் என்று எடுத்தியம்புகின்றது. ஆக, சேதனக்கட்டடக்கலையானது கட்டடம் வடிவமைக்கப்படும் வெளியினை அதன் உட்புற, வெளிப்புறங்களுடன் கலந்துவிடும் வகையில் அவற்றுடன் ஒன்றிணைக்கின்றது. இவ்விதமாக உருவாக்கப்படும் கட்டடச்சூழலினை அக்கட்டடம் உருவாகும் இயற்கைச்சூழலிலிருந்து வேறுபடுத்த முற்படாது, அச்சூழலுடன் ஒன்றாகும் வண்ணம் கலந்திருக்க வழி சமைக்கின்றது. ஃப்ராங்ல் லாயிட ரைட் வடிவமைத்த பல கட்டடங்கள் குறிப்பாக அவரது சொந்த இல்லங்கள் (ஸ்பிரிங் கிறீன், விஸ்கான்சின், அரிசோனா போன்ற இடங்களில் அமைந்துள்ள) இவ்விதமான அவரது கட்டடக்கலைச்சிந்தனைபோக்கான சேதனக் கட்டடக்கலைச் சிந்தனையினைப் பிரதிபலிப்பவை. உண்மையில் ஃப்ராங் லாயிட ரைட் கட்டடக்கலைப்பாணிகளைப்பற்றிக் கவலைப்பட்டது கிடையாது. ஏனென்றால் அவர் ஒவ்வொரு கட்டடமும் அது அமைந்திருக்கும் இயற்கைச்சூழலிலிருந்து இயல்பாக உருவாக, வளர வேண்டுமென்று திடமாக நம்பினார்.

வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக்குறிப்புகள் 4: லூயிஸ் சல்லிவனின் (Louis Sullivan) செயற்பயனைத் தொடரும் வடிவம் (Form follows function)


- லூயிஸ் சல்லிவன்-
ஒரு கட்டடத்தின் அல்லது பொருளொன்றின் வடிவமானது அக்கட்டடம் அல்லது அப்பொருள் எக்காரணத்துக்காகப் பாவிக்கப்படுகின்றதோ அக்காரணத்துக்கேற்ப பொருத்தமான வடிவமொன்றினைப்பெறும். அதாவது அக்கட்டடம் அல்லது அப்பொருளின் செயற்பயனுக்கேற்ப அவற்றின் வடிவமுமிருக்கும். இதனைத்தான் வடிவம் செயற்பயனைத்தொடர்தல் (Form follows function) என்னும் கூற்று வெளிப்படுத்துகின்றது. இக்கருதுகோள் அல்லது சிந்தனை் அல்லது விதி இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவக் கட்டடக்கலையின் அல்லது தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் பொருளொன்றின் வடிவமைப்பில் முக்கியமானதொரு கருதுகோளாகும்.

இக்கோட்பாட்டின் காரணகர்த்தா புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவன் ( Louis Sullivan) ஆவார். ஆயினும் பொதுவாக இக்கோட்பாட்டின் காரணகர்த்தாவாகத் தவறாகச் சிற்பி ஹொரதியொ கிறீனோ , Horatio Greenough (1805 – 1852) , குறிப்பிடப்பட்டாலும் அது தவறானது. சிற்பி ஹொரதியொ கிறீனோவை இவ்விதம் குறிப்பிடுவதற்குக் காரணம் அவரது கட்டுரைகளின் தொகுதியொன்று 'வடிவமும், செயற்பயனும்: கலை மீதான ஹொரதியோ கிறீனோவின் குறிப்புகள்' (Form and Function: Remarks on Art by Horatio Greenough.) என்னும் பெயரில் வெளிவந்ததாகும். ஆயினும் வடிவமானது எப்பொழுதுமே செயற்பயனைத் தொடரும் என்னும் கூற்றினை முதன் முதலில் பாவித்தவராகக் கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவனைத்தான் குறிப்பிட வேண்டும்.

தேரோ , எமர்சன், மெல்வில் போன்றோரின் பகுத்தறிவுச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட லூயிஸ் சல்லிவன் சிற்பி ஹொரதியோ கீறினோவுக்குப் பல வருடங்களுக்குப் பின் பிறந்தவர். அவர் 1896இல் எழுதிய 'கலைத்துவ அடிப்படையிலான உயர்ந்த ஆபிஸ் கட்டடம்' (The Tall Office Building Artistically Considered) என்னும் கட்டுரையில் இக்கருதுகோளினை முதன் முதலாகப் பாவித்திருகின்றார். இருந்தாலும் தனது இக்கருதுகோளுக்குக் காரணமானவராக அவர் கி.மு 80–70 காலகட்டத்தில் பிறந்து கி.மு 15 ஆண்டளவில் இறந்த புகழ்பெற்ற ரோமன் கட்டடக்கலைஞரான மார்க்கஸ் வேர்ட்ருவியஸ் பொலியோ (Marcus Vitruvius Pollio) என்பவரைப் பின்னொரு சமயம் குறிப்பிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மார்க்கஸ் வேர்ட்ருவியஸ் பொலியோ புகழ்பெற்ற 'கட்டடக்கலைபற்றி' என்னும் அர்த்தத்திலான De architectura என்னும் கட்டடக்கலை பற்றிப் பத்துத் தொகுதிகள் அடங்கிய நூலொன்றினை எழுதியிருக்கின்றார். கு.மு. காலகட்டத்தில் எழுதப்பட்ட அந்நூலானது கட்டடக்கலை வரலாற்றில் மிகவும் முக்கியமானதோரு நூலாகக் கருதப்படுகின்றது. இந்நூலில் அவர் கட்டடமொன்றின் அமைப்பானது திடம், பயன் மற்றும் அழகு (firmitas, utilitas & venustas) ஆகிய மூன்று முக்கியமான பண்புகளை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக் குறிப்புகள் 3 : களனி விகாரைக் 'கண தெய்யோ' (பிள்ளையார்)


களனியா ரஜமகா விகாரைப்பிள்ளையார் களனி ரஜ மகா விகாரை மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்றுகொண்டிருந்தபோது எமது முதலாவது வருடத்தில் 'வெளிக்களக் கட்டடக்கலை' (Field Architecture) என்றொரு பாடமுமிருந்தது. அப் பாடம் வார இறுதி நாள்களிலொன்றான சனிக்கிழமையில்தானிருக்கும். அப்பாடத்தின் நோக்கம் கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களைச் சென்று பார்ப்பது. எமது பல்கலைக்கழகம் கொழும்பு மாநகரிலுள்ள மொறட்டுவைப்பகுதியிலிருந்ததால் கொழும்பு மாநகரிலுள்ள கட்டடங்களையே சென்று பார்ப்பது. கட்டடக்கலைஞர்களின் கவனத்துக்குள்ளாகிய இல்லங்கள், பழம்பெரும் சரித்திரச்சின்னங்கள், நகரின் சுதந்திர சதுக்கம் போன்ற முக்கிய கட்டடங்கள் ஆகிய பல கட்டடங்களைச் சென்று பார்த்திருக்கின்றோம். அவ்விதம் சென்று பார்த்த எல்லாக்கட்டடங்களின் விபரங்களும் ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் சில கட்டடங்களுக்கான எமது விஜயங்கள் மட்டும் இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளன.

- கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரன் -
இப்பாடத்துக்கு எமக்கு விரிவுரையாளராகவிருந்தவர் இன்று தெற்காசியாவின் முக்கிய கட்டடக் கலைஞர்களிலொருவராக அறியப்படும் கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரன் அவர்களே. புகழ்பெற்ற கட்டடக்கலைஞராக விளங்கிய ஜெஃப்ரி பாவாவின் (Geoffrey Bawa) மாணவர். இவரைபற்றி Anjalendran: Architect of Sri Lanka  என்னுமொரு நூலினை டேவிட் ராப்சன் (David Robson) என்பவர் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அஞ்சலேந்திரனின் கட்டடக்கலைப்பங்கபபளிப்பு பற்றிப் பின்னர் விரிவாக எழுதும் எண்ணமுண்டு. யாழ் நகரிலுள்ள பல்வேறு காரணங்களுக்காகப் புகழ்பெற்ற அசோகா ஹொட்டலை வடிவமைத்தவர் இவரே. அக்ஹொட்டல் வடிவமைக்கப்பட்ட காலத்தில்தான் இவர் எங்களுக்கு விரிவுரையாளராகவிருந்தார். அதனால் எமது விடுமுறைக்காலத்தில் அக்ஹொட்டல் கட்டி முடிக்கப்பட்டிருந்த ஆரம்ப காலத்தில் அங்கு சென்று பார்த்திருக்கின்றோம்.  இவர் மிகவும் புகழ்பெற்ற தமிழ் அரசியல்வாதிகளிலொருவராக   விளங்கிய 'அடங்காத்தமிழன்' என்று அறியப்பட்ட, முன்னாள் வவுனியாப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த சுந்தரலிங்கம் அவர்களின் பேரன். எமக்கு இப்பாடமெடுத்துக்கொண்டிருந்ந காலத்தில் எப்பொழுதும் டெனிம்ஸ் பாண்ட் அணிந்து வருவார். இவர் சிறுவயதிலிருந்தே கொழும்பு வாசியாகவிருந்தவரென்று நினைக்கின்றேன்.

வ.ந.கிரிதரனின் (பதிவுகள்.காம்) வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக்குறிப்புகள் 2: பேராசிரியர் நிமால் டி சில்வாவின் 'பாரம்பரியக் கட்டடக்கலை'யும் 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பும்'.

