அத்தியாயம் ஐந்து - ஆனை பார்த்த அந்தகர்கள்!
"வேறொன்றுமில்லை கண்ணம்மா, எல்லாம் நம் காலத்து இலக்கியவாதிகளைப்பற்றித்தான். ஆளுக்காள் குழுக்களாகப் பிரிந்து நின்று தாமே சரியென்று வாதிட்டுக்குகொண்டிருக்கும் இவர்களைப் பார்த்தால் சிரிப்பு வராமல் வேறென்ன வரும். நீயே சொல் கண்ணம்மா."
"இலக்கியமோர் யானை" என்றாள் பதிலுக்கு மனோரஞ்சிதம்.
"யானையா?"
'ஓம். யானைதான்" என்று தீர்மானமாகச் சொன்னாள் மனோரஞ்சிதம் மீண்டும். அவளது அந்த உறுதி அவள் தன் தீர்மானத்தில் மிகவும் தெளிவாகவிருக்கின்றாள் என்பதை நன்கு புலப்படுத்தியது.
"ஒரு விதத்தில் நீ சொல்வதும் சரிதான் கண்ணம்மா. இலக்கியத்தில்தான் எத்தனை எத்தனை போக்குகள்."
"கண்ணா, போக்குகள் பல இருப்பது தவறானதொன்றல்ல.அவையெல்லாம் வளர்ச்சியின் அறிகுறிகளே. பிரச்சினை என்னவென்றால்...."
"என்ன பிரச்சினை கண்ணம்மா?"
"இலக்கியத்தின் போக்குகள் அனைத்துமே மனித இருப்பைப் பல்வழிகளில் வெளிப்படுத்துபவை. மனிதரின் அறிவு, புரிதலுக்கேற்ப இவையும் வேறுபடும். மனிதர்கள் எல்லாரும் ஒரே நிலையில் அறிவைப்பொறுத்தவரையில் இருப்பவர்கள் அல்லர். பல்வேறு படிக்கட்டுகளில் இருப்பவர்கள். எல்லாராலும் எல்லாப் போக்குகளையும் இரசிக்க முடியாது. புரிந்துகொள்ள முடியாது. இல்லையா கண்ணா?"
"அம்மாடியோவ்.. என் கண்ணம்மாவுக்குள் இவ்வளவு விசயங்களா? உண்மையிலேயே பிரமிப்பைத் தருகிறாயடி கண்ணம்மா."
"ஏன் ஆணுக்கு நிகராகப் பெண்கள் இருப்பதை நம்ப முடியவில்லையா கண்ணா" இவ்விதம் கேலியாகக் கண்களைச் சிமிட்டிய மனோரஞ்சிதம் தொடர்ந்தாள்:











