அத்தியாயம் (19) : எங்கோ இருக்கும் ஒரு கிரகவாசிக்கு...
நள்ளிரவு. நகர் மெல்ல மெல்ல ஓசைகள் அடங்கித் துஞ்சத் தொடங்குகின்ற நேரம். சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தபடி அண்ணாந்து வானத்தை நோக்கியபடியிருக்கின்றேன். இருவர் ஒரே நேரத்தில் இலகுவாகச் சாய்ந்திருக்கும் வகையிலான அகன்ற் சாய்வு நாற்காலி. அருகில் என்னுடன் ஒட்டி இணைந்தபடி, தன் தலையை என் வலது பக்கத்து மார்பில் சாய்த்தபடி , ஒருக்களித்து படுத்தபடி என்னுடன் அகன்ற ஆகாயத்தைப் பார்த்தபடி மெய்ம்மறந்திருக்கின்றாள் மனோரஞ்சிதம்.
விரிந்திருக்கும் இரவு வான் எப்பொழுதுமே என் மனத்தின் இனம்புரியாத இன்பக் கிளர்ச்சியைத்தருமொன்று. எண்ணப்பறவையைச் சிறகடித்துப் பறக்க வைக்குமொன்று. இரவு வானை இரசித்தபடி எவ்வளவு நேரமென்றாலும் என்னாலிருக்க முடியும். தெளிந்த வானில் நகரத்து ஒளி மாசினூடும், நூற்றுக்கணக்கில் நட்சத்திரங்களை என்னால் காண முடிந்தது. நட்சத்திரத்தோழியருடன் பவனி வரும் ஓர் இளவரசியாக முழுமதி விளங்கிக்கொண்டிருந்தாள். முகில்களற்ற தெளிந்த இரவு வானம் சிந்தைக்கு ஒத்தடம் தருவதுபோல் ஒருவிதத் தண்மை மிகுந்த உணர்வினைத் தருகின்றது.
விரிந்திருக்கும் வானில் கொட்டிக்கிடக்கும் சுடர்களிலொன்று இன்னுமொரு 'கலக்சியாக' அண்டமாகவிருக்கக் கூடும். அதன் மூலையிலுள்ள சுடரொன்றின் கிரகத்தில் என்னைப்போல் ஒருவன் அல்லது ஒருத்தி அல்லது ஒன்று விரிந்திருக்கும் ஆகாயத்தின் ஆழங்களைக் கண்டறிவதற்கான தேடலில் மூழ்கிக் கிடக்கக்கூடும். இவ்விதம் நினைக்கையிலேயே நெஞ்சில் இன்பம் பொங்கியது. அவ்வின்பம் வெளிப்பட வாய் விட்டு 'நண்பனே' என்றழைக்கின்றேன்.