- பேராசிரியர் நிமால் டி சில்வா -
மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பட்டப்படிப்பினைப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்களுக்குப் 'பாரம்பரியக் கட்டடக்கலை' (Traditional Architecture) என்னும் பாடத்தினை எடுத்தவர் பேராசிரியர் நிமால் டி சில்வா. இவர் கட்டடக்கலைஞரும் கூட. தனியாகக் கட்டடக்கலை நிறுவனமொன்றினையும் நடத்தி வந்தவர். இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்ட பாரம்பரியக் கட்டடக்கலை பற்றிய விடயங்களில் இப்பாடத்தின் மூலம் எம் கவனம் திரும்பியது. இப்பாடம் உண்மையில் கட்டடக்கலையின் வரலாறு என்னும் பாடத்தின் துணைப்பாடமாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. தமிழ்ப்பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்ட நாற்சார வீடுகள் பற்றி, தென்னிலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மண்ணால் நிரப்பப்பட்ட மரச்சட்டங்கள் கொண்டு கட்டப்பட்ட வீடுகள் (wattle and daub) பற்றியெல்லாம் அறியத்துணையாகவிருந்த பாடமிது. எனக்குப் பாரம்பரியக் கட்டடக்கலை மீது ஆர்வத்தினை ஏற்படுத்தியதில் பேராசிரியர் நிமால் டி சில்வாவுக்கு முக்கிய பங்குண்டு.

எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் நிமால் டி சில்வாவின் 'பாரம்பர்யக்கட்டடக்கலை' பாடத்தின் மூலம்தான் நான் முதன் முதலில் பண்டைய அநுராதபுர நகர அமைப்பு பற்றியும் முதன் முதலாக அறிந்துகொண்டேன். தொல்லியற் துறையில்  நன்கு அறியப்பட்ட ரோலன் சில்வா அவர்களின் (இவர் ஒரு கட்டடக்கலைஞரும் கூட) 'பண்டைய அநுராதபுர நகர அமைப்பு' பற்றிய கட்டுரையொன்றினை பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் எமக்கு அறிமுகம் செய்தார். எவ்விதம் பண்டைய அநுராதபுர நகரமானது சந்தையினை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டதென்பது பற்றியும், நகரைச் சுற்றி இரு வேறு வட்ட ஒழுக்கில் எவ்விதம் தாதுகோபங்கள் கட்டப்பட்டன என்பது பற்றியும் விபரிக்கும் ஆய்வுக் கட்டுரை அது.  பேராசிரியர் ரோலன் சில்வா அவர்கள் பின்னர் இலங்கைத் தொல்பொருள் நிலையத்திணைக்களத்தின் தலைவராகவும், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் விளங்கியவர்.

Saturday, February 17, 2018

வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கலைக் குறிப்புகள்' 1: ஜெவ்ரி பாவா Geoffrey Bawa (23.-7.1919 - 27.05.2003)!

ஜெவ்ரி பாவா Geoffrey  Bawa  - 'வெப்பநில நவீனத்துவக்' (Tropical Modernism) கட்டடக்கலைப்பாணியின் மூலவர்!

- ஜெவ்ரி பாவா -
இலங்கையின் முக்கியமான கட்டடக்கலைஞர்களிலொருவராக விளங்கியவர் ஜெவ்ரி பாவா. இவரது முழுப்பெயர் ஜெவ்ரி மான்னிங் பாவா (Geoffrey Manning Bawa ). உலகக் கட்டடக்கலையில் ஆசியாக் கட்டடக்கலையின் முக்கிய கட்டடக் கலைஞர்களிலொருவராகத் தன் கட்டடங்களின் மூலம் திடமாகத் தடம் பதித்தவர் இவர். குறிப்பாக இன்று உலகக் கட்டடக்கலையில் வெப்பநில நவீனத்துவம் (Tropical Modernism) என்று அறியப்படும் கட்டடக்கலைப்பாணிக்கு அடிகோலியவராக அறியப்படுபவர் இவர்.

இவரது தந்தையாரான பி.டபிள்யு. பாவா செல்வச்சிறப்பு மிக்க சட்டத்தரணியும், நீதிபதியுமாவார். ஆங்கில, முஸ்லிம் இரத்தக்கலப்புள்ளவர். தாயாரான பேர்த்தா மரியன்னெ ஸ்ராடர் ஜேர்மனிய, ஸ்ஹொட்டிஸ் மற்றும் சிங்கள இரத்தக்கலப்புள்ளவர். இவரது மூத்த சகோதரரான பெல்விஸ் பாவா புகழ்பெற்ற 'நிலப்பரப்புத் தோற்றக் கட்டடக்கலைஞராக (Landscape Architect) விளங்கியவர்.

ரோயல் காலேஜ் மாணவரான ஜெவ்ரி பாவா ஆரம்பத்தில் படித்தது ஆங்கிலமும் சட்டமும். ஆங்கில இலக்கியத்தில் புனித காதரின்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜில் இளங்கலைப்பட்டப்படிப்பை முடித்த இவர் பின்னர் Middle, London இல் சட்டத்துறைப்பட்டதாரியானார். இலங்கை திரும்பிய இவர் இரண்டாவது யுத்தகாலத்துக்குப் பின்னர் கொழும்பிலுள்ள சட்ட நிறுவனமொன்றில் பணியாற்றினார். பின்னர் இவரது தாயாரின் மறைவினையடுத்து சட்டத்துறையை விட்டு விலகிய இவர் சுமார் இரு வருட காலம் சர்வதேச பயணங்களிலீடுபட்டார். அமெரிக்கா, ஐரோபா என்று பயணித்த இவர் இத்தாலியில் வீடு வாங்கி நிரந்தரமாகத் தங்க எண்ணினார். ஆனால் அந்த எண்ணம் சரிவரவில்லை. 1948இல் நாடு திரும்பிய இவர் கைவிடப்பட்டிருந்த இறப்பர் தோட்டமொன்றினை வாங்கினார். அதனையொரு இத்தாலியப் பாணிப்பூங்காவாக ஆக்க விரும்பினார். ஆனால் அதற்குரிய தொழில்நுட்ப அறிவு அவருக்கில்லாதது பெருங்குறையாகவிருந்தது.

இக்காலகட்டத்தில் கொழும்பிலுள்ள எட்வேர்ட்ஸ், ரீட் மற்றும் பெக் (Edwards, Reid & Begg) அவர்களது கட்டடக்கலை நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அப்பொழுது கட்டடக்கலைஞர் ரீட் மட்டுமே உயிருடனிருந்தார். அவருக்குக் கீழேயே பயிற்சியில் இணைந்தார். ரீட் மறைவினையடுத்து கேம்ரிட்ஜ் திரும்பிய இவர்  இங்கிலாந்திலுள்ள கட்டடக்கலைஞர் சங்கத்தில் மாணவராக இணைந்தார். அங்கு கட்டடக்கலைத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றார். அதன் பின்னர் 'ரோயல் இன்ஸ்டிடியூட் பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட்ஸ்' (The Royal Institute of British Architects ) அமைப்பின் 'அசோசியட்' உறுப்பினரானார். தனது 38ஆவது வயதில் நாடு திரும்பிய ஜெவ்ரி பாவா தான் பணியாற்றிய எட்வேர்ட்ஸ், ரீட் மற்றும் பெக் (Edwards, Reid & Begg) கட்டடக்கலை நிறுவனத்தைத் தனது பொறுப்பில் கொண்டு வந்து தனது கட்டடக்கலைப் பணியினைத் தொடர்ந்தார்.

நகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் 'கெவின் லிஞ்ச்' இன் (Professor Kevin Lynch) நகரொன்றின் பிம்பக்' (The Image Of the City ) கோட்பாடு பற்றிய புரிதலும்!

 மொறட்டுவைப் ப்லகலைக் கழகத்தில் கட்டடக்கலை முடித்தபின்னர் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அமைப்பு அதிகார சபை ஆகியவற்றில் பணியாற்றிய காலங்களில் கொழும்பு மாநகர், புதிய பாராளுமன்றம் போன்ற பல நில அமைப்பு (Landscape) , நகர் அமைப்புத் (Town Planning) திட்டங்களில் பணியாற்றியுள்ளேன். அவற்றில் முக்கியமானதொன்று மேற்படி பேராசிரியர் லிஞ்சின் நகர் விம்பக் கோட்பாட்டின் அடிப்படையில் நகர் அமைப்பு வல்லுநரான டிக்சன், கட்டடக்கலை/ நகர் அமைப்பு வல்லுநரான சிவபாலன் (இவர் பின்னர் சிங்கப்பூரில் பணியாற்றியபோது மரணித்து விட்டார்) , கட்டடக்கலைஞரான வைரமுத்து அருட்செல்வன் ஆகியோருடன் இணைந்து மேற்கொண்ட கொழும்பு மாநகரின் பிம்பம் பற்றிய ஆய்வு. அது பலரின் பாராட்டுதல்களைப் பெற்றதும் நினைவுக்கு வருகின்றது. பேராசிரியர் லிஞ்சின் நகர் விம்பக் கோட்பாட்டினைச் சுருக்கமாக விபரிக்கும் கட்டுரை இது. -

நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு பிரதியொன்று எவ்விதம் வாசகனொருவரின் அறிவு, அனுபவம், புரியும் தன்மை போன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றனவோ அவ்விதமே நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களையும் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. நகர மாந்தரின் நகர் பற்றிய உளப்பதிவுகள் அவர்களது அந்நகரினுடான அனுபவங்கள். அதன் விளைவாக உருவான நினைவுகள், அந்நகரிலுள்ள கட்டடங்கள். முக்கியமான இடங்கள், அங்கு வாழும் ஏனைய மக்கள், அங்கு நிகழும் பலவேறு விதமான செயற்பாடுகள். நகரின் முக்கியமான அடையாளங்களாகத் திகழும் சின்னங்கள்,... ... என இவை போன்ற பல காரணிகளின் விளைவாக உருவாகுகின்றன. நகர அமைப்பு வல்லுநர்கள் நகர்களைப் புனர் நிர்மாணம் செயகையில் அல்லது புதியதொரு நகரமொன்றினை நிர்மாணித்திடும்போது அங்கு வாழும் மாந்தரின் மேற்படி மனப்பிம்பங்கள் அல்லது பதிவுகள் பற்றிய போதிய அறிவினைப் பெற்றிருப்பது அவர்களது பணிக்கு மிகவும் இன்றியமையாதது மட்டுமல்ல பயனுள்ளதுமாகும். இவ்விதமாக நகர மாந்தரின் அவர் வாழும் நகர் பற்றிய மனப்பிம்பங்களை மையமாக வைத்து அந்நகரினை அறிவதற்கு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முயனறவர்தான் பேராசிரியர் கெவின் லிஞ்ச் Professor Kevin Lynch).

