அத்தியாயம் நான்கு: மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ?
'கண்ணம்மா' என்றேன். மனோரஞ்சிதம் பெருங்காதலுடன் திரும்பிப் பார்த்தாள். கண்ணம்மா என்று நான் அழைப்பதைப் பெரிதும் விரும்புபவள். அச்சமயங்களிலெல்லாம் பதிலுக்குக் 'கண்ணா' என்று என்னை அன்பூற மென்மையாக அழைப்பாள். அந்த அன்பு குழைந்த அவளது அழைப்பைக் கேட்பதற்காகவே அவளை நான் கண்ணம்மா என்று விளிப்பதுண்டு. என்னைப்பொறுத்தவரையில் இவ்விருப்புன் அற்புதமாக அவளை நான் காண்பதுண்டு. அவளற்ற இருப்பை கற்பனை செய்வதே எனக்கு மிகவும் சிரமமானது.
'என்ன கண்ணா மெளனமாகிவிட்டாய்?" என்றாள் அவள்.
'எல்லாம் நம் இருப்பு பற்றிய சிந்தனைதான் கண்ணம்மா"
'இருப்பு பற்றி.. வழக்கம்போல் தத்துவவிசாரம்தானா கண்ணா'
'கண்ணம்மா உனக்குத்தானே எனக்கு பாரதி பாடல்கள் பிடிக்குமென்று தெரியும். எனக்குப் பிடித்த அவரது பாட்டைக் கூறு பார்க்கலாம்."
'கண்ணை மூடிக்கொண்டு கூறுவேன் கண்ணா. 'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே பாடல்தானே'
'சரியாகவே கூறினாய் கண்ணம்மா. நீ என் மனத்தை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறாயடி.'
'இந்தக்கவிதை எனக்கும் பிடித்தது கண்ணா. அதற்குக் காரணமே இருப்பு பற்றிய கவிஞரின் கேள்விகளே."
'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ? சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ? ஒரு விதத்தில் தர்க்கரீதியாகப் பார்க்கப்போனால் இதுகூடச் சரிதானென்று வாதிடலாம். இல்லையா கண்ணம்மா?'