Wednesday, August 13, 2025

தெணியானின் 'குடிமைகள்' சமூக விடுதலைக்கான அறை கூவல்! - வ.ந.கிரிதரன் -


தெணியானின் 'குடிமைகள்' நாவல் இலங்கைத் தமிழ் நாவல்களில் முக்கியமான நாவல்களிலொன்று. 'ஜீவநதி' பதிப்பகம், 'கருப்புப் பிரதிகள்' வெளியீடாக வெளியான நாவலை அண்மையுல் வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. இந்நாவல் விடுக்கும்  முக்கியமான  அறைகூவல்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்;

1.பஞ்சமர் என்னும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரவினர் தம் சமூக விடுதலைக்காகத் தம்மை அடிமைகளாகத் தொடர்ந்தும் வைத்திருக்கும் சமூகத்தொழில்களைச் செய்வதிலிருந்து வெளிவரவேண்டும்.  அவ்வகையான தொழில்களைக் குறிப்பிட்ட சமூகத்தினர்தாம் செய்ய வேண்டும் என்னும் நிலை மாற வேண்டும். மேனாடுகளில் எவ்விதம் மானுட சமுதாயத்துக்கு வேண்டுய பல் தொழில்களையும் கற்று அவ்வகையான தொழில்களைச் செய்கின்றார்களோ அவ்விதமே அவ்வகையான தொழில்கள் செய்யப்பட வேண்டும்.  இதனை வெளிப்படுத்தும் வகையில்தான் சிகை அலங்காரத் தொழிலாளியான முத்தனும், அவனது மனைவியும் தாம் வாழ்ந்த குடிசையிலிருந்து புலம் பெயர்கின்றார்கள். புலம் பெயர்ந்து நாட்டின் இன்னுமொரு பகுதிக்குச் செல்கினறார்கள்.  அவர்கள் சென்றதும் அவர்கள் வாழ்ந்த குடிசை சமூக மாற்றத்தை . விடுதலையை விரும்பும் ஏனைய தமிழ்ச் சமூக இளைஞர்களால் எரிக்கப்படுகின்றது. அந்த எரித்தல் என்பது ஒரு குறியீடு.  'குடிமைத்தொழில் செய்யும் குடிமகன் ஒருவன் வாழுவதற்கு இனி அந்தக் குடிசை அங்கு வேண்டியதில்லைத்தான்' என்று நாவல் முடிகின்றது.

Sunday, August 10, 2025

காலத்தால் அழியாத கானம் - ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?


கவிஞர் கண்ணதாசனின் சிறந்த திரைப்படப்பாடல்களிலொன்று. கவிஞரின்  எளிய, இனிய தமிழ் கேட்பவரைக் கிறங்க வைப்பது. இது போல் தெளிவான வசனங்களை உள்ளடக்கிய பாடல்களைத் தற்போது கேட்பது அரிது. மெல்லிசை மன்னர்களின் இசையில் , டி.எம்.எஸ் குரலில், எம்ஜிஆர் , ஜெயலலிதா நடிப்பில் ஒலிக்கும் பாடலை எத்தனை தரம் கேட்டாலும் அலுப்பதில்லை.
 
"ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ"
 
"ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு"
 
"உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு"
 
என் மனத்தைக் கவர்ந்த பாடல் வரிகள். சங்கப்பாடல்கள் பலவற்றில் ஊரெல்லாம் தூங்கையில் தூங்காமல் விழித்திருக்கும் பெண் ஒருத்தியின் உணர்வுகளைக் கவிஞர்கள் பலர் விபரித்திருப்பதைக் காணலாம். ஆனால் இங்கு கவிஞர் கண்ணதாசன் ஆணொருவனின் இவ்வித உணர்வுகளை விபரித்திருக்கின்றார். அதுவே சுவைக்கின்றது.
 