கவிதை: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.

அண்மையில் முகநுலில் இலக்கியத்திருட்டு பற்றியொரு பதிவிட்டிருந்தேன். அதற்கு எதிர் வினையாற்றியிருந்த பிரபல கலை இலக்கிய விமர்சகரும், எனது மதிப்புக்குரியவருமான இந்திரன் (தமிழ்நாடு) அவர்கள் பினவருமாறு கூறியிருந்தார் " Indran Rajendran நல்ல குதிரையைத்தான் திருட முடியும்...உங்களுடையது நொண்டி குதிரையல்ல என்று தெரிகிறது...விடுங்கள்...". நன்றி திரு இந்திரன் அவர்களே. அதன் பாதிப்பிது.

குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.
நானொரு குதிரை வளர்ப்பாளன்.
வியாபாரியல்லன்.
நாணயமான குதிரை வளர்ப்பாளன்..
என்னிடம் நல்ல குதிரைகள் பல உள்ளன.
இருப்பவை அனைத்துமே நல்லவைதாம்.
ஆனால் அவை நொண்டிக்குதிரைகளல்ல.
என்னிடமுள்ள குதிரைகள் அனைத்துமே
 என் பிரியத்துக்குரியவை.
அவற்றில் வேறுபாடு நான் பார்பபதில்லை.
நான் நொண்டிக்குதிரைகளை வளர்ப்பவனோ,
விற்பவனோ அல்லன்.
இருந்தும் குதிரைத் திருடர்களே!
உங்களின் தொல்லை
 அதிகமாகிவிட்டது.
குதிரைத் திருடர்களே! கவனம்.
திருடிய குதிரைகளை வெகு சாமர்த்தியமாக
 உங்கள் மந்தையில் கலந்து
 விடுவதில் பலே கில்லாடிகள் நீங்கள்.
என்னிடம் நீங்கள் திருடிய அல்லது
 திருடப் போகும் குதிரைகள்
 நிச்சயம் நொண்டிக்குதிரைகளல்ல.
ஆனால் அவை நல்லவை.
வல்லவையும் கூடத்தான்.
ஆனால் அவை முரட்டுக் குதிரைகள்.
முட்டி மோதவும் தயங்காத
 முரட்டுக் குதிரைகள்.

ngiri2704@ரrogers.com

Friday, February 16, 2018

மக்கள் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளி: அ.ந.க! (அ.ந.க நினைவு தினம் பெப்ருவரி 14) - வ.ந.கிரிதரன் -




அறிஞர் அ.ந.கந்தசாமி
அறிஞர் அ.ந.க என்று அழைக்கப்பெறும் எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் நினைவு தினம் பெப்ருவரி 14. தனது நாற்பத்து நான்காவது வயதில் மறைந்து விட்ட அ.ந.க தனது குறுகிய கால வாழ்வினுள் ஆற்றிய இலக்கியப் பங்களிப்பு பிரமிக்கத்தக்கது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், நாடகம் மற்றும் மொழிபெயர்ப்பு என்று அவர் ஆற்றிய இலக்கியப்பங்களிப்பு ஈழத்தமிழர்தம் இலக்கிய வரலாற்றில் நன்றியுடன் நினைவு கூரப்படும். ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவராகத் திகழ்ந்த அ.ந.க இலங்கைத் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று எழுத்தே மூச்சாக வாழ்ந்து மறைந்த படைப்பாளி. இவரது படைப்புகள் கூறப்படும் மொழியினால், சமுதாயப் பிரக்ஞை மிக்க பொருளினால், படைப்புகள் வெளிப்படுத்தும் தகவல்களினால் முக்கியத்துவம் பெறுபவை. சிந்தனையைத்தூண்டும் இவரது எழுத்தின் வீச்சு வாசகர்களின் உள்ளங்களைச் சுண்டி ஈர்க்கும் தன்மை மிக்கது..

அ.ந.க வெறும் இலக்கியவாதி மட்டுமல்லர். இலக்கியத்தைத் தான் நம்பிய சிந்தனைகளுக்கமைய வடித்த சிந்தனைச் சிற்பி. மார்க்சியவாதியான இவரது எழுத்துகள் பிரச்சார வாடையற்றவை. அதனாலேயே அனைவரையும் கவர்பவை. இவரது புகழ்பெற்ற 'மனக்கண்' நாவல் தினகரனில் வெளியானபோது வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப்பெற்றது. பின்னர் இவரது நெருங்கிய நண்பரும் , எழுத்தாளருமான சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாக்கப்பட்டு இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன வானொலி சேவையில் தொடராக வெளியானது குறிப்பிடத்தக்கது. மேடையேற்றப்பட்டபோது மிகுந்த வரவேற்பைப்பெற்ற பல தடவைகள் மீள மேடையேற்றப்பட்ட 'மதமாற்றம்' நாடகம் மதம் என்னும் கருத்தாடலை அங்கதச்சுவையுடன் விபரிக்கும் ஈழத்தமிழ் இலக்கியத்தில் மேடையேற்றப்பட்ட சிறந்த நாடகங்களிலொன்று. இந்நாடகத்தைப்பற்றிப் பிரபல எழுத்தாளர் செ.கணேசலிங்கன் பின்வருமாறு கூறுவார்:


