- எழுத்தாளரும் , கலை, இலக்கிய விமர்சகருமான ரஞ்ஜனி சுப்ரமணியம் அவர்களின் வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' பற்றிய விரிவான பார்வையிது. பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது. -இயற்கையின் பேரழகில் தன்னை இழக்கும் ஒரு கலைஞன் சமகாலத்தில் அறிவுஜீவியாக பேரண்ட இரகசியங்களோடு சார்பியல் பற்றியும் கவி படைக்கையில் நிஜமாகவே ஆச்சரியத்தில் உறையுமொரு வாசகியின் வியப்பு மிகுந்த ரசனைக் குறிப்பிது. நவீன இயற்பியலின் தந்தையான விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் நனவுலக மாணவனாக காலவெளி, மானுட இருப்பு, காலம் ,நேரம், பரிமாணம் என அறிவுணர்வின் தேடலுடன் அலையும் இக்கவி, காணும் இடமெங்கும் கண்ணம்மாவுடன் கதை பேசும் மகாகவியின் கனவுலக ரசிகருமாவார்.
இக் கவிஞரை, 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் கவிதைத் தொகுதியூடாக முறையாக இனம் கண்ட வாசகர் எந்த விதத்திலும் வியப்படையத் தேவையில்லை. வ.ந.கிரிதரன் அவர்களின் இத்தேடல் உணர்வையும், ஏக்கத்தையும் பிரபஞ்சத்தின் மேல் கொண்ட பிரியத்தையும் அவரது படைப்புகளில் அடிக்கடி காணக் கூடியதாக இருக்கும்.
இக்கவிதைத் தொகுப்பினை வாசிப்பதற்கு முன் இயற்கை பற்றியும் நவீன இயற்பியல், சார்பியல், அண்டம், குவாண்டம், ஒளியாண்டு பற்றிய எளிய அறிதலையேனும் பெற்றுக் கொண்டால் இப்படைப்பினை வியந்து நோக்கலாம். பிரமிப்பை அடையலாம். இல்லாவிடில் 'நகரத்து மனிதனின் புலம்பலாகவே ' அமைய நேரிடலாம்.
மரபுக்கவிதையின் இலக்கணங்களோ அன்றி புதுக்கவிதையின் அழகுகளான படிமம், குறியீடு, தொன்மம் பற்றியோ கவிதைக்குள் உணரப்படும் மீமொழி பற்றியோ தெளிவான அறிவற்ற ஒரு வாசகியின் மழலைமொழி இதுவென முதலில் கூறிக்கொள்ள வேண்டும். எனினும் 'உளப்புயல்கள் வீசியடிக்கும் போது, அகக்கடலில் படகுகளாயிருந்து நினைவுச் சுழலுக்குள் சிக்கும்' ஒரு கவிஞனின் உணர்வுகளை மாற்றுக்குறையாமல் உள்வாங்கும் உளப்பாங்கு வாய்த்திருப்பதில் மகிழ்வும் கொள்கிறேன்.