மானுட உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் முன் நிற்பது கவிதையே. அதற்கு நிகர் வேறெதுவுமில்லை. குறைந்த வரிகளில் உணர்வுகள் எவையாயினும் அவற்றை வெளிப்படுத்தக் கவிதைகளால்தாம் முடியும். என்னைப்பொறுத்தவரையில் என் கவனம் பதின்ம வயதுகளில் கவிதையின் பக்கம் திரும்பியதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்: அப்பருவத்துக்குரிய உணர்வுகளுக்குக் கவிதை வரிகள் வடிகால்களாகவிருந்தன. அடுத்து எப்பொழுதுமே என் உள்ளத்தில் இருப்பு பற்றிய கேள்விகள் மற்றும் , வர்க்கம், வர்ணம், இனம்,மதம்,மொழி, நாடென்று பல்வேறு பிரிவுகளால் ஏற்படும் மானுடரின் வாழ்வியற் பிரச்சினைகள், அவற்றின் விளைவான சவால்கள், துயரங்கள் எல்லாம் சிந்தையிலேற்படுத்திய பாதிப்புகளுக்குரிய வடிகால்களாக,வெளிப்படுத்தும் சாதனங்களாக எழுத்துகளேயிருந்தன. கவிதைகளில் அவற்றைக் குறைந்த வரிகளில் வெளிப்படுத்த முடிந்தன. என் எழுத்துகளில் கவிதைகளுட்பட , நீங்கள் இம்மூவகைப்பண்புகளையும் காணமுடியும். இருப்பு பற்றிய கேள்விகள், மானுட அக உணர்வுகள் மற்றும் மானுடர் வாழும் சமூக, அரசியல் & பொருளியச் சூழல்களின் பாதிப்புகள் என் எழுத்துகளில் விரவிக் கிடப்பதை நீங்கள் காணலாம்.