"சைவ மதம், கிறிஸ்தவ மதம் பற்றிய அன்னரின் அறிவையும் இந் நாடகத்தில் காணலாம். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் மேலாதிக்கம் செலுத்தும் கருத் தியல் (Ideology) மதம் என்றும் முதலாளித்துவத்தில் கல்வி என்றும் நவ மார்க்சிய அறிஞர் அல்துரசர் கூறுவார். கலை, இலக்கியத்தில் கருத்தியல்கள் உடைக்கப்பட்டு விஞ்ஞான ரீதியான சிந்த னையைக் கொணர வேண்டும் என்பதும் அன்னாரின் கோட்பாடாகும். அத்தோடு இத்தகைய போக்கு பண்டைய நாடகங்கள், இலக்கியங் களில் காணமுடியாதது அவற்றின் பயனற்ற தன்மையைக் காட்டுகிறது என்பதும் அவரது கூற்றகும். கந்தசாமி மதம் என்ற கருத்தியலை இந் நாடகத்தில் சாடி இருப்பது இந் நாடகத்தின் தனிச் சிறப்பாகும். அதுவும் நேரடியாகத் தாக்கவில்லை. பார்வையாளர் எம் மதத்தவராயினும் நகைச்சுவையுடன் நாடகத்தைப் பார்ப்பர். அதன் பின்புறத்தில் மதத்தின் பொய்மையை ஆசிரியர் உடைத்தெறிவதை சிந்தண்மூலம் அறிவர். இராமலிங்கம் என்றேர் பாத்திரத்தை ஆசிரியர் தன் பகுத்தறிவுக் கருத்துக்களையும் தருக்க நியாயங்களையும் கூறுவதற்காக நாடகத்தில் கொண்டு வந்துள்ளார். இராமலிங்கம் என்ற பாத்திரம் கந்தசாமியே. கதாநாயகன் அசல் கிறிஸ்தவன்; கதாநாயகி சைவப் பழம். காதலுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத் தழுவி காதலைக் கைவிடுகின்றனர். இதுவே கதையின் கருவான போதும் "மதம், காதல்" என்ற பொய்மைகளை கந்தசாமி சாடும் திறமை அபாரம். 'மதமே பொய். இருவரும் பொய்களை நம்புகிறர்கள். ஆனல் வெவ்வேறு பொய்கள் - கந்தசாமி இராமலிங்கம் என்ற பாத்திரம் மூலம் கூறுகிறார், நல்ல நாடகம் சமூக முரண்பாடுகளைக் கையாள வேண்டும். சிந்தனையில் மோதலை ஏற்படுத்துவதோடு தன்னை உணர்ந்து கொள்ள உதவ வேண்டும். நாடகம் பார்க்கும் வேளை நடிகனக இருந்தவன் நாடகம் முடிந்ததும் புது நடிகனாக வேண்டும், வாழ்க்கையில். இந் நாடகம் மேடையில் நடிப்பதற்காக எழுதப்பட்டபோதும் படித்துச் சுவைப்பதற்குமாக அமைந்திருப்பது அதன் தனிச் சிறப்பாகும். புதிதாக நாடகம் எழுதுவோருக்கும் காட்சி அமைப்பையும் கருத்தின் ஆழத்தைக் கையாளும் முறையையும் கற்பிக்கத் தக்கதாக இந் நாடகம் உள்ளது" (  'எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினால் நூலாக 'மதமாற்றம்' வெளியிடப்பட்டபோது அதற்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கன் எழுதிய சிறப்புரையிலிருந்து).

(பதிவுகள்.காம்) சிறுகதை: உடைந்த மனிதனும் 'உடைந்த காலும்' - வ.ந.கிரிதரன் -







- எழுத்தாளரும்,, முகநூல் நண்பருமான ஜி.ஜி.சரத் ஆனந்த சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்த  "உடைந்த மனிதனும் 'உடைந்த காலும்' " என்னும் எனது சிறுகதையின் முழு வடிவம் இதுதான். வாசித்துப் பாருங்கள். -

