நண்பர்களே! என் புதிய நண்பர்களுக்காகவும், ஏற்கனவே வாசிக்காத பழைய நண்பர்களுக்காகவும் புகலிட வாழ்பனுபவங்களை விபரிக்கும் எனது சிறுகதைளை அறிமுகப்படுத்தலாமென்று நினைக்கின்றேன். அதன் விளைவாக ஒரு சிறுகதை 'நீ எங்கிருந்து வருகின்றாய்?' பதிவுகள், திண்ணை & இசங்கமம் ஆகிய இணைய இதழ்களில் வெளியான சிறுகதை.
புகலிடம் நாடிப் புலம் பெயரும் ஒருவர் எதிர்கொள்ளும் அனுபவங்கள் பல் வகையின. அவற்றை வெளிப்படுத்தும் கதைகள் பலவற்றை பதிவுகள் , திண்ணை ஆகிய இணைய இதழ்களில் , தாயகம், தேடல் , கணையாழி ஆகிய சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளேன். அவற்றைப் படிப்படியாக அறிமுகப்படுத்துவேன். வாசியுங்கள். உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
கி.பி.1964ஆம் ஆண்டு தை மாதம் 14ந்திகதி, தமிழ் மக்களின் முக்கிய திருநாளான தைப்பொங்கள் திருநாளன்று, அவன் இந்து சமுத்திரத்தின் முத்து , சொர்க்கம் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற, ஒரு காலத்தில் போர்த்துகேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களின் காலனியாக விளங்கிய, 'சிலோன் (Ceylon) என்றழைக்கப்பட்ட, தீவான இன்று ஸ்ரீலங்கா என்றழைக்கப்படுகின்ற இலங்கைத் தீவில் அவதரித்தான். அவன் அவதரித்தபொழுது அவனுக்கொன்றும் இவ்விதம் அவனது வாழ்க்கை பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் அலைக்கழியுமென்று தெரிந்திருக்கும் வாய்ப்பு இருந்ததில்லை. ஆனால் தீவின் தொடர்ச்சியான அரசியல் நிலைகள் அவனைப் புலம்பெயர வைத்து விட்டன. இன்று அவன் வட அமெரிக்காவின் முக்கியமானதொரு நாடான கனடாவின் குடிமகன். இது அவனைப்பற்றிய சுருக்கமான வரலாறு. என்புருக்குமொரு அதிகாலைப் பொழுது. அவன் வேலை செல்வதற்காக போக்குவரத்து வாகனத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றான். அருகிலொரு வெள்ளையின நடுத்தர வயதினன் அவனுக்குத் துணியாக. அவர்களிருவரையும்தவிர வேறு யாருமே அச்சமயத்தில் அங்கிருக்கவில்லை. நிலவிய மெளனத்தினைக் கலைத்தவனாக அந்த வெள்ளையினத்தவன் அவர்களிருவருக்குமிடையிலான உரையாடலினைத் தொடங்கினான்: