இன்று மகாகவி பாரதியாரின் பிறந்ததினம். என் பால்ய பருவத்தில் என்று என் தந்தையார் பாரதியாரின் முழுக்கவிதைகளும் அடங்கிய தொகுதியை வாங்கித் தந்தாரோ அன்று ஆரம்பித்த பிணைப்பு இன்றுவரை தொடர்கிறது. இவரது கவிதைத்தொகுப்பொன்று எப்பொழுதும் என் மேசையில் அருகில், கண்ணில் படும் தூரத்திலிருக்கும்.
சமுதாயம், அரசியல், தேசிய விடுதலை, வர்க்க விடுதலை, மானுட விடுதலை, இருப்பு பற்றிய தேடல்கள், காதல் போன்ற மானுட உணர்வுகள், இயற்கை , எழுத்து , பெண் உரிமை என்று அனைத்தைப் பற்றியும் இவர் பாடியிருக்கின்றார். அவற்றிலுள்ள புலமை, எளிமை, அனுபவத்தெளிவு இவைதாம் என்னை இவர்பால் ஈர்த்ததற்குக் காரணம். இன்னுமொரு முக்கிய காரணம் - ஆரோக்கிய எண்ணங்களை வெளிப்படும் வரிகள்.
தமிழ் இலக்கிய உலகில் என்னைப்
பாதித்தவர்களில் முதலிடத்தில் இருப்பவர் பாரதியார். தன் குறுகிய காலத்தில்
இவர் சாதித்தவை ஏராளம். பிரமிக்க வைப்பவை.
எழுத்தாளராக, ஊடகவியலாளராக, பத்திரிகை ஆசிரியராக, தேசிய , மானுட விடுதலைப்போராளியாக, தத்துவவாதியாக இவரது ஆளுமை பன்முகமானது.