அதிகம் நடமாட்டமில்லாமலிருந்தது அந்த 'பார்'. வியாழன் வெள்ளியென்றால் களை கட்டி விடும். திங்களென்றபடியால் அமைதியில் மூழ்கிக் கிடந்தது. ஓரிருவர்களேயிருந்தார்கள். 'சிக்கன் விங்ஸ்'உம் 'பட்வைசர்' பியரையும் கொண்டுவரும்படி 'வெயிட்டரிடம்' கூறிவிட்டுச் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தேன். நினைவெல்லாம் வசுந்தராவே வந்து வந்து சிரித்துக் கொண்டிருந்தாள். என் பால்ய காலத்திலிருந்து என் உயிருடன் ஒன்றாகக் கலந்து தொடர்ந்திருந்த பந்தம். இருபது வருடத் தீவிரக் காதல். எனக்குத் தெரிந்த முகவன் ஒருவன் மூலம் அண்மையில் தான் கனடா அழைத்திருந்தேன். அவ்விதம் அழைத்ததற்காகத் தற்போது கவலைப் பட்டேன். அவளது வாழ்க்கையை மட்டுமல்ல என் வாழ்க்கையையுமே சீரழித்து விட்டேனா? இவ்வளவு நாள் பொறுத்திருந்தவன் இன்னும் சில வருடங்கள் பொறுத்திருக்கக் கூடாதா? எனக்குக் கனடா நாட்டு நிரந்தரக் குடியுரிமை கிடைத்ததும் முறையாக அவளை அழைத்திருக்கலாமே. ஒரு விதத்தில் அவளுக்கேற்பட்ட இந்த நிலைக்கு நானும் ஒருவிதத்தில் காரணமாக இருந்து விட்டேனே. இது போன்ற பல சம்பவங்களைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தேன். ஆனால் எனக்கு இவ்விதம் ஏற்படுமென்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லையே.

அந்த முகவன் திருமணமானவன். பார்த்தால் மரியாதை வரும்படியான தோற்றம். அதனை நம்பி ஏமாந்து விட்டேன். வசுந்தராவின் பயணத்தில் வழியில் சிங்கப்பூரில் மட்டும் தான் ஒரு தரிப்பிடம். தனது மனைவியென்று அவளை அவன் அழைத்து வருவதாகத் திட்டம். பொதுவாக இவ்விதம் பெண்களை அழைத்து வரும் சில முகவர்கள் சூழலைப் பயன்படுத்தி, ஒன்றாகத் தங்கும் விடுதிகளில் வைத்துப் பல பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகக் கதைகள் பல கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் எனக்கே இவ்விதமேற்படுமென்று நான் நினைத்துப் பார்த்தேயிருக்கவில்லை. கனடா வந்ததும் வசுந்தரா கூறியதும் என்னால் நம்பவே முடியவில்லை. இவர்கள் இருவரும் ஒன்றாகத் தங்கியிருந்திருக்கின்றார்கள். அருந்தும் பானத்தில் அவன் போதை மருந்தொன்றினைக் கலந்து கொடுத்து இவள் மேல் பாலியல் வல்லுறவு வைத்திருக்கின்றான். மறுநாள் தான் இவளுக்கே தெரிந்திருக்கின்றது. அது மட்டுமல்ல. இவள் விரும்பினால் இவளைத் தொடர்ந்து 'வைத்திருப்பதாக'க் கூடக் கூறியிருக்கின்றான். இவன் இது போல் ஏற்கனவே வேறு சில பெண்களுடனும் இவ்விதம் நடந்திருக்கின்றான். அவர்களிலொருத்தி இங்கு புகார் செய்து தற்போது சிறையிலிருக்கின்றான்.

இப்போது என் முன் உள்ள பிரச்சினை......வசுந்தராவை ஏற்பதா இல்லையா என்பது தான். ஐந்து வயதிலிருந்தே இவளை எனக்குத் தெரியும். ஒன்றாகப் பாடசாலை சென்று, படித்து, வளர்ந்து உறவாடியவர்கள். இவளில்லாமல் என்னாலொரு வாழ்வையே நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால்...இவளது இன்றைய நிலை என் மனதில் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தி விட்டதென்னவோ உண்மைதான். தத்துவம் வேறு நடைமுறை வேறு என்பதை உணர வைத்தது இவளுக்கேற்பட்ட இந்தச் சம்பவம். பார்க்கப் போனால் தவறு இவளுடையதல்லவே. ஒரு விதத்தில் நானும் காரணமாகவல்லவா இருந்து விட்டேன்....

'நண்பனே. நான் உன் தனிமையைப் பகிர்ந்து கொள்ளலாமா?"

எதிரே கனேடிய பூர்வீக இந்தியணைப் போன்ற தோற்றமுள்ள ஒருவன் நின்றிருந்தான்.

"தாராளமாக நண்பனே!" என்றேன்.

வெயிட்டரிடம் அவனுக்கும் சேர்ந்த்துக் கொண்டு வரும்படி கூறினேன்.

"நன்றி நண்பனே!" என்று அருகில் அமர்ந்தான்.

"என் பெயர் ஜோ உடைந்த கால் ( Joe Broken leg) ). உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி நண்பனே. இன்றைய பொழுதை எவ்விதம் கழிப்பேனோ என்றிருந்தேன். நல்லதொரு துணையாக நீ" என்று தனது கைகளை நீட்டினான். வித்தியாசமான பெயர். ஆனால் இவர்களது சமூகத்தில் இது போன்ற பல வித்தியாசமான பெயர்கள் சர்வசாதாரணம்.