அதே சமயம் சங்ககாலப்பாடல்களில் பெண் தூங்காமல் விழித்திருப்பது காதலால், காதற் பிரிவால், பொருள் தேடித் தொலைதூரம் சென்று விட்ட தலைவனின் பிரிவால், ஆனால் இவனோ தன் மக்களின் விடுதலைக்காகப் போராடும் போராளி. தன் இலட்சியப் போராட்டத்தின் காரணமாக இரவில் விழித்திருப்பதும் இவன் வாழ்க்கையாகிப் போனது.  
 
'அழும் நிலவு' அற்புதமான படிமம். நிலவு அழுவதாக எவரும் எழுதி நான் வாசித்ததில்லை.
 
"பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு"
 
இதைவிட விடுதலைப் போராளி ஒருவனின் உணர்வுகளை எவ்விதம் விபரிப்பது?
நான் முதல் பார்த்த எம்ஜிஆர் , ஜெயலலிதா இணைந்து நடித்த படம் மட்டுமல்ல, அவர்களே இணைந்து நடித்த முதல் படமும் ஆயிரத்தில் ஒருவன்தான்.

நவ இந்தியாவின் குரலாக ஒலிக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் குரல்!


உலகப் பொருளாதாரத்தை உருட்டிச் செல்லும், பொருளாதாரரீதியில் வலிமை மிக்க நாடாக, உருமாறியிருக்கும் புதிய  இந்தியாவின் குரலாக ஒலிக்கிறது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் குரல்.

தற்போது இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைக்குக் காரணங்கள் எவை என்பதை ஆராயும் காணொளி.



https://www.youtube.com/watch?v=iLFV8vyR3Tk

இந்தியாவின் வளர்ச்சி , இந்திய , அமேரிக்க உறவும் பற்றி, நன்கு அலசுமொரு காணொளி!


மாறி வரும் உலகில் , வளர்ந்து வரும் இந்தியாவின் நிலையை விளக்கும் தொழில் அதிபர்  எலன் மாஸ்க் ஆற்றுவது போன்ற உரையை வெளிப்படுத்தும் காணொளி.  யாரோ ஒருவர் செயற்கைத்  தொழில் நுட்பம் எலன் மஸ்க் உரையாற்றுவதுபோல் உருவாக்கியிருக்கும் காணொளி போலவே இந்தக் காணொளி  தென்படுகின்றது. ஆனால் தற்போது நிலவும் அரசியற் சூழலை நன்கு அலசும் காணொளி என்பதால் பகிர்ந்துகொள்கின்றேன்.

இந்தியாவின் வளர்ச்சி, தனித்துச் சுயாதீனமாக இயங்கும் நிலை இவையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்தியா மீதான வரி  அதிகரிப்புக்கு உண்மையான காரணம்.  

ஏனைய நாடுகளில் முன்பு போல் அமெரிக்காவால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.  குறிப்பாக இந்தியா அமெரிக்காவுடனான கூட்டுறவை விரும்பும் அதே சமயம் , அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட அதனால் முடியாது என்பதை உணர்ந்ததால் ஏற்பட்ட விரக்தியே ட்ரம்பின் இந்தியா பற்றிய நிலை மாறியதற்கு முக்கிய காரணம் என்பதை எடுத்துரைக்கும் காணொளி.

https://www.youtube.com/watch?v=4QSgjXvJBCM

Saturday, August 9, 2025

எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா ரங்கராஜனுடனான நேர்காணலொன்று!


அண்மையில் தற்செயலாக எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மனைவி சுஜாதா ரங்கராஜன் அவர்களின் நேர்காணலைப் பார்த்தேன். கேட்டேன். சுஜாதா ரங்கராஜன் அவர்களின் பாசாங்குத்தனமற்ற, நேர்மையான, சில சமயங்களில் அப்பாவித்தனமான பதில்கள் இந்நேர்காணலின் முக்கிய அம்சம்.

இந்நேர்காணல் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பன்முக ஆளுமையைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள மிகவும் உதவியாகவிருக்கிறது என்பேன்.

இறுதியாகத் தன் கணவரைப்பற்றிக் கூறுகையில் அவர் சிறந்த மனிதர்,. சிறந்த எழுத்தாளர். சிறந்த கணவர் என்று வரிசைப்படுத்திக் கூறுவார் சுஜாதா ரங்கராஜன். அது இந்நேர்காணலின் உச்சம்.

