வழக்கம்போல் முடிவற்று விரிந்திருக்கும் இரவு வானை, நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவும் வானைப் பார்த்தபடியிருக்கின்றேன். இரவு வான் எப்பொழுதும் புதிர்களை அடுக்கி வைத்துள்ள நூலைப்போல் என்னைப் பிரமிக்க வைக்குமொன்று. காலத்தின் அடுக்குகளுக்குள் விரிந்து கிடக்கும் இரவு வான் இருப்பின் புதிர்களின் விடைகளைத் தாங்கி நிற்கும் ஞானப்பெட்டகமாக எப்பொழுதும் எனக்குத் தெரிவதுண்டு. அதனால் அதனை எத்தனை தடவைகள் பார்த்துக்கொண்டிருந்தாலும் எனக்கு அலுப்பதேயில்லை.
"என்ன எவளைப்பற்றி யோசனை?"
எதிரில் மந்தகாசப் புன்னகையுடன் மனோரஞ்சிதம் நிற்கின்றாள்.
"வேறு யாரைப்பற்றி? எல்லாம் என் சகியைப்பற்றித்தான். இருப்பில் என்னுடன் எப்பொழுதுமிருக்கும் என் இன்பச் சகியைப்பற்றித்தான் கண்ணம்மா"
"கண்ணா, இந்தக் கண்ணம்மாவை விட்டால் உனக்கு வேறு யார் சகி இருக்க முடியும்?"
"யார் சொன்னது இருக்க முடியாது என்று. இவள் என்னை எப்பொழுதும் வியப்பிலாழ்த்தும் என் சகி. மின்காந்தமணி. இவளது ஆளுமை எப்பொழுதும் என்னைப் பிரமிக்க வைக்குமொன்று."
'அதென்ன மின்காந்தமணி. வித்தியாசமான பெயராகவிருக்கிறதே. கண்ணா யாரிவள்? உண்மையா இல்லை இதுவும் உன் வேடிக்கைப்பேச்சுத்தானா?"