Sunday, June 7, 2009

'நான் அவனில்லை..' - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடத்திய அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டியில் வட அமெரிக்காவுக்கான விருதினைப் பெற்ற அறிவியற் சிறுகதை!



கி.பி.2700 ஆம் ஆண்டிலொருநாள்.... ...

தமிழகத்தின் சென்னையிலுள்ள மிகப்பிரமாண்டமான திறந்த வெளிச் சிறைச்சாலையில் தனக்குரிய அறையினுள் பாஸ்கரன் அமர்ந்திருந்தான். சிறைக்காவலர்களற்ற திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கைதிகளின் உடல்களிலும் அவர்களது அடையாளங்கள் பற்றிய அனைத்துத் தகவ்ல்களுடன் கூடிய சிலிக்கான் சில்லுகள் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மூலம், GPS தொழில் நுட்பத்தின் மூலம் அவர்கள் அனைவரும் பிறிதோரிடத்தில் அமைந்திருந்த சிறைச்சாலைத் தலைமைச் செயலகத்திலிருந்து அவதானிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். செவ்வாய்க் கிரகம், சந்திரன் போன்ற கிரகங்களெல்லாம் புதிய புதிய காலனிகளால் நிறைந்து விட்டிருந்தன. சூரிய மண்டலத்தில் பல்வேறு விண்வெளிக் காலனிகள் உருவாக்கப் பட்டிருந்தன. பூவுலகின் பல்வேறு நாடுகளும் மானுடர்களென்ற ரீதியில் ஒன்றிணைந்து விட்டிருந்தார்கள். ஒரு கிரகம்! அதன் மக்கள் நாம்! என்று பக்குவப்பட்டிருந்த மானுடர்கள் பூவுலகு மக்கள் கூட்டமைப்பு என்று ஒன்றிணைந்து விட்டிருந்தார்கள். நாடுகளுக்கிடையில் பயணிப்பதற்குக் கடவுச் சீட்டு, விசா போன்ற எதுவுமே தேவையாகவிருக்கவில்லை. நாடுகள், தேசிய இனங்கள், தேசிய பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு நாடுகளும் தத்தமது வெளிநாட்டுக் கொள்கையினை வகுத்திருந்த காலம் எப்போழுதோ இப்பூமியில் மலையேறிவிட்டிருந்தது. இன்று விண்வெளித் தொழில் நுட்பம் மிகவும் முன்னேறி விட்டிருந்ததொரு நிலையில் வேற்றுக் கிரக வாசிகள், உயிரினங்களிலிருந்து இப்பூமிக்கான பாதுகாப்பு என்னும் அடிப்படையில் பூவுலகின் பாதுகாப்பு தீர்மானிக்கப்பட்டது. இத்தகையதொரு சூழல் நிலவும் காலகட்டமொன்றில்தான் இவ்விதம் திறந்தவெளிச் சிறைச்சாலையொன்றில் அமர்ந்திருந்தான் இயற்பியல் விஞ்ஞானியான பாஸ்கரன். அவனது சிந்தனையெல்லாம் அடுத்த நாளைப் பற்றியதாகவேயிருந்தது. செய்யாத குற்றத்திற்காக அவனுக்கு மரணதண்டணை விதிக்கப் பட்டிருந்தது. சந்தர்ப்ப சாட்சியங்கள் சதி செய்து விட்டன.


இத்தனைக்கும் அவன் செய்ததாகக் கருதப்பட்ட குற்றச்சாட்டு: அல்பா செஞ்சுரி நட்சத்திர மண்டலத்திலுள்ள சிறியதொரு, பூமியையொத்த கிரகமான 'பிளானட் அலபா'வில் வசிக்கும் மானிடர்களைப் பெரும்பாலுமொத்த வேற்றுலகவாசிகளுக்குப் பூமியின் பாதுகாப்பு இரகசியங்களை வழங்கியிருந்தத்தாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தான். நமது பூமிக்குத் துரோகம் செய்ய முனைந்தவனாகக் குற்றவாளியாக்கப்பட்டிருந்தான். அதற்கான தண்டனைதான் மறுநாள் நிறைவேற்றப்படத் தீர்மானிக்கப்பட்டிருந்த, அவன்மேல் விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனை. இதிலிருந்து தப்புவதற்கென்று ஏதாவது வழிகளிருக்கிறதாவென்று பல்வேறு கோணங்களில் சிந்தனையைத் தட்டிவிட்டான். தப்புவதற்கான சந்தர்ப்பமே இல்லையென்பது மட்டும் நன்றாகவே விளங்கியது. முதன் முறையாகச் சாவு, மரணம் பற்றி மனம் மிகத் தீவிரமாகச் சிந்திக்கத் தலைப்பட்டது. வேறு மார்க்கமேதுமில்லை. நடப்பதை ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான்.

காலத்தால் அழியாத கானம்: 'ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்..'

எஸ்.எஸ்.ஆர் & விஜயகுமாரி, கே.வி.மகாதேவன், கவிஞர் கண்ணதாசன் கூட்டணியிலுருவான இன்னுமொரு காலத்தால் அழியாத கானமிது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ...

பிரபலமான பதிவுகள்