இந்நேர்காணலின்போது திருமதி சுஜாதா முதுமையின் தாலாட்டில் இருப்பவர். காதல், வாழ்க்கை, இருப்பு பற்றிய இவரது சிந்தனைகள் முதிர்ச்சியானவை. இவரது பதில்களிலிருந்து நான் உணர்வது எழுத்தாளர் சுஜாதாவுக்கும் , இவருக்குமிடையில் நிலவிய காதலை. இருவருமே வெளிப்படையாக வெளிப்படுத்திக்கொள்ளாவிட்டாலும் , நிலவிய அந்தக் காதல்தான் அவர்களை ஒன்றாகப் பிணைத்து வைத்திருந்திருக்கின்றது. அந்தக் காதலே திருமதி சுஜாதாவைத் தன் கணவர் கலந்து கொள்ளும் இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் கூடவே செல்ல வைத்தது. இருவருமே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து , இணைந்து வாழ்ந்திருக்கின்றார்கள். இன்று தன் கணவரை நினைவு கூர்கையில் கூட (அவரது அசட்டுத்தனங்களையும் உள்ளடக்கி) திருமதி சுஜாதாவால் மகிழ்ச்சியுடன் நினைவு கூர முடிகின்றது. தன் கணவரின் அசட்டுத்தனங்களை எண்ணி அவரால் சிரிக்க முடிகின்றது. அதற்குக் காரணம் அவரது ஆழ்மனத்தில் அவர் கணவர் மேல் அவர் கொண்டிருக்கும் காதல் என்றே நான் உணர்கின்றேன். 

Friday, August 8, 2025

கங்கை கொண்ட சோழபுரம்!


பிரயாணம்! சாகசம்! வரலாறு! என்பதன் அடிப்படையில் இயங்கும் யு டியூப் சானல் கர்ணனின் 'Tamil Navigation' சானல் ( https://www.youtube.com/watch?v=pq3_B_NoUoM ).  தமிழர்தம் வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட பல காணொளிகளை உள்ளடக்கிய சானல்.  இக்காணொளியில் முதலாம் இராசேந்திரன் சோழன் கட்டிய 'கங்கை கொண்ட சோழபுரம்' ஆலயம் பற்றிய பல அரிய தகவல்களை அறிந்துகொள்ள முடியும். 


கங்கை கொண்டசோழபுரம் ஆலயம், அதிலுள்ள முக்கிய சிற்பங்கள், தாங்கு  தளம் (அதிட்டானம்) போன்ற கட்டடப் பகுதிகள், மன்னன் வெட்டிய சோழகங்கம் ஏரி (இப்பொழுது வறண்டு கிடக்கிறது), அவனது அரச மாளிகை இருந்த இடம் எனப் பல அரிய தகவல்களை உள்ளடக்கிய காணொளியைப் பார்ப்பது மகிழ்ச்சி தருவது. நீங்களும் ஒரு தடவை பாருங்கள்.

Tuesday, August 5, 2025

க.பாலேந்திராவின் இயக்கத்தில் 'ஒரு பாலை வீடு'


அவைக்காற்றுக் கழகத்தின் தயாரிப்பில் , நாடகவியலாளர் பாலேந்திராவின் இயக்கத்தில் வெளியான நாடகம் 'ஒரு பாலை வீடு'. இந்நாடகம் Federico García Lorca
 என்னும் ஸ்பானிய நாடகாசிரியரின் 'தி ஹவுஸ் ஆஃப் பேர்னார்டா அல்பா' (The House of Bernarda Alba ) என்னும் நாடகமே தமிழில் 'ஒரு பாலை வீடு' என்னும் பெயரில் மேடையேற்றப்பட்டது. மேடையேற்றியவர்கள் சுண்டுக்குளி பழைய மாணவியர் சங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Federico García Lorca ஒரு பாலினச் சேர்க்கையாளர். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் இடதுசாரிஅமைப்பான குடியரசுக் கட்சியினை ஆதரித்த இவரை வலது சாரிகளும், பாசிசவாதிகளுமான தேசியப் படையினர் படுகொலை செய்தனர் என்பது துயரகரமானது. இவரது உடல் கூடக் கிடைக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் மேடையேற்றப்பட்டபோது , அதனைப்பற்றிய சிறப்பானதொரு விமர்சனத்தை , சிரித்திரன் சஞ்சிகையின் வைகாசி 1979 இதழில் எழுதியிருக்கின்றார் ஆ.க.பராக்கிரமசிங்கம்.  நாடக இயக்கத்தை, அரங்கு அமைப்பை, நடிகர்களின் திறமையை  என அவற்றை விதந்து தனது விமர்சனத்தில் எழுதியிருக்கும் கட்டுரையாளர்,  தனது விமர்சனத்தின் இறுதியில் ஈழத்து நாடகத்துறையையிட்டு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது எனவும், அதற்காக பாலேதிராவையும், அவைக்காற்றுக் கழகத்தையும் பாராட்டியிருக்கின்றார்.

இந்நாடகம் பெர்ணார்டா அல்பா என்னும் பெண்மணியையும், அவரது திருமணமாகாத  ஐந்து பெண்கள் பற்றியும் வைத்துப்பின்னப்பட்ட நாடகம் 'ஒரு பாலை வீடு' என்பதையும், நாடகத்தின் தமிழாக்கத்தைச் செய்த நிர்மலா நித்தியானந்தனே , நாடகத்தின் பிரதான வேடமான பெர்னார்டோ அல்பா வேடத்தில் நடித்திருப்பதையும், அவரது கடைசிப் பெண்ணாக நிர்மலா நித்தியானந்தனின் கடைசித்தங்கையான சுமதி ராஜசிங்கம் நடித்திருப்பதையும் மேற்படி விமர்சனத்திலிருந்து அறிய முடிகின்றது. 

கலைஞர் சோக்கல்லோ சண்முகத்தின் முன்மாதிரியான, அர்ப்பணிப்புடன் கூடிய கலையுலக வாழ்க்கை!



அண்மையில் தனது தொண்ணூறாவது பிறந்த நாளைக் கொண்டாடிய கலைஞரும், எழுத்தாளருமான சோக்கல்லோ சண்முகநாதன் அவர்கள் முக்கியமான தமிழ்க் கலைஞர். வில்லுப்பாட்டும், நாடகம், எழுத்து, நடிப்பு எனப் பன்முகத்திறமை மிக்கவர். சிறந்த மரபுக்கவிஞரும் கூட. இவரது 'சோக்கல்லோ' நகைச்சுவைக் கதம்ப நிகச்சி மிகவும் புகழ்பெற்ற மேடை நாடகங்களிலொன்று. இலங்கையில் பல இடங்களில் 500 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்ட நாடகமிது. அதன் காரணமாகவே சோக்கல்லோ சண்முகம் என்றழைக்கப்பட்டவர். 

Sunday, August 3, 2025

ஒரு பதிவுக்காக - பல்வேறு இலக்கியச் சிறப்பிதழ்கள், தொகுப்பு நூல்கள், மலர்கள் ஆகியவற்றில் வெளியான என் , வ.ந.கிரிதரனின், படைப்புகள்


பல்வேறு இலக்கியச் சிறப்பிதழ்கள், தொகுப்பு நூல்கள், மலர்கள் ஆகியவற்றில் வெளியான என் , வ.ந.கிரிதரனின்,  படைப்புகள் இவை.  இவை முழுமையான  பட்டியல் அல்ல. ஒரு சில விடுபட்டிருக்கலாம். 

பல்வேறு இலக்கியச் சிறப்பிதழ்கள், தொகுப்பு நூல்கள், மலர்கள் ஆகியவற்றில் வெளியான என் , வ.ந.கிரிதரனின்,  படைப்புகள் இவை.  இவை முழுமையான  பட்டியல் அல்ல. ஒரு சில விடுபட்டிருக்கலாம். 

1.  'அறிவுத்தாகமெடுத்தலையும் வெங்கட் சாமநாதனும், அவரது  கலை மற்றும் தத்துவயியற் பார்வைகளும்' - வ.ந.கிரிதரன் - கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அரை நூற்றாண்டு எழுத்தியக்கப்பணியினைக் கெளரவிக்கும் முகமாக சந்தியா பதிப்பகம் (தமிழ்நாடு)  'வெங்கட் சாமிநாதன் வாதங்களும், விவாதங்களும்'  தொகுப்பு நூல்.   தொகுப்பாசிரிர்கள்: எழுத்தாளர்கள் பா.அகிலன்,. திலீப்குமார் & சத்தியமூர்த்தி. 

2. இணையத்தின் வரவும் , கணித்தமிழின் விளைவும், பதிவுகளின் உதயமும்!  - வ.ந.கிரிதரன் -  'வடக்கு வாசல்' (புது தில்லி)  'இலக்கிய மலர் 2008' வ் ஆசிரியர் எழுத்தாளர் பென்னேஸ்வரன்.

3.  'கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்!'  - வ.ந.கிரிதரன் - தமிழ்க்கொடி 2006 ஆண்டு மலர், ஆழி பப்ளிஷர்ஸ்; ஆசிரியர் - 'ஆழி' செந்தில்நாதன்.

4. இரு கட்டுரைகள்: . 'அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் '  & 'பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும்' - வ.ந.கிரிதரன் -  கணையாழி தொகுப்பு (1995 -2000)

5. சிறுகதை- சொந்தக்காரன் - வ.ந.கிரிதரன் - கணையாழி கனடாச் சிறப்பிதழ்

Saturday, August 2, 2025

வ.ந.கிரிதரனின் நூல் அணிந்துரைகள்!





அவ்வப்போது நூல்களுக்கு நான் எழுதிய அணிந்துரைகள் இவை.

1. காத்யானா அமரசிங்ஹவின் 'தரணி' (பூபாலசிங்கம் பதிப்பக வெளியீடு) நாவலின் தமிழ் மொழிபெயர்ப்புக்கு எழுதிய அணிந்துரை.
2.  எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்'  நூலுக்கு எழுதிய அணிந்துரை.
3. 'போர்க்காலம் - தோழிகளின் உரையாடல்' என்னும் தலைப்பில்  தமிழினி ஜெயக்குமாரனின் நூலுக்கு எழுதிய அணிந்துரை. சிவகாமி பதிப்பக வெளியீடு.
4.  தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த  எழுத்தாளர் பொன் குலேந்திரனின் 'காலம்' (அறிவியற் சிறுகதைகள்) தொகுப்புக்காக  எழுதிய அணிந்துரை.
5. நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் சங்கத்தமிழ் இலக்கியக் கட்டுரைத்தொகுப்பு நூலுக்கு எழுதிய  அணிந்துரை. 'விஜே பப்ளிகேஷன்ஸ்' வெளியீடு.
6. எழுத்தாளர் சிறீ சிறீஸ்கந்தராஜாவின் 'தராசு முனைகள்'  நூலுக்கு எழுதிய அணிந்துரை. 
7. மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுணனின் 'வேர் மறந்த தளிர்கள்' (பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியானது) நாவலுக்கு எழுதிய அணிந்துரை.


1. காத்யானா அமரசிங்ஹவின் 'தரணி'!


அண்மையில் நான் வாசித்த புனைகதை 'தரணி'. இதுவொரு சிங்கள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. சிங்கள இலக்கிய உலகில் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்ஹ. புனைகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் பன்முகத்திறமை மிக்கவர் இவர். அத்துடன் ஊடகத்துறையிலும் தீவிரமாகச் செயற்படும் சமூக, அரசியற் செயற்பாட்டாளர். இலங்கையின் சமகால சமூக, அரசியற் பிரச்சினைகளில் மிகுந்த தெளிவு மிக்கவர். அவற்றை இன, மத, மொழி ரீதியாக அணுகாமல், மானுடப்பிரச்சினைகளாக அணுகுமொருவர். இதனை இவர் எழுதி அண்மையில் வெளிவந்த 'தரணி' நாவலிலும் காணலாம். இந்நாவல் இலங்கையில் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிவுக்காக - கணையாழி சஞ்சிகையில் வெளியான எனது எட்டுக் கட்டுரைகள் - வ.ந.கிரிதரன் -


 

கணையாழி சஞ்சிகைக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமானதோரிடமுண்டு. நீண்ட காலமாக வெளிவரும் சஞ்சிகை, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தையடுத்து , தற்போது இணைய இதழாக வெளிவருகின்றது. 

ஒரு காலத்தில் கணையாழி சஞ்சிகையில் என் எழுத்துகள் வெளிவருவாமா என்று நினைத்திருந்தேன். ஆனால் தமிழகத்திலிருந்து வெளியாகும் சஞ்சிகைகளில் கணையாழியில் மட்டுமே எனது எழுத்துகள் அதிகமாக வெளிவந்திருக்கின்றன என்பது மகிழ்ச்சியளிப்பது. 

கணையாழி சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரைகள்:

1. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன்
2. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன். 
3.  கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்
4. கணையாழி டிசம்பர் 2000: 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
5. கணையாழி மே 2012: ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்- 
6. கணையாழி அக்டோபர் 2019: தமிழ்நதியின் பார்த்தீனியம் - வ.ந.கிரிதரன் -
7.  கணையாழி செப்டம்பர் 2017:  கட்டுரை - 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -
8. கணையாழி நவம்பர் 2019: ஆஷா பகேயிஓன் பூமி பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள். - வ.ந.கிரிதரன் -
9. கணையாழி மார்ச் 2020: விநாயக முருகனின் 'ராஜிவ்காந்தி சாலை'
10. கணையாழி ஏப்ரில் 2020: 'பிரமிளின் "காலவெளி": கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'
11. கணையாழி மே 2020: 'பாரதியாரின் சுயசரிதை மற்றும் அவரது முதற் காதல் பற்றி..'
12. கணையாழி ஜனவரி 2022: பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்!


* கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு நூலில் எனது ' அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்' &  'பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் ' ஆகிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

கணையாழி சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரைகளில் எட்டுக் கட்டுரைகள் கீழே:

1. பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்!
2. தமிழ்நதியின் 'பார்த்தீனியம்'
3.  நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனைவளம் மிக்க விஞ்ஞானப் புனைவுகள்! -
4. வானியற்பியற் கட்டுரை : அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்
5. ஆஷா பகேயின் 'பூமி'! பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்!
7. பிரமிளின் 'காலவெளி': 'கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'
8.  பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி...


1. பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்!

என்னை தனது எழுத்துகளால் ஆட்கொண்டவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் மகாகவி பாரதியார். தனது குறுகிய வாழ்வில் அவரால் எவ்விதம் இவ்விதம் சிந்திக்க  முடிந்தது? செயற்பட  முடிந்தது? எழுத முடிந்தது ? என்று நான் அடிக்கடி வியந்துகொள்வதுண்டு. தனது குறுகிய வாழ்வில் கவிதை, கட்டுரை, புனைகதை என்று அவர் ஆற்றிய இலக்கியப் பங்களிப்பு போற்றுதற்குரியது. அந்நியராதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்த நாட்டின் விடுதலைக்காக, வாழ்ந்த மண்ணில் நிலவிய தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மூட நம்பிக்கைகள் போன்ற சமூகச் சீரழிவுகளுகெதிராக, சுற்றியிருக்கும் இயற்கைக்காக, வாழும் சக உயிர்களுக்காக  அவரது எழுத்துகள் குரலெழுப்பின. பல்வகைப்பட்ட மானுடரின் உணர்வுகளையும் அவரது கவிதைகள் வெளிப்படுத்தின. தான் வாழ்ந்த காலத்தை மீறிய அவரது சிந்தனையை , அவற்றில் காணப்படும் தெளிவினை அவரது எழுத்துகள் வெளிப்படுத்தின. அத்துடன் சிந்திப்பதுடன் நின்று விடாமல் அதற்கேற்ப நிஜ வாழ்விலும் செயற்பட்டவரும் கூட.  இவ்விதமாகப் பல்வேறு விடயங்களைப்பற்றிச் சிந்தித்த அவரது சிந்தனை மானுட இருப்பு பற்றியும் சிந்தித்தது. இருப்பு பற்றிய சிந்தனைகள் கேள்விக்கு மேல் கேள்விகளை எழுப்புமொன்று. அக்கேள்விகளெல்லாம் அவருக்கும் ஏற்பட்டன. அக்கேள்விகளுக்கான விடைகளையும் அவர் தர்க்கரீதியாகச் சிந்தித்தார். அச்சிந்தனைப்போராட்டங்களை வெளிப்படுத்தும் அவரது முக்கியமான கவிதையாக  'உலகத்தை நோக்கி வினவுதல்' என்னும் கவிதையைக்  குறிப்பிடலாம். 

தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ மோதல்களிற்கு இன்றுவரை சாியானதொரு தீர்வில்லை. ‘இவ்வுலகம், இங்கு வாழும் ஜீவராசிகள், இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி அவனியில் எதுவுமேயில்லை ‘ என்று சமயம் கூறும். இதனைக் கருத்துமுதல் வாதம் என்போம். நம்புபவர்கள் ‘கருத்து முதல்வாதிகள் ‘. இவர்கள் ‘சிந்தனை, புலனுணர்வு என்பவை ஆன்மாவின் செயலென்றும், இவ்வான்மாவானது அழியாதது, நிரந்தரமானது ‘ என்றும், ‘இவ்வுலகு, இயற்கை யாவுமே சக்தியின் விளைவு ‘ என்றும் கூறுவார்கள். அதுமட்டுமல்ல ‘இவ்வுலகமென்பது (காண்பவை, செயல்கள் எல்லாமே) சிந்தனையின் அதாவது உணர்வின் விளைபொருளே ‘ என்றும் கூறுவார்கள். ஆனால் இதற்கு மாறான கருத்துள்ள தத்துவஞானம் ‘பொருள் முதல்வாதம் ‘ எனப்படுகின்றது. இதனை நம்புபவர்கள் ‘பொருள்முதல்வாதிகள் ‘ எனப்படுவர். இவர்கள் கருத்துப்படி ‘ஆன்மா நிலையானது, அழிவற்றது ‘ என்பதெல்லாம் வெறும் அபத்தம். கட்டுக்கதை. சிந்தனை என்பது பொருள் வகை வஸ்த்துவான மூளையின் செயற்பாடே. நிலையாக இருப்பது இந்த இயற்கை (பொருள்) ஒன்றே ‘. இவ்வுலகினின்றும் வேறாகத் தனித்து ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எதிர்க்கும் இவர்கள் ‘அப்படி எதுவுமில்லை ‘ என்கின்றார்கள். ‘இவ்வியற்கையில் ஏற்பட்ட பாிணாம மாற்றங்களே உயிாினங்கள் உருவாகக் காரணம் ‘ என்கின்றார்கள். நவீன இயற்கை விஞ்ஞானத்தை இவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். பாரதியாரையும் இந்தத்தத்துவக் குழப்பம் விட்டு வைக்கவில்லையென்பதைத்தான் மேற்படி 'உலகத்தை வினவுதல்' கவிதை வெளிப்படுத்துகின்றது. 

தெணியானின் 'குடிமைகள்' சமூக விடுதலைக்கான அறை கூவல்! - வ.ந.கிரிதரன் -

தெணியானின் 'குடிமைகள்' நாவல் இலங்கைத் தமிழ் நாவல்களில் முக்கியமான நாவல்களிலொன்று. 'ஜீவநதி' பதிப்பகம், 'கருப்புப் பிரதிகள...

பிரபலமான பதிவுகள்